முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8
குறுந்தொகையில் வரலாற்றுக் குறிப்புகள்:
சங்க இலக்கியக் கவிஞர்கள் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். நடப்பியலை மறந்துவிட்டு கற்பனை வானில் அவர்கள் சிறகடிப்பதில்லை. தாம் வாழும் நாடு, சமுதாயம், மக்கள் இவைகளோடு நெருக்கமாயிருப்பவர்கள். எனவேதான் அவர்கள் படைப்பது அகப்பொருள் பாடல்களானாலும் அவர்கள் காலத்து சமுதாய, அரசியல் பதிவுகளை அவற்றில் காண முடிகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் அதிகம் கிடைக்காத தமிழ்ச் சூழலில் சங்க இலக்கியங்கள் பெரிதும் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டிருப்பது ஓர் அரிய நிகழ்வு ஆகும்.
பாத்திரக் கூற்றுகளில் அமைந்த அகப்பாடல்களில் புலவர்கள் உவமை, உருவகம், ஒப்பீடுகள் ஆகியவற்றைப் புனைந்தபோது, அவர்களுக்கு நன்கு தெரிந்த புறத்தகவல்களான நகரங்கள், பட்டினங்கள், அரசர்கள், ஊர்கள், கதைப் பாடல்கள், வரலாற்றுச் செய்திகள், போர்கள், வெற்றிகள், இதிகாசத் துணுக்குகள் முதலியவற்றை அகப்பாடல்களில் இடம்பெறச்செய்தார்கள். பரணர், மாமூலனார், நக்கீரர் போன்ற புலவர்கள் இவற்றைத் திட்டமிட்டே செய்தார்கள். பெரும்பாலும் இத்தகு புறத்தகவல்கள் உவமைகள் வாயிலாகவே பதிக்கப்பெற்றன.
கோசர்களும் நன்னனும்:
'கோசர்' என்ற குடியினர் பற்றிச்சங்க இலக்கியங்களில் நிறைய குறிப்புகள் உண்டு. நாலூர் கோசர் (குறுந். 15), ஒன்று மொழி கோசர் (குறுந். 73) என்றெல்லாம் இவர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக இயங்கினார்கள். இவர்கள் காலத்தில் வாழ்ந்த மா மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட, 'பெண் கொலை புரிந்த' (குறுந். 292) என்று புலவர்களால் பழிக்கப்பட்ட நன்னன் என்ற மன்னனோடு தம் குடிப் பெண்ணைக் கொலை புரிந்த சம்பவத்தால் கோசர்களுக்குப் பகை ஏற்பட்டது.
தங்கள் குடிப்பெண்ணை அநியாயமாகக் கொன்ற நன்னனைப் பழி தீர்க்கக் கருதிய கோசர்கள் செய்தி சூழ்ச்சியைப் பின்வரும் தெரிவிக்கின்றது.
நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே (குறுந். 73)
பரணரின் இப்பாடல் கோசர், நன்னன் இவர்களின் பகையால் விளைந்த வரலாற்றுச் சம்பவத்தைச் சுருக்கமாகப் பதிவு செய்கிறது.
ஆதிமந்தி:
பரணரின் பல அகநானூற்றுப் பாடல்களின் வழி ஆதிமந்தி, ஆட்டனத்தி வரலாற்றுக் கதை அகப்பாடல்களில் பேசப்படுகிறது. ஆட்டனத்தி கதையின் ஒரு பகுதி குறுந்தொகையில் இடம் பெறுகிறது.
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை (குறுந். 31)
பரணர் கூறும் வரலாற்றுக் கதையின் ஒரு பாத்திரமான ஆதிமந்தியே பாடுவதாக அமைந்த இப்பாடல், ஆட்டனத்தியைத் தேடி காவிரிக் கரை முழுதும் தேடிய சம்பவத்தைப் பதிவு செய்கிறது.
அதிகனும் கொங்கரும்:
பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. (குறுந். 393)
பரணரின் இப்பாடல் கொங்கரின் ஆர்ப்பரிப்பைப் போல அலர் இருந்தது என்று குறிப்பிடும் இடத்தில் வரலாற்றுச் செய்தி ஒன்றைப் பதிவு செய்கிறது.. பசும்பூட் பாண்டியன் கொங்கரை அழிக்க அதிகன் என்ற படைத்தலைவனை ஏவினான். பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் போர்த்தொழில் வல்ல அதிகன் வாட்படை மிக்க கொங்கரால் களிற்றின் மிசை இருந்தவண்ணமாய் கொல்லப்படுகிறான். அதிகன் இறந்தபோது கொங்கர்கள் மிகுந்த ஆராவாரம் செய்து தங்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள் என்பது வரலாற்றுச் செய்தி. குறுந்தொகையின் பல பாடல்களில் இவ்வாறு அலருக்கு உவமையாகப் பல்வேறு புறச்செய்திகள் இடம்பெறுவது கவனத்திற்குரியது.
அதியமான் நெடுமான் அஞ்சி:
தமிழ்நாட்டை ஆண்ட வேளிர் பரம்பரையில் அதியமான் மரபினர் சிறப்பிடம் பெற்றவர்கள். இம்மரபில் வந்த அஞ்சியை எழினி என்றும் சங்க இலக்கியங்கள் சுட்டிக் கூறும். அவ்வையார் அதியமானோடு நெருங்கிய நட்பு பூண்டு விளங்கினார். தாம் பாடிய குறுந்தொகைப் பாடலொன்றில் தலைவியின் உறக்கமின்மையைக் குறிப்பிட விரும்பும் ஒளவையார்,
ஓவாது ஈயும் மாரி வண்கைக்
கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே (குறுந். 91)
ஷஷஎப்பொழுதும் இடைவிடாது கொடுக்கும் மேகம் போன்ற கைவண்மையினை யுடைய கையினையும் விரைந்த செலவினையுடைய யானைப்படையினையும் நீண்ட தேர்ப்படையினையும் கொண்டுள்ள அதியமான் அஞ்சியைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தச் செய்யும் இரவினையுடைய ஊரில் உள்ளாரைப் போல நீ தூங்கும் நாட்கள் சிலவாகுக என்று உவமை வாயிலாக அதியமானின் கொடைச்சிறப்பையும் யானைப்படை தேர்ப்படைகளின் சிறப்பையும் வீரச்சிறப்பையும் பதிவுசெய்கிறார்
குறுந்தொகையில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள் சில:
பாத்திரங்களின் கூற்றாய் அமைக்கப்பட்ட பாடல்கள் என்றாலும் புலவர்கள் தமது விரிந்த அனுபவங்களுக்கு ஏற்ப புறச்செய்திகளைப் பதிவுசெய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தகு ஆர்வப் பதிவுகளில் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த பல ஊர்களின் பெயர்களும் உவமையின் வாயிலாகப் பதிவுசெய்யப் படுகின்றன. குறுந்தொகையில் இடம்பெற்ற சங்ககால ஊர்ப்பெயர்கள் சில வருமாறு,
குட்டுவன் மாந்தை (குறுந். 34), பொறையன் கொல்லி (குறுந். 89), வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரை (குறுந். 100), சோழர் உறந்தைப் பெருந்துறை (குறுந். 116), பொறையன் தொண்டி (குறுந். 128), வேளிர் குன்றூர் (குறுந். 164), பாரி பறம்பு (குறுந். 196), மலையன் கானம் (குறுந். 198), நள்ளி கானம் (குறுந். 210), மலையன் முள்@ர் கானம் (குறுந். 312)
ஒவ்வொரு ஊரும் நகரமும் அதன் தலைவன் அல்லது மன்னனின் பெயரால் அடையாளப் படுத்தப்படுவதை இப்பட்டியலில் இருந்து உணரலாம். மனிதர்களுக்கும் நிலத்திற்குமான உறவை இவ்வாறு அடையாளப் படுத்துவதன் மூலம், நிலத்தின் மீதான மனிதர்களின் அதிகாரம் கட்டமைக்கப் படுகிறது என்பதை இத்தகு சான்றுகள் அடைளாளப் படுத்துகின்றன.
இவ்வாறு புலவர் மரபில் ஒரு பிரிவினர் புறக்கூறுகளை, தகவல்களை அகப்பாடல்களாம் குறுந்தொகையில் உவமைகளாக ஒப்பீடுகளாகக் கலந்து பாடியமைக்கான காரணம் சிக்கலானது. தொல்காப்பியர் தனித்தனி மரபுகளாகப் போற்றிய அகத்தையும் புறத்தையும் சங்க இலக்கியங்கள் ஒரே மரபின் இருவேறு பகுதிகளாகப் பதிவு செய்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவேதான் சங்க இலக்கியங்கள் புறப் பாடல்களில் அகக்கூறுகளையும் அகப்பாடல்களில் புறக்கூறுகளையும் கலந்து பாடியுள்ளன. (ராஜ் கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், பக். 222-242)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக