Saturday, August 29, 2009

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி- பகுதி-2

மானுடவியல் நோக்கில் காதாசப்தசதி பகுதி-2

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

சமூக மானிடவியல் பார்வையில்:

மானிடவியல் என்பது உடலியல் குணாதிசயங்கள் தொழில் செய்முறைகள் வழக்கமான நம்பிக்கைகள் ஆகியவைகளால் தனித்து நிற்கும் சமுதாயத்தை ஊன்றிக் கவனிப்பதாகும். (ரூத் பெனிடிக்ட்) சமூக மானிடவியல் ஓர் இனத்தைப் பற்றி ஆய்கிறபொழுது அவ்வின மக்களின் வரலாற்றுக்கும் முந்தைய-தற்போதைய வழக்கங்களை ஆராய்கிறது. காதாசப்தசதி என்ற இலக்கியம் தான் சார்ந்துள்ள சமூகம் பற்றிய மானிடவியல் உண்மைகளை எவ்வாறு ஏற்றுள்ளது எனக் காண்போம்.

தந்தைவழிக் குடும்பம்:

ஒரு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு தந்தையிடம் அல்லது கணவரிடம் இருக்குமேயானால் அதனைத் தந்தைவழிக் குடும்பம் எனலாம். தலைமை பெண்ணிடம் இருக்குமே யானால் அதைத் தாய்வழிக் குடும்பம் எனலாம். காதாசப்தசதிப் பாடல்கள் குறிப்பிடும் சமூகம் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டிருந்ததை அகச்சான்றுகளின் வழி அறிய முடிகிறது. பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீடு செல்வதும் மாமியார், கொழுந்தன் இவர்களைக் கொண்ட குடும்பத்தில் வாழ்வதும் இதனை வலியுறுத்தும் சான்றுகளாகும். மேலும் இன்தசன் எழுதிய பாடலில் (பா.119)

தந்தைபட்ட கடன்
மகனுக்கும் செல்வது போல
எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் களிப்பும்
மரபுவழி நிலைத்து நீடிக்கும்.


என்று குறிப்பிடுகிறார். இப்பாடலில் இடம்பெறும் தந்தைபட்ட கடன் மகனுக்கும் செல்வது போல என்ற உவமை தந்தைவழிக் குடும்பமே காதாசப்தசதி குறிப்பிடும் குடும்பம் என்பதை வலியுறுத்தும் வலிமையான சான்றாகும்.

கூட்டுக்குடும்பம்:

திருமணமான கணவன், மனைவி இருவரும் தனித்துச்சென்று தனிக்குடும்பமாக வாழாமல் கணவனின் தந்தை, தாய் சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இணைந்து கூட்டாக வாழ்வது கூட்டுக் குடும்ப அமைப்பாகும். தமிழ்ச் சங்க அகப்பாடல்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பற்றிய செய்திகள் இல்லை. ஆனால் காதாசப்தசதிப் பாடல்கள் பலவற்றில் பெண்ணின் மாமியார் பற்றிய குறிப்புகளும் கொழுந்தன் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

கணவனுடன் பிறந்த கொழுந்தன்
கணவன் இல்லாத நேரத்தில்
தகாத பார்வை பார்க்கிறான்
குலக்கொடியான அவளின் உள்ளமும் உடலும் கூசுகிறது.
அஞ்சி நடுங்குகிறாள்.
வெளியில் சொன்னாலும்
குடும்பம் கொலைக்களமாகிவிடும்
(பா.380)

என வரும் பாடலில் திருமணமான பெண் தன் கணவனுடன் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறாள் என்ற செய்தி புலப்படுகிறது.

காதல் மணமும் ஏற்பாட்டு மணமும்:

சப்தசதிப் பாடல்களில் மிகுந்த காதல் செய்திகள் பேசப்பட்டாலும் காதலித்தவர்கள் மணம் புரிந்து கொண்டதற்கான சான்று வெளிப்படையாகக் கிட்டவில்லை. குறிப்பாக உணர முடிகிறது.

நான் நாணுடையவள்
அவர் காதலில் உறுதியானவர்
என் தோழிகள் நுண்ணறிவினர்
(பா.30)

என்ற பாடலில் காதல் மணமாக மாற வாய்ப்புத் தருகிறது. ஆனால் பெற்றோர்கள் எற்பாடு செய்யும் ஏற்பாட்டு மணங்களைப் பற்றிய குறிப்புகள் பல கிடைக்கின்றன. இதற்கு முன் பார்த்தும் பேசியும் பழகியும் இல்லாத ஒரு பெண்ணைப் புதுமணக் கோலத்தில் கண்டு மணமகனான அவன் அவாவுகிறான் என்ற பாடல் (பா.39) செய்தி, ஏற்பாட்டு மணம் பற்றிக் குறிப்பிடுகின்றது. வயது முதிர்ந்த கிழவனை மணந்து கொண்ட பெண்கள் பற்றி இரண்டு பாடல்கள் (பா.122,126) பேசுகின்றன.

காமக்கிழத்தியர்

காதாசப்தசதியில் இடம்பெறும் பெரும்பாலான தலைவர்கள் பல பெண்களோடு உறவுள்ளவர்களாக உள்ளார்கள். பரத்தையர் பற்றிய குறிப்பு பல பாடல்களில் (பா.145, 255, 256, 292) இடம் பெற்றுள்ளன. ஒரு பாடலில் (பா.301) தலைவன் தான் பல பெண்களோடு இன்பம் நுகர்வதற்குத் தன் மனைவியே காரணம் என்றும்,

தேனீ ஏன் எல்லா மலர்களிலும் படிகிறது?
தேன் இல்லாத மலர்களும் இருப்பதால்தான்
அது மலருக்கு மலர் தாவுகிறது.
தேன் இல்லாதது மலர்களின் குற்றமே தவிரத்
தாவும் ஈக்களின் குற்றமன்று"


எனவே தன்மேல் குற்றமில்லை என்றும் வாதிடுகிறான்.
ஒருவனுக்குக் காமக் கிழத்தியர் பலர் இருந்தாலும் உரிமை மனைவி ஒருத்தியே என்பதைப் போட்சன் என்பவர் எழுதிய பாடல் (பா.294) குறிப்பிடுகிறது.

வேட்டுவனின் மனைவி
வெறும் மயிலிறகு மட்டும் சூடியவளாய்ப்
பெருமிதத்தோடு நடந்து செல்கிறாள்
அவ்வளவு பெருமிதத்தோடு
வேட்டுவனுடன் ஏனை காமக் கிழத்தியரால்
நடந்து செல்ல இயலவில்லை.


இக்கட்டுரை சமூக மானிடவியல் பார்வையில் காதாசப்தசதிப் பாடல்களைக் காண முயன்ற நிலையில் சப்தசதிப் பாடல்கள் காட்டும் சமூகம் தந்தைவழிச் சமூக அமைப்பு என்றும், கூட்டுக் குடும்ப அமைப்பே நிலவியது என்றும், ஏற்பாட்டு மணம் பற்றிய குறிப்புகளே மிகுதி என்றும் காடக் கிழத்தியர் மனைவியர் ஆகார் என்றும் ஆய்ந்து கண்டது.

* பாடல் சான்றுகள்: ஆந்திர நாட்டு அகநானூறு, இரா.மதிவாணன்

No comments: