திங்கள், 18 ஏப்ரல், 2011

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2

சிவவாக்கியரின் எதிர்க்குரல்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிவவாக்கியரின் எதிர்க்குரல்:
சிவவாக்கியர் எதிர்க்குரலின் மையப் புள்ளியாக இருப்பது வைதீக எதிர்ப்பே. இந்தியத் தத்துவ மரபில் வைதீக எதிர்ப்பு என்பது வைதீகத்தோடே உடன்பிறந்தது. வைதீகம், வைதீக எதிர்ப்பு என்ற இருமைகளைக் கொண்டே இந்தியத் தத்துவம் இயங்குகின்றது என்றால் மிகையில்லை. சிவவாக்கியர் வேதங்கள், மந்திரங்கள், யாகசாலை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி, இவையாவும் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளுகிறார்.

சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
(சி.வா. 311)

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
(சி.வா. 312)

இப்படிப் பல பாடல்களில் வேதத்தையும் வேதமோதும் பிராமணர்களையும் சாடுகின்ற சிவவாக்கியர் வேள்விக் குண்டத்தையும் அதற்கு ஆதாரமான ரிக்வேதத்தையும் மண்கலத்தில் நூலைச்சுற்றி பூரணகும்பம் என்று ஆராதிக்கும் கலத்தையும் கேலிசெய்து இத்தகு வேத வேள்விமுறைகள் பயனற்றவை என்கிறார். சேமமாக ஓதினும் என்பதிலுள்ள N~மம் என்பது பார்ப்பனர்களின் பேச்சு மொழிச்சொல். சிவவாக்கியர் பகடிக்காக இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

வேதங்கள் மட்டுமல்ல இறைவழிபாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பூசை மற்றும் மந்திர உச்சாடனங்களும் சிவவாக்கியரின் கண்டனத்துக்குள்ளாகின்றன.

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ! நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
(சி.வா. 494)

இப்பாடலில் வடமொழி அர்ச்சனையை முணுமுணு வென்று சொல்லும் மந்திரம் என்று அவர் இகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியரைப் பொறுத்தமட்டில் இறைவழிபாடு, பூசனை மற்றும் பக்தி மார்க்கங்கள் மட்டுமல்ல மூர்த்தங்கள் என மதிக்கப்படும் இறை உருவங்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இறை உருக்களை நட்டகல் என்றும் உற்சவ மூர்த்திகளைச் செம்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆலய வழிபாட்டுக்கு முதன்மை தரும் சைவ, வைணவ மதங்களைச் சாடும் போக்கில் கோயில்கள், குளங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெற்று ஆரவாரங்களே, இறையனுபவம் இவைகளில் இல்லை என வன்மையாகச் சாடுகின்றார்.

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
(சி.வா. 242)


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
(சி.வா. 34)

ஊரே கூடி நடத்தும் தேர்த் திருவிழாவை மனிதர் பண்ணும் புரளி என்று ஒதுக்கித் தள்ளும் சிவவாக்கியரின் துணிச்சல் உண்மையிலேயே வியப்புக்குரியது.

வைதீகத்தை எதிர்ப்பதென்பது உண்மையில் பார்ப்பனீயத்தை, ஆரியத்தை எதிர்ப்பதே ஆகும். பார்ப்பனீயக் கருத்தாக்கங்களை எதிர்க்கும் சிவவாக்கியர் அத்தோடு நிறுத்தாமல் நேரடியாகப் பார்ப்பனர்களையே விசாரணைக்கு உட்படுத்துகின்றார். பார்ப்பனர்களின் தோற்றம், பூணூல், அனுஷ்டானங்கள் எனப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்துமே சிவவாக்கியரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
(சி.வா. 192)

இப்பாடலில் பார்ப்பனர்களின் பூணூல், குடுமியைச் சிவவாக்கியர் கேலி செய்வதென்பது அவர் வாழ்ந்த (இன்றைக்கும் தொடரும்) சனாதனச் சமூகத்தில் எத்தகைய சிக்கலான செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நிலம் பிளந்து வான்இடிந்து நின்றது என்ன? என்ற அவரின் வினாவில் வெளிப்படும், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நிற்கும் பார்ப்பனர் என்ற வருணனை, சிவவாக்கியரின் நயமான நையாண்டிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
(சி.வா. 157)

அசைவ உணவு உண்ணும் பிற வருணத்தாரை விட, சைவ உணவு உண்ணும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரியும் பார்ப்பனர்களின் உணவு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் சிவவாக்கியர். மீன்கள் வாழும் நீரைக் குடிப்பதும் குளிப்பதும் மான்தோல் அணிவதும் எந்தவகையில் சைவத்தில் சேரும் என்பது அவரின் வினா. இந்த சைவ உணவுப் பிரச்சனையில் பார்ப்பனர்களை மட்டுமல்ல சைவ வேளாளர்களையும் கிண்டல் செய்கிறார் சிவவாக்கியர். உடம்பை வளர்க்க நீங்கள் குடிக்கும் பால் உதிரம் அல்லவா? அது எப்படிச் சைவமாயிற்று, சைவ மூடர்களே! என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?
(சி.வா. 148)

சிவவாக்கியர் காலத்து ஆதிக்கச் சாதியரான பார்ப்பனர் மற்றும் சைவ வேளாளர்களை கேலியும் கிண்டலும் செய்யும் துணிச்சலுக்குப் பக்க பலமாய் அவர் அமைத்துக் கொண்ட தர்க்கம், வருணாசிரம தர்மம் என்ற ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையையே தகர்க்கும் சாதி எதிர்ப்பே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கே இருக்கிறது? மனிதர்களின் எலும்பு, தோல், சதைகளில் எங்கேனும் தாழ்ந்த சாதி உயர்ந்தசாதி என்ற அடையாளம் இருக்கின்றதா? பறைச்சியோடு நுகரும் உடலின்பம் பார்ப்பனத்தியோடு நுகரும் உடலின்பம் இரண்டும் வேறு வேறா? என்று உரத்துக் குரலெழுப்பும் சிவவாக்கியரின் குரல் காலத்தைக் கடந்து எல்லா நூற்றாண்டுகளுக்கும் எதிரொலிக்கும் ஆவேசக் குரலாகும்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
(சி.வா. 39)

தமிழ்ச் சமூகத்தைத் தொழுநோய் போல் பீடித்திருக்கும் சாதி அமைப்பைத் தகர்த்தெறியக் கூடிய எதிர்க்குரலை அழுத்தமாகத் தம் சிவவாக்கியத்தில் பதிவு செய்யும் சிவவாக்கியரின் குரல், பின்னர் அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் முதலான சித்தர்களின் குரல்களாகத் தொடர்ந்து ஒலிக்கின்றது. வருணாசிரம எதிர்ப்பில் சித்தர்களிடம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சமுதாய விழிப்புணர்வைக் காணும் கலாநிதி க.கைலாசபதி சித்தர்களைக் கிளர்ச்சியாளர் என்றழைக்கின்றார். (ஒப்பியல் இலக்கியம், ப.189)

அவர் தம் எதிர்க்குரலை சாதீய எதிர்ப்போடு நிறுத்தாமல் அதன் ஆணிவேராயிருக்கின்ற சமய நிறுவனங்கள், பார்ப்பனீயம், வைதீகம் இவற்றை வேரறுக்கும் வகையில் கோயில் வழிபாட்டை அடியோடு வெறுத்தார், புனிதங்களை விசாரணைக்கு உட்படுத்தினார், எச்சில், தீட்டு இவைகள் குறித்த சமூக மதிப்பீடுகளை நோக்கி எதிர்க்கேள்வி கேட்டார்.

ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
(சி.வா. 41)

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.
(சி.வா. 205)

மேலே காட்டப்பட்ட இரண்டு பாடல்களும் எச்சில், தீட்டு எனப்படும் தூமை குறித்து எழுப்பும் எதிர்கேள்விகளின் நியாயத்தைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இப்படிச் சிவவாக்கியரின் பல பாடல்கள் நாசூக்கற்ற வெளிப்படையான வார்த்தைகளால் ஒழுக்கவாதிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

1 கருத்து:

வழிப்போக்கன் சொன்னது…

ஐயா வணக்கங்கள்...!!!
அருமையான பதிவிது. படித்து அறிய விடயங்களை அறிந்துக் கொண்டேன். ஐயா என்னிடம் ஒரு ஐயம் உள்ளது. திருமூலரின் ஒரு பாடலினைப் பற்றிய ஐயமே அது.

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.திருமந்திரம் - ௨௩௧

என்ற இந்தப் பாடலின் அர்த்தம் என்ன ஐயா?... அப்பாடலில் கூறியுள்ள குணங்கள் உடையவர்கள் தாம் பிராமணர்கள் என்று திருமூலர் கூறுகின்றாரா அல்லது அந்த குணங்கள் உடையவர்கள் பிராமணர்கள் ஆக மாட்டார்கள் என்று அவர் கூறுகின்றாரா.

இந்த ஐயம் நீங்க உங்கள் உதவி தேவை ஐயா. நன்றி

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...