Wednesday, September 12, 2007

பருத்திக்காடும் வெடித்த பஞ்சும்- நூல் மதிப்புரை

பருத்திக்காடும் வெடித்த பஞ்சும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

உரைநடை எங்கே கவிதையாக உருவெடுக்கிறது என்பது ஒரு படைப்பு ரகசியம். ஒரு முழுக்கவிதையில் ஒரே ஒரு சொல்லில் கவிதை உட்கார்ந்து கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடும். அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து விளையாட்டைத் தொடர்வது அத்துணை எளிய செயலாய் இருப்பதில்லை. பல சமயங்களில் அப்படி ஒரு சொல்லும் கிடைக்காமலேயே முழு கவிதையும் நம்மை ஏமாற்றிவிடுவதுண்டு. கவிதை என்று சொல்லிவிட்டால் நம்பித்தானே ஆகவேண்டும் என்ற பழக்கத்தால் ஏமாற்றங்களைப் பல சமயத்தில் நாம் வெளிப்படுத்துவதில்லை.

"பருத்திக் காடு" புதுவை யுகபாரதியின் புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. இந்நூல் அவரின் மூன்றாவது ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. ஹைக்கூ, ஜப்பானில் பிறந்து வளர்ந்த கதையெல்லாம் நாம் நிறைய பேசியாகிவிட்டது. தமிழில் ஹைக்கூ வந்தது பழங்கதையாகி விட்டது. தமிழில் ஹைக்கூ புதிய முகங்களோடு புதிய குணங்களோடு புதுப்பிறவி எடுத்தாகிவிட்டது. பிறகு ஏன் ப+ர்வஜென்மக் கதைகளெல்லாம்? தமிழில் ஹைக்கூ எழுதக் கற்றுக் கொள்வதென்பது ஷவெந்நீர் வைக்க கற்றுக் கொள்வதைவிட எளிய காரியமாகிவிட்டது. இந்த எளிமை இந்தக் கவிதை வடிவத்திற்கு ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொடுத்துள்ளது என்பதால் மகிழ்ச்சியே.

கவிதை எல்லோருக்குமானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் ஏராளம். அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம். இனி ஒரு கவிதையையும் சாகவிடமாட்டோம் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

தமிழில் வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான ஹைக்கூ நூல்களில் பருத்திக்காடு ஒரு புதுமைப்படைப்பு. ஏனெனில் இந்நூல் அந்தாதி யாப்பில் புதுவையிலிருந்து வெளிவரும் முதல் ஹைக்கூ தொகுப்பு. அதிலும் முதல் பன்னிரண்டு ஹைக்கூ பாடல்கள் அ முதல் ஒள வரை வரிசைப் படுத்தப்பட்ட உயிர் எழுத்துக்களில் தொடங்குகின்றன. வாழ்க்கை ஒரு சுழலும் வட்டம், இதில் மேல் கீழ், அந்தம் ஆதி (தொடக்கம் முடிவு ) என்பதெல்லாம் ஒரு கற்பிதம். ஒரு கவிதையின் முடிவு அடுத்த கவிதையின் தொடக்கமாயிருப்பது சுழலும் வட்டத்தை ஞாபகப்படுத்துகின்றது.

பருத்திக்காடு:நிலவுக் குழந்தை:
இந்நூல் தமிழ், இயற்கை, சமூகம், அரசியல் என்று இன்றைக்குப் பரவலாகப் பாடுபொருளாகும் அத்துணை செய்திகளையும் பாடுகிறது, சாடுகிறது. கவிஞனுக்குத்தான் இந்த வசதியிருக்கிறது எதையும் சாடலாம், பாடலாம்.சோற்றுப் பருக்கைகள் நிலவுக் குழந்தை சிந்துகிறது விண்மீன்கள் இயற்கையைப் பாடாத கவிஞன் ஏது? புதுவை யுகபாரதியின் பார்வையில்
விண்மீன்கள்
நிலவுக் குழந்தை சிந்திய
சோற்றுப் பருக்கைகள்.

இயற்கையைக் காட்சிப் படிமமாக்குவதில் கவிஞர் வெற்றி பெற்றுள்ளார். ஷகுறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் நம்மை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தும் மழலைச் செல்வங்கள் என்றானே புறநானூற்றுப் புலவன், அந்தப் புலவன் மகிழ்ந்த மகிழ்ச்சியை அப்படியே உள்வாங்கி வடித்த கவிதை இது.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறு கை அளாவிய கூழ் (குறள்-64)

என்ற குறள் கூறும் சிறுகை அளாவிய கூழை நினைவு படுத்தும் கவிஞரின் கற்பனையில் விண்மீன்கள் சோற்றுப் பருக்கைகளாகவும் நிலவு குழந்தையாகவும் நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன.

