Tuesday, March 2, 2010

மாயூரம் வேதநாயகரின் சமுதாயப்பணி:

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-5

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மாயூரம் வேதநாயகரின் சமுதாயப்பணி:

வேதநாயகர் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் கொடிய பஞ்சம் ஒன்று தலைவிரித்து ஆடியது. இதனைத் தாது வருஷப்பஞ்சம் என்று குறிப்பிடுவார்கள். 1876 - 78 ஆண்டுகளில் ஏற்பட்ட இப்பஞ்சத்தின் போது மக்கள் உண்ண உணவின்றிப் பட்டினியால் செத்து மடிந்தனர். இந்தப் பஞ்ச காலத்தில் வேதநாயகர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. தாமே தம் சொந்தச் செலவில் கஞ்சித் தொட்டிகள் திறந்து பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவளித்தார். பஞ்சத்தைத் தீர்க்க உதவுமாறு செல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பஞ்சம் தீர இறைவனை வேண்டிப் பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தார்.சான்றாக,

எட்டுநாள் பத்துநாள் பட்டினி யோடே
இடையில் கந்தை இருகையில் ஏடே
ஒட்டி உலர்ந்த உடல் என்புக் கூடே
ஒரு கோடி பேர்கள் வசிப்பது காடே
ஊரும் இல்லாமல் - குடிக்கத்
தண்ணீரும் இல்லாமல் - அன்னமெனும்
பேரும் இல்லாமல் - பசி தீர்க்கஆரும் இல்லாமல்
ஊரில் அநேகர் உயிர் மாண்டு போனாரே
பஞ்சம் தீர் ஐயா! – உனையன்றித்தஞ்சம் ஆர் ஐயா


என்று மழையில்லாமல் பஞ்சத்தால் வாடும் மக்களின் துயர் தீர நெஞ்சுருக இறைவனிடம் வேண்டும் வேதநாயகரின் உயிர்இரக்க உணர்வை என் என்பது?

பஞ்சம் தீர்த்த சுப்பிரமணிய தேசிகர்:

படிபடியாகப் பொன்கொட்டி நெற்கொள்ளும் இப்பஞ்சத்திலே
பிடிபிடியாக மணியும் கனகமும் பெட்புறுவோர்
மடிமடியாகக் கட்டிச் செல்லத்தந்தான் பெரும்வள்ளலென்றே
குடிகுடியாகத் தொழும் சுப்ரமண்ய குணாகரனே


படிப்படியாக தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுச் செல்லும் பஞ்சக் காலத்தில் வாரி வழங்கிய சுப்பிரமணிய தேசிகரை நன்றியோடு பாராட்டிப் பாடுகின்றார் வேதநாயகர். மக்கள் என்னும் யானையைப் பஞ்சம் என்னும் முதலை பிடித்து அலைக்கழிக்கின்றது. எனவே விஷ்ணு சக்கராயுதத்தை ஏவியதைப் போல சுப்பிரமணிய தேசிகர் வட்டம் என்று வழங்கப்படும் வட்டமான காசினைக் கொண்டு பஞ்சத்தின் தலையைத் துண்டித்து மக்களைக் காத்தார் என்ற பொருளமைந்த இவரின் தனிப்பாடல் இதோ,

கரியொத்தன பல்லுயிர்களைப் பஞ்சக் கராம்அடிக்க
அரியொத்தனன் சுப்பிரமணி ஐயன் அரிச்சக்கரம்
சரியொத்தன அவன் ஈந்திடும் பொன்வெளிச் சக்கரமே.
(தனி- 19)

1870 வாக்கில் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது. அரசாங்கம் அந்நோய் பரவாதபடி மருந்து மாத்திரைகளைக் கொடுத்தது. வேதநாயகரும் தம்மாலான உதவிகளைச் செய்தார். அன்றியும் பேதிக்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுத்து நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமென்று வேதநாயகர் சுப்பிரமணிய தேசிகருக்குக் கவிமடல் எழுதி வேண்டிக் கொள்கிறார்.

இலக்கண மெய்க்கு அரை மாத்திரை யாம் இவ்வளவும் இன்றி
மலக்கண் விளைபிணியாற் பலர் மாய்ந்தனர் மண்டும் இந்நோய்
விலக்க அருள்புரி… சுப்பிரமணி யானந்த நின்மலனே


ஆதீனத்தோடு தமக்கிருந்த நட்பை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் வேதநாயகரின் மக்கள் தொண்டு மகத்தானது. தமிழ்இலக்கணத்தில் மெய்எழுத்துக்குக் கூட அரை மாத்திரை இருக்கிறது, மனித மெய்க்கு அந்த அரை மாத்திரை கூட இல்லாத அவலநிலையை நயமாக எடுத்துக் கூறும் கவிதை அவரின் மனிதநேயத்துக்குச் சான்று.

மழையோ வெய்யிலோ மக்கள் துன்புறக் கூடாது:

வேதநாயகர் மழை பெய்யாமல் மக்கள் துன்புற்ற போது மழைவேண்டிப் பாடினார், கடும் வெய்யிலால் மக்கள் துன்புற்ற போது கதிரவனைக் கண்டித்துப் பாடினார். மொத்தத்தில் மக்கள் நொந்தால் மாயூரரின் மனம் நோகும், கவிதை பிறக்கும். ஒரு கோடைக்காலம். கோடையின் வெப்பத்தில் மக்கள் துடித்தனர், வேதநாயகருக்குச் சூரியன் மேல் கடுங்கோபம். கதிரவனே உன்பாகன் முடமா? உன் குதிரைகள் முடமா? உன்னுடைய ஆகாய வழி தூர்ந்துவிட்டதா? ஏன் இப்படி எரிகிறாய்? உனக்கு யார் இங்கே விருந்துவைத்து அழைத்தார்கள்? கோபமும் கிண்டலுமாக கவி படைக்கிறார், பாடல் இதோ,

பகலே பாகன்போல் பரிகள் முடமோ
அகல்வான் வழிதூர்ந் ததுவோ - அகலா
திருந்தாய் திரிந்தாய் எரிந்தாய் விரிந்தாய்
விருந்தார் புரிந்தார்கள் மேல்.


தொடர்ந்து மழை இல்லாமையால் கடும் பஞ்சம். மழை பெய்யாதா? என்று மக்கள் எல்லாம் ஏங்கிக் கிடக்கிறார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லிச் செய்யாத கருமிகளைப் போல மழை பெய்வதுபோல் போக்குக் காட்டிப் பெய்யாமல் பொய்த்து விடுகிறது.(தனி.35) உண்ணீர் இலாமையினால் உள்நீரும் வற்றியழக் கண்ணீரும் வற்றியது (தனி. 37) என்றெல்லாம் பாடும் வேதநாயகர், மேகத்திற்குத் தக்கதொரு ஆலோசனை கூறுகின்றார்.

வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு
பேரிகொண்டு நீதிரண்டு பெய் (தனி. 34)


(வாரி - கடல்), நீர் நிறைந்த கடல் எதிரே இருக்கிறது அதிலுள்ள நீரை வாரி முகந்து அள்ளிக் குடித்து வானில் கருமேகமாகச் சூழ்ந்து இடிமுழக்கம் செய்து மழையே நீ பெய்வாயாக என்கிறார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு சோகத்திலும் சொல்நயமிக்க கவிதைகள் பிறப்பது வேதநாயகரின் கவித்திறனுக்குச் சான்று.

1 comment:

அகரம் அமுதன் said...

வாரியுண்டு பாடலை எங்கோ முன்பு படித்தாலும் அதைச் சேமிக்காமல் விட்டுவிட்டேன். தங்களின் இக்கட்டுரை வழியாக அப்பாடல் எனக்குக் கிடைத்திருப்பது எண்ணி மகிழ்கின்றேன் நன்றிகள்