Tuesday, August 25, 2009

முனைவர் நா.இளங்கோவின் படர்க்கை நூல் முன்னுரை

முனைவர் நா.இளங்கோவின்
படர்க்கை நூல் முன்னுரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

முன்னுரையாக

தமிழ் ஆய்வுப்புலம் இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ் மொழி என்பனவற்றை எல்லாம் கடந்து தமிழியல் ஆய்வுப் புலமாகப் பேருரு எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழியல் என்பது தமிழ் இலக்கிய இலக்கண இயல் என்பதானதன்று. அது தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் அறிவியல் போன்ற பல துறைகளையும் உள்ளடக்கியது. அண்மைக் காலங்களில் தமிழர் கல்விப் புலங்களில் தமிழியல் என்ற சொல்லாடல் பெருகிவிட்டது. தொடக்கக் காலங்களில் தமிழியல் என்பது மேற்கத்திய இன மொழி ஆய்வுத்துறையின் ஒரு பகுதியாகத்தான் தோற்றம் பெற்றது. மேற்கத்திய ஆய்வாளர்களின் கீழ்த்திசை ஆய்வு மற்றும் இந்தியவியல் ஆய்வுகளின் பின்புலத்திலேயே தமிழியல் ஆய்வுகள் வளரத் தொடங்கின. அந்த வகையில் காலனித்துவம் சார்ந்த கல்வி மற்றும் ஆய்வாகவே தமிழியல் இருந்துவந்தது. மேற்கத்திய ஆய்வாளர்களின் இத்தகு தமிழியல் ஆய்வுகளில் தமிழ், தமிழர் முதலான உள்ளடக்கங்கள் பெரிதும் கீழ்நோக்கிய பார்வையிலேயே பதிவுசெய்யப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து தமிழாய்வு மெல்ல மெல்லத் தமிழ்க் கல்வியாளர்களிடம் இடம் பெயர்ந்தபோது மேற்கத்திய தமிழியல் ஆய்வுகளே நம்மவர்களுக்குப் பெரிதும் முன்னுதாரண ஆய்வுகளாக அமைந்தன. தமிழியல் ஆய்வுகளில் அவர்களின் பதிவுகளே நமக்கு வழிகாட்டக் கூடியனவாக அமைந்தன. தமிழ், தமிழர் குறித்த தங்கள் அடையாளங்களை அவ்வகை ஆயு;வகளிலேயே நம்மவர்கள் கண்டெடுத்தார்கள். பெரும்பாலான தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் அமைந்து விடுவதும் இக்காரணம் பற்றியே.

இன்றைக்குத் தமிழ் ஆய்வாளர்களுக்குத் தமிழியல் குறித்த பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலனித்துவ ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டு புதிய தமிழியலை நாம் கட்டமைத்துள்ளோம். நமக்கான வரலாற்றை, பண்பாட்டை, கலையை, அறிவியலை மீட்டெடுக்கும் புதிய தமிழியல் ஆய்வுகள் பெருகத் தொடங்கியுள்ளன. இவ்வகைப் புதிய தமிழியல் ஆய்வுகளில் ஒரு சிறு பொறியே படர்க்கை தமிழியல் ஆய்வுகள்.

***
நான் பல்வேறு கருத்தரங்குகளில் எழுத்துரையாக வாசித்த கட்டுரைகளைத் திரட்டி சென்ற ஆண்டு தமிழ் இணர் என்ற பெயரில் ஒரு நூலாகப் படைத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்நூல் தந்த ஊக்கத்தில் இப்பொழுது கருத்தரங்கத்தரங்கத் தமிழியல் கட்டுரைகளைத் திரட்டி படர்க்கை என்ற பெயரில் நூலாக வழங்குகின்றேன். இந்நூலில் உள்ள கட்டுரைகள் நான் 1986 முதல் 2007 வரை பல்வேறு காலங்களில் எழுதியளித்த கட்டுரைகளின் தொகுப்பு. எனவே கட்டுரைகளில் சில தளர்நடை இடும் சில வீறுநடை போடும். ஆய்வில் நான், நீ என்ற தன்மை, முன்னிலைகள் தவிர்க்கப்பட வேண்டும். படர்க்கையே ஆய்வுக்கு உகந்தது. அந்தப் பொருளிலேயே இத்தொகுப்பிற்குப் படர்க்கை என்று பெயரிட்டுள்ளேன்.

பேசுவது எனக்குச் சுகமான வி~யம். எழுதுவது கொஞ்சம் சிரமம். கருத்தரங்குகளில் எழுத்துரையைக் கையில் வைத்துக் கொண்டு பேசி, நான் சொற்களால் காட்சிப் படுத்திய கருத்துக்களை எழுத்தில் அப்படியே கொண்டுவர முயன்றிருக்கிறேன். கருத்தரங்க அவையில் விவாதிக்கப்பட்ட செய்திகளை அச்சு வாகனம் ஏற்றினால்தான் அது அனைவருக்கும் போய்ச்சேரும் என்பதால் துணிந்து நூலாக்கியுள்ளேன்.

நான் மாணவனாயிருந்த காலம் தொடங்கி இன்றுவரை, ஏன் என்றும் என்வளர்ச்சிக்கு உற்ற துணையாயிருக்கும் இலக்கிய இணையர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பேராசிரியர் சா.நசீமாபானு இருவருக்கும் இந்நூலை அன்புக் காணிக்கை ஆக்கியுள்ளேன்.

இந்த நூலாக்கத்திற்கு என்னைப் பெரிதும் ஆற்றுப்படுத்தியவர் முனைவர் சிலம்பு நா.செல்வராசு. என்றும் என்முன்னேற்றத்தில் உண்மையான அக்கறைகொண்ட தோழரிவர்.
அணிந்துரை வழங்கிய முனைவர் வே.ச.திருமாவளவன் என் மதிப்பிற்குரிய பேராசிரியர். பாடநூல்களுக்கு அப்பால் அவரிடம் மாணவர்கள் கற்க வேண்டிய பாடம் அவரின் உழைப்பு, ஈடுபாடு, நேர்மை முதலியன.

இந்நூலின் ஆக்கத்திற்கு உற்ற துணையாயிருந்த இனிய தோழர் தமிழ் விரிவுரையாளர் சின்ன. சேகர். இவரே என் உழைப்பிற்கு உற்றதுணை.

இந்நூலை வெளியிடும் காவ்யா சண்முகசுந்தரம். பதிப்புத் துறையில் வெள்ளிவிழா கண்ட முன்னோடிப் பதிப்பாளர். வெற்றியாளர். உழைப்புத் தேனி.

இந் நால்வருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
தமிழ்கூறு நல்லுலகம் நல்ல நூல்களைப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்.
நன்றி!
முனைவர் நா.இளங்கோ

No comments: