வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆனந்தரங்கர் இலக்கியங்கள் - ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் - பகுதி-1

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்
ஆனந்தரங்கன் கோவை அறிமுகமும் ஆய்வும் பகுதி-1


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய சிற்றிலக் கியங்களில் ஒன்று ஆனந்தரங்கன் கோவை. இதன் ஆசிரியர் திருவாரூரைச் சேர்ந்த தியாகராய தேசிகர் ஆவார். இவர் இலக்கண விளக்கம் படைத்த வைத்தியநாத நாவலரது புதல்வர். தம் தந்தையார் இயற்றிய இலக்கண விளக்க நூல் வரிசையில் விடுபட்டுப்போன இலக்கண விளக்கப்பாட்டியல் எனும் பகுதியை இத் தியாகராய தேசிகரே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராய தேசிகர் அவர்தம் தந்தையார் வைத்தியநாத நாவலருக்கு இரண்டாம் புதல்வர். இவர்தம் தமையனார் சதாசிவ தேசிகர் ஆவார்.

கோவை: அகப்பொருள் சிற்றிலக்கியம்

கோவை என்ற சிற்றிலக்கியம் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய் எழுந்த இலக்கிய வகையாகும். அகப்பொருட் செய்திகள் பல சிற்றிலக்கியங்களில் பேசப்பட்டாலும் கோவை இலக்கியத்தில் அவை கிளவித் தொகைகளாக அமைக்கப் பெற்றுத் துறைகளாக விரித்துக் கோவைப்படக் கூறப்படுதலின் கோவை என்றும் அகப்பொருள் கோவை என்றும் ஐந்திணைக் கோவை என்றும் பெயர் பெறுவதாயிற்று.
இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், இலக்கண விளக்க அகத்திணையியல் போன்ற நூல்களில் சொல்லப் பட்டிருப்பதைப் போல் தொல்காப்பியத்தில் அகப்பொருள் இலக்கணம் அகப்பொருள் நிகழ்ச்சிகளைத் தொடர்புபடக் கூறவில்லை. இறையனார் அகப்பொருள் உரையில் அகப்பொருள் நிகழ்ச்சித் தொடர்பும் ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற உதாரணச் செய்யுள்களும் கூறப்பட்டுள்ளன. இவ்விவரமே பிற்காலத்தில் கோவை நூல்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஆதாரமாக அமைந்தது.

பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் நூல்,
கோவை என்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பெனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப.1


என்று கோவையிலக்கணம் கூறுகிறது. எனவே அகப்பொருள் கோவைகள் அகப்பொருள் தொடர் நிகழ்ச்சிகளைத் துறையாய்ப் பெற்று நானூறு கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது என்பது பெறப்படும். ஆனந்தரங்கன் கோவை இவ்விலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த நூலாகும்.

கோவை இலக்கியத்தின் சிறப்பியல்புகள்:

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் மிகுந்து கிடைக்கும் அகப்பொருள் கருத்துக்களை இடைக்காலங்களில் பரப்பத் தமிழ்ப்புலவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவே கோவை யிலக்கியமாகும். தொல்காப்பியக் கருத்தும் சங்கத் தொகைநூல் செய்திகளும் கோவை நூல்களில் மறுபிறவி எடுத்து உலவுகின்றன. அகத்திணை மாந்தர்களுக்குப் பெயரிடுதல் கூடாது என்னும் தொல்காப்பிய நெறியை எல்லாக் கோவை நூல்களும் புறநடையின்றிப் பின்பற்றுகின்றன.
கோவை, தலைவனும் தலைவியும் தாமே கண்டு தோழியின் துணைகொண்டு காதலின்பம் அனுபவிக்கும் களவொழுக்கம் முதல் ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் தனித்தனித் துறைகளாக அமைத்து ஒருங்கே அமைவது. கோவை நானூறு பாடல்களால் பாடப்படும் என்பது பொது இலக்கணமாயினும் நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கோவைகளோ மிகப்பல. ஆனந்தரங்கன் கோவை சரியாக நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

பாட்டுடைத் தலைவன்

அகப்பொருள் பாடல்களில் பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடம் உண்டு. கோவை இலக்கியங்களில் பெரும்பாலும் இருவகைத் தலைவர்களும் இடமபெறுவதுண்டு. விதிவிலக்காக அம்பிகாபதிக் கோவைக்குப் பாட்டுடைத் தலைவன் இல்லை. ஆனந்தரங்கன் கோவை ஆனந்தரங்கரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. கோவை நூல்களின் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் பாட்டுடைத் தலைவனைப் பாடுதல் என்ற நோக்கமே காரணமாய் அமைந்துள்ளது. இந்தப் பாட்டுடைத்தலைவர்கள் கடவுளர்களாகவோ, அரசர்களாகவோ, வள்ளல்களாகவோ அமைவதுண்டு. பரிசில் பெறவோ, அருளைப் பெறவோ பாட்டுடைத் தலைவர்களின் புகழ்பாடும் இலக்கியத்தில் கிளவித் தலைவனும் தலைவியும் அத்துணை முக்கியத்துவம் பெறுவதில்லை.

கோவை - தோற்றம்

சங்க அகஇலக்கியங்கள் எல்லாம் துறைத் தொடர்பற்ற தனிப்பாடல்;கள் என்றாலும் அக நிகழ்ச்சிகளை தொடர் நிகழ்ச்சிகளாகத் தொகுத்துச் சொல்லும் கோவை முறை சங்க இலக்கியங்களிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்பதைக் கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. இப்பாட்டு அறத்தொடு நிலை என்னும் துறையில் அமைந்துள்ளது. அன்னை ஏவத் தலைவியும் தோழியும் தினைப்புனம் காக்கச் சென்றதும், தலைவன் கெடுதி வினாயதும், மொழிபெறாது வருந்தியதும், யானையினின்று காத்ததும், புனலினின்று காத்ததும், முயங்கியதும், இரவுக்குறியின் இடையூறுகளும், வெறியாட்டும், அறத்தொடு நிற்றலும் என்ற களவு நிகழ்ச்சிகள் வரிசையாக இப்பாட்டில் வந்துள்ளன. ஆதலின் குறிஞ்சிப் பாட்டினைச் சங்கத்தின் கோவைப் பாட்டு என்று கூறலாம்.2
சங்க இலக்கிய அகத்திணைத் துறைகள் திருக்கோவையார் காலம்வரை படிப்படியான வளர்ச்சியைப் பெற்றன. நம்பியகப்பொருள் காலம் தொட்டு இலக்கணத்திற்கு இலக்கியம் காணுதல் எனும் புதியநிலை கோவை நூல்களுக்கு ஏற்பட்டது. காலப்போக்கில் அகப்பொருள் பாடும் நிலை தேய்ந்து புலவர்கள் தம்மை ஆதரித்த வள்ளல்கள் நாட்டம்போல் சிற்றின்பச் சுவையை இணைத்துப் பாடுவதற்குக் கோவை இலக்கிய வகையைக் கருவியாகப் பயன்படுத்தினர்.
இன்பம், பொருள், அறம் என்னும் சங்க இலக்கிய மரபு மாற்றம் பெற்ற பிற்காலத்துக் கோவை நூல்களில் பொருளே முதன்மையாகிப் பொருள், இன்பம், அறம், வீடு என்ற மாற்றம் பெற்ற நிலையைக் காணமுடிகிறது.3 பாட்டுடைத் தலைவர் ஆனந்தரங்கர்

பொதுவில் வரலாற்றுணர்ச்சி குறைந்திருக்கும் தமிழர்களில் ஆனந்தரங்கர் ஓர் அற்புதமான மனிதர். தமிழரிடையில் காணப்பெறாத வரலாற்று உணர்வும் ஆர்வமும் ஆனந்தங்கரிடம் மிகுதியாகவே இருந்தன. 1736 செப்டம்பர் 9 இல் தொடங்கி 25 ஆண்டுகாலம் -தனது வாழ்வின் இறுதிக்காலம்- 1761 ஜனவரி மாதம் வரையில் மிகுந்த ஈடுபாட்டோடும் விடாமுயற்சியோடும் தாம் கண்டதையும் கேட்டதையும் அவர் தமது தினசரியில் குறித்து வைத்துள்ளார். நோய்வாய்ப்பட்ட நாட்களிலும் வெளியூர் சென்ற நாட்களிலும் கூட விடாது எழுதியோ எழுதச் சொல்லியோ ‘தினசரி’ எழுதுதலை இடைவிடாத கடமையாக அவர் ஆற்றிவந்தார். தமது தினசரியைப் பிற்காலத்தினர் படிப்பார்கள் என அவர் நம்பினார். எனவேதான் “அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதனை நான் எழுதுகிறேன்”4 என்று நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார்.

ஆனந்தரங்கர் சென்னையை அடுத்த பிரம்பூரில் 1709 மார்ச் 30 இல் பிறந்தார். இவரது தந்தை திருவேங்கடம் பிள்ளை வசதியான வணிகராக இருந்தார். இவரின் தாயார் 1712 இல் ஆனந்தரங்கருக்கு மூன்று வயது ஆனபோது காலமாகிவிட்டார். திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனராகிய நைனியப்ப பிள்ளை புதுச்சேரியில் பிரஞ்சு அரசாங்கத்தில் திவானாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். இவரது வேண்டுகோளின்படி திருவேங்கடமும் அவரது குடும்பமும் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தனர். 1716ஆம் ஆண்டு இவர்கள் புதுவை வந்தார்கள் என்றும் அப்போது ஆனந்தரங்கருக்கு வயது ஏழு என்றும் கோவை நூலின் முன்னுரையில் ந.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். 1721-22ல் ஆனந்தரங்கருக்கு வயது 12-13 இருக்கையில் புதுச்சேரிக்குக் குடிபுகுந்தார் என்று இர. ஆலாலசுந்தரம் குறிப்பிடுகின்றார். ஆலாலசுந்தரம் அவர்களின் கூற்று5 நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் குறிப்பிடும் தகவலின் அடிப்படையில் சொல்லப் படுவதால் அதுவே ஏற்புடையதாயிருக்கும்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் தமிழில் எழுதியுள்ள நாட்குறிப்புகள் தமிழ்மொழிக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கி~ம் என்றே குறிப்பிடவேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்ததோடு மட்டுமில்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனிதராகவும் இருந்த காரணத்தால் இவரின் நாட்குறிப்பு ஒரு காலப்பெட்டகமாகவும் வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. தன்னைச் சுற்றி நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை முயற்சி குன்றாமல் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து பதிவுசெய்து வைத்த சாதனையாளர் ஆனந்தரங்கர். வரலாற்றுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் இது ஒரு அரிய நூலே. இவ்வளவு நீண்டதொரு உரைநடை நூலைத் தமிழிலக்கியம் இதுவரைக் கண்டதில்லை. நாட்குறிப்பு இலக்கியம் என்ற வகையிலும் இது ஒரு சாதனையே.

ஆனந்தரங்கர் இலக்கியங்கள்

ஆனந்தரங்கர் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி பிரஞ்சு, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளையும் அவர் அறிந்திருந்தார். தமிழ் மொழியின் மீது இவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு அடையாளமாக அவரைச் சுற்றி எப்போதும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஆனந்தரங்கரைப் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கமாயிருந்தது. அருணாசலக் கவிராயர் தாம் இய்றிய இராம நாடகத்தைத் திருவரங்கத்தில் மட்டுமில்லாது ஆனந்தரங்கர் சமூகத்திலும் அரங்கேற்றினார் என்ற செய்தி அருணாசலக் கவிராயர் சரித்திரத்தில் காணப்படுகிறது.6

நமச்சிவாயப் புலவர்,
படிக்காசுப் புலவர்,
மதுர கவிராயர்,
இராம கவிராயர்,
ஜவ்வாது புலவர்,
தியாகராய தேசிகர்


முதலான புலவர்கள் ஆனந்தரங்கரைப் புகழ்ந்துபாடிப் பரிசில் பெறுவதற்காக இயற்றிய பல தனிப்பாடல்கள் இன்றும் கிடைக்கின்றன. தனிப்பாடல்கள் மட்டுமின்றி ஆனந்தரங்கர் புகழ்பாடும் பல நூல்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளில் பாடப்பட்டிருக்கின்றன.

ஆனந்தரங்கன் கோவை,
ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்,
கள்வன் நொண்டிச் சிந்து,
ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்,
ஆனந்தரங்க விஜயசம்பு (சமஸ்கிருதம்),
ஆனந்தரங்க ராடசந்தமு (தெலுங்கு),
ஆனந்தரங்கர் புதினங்கள் (பிரபஞ்சன் புதினங்கள்)


முதலானவற்றை ஆனந்தரங்கர் புகழ்பாடும் இலக்கியங்களாகக் குறிப்பிடலாம்.
ஆனந்தரங்கர் புகழ்பாடும் இலக்கியங்களில் தனிப்பெரும் சிறப்பைப் பெற்ற நூல் ஆனந்தரங்கன் கோவையே. இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்ட மிகப்பெரிய இலக்கிய வகையாகும். இந்நூலாசிரியர் தியாகராய தேசிகர் ஆழமான இலக்கண இலக்கியப் புலமை பெற்றவராவர். தமிழிலக்கியச் சூழலில் தகுதி வாய்ந்த புலவரொருவரால் மிகச்சிறந்த கோவை பாடப்பெறும் வாய்ப்பு அத்துணை எளியதல்ல.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...