சிறுகதை ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அகிலின் கூடுகள் சிதைந்தபோது -நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளர். ஈழத்தின் யாழ் மாவட்டத்தில் சரவணை என்னும் ஊரில் பிறந்தவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவருபவர். திசைமாறிய தென்றல், கண்ணின்மணி நீயெனக்கு என்ற இரண்டு நாவல்களின் வழியாகத் தமிழுலகிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். தமிழ் ஆத்தர்ஸ்.காம் என்ற அவரது இணையதளத்தின் மூலம் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பெரும்பணியைச் செய்துவருபவர். புலம்பெயர் இலக்கியப் படைப்பாளிகளில் அறியப்படவேண்டிய ஆளுமைக்குச் சொந்தக்காரர்.

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் அகிலின் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நூலினை முழுமையாகப் பலமுறை வாசித்தேன். கல்விப் புலத்தில் எங்கள் பட்ட மேற்படிப்பு மைய முதுகலைத் தமிழ் வகுப்பிற்கு ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் என்ற பாடத்திட்டத்தை வகுத்ததோடு அப்பாடத்தை மாணாக்கர்களுக்குப் பயிற்றுவிக்கவும் கிடைத்த வாய்ப்பினால் தொடர்ந்து பல ஈழத்தமிழர் புலம்பெயர் இலக்கியங்களை வாசித்து வருபவன் நான். அந்த வாசிப்பு அனுபவத்தினை முன்னிறுத்தி, அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுதி குறித்து சில சொல்லிட முனைகிறேன்.
இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மௌனியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர் களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகள் எல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதிப் பரவசப் படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த சோகம், அதிர்ச்சி, சிலிர்ப்பு, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். தோழர் அகிலின் சிறுகதைகளும் அதைத்தான் செய்கின்றன.

இச்சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளுமே சிற்றிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானவை. இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற சில கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்ந்த வாசகர்களின் வாசிப்பினைத் தொடர்ந்தே இக்கதைகள் நூல் உருப்பெற்றுள்ளன. 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுக் கால இடைவெளியில் உருவானவைகளே இக்கதைகள். அந்த வகையில் ஈழத்தமிழர்களின் அண்மைய வாழ்க்கைப் பதிவாக இக்கதைகள் உருவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள அண்ணாநகரில் கடவுள் என்ற ஒருகதை தவிர மற்ற பதின்மூன்று கதைகளுமே ஈழம் மற்றும் புலம்பெயர் கனடாவினைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதைக் களத்தைப் போலவே கதைக்கருவும் ஈழம், கனடா வாழ் தமிழர்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன.

பொதுவாகப் புலம்பெயர் இலக்கியங்களைப் புலம்பல் இலக்கியம் என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில் புலம்பெயர்ந்த படைப்பாளி, புகலிடச் சூழலில் வெளிப்படுத்தும் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளே இத்தகு படைப்புகளில் மிகுதியும் நிறைந்திருக்கும். அகிலின் சிறுகதையைப் பொறுத்தமட்டில் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளையும் மீறி வெளிப்படுவது மானுடநேயம். அதாவது நாடு, மொழி, இன பேதங்களைக் கடந்த மானுடநேயம். சக மனிதர்களை நேசிப்பது என்பதோடு அகிலின் கதைகள் நின்று விடுவதில்லை, அதனையும் கடந்து பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களையும் நேசிக்கும் விரிந்த தளத்திலானது. வலி, கிறுக்கன், கூடுகள் சிதைந்தபோது முதலான கதைகள் இதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்துபோன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்துக் கண்ணீர்விடும் கிறுக்கனும், கனடா சாலையொன்றில் இணைக்குருவிகளில் ஒன்று விபத்துக்குள்ளாகி இறப்பதையும் இறந்த குருவியின் பிரிவுத்துயர் தாங்காமல் தவிக்கும் துணைக்குருவியின் சோகத்தையும் கண்டு மனம் பரிதவிக்கும் கூடுகள் சிதைந்த போது கதையின் நாயகனும் இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றி, மாடுகளின் அவலத்துக்கு மனம் வெதும்பும் மயூரனும் அகிலின் பிரதிநிதிகளாக நம்முன் மானுடநேயத்தைப் பதித்துச் செல்கிறார்கள்.

ஈழத்தின் போர்ச்சூழலின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, பெரிய கல்வீடு, கண்ணீர் அஞ்சலி, கூடுகள் சிதைந்தபோது ஆகிய நான்கு கதைகளும் தமிழக வாசகர்களுக்குப் புதிய காட்சிப் படிமங்களை முன்நிறுத்துகின்றன. வன்னிப்போர்ச் சூழலும் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயரும் அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதலும், யாழ்நகரத் தாக்குதலும் அகிலின் விவரிப்பில் வாசகர்களின் மனதில் ஆழ்ந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்துவது நிஜம். பத்திரிக்கைகளில் செய்தியாக மட்டுமே வாசித்துக் கடந்த நமக்கு இச்சிறுகதைகள் பேரினவாதத்தின் திட்டமிட்ட அழிப்பையும் தமிழர்களின் உயிர், உடைமை இழப்பையும் ஆறாத வடுக்களாக நெஞ்சில் நிலை நிறுத்துகின்றன.

இத்தொகுப்பின் செம்பாதிக் கதைகள் புலம்பெயர்ச் சூழலில் நம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பணம், குடும்பம், உறவு, சாதி, பண்பாடு தொடர்பான சிக்கல்களை முன்நிறுத்துகின்றன. புகலிடம் தேடி மேற்கத்திய நாடுகளில், சென்ற தலைமுறையில் குறிப்பாக 80களில் புலம் பெயர்ந்து சென்றவர்களின் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்து பெரியவர்களாகிற போது, மூத்த தலைமுறை தம் தாய் மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளைக் காக்கவும் முடியாமல் மீறவும் மனமில்லாமல் படும்பாடு புகலிடத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு சிக்கலான பகுதியாகும். அகில் இத்தகு பண்பாட்டு நெருக்கடிகளைத் தம் சிறுகதைகளில் குறிப்பாக இது இவர்களின் காலம் என்ற சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
சாதீய சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றத் துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதிக்க மனோபாவத்தை விமர்சிக்கும் வெளியில் எல்லாம் பேசலாம், பெரிய கல்வீடு என்ற இரண்டு சிறுகதைகளும் முக்கியமானவை. பெரிய கல்வீடு கதை, உக்கிரமான போர்ச்சூழலிலும் தீண்டாமையைக் கட்டிக் காப்பாற்றத் துடிக்கும் பெரிய சாதியாரையும் வெளியில் எல்லாம் பேசலாம் கதை, மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சூழலிலும் தம் சாதி மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத பிற்போக்காளர்களையும் இனம்காட்டுகின்றது.

குடும்பம் என்ற சமூக அமைப்பு சிதைவடையும் மாற்றக் காலத்தின் அடையாளங்களை முன்நிறுத்துவன அம்மா எங்கே போகிறாய், உறுத்தல் என்கிற இரண்டு கதைகளும். புலம்பெயர் நாடுகளில் தங்கள் வயதான பெற்றோர்களின் உடலுழைப்பு, வருவாய் இரண்டும் பயன்படும் காலம் வரையிலும் அவர்களைத் தம்மோடு வைத்திருந்துவிட்டுப் பின்னர் அவர்களை உதாசீனப்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினரின் உளப்பாங்கை வெளிப்படுத்துவன இக்கதைகள். ஆனால் இந்த இரண்டு கதைகளிலும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் இளம் தலைமுறையினரின் குற்ற உணர்ச்சியைக் கோடிட்டுக் காட்டியிருப்பதன் மூலம் அகில் இப்பிரச்சனை குறித்தான தம் விமர்சனத்தை நுட்பமாகப் பதிவுசெய்திருப்பது இந்தக் கதைகளின் பலம் எனலாம்.
இத்தொகுதியின் பதினான்கு கதைகளில் அண்ணாநகரில் கடவுள், ஓர் இதயத்திலே என்கிற இரண்டு கதைகளைத் தவிர மற்ற பன்னிரண்டு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையன. அதிலும் வலி, கூடுகள் சிதைந்தபோது என்ற இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் இனம் காண்கிறேன். அகிலின் படைப்பாக்கச் செய்நேர்த்தியில் உச்சத்தைத் தொட்ட கதைகளாக இவற்றைக் குறிப்பிடமுடியும்.

வலி என்ற சிறுகதை மூன்று அடுக்களில் கதையை நகர்த்துகின்றது.
1.கணவன் மனைவி இடையிலான சைவ, அசைவ உணவுப் பழக்க முரண்.
2.டிரக்கில் அடைக்கப்பட்டு மாமிசத்திற்காகக் கொண்டு செல்லப்படும் பன்றிக் குட்டிகளும் அதனூடாகப் புலம் பெயர்தல் தொடர்பான மயூரனின் கொடிய அனுபவங்களும்
3.யுத்தக் கொடூரங்களுக்கிடையே உயிருக்கு அஞ்சி, புலம்பெயரும் வாழ்க்கையையும் மாமிசத்துக்காகவே விலங்குகள் வளர்க்கப்பட்டு ஒன்று பார்க்க ஒன்றைக் கொல்லும் மனிதக் கொடூரத்தையும் உயிர்வதை என்ற ஒற்றைப்புள்ளியில் இணைத்துக்காணும் மயூரனின் மாறுபட்ட பார்வை.

இந்தக் கதையை ஒரு சைவ உணவுப் பிரச்சாரக் கதையாகப் பார்ப்பதைவிட உயிர்வதை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகின் சகல ஜீவராசிகளும் ஒன்றுதான் என்ற விரிந்த தளத்தில் வாசிக்க வேண்டும். இந்தப் புள்ளியை நோக்கிய கதையின் ஊடாக விரியும் புலப்பெயர்வுச் சிக்கல்கள் கதைக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன. நடைநலத்திலும், பாத்திர வார்ப்பிலும், கதையின் கட்டுக்கோப்பிலும் முழுமை பெற்ற வலி குறித்துப் பேசிக் கொண்டே போகலாம்.

கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதை வாசிப்பவர்களின் உறக்கத்தைப் பறிக்கும் கதை. சிங்கள ராணுவத்தின் இனஅழிப்புத் தாக்குதலில் செத்துமடிந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் ரத்தசாட்சியாய்ப் படைக்கப்பட்ட கதை. வயிற்றுப் பிள்ளைக்காரியான தன் இளம் மனைவியைக் கண்ணெதிரே ராணுவத் தாக்குதலுக்குப் பலிகொடுத்துவிட்டு அந்த உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவந்த கணவனின் மனக்குமுறலாய் வெளிப்படும் கதை. கதையின் கருவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணைக்குருவிகளில் ஒன்று தன் துணைக்குருவி வாகனம் மோதி நசுங்கிக் கிடக்கக்கண்டு செய்வதறியாது உழலும் காட்சி. இரத்தமும் சதையுமாய்க் உடல் சிதைந்து சின்னாபின்னமாய்க் கிடக்கும் குருவியைப் பார்க்கையில் இப்படித்தான் என்ற சசியும்.. என்று அவன் கதறும்போது வாசிப்பவர்களின் நெஞ்சம் சோகத்தில் சிதறும். ஈழப்போரின் பேரழிவு நினைவுகளைக் கனடா மண்ணிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பின்நோக்கு உத்தியில் படைக்கப்பட்ட கதை. இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் வாசித்தால்தான் கதையின் அருமை புரியும். அகில் அவர்கள் இந்தத் தொகுப்பிற்கு, கூடுகள் சிதைந்தபோது என்ற தலைப்பினை வைத்தது உண்மையில் மிகப்பொருத்தம்.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத் தொகுதியின் சிறப்புகளாக நான் பட்டியலிட விரும்புபவை:
1. தமிழகத்தில் வெளிவரும் வட்டார வழக்குப் புனைகதைகளைப் போல் ஈழத்தமிழின் வட்டார நடை அகிலின் சிறுகதைகளில் மிக இயல்பாகப் பொருந்திப் போகிறது.
2. ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கும் பங்கேற்பும் கதையின் நம்பகத் தன்மையை மிகுவித்து வாசகர்களைக் கதைக்களங்களோடு ஒன்றிப்போகச் செய்கின்றன.
3. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் யாருமே எதிர்நிலைப் பாத்திரங்கள் இல்லை என்பது ஒரு தனிச்சிறப்பு. பாத்திரப்படைப்பில் அகில் கையாண்டுள்ள இந்த அணுகுமுறை முற்றிலும் புதுமையானது
4. இத்தொகுதி உயிர்க்குலம் தழுவிய மானுடநேயத்தைக் கதைகளின் ஊடாகப் பரப்புரையற்ற தொனியில் முன்நிறுத்துகின்றன.
5. அகிலின் கதைகள் தலைமுறை இடைவெளிகளால் சிதைவுற்றுக் கிடக்கும் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்கின்றன.
6. பாத்திரங்கள் மட்டுமின்றிப் பெரிய கல்வீடு, வானொலிப் பெட்டி, இணைக் குருவிகள் போன்ற சில அஃறிணைப் பொருட்களைக் குறியீடுகளாக்கிக் கதைக்கருவை முழுமைப்படுத்தும் உத்தி, அகிலின் கதைசொல்லலில் கையாளப் படுகின்றது.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது தொகுதியை வெறுமனே வாசித்துக் கடப்பது என்பது அத்துணை எளிய செயலன்று. ஒவ்வொரு கதையும் வாசகனிடம் ஓர் இனந்தெரியாத சோகத்தை, வலியை ஏற்படுத்துவது நிச்சயம். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணிலும் புலம்பெயர்தலிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் படும் வேதனைகள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாதவை. இத்தொகுதியில் அகிலின் சிறுகதைகள் எவ்விதப் புனைவுகளுமின்றி இரத்தமும் சதையுமாக அவர்களின் வாழ்க்கையை முன்நிறுத்துகின்றன. பேரினவாதம் ஏற்படுத்தும் இனஅழிப்பின் தாக்கங்களைத் தம் சிறுகதைகளின் ஊடாகக் காட்சிப்படுத்தும் இத்தொகுதி ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் வெற்றிபெறுவது முக்கியமில்லை. படைப்புகள் வெற்றிபெற வேண்டும். அந்த வகையில் அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற படைப்பின் வெற்றி, காலத்தின் தேவை.

செவ்வாய், 19 ஜூன், 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி (கலாவிசு சிறுகதைகள்) அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் மீது எனக்கு அலாதி ஈர்ப்புண்டு. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வெளியில் கவிதைகளைப் படித்து, அதில் கரைந்து போவதைவிடச் சிறுகதைகளில்தான் நான் அதிகம் கரைந்து போயிருக்கிறேன். நல்ல சிறுகதை, அதனைப் படித்து முடித்த பின்னும் நெடுநேரம் நம்மோடு உரையாடி உறவாடி நீங்காமல் நிலைத்திருக்கும். சுவையான காபி கடைசிச் சொட்டுவரை குடித்து முடித்த பின்னும் நாக்கிலும் மனதிலும் நெடுநேரம் சுகமாகக் குடியிருப்பதைப் போல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறந்த சிறுகதை, வாசகனை அடுத்த கதையைப் படிக்க விடாது.

ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி வாய்ப்பு முதலான அகப்புறச் சூழல்களே தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்ற வாய்ப்பளித்தன. தமிழில் உருவான உரைநடை இலக்கிய வகைகளில் சிறுகதை என்பது கடைசி வரவு. தமிழில் நாவல்கள் தோன்றி ஐம்பதாண்டுகள் கழித்தே தமிழ்ச் சிறுகதைகள் உருவாயின. உரைநடை இலக்கிங்களில் சிறுகதைதான் கடைசிக் குழந்தை என்பதால் கடைக்குட்டியின் மீது எல்லோருக்குமே ஒரு தனி ஈர்ப்பு இருப்பது இயல்புதானே.
தமிழில் சிறுகதைகள் பிறந்து இன்னும் ஒரு நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை. 1926 இல் வ.வே.சு. ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதை யிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு தொடங்குகிறது. முதல் ஐம்பதாண்டு களிலேயே தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் எல்லாம் எழுதப்பட்டு விட்டன என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டாம் ஐம்பதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்தப் பழம்பெருமையைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ளவே பெரும்பாடு படவேண்டியுள்ளது. முதல்பாதி நூற்றாண்டுச் சிறுகதைகளை வாசித்த அதே ஈடுபாட்டோடுதான் இன்றைக்கு வருகிற சிறுகதைகளையும் நான் வாசிக்கிறேன். படைப்பின் செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளுக்கு மட்டும் அப்படி என்னத் தனிச்சிறப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து, கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.
சிறுகதை என்பது வடிவில் சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதை சொல்வதனாலேயே அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ, இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை. கலாவிசுவின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.
II
நூலாசிரியர் கலாவிசு புதுவை அறிந்த நல்ல கவிஞர். கவிதை வானில் என்ற இலக்கிய அமைப்பையும் அதே பெயரிலான ஓர் இலக்கிய இதழையும் தொடங்கித் தொடர்ந்து நடத்திவருபவர். நண்பர்கள் தோட்டம் நடத்தி வெற்றிபெற்ற முழுநிலாப் பாட்டரங்கங்களைத் தொடர்ந்து, கவிதை வானில் பாட்டரங்குகள் புதுவையில் தனிமுத்திரைப் பதித்து வருகின்றன. புதுச்சேரியின் கவிதை வளர்ச்சிக்கும் கவிஞர்களின் வளர்ச்சிக்கும் இந்தப் பாட்டரங்குகளின் பங்கு நிச்சயம் உண்டு. முதன்முதலாகக் கவிதைவானில் நிகழ்ச்சியில் மேடையேறி இன்றைக்கு நல்ல கவிஞர்களாய்ப் புதுவையில் வலம் வருவோர் பலருண்டு. குறிப்பாகப்  பெண் படைப்பாளியர் பலருக்கு அவர் தக்க களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிதைகளை ஜனநாயகப் படுத்தியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். படைப்பிலக்கியத் துறையில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எனத் தொடர்ந்து இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கலாவிசு, இலக்கியப் பணியோடு சமுதாயப் பணியிலும் ஆர்வமுடையவர். தன் விருப்பப் பணியாகப் புதுச்சேரிக் குடும்பநல வழக்குமன்றத்தில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இந்நூல் இவரின் பத்தாவது நூல். சிறுகதை வரிசையில் இது மூன்றாவது நூல்.

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தாறு சிறுகதைகள் உள்ளன. இன்றைக்கு வருகின்ற சிற்றதழ்களுக்கு ஏற்றவகையில் அவை அளவால் சிறுத்துக் காணப்படுகின்றன. பெரும்பாலான சிறுகதைகள், அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து, அதாவது அவர் பார்த்த, கேட்ட, அனுபவித்த வாழ்க்கையின் பகுதிகளிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. ஊடகங்களின் வழியாக இவர் வாசிக்க நேர்ந்த குறிப்பிடத்தக்க குற்றச் செய்திகளும் கூட இவரின் கதைக் கருவுக்குத் தப்பவில்லை. நூலாசிரியர் கலாவிசு சிறுகதைகளின் மையஅச்சு, குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள். இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகிற கணங்களையும் அதன் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து குடும்ப உறவுகள்; காப்பாற்றப்படுகிற கணங்களையும் கூர்ந்து கவனித்து எளிய கதைகளாக்கி இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
1.    என்னை மன்னிச்சுடு பானும்மா..
2.    ஏரோட்டம் நின்னுபோனா!
3.    இந்தக் காலத்துப் புள்ளங்க
4.    காக்கைக் குருவி எங்கள் ஜாதி
5.    மனதோடு தான்
6.    பாட்டியும் பேத்தியும்
7.    பெத்தாதான் புள்ளயா?
8.    சூப்பர் மூன்
9.    ஏழையென்ற போதும்


முதலான கதைகளில் நூலாசிரியர் கலாவிசுவின் சிறுகதைப் படைப்பாற்றல் தனித்தன்மையோடு வெளிப்படுவதனைச் சிறப்பாகக் குறிப்பிடமுடியும்

    காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தனப் பகட்டுகள் அற்றவர்களாகவும் பிறருக்கு உதவும் இரக்ககுணம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
ஏழையென்ற போதும் என்ற சிறுகதையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில் உடல்நலமில்லாத குழந்தையை யாரிடம் விட்டுவிட்டுப் போவது என்ற சிக்கல் எழும்போது வேலைக்காரியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்று கணவன் சொல்ல மனைவி தயங்குகிறாள். அப்பொழுது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்,
என்னங்க? உங்களுக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு? சேரியில வாழ்ற பொம்பளகிட்ட புள்ளைய விட்டு, வீட்டையும் தொறந்து விட்டுட்டுப் போகணுங் கறீங்களே? அவ எதையாவது தூக்கிட்டுப் போயிட்டா?
இங்கபாரு! உனக்கு ஏழைங்கன்னா இளக்காரமா போயிடுச்சு! அவங்க உண்மையா இருப்பாங்க. நம்பள மாதிரி ஒளிச்சு அவங்களுக்குப் பேசத் தெரியாது. பழகினவங்களுக்கு ஒண்ணுன்னா உயிரைக்கூடக் கொடுப்பாங்க.
என்று விளிம்புநிலை மக்களின் போலித்தனமற்ற வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். மேலும் கதையின் முடிவில் வேலைக்காரியின் தன்னலமற்ற சேவையில் மனம்மகிழ்ந்த கதைத் தலைவியிடம் அவள் கணவன்,

அப்பாடா! இப்பவாவது உனக்கு புத்திவந்துச்சே.. அதுவே எனக்குப் போதும். எட்டி நின்னு என்னான்னு கேக்கற உறவுக்காரங்களை விட கூடவே இருந்து உதவுற ஏழைங்களத்தான் நம்மளோட சொந்தக்காரங்களா நினைச்சுக்கணும். அவங்ககிட்ட பணம் மட்டும்தான் இல்லை, குணத்தால அவங்கத்தான் உயர்ந்தவங்கன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
என்று சொல்வது கதையின் சிறந்த முடிப்பு.

    கலாவிசு சிறுகதைகளின் தனித்தன்மைகளாகச் சிலவற்றைப் பட்டியலிடமுடியும்.
1.    எளிய இனிய மொழிநடை.
2.    அளவான உரையாடல்
3.    இயற்கை இகந்த, அதீதப் புனைவுகளைக் கையாளாமை.
4.    கதை நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல்
5.    நம்பிக்கையளிக்கும் விதத்தில் வாழ்க்கையைப் பதிவுசெய்வது.
6.    விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று படைப்பை உருவாக்குவது.
7.    சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது.
8.    இயற்கை, மனிதர்கள், பறவை விலங்கினங்கள் என விரிந்த தளத்தில்
மனிதநேயத்தைப் பேசுவது.
என்பன அவை.

