வெள்ளி, 14 செப்டம்பர், 2007

ஆறு. செல்வனின் ஆய்த எழுத்து - நூல் மதிப்புரை

புதுவைக்கு மீண்டும் ஒரு தமிழ்ஒளி

ஆறு. செல்வனின் ஆய்த எழுத்து

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புதுவை மாநகரம் கவிதைப் பாரம்பரியம் மிக்க நகரம். அண்மைக் காலங்களில் அதாவது 2000 க்குப் பிறகு புதுவையில் அதிக அளவில் நூல்கள் வெளியிடப் பெறுவதும் அதிலும் குறிப்பாகக் கவிதை நூல்கள் மிகுதியாக வெளிவருவதும் கண்கூடு. இலக்கியப் படைப்புகளின் பெருக்கம் எப்பொழுதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் இதில் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள் சிலவுண்டு. வெளிவரும் நூல்களில் எத்தனை வாசிக்கப்படுகின்றன? வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை பேர்? நூலகங்களை நம்பி மட்டுமே நூல்கள் வெளியிடப் பெறுகின்றனவா? நூலகங்களில் இத்தகு கதையல்லாத படைப்புகள் எவ்வளவு தூரம் வாசிக்கப்படுகின்றன? வேளியிடப்பட்ட புத்தகங்களால் சமுதாயத்துக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன? என்றெல்லாம் விடையில்லாத வினாக்கள் பல தொக்கி நிற்கின்றன.

பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், தமிழ்ஒளி எனத் தொடர்ந்து நீண்டு செல்லும் புதுவைக் கவிஞர்களின் வரிசையில் கவிஞர் ஆறு.செல்வனும் ஒருவர். அவருக்குக் கவிதை தொழிலல்ல. பாரதிக்குப் பிறகு யாருக்குமே கவிதை தொழிலல்ல. அவர் ஓர் அரசு அதிகாரி. சமூகம் அவரைக் கவிதையெழுத வைத்திருக்கிறது. யாரையுமே சமூகம்தான் இலக்கியம் படைக்கத் தூண்டும். சுயும்புவாக யாரும் எதையும் படைத்து விடுவதில்லை. கவிஞரின் மூன்றாவது படைப்பு ஆயுத எழுத்து. முதலிரண்டு படைப்புகளின் மூலம் நானும் ஒரு கவிஞன்தான் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தவர் ஆறு.செல்வம். இந்த மூன்றாவது படைப்பு அவரின் படைப்பாற்றலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாகச் சமூகம் குறித்த அவரின் பார்வை, சமூக அவலங்கள் குறித்த அவரின் கவலை, சமூகத்தின் மீதான படைப்பாளிகளுக்கே உரிய கோபம் இவற்றோடு சமூக மாற்றத்திற்கான அறைகூவலாகவும் அமைந்திருப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு.

இந்தக் கவிதை நூலுக்கு ஆயுத எழுத்து ஆசிரியர் பெயரிட்டிருப்பதன் காரணம் நூலிலுள்ள கவிதைகளைப் படிப்பார்க்குத் தெளிவாக விளங்கும்.தமிழால் புகழடைந்தேன் என்ற தலைப்பு தொடங்கி இருபத்தைந்து தலைப்புகளில் தமிழின் சிறப்பு, தொழிலாளர் மேன்மை, சாதி மத எதிர்ப்பு, பகுத்தறிவு முழக்கம், அரசியல் அவலம் பெண்ணுரிமை முதலான பல்வேறு உள்ளடக்கங்களில் கவிதை படைத்துள்ளார் கவிஞர் ஆறு.செல்வம்.

தமிழ்! தமிழ்!
தமிழால் புகழடைந்தேன் என்று தொடங்கி மூன்று தலைப்புகளில் தமிழின் புகழ்பாடும் கவிஞர் ஆறு.செல்வம், செத்து விழுந்த போதும் தமிழேசிதையாய் எரியட்டும்! – என்தேகம் எரிந்த சாம்பல் தமிழ்க்குஉரமாய்க் கரையட்டும்! என்று சம்பிரதாய ப+ர்வமாகத் தம் நூலைத் தொடங்கினாலும், அடுத்து வருகின்ற இருபத்திரண்டு தலைப்புகளிலும் தான் ஓரு சமூக விடுதலைக் கவிஞன் என்பதை வெளிப்படுத்தத் தவறவில்லை. எனவேதான்,

விடுதலை என்பது வேறொன்று மில்லை
உரிமையைப் பெறும்மோகம் - அதை
வேண்டுவ தென்பதும் கெஞ்சுவ தென்பதும்
வேடிக்கைக் கதை யாகும்.

என்று எழுதுகிறார்.

அதிகார வர்க்கத்தின் அழகு:
இந்தியச் சமூகத்தில் சாதியும் வர்க்கமும் இணைந்து இருப்பதே கண்கூடான உண்மை. இதில் உழைக்கும் வர்க்கம் அழுக்கு ஆடையோடும் உழைத்துழைத்து வெயிலால் கருத்த தோலோடும் இருக்கின்றது. உழைப்பை அறியாத அதிகார வர்க்கமோ செவத்த உடலோடும் சலவை செய்த ஆடைகளோடும் உலா வருகின்றது. இந்தச் சமூக அவலத்தைத் தூங்காதே சித்திரமே…! எனும் தலைப்பில் கவிஞர் வருணிக்கும் அழகே தனியழகு,

தோலுநல்லா செவந்திருக்கும்
துணியெல்லாம் வெளுத்திருக்கும்
பாலப்போல மொகமிருக்கும்
பச்சையான சிரிப்பிருக்கும்


தோளுமேல கையிருக்கும்
தோழனைப்போல் பேச்சிருக்கும்
ஏழைரத்தம் குடிச்சிடத்தான்
எப்பொழுதும் நெனைப்பிருக்கும்.

ஏழை ரத்தம் குடிக்கும் அந்த அதிகார ராட்சசர்களின் வருணனையின் முரண் படித்து ரசிக்கத்தக்கது.

தொழிலாளர் புகழ்பாடும் தொகுப்பு:
ஆய்த எழுத்து தொகுப்பில் பல பாடல்கள் உழைக்கும் மக்களின் உயர்வைச் சித்திரிக்கின்றன. அதிலும் குறிப்பாக மே தினத்தைப் பாடும்போது உழைப்பாளிகளின் சிறப்பைப் பாடுகிறார்,

சாலையில் கிடந்திடும் சரித்திரமே!
சாக்கடை மந்திடும் சந்தனமே!
ஆலையில் சிக்கிய பூவினமே!
ஆதிக்கச் சாதிக்குத் தீவனமே!

என்றெல்லாம் ஆதிக்கச் சாதிக்குத் தீவனமான உழைக்கும் மக்களின் விடுதலைப் போருக்கு என் கவிதை பயன்படட்டும் என்று முழக்கமிடுகின்றார்.

காதலைப் பாடாத கவிஞனா?
காதலைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆறு.செல்வனும் காதலைப் பாடுகின்றார். எப்படி? கணத்தில் மயங்கும் கவர்ச்சியை எல்லாம் காதல் என்று நம்புவதைக் கண்டித்து, காதல் வெறும் பாலினக் கவர்ச்சியால் மட்டும் உருவாகக் கூடாது என்றும் காதலிலும் ஒரு சமூக நீதிக்கான போராட்டம் இருக்க வேண்டுமென்றும் கவிஞர் விரும்புகிறார். அதனால்தான்,

சாதியை உடைத்து மதங்களைப் புதைத்து
சமத்துவமான காதல் செய்வீர்!
சடங்குகள் கடந்து சாத்திரம் துறந்து
பகுத்தறிவான காதல் செய்வீர்!

என்று காதலிலும் புதுமை செய்யத் தூண்டுகிறார்.

விளிம்பு நிலை மக்களின் கவிதை:
கவிஞர் ஆறு.செல்வத்தின் இக்கவிதைத் தொகுப்பு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கவிதைத் தொகுப்பாய் இருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். உரிமையைக் கேட்டிட நாள் எதற்கு? என்ற கவிதையில்,

சாதிக்கெல்லாம் இங்கு வேட்டுவைப்போம் - மட
சாத்திரச் சடங்கைப் போட்டுடைப்போம்
ஆதிக்கச் சாதியின் ஆட்டம் அடங்கிட
அடிமையெல்லாம் இங்கு கூட்டுவைப்போம்

என்று பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டே ஆதிக்க விலங்கொடிக்கும் என்று அடிமைப்பட்ட மக்களின் கூட்டணியை வேண்டுகின்றார். இது கவிஞரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரின் அரசியல் தெளிவையும் காட்டுகிறது.

அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு:
சாதி மத வேறுபாடுகளுக்குக் காரணம் மதம். பகுத்தறிவால் மட்டுமே இந்த இழிநிலைகளிலிருந்து மீளமுடியும் என்று திண்ணமாக நம்பும் கவிஞர் ஆறு.செல்வன், நம்முடைய மடைமையைப் பல கவிதைகளில் சாடிப் பாடுகின்றார். அறிவை இவன் என்னைக்குத்தான் பயன்படுத்துவான்? என்று ஆதங்கத்தோடு ஒரு கவிதையைப் படைத்துப் பகுத்தறிவை ஊட்டும் அற்புதமான பாடல் ஒன்று,

பகலிரவா படிக்காம தூங்கிக் கிடப்பான்
பரீட்சையில வெற்றிபெற தேங்கா ஒடைப்பான்
சுகமிழந்து நோவுவந்தா மருந்து குடிப்பான்
சுகமடைஞ்சா திருப்பதிக்கு மொட்டை யடிப்பான்


கற்சிலையைக் கழுவிவிட பாலும் தேனுமா? – அது
காதுகுளிர கேட்பதற்கு மேள தாளமா?
உச்சிவேளை காலைதோறும் சூடதீபமா? - இங்கு
உணர்ச்சியுள்ள மனுஷன் வாழ்க்கை பாதை ஓரமா?

