வெள்ளி, 14 ஜூன், 2013

முனைவர் நா.இளங்கோவின் "ஊடகங்களின் ஊடாக" நூல் அணிந்துரை -முனைவர் க.பஞ்சாங்கம்

முனைவர் க.பஞ்சாங்கம்
தமிழ்ப் பேராசிரியர் - திறனாய்வாளர்.


    நமது ஊடகங்கள் யார் கையில் இருக்கின்றன? யாருக்காக இருக்கின்றன? எத்தகைய செயல்திட்டங்களைக் கொண்டிருக்கின்றன? ஊடகங்களின் அதிகார அரசியலை, வணிகத்தை மையமிட்டுச் சுழலும் அதன் நச்சு வளையத்தைப் படித்தவர்கள் என்று அழைக்கப்படுவர்களே புரிந்து கொண்டிருக்கிறார்களா? இல்லை என்பதுதான் வேதனையோடு கூடிய பதில். இந்த உண்மையைத்தான் என்றும் எனது வியப்பிற்குரிய என் மாணவர், பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ, தகவல் தொடர்புச் சாதனங்களும் கதையாடலும் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். எந்தவொரு சிக்கலான, நுண்ணிய கருத்தாக்கத்தையும் கூட மிக எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படியாக எடுத்துரைப்பதிலும் சொற்பொழிவு ஆற்றுவதிலும் நிகரற்ற வல்லமைமிக்கவர் இளங்கோ. இந்தக் கட்டுரையில் ஊடகங்கள் கட்டமைக்கின்ற புனைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நாம் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் ஒருபோதும் சரியான முறையில் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை அழகாக விளக்கிவிடுகிறார்.

ஊடகங்கள் தகவல்களை யதார்த்தத்தில் இருந்து உருவாக்குகின்றன தயாரிக்கின்றன் வெட்டி ஒட்டுகின்றன கோர்க்கின்றன அர்த்தங்களை உருவாக்குகின்றன. (ப.8)

என்று அவர் சுனாமி நிகழ்வை முன்வைத்துச் சான்றுகளோடு விளக்கும் போது நமது ஒவ்வொரு கணமும் எவ்வாறு சுயநலமிக்க மூலதன முதலாளிகளின் அதிகார வளையங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பதை வலியோடு உணரத் தொடங்குகிறோம். ஊடகங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் மொழியும், கதையாடலும், கேமிரா கோணங்களும், கூடவே ஊடகங்கள் கையாளும் மௌனங்களும் நமது அடையாளங்களை அழித்து நம்மை இல்லாமல் ஆக்கும் அநியாயத்தை மிகத் தெளிவான தமிழில் சொல்லிக் கொண்டு போகிறார். ஊடகங்கள் கட்டியமைக்கும் புனைவுகளில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவன இத்தகைய கட்டுரைகள்தான்.

    திரைப்படம் பற்றிய இரண்டாவது கட்டுரையில் திரைப்படம் என்கின்ற எல்லாக் கலைகளின் சங்கமமாக விளங்கும் இந்த ஊடகம்  காற்று, நீர், வெளி போன்று தமிழர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆனால் அதன் தொழில்நுட்பம் குறித்துப் பெருவாரித் தமிழர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது எவ்வளவு பெரிய முரண் என்பதையும் எடுத்துக்காட்டித் திரைப்படத்தைச் சரியாகப் பார்த்துப் பழகுவதற்கு வழிகாட்டுகிறார். மேலும் தமிழ்த் திரைப்படத்தில் நிகழ்வு இடமும், கால நகர்வுக் குறியீடுகளும் எவ்வாறெல்லாம் அமைக்கப்படுகின்றன என்பதை மிக நுட்பமாகச் சாதாரண வாசகர்களும் உள்வாங்கும் முறையில் சொல்லுகின்ற பாணி இளங்கோவிற்கே உரியது.

    டி.பி.இராஜலட்சுமி குறித்த கட்டுரை திரைப்படம் என்னும் கனவுத் தொழிற்சாலையில் உழைக்கும் பெண் கலைஞர்களை நாம் எவ்வாறு அணுகி ஆராய வேண்டும் என்பதற்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளது. வெறுமனே ஒரு காமப் பண்டமாகப் பெண் கலைஞர்களைப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன தமிழ்த் திரைப்படப் பார்வையாளர்களுக்குள் இக்கட்டுரை வெளிச்சம் போலப் பாய்ந்து பரவக்கூடியது. அந்தளவிற்கு டி.பி.இராஜலட்சுமி என்கின்ற மிகப்பெரிய கலைஞரின் அனைத்து வகையான ஆளுமைகளும் படிக்கின்ற வாசகர்களுக்குச் சென்று சேரும்படி தகவல்களை மிக முறையாக அமைத்துத் தயாரிக்கப்பட்ட கட்டுரை அது. டி.பி.ராஜலட்சுமி எழுதிய ‘கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்’ என்ற நாவலில் ஓர் உரையாடலை இளங்கோ எடுத்துக்காட்டும் போது பெண் விடுதலை குறித்து இவ்வளவு உரக்க ஓர் ஆணால் பேசமுடியுமா என்ற ஐயம் எழத்தான் செய்கிறது:-

நீங்கள் கொஞ்சம் நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். கல்யாணம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? இருபாலாருக்குந்தானே. அப்படியிருக்க ஆண்கள் மட்டும் பல பெண்களை மணக்க அனுமதிக்கும் நாம், பெண்கள் தங்கள் விருப்பப்படி ஒருவரை விவாகம் செய்து கொள்வதை ஏன் அனுமதிக்கக்கூடாது? குருட்டுத்தனமான இந்தக் கொடுமைகள் பெண்கள் சமூகத்திற்கே உலை வைப்பதாயிருக்கின்றன. பெண்கள் ஆண்களைவிட எவ்வகையி லேனும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியுமா? நாம் நம்முடைய சௌகர்யத்திற்காகப் பெண்களை அடக்கியாண்டு  கொடுமைப் படுத்துகிறோம். இது பெரும் பாவமான காரியமாகும். இன்னும் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பெண்களுக்கு மட்டும் விதவைத் தன்மை கற்பிக்கப்பட்டிருக்கும் கொடுமை இப்பாழும் நாட்டைத் தவிர, வேறு நாகரீகம் பெற்ற எந்த நாட்டிலேனும் உண்டா? பெண்களைப் போலவே ஆண்களும் மனைவி மார்களைப் பிரிந்தவுடன் மொட்டையடித்து மூலையில் உட்காரவைத்துவிட்டால் அப்போது ஆணுலகம் அறிவு பெறும். (ப.50)
இதைப் படிக்கும் போது பெண் எழுத்தைப் பெண்கள்தாம் எழுத வேண்டும் என்கின்ற இன்றைய நவீனப் பெண்ணியல் குரல் சரிதான் எனச் சொல்லத் தோன்றுகிறது. இளங்கோ மிகச்சிறப்பாக இந்தக் கட்டுரையைப் படைத்தளித்துள்ளார்.

    விளம்பரம் குறித்த நான்காவது கட்டுரையில் ஊடகம், நிறுவனம், விளம்பரம், நுகர்வோர் ஆகிய நால்வருக்குமான உறவு எவ்வாறு ஒரு முடிச்சு போலப் பின்னப்பட்டுள்ளது என்பதை அழகாக விளக்குகிறார். விளம்பரங்கள் நம்மை உண்மைகளிலிருந்து வெகுதூரம் வெளியே இட்டுச் சென்று விடுகின்றன. வெறுமனே நுகர்வுக் கலாச்சாரம் என்கின்ற ஒன்றையொட்டியே ஓடிஓடி வாழும்படி மனித வாழ்வைக் கேவலப்படுத்துகின்றன என்றெல்லாம் அதனுடைய தீமைகளைப் பலவாறு சான்றுகளோடு எடுத்துக்காட்டும் இளங்கோ, இந்தத் தீமையில்லாமல் இவ்வளவு மலிவாக நமக்கு நமது வாசலிலேயே எல்லாமும் ஊடகம் வழியாகக் கிடைக்க முடியாது என்கின்ற உண்மையையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படித்தான் மனித வாழ்க்கை ஒவ்வொன்றும் நன்மை தீமைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. ஊடகங்கள் விளம்பரத்தின் மூலமாகப் பொருட்களை மட்டும் விற்கவில்லை நம்மையும் நமக்குத் தெரியாமலேயே  விற்றுவிடுகின்றன என்கின்ற நுட்பமான புரிதலை இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு வழங்குகின்றது.

இறுதியில் இடம்பெறும் இரண்டு கட்டுரைகளும் கணினி யுகத்தில் இன்றைக்கு நடந்துள்ள மிகப்பெரிய புரட்சியான வலைப் பதிவுகள் (Blogs) குறித்துப் பேசுகின்றன. என்னைப் போன்று கணினியோடு பெரிதும் பரிச்சயமாகாத வாசகர்களுக்கு அவை தகவல் களஞ்சியங்களாகும். அதோடு வலைப்பதிவை நாமே எவ்வாறு நமது கணினியில் அமைத்துக் கொள்வது என்கின்ற வழிகாட்டியுமாகும். இவ்வாறு வலைப்பதிவுகள் குறித்து விரிவான தகவல்களைத் தருகிற நூலாசிரியர் அது சமூகத்தின்மேல் நிகழ்த்தும் விளைவினையும் சுட்டுவது அவருடைய தனித்தன்மைக்குச் சான்றாகும். வலைப்பதிவுகளால் பதிப்புத் துறையில் நிலவும் அதிகார மையங்கள் தகர்க்கப்படுகின்றன என்பதை இவ்வாறு புலப்படுத்துகின்றார்:-

ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற அதிகார மையங்களற்ற வலைப்பதிவுகள் ஊடக வரலாற்றில் ஒரு புரட்சி. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் ஒருவரின் எழுத்து பொது வாசிப்புக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. எல்லாத் தரப்பு வாசகர்களுக்கு முன்னாலும் எழுதப்படும் எல்லாப் படைப்புகளும் ஒரே வரிசையில் காட்சிப்படுத்தும் அதிகாரமைய உடைப்பு வலைப் பதிவுகளால் சாத்தியமாகியிருக்கிறது. (ப.82)

இவ்வாறு இச்சிறிய நூலில் மிகப்பெரிய பணியை இளங்கோ நிகழ்த்திக் காட்டியுள்ளார். உண்மையில் கீரை விற்பனையைக்கூட நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஆற்றல்மிக்க வடிவமாக இன்றைக்கு ஊடகங்கள் தமிழர் வாழ்வில் நிலைபெற்று வி;ட்டன. பணம் இருப்பவர்கள் எல்லாம் ஓர் ஊடகத்தைத் தொடங்கி விடுகிறார்கள். பணம் கூடக்கூட ஒரு நிறுவனமே பல்வேறு வகையான ஊடகங்களையும் தொடங்கி மிகப்பெரிய அதிகார மையமாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதிகாரத்திற்கும் ஊடகத்திற்கும் அப்படியொரு நெருக்கம். எனவே இன்றைக்குத் தமிழ் அறிவுத்தளத்தில் பெரிதும் தேவையானது இளங்கோவின் இந்தப் புத்தகம் போன்று ஊடகங்களின் அரசியல் குறித்த உரையாடல்கள்தாம். தமிழில் இத்தகைய புத்தகங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. காலச்சுவடு கண்ணனுடைய பிறக்கும் ஒரு புது அழகு (2007) என்ற புத்தகம் ஊடக அரசியலை மிக நுட்பமாகக் கண்காணித்து எழுதப்பட்டதாகும். அத்தகைய வரிசையில் இளங்கோவின் இந்தப் புத்தகமும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும். தொடர்ந்து இளங்கோ இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும். அவருக்குள் இருக்கும் நகைச்சுவையும், எதையும் நுட்பமாகக் கண்டறிந்து சுட்டிக்காட்டும் விமர்சனப் பார்வையும் இத்தகைய பணிக்குப் பயன்பட வேண்டும். 1979-இல் ஒரு மாணவராக அறிமுகமான காலந்தொட்டு அவரைக் கவனித்து வருகிறேன் என்கிற முறையில் தொடர்ந்து முனை மழுங்காமல் உழைத்துக் கொண்டு வரக்கூடிய அவரால் இதுபோன்று பல புத்தகங்களைத் தமிழர்களின் நலன் கருதி வழங்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். என் நம்பிக்கை பலிக்கட்டும்.

பெருகும்அன்புடன்                                   26.04.2010   
(க. பஞ்சாங்கம்)                               

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...