பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் சொற்பொழிவுக்கலை உத்திகள்
பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.
தமிழர்க்குப் பேச்சுக்கலை புதியதல்ல. திருவள்ளுவர் சொல்வன்மை என்றே ஒரு தனியதிகாரம் படைத்துப் பேச்சுக்கலையின் மாண்பினைப் போற்றுகின்றார். கேட்டார் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாகச் சொல் இருக்கவேண்டும் என்று பேச்சாற்றலுக்கு இலக்கணம் வகுக்கின்றார் திருவள்ளுவர். ஆயினும் மேடைப்பேச்சு என்ற வடிவம் தமிழர்க்கு இருபதாம் நூற்றாண்டு வரவு. ஆங்கிலக் கல்வியால் தமிழகம் பெற்ற பல பயன்களில் இதுவும் ஒன்று.
உலக வரலாற்றில் பேச்சாற்றலால் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் மிகப்பலர். கிரேக்க மக்களைக் கவர்ந்த டெமாஸ்தனிஸ், ரோமானிய மக்களைத் தமது பேச்சாற்றலால் வியப்பில் ஆழ்த்திய சிசரோ, சொல்லாலும் கருத்தாலும் கேட்போர் மனம் கவர்ந்த பிரிட்டிஷ் சிந்தனையாளன் புருனோ, அனல் கக்கப் பேசி புத்துலகம் படைத்த மாவீரன் லெனின், மதங்களுக்கு எதிரான கருத்துக்களையும் மயக்கு மொழியில் எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைத்த பகுத்தறிவாளன் இங்கர்சால், மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன் என்று மேடைப்பேச்சால் வரலாறு படைத்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இந்தியாவில், தமிழகத்தில் பேச்சு என்பது தர்க்கம், விவாதம், விளக்கவுரை, அறவுரை போன்ற வடிவங்களிலேயே நெடுங்காலமாக வழங்கிவந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் தமிழ் மேடைப்பேச்சுக் கலையின் தோற்றத்தைக் காணமுடிகிறது. ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் சமயநெறிப்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தி, தமிழரின் மேடைப்பேச்சுக் கலைக்குக் கால்கோள் இட்டனர். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் சிவநெறியும் செந்தமிழும் பரப்பத் தமிழ்நாடெங்கும் வலம்வந்து சொற்பொழிவாற்றி மேடைப்பேச்சுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தார். மேடைப்பேச்சுக் கலையைத் தமிழில் முழுமையாக உருவாக்கியவர் திரு.வி. கலியாண சுந்தரனார். அவரே சொற்பொழிவைத் தமிழில் கலையாக்கினார்.
மேடைத்தமிழுக்கு உரமிட்டு வளர்த்த பெருமை திராவிட இயக்கத்தினரையே சாரும். ஒவ்வொரு தலைவரும் தத்தமக்கே உரிய தனித்துவமான நடையழகோடு மேடைத்தமிழை வளர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தந்தைப்பெரியார், இலக்கியப் பேராசான் ஜீவா, பேரறிஞர் அண்ணா போன்றவர்களாவர். சுயமரியாதை இயக்கத்தவர்களின் சொற்பொழிவுகள் காரண காரிய வழிப்பட்ட வினா விடைகளைக் கொண்டும், அச்சமற்று எப்பொருள் குறித்தும் சிந்திக்கும் திறனைக் கொண்டும், பகுத்தறிவு வழிப்பட்ட தர்க்கங்களைக் கொண்டும் அமைந்திருந்திருந்தன. இத்தகு மேடைப்பேச்சுகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் அன்றைக்குப் புகழ் பெற்றிருந்தன. சுயமரியாதை இயக்கப் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார்.