மக்கள் திருந்தினால் கவிஞர்க்கு வெற்றி!

தேர்தல் பாதை?
மக்களாட்சியின் மகத்துவம் வெளிப்படுவது தேர்தல்களில்தான், ஆனால் அந்தத் தேர்தல் இங்கே எப்படியெல்லாம் கேலிக்கூத்தாகி சந்தி சிரிக்குது என்பதைத் தேர்தல் வருது என்றொரு கவிதையில் பாடுகிறார் கவிஞர் ஆறு.செல்வம்,

கூழ வாங்கிக் குடிக்கிறான் - அவன்
குடிசைக் குள்ள நொழையறான்
ஏழ பாழ எல்லார்கிட்டயும்
இளிச்சி சிரிச்சி கொழையறான்


சேல வேட்டி குடுக்கறான் - அவன்
சிரிச்சி சிரிச்சி மயக்கறான்
வேல முடிஞ்சி ஜெயிச்சிபுட்டா
மேல ஏறி மிதிக்கிறான்

இந்தத் தெளிவு வாக்காளர்களுக்கு வந்துவிட்டால்…பிறகென்ன கவலை.

தலித் மக்களின் விடுதலை:
விடுதலை பெற்று அறுபதாண்டுகள் ஆனபின்னாலும் நாட்டில் சாதிக்கொடுமைகள் ஓயவில்லை சேரி மக்களின் துன்பக் கதைகளில் மாற்றமில்லை என்பதைச் சேரி - கச்சேரி என்றொரு பாடலில் அவலச்சுவை மிகும் படியாக எடுத்துரைக்கின்றார்.

தவிச்சி தவிச்சிப் பச்சப்புள்ள
துடிக்கும் - பசியில் துடிக்கும் - அது
தாவி வந்து தாயின்மார்பைக்
கடிக்கும் - கண்ணீர் வடிக்கும்


சுவைச்சிக் குடிக்க பாலில்லாம
வெடிக்கும் - நெஞ்சு வெடிக்கும் - இந்த
சோகம் எந்த சாமிக்கைய்யா
அடுக்கும் - அய்யா அடுக்கும்.


கட்சிக் காரன் கலவரத்தில்
எரிப்பான் -வூட்ட எரிப்பான் - ஒரு
கணக்கு வச்சி வேட்டிசேல
குடுப்பான் - அவனே குடுப்பான்

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கவிஞரே சொல்கிறார் கேளுங்கள்,

உரிமை கேட்டு ஒண்ணுசேரும்
கோபம் - எங்க கோபம் - அதில்
உலகம் வெந்து சாம்பலாகிப்
போகும் - ஒருநாள் போகும்

கவிஞரின் கவிதைகள் ஒவ்வொன்றும் புலரப்போகும் விடியலுக்கான நம்பிக்கைகளை நம்முள் விதைக்கின்றன. மக்களுக்குக் கவிஞர் சொன்ன கோபம் எப்போது வரும்? உரிமை கேட்டு ஒண்ணு சேரும் ஞானம் எப்போது வரும்? என்ற ஏக்கத்தை ஆயுத எழுத்து தருகின்றது. அன்று கவிஞர் தமிழ்ஒளி எழுப்பிய கேள்விகளோடும் தீர்வுகளோடும் மீண்டும் புதுவைக்கு ஒரு தமிழ்ஒளி. நம்பிக்கையூட்டும் கவிதைத் தொகுப்பு.

1 கருத்து:

அகவிழி சொன்னது…

மலையருவியின் வலைப்பதிவினைப் பார்க்க நேர்ந்தது.
முதலில் என் கண்கள் தேடியது அவரின் கவிதைகள் ஏதாவது கிடைக்குமா என்றுதான். அவரின் பேச்சிற்கு நான் ரசிகனாக இருந்திருந்தாலும் அவரையும் அறியாமல், ஏன் என்னையும் அறியாமல் அவர் கவிதைகளை நான் அதிகம் ரசிப்பதுண்டு. என் தேடலுக்குத் தீணி போட்டது வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம் என்னும் கவிதை. நல்ல கருத்தாழமான படைப்பு. பேராசிரியரின் உள்ள உணர்வை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. தொலைக்காட்சிகளின் ஆதிகத்தில் முகங்களை மறந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இன்றைய மக்களின் அவல வாழ்க்கை அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் அவரின் பல கவிதைகள் வெளிவர வேண்டும். என் பல நாள் ஆசை அவர் கவிஞராக இன்னும் சரியாக அடையாளப் படுத்தப் படவில்லை என்பதுதான். இந்நிலை விரைவில் மாறும். இக் கவிதையில் “வரவேற்பறை” என்ற சொல் “வரவேற்பரை” என இடம் பெற்றுள்ளது ஏன் என்பது மட்டும் புரியவில்லை

அவரின்
படைப்புகளை மேலும் எதிர்நோக்கும்
மாணவன்...
முனைவர் தி. அன்புச்செல்வன்
தமிழ்த்துறைத் தலைவர்
பெருந்தலைவர் காமராசர் கலைக் கல்லூரி, புதுச்சேரி - 605 107

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...