    சிறுகதைகளின் மொழிநடையைப் பொருத்தமட்டில் அவற்றுக்கென்று சிறப்பான தனித்தன்மை வாய்ந்த விவரித்தல் முறை ஒன்றுண்டு. கதையை, சிறுகதை யாக்குவதில் அத்தகு விவரிப்பு நடைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. கதை நிகழ்ச்சிகளின் கோர்வைமட்டுமே சிறுகதை ஆவதில்லை. சொல்லப்போகும் கதையின் எடுத்துரைப்பில்தான் சிறுகதை முழுமைபெறுகிறது. நூலாசிரியர் கலாவிசு சிறுகதையின் இத்தகு எடுத்துரைப்பில் கணிசமான கவனம் செலுத்துதல் வேண்டும். இது என்அவா.
இத்தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகளில் நூலாசிரியர் கலாவிசு ஒரு பார்வையாளராக இருந்தே அக்கதைகளைப் பதிவுசெய்கிறார். எந்தக் கதையிலும் படைப்பாளி சட்டென்று மூக்கை நீட்டி போதனை செய்யத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் அவர் விழிப்போடு இருக்கிறார். இந்த அம்சம் கலாவிசு கதைகளில் பாராட்டப்பட வேண்டிய அம்சம். பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி கலாவிசு சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

நூலாசிரியர் கலாவிசு தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற இச்சிறுகதைத் தொகுதி விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

         

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

புதுமைப்பித்தன் சிறுகதைகள் -சில குறிப்புகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு சிறுகதை

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள்.

சமூகம் குறித்த எதிர்வினையே அவரின் படைப்புகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

சோதனை முயற்சிகள்

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

திங்கள், 28 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-6

தொன்மங்களும் பெண்-கற்பு மதிப்பீடுகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பெண் - கற்பு:
புதுமைப்பித்தன் மற்றும் இன்னபிற இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரையும் அகலிகைத் தொன்மம் கவர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கிலக் கல்வியால் நம்மவர்கள் பெற்ற பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வே. 19 ஆம் நூற்றாண்டில் கால்கொண்ட பெண்ணுரிமை விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளிகளால் அவரவர் சார்புகளுக்கேற்பே வளர்த்தெடுக்கப்பட்டது.

இதிகாச, புராணத் தொன்மங்களால் கட்டமைக்கப்பட்ட பெண்-கற்பு பற்றிய மதிப்பீடுகள் அந்தத் தொன்மங்களின் துணையோடே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. பெண்கற்பை- பெண்ணடிமையை வலியுறுத்துவதில் தொன்மங்கள் மிகுந்த பங்காற்றுகின்றன. புராண இதிகாசத் தொன்மங்கள் பெண்- பெண்உடல்- பாலியல் மீறல்கள்- தண்டனைகள் என்ற ஒவ்வொன்றின் வழியாகவும் பெண்களை இறுக்கிக் கொண்டே வந்தன.

தொன்மங்களில் இடம் பெற்ற ரிஷி, ரிஷிபத்தினி பற்றிய கதைகளில் இந்த வளர்நிலைகளைக் காணலாம்.

1. தாருகாவனத்து ரிஷிகள் அவர்கள் பத்தினிகள் பற்றிய கந்தபுராணக் கதைக் குறிப்புகளில், சிவபெருமான் பிச்சாடண கோலத்தில் பிறந்த மேனியாய் தாருகாவனத்தில் பிச்சையெடுக்க வந்தபோது ரிஷிபத்தினிகள் அவர் அழகில் மயங்கிப் பின்னாலேயே போய்விடுகிறார்கள். கோபம் கொண்ட ரிஷிகள் அபிசார ஓமம் செய்து சிவனை அழிக்க முயன்றார்களே அல்லாமல் தங்கள் மனைவியர்களைத் தண்டிக்கவில்லை. கற்புக் கோட்பாடு இறுக்கம் பெறாத காலத்துத் தொன்மம் இது. வலிமையால் பெண்ணைத் தேர்ந்தெடுத்த காலம்.

2. அகலிகைக் கதையில், வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனோடு கூடிய அகலிகையையும் இந்திரனையும் கொளமன் சபித்தான். கற்பு பெண்களுக்கு வலியுறுத்தப்பட்ட காலத்துத் தொன்மம் இது.

3. ரேணுகாதேவி- ஜமதக்கினி ரிஷி கதையில் உடலால் தவறிழைக்கவில்லை யென்றாலும் மனதால் தவறிழைத்தாள் என்று கூறி மகனைக் கொண்டு தலையைத் துண்டித்தார்கள். கற்புக் கோட்பாடு இறுக்கம் பெற்ற காலத்துத் தொன்மம் இது.

4. கார்த்திகைப் பெண்டிர் - சப்த ரிஷி மாதர்கள் பற்றிய தொன்மங்கள் வடவர் தொன்மங்களிலேயும் தமிழ்த் தொன்மங்களிலேயும் கற்பு பற்றிய மதிப்பீடுகளின் பல்வேறு நிலைகளைச் சுட்டுகின்றன. இந்திரன், சிவனின் கருவை ஏழு துண்டங்களாகச் சிதைத்து கார்த்திகைப் பெண்டிர்களின் கணவன்மார்களாகிய ரிஷிகளிடம் தர, அவர்கள் அத்துண்டங்களைத் தீயிலிட்டுத் தூய்மை செய்து தம் மனைவியர்களுக்குத் தருகின்றார்கள். அருந்ததி தவிர்த்த ஆறு ரிஷி பத்தினிகளும் சிவனின் அக்கருவை உண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். பரிபாடல் ஐந்தாம் பாடலில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. தத்தம் கணவன்மார்களே சிவனின் கருவைத் தீயிலிட்டு தூய்மைப் படுத்தித் தருவதால் ரிஷி பத்தினிகளாகிய கார்த்திகைப் பெண்டிர்களின் கற்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை என்று இத்தொன்மம் அமைதி காண்கிறது.

இப்படித் தொன்மங்களின் வழியாக இறுக்கம் பெற்ற பெண்- கற்பு பற்றிய கருத்தாக்கங்களுக்கு எதிரான பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த புதிய கருத்தாக்கங்களைச் சமுதாயத்தில் பதிக்க இந்தத் தொன்மங்களையே கையாளுவதென்பது படைப்புத் தளத்தில் ஒரு வெற்றிகரமான உத்தி. தொன்மங்களின் நெகிழ்வுத் தன்மை இதற்குப் பெரிதும் துணைநிற்கின்றது. நெகிழ்வுத் தன்மை என்பது இங்கே மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். மாற்றங்களும் மாற்றங்களால் விளைந்த மாற்று வடிவங்களுமே தொன்மங்களை நிலைப்படுத்துகின்றன. புதிய சூழலில் அல்லது கால மாற்றத்தில் ஒரு தொன்மம் நெகிழ்வடையும் போழுது மாற்றங்கள் அத்தொன்மத்தை அழிவிலிருந்து காக்கின்றன அல்லது வாழ்விக்கின்றன என்று கருதுதல் வேண்டும்.

அகலிகைக் கதையின் மாற்றுவடிவங்கள் அத்தொன்மத்தின் நெகிழ்வுத் தன்மைக்குத் தக்க சான்றுகளாகும். வான்மீகி சொன்ன அகலிகைக் கதை, வியாச பாரதத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது, கௌதமன் அகலிகையின் தலையைத் துண்டிக்க உத்திரவிடுகிறான் பின்னர் மனம் மாறி அகலிகையை ஏற்றுக் கொள்கிறான். பரிபாடலில் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்தான் என்று வேறு ஒரு வடிவம் இடம்பெறுகிறது. ஏறக்குறைய சம காலங்களிலேயே இத்துணை நெகிழ்ச்சியுற்றிருந்த அகலிகைத் தொன்மம், இருபதாம் நூற்றாண்டில் பத்துக்கும் மேற்பட்ட மாற்று வடிவங்களை ஏற்பது அதன் உயிர் வாழும் ஆற்றலையே காட்டுகிறது. புதுமைப் பித்தனும் தொன்மங்களின் மரபை நன்றாக ஓர்ந்தே தம்முடைய அகலிகை, சாப விமோசனம் ஆகிய கதைகளை உருவாக்கியுள்ளார்.

துணை நின்ற நூல்கள்:
1. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை, 1976
2. க.கைலாசபதி, அடியும் முடியும், 1996
3. சரசுவதி வேணுகோபால், தொன்மக் கதைகள் கோட்பாட்டு ஆய்வுகள், 1997
4. ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், 2000
5. இரா. வேங்கடாசலபதி (பதி.ஆ.), புதுமைப்பித்தன் கதைகள், 2001
6. பேரா. க. பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, 2005

ஞாயிறு, 27 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி -5

சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்:

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8




சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்


மேலே உள்ள வரைபடங்கள், இரண்டு தொன்மங்களும் செயல்பாடுகளின் வழி ஒரே வாய்பாட்டில் இயங்குவதை உணர்த்துகின்றன. இரண்டு தொன்மங்களிலும் இராமனும் கோதமனும் பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் பரிசுத்தமாயிருக்கும் போது பெண்களும் அப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதில்- நிர்ப்பந்திப்பதில் என்ன தவறு? என்பது போன்ற தர்க்கம் இரண்டு தொன்மங்களிலும் கட்டமைக்கப்படுகிறது.

ஆனால் இராவணன், இந்திரன் ஆகிய இரண்டு ஆண்களின் பாலியல் மீறல்கள் ஓரங்கட்டப்படுகின்றன. ஆண்களின் பாலியல் மீறல்கள் உள்ள சமூகத்தில் பெண்கள் உடலாலும் மனத்தாலும் களங்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படிச் சாத்தியமாகும். ‘ஆப்பிளின் ஒரு பாதியைத் தின்றுவிட்ட பிறகு முழு ஆப்பிளைக் கையில் வைத்திருக்க முடியாது என்பதைப்போல்’ என்று இதனை விளக்குவார் எங்கல்ஸ் (எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.110)

சீதையின் தீக்குளிப்பு அகலிகையின் மனதில் கோபக்கனலை எழுப்பிவிடுகிறது. அவர் கேட்டாரா? என்று இயல்பாகத் தொடங்கிய அகலிகையின் பேச்சில் இராமன்தான் கேட்டான் என்று தெரிந்ததும் அவன் கேட்டானா? என்று அனல் வீசத் தொடங்குகிறது. இதனைக் கண்ணகி வெறி என்கிறார் புதுமைப்பித்தன்.

தீக்குளிப்பு பற்றிய சீதையின் எதிர்வினை என்னவாக இருந்தது? அகலிகைபோல் வெளிப்படையாக எதிர்க்குரல் எழுப்பவில்லை சீதை. மாறாக, ‘உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.’ என்ற புதுமைப்பித்தன் வரிகளில் வரும், மெதுவாகச் சிரித்தாள் என்பதில் சீதையின் கேலியும், கிண்டலும், கோபமும், ஆத்திரமும், இயலாமையும், அழுகையும் அடுக்கடுக்காக வெளிப்படுவதை உணரமுடியும். உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று வேண்டுமென்றே அகலிகையின் கோபத்தைக் கிளறிவிடும் வார்த்தையைக் கையாளுகிறாள் சீதை. தான் பேசாததை யெல்லாம், பேச வேண்டியதை யெல்லாம் அகலிகை பேசுகிறாள் என்பதால்.

பேசட்டும்.. பேசட்டும்.. வரலாற்றின் வழிநெடுகிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல், குரல்வளை நெறிக்கப்பட்ட பெண்களின் கோபக்குரல், உள்ளுக்குள் மகிழ்கிறாள் சீதை. சீதையின் மௌனம், சீதை பேசாத பேச்சு அது. புதுமைப்பித்தன் கையாண்ட எத்தனையோ தொன்ம மரபுகளில் அகலிகைத் தொன்மம் மிகுந்த தனித்துவம் உடையது. அகலிகை மீண்டும் கல்லானது உளவியல் சார்ந்தது என்றாலும், அறங்கள் குறித்த அகலிகையின் விசாரணை சமூகம் பற்றியது, சமூகக் கட்டுமானங்கள் பற்றியது. சாப விமோசனத்தில் அகலிகை இரண்டு விவாதங்களைத் தொடங்கி வைக்கிறாள்.

1. மனிதனா? தர்மமா? எது முக்கியம் என்ற வினா.
2. இரண்டாவது, உள்ளமா? உலகமா?

இரண்டில் எதற்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற வினா. கைகேயியிடம் உரையாடும் தருணத்தில் அகலிகை தர்மங்கள் குறித்த சர்ச்சையைக் கிளப்புகிறாள், ‘மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்கு சத்துரு’ இது அகலிகையின் வாதம்.

இவ்வாதத்தில் தர்மத்துக்கு முதன்மையில்லை, மனிதத்திற்கே முதன்மை. ‘உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகத்துக்கு நிரூபிக்க முடியுமா?’ என்ற வாதத்தில் அகலிகை உள்ளமா? உலகமா? என்ற வினாவிற்கு அவளே விடையும் கூறுகிறாள். உலகம் எது? என்ற அகலிகையின் கேள்வியே இதற்கு பதிலாகிறது. காலம், இடம், நபர் சார்ந்து உண்மைகள் மாறுபடும் போது உலகம் என்பது எது? என்ற கேள்வி எழுகிறது.

செவ்வாய், 1 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் - பகுதி 4

புதுமைப் பித்தனும் அகலிகைத் தொன்மமும்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப் பித்தன் சிறுகதைகளில் அகலிகைத் தொன்மம்:

புதுமைப்பித்தன் இவற்றில் அகலிகைத் தமிழ்த் தொன்ம மரபையே தம் படைப்புகளில் பயன்படுத்துகின்றார். முதல்கதை அகல்யை 1934-இல் எழுதப்பட்டது. இரண்டாம் கதை சாபவிமோசனம் 1943-இல் எழுதப்பட்டது. இரண்டு கதைகளும் படைப்புத் தளத்தில் வேறு வேறு கோணங்களில் படைக்கப்பட்டுள்ளன.

முதல்கதை அகல்யாவில் வரும் பாத்திரங்களான அகலிகை, கௌதமர், இந்திரன் என்ற பெயர்கள்தாம் தொன்மப்பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் இயற்கையானவை. இயற்கை இகந்த புனைவுகளே கதையில் இல்லை. இந்திரன் கோழிபோல் கூவுகிறான், கோழியாக வடிவெடுத்து வரவில்லை. இந்திரன் பூனைபோல் மெதுவாக வருகிறான், பூனையாகவில்லை. இந்திரன் இந்திரனாகவே அகலிகையைக் கூடுகிறான், கௌதமன் வேடத்தில் வரவில்லை. அகலிகை கல்லாகவில்லை, இந்திரன் சாபம் பெறவில்லை, இந்திரனை கௌதமர் மன்னித்துவிடுகிறார். கதை முழுமையும் நடப்பியலோடு இணைந்துசெல்கிறது. கௌதமர்தான் இலட்சியக் கதாபாத்திரமாகிறார். ‘மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்.’ (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 135) கௌதமரின் இந்தக் கேள்வி கற்பொழுக்கம் பற்றிய புதிய விளக்கத்தை வாசகனுக்குத் தருகிறது.

கௌதமரின் இந்த வாசகத்தை இருபதாம் நூற்றாண்டின் கற்புக் கோட்பாடு எனலாம். மனத் தூய்மைதான் கற்பு, உடல் களங்கம் கற்புக்கேடு ஆகாது என்ற இக்கூற்றைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கலாம். உடல் களங்கம் என்பதில் வரும் களங்கம் என்றசொல் கற்பு பற்றிய பழைய தொன்மங்களை அப்படியே போற்றிப் பாதுகாக்கின்றமையை உணரமுடியும். தூய்மை, களங்கம் என்ற இரண்டு சொற்களும் பெண்உடல் குறித்த ஆண்மைய வாதங்களையே இங்கு முன்வைக்கின்றது.

இரண்டாவது கதை சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது. கதையைத் தொடங்குமுன்னே ‘ராமாயண பரிச்சய முள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.’ ஆசிரியரின் இத்தனிக்கூற்று முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. ப.529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. ப.535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின் சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர்.

அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது. நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை. (மேற். நூ. ப.539) மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.

புதுமைப்பித்தனின் இந்தச் சாப விமோசனம் கதை ஆழ்ந்து படிப்போர்க்கு இரண்டு சிக்கல்களை எழுப்பியிருப்பதாக க. கைலாசபதி கருதுகிறார்.

1. நெருக்கடி ஏற்படும் பொழுது கணவன் மனைவி உறவுப் பிரச்சனை எப்படித் தோன்றுகிறது, அதாவது மனித உறவுகள் பற்றிய சிக்கல்.

2. ஒழுக்கம், அறம் என்பவைக்கும் வாழ்க்கைக்கும் எவ்வாறு முரண்பாடு தோன்றுகிறது, அதாவது அறவியல் - பெற்றுள்ள வலிமை பற்றிய சிக்கல் (க.கைலாசபதி, அடியும் முடியும், ப.156)

மனித உறவுகள் பற்றிய சிக்கலையும், அறவியலின் வலிமை பற்றிய சிக்கலையும் பேசும் சாப விமோசனம் இச்சிக்கல்களுக்கு வெளிப்படையாக விடைகூறவில்லை என்பார் கைலாசபதி. அகலிகைத் தொன்மத்தை மறுபடைப்பாக்கம் செய்த பலரும் உளவியல் நோக்கிலேயே இத்தொன்மத்தை அணுகியுள்ளார்கள். புதுமைப்பித்தனும் சாப விமோசனம் பெற்ற பின்னர் அகலிகை, கோதமன் இருவரின் மனதிலும் இழையோடும் குற்ற உணர்ச்சி பற்றிப் பலபடப் பேசுகிறார். அகலிகைக்கு அச்ச உணர்ச்சியே மேலோங்கி நின்றது. இயல்பான பேச்சு இல்லை, மற்றவர் பேச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அகலிகைக்கு பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கொணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 531)கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன்நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? … இருவரும் இருவிதமான மனக்கோட்டைக்குள் இருந்து தவித்தார்கள். கோதமனுக்குத் தான் ஏற்றவளா? என்பதே அகலிகையின் கவலைஅகலிகைக்கு தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை (மேற். நூ. ப.530)சேர்ந்து வாழ்ந்தாலும் இருவரும் இரண்டு விதமான மனக்கோட்டைகளுக்குள் வாழ நேர்ந்ததால் ஏற்படும் உளவியல் சிக்கல்களே சாப விமோசனம் கதையின் முதல்பாதி.

சாப விமோசனம் கதையின் இரண்டாம் பாதி, இராமன் கதை என்ற ஒற்றைத் தொன்மத்திற்குள் இயங்கும் சீதை, அகலிகை என்ற இரட்டைத் தொன்மங்களைக் குறித்தது. அதாவது சீதைத் தீக்குளிப்பு ஒரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- நெருப்பு- உலகம் என்பதோடு தொடர்புடையது. அகலிகை கல்லுயிர் பெறல் மற்றுமொரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- உடல்-மனம் என்பவற்றோடு தொடர்புடையது. இந்த இரண்டு தொன்மங்களையும் இணைக்கும் தொன்மம் இராமன் குறித்த தொன்மம். சீதை, அகலிகை என்ற இரண்டு தொன்மங்களுக்குள் இயங்கும் செயல்பாடுகள் ஒரே வாய்பாட்டில் இயங்குகின்றன. ஒத்த வாய்பாட்டில் இயங்கும் இக்கதைகளில் மாறுபடும் மதிப்பீடுகள் குறித்த விசாரணையே புதுமைப்பித்தனின் சாப விமோசனம் முன்வைக்கும் சிக்கல். இச்சிக்கல் அகலிகை வழியாக எழுப்பப்படுகிறது. தொன்மத்தில் இது அகலிகையின் குரலாக ஒலித்தாலும், வரலாறு நெடுகிலும் பெண்களின் ஒற்றைக் குரலாகவே எதிரொலிக்கின்றது.

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி 3

அகலிகைத் தொன்மம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

அகலிகைத் தொன்மம்:

வடமொழியில் முதல்காவியம் செய்த வான்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார். வான்மீகி சொன்ன கதை இது,மகாமுனி கௌதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கௌதமன் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கௌதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்றான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்பட்டாள்.பிறகு தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரித்து அனுப்ப, உனக்கு நன்றி என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கௌதமன் இந்திரன் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொண்டார்.மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில்புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய் என்று இந்திரனுக்கு சாபமிட்டார். அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமன் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும் என்று அகலிகைக்குச் சாபமிட்டார்.

தமிழில் அகலிகைத் தொன்மம்

தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல். மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, இந்திரன் ப+சை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுருஒன்றிய படியிதென்று உரை செய்வோரும் (நப்பண்ணனார், பரிபாடல், பா. 19)‘இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கௌதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இது’ என்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. இந்திரன் பெற்ற சாபம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் இடம்பெறவில்லை, ஆனால் பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் குன்றம்பூதனார் செவ்வேளின் மனைவி தேவசேனையைக் குறிக்குமிடத்தில் ‘ ஐயிரு நூற்று மெய்ந் நயனத்தவன் மகள்’ என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவன் என்று சுட்டப்படுவதால் இந்திரன் சாபம் நினைவுக்கு வருகின்றது.

பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கௌதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத்திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமானதொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பன், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்’ என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகின்றான். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கௌதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்து’ தன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றான் கம்பன். கம்பன் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது.

கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன.

அகலிகைத் தொன்மத்தைக் கையாண்டு அகல்யை, சாப விமோசனம் என்ற இரண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளார் புதுமைப்பித்தன். அகலிகைத் தொன்மத்தைப் பொறுத்தமட்டில் இருவேறு மரபுகள் காணப்படுகின்றன. ஒன்று வடமொழி அகலிகைத் தொன்ம மரபு, மற்றொன்று தமிழ் அகலிகைத் தொன்ம மரபு. இப்படி இருவேறு மரபுகளாகக் கணக்கில் கொள்ளும் வகையில் இரண்டு மரபுகளும் மாறுபடுகின்றன. வடமொழி அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனுடன் கூடுகிறாள் அகலிகை, கல்லாகும் சாபம் அவளுக்கு இல்லை. தமிழ் அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பது இந்திரன் என்று அறியாமல் கணவன் என்று நினைத்தே அகலிகை அவனுடன் கூடுகிறாள். மனதால் களங்கமற்றவள் என்று சித்தரிக்கப்படுகிறாள். கௌதமனால் கல்லாகுமாறு சபிக்கப்படுகிறாள். இந்த இருவகை அகலிகைத் தொன்மங்களும் இருபதாம் நூற்றாண்டின் நவீன படைப்பாளிகளுக்கு பயன்படுகின்றன.

திங்கள், 31 மே, 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-2

தொன்மவியல்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தொன்மம்:

இலக்கியவியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், மதஒப்பியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளில் தொன்மம் சொல் பயன்படுத்தப்படுகிறது. திறனாய்வுத்துறையின் முன்னோடி நார்த்ராப் பிரையின் தொன்மம் குறித்த விளக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தொன்மம் கடவுளர்களையோ கடவுளையொத்த மனிதர்களையோ பாத்திரங்களாகக் கொண்ட கதையென்றும் அது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்டதென்றும் இயற்கையிழந்த நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்றும் கூறுவார். தொன்மங்கள் அதிக சிரத்தையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை, உண்மையிவேயே நிகழ்ந்ததாக நம்பப்படுபவை. எல்லா இலக்கிய வகைகளும் தொன்மத்திலிருந்தே தோற்றமுற்றன என்பது அவர் கருத்து.
( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப-ள். 12-13)

இலக்கியப் படைப்பிற்கான அடிக்கருத்துக்கள் எல்லாமும் தொன்மங்களிலிருந்தே தோற்றம் பெற்றன என்று நார்த்தராப் பிரையின் கருதுவார். பெரும்பாலும் தொன்மங்கள் மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மனிதன் எவ்வாறு இப்பொழுது உள்ள நிலைக்கு, அதாவது இறப்பு, பால்உணர்வு, பலவகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டவனாக வந்து சேர்ந்தான் என்பன பற்றியும் விளக்குகின்றன. விகோ எனும் அறிஞர் தமது புதிய விஞ்ஞானம் எனும் நூலில் நுண்ணிய சிந்தனைகள் தொன்மக் கருத்துக்களிலிருந்தே வெளிப்படுகின்றன என்றும் கவிதைக்கு இதுவே அடிப்படை என்றும் மனிதன் கற்கவேண்டிய முதல் விஞ்ஞானம் தொன்மமே என்றும் சுட்டிக் காட்டினார். அவர் கருத்தில் தொன்மங்கள் என்பவை உண்மையான நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் கற்பனை வடிவங்கள் ஆகும். ( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப. 7)

தொன்மங்களை உருவாக்கியவர் யார்? என்ற கேள்விக்கு உளவியல் அறிஞர் யுங் தரும் விளக்கம் ஆழமானது, மனித இனம் முழுவதற்கும் பொதுவான அடிமனக்கூறு ஒன்று உண்டென்றும் அதிலிருந்தே தொன்மங்கள் வெளிப்படுகின்றன என்றும் யுங் கருதினார். எனவேதான் பலநாட்டுப் பல இனமக்களிடமும் காணப்படும் தொன்மங்களில் வியத்தகு ஒற்றுமைகளைக் காணமுடிகிறது என்று அவர் விளக்கமளித்தார். ‘புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தனிச்சிந்தனை அல்ல, மக்களின் கூட்டுச்சிந்தனையே ஆகும்’ என்று மாக்சிம் கார்க்கியும் தொன்மங்களை விளக்கியுள்ளார்.

ஆரம்பக் காலத்து மனிதம், தான் எதிர்கொண்ட இயற்கையைத் தன் காலத்திய அறிவினால் புரிந்து கொள்ள முயன்ற முயற்சியின் வெளிப்பாடே இத்தொன்மங்களாகும். மனித மனத்தின் கற்பனை ஆற்றலையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெடித்த முதல் கலை அமைப்பையும் இத்தொன்மங்கள் வெளிப்படுத்தி நின்றன. பின்னால் வர்க்க சமுதாயம் உருவான போது இந்தத் தொன்மங்களில் இருந்துதான் மதக் கடவுள்களுக்கான கதைகள் மாற்றி உருவாக்கம் செய்யப்பட்டன. (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப.ள். 114-115)

தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த் துடிப்புள்ளவை, சமூகம், காலத்துத் தேவைகளுக்கேற்ப தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூகம் மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியச் சூழலில் ஆரிய திராவிட அரசியல் நிலைப்பாடுகளுக்கு இத்தொன்மங்களே களங்களாயின. ஊடகங்கள் இந்துத்துவ பெருமரபைத் தூக்கிப் பிடிக்க இத்தொன்மங்களைப் பயன்படுத்துகின்றன. படைப்பாளிகளும் தொன்மங்களையே படைப்பின் அடிக்கருத்துக்களாகவும் பரப்புரைகளாகவும் உத்திகளாகவும் அமைத்து வெற்றி பெறுகின்றார்கள். எனவேதான் ரெனிவெல்லாக், ‘உலகப் புகழ்பெற்ற படைப்புகள் எல்லாம், புதிதாகக் கதையை உருவாக்கிப் படைக்கப்பட்டவைகளை விட, பழைய தொன்மங்களின் மேல் மறுபடைப்புச் செய்யப் பட்டவைகளாகவே இருக்கின்றன’ என்கிறார். (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப. 118)

உலக இலக்கியப் பயிற்சி மிக்க புதுமைப்பித்தனும் தொன்மமரபுகளை மறுஆக்கம் செய்யும் படைப்பு உத்தியைத் தம் சிறுகதைகள் பலவற்றில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். புதுமைப்பித்தன், இந்தியத் தொன்மங்களில் பரந்த வீச்சுடைய இராமாயணக் கதையை விகடக்கதையாக்கிப் பகடி பண்ணுகிறார். இராமாயணக் கதையைத் தலைகீழாக்கி விகடம் பண்ணுவதற்குப் பாரதியைத்தான் முன்னோடி எனச் சொல்ல வேண்டும். நிஜமான ராமாயணக் கதை என்று அவரே கிண்டலாகக் குறிப்பிடும் அவருடைய குதிரைக் கொம்பு என்ற கதையில் இராவணன் கதைத் தலைவன், இராம- லக்குமணர் எதிரிகள், மூத்தவன் பரதனுக்குப் பட்டம் கட்டக்கூடாது, தனக்கே கட்டவேண்டும் என்று இராமன் லக்குவணோடு சேர்ந்து கலகம் பண்ணுகிறான். இதனால் நாட்டைவிட்டுத் துரத்தப்படுகிறான். போகும்போது இராமன் சீதையைத் தூக்கிச் செல்ல, தொடர்ந்து சென்று இராவணன் சீதையை மீட்கிறான். முடிவில் இராம- லக்குமணர்கள் திருந்துகிறார்கள்! புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம், இராஜாஜியின் பச்சாதாபம் கதைகளுக்குப் பாரதியின் குதிரைக்கொம்பு முன்னோடியாகக் காணப்படுகிறது. (ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், ப.20)இப்படித் தொன்மக் கதைமரபுகளை நவீன உத்தியால் கேலிச் சித்திரங்களாக்கிப் பகடி பண்ணுவது மேலை இலக்கிய படைப்பாக்க உத்திகளிலிருந்து பெறப்பட்டது.

காலந்தோறும் தொன்மங்கள் மறுபடைப்பாக்கம் பெறுவது எல்லா மொழி இலக்கியங்களிலும் வழக்கமானதுதான் என்றாலும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் தொன்ம மரபுக் கதைகளைத் தம் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும்போது புதிய மதிப்பீடுகளை அத்தொன்மங்களில் இடம்பெறச் செய்வதோடு புதிய விமர்சனங்களையும் அதனுள் பொதித்து வைக்கின்றார்கள். புதுமைப்பித்தன் தம் எழுத்துக்கள் முழுவதிலும் இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளையும் சைவத் தமிழ் தொன்மமரபுகளையும் ஊடுபாவாகக் கையாளுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய படைப்புகளில் மறுஆக்கம் செய்யப்பெற்ற தொன்மங்கள் பல என்றாலும் எல்லை கருதி இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் அகலிகைத் தொன்மமரபைப் புதுமைப்பித்தன் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-1

யார் இந்த புதுமைப்பித்தன்?

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும்.

சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே.

புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி.

ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

அம்மா -(ம.பாலன் சிறுகதைகள்) - அணிந்துரை

அம்மா
(ம.பாலன் சிறுகதைகள்)

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளினியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கண நேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகளெல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதி பரவசப்படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த அதிர்ச்சி, சிலிர்ப்பு, மகிழ்ச்சி, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். நண்பர் ம.பாலனின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.

தமிழாசிரியர் ம.பாலன் என் இனிய நண்பர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்த காலத்தில் அவர் மாணவர், அதற்கு முன்பு அதே கல்லூரியில் நான் முதுகலை பயிலும் காலத்தில் இளங்கலை பயின்று கொண்டிருந்த இளவல். 1983க்குப் பிறகு இன்றுவரை நல்ல நண்பர் என்று நூலாசிரியருடனான என் தோழமை பல நிலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கல்லூரிக் காலங்களில் அவர் ஒரு நல்ல ஓவியர். இன்றோ கவிஞர், எழுத்தாளர், நல்லாசிரியர், சமுதாயப் பணியாளர் எனப் பல பரிமாணங்களில் சிறந்து விளங்குகிறார். ‘அம்மா’ என்ற இச்சிறுகதை நூல் அவரின் மூன்றாவது படைப்பு. முதலிரண்டு நூல்களும் கவிதை நூல்கள். மூன்றாவது நூல் சிறுகதைத் தொகுப்பு.

‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருப்பத்திரண்டு சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான் சிறுகதைகள், ஏன்? எல்லாக் கதைகளும் என்றுகூட சொல்லிவிடலாம் அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. எழுத்தாளர் ம. பாலன் சிறுகதைகளின் மைய அச்சு மனித நேயம்.. இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து மனிதநேயம் சிதைக்கப்படுகிற கணங்களையும் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து மனிதநேயம் காப்பாற்றப்படுகிற கணங்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
அம்மா,
இந்தக் காலத்திலும் இளைஞர்கள்,
ஓர் உதவி மிரட்டலாக,
காக்கை குருவி,
சர்க்கரை,
செலவுக்கு ஆச்சு,
நகல் நிஜமானது,
பெண்ணென்றால்,
மகாராசனா!

ஆகிய கதைகள் நூலாசிரியர் ம. பாலனின் மனிதநேயம் பளிச்சிடுகிற கதைகளில் குறிப்பிடத்தக்கன.

‘அம்மா’ தொகுப்புச் சிறுகதைகளில் இடம்பெறும் சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தன பகட்டுகள் அற்றவர்களாகவும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணென்றால் சிறுகதையில் நவ நாகரீக யுவதி, தனக்கு முன்னால் சாலையில் சென்ற மூதாட்டி, தடுக்கி விழுந்தபோது,
“போய்த் தூக்கணும், நாகரீக நல்ல நீலநிற சுடிதாரில் நான். வெளுத்துப்போன புடவை இரவிக்கையில் அவள். யார் வீட்டு வேலைக்காரியோ? தொட்டுத் தூக்கினால் என் கௌரவம் என்னாவது? பார்க்காதது போல் இருந்தேன்” என்கிறாள்.

அதேசமயம் குடித்துவிட்டு வரும் ஒருவன்,
“பாத்து நடக்கக் கூடாது? என்றவாறே குனிந்து தரையில் கிடந்த தக்காளி, கத்திரிக்காய்களைப் பொறுக்கிப் பையில் போட்டான். தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான். மூடியைத் திறந்து, ‘தண்ணி குடிச்சிட்டு ஒக்காந்துட்டுப் போங்க’ கூறிவிட்டுச் சென்றான். தள்ளாட்டத்திலும் உதவியைத் தடுமாற்றம் இல்லாமல் செய்தான்”
என்று சான்றிதழ் வழங்குகிறாள் அந்த நாகரீக யுவதி.

கதையின் முடிவில் மனித நேயமற்றவர்களும் சாமான்ய மக்களின் மனிதநேயச் செயல்களைக் கண்டு, தன்செயலுக்கு வருந்தி நாணுவதாகப் படைப்பது ம. பாலனின் தனிபாணி என்றே குறிப்பிடலாம். அந்த அளவிறகுப் பெரும்பாலான கதைகளில் இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளைக் காணமுடிகிறது.

மகாராசனா! கதையில் தேநீர் கடையில் ‘வவுத்தப் பசிக்குது ஒரு ரொட்டி வாங்கிக் கொடுங்க’ என்று கைநீட்டி யாசகம் கேட்கும் வயோதிகருக்கு உதவாமல்,
“கடையின் உள்ளே இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிரியர், தேநீர் கலக்குபவரிடம் கூறி பிஸ்கட் கொடுக்கச் சொல்ல நினைத்தார். ஆங்கிலத்தில் பிஸ்கட் என்ற சொல்லை, ‘மாச்சில்’ என்று தொலைக்காட்சி ஒன்றில் தமிழ்ப்படுத்தி இருப்பதையும் நினைத்தார். ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்ற முண்டாசுக் கவிஞனின் பாடலடிகளை முணு முணுத்தார்.”
அத்தோடு சரி! பசித்துக் கைநீட்டிய வயோதிகருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தன் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் சிறுகதை ஆசிரியர், தானும் ஓர் ஆசிரியன் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், பொதுவாகப் படித்தவனின் பொதுப்புத்தி எப்படிச் செயல்படும் என்பதை இந்தக் கதையில் மிக அழகாக வெளிப்படுத்துகின்றார். பசிக்கு ரொட்டி கேட்ட அந்த வயோதிகருக்குப் பிறகு யார்தான் உதவியது? பெட்ரோல் பங்கில் காற்றடைக்கும் பணிசெய்யும் மூன்றரை அடி உயரமுள்ள ஊனமுற்ற மனிதர். அவரே மனிதநேயத்தால் உயர்ந்த மனிதர் என்று முடிக்கிறார் சிறுகதையாசிரியர். ‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பின் தனிச்சிறப்பே இந்த மனிதநேயம்தான்.

இத்தொகுப்பின் ஒன்றிரண்டு சிறுகதைகளைத் தவிர மற்றெல்லாச் சிறுகதைகளிலும் ஆசிரியர் ம.பாலன் தானும் ஒரு கதாப்பாத்திரமாக வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ வெளிப்படுகிறார். கதைகளில் வெளிப்படும் சமூகம் குறித்த அவரின் கூர்மையான விமர்சனங்களுக்கு அவரும் தப்புவதில்லை. படைப்பாளி வேறாகவும் தான் வேறாகவும் நின்று அவர் இச்சிறுகதைகளைப் படைத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி ம.பாலனின் சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்மா,
இந்த வயதில்,
எக்சாமுக்கும் கூட,
ஓர் உதவி மிரட்டலாக,
நகல் நிஜமானது,
பயணித்தது,
பெண்ணென்றால்,
மகாராசனா

ஆகிய கதைகளை இத்தொகுதியின் சிறந்த கதைகள் என்று என்னால் பட்டியலிடமுடியும்.

நண்பர் ம.பாலன் தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக அம்மா விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...