புதன், 2 டிசம்பர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை -பகுதி-௨ -குறுந்தொகையின் காலம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

குறுந்தொகையின் காலம்:

சங்கத் தொகை நூல்களில் பாடல்களில் பயின்றுவரும் சிறப்புத் தொடர்களால் பெயர் பெற்ற புலவர்கள் இருபத்தேழு பேர். இவருள் பத்தொன்பது புலவர் பெயர்களுக்குரிய சிறப்புத் தொடர்களைக் கொண்ட பாடல்கள் குறுந்தொகையுள் உள்ளன. பிற நூல்களிலும் குறுந்தொகைத் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வருகின்றனர். எனவே, புலவர்களின் பெயரிடுதலுக்குக் காரணமான பாடல்களைக் கொண்ட குறுந்தொகை ஏனைய தொகைநூல்களினும் முற்பட்டது எனக் கருத இடமுண்டு.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் கருத்தும் இதற்கு அரணாயுள்ளது. அவர்தம் ஆய்வுரை வருமாறு,
"ஓரேருழவன், கயமனார், காக்கைப் பாடினியார் நச்சள்ளையார், தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131, 9, 210, 392) வந்துள்ளன. இந்நூலில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம் பற்றி அமைந்துள்ளன என்பது விளங்குகிறது. எனவே இந்நூலிலேயே இப்புலவர்களின் பாடல்கள் முதலில் தொகுக்கப்பட்டன என்று கொள்ளுதல் வேண்டும்". (வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 75-76)

மாங்குடி மருதனாரைப் புறப்பாட்டு ஒன்று ஏனைய புலவர்களுக்குத் தலைவராகக் கொண்டு போற்றுகிறது.
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை (புறம்., 72)

என்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சூள் உரைக்கின்றான். இவன் தலைமைப் புலவராகக் குறிப்பிடும் மாங்குடி கிழாரின் பாடல் குறுந்தொகையுள் இடம் பெற்றிருத்தலால் இந்நூல் முதன்மை பெற்ற நூல் எனக் கருத இடமுள்ளது. சங்கப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியர்களாகத் திகழும் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் முதலியோர் பாடல்கள் இக் குறுந்தொகையுள் அமைந்திருத்தலும் இந்நூலின் காலப்பழமைக்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.

குறுந்தொகையின் காலம் பற்றிய பல்வேறு ஆய்வுக் கருத்துக்களைத் தம் இலக்கிய தீபம் என்ற நூலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்தம் ஆய்வுக் கருத்துக்களில் சில பின்வருமாறு,

குறுந்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் வேறு வேறு காலத்தினர். புறநானூற்று முதற்பதிப்பு முகவுரையில் காணும், "இந்நூற் செய்யுட்களால் பாடப்பட்டவர்கள் ஒருகாலத்தாரல்லர், ஒரு சாதியாரல்லர், ஓரிடத்தாருமல்லர், பாடியவர்களும் இத்தன்மையரே", என்னும் குறிப்பு தொகை நூற் பாடல்கள் பற்றிய சரியான கணிப்புரையாகும்.

தொல்காப்பிய உரைகாரராகிய பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை வரைந்துள்ளமையால் அவர் காலமாகிய 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இது தொகுக்கப்பெற்றது என்பது தெளிவு. இளம்பூரணரும் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாளுதலின் அவர் காலமாகிய 12 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது இத்தொகை என்பது துணிவு.

வீரசோழியவுரையில், 'அளவடியால் தொக்கது குறுந்தொகை' (அலங். 36, உரை) என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் எழுதப்பட்ட கி.பி. 1062-இல் பட்டமெய்திய வீர ராசேந்திரன் காலத்திற்கு முன்னரே இக் குறுந்தொகை கோக்கப் பெற்றமை விளங்கும்.

"உருத்திரசன்மன் அகநானூறு தொகுத்தவன் என்பது தெரிகிறது. சங்கப் புலவர்களின் இறுதிக்காலம் கி..பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதி எனத் துணியலாம். இவர்களது செய்யுட்களைத் தொகுக்கும் கருத்து எழுவதற்கும் செயலாக முற்றுதற்கும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். எனவே, அகநானூறு தொகுக்கப்பட்ட காலம் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது ஒரு வகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோ ஆதலானும் இப் பூரிக்கோ என்பான் உப்பூரிகுடி கிழானாக இருத்தல் கூடுமாதலானும் இத்தொகை நூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றது எனக் கொள்ளுதல் தக்கதாகின்றது" (வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 102-103)

குறுந்தொகையிலுள்ள செய்யுள் ஒவ்வொன்றும் தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியமே. சில செய்யுட்களை இயற்றிய ஆசிரியர் பெயர்களே மறைந்துவிட்டன. 19 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களிலும் காலவரையறை செய்வதற்குப் பயன்படும் ஆதாரங்கள் சிலவேயாம்.

வெண்கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே (குறுந். 75)

என்னும் குறுந்தொகைப் பாடலில் வரலாற்றுச் செய்தி இடம்பெற்றுள்ளது. 'சோணைநதிக் கரையிலே பொன் மிகுதியால் சிறப்புற்று விளங்கும் பாடலி என்னும் வளநகரத்தை நீ பெறுவாயாக' என்று தலைமகனது வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைவி கூறுகிறாள். எனவே இச்செய்யுள் இயற்றப் பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ்சிறந்த பெருநகரமாக விளங்கியது என்பது புலனாகும்.

பாடலிபுத்திர நகரின் வரலாறு கி.மு. 5-இல் இருந்தே தொடங்குகிறது. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பாடலிபுத்திரம் சிறப்புற்று விளங்கியிருத்தல் கூடும். எனவே குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப் பெற்ற காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்னும் முடிவுக்கு வருகிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. எனவே குறுந்தொகைப் பாடல்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பாடப்பெற்றிருத்தல் வேண்டும்.

4 கருத்துகள்:

Nayagar சொன்னது…

Dear friend
vanakkam
Your article is informative and helps the readers to understand and appreciate the literary value of this anciennt tamil treasure of sangam literature.
my best wishes for the success of your efforts.
anbudan
Vengada soupraya nayagar
French Professor
Pudhucherry

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கருக்கு, வணக்கம்.
தங்கள் மதிப்புரைக்கு நன்றி!
அன்பின்
முனைவர் நா.இளங்கோ

இரா.வெங்கடேசன் சொன்னது…

குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரை ஒன்று இருந்ததான குறிப்பு மட்டும் உள்ளனவேயன்றி அது கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு இருக்க குறுந்தொகைக்குப் பேராசிரியர் எழுதிய உரை என்று எந்த ஆதாரத்தை வைத்து நீங்கள் கூறுகிறீர்கள்.

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

அன்புத் தோழர் வெங்கட்,
பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை செய்தார் என்பதற்கு நச்சினார்கினியரின் தொல்காப்பிய உரையிலேயே அகச்சான்று உள்ளது. தொல்காப்பிய அகத்திணையியல்,
"உள்ளுறை உவமம் ஏனை உவமம்எனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே"
என்னும் 46ஆம் நூற்பா உரையில், 'யானே ஈண்டை யேனே' (குறுந். 54) என்பதனை எடுத்துக் காட்டி, "பேராசிரியரும் இப்பாட்டில் மீனெறி தூண்டில் என்பதனை ஏனை உவமம் என்றார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரை கண்டிருந்தார் என்பது தெளிவாகும்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...