Friday, July 31, 2009

வெள்ளைத் திமிர் மு.பாலசுப்பிரமணியனின் கலகக்குரல்

வெள்ளைத் திமிர்
மு.பாலசுப்பிரமணியனின் கலகக்குரல்


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

உலகக் கலைகளுக்கெல்லாம் தாய் இசைக்கலையே. புவிக்கோளத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலமே உலக உயிரினங்களுக்கெல்லாம் ஆதாரம் ஆனதுபோல், இந்த இயற்கையின் கொடையாகிய வளிமண்டலமே இசைக்கு ஆதாரம். இயற்கையின் இசை அலாதியானது பாரதி இதனைப் பதிவு செய்கின்றான்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசையினிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்


நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதி பாடுவதில் இயற்கைக்கும் இசைக்கும் உள்ள நுட்பமான உறவு சொல்லப்படுகிறது.

இசையும் மொழியும் இணைந்தபோதுதான் கவிதை பிறந்தது. ஓசையை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தி அதில் சொற்களை இட்டுநிரப்பி மனிதன் கவிதையைக் கற்றுக்கொண்டான். ஆதியில் கவிதை என்பது பாட்டுதான். எழுத்துக்களைப் படைத்துக்கொள்வதற்கு முன்பே மனிதன் பாட்டைப் படைத்துவிட்டான். பாட்டில் இசையே முதன்மை பெற்றது, சொல்லும் பொருளும் அடுத்த இடத்தில்தான். இப்படித் தொடங்கிய பாட்டு, வாய்மொழிக் கவிதையாய் வளர்ந்து ஏட்டில் குடியேறி கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தனக்கும் இசைக்குமான தொடர்பை விட்டுவிடாமல் பற்றித் தொடர்ந்தது. பின்னர், கவிதை அச்சு ஊடகத்திற்கு இடம் பெயர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டு, கவிதையை இசையிலிருந்து பிரித்தது. பறக்கக் கற்றுக்கொண்ட குஞ்சுப் பறவைக்கு இனி தாய்ப்பறவையின் துணை தேவையில்லை. இனியும் தாய்ப்பறவை ஊட்டிக் கொண்டிருந்தால் குஞ்சுப்பறவை செயலற்றுப் போகும். கவிதைகளுக்கும் இதே விதிதான். கவிதைகள் வாய்க்கும் செவிக்குமாக ஊடாடும்வரைதான் இசை அல்லது ஓசை ஒழுங்கு தேவைப்பட்டது. கவிதைகள் அச்சு வாகனமேறி கண்ணுக்கும் கருத்துக்குமாக ஊடாடத் தொடங்கிய பின்னர், கவிதை தன் எல்லாக் கட்டுகளையும் உடைத்துக் கொண்டு, விட்டு விடுதலையாகி நிற்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் அதைத்தான் செய்தனஃசெய்கின்றன. நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ என்ற இத்தகு புதிய வடிவங்களின் வரவுகளுக்குக் காரணங்கள் இவைதாம்.

பாட்டரங்கங்கள் கவிதையைச் செவிக்குப் படைப்பன. அங்கே கவிதை பாட்டாயிருக்க வேண்டும். அதைவிடுத்துத் தமிழின் நவீன கவிதைகளைப் பாட்டரங்கங்களில் வாசிப்பது பாட்டி மஞ்சள் தேய்த்துக் குளித்த கதைதான். கவிதைகள் வாய்மொழியில், ஏட்டில், அச்சில் குடியிருந்த தலைமுறைகளைக் கடந்து நான்காவது தலைமுறையாக கணிப்பொறி வழி இணையத்தில் குடியேறத் தொடங்கிவிட்டன. இவை ஊடக மாற்றங்கள். ஒவ்வொரு ஊடக மாற்றத்திற்கும் ஏற்ப, கவிதைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

II
பொறியாளர் மு.பாலசுப்பிரமணியனின் நான்காவது படைப்பு வெள்ளைத் திமிர் என்ற கவிதைத் தொகுப்பு. முதல் மூன்று படைப்புகளும் கூடக் கவிதைப் படைப்புகள்தாம்.

நடைவண்டி - சிறுவர் கவிதைகள்
வாழப் பிறந்தோம் - சமுதாயக் கவிதைகள்
அரைக்கீரை விற்கிறான் அம்பானி – ஹைக்கூ


என்று மூன்று படைப்புகளையும் வௌ;வேறு வடிவில்ஃ நோக்கில் வெளியிட்டு புதுவைக் கவிஞர்கள் பரம்பரையில் தமக்கென ஒரு தனியிடத்தை இயல்பாகப் பெற்றவர் பரிதிஅன்பன் என்று அறியப்படும் பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன்.

