வெள்ளி, 27 மார்ச், 2009

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-1

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு

என்று பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். மிகச் சாதாரண அரசுப் பணியில் தம் வாழ்க்கையைத் தொடங்கி தம் இடையறாத முயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் தமிழாசிரியர், கல்லூரிப் பேராசிரியர், பல்கலைக் கழகப் பேராசிரியர் எனத் தம்மை உயர்த்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழின் உயர்வுக்கும் தளராது உழைத்தவர். உரைவேந்தர் என்று தமிழ்கூறு நல்லுலகத்தினரால் பாராட்டப்படும் தனிச்சிறப்பிற்கு உரியவர்.

ஒளவை சு.துரைசாமி வாழ்க்கைக் குறிப்பு:

ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள ஒளவையார் குப்பம் என்ற ஊரில் பிறந்தவர் (05.09.1902). இவர்தம் பெற்றோர் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மையார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் துரைசாமி. ஒளவையார் குப்பம் என்ற ஊர்ப்பெயரின் அடையாளமே சு.துரைசாமி பெயருக்கு முன்னொட்டாக அமைந்து ஒளவை சு. துரைசாமி என்று வழங்கலாயிற்று. உள்ளுரில் தொடக்கக் கல்வியைக் கற்ற ஒளவை, திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் கல்வியைத் தொடர இயலாமல் உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். அப்பணி அவருக்கு நிறைவளிக்காதலால் தமிழ்ப் பணிக்கு ஆயத்தமானார். ஒளவை சு.துரைசாமியின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடைய குடும்பம். எனவே உரைவேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் ஒளவைக்குத் தமிழறிவு ஊட்டினார். அவரிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படி மற்றும் ஏட்டுப்பிரதிகளை உரைவேந்தர் ஆராயும் திறன் பெற்றிருந்தார்.

தமிழ் ஆர்வம் கொண்ட ஒளவை சு.துரைசாமி அவர்கள் முறையாகத் தமிழ் கற்று தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிய விரும்பினார். அதனால் தாம் புரிந்த அலுவலை விடுத்துத் தம் 22 ஆம் அகவையில் தஞ்சையை அடுத்த கரந்தைப் புலவர் கல்லூரி அடைந்தார். கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நம் ஒளவை துரைசாமியின் ஆற்றலறிந்து தமிழ்ச்சங்கப் பள்ளியில் தமிழாசிரியர் பணி தந்தார். கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் தமிழ்ப் புலமை ஒளவைக்கு உரம் சேர்த்தது. 1925 முதல் 1928 வரை கரந்தையில் ஒளவை சு.துரைசாமி தங்கியிருந்தார். அறிஞர் பெருமக்களுடன் உரையாடித் தமிழறிவு பெற்றார். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். ஒளவை சு.துரைசாமி அவர்களுக்கு இல்லறத் துணையாக வாய்த்தவர் கோட்டுப்பாக்கம் (காவேரிப் பாக்கம்) உலோகாம்பாள் ஆவார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமிழ்மொழியில் நல்ல புலமை அமையப் பெற்றதுடன் ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடையவர். வடமொழியும் அறிந்தவர். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல நிலைகளில் பணிபுரிந்து மிகச்சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கியவர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியவர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, சைவசித்தாந்தம் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர்.

கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர் அவர்கள் 1929 முதல் 1941 வரை வடார்க்காடு மாவட்டத்தில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தார். காவிரிப்பாக்கம், காரை, திருவத்திபுரம் (செய்யாறு), போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கியதால் அக்கால ஆட்சியாளர்களால் அடிக்கடி ஒளவை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. உரைவேந்தர் பள்ளியில் பணியாற்றினாலும் தமிழ்ப்பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இதழ்களிலும் பின்னாளில் எழுதினார்.

ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமக்கு உரிய ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற பணி வாய்ப்பு அமையாதா? என ஏங்கிய நிலையில் 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. அங்குப் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால் அம்மொழி இலக்கியங்கள், வரலாறு, தத்துவம் முதலான புதிய துறைகள் ஒளவைக்கு அறிமுகம் ஆயின.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்று வல்ல அறிஞர்களைப் பணியிலமர்த்திய 1942 ஆம் ஆண்டளவில் ஒளவை சு. துரைசாமி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியில் அமர்ந்தார். சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலான அரிய நூல்கள் இவர் வழியாக வெளிவந்தன. எட்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தார். அதுபொழுது பணிபுரிந்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகி மகிழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது புறநானூறு உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியின் உரிமையாளர் கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி உரைவேந்தர் அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951, சூலைத் திங்களில் பணியில் இணைந்தார். ஒளவை சு. துரைசாமி அவர்கள் பேராசிரியர் பணிபுரிந்ததுடன் பல்வேறு இலக்கிய மேடைகளில் தம் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.

ஒளவை சு. துரைசாமி அவர்களுக்குக் கல்வெட்டில் நல்ல பயற்சியும் புலமையும் இருந்ததால் தாம் எழுதிய சங்க இலக்கிய உரைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மேலும் உ.வே.சாமிநாதர் பதிப்பித்த பிறகு உரைவேந்தரின் உரைநூல்கள் வெளிவந்ததால் உ.வே.சா. அவர்களுக்குக் கிடைக்காத சில படிகளையும் பார்வையிட்டுச் செப்பம் செய்துள்ளார்.

ஒளவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும்முகமாக மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மிகப்பெரும் பாராட்டுவிழா அன்னாரின் மணிவிழா ஆண்டில் நிகழ்த்தப் பெற்றது (16.01.1964). இராதா தியாகராசனார் அவர்கள் தம் ஆசிரியரின் சிறப்புகளைப் பலப்படப் புகழ்ந்து "உரைவேந்தர்" என்னும் பட்டம் பொறிக்கப் பெற்ற தங்கப்பதக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். தமிழ்ப்பணி, சமயப்பணி இரண்டையும் தம்மிரு கண்கள் எனப் போற்றிப் புரந்த நம் ஒளவை சு. துரைசாமி அவர்கள் தமது 79 ஆம் அகவையில், 03-04-1981 ஆம் நாளன்று மதுரையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப்புகழை என்றும் பேசுவனவாகும்.

ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்:

ஒளவை அவர்கள் ஒப்புயர்வற்ற பேராசிரியராகவும் நாவண்மை மிக்க நாவலராகவும் திகழ்ந்தமை மட்டுமின்றி நுழைபுலமிக்க நூலாசிரியராகவும் திகழ்ந்தார். பி.வி.கிரி அவர்கள் தாம் தொகுத்த ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு’ என்னும் சிறு வெளியீட்டில் ஒளவையின் நூல்கள் முப்பத்து நான்கினைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நூல்கள் அகரவரிசையில் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01. ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)
02. ஐங்குறுநூறு உரை
03. ஒளவைத் தமிழ்
04. சிலப்பதிகார ஆராய்ச்சி
05. சிலப்பதிகாரச் சுருக்கம்
06. சிவஞானபோதச் செம்பொருள்
07. சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
08. சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
09. சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10. சூளாமணி
11. சைவ இலக்கிய வரலாறு
12. ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13. தமிழ்த் தாமரை
14. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்
15. திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16. திருவருட்பா மூலமும் உரையும் (ஒன்பது தொகுதிகள்)
17. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
18. தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19. நந்தாவிளக்கு
20. நற்றிணை உரை
21. பதிற்றுப்பத்து உரை
22. பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23. பரணர்
24. புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)
25. புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள்)
26. பெருந்தகைப் பெண்டிர்
27. மணிமேகலை ஆராய்ச்சி
28. மணிமேகலைச் சுருக்கம்
29. மதுரைக்குமரனார்
30. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)
31. மருள்நீக்கியார் நாடகம் (அச்சாகவில்லை)
32. யசோதர காவியம் மூலமும் உரையும்
33. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)
34. Introduction to the Study of Thiruvalluvar

இந்தப் பட்டியலைப் பார்க்கும் பொழுது ஒளவை சு.துரைசாமி அவர்களின் எழுத்துப்பணிகள் பதிப்புப்பணி, உரைவிளக்கப்பணி என்பதாக மட்டுமின்றி கட்டுரைத் தொகுப்புகள், இலக்கிய வரலாற்று ஆய்வுகள், தமிழக வரலாற்று ஆய்வுகள், ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, சைவ சித்தாந்தத் தத்துவ நூல்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள் எனப் பல்துறை சார்ந்த ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் நீண்டுள்ளமை உரைவேந்தரின் பல்துறைப் புலமைக்குத் தக்கதோர் சான்றாக விளங்குவதை உணர முடிகின்றது.

சங்க இலக்கியப் பதிப்புகள்:

1851 இல் திருமுருகாற்றுப்படையுடன் தொடங்கப் பெற்ற சங்க இலக்கிய முதற்பதிப்பு முயற்சி 1920 இல் வெளிவந்த அகநானூற்றுப் பதிப்புடன் நிறைவெய்துகிறது. திருமுருகாற்றுப்படை 1851 இல் ஆறுமுக நாவலரால் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலே சங்க இலக்கியங்களில் முதன்முதலில் பதிப்பிக்கப் பெற்ற நூல் என்ற செய்தியை ந.விசாலாட்சி, தம் பழந்தமிழ்ப் பதிப்புகள் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் பெரும்பாலான பதிவுகளில் 1887 இல் சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்த கலித்தொகையே முதல் சங்க இலக்கியப் பதிப்பு என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.

சங்க இலக்கியங்களின் முதல் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உ.வே.சாமிநாதய்யர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி, சௌரிப் பெருமாள் அரங்கன், ரா.இராகவய்யங்கார் ஆகிய அறுவர் ஆவர். இவர்களுள் உவே.சா. தவிர மற்ற ஐவரும் ஒவ்வொரு முதல்நூல் பதிப்புகளே பதிப்பிக்க, உ.வே.சா.அவர்களோ சங்க இலக்கியங்களில் முதல் பதிப்புகளாக ஐந்து இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு.

ஏட்டுச் சுவடியிலிருந்து முதன்முதலில் அச்சேறிய சங்க இலக்கியங்களின் முதல் பதிப்பினைப் பதிப்பித்தவர் பெயர், பதிப்பித்த ஆண்டு பற்றிய அட்டவணை கீழே இடம்பெற்றுள்ளது. இதே அட்டவணையில் ஒளவை அவர்கள் பதிப்பித்த சங்க இலக்கியப் பதிப்புகள், பதிப்பித்த ஆண்டு குறித்த தகவல்களும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

எண் நூல் பதிப்பாளர் ஆண்டு ஒளவைப் பதிப்பு
1 திருமுருகாற்றுப்படை- உரையுடன் ஆறுமுக நாவலர் 1851
2 கலித்தொகை- உரையுடன் சி.வை.தாமோதரம் பிள்ளை 1887
3 பத்துப்பாட்டு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1889
4 புறநானூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1894 1947, 1951
5 ஐங்குநுறூறு- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1903 1938, 1957
6 பதிற்றுப் பத்து- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1904 1951
7 நற்றிணை- உரையுடன் பின்னத்தூர் நாராயணசாமி 1915 1966
8 குறுந்தொகை- உரையுடன் சௌரிப் பெருமாள் அரங்கன் 1915
9 பரிபாடல்- உரையுடன் உ.வே.சாமிநாதய்யர் 1918
10 அகநானூறு ரா.இராகவய்யங்கார் 1920

சங்க இலக்கிய முதன்முதல் பதிப்புகள் பத்து என்றாலும் ஒரே நூலுக்குப் பல பதிப்பாசிரியர், ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளை உருவாக்குதல், அதாவது மூலம் மட்டும், மூலமும் உரையும், ஒரு பகுதி மட்டும் எனப் பல்வேறு பதிப்புகளைத் தருவதால் சங்க இலக்கிய முதல் பதிப்புகளின் எண்ணிக்கை 160க்கும் மேற்பட்டதாகிறது. சங்க இலக்கியப் பதிப்புகளைக் கொண்டுவரும் முயற்சியில் 1996 வரை 65க்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது. (தி.மகாலட்சுமி, பதிப்பு வரலாறு, சங்க இலக்கியம், ப.448) சங்க இலக்கியப் பதிப்பாசிரியர் அறுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் என்றாலும் தனித்தன்மை வாய்ந்த பதிப்பாசிரியராகவும் தகுதிவாய்ந்த உரையாசிரியராகவும் தனியிடம் பெற்றவர் உரைவேந்தர் என்ற அடைமொழிக்குரிய ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களே. இவர் ஐங்குறுநூறு மூன்று தொகுதிகள், புறநானூறு இரண்டு தொகுதிகள், பதிற்றுப்பத்து ஒரு தொகுதி, நற்றிணை இரண்டு தொகுதிகள் என்று சங்க இலக்கிய எட்டுத்தொகையின் நான்கு நூல்களுக்கு எட்டுத் தொகுதிகளாகப் பதிப்பும் உரையும் செய்துள்ளார்.

ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள்:

ஐங்குறு நூறு

ஒளவை சு.துரைசாமி அவர்கள் முதன்முதலில் பதிப்பித்த சங்க இலக்கியம் ஐங்குறு நூறு- அதிலும் மருதத்திணை மட்டுமே. ஐங்குறு நூறு மருதம் மூலமும் விளக்கவுரையும் என்ற பெயரில் 1938 இல் இந்நூல் அச்சாகி வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர் ‘அவ்வைத் தமிழக மாணவர்’ திரு கா.கோவிந்தன் ஆவார். பின்னர் ஒளவையின் ஐங்குறு நூறு விளக்கவுரைப் பதிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக 1. ஐங்குறு நூறு குறிஞ்சி, பாலை (1957), 2. ஐங்குறு நூறு மருதம், நெய்தல் (1957), 3. ஐங்குறு நூறு முல்லை (1958) என்ற மூன்று தொகுதிகளாகத் தனித்தனியே பதிப்பிக்கப்பெற்றது. 1958 அக்டோபரில் மூன்று தொகுதிகளையும் இணைத்து ஒரே தொகுதியாக ஐங்குறு நூறு மூலமும் விளக்கவுரையும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

ஐங்குறு நூறு முழுமைக்குமான விளக்கவுரை எழுத நேர்ந்தமை குறித்து ஒளவை அவர்களே தம் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“அக்காலை அருள்திரு தம்பிரான் சுவாமி அவர்கள் நூன்முழுதிற்கும் உரையெழுதுமாறு அருளினார்கள். அதன்பின் தொடக்கத்தில் எனக்குத் தமிழ் கற்பித்த சீர்காழி, உயர்திரு கோவிந்தசாமி ரெட்டியார் அவர்களின் ஏட்டுப்பிரதி யொன்று கிடைத்தது. அதன்கண் அச்சுப் பிரதியில் காணப்படாத திருத்தங்களும் சில பாடல்களுக்குரிய குறிப்புரைகளும் காணப்பட்டன. அவற்றை இப்பொழுது ஆங்காங்கே குறித்துக் காட்டியுள்ளேன்”.

புறநானூறு:

புறநானூறு முதன் முதலில் உ.வே.சா. அவர்களால் 1894 இல் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலின் 400 பாடல்களில் முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை கிடைத்துள்ளது. உ.வே.சா. பழைய உரை கிடைக்காத பாடல்களுக்குக் குறிப்புரை தந்துள்ளார்கள். ஒளவை துரைசாமி அவர்களின் உரை விளக்கத்துடன் கூடிய முதல் இருநூறு செய்யுள்கள் அடங்கிய முதல் தொகுதியை 1947 ஆம் ஆண்டிலும் அடுத்த இருநூறு செய்யுள்கள் கொண்ட இரண்டாம் தொகுதியை 1951 ஆம் ஆண்டிலும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர் ஒளவை அவர்கள் எழுதிய உரை தனிப்பெருஞ் சிறப்பு பெற்றதாகும்.

உ.வே.சா.வின் புறநானூறு அச்சுப் பிரதியுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து செப்பம் செய்வதற்கு வாய்ப்பாக அரித்துவார மங்கலம் இராசாளியாரின் விருப்பத்திற்கிணங்க திரு. கிருட்டிணசாமி சேனைநாட்டார் படியெடுத்து வைத்திருந்த புறநானூற்று ஓலைச்சுவடி ஒன்றின் எழுத்துப்படிவம் ஒன்று ஒளவைக்குக் கிடைத்தது. அந்த புறநானூற்று எழுத்துப்படிவமே ஒளவையின் புறநானூற்றுப் பதிப்புக்கு அடிப்படையாய் அமைந்தது. உ.வே.சாவின் அச்சுப்படியையும் சேனைநாட்டாரின் எமுத்துப் படிவத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் முற்பகுதியில் வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை யென்றும் பின்னர் உள்ள 200 பாடல்களில் சில பாடல்களில் அச்சுப்பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும் காணப்பெற்றன என்றும் தம் பதிப்பின் செப்பம் குறித்துக் குறிப்பிடுகின்றார் ஒளவை அவர்கள்.

பதிற்றுப்பத்து:

பதிற்றுப்பத்தினை முதன்முதலாக உ.வே.சா அவர்கள் 1904 இல் பழைய உரையுடன் பதிப்பித்தார்கள். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பதிற்றுப்பத்தினை ஒளவை அவர்கள் பாடஞ்சொல்லும் சமயத்தில் இதற்கொரு விளக்கவுரை இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணி நண்பர்கள் சிலர் வாயிலாகப் பதிற்றுப்பத்து ஏடுகள் இரண்டினைப் பெற்று உ.வே.சாவின் அச்சுப்படியினையும் தமக்குக் கிடைத்த இரண்டு பதிற்றுப்பத்து ஏட்டுப்பிரதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள். ஒப்பிட்டு ஆராய்ந்ததில் சில பாடவேறுபாடுகளும் சில பாடங்களில் காணப்பட்ட ஐயங்களுக்குத் தெளிவும் கிடைத்தன என்பார் ஒளவை அவர்கள். ஒளவை உரை எழுதுவதை அறிந்த அவருடைய ஆசிரியர் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, பதிற்றுப்பத்துக்குத் தாம் எழுதி வைத்திருந்த உரையையும் ஒளவை துரைசாமிக்குத் தந்துதவினார்.

ஒளவை எழுதிய உரையை நேரில் கண்டு ஊக்கப்படுத்திய அவருடைய மற்றொரு ஆசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பதிற்றுப்பத்தின் பதிகங்கங்கள் ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டாமென்றும் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இடம்பெறும் ‘எரியன்ன நிறத்தன்’ என்னும் பாடலைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளாகக் கோத்து உரையெழுதுமாறும் அறிவுறுத்தினார். ஒளவை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே தம் பதிற்றுப்பத்து விளக்கவுரை நூலைப் பதிப்பித்தார். ஒளவை சு.துரைசாமியின் இப் பதிற்றுப்பத்து பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக 1951 இல் வெளிவந்தது. பதிகங்களுக்கு ஒளவை உரையெழுதாத காரணத்தால் கல்வெட்டு ஆய்வறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பெற்ற பதிற்றுப்பத்தும் பதிகங்களும் எனும் தலைப்பிலான ஆய்வுரை ஒன்று நூலில் இணைக்கப் பெற்றுள்ளது.

நற்றிணை:

நற்றிணையை முதன்முதலில் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் அவர்கள். ஏட்டுச்சுவடியிலிருந்த இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சுக்குக் கொண்டு வந்தவர் அவரே. ஐங்குறு நூறு மருதத்திணைக்கு ஒளவை அவர்கள் எழுதிய விளக்கவுரையைக் கண்ட பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ஒளவையை நேரில் சந்தித்து அவரின் உரைநலத்தைப் பாராட்டியதோடு அமையாது தம்மிடமிருந்த நற்றிணை ஏட்டுப்பிரதியினை ஒளவைக்குக் காட்டி இந்நூலையும் நீங்கள் ஆராய்ந்து விளக்கவுரையுடன் பதிப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நற்றிணை ஆராய்ச்சிக்குத் துணைசெய்த ஏடுகளாகப் பின்வரும் நான்கு ஏடுகளை ஒளவை தம் நற்றிணைப் பதிப்பு முன்னுரையில் குறித்துள்ளார்கள்.
1. அரசினர் கையெழுத்து நூல் நிலைய ஏடு.
2. மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏடு.
3. டொம்மிச்சேரி கருப்பையாத் தேவர் ஏடு.
4. புதுப்பட்டி சிவ.மு. முத்தையா செட்டியார் ஏடு.
மேலும் நற்றிணைக்கு புதியதோர் விளக்கவுரைப் பதிப்பொன்றினைத் தாம் எழுதி வெளியிட நேர்ந்தமைக்கான காரணங்களாக ஒளவை அவர்கள் முன்னுரைப் பகுதியில் குறிப்பிடும் செய்திகள் இன்றியமையாதன.

“இவ்வேடுகளை உடன்வைத்து ஆராய்ந்ததில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பாடவேறுபாடுகளும், பெயர் தெரியாதிருந்த பல பாட்டுக்களின் ஆசிரியர் பெயர்களும் தெரியவந்தன. சில ஆசிரியர்களின் பெயர்களும் திருத்தமடைந்தன. அவற்றின் உண்மை வடிவு காண்டற்கும் ஆசிரியர் பெயர்களிலும் பாட்டுக்களிலும் காணப்படும் ஊர்களை அறிதற்கும் அரசியலார் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதிகளும் ஆண்டறிக்கைகளும் போதிய துணைபுரிந்தன. ஏடுகளை ஒப்பு நோக்கியபோது காணப்பட்ட பாடவேறுபாடுகளால் பாட்டுகட்கு உரையே வேறு எழுதவேண்டிய இன்றியமையாமை பிறந்தது. அதனால் எனது இப்பதிப்பு நற்றிணை மூலத்தோடு விளக்கவுரை பெற்று வெளிவருகிறது.” (ஒளவை, முன்னுரை, நற்றிணை, மு.தொ., ப.ஐஓ-ஓ)

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்) பகுதி-2

ஒளவை சு.துரைசாமி பிள்ளை பதிப்புகள் (சங்க இலக்கியம்)
பகுதி-2


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கா.மா.பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

பதிப்பு நோக்கம்:

ஒளவை சு. துரைசாமி அவர்கள் சங்க இலக்கியங்களில் ஐங்குறு நூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய நான்கு நூல்களுக்கே புதிய பதிப்பு முயற்சி மற்றும் விளக்கவுரை காணும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். நுண்மாண் நுழைபுலமிக்க ஒளவை அவர்கள் சங்க இலக்கியங்கள் முழுவதற்கும் விளக்கவுரை கண்டிருப்பார்களேயானால் சங்க இலக்கியங்களுக்கு அவ்வுரைகள் மணிமகுடம் போல் விளங்கியிருக்கும் என்பதில் ஐயமொன்றுமில்லை.
ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்பு நூல்களின் முதன்மை நோக்கம் புதிய விளக்கவுரையோடு நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்பதே ஆகும். மேற்கூறிய நான்கு நூல்களின் முன்னுரையையும் ஒப்பிட்டுக் காண்பவர்களுக்கு இக்கருத்து எளிதில் விளக்கம்பெறும். உரைகாணும் முயற்சியில் ஈடுபட்ட ஒளவை அவர்களுக்கு இளமைக் காலம் முதலே ஏடுகளைப் படித்தல், படியெடுத்தல் முதலியவற்றில் பயிற்சி இருந்ததனால் ஒத்த ஏடுகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பாடபேதம், மூலத்தின் விடுபாடுகளைக் கண்டறிதல் முதலான பணிகள் எளிமையாயின. எனவே ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையைப் பெறுகின்றன.

ஒளவை சு.துரைசாமியின் சங்க இலக்கியப் பதிப்புகளின் தனித்தன்மைகள்:
உரைவேந்தர் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் யாவும் விளக்கவுரைப் பதிப்புகள் என்ற தனித்தன்மையோடு எளிய, இனிய, தனித்தமிழ்ப் பதிப்புகள் என்ற பெருமையினையும் பெற்றனவாகும். தமது பதிப்புகளில் ஒவ்வொரு செய்யுளுக்கும் முன்னுரை, உரை, உரை விளக்கம் என்னும் மூன்று பகுதிகளை அமைத்து ஒரே சீர்மைமிக்க கட்டமைப்போடு விளக்கவுரையினை அமைக்கின்றார் ஒளவை அவர்கள். புறநானூற்றுப் பதிப்பு இரண்டாம் பகுதி முன்னுரையில் ஒளவை தம் விளக்கவுரை பற்றிக் குறிப்பிடுவன பின்வருமாறு,
“முதற்பகுதி போல இவ்விரண்டாம் பகுதியிலும் ஒவ்வொரு பாட்டுக்கும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை, உரை விளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன. பாடவேறுபாடுகளும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் அவ்வப் பாட்டின் உரை விளக்கம் முதலிய பகுதிகளில் குறிக்கப் பெற்றிருக்கின்றன. சங்கச் சான்றோர்களைப் பற்றிக் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.” (ஒளவை, புறம். இ.தொ., முன்னுரை, ப.எiii)
உரைவேந்தரின் இம்முன்னுரைப் பகுதி அவர் உரையின் கட்டமைப்பினைத் தெளிவாக உணர்த்துகிறது.

பாடலின் முன்னுரை: இப்பகுதியில் பாடிய புலவரின் வரலாறு, புலவர் பெயர் ஆராய்ச்சி, புலவரின் ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள், புலவர் பெயர் குறித்த பாடபேதங்கள் முதற் பகுதியாகவும், பாடப்பட்டோர் வரலாறு, பெயர் ஆராய்ச்சி, ஊர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி, கல்வெட்டு முதலான சான்றுகள் இரண்டாம் பகுதியாகவும், பாடல் செய்தி மற்றும் பாடல் தோன்றுவதற்குரிய சூழ்நிலை, பாடல் பொருளைத் துறைக் குறிப்புகளோடு பொருத்திக் காட்டுதல் முதலானவைகள் மூன்றாம் பகுதியாகவும் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் அமைத்துக்காட்டும் ஒளவையின் திறம் பாடல் கருத்தில் படிப்போர் உள்ளம் தோய்வதற்கு வழியமைத்துத் தந்துவிடும்.

“செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்றுதற்குரிய சூழ்நிலையினையும் உள்ளத்து உணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் புனைந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முறை படிப்போருள்ளத்தில் பாடல் பொருளை நன்கு பதியும்படி செய்யும். மேலும் இவ்வாசிரியர் பாடற்பொருளைத் துறைக் குறிப்புடன் இயைத்துரைக்கும் முறை பெரிதும் சுவை பயப்பது.” (அ.சிதம்பரநாத செட்டியார், அணிந்துரை, புறம். இ.தொ., ப.ஒiii).

புறநானூறு இரண்டாம் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய அ.சிதம்பரநாத செட்டியார் அவர்களின் மேற்குறித்த கூற்று உரைவேந்தர் ஒளவையின் பாடல் முன்னுரையின் சிறப்பினைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகும்.

உரை: பாடலுக்கு உரை காண்பதிலும் ஒளவை படிப்போர்க்கு சுமையேற்றாத எளிய இனிய உத்தியினைக் கையாளுகின்றார். கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைப்பது போலப் பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைக்கும் முறையினைப் பின்பற்றுகின்றார் ஒளவை. இவ்வுத்தி பழைய உரைகாரர்களில் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கையாண்ட உத்தியாகும். இவ்வுத்திக்குப் பாடலின் கண்ணழித்துப் பொருள் கூறுதல் என்று பெயர். பழைய உரையுள்ள பாடல்களுக்கு உரைகூறும் இடத்திலும் நீண்ட பழைய பொழிப்புரைகளை இம்முறைக்கேற்ப மாற்றி அமைக்கின்றார். அதாவது பாடலைத் தொடராகப் பிரித்து, அத்தொடருக்குரிய பழைய உரையைத் தக்க இடத்தில் பொருத்தி, பாடற் பொருள் எளிதாக விளங்கும் வகையில் உரை அமைக்கின்றார்.

உரை விளக்கம்: செய்யுள் உரைக்கு அடுத்து ஒளவை அவர்கள் அமைக்கும் பகுதி, உரை விளக்கம் என்பதாகும். இப்பகுதியில் பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினைமுடிபுகளைச் சுட்டி, பாடல்பொருளின் திட்ப நுட்பங்களை விளக்குவதோடு அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்பு படுத்துதல் முதலான விளக்கங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இவ்விளக்கவுரைப் பகுதியில் உரிய பாட வேறுபாட்டைத் தெரிவு செய்தல், பழைய உரையில் பொருந்தாததை மறுத்தல், கல்வெட்டுச் சான்றுகள் தந்து தம் கருத்தை நிறுவுதல், அறிவியல் கருத்துக்களை மேற்கோள் காட்டிப் புதிய விளக்கங்களைத் தருதல், அரிய செய்திகளைப் பதிவுசெய்தல், சொற்பொருள் விளக்கம் கூறல், இலக்கணச் சான்றுகள் தந்து விளக்கவுரை அமைத்தல் போன்ற பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு விளக்கவுரைப் பதிப்புக்கு அணி சேர்க்கின்றார் ஒளவை அவர்கள்.

ஒளவை அவர்களின் பதிப்புப் பணியில் விளக்கவுரையே முதன்மை பெற்றாலும் தமது ஒவ்வொரு பதிப்பையும் ஒன்றுக்கு மேற்பட்ட சுவடிகளுடன் ஒப்பிட்டு பாடவேறுகளை ஆராய்ந்து உரிய பாடத்தைத் தேர்வு செய்து பதிப்பிப்பதிலும், பெயர் மற்றும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கல்வெட்டு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு நிறுவுவதிலும் உரைவேந்தர் தீவிரக்கவனம் செலுத்துகின்றார். இவர் பதிப்பின் தனித்தன்மைகளில் இக்கூறே தலையாயது. பாடல் முதல்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல் முதலான அடைவுகளைத் தயாரித்து இணைப்பதில் உ.வே.சா. அவர்களின் பதிப்பை ஒத்தே ஒளவை செயல்படுகின்றார். ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகளை ஆராய்ந்ததில் அவர் கையாளும் பதிப்பு நெறிமுறைகளாகப் பின்வருவற்றைச் சுட்டலாம்.

ஒளவை சு.துரைசாமி பதிப்பு முறைகள்:

1. பாட வேறுபாடுகளைக் குறிப்பிடுதல்.
2. பாடியோர் பெயர் வேறுபாடுகளைச் சுட்டல்
3. உரிய பாடவேறுபாடுகளைத் தெரிவு செய்தல்.
4. எளிய இனிய தனித்தமிழ்நடையில் உரை எழுதுதல்.
5. விடுபட்ட பாடலடிகளைப் புதிய ஏட்டுச்சுவடிகளின் துணையோடு சேர்த்தல்.
6. மயக்கம் தரும் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்தல்.
7. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் முன்னுரை கூறல்.
8. பாடலின் முன்னுரைப் பகுதியில் பாடியவர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, பாடல்செய்தி, பாடல் உருவான சூழல், பாடல் பொருளைத் துறைக் குறிப்புடன் பொருத்திக் காட்டுதல்.
9. பாடியோர், பாடப்பட்டவர் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி மற்றும் பெயர் ஆராய்ச்சி.
10. ஊர் பற்றிய குறிப்புகள் வரும்போது இப்போது அவ்வ+ர் எங்கே, எப்பெயரில் அழைக்கப்படுகிறது எனக் குறிப்பிடல்.
11. கல்வெட்டு, செப்பேடு முதலான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு முடிவுகூறல்.
12. பாடலைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் கூறும் முறை.
13. உரைக்குப் பின்னர் உரை விளக்கம் கூறும் முறை.
14. உரை விளக்கத்தில் பாடலின் வினைமுடிபுகளைச் சுட்டல், அருஞ்சொல் பொருள் கூறல், ஒப்புமை காட்டல், இலக்கண விளக்கம் தருதல், வரலாற்றுச் செய்திகள் மற்றும் அறிவியல் செய்திகளோடு பொருத்திக்காட்டுதல், பொருந்தாத உரைகளை மறுத்தல்.
15. நூலின் முன்னும் பின்னும் உரிய அடைவுகளை இணைத்தல்.
16. பதிப்புரை, முன்னுரை, அணிந்துரை, பாடினோர் வரலாறு, செய்யுள்களின் கூற்றுவகைப் பகுப்பு முதலான பகுதிகளை நூலின் முன்னே இணைத்தல்.
17. பாட்டு முதற்குறிப்பு அகரநிரல், அருஞ்சொல் தொடர் அகரநிரல், மேற்கோள் விளக்க அகரநிரல் (சுருக்கக் குறியீட்டு விளக்கம்) முதலான அடைவுகளை நூலின் பின்னே இணைத்தல்.

ஒளவை சு.துரைசாமி சங்க இலக்கியப் பதிப்புகள் ஒரு சிறப்புப் பார்வை:

ஒளவை அவர்களின் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் அளவிட முடியாதது. சங்க இலக்கியங்கள் மீது அவர் மிகுந்த மதிப்பும் பற்றும் கொண்டிருந்தார்.
“மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம். மக்கள் தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம். புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணிவளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும் செல்வரும் அம்மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து முத்தமிழ் வளர்த்த பெருமைக்காலம்” (மேற்கோள், சாம்பசிவனார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, ப.15)

என்று சங்ககாலம் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் கருத்துரைக்கும் ஒளவையின் மேற்கோளிலிருந்து அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் ஊகிக்க முடியும். இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் கட்டமைத்த தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்த சிந்தனைகளையே ஒளவையின் கருத்து எதிரொலிப்பதாக நாம்கொள்ள முடியும். சங்க இலக்கியப் பதிப்புகள் முழுமையாக வெளிவந்த நிலையில் ஆரிய, வடமொழி மேலாதிக்கத்திற்கு எதிர்வினையாக தமிழர் பழம்பெருமையை வலியுறுத்தும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் முன்மொழியப்பட்டன. இக்குரலைத்தான் ஒளவையின் மேற்கோளில் நாம் கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியதிலிருந்து, தமிழர்க்குத் தம் தாய்மொழியாம் தமிழில் உணர்ச்சி பிறந்தது. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்பதில் ஆர்வம் எழுந்தது. தமிழில் கலைகளென்றால் புராண இதிகாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் மிகுதியாக நிலைப் பெற்றிருந்த இந்த நாட்டிலே, சங்க இலக்கியங்கள் வெளிவந்துலாவின. அவற்றின் கருத்தை மக்களிடம் வளர்க்கப் பலரும் வேலை செய்தனர். ஒளவை அவர்களும் 1938 இல் கட்டாய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வலுத்தபோது அப்போராட்டங்களுக்குத் துணைநின்ற காரணத்தால் அன்றைய ஆட்சியாளர்களால் பல ஊர்களுக்கும் பணிமாற்றல் ஒறுத்தல் என்ற அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். (கு.சிவமணி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள், ப.301)

சங்க இலக்கியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரிய முயற்சியைத் திராவிட இயக்கம் முன்னின்று நடத்தியது. தங்களின் சமூக அரசியல் நோக்கங்களுக்குச் சங்க இலக்கியங்கள் சுட்டும் வளமார்ந்த சமூகச் சித்திரங்கள் பெரிதும் பொருந்திவரும் என்பதை அவர்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டார்கள். சி.என். அண்ணாத்துரை இதனை ஒரு வேண்டுகோளாகவே தமிழ் அறிஞர்களுக்குப் பிறப்பித்தார்.

“நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும் வேலிகள் அமைத்து இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் தடுப்புச் சுவரை எழுப்பி வைத்துக்கொண்டு உள்ளே ஆடுது காளி, வேடிக்கைப் பார்க்க வாடி என்பது போலத் தொல்காப்பியத்தைப் பாரீர், அதன் தொன்மையைக் காணீர் என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாட விடவேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறு சிறு பிரதிகள் மூலம். இன்றைய புலவர்கள் உண்மையிலேயே இனிமையையும் எளிமையையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களானால் சங்க காலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை என்பதை நினைக்கும் பொழுதுதான் அவர்கள் இவ்வளவு நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல, துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.” (சி.என். அண்ணாத்துரை, ஏ தாழ்ந்த தமிழகமே, பக்: 9)

இத்தகு அரசியல் பின்புலத்தில் ஒளவை அவர்களின் பதிப்பு முயற்சிகளை நாம் மதிப்பிட வேண்டும். இவரின் சங்க இலக்கியப் பதிப்புகளில் சிறப்பிடம் பெறும் பாடலுக்கான முன்னுரைப் பகுதி முழுக்க முழுக்கத் தமிழ்த் தேசிய அரசியல் பார்வையுடையது. அதனால்தான் அம்முன்னுரைப் பகுதியை ஒரு கதை போலப் புனைந்துரைத்து ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையோரும் சங்க இலக்கியப் பொருள் நலங்களைத் தெளிவாக உணர்ந்து இன்புறும்படி செய்கின்றார். இவ்வுத்தி பழைய பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் யாரும் செய்யாதது, செய்யத் துணியாதது.

ஒளவை அவர்களின் புறநூனூறு முதல் தொகுதிக்கு முன்னுரை வரைந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இத்தகு அரசியல் நிலைப்பாடு குறித்தும் அதற்கு ஒளவையாரின் உரைகள் பயன்படும் என்பது குறித்தும் வெளிப்படையாகவே கருத்துரைத்துள்ளார்கள்.

“இந்நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும். .. .. ஆந்திரரும் கன்னடரும் கேரளரும் மொழிவகையிலும் நடைவகையிலும் எத்துணை வேற்றுமை மேற்கொள்ளினும் உள்ளத்து எண்ண வகையால் தமிழராய் வாழ்வது இனிது விளங்கித் தோன்றி நிற்கிறது. இவர்களது தொன்மையும் பண்பாடும் இனிது காண்டற்கண் இப்புறநானூறு முதலிய தொகைநூல்கள் மிகுதியும் பயன்படுகின்றன. .. .. இனி, இவ்வேற்றுமை (ஆந்திரர், கன்னடர், கேரளர் என்ற வேற்றுமை) யொழிதற்கும், ஆந்திரர் முதலியோர் தமிழரென ஒன்றுபட்டு வாழ்ந்து சிறத்தற்கும் இவரனைவரும் கூடிய ஒருமையரசியல் வகுத்து அரசியல் தனியுரிமை வாழ்வு பெறவேண்டும் எனும் முயற்சி ஒருபால் நிலவுகிறது. .. .. அரசியல் ஆக்க முயற்சிகளுள் கலந்து தமிழரசியலில் பணிபுரிய விரும்புவோர்க்கு இப்புறநானூறு முதலிய தொகை நூல்களின் அறிவு இன்றியமையாததாகும்”. (கழகத்தார், புறநானூறு, முன்னுரை பக். 4-5)

மேலே காட்டப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் முன்னுரையில் தனித் திராவிட நாடு அடையும் அரசியல் முயற்சி குறித்த நம்பிக்கையும் அதற்கு சங்க இலக்கியங்கள் குறிப்பாக, புறநூனூறு மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையும், அத்தேவைக்கு உரைவேந்தர் ஒளவையின் பதிப்பும் உரையும் பயன்படும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதை நாம் உணரமுடியும்.

ஒளவை சு.துரைசாமி அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகளின் எளிமையும் இனிமையும் அவரின் அரசியல் நிலைப்பாட்டின் ஓர் அங்கம். ஊர்ப்பெயர்கள் குறித்து ஒளவை காட்டும் தீவிர ஈடுபாடு சங்க இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களாக்க முயலும் முயற்சியின் ஒரு பகுதியே. அவரின் பாடலுக்கான முன்னுரைப் பகுதி பண்டிதர்களுக்கானதன்று. தமிழ்கற்ற பொதுமக்களுக்கானது. இத்தகு குறிக்கோளோடு இயங்கும் ஒளவையின் சங்க இலக்கியப் பதிப்புகள் உரிய இலக்கை அடைந்துள்ளன என்பது தமிழர்க்கு நிறைவளிக்கும் செய்தி

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...