புதன், 31 டிசம்பர், 2008

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் - அணிந்துரை

துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும் -
கு. தேன்மொழி

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதைகளை விட ஹைக்கூக் களுக்கே இவ்விதி முற்று முழுதாகப் பொருந்தும். கடந்த பத்தாண்டுகளில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் மிகுதியாக வெளிவரத் தொடங்கிவிட்டன.
‘அந்தாதி பார்த்து அந்தாதி கலம்பகம் பார்த்துக் கலம்பகம்’ என்பதைப்போல் ஹைக்கூ பார்த்து ஹைக்கூக்கள் பெருகிவிட்டன. இன்றைக்கு வேறு எந்தக் கவிதையும் எழுதத் தெரியாத பலர் ஹைக்கூ எழுதத் தொடங்கிவிட்டார்கள். மொத்தமாக நாலு பக்கம் எழுதினாலே போதும் ஒரு கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம், இந்த வசதி ஹைக்கூ எழுதுவதில்தான் இருக்கிறது. இதற்காகவே ஹைக்கூ எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நான் மேலே சொன்னதெல்லாம் விதிவிலக்குகள். உண்மையிலேயே ஹைக்கூ வடிவத்தையும் வெளிப்பாட்டு உத்திகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இந்த உள்ளடக்கத்தை இந்த உருவத்தில் கொடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் எனத் தேர்ந்து ஹைக்கூ எழுதுகிற கவிஞர்கள் தமிழில் நிறையபேர் இருக்கிறார்கள். மரபுக் கவிதைகளுக்குப் பெயர்பெற்ற புதுச்சேரி ஹைக்கூ கவிதைகளிலும் தனிமுத்திரை பதித்து வருகிறது.

தமிழ் ஹைக்கூக்களின் வரலாற்றுத் தொடக்கம் 16-10-1916 நாளிட்ட சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில்தான் மகாகவி பாரதியார் ஜப்பானியக் கவிதை என்னும் தலைப்பில் சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு ஹைக்கூ கவிதைகள் புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டவை. அன்று தொடங்கி புதுச்சேரிக்கும் ஹைக்கூவுக்குமான உறவகள் தொடர்கதை.

“துளிப்பாக்களில் (ஹைக்கூ) அழகியலும் சமுதாயமும்” என்ற தலைப்பில் கவிஞர் கு.தேன்மொழி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல் புதுச்சேரி ஹைக்கூக்களைப் பற்றிய முதல் ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஹைக்கூ என்பதனைத் துளிப்பா என்றே கையாளுகின்றார். ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் துளிப்பா ஆகிறது. “இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்” என்ற துளிப்பா நூல்களின் தொகுப்பே இந்த ஆய்வுக்கு அடிப்படை.

புதுச்சேரி ஹைக்கூ கவிஞர்கள் எ.மு.ராசன், புதுவை- தமிழ்நெஞ்சன், புதுவை- சீனு. தமிழ்மணி, செந்தமிழினியன், அரிமதி தென்னகன், இளவேனில், அரிமதி இளம்பரிதி, ஆலா ஆகிய எண்மரின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் விளக்கமுறையில் ஆய்வினை நடத்திச் செல்லும் கு.தேன்தொழி நூற்பொருளைப் பின்வரும் நான்கு இயல்களாகப் பகுத்து விளக்கியுள்ளார்.

1. தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் பதிவுசெய்யப் பெற்றுள்ள அரசியல்
4. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி துளிப்பாக்களில் வெளிப்படும் சமுதாய சிந்தனைகள்

தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதல் இயல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வரலாற்றை விளக்கிச் செல்வதோடு தமிழக, புதுவை ஹைக்கூ கவிதைகளுக்கான இலக்கிய வரலாற்றையும் பதிவு செய்கிறது. இரண்டு, மூன்று, நான்காம் இயல்கள் புதுச்சேரித் துளிப்பாக்களில் இடம்பெற்றுள்ள அழகியல், அரசியல், சமுதாயச் சிந்தனைகளைத் திரட்டி ஆய்வுசெய்கின்றன.

தமிழின் முதல் துளிப்பா தொகுப்பு அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. இம்முதல் துளிப்பா தொகுதி வெளிவந்து இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கூட ஆகாதநிலையில் துளிப்பா குறித்த ஆய்வுகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. இவற்றில் பெரும்பாலான ஆய்வுகள் பல்கலைக் கழக இளமுனைவர் மற்றும் முனைவர்பட்ட ஆய்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு வெளியே துளிப்பா குறித்து வெளிவந்துள்ள நூல்கள் பெரிதும் துளிப்பாவை அறிமுகம் செய்யும் வகையிலேயே அமைந்தன. சான்றாக, 1990 ஆம் முனைவர் தி.லீலாவதி எழுதிய ‘இதுதான் ஹைக்கூ’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு இளமுனைவர் பட்ட வகுப்புகளை அஞ்சல் வழியில் தொடங்கி காசு பார்க்கத் தொடங்கியதன் விளைவாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குச் சில தீமைகளும் சில நன்மைகளும் ஏற்பட்டன. தீமைகளில் முக்கியமானது, ஆய்வு என்ற பெயரில் நீர்த்துப் போன பல ஆய்வேடுகள் மலைபோல் குப்பைகளாகக் குவிந்தன. நன்மைகளில் முக்கியமானது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் அங்கீகாரம் பெறாமல் தனித்து, தவிக்க விடப்பட்ட பல புதிய வகை இலக்கியங்கள் ஆய்வுப் பொருள்களாயின. ஹைக்கூ இலக்கிய வகை ஆய்வுகள் இவ்வகையில் ஆய்வுலகின் அங்கீகாரம் பெற்று வெற்றிநடை போடுகின்றன. கவிஞர் கு.தேன்மொழியின் இந்த ஆய்வுநூல் ஓர் இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது.

தமிழ் ஹைக்கூ இலக்கியங்களுக்கு தனித்த இலக்கிய வரலாறு இல்லாத குறையை இந்நூலின் முதல் இயல் தீர்த்து வைக்கின்றது. இவ்வியலில் நூலாசிரியர் ஜப்பானிய வாகா, சோகா, செடோகா, கட்டவ்டா, தான்கா, ரெங்கா, ஹொக்கு முதலான இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்வதோடு அதன் தொடர்ச்சியாகத் தமிழில் எவ்வாறு ஹைக்கூ வடிவங்கள் கையாளப்பட்டன என்பதைச் சுருக்கமாக விளக்கிச் செல்கிறார். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன், லிமரிக்கூ வடிவங்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் குறிப்பிடுகின்றார். மேலும் தமிழ்த் துளிப்பாக்களின் வரலாறு, தமிழ்த் துளிப்பாக்களின் ஆராய்ச்சி வரலாறு இரண்டினையும் பட்டியலிட்டு வரும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் முதல் இயலை முழுமை செய்கின்றார். இந்நூலில் மிகுந்த பயனளிக்கும் பகுதியாக இம்முதல் இயலை அமைத்த நு}லாசிரியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

இரண்டு, மூன்று, நான்காம் இயல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். துளிப்பாக்கள் குறித்து நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

“காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு.”

இந்நூலாசிரியர் கு.தேன்மொழி புதுச்சேரி கவிஞர்கள் துளிப்பாக்களில் சொல்லிய, சொல்ல நினைத்த, சொல்லாமல் விட்ட பல உள்ளடக்கங்களை ஆய்வு என்ற நிலையில் விளக்கிக் காட்ட முற்படுகின்றார். துளிப்பா கவிதை வாசிப்பு அனுபவத்திற்கும் ஆய்வுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை இப்பகுதிகளில் நான் உணர்கிறேன். இது குறித்து அதிகம் எழுதுவது ஆய்வுரையாக விரிந்துசென்று நூலை வாசிக்கத் தடையாய் இருந்துவிடக் கூடும். எனவே வாசகர்களுக்கு இடம் விட்டுவிடுவதுதான் அணிந்துரையாளனின் பணி.

நூலின் மொழிநடையைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். பொதுவாக ஆய்வு நூல்கள் என்றாலே செயற்கையான கடுநடையில் அமைந்திருப்பதைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றோம். விதிவிலக்காக இந்நூல் எளிய இனிய மொழிநடையில் அமைந்திருக்கின்றது. ஆய்வாளர்கள் மட்டுமின்றி கவிதை ஆர்வலர்களும் மாணவர்களும் கூட மயக்கமின்றி இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

இந்நூலின் பின்னிணைப்புகள் குறித்துத் தனியாகக் குறிப்பிடவேண்டும். முதல் இணைப்பு துளிப்பா கவிஞரும், தமிழின் முதல் துளிப்பா இதழ் கரந்தடியின் ஆசிரியருமான புதுவை சீனு. தமிழ்மணி அவர்களின் மிகப்பயனுள்ள நேர்காணல். இரண்டாம் இணைப்பு, ஆய்வுக்குப் பயன்பட்ட துளிப்பா கவிஞர்கள் எண்மரின் தேர்ந்தெடுத்த சுமார் 300 துளிப்பாக்கள். ஆய்வுநூலை வாசிப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாகக் கவிதைகளை விரும்பி வாசிக்கும் ஆர்வலர்களுக்கும் பயன்படும் விதத்தில் தேர்ந்தெடுத்த 300 துளிப்பாக்கள் இடம்பெற்றுள்ளமை இந்நு}லுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

தமிழ் துளிப்பா நூல்கள் பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் துளிப்பா குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும் ஆய்வு நோக்கிலும் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் கு.தேன்மொழி தொடர்ந்து பல நல்ல ஆய்வு நூல்களை எழுதி தமிழாய்வை மேம்படுத்த முயலவேண்டும்

முனைவர் நா. இளங்கோ
புதுவை
17-12-2008

2 கருத்துகள்:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் உங்கள் வலைத்தளம் கண்டேன் மகிழ்ச்சி.

shavin சொன்னது…

வணக்கம். தங்களின் இவ்வலைப்பதிவு என்னுடைய இளங்கலை பட்டப்படிப்பிற்க்கு உதவியாக இருக்கிறது. ஐயா, தங்களுக்கு தொந்தரவு இல்லையெனில் ஹைக்கூவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல். குறிப்பாக தமிழில் ஹைக்கூ பற்றிய வரலாறு.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...