கல்மரக்காடுகள்: 

ஒரு சொல்லில் கவிதை உயிர் வாழ்ந்துவிடும் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் இந்நூலில் காணப்படும் ஒரு சொற்சேர்க்கை, ஷகல்மரக்காடுகள். மரக்காடுகள் நமக்குத் தெரியும், இதென்ன கல்மரக்காடுகள்?. மரங்களுக்கு உயிர் உண்டு, உயிருள்ள மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஸனை வெளியிட்டு மனித உயிர்க்குலங்களையே காக்கின்றன. இந்தக் கல்மரக்காடுகள் உயிரற்றவை, உயிருள்ள மரங்களின் அழிவில் பிறந்து உயிர்க்குலங்களை அழிக்கப் பிறந்தவை. கல் சூ மரம் என்ற சமனற்ற எதிர்நிலைக் கருத்துக்களை இணைத்து கவிதை படைக்கின்றார் கவிஞர் யுகபாரதி.

விற்பனை அதிகரிப்பு
விளைச்சல் நிலங்களில்
கல்மரக்காடுகள்

கல்மரக்காடுகள்
கண்ணீர் சொரிகின்றன..
மழை வேண்டி

இந்த இரண்டு கவிதைகளிலும் இடம்பெறும் கல்மரக்காடுகள் என்ற சொற்சேர்க்கை. விளைச்சல் நிலங்களில்- கல்மரக்காடுகளை உருவாக்கும் கயமையைச் சாடும் கோபமும், மழைவேண்டி கல்மரக்காடுகள் கண்ணீர் சொரியும் இளிவரலும் இவ்விரு கவிதைகளில் இரண்டு வேறுவேறு மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

சமகால அரசியல் விமர்சனம்: ஒவ்வொரு மனிதனுக்கும் கடமைகள் பல உள்ளன. தனிமனிதக் கடமைகள், சமுதாயக்கடமைகள், நாட்டுக்கான கடமைகள் என அவை விரிந்து செல்லும். சராசரி மனிதனுக்குள்ள கடமையை விட படைப்பாளிக்குக் கூடுதல் கடமைகள் உண்டு. தான் வாழும் காலத்தைக் கூர்ந்து கவனித்து நடக்கும் அவலங்களுக்கு எதிர்வினை புரியும் கடமை அது. அப்படிப் பட்டவன்தான் படைப்பாளி, மற்றவன் எழுத்தால் வயிறு வளர்ப்பவன். கவிஞர் புதுவை யுகபாரதி தாம் வாழும் காலத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடு கூர்ந்து பார்க்கிறார். உரிய எதிர்வினையை எழுத்தில் வடிக்கிறார். அச்சமற்று நெஞ்சுறுதியோடு அவர் வைக்கும் அரசியல் விமர்சனங்கள் இந்த நூலின் தனிச் சிறப்பு.

தமிழ்நாடு தலைகுனிகிறது
சாய்பாபாவுடன்
கலைஞர்?

இலவச அரிசி
உழைப்புக்கு...
வாய்க்கரிசி

இந்த இரண்டு கவிதைகளில் முன்னது தமிழக அரசியலை உணர்வு ப+ர்வமாக விமர்சிக்கிறது, பின்னது புதுவை அரசியலை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறது. கவிஞன் தான் வாழும் நிலத்தில் காலூன்றிக் கொண்டு உலகம் முழுவதும் ஏன்? பிரபஞ்சம் முழுவதும் சிறகடித்துப் பறக்கும் விந்தையானவன். மின்னொளி கொடுத்துக் கண்ணொளி பறிப்பு சிறப்புப் பொருளியல் மண்டலம்இன்றைக்கு இநதியாவின் பற்றியெரியும் பிரச்சனை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பானது. மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் அப்பாவிப் பொதுமக்கள் செத்து மடிந்ததும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே சிக்கல் வெடித்துக் கிளம்புவதும் அன்றாடச் செய்திகள். சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு நன்மை செய்யும்? யாரை பலி வாங்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாக, சுருக்கென்று தைப்பது போல் விடையளிக்கிறார் புதுவை யுகபாரதி.

மின்னொளி கொடுத்துக் கண்ணொளி பறிப்பு. வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டு மண்ணின் மக்களை நாடோடிகளாக்கிய பின் எது கிடைத்து என்ன பயன்? கண்ணொளி போன பின் மின்னொளி இருந்தென்ன? இருண்டென்ன? இந்தக் கவிதை ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிது. கவிஞர் யுகபாரதியின் பருத்திக்காடு நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சில கவிதைகள் விடை சொல்கின்றன. சில கவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. சில ஹைக்கூக்கள் நம்மை கவிதைவரை அழைத்துச் செல்லவில்லை என்றாலும் அதனால் பெரிய குறையொன்றுமில்லை. ஒரு படைப்பாளியின் எல்லாப் படைப்புகளுமே அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. நல்ல தனித் தமிழில் படைக்கப் பட்டிருக்கும் பருத்திக்காடு கவிஞரின் மற்றுமோர் வெற்றிப்படைப்பு.யுகபாரதியின் ஒரு கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

உணர்வு வயப்படுங்கள்
பிறகு சிந்திக்கலாம்
ஊர் பிழைக்கும்..

No comments: