வெள்ளி, 21 டிசம்பர், 2007

வலைப்பதிவு செய்யலாம் வாங்க...வலைப்பதிவு செய்யலாம் வாங்க...

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

 

உலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம், உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள், இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு, பல்ஊடகத் தொழில்நுட்பம், வேகம், உலக மொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் இணையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைகள். இணையம் வழங்கும் மின் அஞ்சல், இணைய அரட்டை, இணைய வணிகம், கோப்புகள் பரிமாற்றம் (F.T.P.) முதலான பல்வேறு சேவைகளில் அதிக கவனத்தைப் பெற்றது உலகளாவிய வலைத்தளச் சேவை www என்றழைக்கப்படும் World Wide Web சேவையாகும். வலைத்தளச் சேவையின் ஒரு பிரிவாகத் தோற்றம் பெற்று இன்றைக்குத் தனித்ததொரு இணையச் சேவையாகப் புகழ் பெற்றிருப்பதுதான் வலைப்பதிவுகள் என்றழைக்கப்படும் Blogs ஆகும்.
Blog என்ற சொல் Web - log என்ற இரண்டு சொற்களின் சுருங்கிய வடிவம் ஆகும்.

இணையத்தில் வலைப்பதிவுகள் தொடர்பாக அடிக்கடி பயன்படுத்தப்படும் சில சொற்கள் இதோ.
வலைப்பதிவு : Blog -(பெயர்ச்சொல்) இணைய வலைப்பதிவு
வலைப்பதிவு ஆசிரியர் : Blogger -(பெயர்ச்சொல்) வலைப்பதிவு எழுதுபவர்.
வலைப்பதிவு எழுது : Blog -(வினைச்சொல்) வலைப்பதிவில் எழுது.
வலைப்பதிவு எழுதுதல் : Blogging -(வினைச்சொல்) வலைப்பதிவில் எழுதுதல்.

வலைப்பதிவு என்பது தனிநபர்கள் அல்லது ஒரு குழு, தினமும் தங்கள் கருத்துக்களைப் பதிந்து வைக்கும் இடம் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது. கருத்துக்களை அல்லது படைப்புகளைப் பதித்தல் என்ற நிலை வளர்ச்சி பெற்று இணையப் பயனாளர்களின் பார்வைக்கு வைத்தல் என்ற மாற்றம் பெற்றது. பின்னர் அந்தப் பதிவுகளே இதழ் போன்ற ஒரு வகை ஊடகமாகப் பரிமாணம் பெற்றுப் பலரின் பார்வைக்கும் அவர்களின் பின்னூட்டத்திற்கும் தொடர்ந்த விவாதங்களுக்கும் இடமளித்து வலைப்பதிவுகள் என முழுமை பெற்றன..
தினமும் ஆயிரக் கணக்கானோர் தங்கள் கருத்துக்களை / படைப்புகளைத் தங்கள் தாய்மொழியிலேயே வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். பல்வேறு புகழ்பெற்ற இணைய தளங்கள் வலைப்பதிவுச் சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. கணினி பற்றிய தொழில் நுட்பம் தெரியாதவர்கள் கூட உருவாக்கிக் கொள்ளும் வகையில் வலைப்பதிவுகள் எளிமையானவை. ஒருவர் வலைப்பதிவுகள் குறித்த முழுமையான அறிமுகத்தைப் பெற வலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.
வலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு முன் வலைப்பதிவு முகவரி (URL) பற்றித் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். வலைப்பதிவைத் தொடங்குவதில் முதல்கட்டப் பணி வலைப்பதிவுச் சேவையை இலவசமாக வழங்கும் இணையதளத்தில் நமக்கான வலைப்பதிவு முகவரியைப் பதிவு செய்தல். நாம் பதிவு செய்யும் பெயர் ஏற்கனவே உபயோகத்தில் இல்லையென்றால் உடனே அனுமதி கிடைத்துவிடும். அனுமதிக்கப்பட்ட அந்தப் பெயரோடு வலைப்பதிவு சேவை வழங்கும் இணையதளத்தின் பெயரும் சேர்த்து குறிப்பிடப்படும். சான்றாக என்னுடைய வலைப்பதிவு முகவரிக்கான பெயர்: nailango. என்னுடைய வலைப்பதிவு முகவரி: nailango.blogspot.com என்பதாகும். பெயருக்குப் பின்னால் இடம் பெறும் blogspot.com என்பது வலைப்பதிவுச் சேவையை வழங்கும் இணையதளத்தின் பெயர்.

வலைப்பதிவின் அமைப்பு:
ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1.வலைப்பதிவுத் தலைப்பு.
2.வலைப்பதிவு முகப்பு.
3.பதிவின் தலைப்பு.
4.பதிவின் உடல்பகுதி.
5.பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்.
6.பின்னூட்டங்கள்.
7.சேமிப்பகம்.
8.இணைப்புகள்.
9.வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள்.

-மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறு சில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம் பெறுவதுண்டு.

மலையருவி கவிதைகள் என்ற வலைப்பதிவின் படம் சான்றுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

1. வலைப்பதிவுத் தலைப்பு (Title):

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும்.

2. வலைப்பதிவு முகப்பு (Description):

வலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம் பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (Lead) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும்.

3. பதிவின் தலைப்பு (Title of the Post):

வலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா? என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

4. பதிவின் உடல்பகுதி (Post):

வலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.

5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் (Date, Time, Author Stamp):

சில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவு செய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவு செய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ > at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

6. பின்னூட்டங்கள் (Comments):

வலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம் பெற்றிருக்கும். அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவு செய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

7. சேமிப்பகம் (Archives):

வலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம் பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும். வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக் கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)> November (7) என்று பட்டியலிடப் பட்டிருப்பதைக் காணலாம்.

8. இணைப்புகள் (Links):

ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ, வலைப்பதிவுகளையோ நாம் பார்வையிடலாம்.

9. வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் (Page Elements):

வலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template) வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

10. வலைப்பதிவின் பிற பகுதிகள்:

வலைப்பதிவரின் HTML அறிவு மற்றும் தேவைகளைப் பொறுத்து வலைப்பதிவுகளில் வேறு பல பகுதிகளையும் இணைப்பதுண்டு. சான்றாக, வலைப்பதிவுகளைப் பார்வையிட்டவர்கள் பற்றிய தகவல்கள் தரும் வலைத்தளங்களை இணைப்பது. வலைப்பதிவுத் திரட்டித் தளங்களை இணைப்பது, வலைப்பதிவுகளை அழகூட்டுவது இன்ன பிற வசதிகளை வலைப்பதிவுகளில் இணைத்துக் கொள்வதும் நடைமுறையில் உண்டு.
மேலே குறிப்பிடப்பட்ட வலைப்பதிவின் அமைப்பு மற்றும் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் வலைப்பதிவுகள் குறித்த அறிமுகமாக அமையும்.

முடிப்பாக :

கணிப்பொறி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ, குழுவாகவோ பல வலைப்பதிவுகளை உருவாக்கிப் பயன்படுத்தப் போகும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும். வலைப்பதிவுகள் இலவசச் சேவையாக வழங்கப்படுவது மட்டுமே அதன் பரவலுக்கும் பயன்பாட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ?


" வாருங்கள் ... வலைப்பதிவு செய்யலாம்..."

திங்கள், 17 டிசம்பர், 2007

தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாய் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே!

வழக்காடுமன்றம்
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாய் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே!

முனைவர் நா.இளங்கோஇணைப்பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

நடுவர் : பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்

வழக்குத் தொடுப்பவர் : சீனு.வேணுகோபால்

வழக்கை மறுப்பவர் : முனைவர் நா.இளங்கோ.

வழக்கை மறுத்துரைத்து வாதிட்டமுனைவர் நா.இளங்கோ அவர்கள் பேச்சின் சுருக்கம்.

மாண்பமை நடுவர் அவர்களே!
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாய் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே! என்ற வழக்கினை இந்த மன்றத்தில் பதிவு செய்து ஆவேசத்தோடும் ஆற்றலோடும் பேசி அமர்ந்திருக்கின்ற சீனு. வேணுகோபால் அவர்களின் மொழிப் பற்றிற்கு நான் தலை வணங்குகிறேன். அவர் புதுச்சேரியை மையப்படுத்தி இந்த வழக்கைப் பதிவுசெய்தார். அவரின் ஆதங்கத்தை என்னால் உணர முடிகின்றது. ஆனால், வழக்குரைஞர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி ஒரு முழுமையான மாநிலம் அல்ல. இது மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஒரு ய+னியன் பிரதேசம். இங்கே இருக்கும் சட்டசபையோ, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களோ முழுமையான அதிகாரம் படைத்தவர்கள் அல்லர். புதுவையின் ஆட்சி அதிகாரம் இரண்டுமே மேதகு துணைநிலை ஆளுநர் மற்றும் அரசுச் செயலர்கள் வசம்தான் உள்ளன.

வழக்குரைஞர் வேணுகோபால் அவர்களே!
நீங்கள் குறிப்பிடும் ஆட்சியாளர்கள் யார்? என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் அமைச்சர்கள்தான் நீங்கள் குறிப்பிடும் ஆட்சியாளர்கள் என்றால், உங்கள் குற்றச்சாட்டு பலவீனமாகப் போய்விடும். ஏனென்றால் இந்த ஆட்சியாளர்கள் அதிகாரமற்றவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் நம் தாய்மொழியாம் தமிழுக்குப் பகைவர்கள் என்பதை ஒரு வாதத்திற்காகக் கூட என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நம் சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். நம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே சொல்லாலும் செயலாலும் நம் தாய்த்தமிழின் நலம் நாடுபவர்கள். அவர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பதையோ செயல்படுவதையோ விரும்பமாட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம் ஓட்டளிக்க வேண்டிய மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு அந்த அவப்பெயரால் அடுத்த தேர்தலுக்கான வெற்றி வாய்ப்பை இழக்க அவர்கள் யாருமே விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு மற்றெல்லாவற்றையும் விட மக்களின் ஓட்டு மிக மிக முக்கியம்.

நீங்கள் குறிப்பிடும் ஆட்சியாளர்கள், துணைநிலை ஆளுநர் மற்றும் அரசுச் செயலர்கள் என்றால் அப்போதும் உங்கள் குற்றச்சாட்டு மேலும் பலவீனமாகிப் போகும். ஏனென்றால் புதுச்சேரியைப் பொருத்தவரை இத்தகு ஆட்சியாளர்கள் பெரிதும் பிற மொழியாளர்களாகவே அமைந்து விடுகின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்கள். இவர்களுக்கு நம் தாய்மொழியாம் தமிழின் பெருமையும் வரலாறும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் ஷஒரு மாநிலத்தில் பணியாற்றும் அரசுச் செயலர்கள் அந்த மாநில மொழியைக் கற்று அம்மாநில மக்களின் மொழியிலேயே நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த நம் புதுவைக்கு வலிமையில்லை.

அக்கறை உள்ளவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை.

உண்மையிலேயே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு யார் தடை? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழகத்தைப் பொருத்த வரை தாய்மொழிவழிக் கல்வி பரவ, நாம் விடுதலை பெறுவதற்கு முன்னிருந்தே முயற்சி செய்து வருகிறோம். தாய்மொழிவழிக் கல்வி தொடர்பாக நாம் எடுக்காத மாநாடுகள் இல்லை. நடத்தாத ஊர்வலங்கள் இல்லை. எழுப்பாத முழக்கங்கள் இல்லை. நாடு விடுதலை பெற்றது முதல் தமிழகத்தை ஆண்ட அரசுகள் போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பது ஒருவகையில் உண்மை என்றாலும் முழுமையான காரணம் அவர்களல்லர்! நாமே முழுமுதற் காரணம், நம்மிடத்துள்ள தாழ்வு மனப்பான்மை, அறியாமை, அச்சம் இவைகளே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இதுநாள் வரை தடைகளாக இருந்து வந்துள்ளன.

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழன் தழிழர்களை ஆண்ட காலங்கள் குறைவு. சங்கம் மருவிய காலம் தொடங்கி நாடு விடுதலை பெற்றதுவரை கிட்டத்தட்ட பதின்மூன்று நூற்றாண்டுகள் தமிழகம் அந்நியர் ஆட்சியிலேயே இருந்திருக்கின்றது. ஆட்சி மொழியாகவும் அந்நிய மொழிகளே இருந்திருக்கின்றன.களப்பிரர் காலத்தில் பாலி மொழியும் சமஸ்கிருதமும், பல்லவர் காலத்தில் பிராகிருதமும் சமஸ்கிருதமும் ஆதிக்கம் பெற்றன. சோழர்காலத்தில் தமிழ், ஆனால் செல்வாக்கு பெற்ற மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. நாயக்கர் காலத்தில் தெலுங்கும் சமஸ்கிருதமும், மராட்டியர் காலத்தில் மராட்டி, மொகலாயர் காலத்தில் பாரசீகம், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம், புதுவையில் பிரஞ்சியர் ஆட்சியில் பிரஞ்சு என்று தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகத் தமிழுக்கு இடமில்லாத அவலநிலை. ஆங்கிலேயர் ஆட்சியில் புதிய கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது நம்மைப் பிடித்த ஆங்கிலவழிக் கல்வி இன்று வரை தொடர்கிறது.

பிற இனத்தவர்களின் வேட்டைக்காடாகிய தமிழகம் கடந்த காலங்களில் இழந்தவைகள் எத்தனையோ. ஆட்சியை இழந்தோம், மொழியை இழந்தோம், பண்பாட்டை இழந்தோம். வந்தேறிகளின் வாய்மொழியில் மயங்கி சுயமரியாதை அற்றுத் தாழ்வு மனப்பான்மையால் தகவறியாது திகைத்து நிற்கிறோம். தமிழனின் பண்பாட்டை ஆரியத்திடமும், தமிழனின் கல்வியை, ஆட்சியை ஆங்கிலத்திடமும் பறிகொடுத்து விட்டுப் பரிதவித்து நிற்கிறோம். நாடு விடுதலை பெற்றபின், ஆங்கிலேயன் செயற்கையாகப் பிணைத்து வைத்த இந்தியா என்ற சிறைக்குள் சிக்கிக் கொண்டோம். இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பது மறக்கடிக்கப்பட்டு ஒரே நாடு என்ற போலி முழக்கத்தால் இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு ஆளானோம்.

வழக்குரைஞர் வேணுகோபால் அவர்களே!
நீங்களே குறிப்பிட்டீர்கள், ஆட்சியாளர்கள் தமிழின் வளர்ச்சிக்காகப் பல்வேறு சட்டங்களைப் போட்டுள்ளார்கள் என்று. ஆட்சி மொழிச் சட்டம். பெயர்ப் பலகை ஆணை, தமிழில் ஒப்பமிடும் ஆணை என்று பல சட்டங்களை ஆண்டு வாரியாகக் குறிப்பிட்டு உங்கள் வாதத்தை வைத்தீர்கள். நான் கேட்கிறேன் இந்தச் சட்டங்களை ஏன் நம் தமிழர்கள் பின்பற்றவில்லை? தமிழ்வளர்ச்சி தொடர்பான பல போராட்டங்களைத் தமிழ் ஆர்வலர்கள் நடத்தியும் மக்களிடத்தில் ஏன் விழிப்புணர்வு இல்லை? தமிழ் தொடர்பான போராட்டங்களின் போது தமிழ் மக்களின் ஆதரவு இல்லை என்பதோடு அவர்களின் கேலிக்கும் கிணடலுக்கும் தமிழன்பர்கள் ஆளாவது ஏன்? யோசித்தீர்களா?பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்ற மறுப்பவன் யார்? தமிழில் கையெழுத்துப் போட மறுப்பவன் யார்? குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதைக் கேலி செய்பவன் யார்? ஆலயங்களில் வடமொழி அர்ச்சனைதான் வேண்டும் என்று கேட்பவன் யார்? ஆலயக் குடமுழுக்கை வடமொழியில் நடத்துவதுதான் சரியென்று வாதிடுபவன் யார்? தமிழில் பேசுவது தரக்குறைவு ஆங்கிலத்தில் அளவளாவுவதுதான் படித்தவன் என்பதற்கான அடையாளம் என்று நினைப்பவன் யார்? சொல்லுங்கள்…! இவர்களெல்லாம் யார்? தமிழர்கள் தானே! தமிழ் வளர்ச்சியின் சிறு சிறு பகுதிகளான மேற்சொல்லப்பட்ட அத்தனைக்கும் ஆட்சியாளர்களா தடை? இல்லை, இல்லவே இல்லை. தமிழனின் தாழ்வு மனப்பான்மைதான் தடை.

தமிழ் வளர்ச்சிக்குக் கடுமையான சட்டங்கள் இல்லையே! சட்டங்களைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் இல்லையே! என்கிறீர்கள். கடுமையான சட்டங்களும் நடிவடிக்கைகளும் மட்டுமே போதும் என்றால், இந்தியக் குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தவுடன் நாட்டில் குற்றங்கள் நடைபெறாமல் போயிருக்க வேண்டும். அவ்வளவு வேண்டாம் குறைந்திருக்கவாவது வேண்டுமே! நடைபெற்றதா? சட்டங்களாலும் தண்டனைகளாலும் குற்றங்களைக் குறைக்க முடியுமா? முடியாது, முடியவே முடியாது. வறுமையும் ஏழ்மையும் பசியும் ஒருபக்கம். கோடி கோடிகளாகக் குவிக்கும் பணமுதலைகள் ஒருபக்கம் என்று பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகுந்துள்ள நாட்டில் திருட்டும் வழிப்பறியும் கொள்ளையும் இருந்தே தீரும். சட்டங்களும் தண்டனைகளும் அதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. தமிழ்வளர்ச்சியிலும் அப்படித்தான். சட்டங்கள், தண்டனைகளால் தமிழை வளர்த்துவிட முடியாது.

தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும். தமிழன் சுயமரியாதை உள்ளவனாக மாற வேண்டும்.

மாண்பமை நடுவர் அவர்களே!
தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தமிழைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் தமிழ் வளர்ந்து விடுமா? தமிழைப் பாதுகாக்கிறேன் என்று சிலர் போடும் வேலிகளால் தமிழ் தழைத்து விடுமா? பயிரைப் பாதுகாக்கிறேன் என்று வேலி போடுகிறவர்கள் உள்ளே பயிர்வளரவும் பணியாற்ற வேண்டும் அல்லவா? பயிரை வளர்க்காமல் வெறுமனே பாதுகாத்து என்ன பயன்?தமிழறிஞர்கள் தமிழின், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளைச் சொல்லித் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் அதே நேரத்தில் தமிழை அறிவியல், தொழில் நுட்ப மொழியாக மேம்படுத்த வேண்டும். அறிவியல் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதன் மூலம் தமிழ் அறிவியல் மொழியாகிவிடாது. தமிழில் அறிவியல், தமிழில் தொழில் நுட்பம் என்பது மொழிபெயர்ப்புப் பணியன்று. அது ஒரு படைப்புப் பணி. ஆங்கிலச் சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்ததால் தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகி விடவில்லை. தமிழில் சிறுகதைகள் பல படைக்கப்பட்டதனால் உருவானது அது. அறிவியல் தமிழும் அப்படித்தான் உருவாக வேண்டும். இது தமிழனின் பணி. தமிழ் படித்தவனின் பணி மட்டுமல்ல. பிற துறை வல்லுநர்களும் நாம் தமிழர்கள், நமக்கான வரலாற்றுக் கடமை இது என உணர்ந்து தமிழ் வளர்ச்சிக்குக் கடமையாற்ற வேண்டும்.