'வெள்ளைத் திமிர்' என்ற நூலின் தலைப்பே தனித்துக் குறிப்பிடப் பெறும் சிறப்புடையது. உலக வரலாற்றை ஒருவரியில் சொல்லும் ஒப்பற்ற சொற்கள் இந்த வெள்ளைத் திமிர். பின்னைக் காலனியியம் என்றதொரு புதிய அணுகுமுறையில் இன்றைக்கு அலசப்படும் சமூக பொருளாதார பண்பாட்டுச் சொல்லாடல் மதிப்புடையது இந்த சொற்கள். கவிஞர் இந்தச் சொற்களை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைப் பொருளில் கையாண்டாலும் இந்தச் சொற்கள் வழங்கும் படிமம் விரிந்த பொருளுடையது. பன்முக வாசிப்புக்கு வழிவகுப்பது.

கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின் விரிந்த வாசிப்பு அனுபவமும் உலக நடப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் கூர்த்த மதியும், புரிந்துகொண்டதைப் பதிவுசெய்யும் துணிச்சலும் இந்நூலின் பக்கங்கள் தோறும் காணக் கிடைக்கின்றன.

நூலின் உள்ளடக்கங்களைப் பார்க்கிறபோது கவிதைகளுக்கான பாடுபொருள்களைத் தேடிப் பிடிக்கும் சிரமம் மு.பாலசுப்பிரமணியனுக்கு ஒருநாளும் ஏற்பட்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. வீட்டுச் சூழல், நட்புச் சூழல் சமூகச் சூழல், நாட்டுச் சூழல் என்று தாம் புழங்குகின்ற அனைத்துச் சூழல்களின் இயல்புகளையும் அவற்றின் சிக்கல்களையும் கவிதைகளாக்கும் செய்நேர்த்தி அவருக்கு கைவந்திருக்கின்றது. மு.பாலசுப்பிரமணியனின் முந்தைய கவிதைத் தொகுதிகளில் காணக்கிடைக்காத பல நவீன கவிதை உள்ளடக்கங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. சான்றாக, காலம், மனம், வாழ்க்கை, நினைவு, காலஓட்டம், தேடல் முதலான கவிதைகளைக் குறிப்பிடலாம். இவ்வகைக் கவிதைகளில் மு.பாலசுப்பிரமணியனின் தேடலும் வாழ்க்கை குறித்த விசாரணைகளும் நுட்பமாக வெளிப்படுகின்றன.

கவிதைகள் குறித்தும் கவிதைகளின் நோக்கம் குறித்தும் கவிதை எழுபவனின் கடமைகள் குறித்தும் சில தெளிவான வரையறைகளைக் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் உருவாக்கி வைத்துள்ளார். கவிஞரின் இலக்கியப் பயிற்சி இதற்குத் துணைபுரிந்திருக்க வேண்டும். கவிதை என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள ஒரு கவிதை அவரின் கவிதைக் கோட்பாட்டை/ விருப்பை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

நடந்ததை நடப்பதை நயமாக உரைக்கவும்
நடக்க இருப்பதில் நம்பிக்கை வைக்கவும்
கடந்ததைக் காதலைக் காவியம் ஆக்கவும்
கருத்தினைக் கடமையைக் கனிவாக உரைக்கவும்
துயிலுகின்ற மக்களைத் தூண்டி எழுப்பவும்
துணிவாகச் சமூகக் கொடுமைகள் சாடவும்
வெயிலாக வெளிப்பட்டு வெற்றுமைகள் கொளுத்தவும்
வேண்டும் கவிதை


என்றெல்லாம் கவிதைகளின் தேவையை வலியுறுத்தும் கவிஞர் இதே கவிதையில் இன்னும் ஒருபடி மேலேபோய், "உரிமைகள் வென்றிடும் குரலாய் மாறும், உண்மையில் கவிதையே உலகை ஆளும்" என்ற அசாத்தியமான நம்பிக்கையோடு கவிதையை முடிக்கின்றார்.

கவிதைகள் எவ்வளவுதான் உயர்ந்தவையாயிருந்தாலும் எழுதுபவனைப் பொறுத்தன்றோ கவிதை பயனுடையதாகும். கவிதைகளின் நோக்கத்தைப்போல் கவிஞனின் நோக்கமும் இலக்கும் உயர்வாயிருத்தல் வேண்டுமென்பதனையும் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் தெளிவுபடுத்துகின்றார்.