இரா.ச.குழந்தைவேலனாரின் மேடைப்பேச்சு:
குழந்தைவேலனார் ஓர் அரசுக் கல்லூரிப் பேராசிரியராகப் பணி ஏற்றிருந்தாலும், தம் இளமைக்காலம் முதல் இன்றுவரை தம்மை ஓர் சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளனாகவே வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். தனிப்பட்ட அரசியல் கட்சிச் சார்பில்லாமல் சிந்தாந்த பூர்வமாக இயக்கம் சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பது அவரின் தனிப்பட்ட சிறப்பு. வகுப்பறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சமூகச் சிந்தனையோடு ஒடுக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதுமாக அவரின் வாழ்க்கை அமைந்திருந்தது. தமது சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் படைப்பிலக்கியங்களாகவோ, கட்டுரைகளாகவோ பதிக்க வைக்க அவர் விரும்புவதில்லை. மாறாகப் பேச்சு வடிவில் மேடைப்பேச்சுகளாகத் தமிழகமெங்கும், குறிப்பாகத் தென்னார்க்காடு மற்றும் புதுவை மாவட்டங்களில் அவர் முழங்கிய மேடைகள் ஆயிரத்திற்கும் மேலிருக்கும்.
குழந்தை வேலனார் கையாண்ட மேடைப்பேச்சு வடிவங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
1. தனிப்பேச்சு
2. வாழ்த்துரைகள்
3. திருமணத் தலைமை உரைகள்
4. பட்டிமன்ற உரைகள்
5. வழக்காடுமன்ற உரைகள்.
என்பன அவை.
பேச்சு நடை:
குழந்தை வேலனாரின் மேடைப்பேச்சு நடை தனித்தன்மை வாய்ந்தது. ஆராவாரமிக்க அலங்காரமான பேச்சு நடையை அவரிடம் காண்பது அரிது. மிக மிக எளிய இனிய சொற்களைக் கையாண்டு இயல்பான மேடைத்தமிழில் அவர் சொற்பொழிவாற்றுவார். வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களை கூடியவரையில் தவிர்ததாகவே அவருடைய பேச்சு அமையும். நீண்ட தொடர்களையோ அடுக்கு மொழிகளையோ அவர் வலிந்து தம் பேச்சின் இடையில் புகுத்துவதில்லை. படித்தவர்கள் மட்டுமின்றி பாமரரும் புரிந்துகொள்ளும் படியாக அவரின் பேச்சு அமையும். கொச்சை மொழிகளையோ, குறுமொழிகளையோ அவர் பயன் படுத்துவதில்லை.
பேச்சின் தொடக்கத்தில் பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய எத்தகைய உத்திகளையும் அவர் கையாள மாட்டார். இலேசாகச் சலசலத்து ஓடும் ஒரு சிற்றோடையின் ஒழுக்குபோல் அவரின் பேச்சு தொடங்கும். பேச்சின் போக்கில் ஓடைகள் கலந்து பெருகி ஓடும் ஆற்றின் ஓட்டம்போல் பேச்சு வேகம் பிடிக்கும். ஆனால் சீரான வேகத்தில் மாற்றமிருக்காது. துள்ளிக்குதிப்பதோ, ஆர்ப்பரிப்பதோ, ஆரவாரம் செய்வதோ ஒருபோதும் இருக்காது. கருத்தின் ஆழமும் அழுத்தமும் கேட்பவர்களைப் பிணிக்க வேண்டுமே அல்லாமல் பேச்சின் வெற்று ஆரவாரத்தால் பயனில்லை என்பது குழந்தைவேலனாரின் கொள்கை.
மேற்கோள்கள்:
இலக்கிய உரையானாலும் சமுதாயம் சார்ந்த உரையானாலும் இடையிடையே தக்க மேற்கோள்களைக் கையாண்டு பேசுவதில் அவர் சமர்த்தர். இலக்கிய மேற்கோள்களை அவர் மிகுதியாகக் கையாளுவார். குறிப்பாகப் பாவேந்தர் பாடல்கள் குழந்தைவேலனாரின் பேச்சில் மிகுதியும் இடம்பெறும். திருக்குறள், சங்க இலக்கியப் பகுதிகள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலான காப்பியப் பகுதிகளையும் தக்க இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார். இலக்கியப் பகுதிகளைத் தாளில் குறித்துவைத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கம் அவரிடம் கிடையாது. நெஞ்சக் களஞ்சியத்திலிருந்து நேராக உணர்வு பூர்வமாக எடுத்தாளுவார். இலக்கிய மேற்கோள்கள் மட்டுமில்லாமல் அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சுவையான சம்பவங்களையும் தக்க இடங்களில் எடுத்துரைத்து, தாம் சொல்லவந்த கருத்துக்கு வலிமையூட்டுவார்.
ஆலய மேடைகளும் கடவுள் கதைகளும்:
தம் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை என்றாலும் தேவைப்படும் இடங்களில் புராண இதிகாச மேற்கோள்களைக் எடுத்துக்காட்டத் தயங்கமாட்டார். தாம் வலியுறுத்தப் போகும் சமூகநலம் சார்ந்த கருத்துக்களுக்குத் தெய்வக்கதைகள் பயன்படுமென்றால் அவ்வகைக் கதைகளைக் குறிப்பிட்டுத் தம் பேச்சுக்கு வலிமை சேர்ப்பார்.
குழந்தைவேலனாரோடு பல பட்டிமன்றங்களில் வழக்காடு மன்றங்களில் பேசிய அனுபவம் எனக்குண்டு. என்னுடைய மேடைப்பேச்சுக்குப் பட்டைதீட்டி அதைப் பொலிவுபெற வைத்த பெருமை அவருக்குண்டு. மேடைப்பேச்சில் பதட்டம் என்பதே அவருக்குக் கிடையாது. மேடை ஏறும் நேரம் வரைக்கும் உரிய பேச்சாளர்கள் வரவில்லை என்றாலும் ஒருபோதும் பதட்டமடையவே மாட்டார். மேடையச்சத்தை அவரிடம் நான் கண்டதேயில்லை.
சுயமரியாதைக்காரன் ஆலய மேடைகளில் ஏறி, புராணக் கதைகளைப் பேசலாமா? என்று அவர்மீது சிலர் கேள்விக் கணைகளைத் தொடுப்பதுண்டு. நோயுள்ள இடத்தில்தானே மருத்துவனுக்கு வேலையிருக்கிறது என்ற கொள்கையுடையவர் அவர். பகுத்தறிவாளனுக்கு வேலை இருக்கிற இடம் பக்தர்கள் கூட்டத்தில்தானே! எனவேதான் பக்தர்கள் மேடையில் அமர்ந்து அவர்கள் நம்புகிற புராண, இதிகாசங்களை விவாதப் பொருளாக்கி மக்களைச் சிந்திக்க வைக்கிற வேலையை அவர் தம் பேச்சுத் திறனால் மிக எளிதாகச் செய்துவிடுவார். குழந்தைவேலனாரின் மேடைப்பேச்சின் வெற்றியே அதில்தான் இருக்கிறது.
சில சிறப்புக் குறிப்புகள்:
குழந்தைவேலனார் பழகுதற்கு இனிய பண்பாளர். பல ஆண்டுகளுக்கு முன்படித்த மாணவர்கள் கூட பேராசிரியருக்கு இன்றும் உரிய மதிப்பளித்துப் பழகுவர். கடலூரை ஒட்டியுள்ள எல்லாக் கிராமங்களுமே பேராசிரியரின் மேடைப்பேச்சால் பயன்பெற்ற ஊர்கள் என்றால் அது மிகையன்று.
குழந்தைவேலனார் பேச்சின் தனித்தன்மையைச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், அவரின் பேச்சு எட்டிநின்று அறிவுரை கூறும் பேச்சாக இல்லாமல் நெருங்கி நின்று தோளோடு கைசேர்த்து ஆலோசனை கூறும் நண்பரின் வார்த்தைகளைப் போல் இருக்கும். காதோடு நின்றுவிடாமல் மனதுவரை சென்று ஆசனமிட்டு அமர்ந்து கொள்ளும். மேடைப்பேச்சில் இவ்வகைப் பேச்சு ஒரு புதிய பரிணாமம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக