Monday, August 29, 2011

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை -பகுதி-4

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

சிலம்பும் கொற்றவையும்.

கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவவரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். ஆறலைக் கள்வர்களாகிய எயினர்களைப் பாலை நிலத்தில் வாழ்வோராகவும் வழிப்பறி செய்வோராகவும் கொள்ளை அடிப்போராகவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. எயினர் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும்.

கொற்றவை வழிபாடு பற்றிய முழுமையான தகவல்களைத் தம் காலத்து வைதீகச் சார்போடு படைத்துக்காட்டும் இளங்கோடிகள் கொற்றவையைக் குறிப்பிடும் பல்வேறு பெயர்களை இடையிடையே பெய்து தம் வேட்டுவவரியை அமைக்கின்றார். அப்பெயர்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாயிருக்கும்.

கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் ஓரிடத்தும் அயிரை என்ற சொல்லைக் கையாளவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பற்றுப்பத்து குறிப்பிடும் அயிரை வழிபாடு என்பது கொற்றவை வழிபாடாயிருக்குமாயின் சேரநாட்டு இலக்கியமான சிலப்பதிகாரம் அதனைக் கண்டிப்பாகப் பதிவுசெய்திருக்கும். செல்வி, ஐயை, அணங்கு முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் சிலம்பு பழந்தமிழர்களின் குறிஞ்சி, முல்லைநிலச் சமூகத்தின் தாய்த்தெய்வமே இக்கொற்றவை என்பதனையும் தவறாமல் பதிவு செய்கின்றது.

சிலம்பின் இவ்வேட்டுவவரி பழந்தமிழர்களின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. எயினர் குலக் குமரி ஒருத்திக்குக் கொற்றவைக் கோலம் புனைந்த செய்தி முதலில் பேசப்படுகின்றது. (சிலம்பு. வேட்டுவவரி, 21-35) கொற்றவையின் உருவம் குறித்த முதல்பதிவு அப்பகுதி. பின்னர் எயினர்கள் கொற்றவையைப் புகழ்ந்து பாடும் வழிபாட்டுப் பகுதியில் கொற்றவையின் உருவம் குறித்த வருணனை மீண்டும் விரிவாக எடுத்துரைக்கப் படுகின்றது.

மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி


வளையுடைக் கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை


இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்
(சிலம்பு. வேட்டுவவரி, 54-66)

“பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்”

என்றெல்லாம் கொற்றவையின் தோற்றம் குறித்துச் சிலம்பின் வேட்டுவவரி படைத்துக் காட்டும் வருணனையில் குறிஞ்சி, முல்லைநிலத் தாய்த்தெய்வக் கொற்றவையின் பழைய உருவம் மாற்றம்பெற்று புதிய வைதீகத் தோற்றத்தைக் காணமுடிகிறது. கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளமையைக் நோக்கும்போது தாய்த்தலைமைத் தெய்வமாயிருந்த கொற்றவை, தந்தைத் தலைமைச் சமூகத்தில் ஆண்தெய்வமாம் சிவனோடு கலந்து ஒருமைப் பட்டுள்ளமையை உணர முடிகின்றது.

வேட்டுவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும்.

கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
(சிலம்பு. வேட்டுவவரி, 16-17)

புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

(சிலம்பு. வேட்டுவவரி, பா.13)

மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், “கொற்றவைக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள்” என்றும் இரண்டாம் மேற்கோளில், “வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும்” என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வௌ;வேறு சமூக அடுக்குகளின் தாய்த்தெய்வ வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் கொற்றவை வழிபாடு என்ற ஒரே தளத்தில் காட்டப்பட்டுள்ளன.

பேரரசுகள் உருவாகிவிட்ட சிலப்பதிகாரக் காலத்து நிலவுடைமைச் சமூகத்தில் எயினர் மற்றும் வேடுவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய கொற்றவை வழிபாடு விரிவாகப் பாடப்பட்டதன் தேவை குறித்து, சிலம்பு நா.செல்வராசு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

தொல் தமிழகத்தில ஆநிரைச் சமூகம் வேளாண் சமூகத்தைத் தோற்றுவித்த நிலையில் வளமார்ந்த நெல் சமூகம் அமைக்கப்பெற்றது. மருதநில பொருளாதார அரசியல், எயினரையும் வேட்டுவரையும் விளிம்பு நிலை மக்களாக ஆக்கிவிட்டமையைச் சஙக இலக்கியப் பாலைத்திணைப் பாடல்கள் விவரிக்கின்றன. விளிம்பு நிலை மக்களாக மாறிய இவ்வினமக்கள் அரசு உருவாக்கத்தில் நாட்டின் மையத்திலிருந்து விடுபட்டு வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறியுள்ளனர். மாறவே இவ்வின மக்களின் பண்பாடு முதலியன விளிம்பு நிலைக்குத் தள்ளப் பெற்றிருக்க வேண்டும். எனவேதான் சங்க இலக்கியங்களில் கொற்றவை வழிபாடு பற்றிய செய்திகள் இடம் பெறாமல் போயின. பின்னாளில் ஒரே பேரரசு உருவாக்கம், ஒற்றைச் சமய உருவாக்கம் ஆகியவற்றிற்கான அரசியல் தொழிற்பட்டபோது எயினர், வேட்டுவர் இன மக்களைப் பேரரசு எல்லைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்தம் வாழ்நிலை, சமயம் சார்ந்த பண்பாட்டு நிலைகள் மேனிலையாக்கம் பெறத் தொடங்கின. எனவேதான் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியைச் செவ்வியலாகப் புனைய வேண்டியதாயிற்று. (சிலம்பு நா.செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு, பக். 126-127)

பழந்தமிழர்களின் பல்வேறு சமூக அடுக்குகளின் சமய வழிபாட்டு நம்பிக்கைகளை ஒரே தளத்தில் வைத்து இளங்கோவடிகள் புனைந்தமைக்கான காரணங்களாக சிலம்பு நா.செல்வராசு குறிப்பிடும் தர்க்கம் பொருத்தமுடையதே.

No comments: