வியாழன், 10 டிசம்பர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை- பகுதி ௩, தொகுப்பும் உரைகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தொகுப்பு வரலாறு:

"இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்" என்பது பழங்குறிப்பு. இந்நூலைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களில் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை. (ஆசிரியர் பெயர் காணப்படாத பாடல்களின் எண்கள்: 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 381, 395) எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை இருநூற்றைந்து.

குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும் என்று கருதுகிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. அவர் தரும் விளக்கம் வருமாறு,

"பிரதிகளின் இறுதியில், இத்தொகை முடித்தான் பூரிக்கோ, 'இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர், இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது' என்று காணப்படுகிறது. அகநானூறு என்ற தொகை நூல் பிரதிகளின் இறுதியில், 'தொகுத்தான் உப்பூரிக்குடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன், தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி' எனக் காணப்படுகின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில், 'இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த மாறன் வழுதி' எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள முடித்தான் என்பது தொகுத்தான் என்று பொருள்படும் எனக் கோடலே நேரிது. இஃது உண்மையொடு பட்டதாயின் பூரிக்கோவும், உப்பூரிகுடி கிழாரும் ஒருவரேயாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும்".
(வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 95-96)

வையாபுரிப் பிள்ளையின் விளக்கத்தின் படி பூரிக்கோ எனவரும் கோவும், உப்பூரிகுடி கிழார் எனவரும் கிழாரும் ஒரே இனத்தைச் சார்ந்தவராய் இருத்தல் வேண்டும். ஆயின் கோவும் கிழாரும் ஒரே இனத்தைச் சுட்டுவன அல்ல என்று கூறி இக்கருத்தை மறுக்கிறார் மு.சண்முகம் பிள்ளை. (குறுந்தொகை, பதிப்பாசிரியர்- மு.சண்முகம் பிள்ளை, ப.கக)

உரையாசிரியர்களும் குறுந்தொகையும்:

தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் உரைகளிலும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய நூல்களின் உரைகளிலும் இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் சங்க இலக்கியத் தொகை நூல்கள் பலவற்றிலிருந்தும் பல பாடல் அடிகளை மேற்கோளாகக் காட்டுகின்றனர். அப்படிக் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் குறுந்தொகைப் பாடல்கள் இலக்கிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் எவ்வாறு கற்றவர்கள் கருத்தைக் கவர்ந்து பலராலும் பயிலப்பட்டு வந்தன என்பது தெற்றென விளங்கும்.

இக் குறுந்தொகையுள் இப்பொழுது தெரிந்தவரையில் 165 செய்யுட்களே பிறநூலுரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை என்கிறார் உ.வே.சா. தம் குறுந்தொகைப் பதிப்பு முகவுரையில். இந்நூலை மேற்கோளாக எடுத்தாண்ட உரையாசிரியர்கள் பட்டியலையும் அவர் தருகின்றார்.

அவை வருமாறு,
1. அகப்பொருள் விளக்க உரையாசிரியர்
2. அடியார்க்கு நல்லார்
3. அழகிய மணவாள ஜீயர்
4. இளம்பூரணர்
5. இறையனார் அகப்பொருள் உரையாசிரியர்
6. கல்லாடர்
7. களவியல் காரிகை உரையாசிரியர்
8. காரிரத்ந கவிராயர்
9. குணசாகரர்
10. சங்கரநமச்சிவாயர்
11. சாமிநாத தேசிகர்
12. சிவஞான முனிவர்
13. சேனாவரையர்
14. சொக்கப்ப நாவலர்
15. தக்கயாகப் பரணி உரையாசிரியர்
16. தண்டியலங்கார உரையாசிரியர்
17. தமிழ்நெறி விளக்க உரையாசிரியர்
18. திருமயிலை யமகவந்தாதி உரையாசிரியர்
19. திவ்யப் பிரபந்த ஈட்டு வியாக்யானக்காரராகிய நம்பிள்ளை
20. தெய்வச்சிலையார்
21. நச்சினார்க்கினியர்
22. பரிமேலழகர்
23. புறநானூற்று உரையாசிரியர்
24. பெருந்தேவனார்
25. பேராசிரியர்
26. மயிலேறும் பெருமாள் பிள்ளை
27. மயிலைநாதர்
28. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர்
29. வைத்தியநாத தேசிகர்
மேலே சுட்டப்பட்ட அத்துணை உரையாசிரியர்களும் குறுந்தொகையைத் தம் உரையில் மேற்கோளாகக் காட்டிச் சிறப்பித்துள்ளார்கள்.

தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இளம்பூரணர் குறுந்தொகையை 126 இடங்களில் எடுத்தாளுகின்றார். பேராசிரியர் 103 இடங்களில் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார். நச்சினார்க்கினியர் மிக அதிகமாக 223 இடங்களில் குறுந்தொகைக் காட்டுகளோடு தம் உரையை எழுதியுள்ளார். வேறு எந்த நூலும் இத்துணை மிகுதியாக உரையாசிரியர்களின் கருத்தை ஈர்க்கவில்லை. குறுந்தொகையின் சிறப்பிற்கு உரையாசிரியர் களின் மேற்கோளாட்சியே மிகச்சிறந்த சான்று.

குறுந்தொகைக்குப் பழைய உரை:

குறுந்தொகைக்கான பழைய உரைகள் இருபெரும் உரையாசிரியர்களால் எழுதப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஒன்று பேராசிரியரின் உரை, மற்றொன்று நச்சினார்க்கினியர் உரை. பேராசிரியர் இருபது பாடல் தவிர்த்த பிற பாடல்களுக்கு உரை கண்டார் என்றும், அவர் விடுத்த இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் பின்னாளில் உரை கண்டார் என்றும் தெரிய வருகின்றது.

நல்லறி வுடைய தொல்பே ராசான்
கல்வியும் காட்சியும் காசினி அறிய
பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு
இதுபொருள் என்றுஅவன் எழுதா தொழிய
இதுபொருள் என்றதற்கு ஏற்ப உரைத்தும்


எனவரும் நச்சினார்க்கினியரின் உரைப்பாயிரப் பகுதி முன் சொல்லப்பட்டதற்குச் சான்றாகும்.

இச்செய்தியை,
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே


எனவரும் நச்சினார்க்கினியர் செய்த உரைகளைத் தொகுத்து வழங்கும் வெண்பாவும் தெரிவிக்கின்றது. பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை செய்தார் என்பதற்கு நச்சினார்கினியரின் தொல்காப்பிய உரையிலேயே அகச்சான்று உள்ளது. தொல்காப்பிய அகத்திணையியல்,

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே


என்னும் 46ஆம் நூற்பா உரையில், 'யானே ஈண்டை யேனே' (குறுந். 54) என்பதனை எடுத்துக் காட்டி, "பேராசிரியரும் இப்பாட்டில் மீனெறி தூண்டில் என்பதனை ஏனை உவமம் என்றார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரை கண்டிருந்தார் என்பது தெளிவாகும். இவ்விரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வையாபுரிப்பிள்ளை எல்லாம் ஒரு ஆளென்று நீங்க வேறு உதாரணம், மேற்கோள் காட்டுறீங்க! எங்க போயித் தலைய முட்டிக்கிறது! தமிழின் பெருமையைக் குலைத்து, மொழியை செங்கதத்தின் அடிமை, கிளை மொழியாக்க சட்டர்ஜியுடன் கங்கணங் கட்டிக் கொண்டிருந்தவர். ஆங்கிலத்தில் Quisling என்ற பதம் உண்டு அதற்குத் தமிழில் குயக்கொண்டான், வையாபுரி என்ற சொற்களை மட்டுமே நிகராக வைக்க முடியும்!

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...