விருப்புக்குப் பாட்டெழுதி
வெறுந்தாளை நிரப்பாமல்
பொறுப்புக்குப் பாட்டெழுதி
பொதுவுடைமை போற்றிடுஎPர்
உறுப்புகளை வருணித்து
உணர்ச்சிகளைத் தூண்டாமல்
உழைப்பாளர் வியர்வையின்
உன்னதம் போற்றிடுவீர்


வெறுந்தாளை நிரப்பும் இன்றைய சராசரிக் கவிஞர்களைச் சாடுவதோடு மட்டுமின்றி கவிதையும் கவிஞனும் எப்போதும் ஒடுக்கப்பட்டவன் பக்கமே நிற்க வேண்டும் என்ற பொருளில் உழைப்பவர் பெருமை பேசவேண்டும் என்றும் சமத்துவம் போற்றப்பட வேண்டும் என்றும் ஆழமான சிந்தனைகளையும் ஆரவாரமின்றி பதிவுசெய்கின்றார் மு.பாலசுப்பிரமணியன்

கவிஞர்கள் தம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை அத்துமீறல்களை அடக்குமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் கற்பனை உலகில் கவிதைத் தேர் ஒட்டிக்கொண்டிருப்பதும் கடவுளர் துதிபாடி காலத்தை வீணே கடத்திக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கன. வாழும் காலத்திற்குப் பயன்படாத கவிஞன் வெறுஞ்சதைப் பிண்டம். கவிஞன் தாம் வாழுகின்ற காலத்தின் குரலாய் இருக்க வேண்டும். கவிஞர் மு.பாலசுப்பிரமணியனின் வெள்ளைத் திமிர் சமகாலத்து உள்ளுர் மற்றும் உலக நடப்புகள் அனைத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவுசெய்கின்றது.

கவிழ்ந்த தேர் என்ற தலைப்பில் ஈழத்தின் அரசியல் மேதை பாலசிங்கம் மறைவை அழுத்தமான சோகத்தோடு கவிதையாக்குகின்றார். வெள்ளைத் திமிர் என்ற தலைப்பில் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும் சதாமின் மரணதண்டனையையும் ஆவேசமாகச் சாடிப் பாடுகின்றார். துறைமுக விரிவாக்கம் என்ற தலைப்பில் புதுவைத் தேங்காய்த்திட்டில் அமைக்க இருந்த துறைமுக விரிவாக்கத்திற்கெதிரான மக்கள் போராட்டத்தையும் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கையும் கடுமையான கோபத்தோடு கவிதையாக்குகின்றார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

III
கடந்த இருபத்தைந்து ஆண்டு காலப் புதுவைக் கலை இலக்கிய வளர்ச்சியின் அடையாளம் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன். 1983 தொடங்கி புதுவையின் எல்லா இலக்கிய மேடைகளையும் பார்வையாளர் வரிசையிலிருந்து கூர்ந்து கவனித்து வளர்ந்தவர் இவர். கடந்த பத்தாண்டுகளாகப் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இலக்கியப் பேராசான் ஜீவாவின் பாதையில் கலை இலக்கியங்களைப் படிக்க / படைக்க முற்படுபவர். சுயமரியாதைச் சிந்தனையும் முற்போக்கு அரசியல் பார்வையும் கொண்டவர். புதுவையின் வளர்ந்துவரும் புதிய தலைமுறையின் முன்னோடி. புதியவர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் பண்பாளர். புதுவையின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக எதிர்காலத்தில் அடையாளம் காட்டத்தகும் ஆற்றலுடையவர்.

'அரைக்கீரை விற்கிறான் அம்பானி' நூலின் அணிந்துரையில் புதுவைத் தமிழ்நெஞ்சன் கவிஞர் மு.பாலசுப்பிரமணியனைப் பற்றிக் குறிப்பிடும் வரிகளைப் பொருத்தம் நோக்கி இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

பரிதிஅன்பன் (மு.பாலசுப்பிரமணியன்) சூடும் சுரணையும் மானமும் உள்ள ஒரு தோழன். இலக்கியத் தாகமும் இனவுணர்வு வேகமும் பொதுத் தொண்டில் ஈடுபாடும் இம்மண்ணின் மைந்தன் என்கிற அடையாளமும் மொழி, இன, நாட்டுணர்வின் முகவரியும் கொண்டவன்.

புதுவைத் தமிழ்நெஞ்சனின் பாராட்டுரைக்கு நூற்றுக்கு நூறு தகுதி பெற்றவர் மு.பாலசுப்பிரமணியன். தொடர்ந்துவரும் அவரின் தமிழ்ப்பணிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

முனைவர் நா.இளங்கோ

No comments: