Sunday, September 8, 2013

புதுவைப் பாவலர் கம்பதாசன் ஓர் அறிமுகம்


முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கம்பதாசன்


கம்பதாசனின் தாத்தா பெயர் சீனுவாசன் தந்தை பெயர் சுப்பராயன் இவர்கள் புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம் கொலுபொம்மைகள் செய்யும் கைவினைத் தொழிலில் தேர்ச்சிபெற்ற குடும்பமாகும். கம்பதாசனின் தாயார் பெயர் பாப்பம்மாள். இவர் புதுச்சேரியை அடுத்துள்ள உலகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பராயன் பாப்பம்மாள் தம்பதியரின் ஒரே மகனாக அப்பாவு 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். அப்பாவு என்பதே கம்பதாசனின் இயற்பெயர். அப்பாவுவோடு உடன் பிறந்தவர்கள் ஐவர். ஐவரும் பெண்கள். பேற்றோர்கள் அப்பாவுவைச் செல்லமாக ராஜப்பா என்று அழைத்தனர். கம்பதாசனின் குடும்பம் அவரின் இளம்வயதிலேயே புதுச்சேரியைவிட்டுச் சென்னையிலுள்ள புரசைவாக்கத்திற்குக் குடிபெயர்ந்தது. பின்னாளில் அப்பாவு நாடகங்களில் நடிக்கும் காலங்களில் சி.எஸ்.ராஜப்பா என்றும் பாவலனாகப் புகழ்பெற்ற காலங்களில் கம்பதாசன் என்றும் கலையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

நாடக நடிகராகத் தமது கலைப்பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தம்முடைய இனிமையான குரல்வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனிக்கும் வாசிக்கும் பக்கவாத்தியக் காரராகவும் நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் தமது கலை உலகப் பயணத்தைத் தொடர்ந்தார். திரௌபதி வஸ்திராபரணம் சீனிவாச கல்யாணம் போன்ற படங்களில் நடிகராகத் திரயுலகில் நுழைந்த கம்பதாசன் பின்னர் 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல்கள் எழுதினார். அதனைத் தொடர்ந்து வேணு கானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசௌந்தரி, அக்பர், அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியும், சில திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதியும் மிகுந்த புகழ்பெற்றார். அவற்றில் அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப் படங்களில் இவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன.

கம்பதாசன் பாவேந்தர் பாரதிதாசன் மீது அளவுகடந்த மதிப்பு வைத்திருந்தார். பாவேந்தரும் கம்பதாசனை மதித்துப் போற்றியிருக்கிறார்.

கம்பதாசனின் படைப்புகள்

1. கவிதைத் தொகுப்புகள்:
கனவு
விதியின் விழிப்பு
முதல் முத்தம்
அருணோதயம்
அவளும் நானும்
பாட்டு முடியுமுன்னே
புதுக்குரல்
தொழிலாளி
கல்லாத கலை
புதிய பாதை
குழந்தைச் செல்வம்
மொழி முத்தம்
இந்து இதயம்
கம்பதாசனின் கவிதைத் திரட்டு

2. சிறுகதைத் தொகுதி:
முத்துச் சிமிக்கி

3. நாடகங்கள்:
ஆதிகவி
சிற்பி
அருணகிரிநாதர் (இசை நாடகம்)

4. கம்பதாசன் திரையிசைப் பாடல்கள்

5. கம்பதாசன் காவியங்கள்

கம்பதாசன் ஓர் உண்மையான சோசலிசவாதி. ஊழகை;கும் மக்களின் துயர்தீர்க்கும் புரட்சிப் படைப்புகளாக அவரின் கவிதைகள் விளங்கின.
நலமுறவே உழைப்பவர்க்கே உணவு வேண்டும்

நியாயமிது நியாயமிது நியாயமிஃதே
அலவெனவே மறுப்பவர்கள் கடவு ளேனும்
அடுத்தகணம் அவர்தலை எம்காலில் வீழும்!


என்று புரட்சி முழக்கமிட்டவர் கம்பதாசன். கம்பதாசனின் பின்வரும் கவிதைத் தலைப்புகளே சொல்லும் அவரின் சமதர்மச் சிந்தனைகளை, 1. தொழிலாளி 2. செம்படவன் 3. கொல்லன் 4. ரிக்ஷாக்காரன் 5. மாடு மேய்க்கும் பையன், 6. கூடை முடைபவள், 7. ஒட்டன் 8. பிச்சைக்காரன் 9. பாணன் 10. குலாலன் 11. கையேந்திகள். 12. பஞ்சாலைத் தொழிலாளி

தம்மை ஒரு சோசலிசக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டதோடு அதையே தமது வாழ்வின் இலட்சியமாகவும் கொண்டு வாழ்ந்தவர் கம்பதாசன். வறுமையின் பிடியில் நொந்து துயருற்ற கடைசிக் காலங்களிலும் அவர் கொண்ட கொள்கையில் பிறழ்ந்தாரில்லை. கம்பதாசன் படைப்பாளியாக வலம்வந்த காலக்கட்டம் மிகச்சிக்கலான காலக்கட்டமாகும். இந்தியநாடு விடுதலைபெற்ற முதல் பதினைந்து ஆண்டுகள் 1947-1962. இந்த சிக்கலான அரசியல் மாற்றச் சூழலில் ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கம், மறுபக்கம் திராவிட இயக்கம் இரண்டுக்கும் இடையில் தனிப்பெரும் சக்தியாக ஆளுமை நிறைந்த கவிஞராக கம்பதாசன் தம்மை உருவாக்கிக் கொண்டார். இதுவே அவரின் பலமும் பலவீனமும் ஆகும். 1960 களுக்குப் பிறகு திரையுலகில் அவர் தனித்துவிடப்பட்டதன் அரசியல் பின்னணி இதுவே.

பாவலரின் கடைசிக்காலம் வேதனை மிகுந்தது வறுமை, காதல் தோல்வி, காசநோய் மூன்றும் வாட்டிவதைக்க சமூகத்தின் புறக்கணிப்பால் தனித்துவிடப்பட்ட கம்பதாசன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் ஓர் அனாதையைப்போல் மரணத்தைத் தழுவினார்.
கம்பதாசனின் மரணத்திற்குப் பின்னர் சிலோன் விஜயேந்திரன் என்ற கவிஞர் கம்பதாசனின் கவிதைகள் மீது கொண்ட ஈடுபாட்டால் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து அவரின் வாழ்க்கையையும் படைப்புகளையும் ஒருசேரத் தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டார். கம்பதாசனைப் போற்றும் அதே தருணத்தில் மறைந்த கவிஞர் சிலேன் விஜயேந்திரனையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும். கவிஞர் தமிழ்ஒளிக்கு ஒரு சஞ்சீவி போல். பாவலர் கம்பதாசனுக்கு ஒரு விஜயேந்திரன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான தகவல்கள்... நன்றி ஐயா...

Nayagar said...

அன்புள்ள நண்பருக்கு
வணக்கம்
புதுவைக்கு புகழ் சேர்த்த பாவலருக்கு
நல்லதொரு அஞ்சலி. நன்றி. பாராட்டுக்கள்.

இத்தகய புதுவைப்புகழ்மணிகளைப் பற்றி
ஒரு நூல் உங்கள் முயற்ச்சியில் வரும் என எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
வெங்கட சுப்புராய நாயகர்
பிரஞ்சுப் பேராசிரியர்
புதுச்சேரி