ஆட்சியாளர்களைக் குறைசொல்வதென்பது, நம் கடமைகளிலிருந்து நாம் நழுவிக் கொள்ளும் தந்திரம். ஆட்சியாளர் என்பவர்கள் யார்? உண்மையில் அவர்கள் நமது பணியாளர்கள். நமக்கான பணியைச் செய்யக் காத்திருப்பவர்கள். முழு அதிகாரம் படைத்தவர்கள் மக்களாகிய நாம்தான். நம்மிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் ஆட்சியாளர்கள் கையைக் கட்டிக்கொண்டு காலம் தள்ள முடியாது. மக்கள் சக்திக்கு முன்னால் ஆட்சி, அதிகாரம் இவைகள் எல்லாம் தூள் தூளாகிப் போகும். உலக வரலாறு நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுதான்.தமிழர்களே! அரசியல்வாதிகள் நம் ஓட்டுக்காகக் காத்திருப்பவர்கள். அவர்கள் நம் விருப்பத்திற்கு மாறாக ஒன்றையும் செய்யத் துணிய மாட்டார்கள். ஆட்சியாளர்களோ! நமக்குப் பணிசெய்யக் காத்திருக்கும் பணியாளர்கள். நாம் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதுதான் அவர்கள் பணி. தமிழ் வளர்ச்சி நம் கையில்தான் உள்ளது. நாம் ஒன்று கூடினால், உரத்த குரலெழுப்பினால், நம் கரங்களை உயர்த்தினால் சிகரங்களும் தவிடு பொடியாகும். தமிழ்ப் பகைவர்கள் உருக்குலைந்து போவார்கள். தமிழ் வளர்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

வெங்குருதி தனில்கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்.

நன்றி! வணக்கம்!!

புதன், 5 டிசம்பர், 2007

ஊடக அதிகாரங்களை உடைக்கும் வலைப்பதிவுகள் (BLOGS)

ஊடக அதிகாரங்களை உடைக்கும் வலைப்பதிவுகள் (BLOGS)

முனைவர் நா.இளங்கோஇணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.


தகவல் தொடர்புச் சாதனங்கள்:தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டன. செயற்கைக் கோள்களும் இண்டர்நெட்டும் தகவல் தொடர்பு உலகத்தில் நுழைந்த பிறகு உலகத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. சமீபத்திய வரவான செல்போன் உலகை உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது. இன்றைய சூழலில் தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களான ஆன ஊடகங்களுக்குள் வாழ்கிறோம். ஊடகங்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. இத்தோடு ஊடகங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. ஊடகங்களின் அதிகாரம் இங்கேதான் செயல்படுகின்றது. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஊடகங்களே விளங்குகின்றன.

ஊடகங்கள் உலகைப் பற்றிய தகவல்களைச் செய்தியாகவும் பிற வடிவத்திலும் தருவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானித்து நம்மீது அதிகாரம் செலுத்துகின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பதை யெல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப் பற்றிப் பேச வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பதையும் ஊடகங்களே முடிவு செய்கின்றன.

மனிதன் எழுதக் கற்றுக் கொண்டதும் எழுத்துவழித் தகவல் தொடர்பு கொள்ளத் தொடங்கியதுமான வரலாறு சில ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது என்றாலும் தகவல் தொடர்பு ஊடகங்களின் பாய்ச்சல், மனிதன் காகிதத்தில் அச்சிடக் கற்றுக் கொண்டதிலிருந்தே தொடங்குகிறது.

ஊடகங்களின் அதிகாரம்:ஊடகங்களில் வெளிப்படும் அதிகாரம் இரண்டு நிலைகளில் செயல்படும். ஒன்று, ஊடக உடைமையாளர்கள் தகவல்கள் மீதும் தகவல் தருபவர் மீதும் அதிகாரம் செலுத்துவது. மற்றொன்று, ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் வாசகரிடம் அதிகாரம் செலுத்துவது. தொடக்கக் காலத்தில் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அச்சு இயந்திரங்களாகிய உற்பத்திக் கருவிகளும் அச்சிட வேண்டிய தகவல்களை எழுதித் தர உதவும் கல்வியும் உயர் வர்க்கத்தினரிடம் மட்டுமே இருந்தன. எனவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இருபதாம் நு}ற்றாண்டின் தொடக்கத்தில் அச்சு ஊடகங்களின் வழி கருத்தியல் அதிகாரம் செலுத்துவோராக உயர் சாதியினராகவும் உயர் வர்க்கத்தினராகவும் இருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரே இருந்தனர்.

ஆங்கிலேயர் தந்த கல்வியும் ஆங்கிலவழிக் கல்வியும் இருபதாம் நூற்றாண்டில் பரவலான போது எழுத்தறிவும் எழுதும் மற்றும் வாசிக்கும் பழக்கமும் அதிகமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்விஅறிவு பெறத்தொடங்கி அச்சு ஊடகத் தகவல்களை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் அச்சு ஊடகங்களின் அதிகாரம் கவனம் பெறத் தொடங்கியது. அச்சு ஊடக உரிமையாளர்கள் மற்றும் இதழாசிரியர்களின் அதிகாரம் படைப்பையும் வாசகனையும் வெகுவாகப் பாதிக்கும் தன்மை வெளிச்சத்துக்கு வந்தது. வெற்று இலக்கியங்களும் துணுக்குத் தோரணங்களும் அதிகாரத்தை இனங்காட்டாத மலிவான ரசனைப் போக்கும் எழுத்துக்களாக்கப்பட்டன. வெகுஜனங்கள் மத்தியில் எது அதிக விலைபோகுமோ அதனையே அச்சு இயந்திரங்கள் கக்கத் தொடங்கின. அச்சு ஊடகங்கள் வணிகமயமாயின. விலைபோகும் சரக்குகள் என எழுத்துக்கள் முத்திரை குத்தப்பட்டன. தீவிரமான எழுத்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எழுத்துக்களும் விலைபோகாச் சரக்குகள் ஆக்கப்பட்டன.

இத்தகு சூழலில்தான் சிறுபத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன. வணிகமயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தீவிரமான எழுத்துக்களும் சோதனை முயற்சிகளும் விளிம்புநிலை மக்கள் ஆக்கங்களும் அச்சில் இடம்பிடித்தன. சிறுபத்திரிக்கைகளில் அதிகாரம் இடம்பெயர்ந்தது. ஊடக முதலாளிகளின் இடத்தைக் குழுவும் குழுவாதங்களும் பிடித்தன. சிறுபத்திரிக்கைகள் கருத்து ரீதியான அதிகாரத்தைப் படைப்பாளிகளிடத்தும் வாசகர்களிடத்தும் செலுத்தின. அவை அறிவுஜீவிகளின் தன்முனைப்பு மோதல் களங்களாயின. தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதும் பிறரை மட்டம் தட்டுவதுமே படைப்புகளில் மேலோங்கின. கணிப்பொறி சார்ந்த D.T.P. தொழில்நுட்பத்தின் வருகை ஆளுக்கொரு இதழ், ஆளுக்கொரு குழு என்ற போக்குகளுக்குத் துணைசெய்தது. அச்சு ஊடகங்களின் அதிகாரம் தொடர்கதையானது.

புதிதாய் வருகிற படைப்பாளிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் ஊடகங்கள் இடமளித்து விடுவதில்லை. ஊடகங்கள் பிரபலங்களை வைத்துக் காசு பார்க்கும் வணிக நிறுவனங்களாக மாறிப் போயின. புதியவர் எழுத்துக்களின் மீது குழுவாதம், மதம், சாதி, கட்சி, இயக்கம், சித்தாந்தம் முதலான பலவும் அதிகாரம் செலுத்தின. ஒருவர் எழுத்தின் மீது தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த பிறர் யார்? அந்த அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்? அவருக்கு என்ன தகுதி? என்ற விடை தெரியாத வினாக்கள் பலப்பல. இத்தகு ஊடக அதிகாரங்களை உடைத்தெரியும் புதிய படைப்புலக வடிவம்தான் வலைப்பதிவுகள்.

II

வலைப்பதிவுகள்: (BLOGS)

தகவல் தொழில்நுட்பத்தின் அதி நவீன மின்னணு ஊடகமான கணினி மற்றும் செயற்கைக் கோள்கள் இவற்றின் இணைப்பால் சாத்தியமாகும் இணையம் தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புரட்சி அத்தியாயம் என்றால் அது மிகையன்று. உலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம் உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள், இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு, பல்ஊடகத் தொழில்நுட்பம், வேகம், உலகமொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் இணையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைகள். இணையம் வழங்கும் மின் அஞ்சல், இணைய அரட்டை, இணைய வணிகம், கோப்புகள் பரிமாற்றம் (F.T.P.) முதலான பல்வேறு சேவைகளில் அதிக கவனத்தைப் பெற்றது உலகளாவிய வலைத்தளச் சேவை றறற என்றழைக்கப்படும் (World Wide Web) சேவையாகும். வலைத்தளச் சேவையின் ஒரு பிரிவாகத் தோற்றம் பெற்று இன்றைக்குத் தனித்ததொரு இணையச் சேவையாகப் புகழ் பெற்றிருப்பதுதான் வலைப்பதிவுகள் என்றழைக்கப்படும் Blogs ஆகும்.
வலைப்பதிவு என்பதற்கு இணைய அகராதி விக்கிபீடியா தரும் விளக்கம்,
வலைப்பதிவு (Blog) என்பது அடிக்கடி இற்றைப்படுத்தப் (up-to-date) படுவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்கு படுத்தப்படுவதற்குமென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்தப் படுவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள் வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.
என்பதாகும். மேலே விக்கிபீடியா தரும் விளக்கத்திலிருந்து வலைப்பதிவின் தனித்தன்மைகளாக இரண்டு வசதிகளைச் சிறப்பித்துச் சொல்லமுடியும்.

1. அடிக்கடி இற்றைப்படுத்தப் படுவது.
2. வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பது. இந்த இரண்டு அம்சங்கள்தான் வலைப்பதிவுகளின் தனிப்பெருஞ் சிறப்புக்கள்.

வலைப்பதிவு:
தம் படைப்புகளைத் தாமே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் இதனை Blogging என்பர். தமிழில் இது வலைப்பதிவு எனப்படும். இதனை வலைப்ப10க்கள் என்றும் சிலர் வழங்குவர். ஒருவர் தம் பெயரில் ஒரு வலைப்பதிவை உருவாக்கத் தேவைப்படுவன, கொஞ்சம் கணினி அறிவு, இணையத் தொடர்புள்ள கணினி இவை இரண்டு மட்டுமே. வலைப்பதிவுக்குப் பொருள் செலவு ஏதும் கிடையாது. இணையத்தில் இந்தச் சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. யுனிகோட் குறிமுறையைப் பயன்படுத்தித் தமிழிலேயே ஒருவர் தம்முடைய படைப்புகளைப் பதிப்பிக்கலாம்.
வலைப்பதிவுகளை வேறுவிதமாகவும் விளக்கலாம். அதாவது இணையத்தின் வழி ஒரு தனிநபர் உருவாக்கும் இதழ் அல்லது நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்பு அனைவரும் படிப்பதற்கானது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வலைப்பதிவுகளில் பல்வேறு பதிவுகளைப் பதித்து வருகின்றார்கள். இதில் பலர் கணிப்பொறி, இணையத் தொழில் நுட்பம் அறியாதவர்கள். வலைப்பதிவாளர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு புதிய எளிய தொழில்நுட்பங்கள் தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் இத்தகு தொழில்நுட்ப உதவிகள் அனைவருக்கும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினி பற்றிச் சிறிதளவே தெரிந்தவர்கள் கூட, தங்களுக்கென்றுச் சொந்தமான வலைப்பதிவினை உடனே உருவாக்கிக் கொள்ள முடியும்.
அநேகமாக ஒவ்வொரு வலைப்பதிவும் வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் தனித்ததொரு வாசகர்வட்டம் அமைந்து விடுவதுண்டு. இக்காரணம் பற்றியே வலைப்பதிவுகள் வாசகர்கள் கருத்துரையாடுதற்கு ஏற்றார்போல் அமைக்கப்படுகின்றன. பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களைப் பின்னூட்டங்களாக (feed back) உடனடியாக அவ் வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக் கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். பின்னூட்டங்களையும் அடுத்து வரும் வாசகர்கள் பார்க்க வலைப்பதிவுகளில் வாய்ப்புண்டு. தேவையேற்படும் போது பின்னூட்டம், பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் என்று சங்கிலித் தொடர்போல் பதிவு தொடரந்து சென்று கொண்டேயிருக்கும்.

தகவலின் இடையிடையே படமோ, ஒலியோ, சலனப்படமோ எது தேவையோ அதனை இணைத்துத் தரும் பல்லூடகத் தகவல் முறை வலைப்பதிவுகளில் சாத்தியம். அச்சு ஊடகங்களில் எழுத்தோடு படங்களை மட்டுமே இணைக்க முடியும்.
வலைப்பதிவில் நாம் இதற்குமுன் எழுதிய அனைத்துத் தகவல்களும் தனியே வார வாரியாகவோ, மாத வாரியாகவோ வகைப்படுத்தி சேமிப்பகம் (Archive) பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர் பழைய தகவல்களையும் இந்தப் பகுதியில் இருந்து படித்துக் கொள்ளலாம்.

வலைத்தளங்கள் - வலைப்பதிவுகள் ஒப்பீடு:
இணையத்தின் மிக முக்கிய அங்கமான வலைத்தளங்களிலிருந்து வலைப்பதிவுகள் வேறுபட்டவை. வலைத்தளங்கள் அமைத்துக்கொள்ள இடம்பிடிப்பது, வடிவமைப்பது போன்ற பணிகளுக்குக் கட்டணம் வசூலிப்பதுண்டு. ஆனால் வலைப்பதிவுச் சேவைகள் முற்றிலும் இலவசமானது. வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இடையிலான சில வேற்றுமைகளைப் பின்வரும் பட்டியல் தெளிவுபடுத்தும்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களை உருவாக்க html அறிவு ஓரளவேனும் தேவை.

வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகளை உருவாக்க html அறிவு தேவையில்லை. வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கி சமர்ப்பித்துவிட்டால் தானாக வலைப்பதிவு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் (Templates) இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.

வலைத்தளங்கள்: வலைத்தளத்திற்கான உள்ளடக்கங்களை உருவாக்கி எழுதுபவர் ஒருவராகவும், html கொண்டு அத்தகவல்களை உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.

வலைப்பதிவுகள்: வலைப்பதிவுக்கான உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். எந்தத் தனிப்பட்ட மென்பொருளும் தேவையில்லை. வலைப்பதிவு சேவையை வழங்குபவரே இதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி வைத்திருப்பார்.

வலைத்தளங்கள்: வலைத்தளங்கள் அடிக்கடிப் புதுப்பிக்கப் படுவதில்லை. சில தளங்கள் மட்டுமே அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும்.

வலைப்பதிவுகள்: வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்பெறும். தேவைப்பட்டால் ஒருநாளில் பலமுறைகூட புதுப்பிக்கப்பெறும். எப்பொழுதாவது ஒருமுறை புதுப்பிக்கப்படும் பதிவுகளும் உண்டு.

வலைத்தளங்கள்: வலைத்தளங்களில் பெரும்பாலும் கருத்துப்பரிமாற்ற வசதி இருப்பதில்லை. மின்னஞ்சல் வழிப் பின்னு}ட்டம் சில தளங்களில் உண்டு.

வலைப்பதிவுகள்: வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைப்பதிவிலேயே பதிவுசெய்யும் வசதி உண்டு. வாசகர் பின்னு}ட்டங்கள் ஒரு விவாதம் போலத் தொடரவும் பதிவுகளில் வாய்ப்புண்டு.

மேலே பட்டியலிடப்பட்ட வேறுபாடுகள் மட்டுமின்றி வலைப்பதிவுகளுக்கென்றே சில தனித்த வசதிகளும் இணையத்தில் உண்டு.

வலைப்பதிவுகள் -சில சிறப்பு வசதிகள்:
வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப் பிடித்த வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைத் தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன் இணைத்துக் கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில் பெற்றுக்கொள்ளலாம்.

இச்செய்தியோடை வசதியே வலைப்பதிவுத் திரட்டிகளும் வலைப்பதிவர் சமுதாயங்களும் இணைவதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.

இணையத்தில் தகவல்களைத் தேடித்தரும் வசதியைக் கொண்ட தேடுபொறிகள் (Search Engine) பல தமக்கெனத் தனியான வலைப்பதிவுத் தேடல்களை வைத்திருப்பதாலும், வலைப்பதிவுகள் எல்லாம் பெரும் வலையமைப்புடன் இணைந்திருப்பதாலும் சில நாட்களிலேயே வலைப்பதிவு உள்ளடக்கங்கள் தேடுபொறியில் பட்டியலிடப்பட்டு விடுகின்றன. இந்த செய்தியோடை வசதி வலைப்பதிவுச் சேவை வழங்குநர்களாலேயே வழங்கப்படுவதால் வலைப்பதிவுகளை உருவாக்கவோ பராமரிக்கவோ பெரிய அளவில் கணிப்பொறி அறிவு தேவைப்படுவதில்லை.

வலைப்பதிவு சேவை வழங்குவோர்:


வலைத்தளங்கள் போல் அல்லாமல் வலைப்பதிவு சேவைகளைப் பல இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்றன. வலைப்பதிவு சேவையை வழங்கும் சில இணையதளங்கள்:

http://www.blogger.com
http://www.blogdrive.com
http://www.livejournal.com
http://blogs.sify.com
http://wordpress.com
http://www.blogsome.com
http://www.rediffblogs.com

இந்த இணைய தளங்கள் மட்டுமன்றி வேறு பல இணையதளங்களும் வலைப்பதிவு சேவையை வழங்குகின்றன.

blogger.com


வலைப்பதிவு சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இந்த ப்ளாக்கர்.காம் சேவைதான். எளிமையான அமைப்புகளுடனும் அதேசமயம் தேவையான பல வசதிகளுடன் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் வழங்கும் இந்த ப்ளாக்கர். காம் மிகுந்த நம்பகத்தன்மை உடையது என்று தமிழ் வலைப்பதிவாளர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.

வலைப்பதிவின் அமைப்பு:

ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1. வலைப்பதிவுத் தலைப்பு
2. வலைப்பதிவு முகப்பு
3. பதிவின் தலைப்பு
4. பதிவின் உடல்பகுதி
5. பதித்தவர் பெயர், பதித்த நேரம்
6. பின்னூட்டங்கள்
7. சேமிப்பகம்
8. இணைப்புகள்
மேலே குறிப்பிடப்பட்ட எட்டுப் பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறுசில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம்பெறுவதுண்டு.

IIIதமிழின் முதல் வலைப்பதிவாளராகக் கார்த்திகேயன் இராமசாமி கருதப்படுகிறார். இவரின் முதல் வலைப்பதிவு இடுகை 2003 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி இணையத்தில் இடப்பட்டுள்ளது. (ஆதாரம்: விக்கிபீடியா, இணைய அகராதி) 2003 இல் தொடங்கிய தமிழ்வலைப்பதிவுப் பயணம் கடந்த நான்கு ஆண்டுகளிலேயே மிகுந்த வரவேற்பையும் பரவலாக்கத்தையும் பெற்றுள்ளது.
ஒருவர் எழுத்தின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற வலைப்பதிவுகள் ஊடக வரலாற்றில் ஒரு புரட்சி. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் ஒருவரின் எழுத்து பொது வாசிப்புக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. எல்லாத் தரப்பு வாசகர்களுக்கு முன்னாலும் எழுதப்படும் எல்லாப் படைப்புகளும் ஒரே வரிசையில் காட்சிப்படுத்தும் அதிகார உடைப்பு வலைப்பதிவுகளால் சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழ்வெளி முதலான வலைப்பதிவுத் திரட்டிகள் இப்பணியை எளிதாக்கியிருக்கின்றன.

ஊடக உடைமையாளர், தரப்படுத்துநர் போன்ற அதிகார வர்க்கங்களின் இடையீடு இல்லாமல் எழுதப்படுவன எல்லாம் ஒரு நிமிடம் கூடத் தாமதமில்லாமல் மின்னெழுத்தால் அச்சிடப்படும் வாய்ப்பு. பிரபலங்களின் ஆதிக்கங்கள் நொறுங்கி, தலைப்புகளும் உள்ளடக்கங்களுமே ஒரு படைப்பை நாம் படிக்கத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணங்களாகும் ஜனநாயக முறையே வலைப்பதிவுகள். எழுத்தின் தகுதி, தரம் என்ற மாயத்தோற்றங்கள் உடைந்து தகவலும் தகவலின் உடனடித்தன்மையுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
நிறைவாக:
1. ஒருவர் எழுத்தின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற சுதந்திரம்.
2. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் ஒருவரின் எழுத்து பொது வாசிப்புக்குக் காட்சிப்படுத்தப்படல்.
3. எழுத்தின் தகுதி, தரம் என்ற மாயத்தோற்றங்கள் உடைந்து தகவலும் தகவலின் உடனடித்தன்மையுமே முக்கியத்துவம் பெறல்.
4. பல்லூடக தகவல் வழங்கும் முறை, வாசகப் பின்னு}ட்டங்கள், அதைத் தொடர்ந்த விவாதம் என நீளும் வாய்ப்பு.
5. படைப்பாளிகளின் பிம்பங்கள் உடைந்து வாசகன் -படைப்பாளி சமத்துவம் காணும் எழுத்து ஜனநாயகம்.
வலைப்பதிவுகளின் இத்தகு அதிகார உடைப்பு ஊடகங்களின் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. கணிப்பொறி, இணையம் என்ற அறிவியல் தொழில்நுட்பம் சாதித்த புரட்சி.

''தற்காலத் தமிழ் தெலுங்கு நாவல்களில் தலித் பிரச்சனைகள்''- அணிந்துரை

''தற்காலத் தமிழ் தெலுங்கு நாவல்களில் தலித் பிரச்சனைகள்''
அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

தமிழகத்தின் வரலாறு நெடுகிலும் உயர்சாதியினர் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், தலித் மக்களை இழிசினர், கடைசியர், திருக்குலத்தார், ஆதித்திராவிடர், பழந்தமிழர், ஹரிஜன், தாழ்த்தப்பட்டோர், தீணடத்தகாதவர், பறையர், பஞ்சமர், அட்டவணை இனத்தவர், சண்டாளர், புலையர் எனப் பலபெயரிட்டு அழைத்து வந்தனர். அண்மைக் காலத்தில்தான் இவர்கள் தாங்களே தங்களுக்கு ஒரு பெயரை சூட்டிக்கொண்டு கலகக் குரலெடுத்து அணிதிரள்கின்றனர். அந்தப் பெயர்தான் 'தலித்' என்பது. தலித் என்ற சொல்லே புரட்சிக்கான ஒரு பூபாளம்தான். ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் என்ற பொருள் தரும் மராட்டிய மொழிச் சொல்லான தலித் என்பது இன்றைக்குத் தலித்மக்களை மட்டும் குறிக்காமல் கலகத்தின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கின்றது.

இன்றைக்குச் சற்றேறக்குறைய நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தலித்துக்கள் தமிழகச் சூழலில் தங்கள் எதிர்க்குரலைப் பதிவுசெய்துள்ள வரலாறு உயர்சாதி அரசியலால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

"1869 தொடங்கி 1945 வரை ஏறத்தாழ 14 பத்திரிகைகளைத் தாழ்த்தப்பட்டோர் நடத்தியுள்ளனர். சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), திராவிடப் பாண்டியன் (1885), ஆந்திரோர் மித்ரன் (1886), மகாவிகட தூதன் (1888), பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), ப+லோக வியாசன் (1900), தமிழன் (1907), திராவிடக் கோகிலம் (1907), தமிழ்ப்பெண் (1916), ஆதி திராவிடன் (கொழும்பு, 1919), தீனபந்து (1924), தமிழன் (ஜி. அப்பாத்துரை, 1925), ஆதி திராவிட மித்ரன் (1933), சமத்துவம் (1945) முதலிய பத்திரிக்கைகளை நடத்தி அன்றைக்குப் புதிதாக வந்த செய்தித்தாள் ஊடகத்திற்குள் உடனே புகுந்து…"
(க.பஞ்சாங்கம், தலித்துகள் பெண்கள் தமிழர்கள் ).

மேற்படி பத்திரிகைகளில் எழுதிய அயோத்திதாசப் பண்டிதர், பெரியசாமிப் புலவர், பண்டிட் முனிசாமி, ரெட்டைமலை சீனிவாசன், திருமதி கே.சொப்பனேஸ்வரி அம்மாள் முதலானோர் சாதியத்தையும், பிராமணீயத்தையும் மனுதர்மத்தையும் கடுமையாகத் தாக்கி விமர்சித்துள்ள வரலாறு மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா? என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி 1990 களில் விழிப்புற்ற தலித்துக்களும் தலித் ஆதரவாளர்களும் தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்ற புதிய சொல்லாடல்களின் மூலம் இந்திய மக்களின் இலக்கியம், கலை, வாழ்வியல்களின் மீது அதிரடித் தாக்குதல் தொடுத்தனர். மிகுந்த ஆராவாரத்தோடு தொடங்கிய தலித்தியம் இன்றைக்கு ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக மாறியிருக்கின்றது.

தலித் எழுத்துக்கள் செய்துள்ள கலகங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. இலக்கியங்களில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகார வர்க்கக் குரல்கள் அடங்கிப்போக ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
2. மரபான அழகியல் கூறுகள் நொறுங்கி உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தும் தலித் அழகியல் முன்னிறுத்தப் படுகிறது.
3. இலக்கிய, ஊடக அதிகாரங்கள் சிதைந்து படைப்பில் ஜனநாயகமும் சமத்துவமும் நிலைநிறுத்தப் படுகின்றன.

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் முனைவர் நா. வஜ்ரவேலு எழுதியுள்ள "தற்காலத் தமிழ் தெலுங்கு நாவல்களில் தலித் பிரச்சனைகள்" என்ற நூல் காலத்தின் தேவையறிந்து வெளிவருகிற தலித்திய ஆய்வுநூல் ஆகும். ஒருமொழி இலக்கிய ஆய்வைக் காட்டிலும் பன்மடங்கு சிக்கல் நிறைந்தது இருமொழி இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு. அதிலும் அண்மைக் காலத்தில் மிகுந்த எழுச்சி பெற்றிருக்கும் தலித் இலக்கியங்கள் குறித்துக் கல்விப்புலம் சார்ந்து ஆய்வு செய்வது மிகுந்த இடர் நிறைந்தது. நூலாசிரியர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றிருப்பது இத்தகு ஒப்பிலக்கிய ஆய்வை எளிமைப் படுத்தியிருக்கிறது.

நா.வஜ்ரவேலு தம் நூலில் தலித்துக்கள், தலித் அல்லாதோர் இருசாராரின் எழுத்துக்களையும் தலித் இலக்கியங்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.

"தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல, படிப்பவர்கள் சூடாக வேண்டும், முகம் சுளிக்க வேண்டும், சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக்காட்ட வேண்டும், அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசுக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவன் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்."
(ராஜ்.கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள்)

என்பது போன்ற கராறான வரையறை எதையும் வஜ்ரவேலு வகுத்துக்கொள்ளவில்லை.தலித் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்த சுமார் 21 நாவல்களை முன்னிறுத்தி இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.

நூலின் இன்றியமையாப் பகுதி, தலித்துகளின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ள ஐந்தாம் இயல் ஆகும். இந்த இயலில் நூலாசிரியர் விரித்துரைத்துள்ள தீர்வுகள் பின்வருமாறு,

தலித்துகள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள கொத்தடிமை முறை, தீண்டாமை, உரிமை மறுப்புகள் மற்றும் பாலியல் வன்முறை முதலிய சமூகச் சீர்கேடுகள் நீக்கப்பட வேண்டும்.

கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டு அதற்காக வழங்கப்பெறும் ஊக்கத்தொகையும் நியாயமான முறையில் வழங்குதல் வேண்டும்.

நிலவுடைமைச் சமுதாயம் மறைந்து பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும். கோயில் மானியங்கள் உழைக்கும் ஏழை மக்களுக்கும் தலித்துகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

உழைக்கும் ஏழை மக்களும் தலித்துகளும் அந்நிலங்களைப் பெற்று, கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் செய்தல் வேண்டும்.

ஆணாதிக்கம் கொண்ட குடும்ப அமைப்பையும் சாதி ஆதிக்கம் கொண்ட சமூக அமைப்பையும் மாற்றி அமைக்கும் போதுதான் பெண் விடுதலையும் தலித்துகளின் சமூக விடுதலையும் சாத்தியமாகும்.

இச்சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது பெரும்பான்மை மக்களான தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களின் மீதே ஆதாரப்பட்டுள்ளது. எனவே அவர்கள் முன்னேற்றமே சமூகத்தின் / நாட்டின் முன்னேற்றமாகக் கருதப்படும்.

ஏழை விவசாயக் கூலிகளான தலித்துகள் பொருளாதார நிலையில் வளர்ச்சிபெற வேண்டுமானால் நிலவுடைமைச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழ், தெலுங்கு நாவல்களில் முன்வைக்கப்பட்ட தலித் பிரச்சனைகளை அடியொட்டி நாவலாசிரியர்கள் சொல்லும் தீர்வுகளை உள்வாங்கி நூலாசிரியர் விவரிக்கும் நூல்முடிபுகள் மிகுந்த அழுத்தமும் ஆற்றலும் வாய்ந்தவை. ஜனநாயகத்தின் பெயரால் நாம் அமைத்துக்கொண்ட அரசுகள் தலித்துகளுக்குப் பெயரளவில் சில சலுகைகளைச் சீர்திருத்தங்கள் என்ற நிலையில் வழங்கலாமே ஒழிய நிரந்தரத் தீர்வுகளை வழங்கா. அடிப்படை அரசியல் மாற்றம் வேண்டும். அதாவது பொதுவுடைமைச் சமுதாயம் மலர்வதே தலித் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்று நூலாசிரியர் குறிப்பிடுவது அவரின் தெளிந்த அரசியல் அறிவை வெளிப்படுத்துகிறது. நூலாசிரியர் பரிந்துரைக்கும் பிற தீர்வுகள் ஓர் இடைக்கால ஏற்பாடாக முன்மொழியப்படுகின்றன.

நூலின் அகத்தே மிக விரிவாக விவாதிக்கப்பட்டுத் தமிழ் ஆய்வுலகத்திற்குப் புதிய பங்களிப்பை வழங்கியுள்ள இன்றியமையாப் பகுதிகள் பல குறிப்பிடத்தக்கன. அவை,

1. தமிழிலக்கிய நெடும்பரப்பில் தொல்காப்பியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையுள்ள பெரும்பாலான இலக்கிய இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள தலித்துகள் பற்றிய செய்திகள் வரலாற்றுப் போக்கில் நிரல் படுத்தப்பட்டுள்ளன.

2. தமிழக அளவில் தலித்துகளின் மதமாற்ற நிகழ்வுகள் காலந்தோறும் எவ்வாறு நடந்து வந்துள்ளன என்ற செய்திகளும் அம்மதமாற்றம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும்; பதிவு செய்யப்பட்டுள்ளன.

3. கிராமப்புற உழைக்கும் தலித் பெண்களின் பிரச்சனைகளான கூலி சமத்துவமின்மை, கல்வியின்மை, உயர்சாதியினர் ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்க ஒடுக்குமுறை என்ற இரட்டை ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை முதலியவைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்நூல் தமிழக ஆந்திர தலித்துகளின் வாழ்வியலையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் ஒப்பீட்டு நோக்கில் அறிந்துகொள்ளப் பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை.தலித் இலக்கியம், தலித் கலை, தலித் வாழ்வியல், தலித்திய ஆய்வுகள் என்று கல்விப் புலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தலித்தியம் சார்ந்து இயங்கும் நூலாசிரியர் முனைவர் நா.வஜ்ரவேலு அவர்களின் முதல்நூலே ஆய்வுலகில் மிகுந்த கவனிப்பைப் பெறும் என்று நம்புகிறேன்.

நா.இளங்கோ.

''திரும்பினார் திருவள்ளுவர்…" -நாடகம் குறித்த சில பதிவுகள்

''திரும்பினார் திருவள்ளுவர்…"
நாடகம் குறித்த சில பதிவுகள்

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டு 2007 டிசம்பர் திங்களுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. பதினாறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி முடித்திருக்கின்ற இலக்கியப் பொழில் தம் இரண்டாண்டு காலப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு மலர் வெளியிடயிருப்பது நல்ல முயற்சி. ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் பயன்படும் பல்வேறு நடவடிக்கைகளில் இலக்கிய அமைப்புகள் முகாமையானவை. சங்க காலம் தொடங்கித் தமிழின்- தமிழிலக்கியத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு அவ்வக்கால இலக்கிய அமைப்புகள் பேருதவி புரிந்திருக்கின்றன. அந்த வரிசையில் புதுவையின் இலக்கியப் பொழில், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் கவனம் செலுத்தி வருவது பாராட்டத்தக்கதாகும்.

இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் 14 ஆவது நிகழ்ச்சி (29-6-2007), புதுச்சேரி, மீட்பர் அன்னை இல்லத்தில் "இசை, நாடகம்"அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. இசை அரங்கில் பேராசிரியர் சீ. தருமு நல்ல தமிழிசைப் பாடல்களை இசைத்து, பார்வையாளர்களை இசைவித்து, தம் இசைத்திறனால் நல்ல இசையைப் பெற்றார்.

இசை அரங்கிற்கு அடுத்தபடியாக நாடக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஷகானல்வரிக் கலைக்குழுவின் சார்பில் நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தின் தலைப்பு: திரும்பினார் திருவள்ளுவர் (கற்பனை நாடகம்). நாடகத்தின் கதை, உரையாடலை முனைவர் சிவ.இளங்கோ படைக்க, நாடகத்தை இயக்கியவர் முனைவர் அ.கனகராசு. இலக்கியப் பொழிலுக்காக முன்பே ஒளவையார் என்றவொரு வெற்றிகரமான வரலாற்று நாடகத்தை எழுதி, இயக்கி புதுவை மக்களிடத்தில் மிகுந்த புகழ் பெற்றிருப்பவர் அ.கனகராசு. அவரின் இயக்கத்தில் இலக்கியப் பொழிலில் மீண்டும் ஒரு நாடகம் என்பதால் புதுவை இலக்கிய அன்பர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் தமிழர்களுக்கு இருக்கும் பெருமதிப்பு நாடகம் பற்றிய ஆர்வத்தை அனைவரிடமும் மிகுவித்ததில் வியப்பேதும் இல்லை.

நிகழ்ச்சியின் தொடக்கமாக வரவேற்புரை ஆற்றிய இலக்கியப் பொழிலின் நிறுவனர் திரு.பெ.பராங்குசம் தம் உரையை வரவேற்புரையாக மட்டும் அமைத்துக் கொள்ளாமல் நிகழ்ச்சியின் நோக்கவுரை என்ற பொருளிலும் உரையாற்றினார். பெ.பராங்குசம் அவர்கள் உரையின் மையப்பொருளாக அமைந்தது தமிழ் உணர்ச்சி, தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சி குறித்த தீவிர சிந்தனைகள். தமிழ்ப்பற்று என்ற பெயரில் தமிழின் புகழ்பாடி உளங்களிக்கும் தமிழன்பர்களின் மத்தியில் அவரின் பேச்சு ஒருவகையில் ஆக்கப+ர்வமான அணுகுமுறைகளுடன் கூடிய திறனாய்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வரவேற்புரை மற்றும் நோக்கவுரையின் இத்தகு கருத்துரை முதலில் மற்றொன்று விரித்தலைப் போல் தோன்றினாலும், திருவள்ளுவர் திரும்பினார் நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நிகழ்ச்சியின் மையப்பொருளே இதுதான் என்பது விளங்கியது.

திருவள்ளுவர் திரும்பினார் நாடகம் அடிப்படையில் ஒரு கற்பனை நாடகம். கற்பனை நாடக உத்தியைப் பின்பற்றிச் சமகால நிகழ்வுகளை விமர்சிக்கும் பரவலான ஒரு நாடக பாணியில் இந்நாடகம் படைக்கப்பட்டிருந்தது. கலைத்தன்மையில் நாடகம் பெரிய முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் கருத்து வலிமையால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

நான்கு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்த இந்நாடகத்தில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருந்தகை 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகைக் காணும் பெருவிருப்போடு புதுச்சேரி வருகிறார். தமிழன் வாழும் புதுவையில் ஃ தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லாத அவலத்தைக் காணும் திருவள்ளுவர் மீண்டும் கற்சிலையாகிறார். இதுதான் நாடகத்தின் சுருக்கம். நாடகத்தில் முக்கிய பாத்திரங்களில் திருவள்ளுவராகச் சீனு.வேணுகோபால், வளவன் என்ற தமிழன்பராக நட.இராமமூர்த்தி, தமிழ்ச்செல்வன் என்ற அரசியல்வாதியாக முனைவர் உரு.அசோகன், அரசுச் செயலராக முனைவர் சிவ.இளங்கோ ஆகியோர் பாத்திரமேற்று நடித்திருந்தனர். நாடகம் என்பது உரையாடலால் மட்டும் இயங்குவதில்லை. பாத்திரங்களின் உடல்மொழிதான் உரையாடல்களுக்கே உயிர் கொடுக்கின்றது. அந்த வகையில் அரசியல்வாதி பாத்திரமேற்ற உரு.அசோகனும் அரசுச் செயலர் பாத்திரமேற்ற சிவ.இளங்கோவும் சிறப்பான பங்களிப்பை நாடகத்திற்கு வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக உரு.அசோகனின் நடிப்பு தனிப்படப் பாராட்டத்தக்கது. சீனு. வேணுகோபாலும், நட.இராமமூர்த்தியும் உரையாடலால் நாடகத்திற்கு உயிரூட்டினர்.

திருவள்ளுவர் திரும்பினார் நாடகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணம் அதன் நிகழ்த்துமுறை மட்டுமல்ல, நாடகப் பிரதியின் சமகால விமர்சனங்களே ஆகும். அரசியல்வாதி – தமிழன்பர் உரையாடலாக அமைந்த பின்வரும் பகுதி பிரதியின் வலிமைக்கு ஒரு சான்று.

வளவன் (தமிழன்பர்): ஆமாமாம்! இவங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்? இவுரு புள்ள சந்தனம் கடத்தறான், மருமகன் சாராயம் கடத்தறான், இவுரு லாட்ஜ் நடத்தராரு. அப்புறம் மக்கள் பணிக்கெல்லாம் எப்படிங்க நேரம் கிடைக்கும்.

தமிழ்ச்செல்வன் (அரசியல்வாதி): யோவ்! சும்மா நிறுத்துங்கையா! உங்க யோக்யதையெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? நாலு வரி எழுதத் தெரியாதவனெல்லாம் ஏதாவது ரெண்டு, மூணு கவியரங்கத்துல வந்து உக்கார வேண்டியது. அப்புறம் கவிஞர்ன்னு போட்டுக்கினு தனியா ஒரு சங்கம் ஆரம்பிக்கறது. அப்புறம் ஒரு பொஸ்தவம் போட்டு, எங்களைக் கூப்பிட்டுப் பொன்னாடை போர்த்தி போட்டோ எடுத்துக்கறது. அப்புறம் அதைக்காட்டி விருது கொடு, எம்.எல்.ஏ. பதவி குடுன்னு தொந்தரவு கொடுக்கறது.

திருவள்ளுவர்: (பலமாகச் சிரிக்கிறார்) ஹா…ஹா…ஹா…

திருவள்ளுவர் பலமாகச் சிரிக்கிறார் என்று தமிழன்பர்- அரசியல்வாதி உரையாடலுக்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கும் நாடக ஆசிரியரின் பகடி மிகவும் ரசிக்கத்தக்கது. திருவள்ளுவர் காலம், நூல் அரங்கேற்றம், சங்கப்பலகை முதலான தொன்மங்களுக்குள் ஊடாடும் வகையில் சமகாலப் படைப்பாளிகளும் படைப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நுட்பமான பகுதி இது.

இன்றைய அரசியல்வாதிகள் குறித்த அவலங்கள் நாடகத்தின் இரண்டாம் காட்சியில் விவரிக்கப்படுகின்றதென்றால், நாடகத்தின் மூன்றாவது காட்சி ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்துறை குறித்த அவலங்களை விவரிக்கின்றது. இக்காட்சியில் மாநிலத்தின் அரசுச் செயலர், அவரின் கீழ் இயங்கும் நிர்வாகத்துறை அதிகாரிகள் அனைவருமே அம்மாநிலத்தின் தாய்மொழி வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்த எத்தகைய விழிப்புணர்வும் அற்றவர்களாய் வயிறுவளர்க்கும் ஊதியமே குறிக்கோளாய்க் கொண்டு வாழும் இழிநிலை அம்பலப்படுத்தப்படுகிறது. செயலரின் உதவியாளராய் வரும் அரசு அதிகாரியின் வாய்மொழியே இதனை உறுதிப்படுத்துகிறது.

உதவியாளர்: அய்யோ! அய்யோ! தமிழ் தமிழ்ன்னு இப்படி ஏன்தான் உயிரை வாங்குறானுவளோ தெரியலை. வந்தமா, சம்பளம் வாங்கனமான்னு இல்லாம, கையெழுத்தைத் தமிழ்ல போடு, தமிழ்ல எழுது, தமிழ்ல படின்னு ஒரே ரோதனை இவங்களோட. நான்கூடத்தான் தமிழன். இப்ப இன்னா தமிழ்ல படிச்சனா? இல்ல எம்புள்ளங்களுக்குத்தான் தமிழ்ல பேர் வச்சனா? இல்ல அதுங்களைத் தமிழ்ல படிக்க வச்சனா? இல்ல தமிழ்லதான் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கறனா?....

அரசு அதிகாரி சலித்துக்கொள்ள, நாடக ஆசிரியன் இப்படிப்பட்ட அதிகாரிகள் குறித்தான தமது விமர்சனத்தை அசரீரி குரலில் முன்மொழிகிறார்,

அசரீரி: நீ சூடு, சொரணை இல்லாதவன்!
நீ தன்மானம் இல்லாதவன்!
நீ தமிழன் இல்லை!
நீ தமிழன் இல்லவே இல்லை!
நீ தமிழை நேசிக்காத முட்டாள்!
நீ தமிழுக்குத் துரோகம் செய்யும் அயோக்கியன்!
நீ தமிழ் உணர்வில்லாத காட்டுமிராண்டி!

தமிழ் உணர்வற்ற தமிழர்கள் மீதான கடுமையானத் தாக்குதலாக சிவ.இளங்கோ இந்நாடகப் பிரதியை உருவாக்கித் தமிழுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாக வழங்கியிருக்கிறார்.

திருவள்ளுவர் ஒரு பார்வையாளரைப் போல வந்து இடையிடையே தம் புலம்பலை வெளிப்படுத்தி இறுதியில் மீண்டும் கற்சிலையாவது ஒரு உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திருவள்ளுவரின் பின்வரும் புலம்பல் இதனை மெய்ப்பிக்கும்,

திருவள்ளுவர்: அய்யகோ! என்ன நாடு இது. மொழிப்பற்றில்லை. இனவரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கோ அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதொன்றே குறி! எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டு வாழ்வது என்ற நிலையில் மக்கள்! இப்படிப் பட்டவர்களுக்காகவா சங்கப் புலவர்கள் பல்லறங்களையும் தமிழில்பாடி அவற்றை ஓலைச்சுவடிகளில் பதித்தும் வைத்தார்கள். …. ….. மரத்துப்போன உணர்வுகள்! கல்லாகிவிட்ட நெஞ்சங்கள்! தமிழ் மக்களின் இன்றைய தமிழ் உணர்வுகள் எப்படி ஆகிவிட்டதென்று கல்லான என்னைப் பார்த்தாவது இம்மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்களின் நெஞ்சமும் கல்லாகிப் போனதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியதில் நாடகம் முழுவெற்றி பெற்றுவிட்டது. நாடகத்தை இயக்கிய முனைவர் அ.கனகராசு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நாடகத்தைப் பிரதியின் போக்கிலேயே இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் தமிழ்ப்பணி வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியது. திரு. பெ.பராங்குசம்- பூங்கொடி பராங்குசம் இணையர்களின் தமிழ்ப்பணி வாழ்க! வளர்க!!.

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ

ஹைக்கூ... கடவுளின் கடைசிக் கவிதை -நூல் மதிப்புரைகடவுளின் கடைசிக் கவிதை (மணிகண்டன்)

நூல் மதிப்புரைமுனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

ஹைக்கூ ஒரு விந்தையான கவிதை வடிவம். உருவத்தில் சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்தெல்லாம் மாறுபட்டது. ஹைக்கூ. ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ.விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ.க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ.வுக்கு தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ.வுக்கு எத்தனை செல்லப்பெயர்கள். மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ. கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ. நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ.வுக்கு உண்டு. நல்ல ஹைக்கூ.! அதில்தான் கவிஞனின் செய்நேர்த்தியே இருக்கிறது.

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள் தாமே வாழும். உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்?
நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெறும் பிணம். கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லா கவிதைகளுக்கும் பொதுவானது. ஹைக்கூ.வுக்குச் சிறப்பானது.

சென்ற நூற்றாண்டின் 80 களுக்குப் பிறகுதான் தமிழில் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 25 ஆண்டுக் கால வரலாறுதான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் / ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது. என்றாலும் அச்சப்பட நாம் யார்? நமக்கென்ன தகுதி? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

பகுதி இரண்டு

தோழர் மணிகண்டனின் கடவுளின் கடைசிக் கவிதை (சென்ரியூ கவிதைகள்) என்ற தலைப்பில் வெளிவரும் ஹைக்கூ நூல் கவிஞரின் முதல் முயற்சி. மணிகண்டன் என்ற கவிஞரை நான் நன்கு அறிவேன். அவர் இளங்கலைத் தமிழ் பயிலும் காலத்தில் அவருக்குப் படைப்பிலக்கியம் பாடப்பகுதியில் மரபுக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுதே தன்னை ஒரு கவிஞன் என்று அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு படைப்பாளி அவர். பாடம் சொல்லித்தரும் நிலையிலிருக்கும் நான் கொஞ்சம் சிரமப்பட்டு வெண்பா எழுத, மாணவர் மணிகண்டனோ மிக எளிதாக வெண்பா படைப்பார். புதுமைப்பித்தன், ஆகாசம்பட்டு சேஷாசலம் வெண்பாக்களை நினைவுபடுத்தும் பாணியில் அவருக்கு வெண்பா சரளமாக வந்து விழும். புதிய பாணியில் மரபுக் கவிதைகளை எழுதக்கூடிய நல்ல கவிஞர்.

மணிகண்டன் தமது முதல் கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க பல நல்ல ஹைக்கூக்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்தவகை ஹைக்கூக்களைக் கவிஞர் சென்ரிய+ கவிதைகள் என்கிறார். சென்ரியூ என்றால் வேறொன்றுமில்லை, சமூக அக்கறையோடு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், அவ்வளவுதான். இந்தத் தொகுப்பில் மொத்தம் 190 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. கவிதைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே தலைப்புகள் இல்லை. ஏன் அப்படி? என்றால், அது அப்படித்தான். ஹைக்கூ கவிஞர்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடுவதை அனுமதிப்பது இல்லை. கவிதைகளுக்குத் தலைப்பிட்டால் அது வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் கவிஞன் தேவையின்றித் தலையிட்டதாகிவிடும். ஒரு கவிதையை என்னவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாசகனுக்குத் தெரியும். எனவேதான் மணிகண்டனும் கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.

சில ஹைக்கூக்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஷஇந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது என்ற வெற்று ஆராவாரம் ஒரு பக்கம். கிராமங்கள்தாம் இந்தியாவின் முதுகெலும்பு என்ற கூச்சல் மறுபக்கம். உண்மையில் இந்தியக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன? ஊர் தனி! சேரி தனி! வெட்கப்பட வேண்டாமா? ஊரையும் சேரிகளையும் தனித்தனியே பிரித்து வைக்கும் ஆதிக்கச் சாதிவெறி மண்டிக்கிடக்கும் இந்தியக் கிராமங்களில்தாம் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என்றால்? இந்தியாவின் முகவரி சாதிவெறி தானா?

தேர்வராத சேரிக்குள்
ஊரே வரும் …
தேர்தல் நேரம்

கவிஞர் மணிகண்டனின் மேலே காட்டப்பட்ட சென்ரியூ எழுப்பும் கேள்விகள் ஒன்றா? இரண்டா? இரண்டாயிரம் ஆண்டுக்கால மனுராஜ்ஜியத்தையே அல்லவா நார்நாராகக் கிழிக்கிறது கவிதை. அத்தோடு விட்டாரா! தேர் வராத சேரிக்குள் ஊரே வருகிறது. எப்பொழுது? தேர்தல் நேரம். நம் கேலிக்குரிய ஜனநாயகத்தையும் அல்லவா புரட்டிப் போடுகிறார். இந்தக் கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்லிக்கொண்டே செல்வதைவிட கொஞ்சம் ஊன்றி, மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள், வாமன வடிவில் இருக்கும் கவிதை விஸ்வரூபம் எடுப்பதை உணரமுடியும். இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதைகளில் மேலே குறிப்பிட்ட கவிதையும் ஒன்று.

உலகமே இருமை. ஒன்று, அதற்கு எதிரான மற்றொன்று என்று எல்லாமே பைனரி மயம். நன்மை- தீமை, உண்மை- பொய், ஆக்கம்- அழிவு, தோன்றல்- மறைதல், கடவுள்- சாத்தான் இந்த இணைகளைக் கூர்ந்து பாருங்கள். இவற்றில் ஒன்றைக் கொண்டாடுகிறோம், மற்றொன்றை ஒதுக்குகிறோம். உண்மையில் ஒன்று இல்லையென்றால் மற்றொன்று ஏது? இந்த ஞானம்தான் அறிவியல், அறவியல், அழகியல், ஆன்மஇயல் எல்லாமே.

தேவாலய மணியோசை
கேட்கும் பொழுதெல்லாம் …
சாத்தானின் ஞாபகம்

என்ற மணிகண்டனின் ஹைக்கூ நமக்குச் சொல்லாமல் சொல்லுகிற ஞானம் அதுதான். தேவனின் நினைவு வருகிறபோதெல்லாம் சாத்தானின் ஞாபகம் வருகிறது. கவிஞருக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான். தேவன், தேவனாயிருப்பது சாத்தானின் இருப்பால், சாத்தான், சாத்தானாயிருப்பது தேவனின் இருப்பால்.

இப்படி முரண்களை நிரல்படுத்தும் ஹைக்கூக்கள்தாம் இந்தத் தொகுப்பில் மிகுதி. ஹைக்கூ கவிதைகளுக்கு இவ்வகை உத்தி ஒரு புதிய வாய்பாட்டு வடிவத்தைக் கொடுக்கிறது.

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடு போனது
பத்திரகாளி சிலை
தொலைந்த பணம் கிடைக்குமா?
புறப்படத் தயாராக
கடைசிப் பேருந்து

அடிக்கடி வருவார்
அம்மாவின் வார்த்தைகளில்
இறந்துபோன அப்பா

மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஹைக்கூக்களைக் கொஞ்சம் ஆழ்ந்து வாசியுங்கள், கவிஞரின் செய்நேர்த்தி அந்தக் கவிதைகளில் மிளிர்வதை உணரமுடியும்.

கடவுளின் கடைசிக் கவிதை என்ற இந்தத் தொகுப்பு சமகாலக் கவிதைத் தொகுப்புகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.

கவிதைப் புத்தகத்தில்
கடைசிப் பக்கம் வரை தேடல்
கிடைக்க வில்லை கவிதை

ஆனால் மணிகண்டனின் கவிதைத் தொகுப்பில் பக்கங்கள் தோறும், தொட்ட இடம் எல்லாம் கண்ணில் தட்டுப்படுகிறது கவிதை. கவிஞரின் முதல் தொகுப்பு என்பதால் வீறுநடை யில்லாமல் சில இடங்களில் தளர்நடை தெரியலாம். இந்தத் தளர்நடைதானே வீறுநடைக்கு ஆதாரம் என்பதை உணர்ந்து தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றி மகிழும் என நம்புகிறேன்.

நா.இளங்கோ

திங்கள், 5 நவம்பர், 2007

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

காரை இறையடியானின் திருவருட்பாவை-ஓர் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். ஹாஜி, முகம்மது அப்துல்காதர், பாத்திமா அம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 17-11-1935 இல் பிறந்தவர்;பன்னிரு நூல்களை இயற்றிய கவிஞரும், மார்க்க அறிஞருமாகிய அமுதகவி அ.சாயபு மரைக்காயரின் பெயரனாகத் தோன்றியவர்; தமிழ் பிரவே, வித்துவான் முதலிய தமிழ்க் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்; காரைக்கால் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்; பூஞ்சோலை என்னும் தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழை ஒன்பதாண்டுகள் வெற்றிகரமாக நடத்தியவர்; சமரசம் இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்; மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணரோடு தொடர்பு கொண்டு, அவர்தம் உலகத் தமிழ்க் கழகத்தில் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தொண்டாற்றியவர். தனித்தமிழ்க் கொள்கையைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சிறப்பினால் தனித்தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப் பெற்றவர்.
பாவலர் காரை இறையடியான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருந்தாலும் அச்சில் வெளிவந்துள்ள நூல்கள் பத்து மட்டுமே, அவை:
1. திருவருட்பாவை
2. திருநபி இரட்டை மணிமாலை
3. காரைக்கால் மஸ்தான் சாகிபு வலியுல்லா வரலாற்றுப் பேழை
4. தமிழமுதம்
5. வாழ்வியல்
6. அறிவியல் ஆத்திசூடி விளக்கவுரை
7. கல்லறைக் காதல்
8. கன்னித்தமிழ் வளர்த்த காரைக்கால் அம்மையார்
9. செந்தமிழ்த் தொண்டர் ஆற்றுப்படை
10. நபிமொழிக் குறள்
பாவலரின் பத்து நூல்களில் தமிழமுதம் என்ற கவிதைத் தொகுப்பு நூல் 1987 ஆம் ஆண்டின் தலைசிறந்த கவிதை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அவர்தம் நபிமொழிக் குறள் என்னும் நூல் தத்துவம், சமயம், அறவியல் ஆகிய துறைகளில் வெளியான மிகச் சிறந்த நூல் என்று தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

திருவருட்பாவை:

காரை இறையடியானின் முதல்நூல் என்ற பெருமைக்குரிய படைப்பு அவரின் திருவருட்பாவையாகும். இஸ்லாத்தின் பெருமைகளை விளக்கும் பல சிற்றிலக்கியங்கள் தமிழில் உண்டு என்றாலும் பாவைப்பாடல் என்ற வகையில் எழுந்த முதல் இஸ்லாமியச் சிற்றிலக்கிய நூல் இதுவே.

சங்க காலத்தில் பெண்கள் விளையாடிய பாவை விளையாட்டில் தொடங்கிக் காலந்தோறும் பற்பல மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்றுப் பாவை எனும் சிற்றிலக்கியம் உருவாயிற்று. இறைவனின் அருட் குணங்களைப் போற்றியும் நாடு நலம் பெற மழைவேண்டியும் மகளிர் குழுவாகப் புறப்பட்டுப் பிற பெண்களைத் துயிலெழுப்பியும் நீராட அழைத்தும் பாடுவதாக அமைவதே பாவை இலக்கியம் ஆகும். பாவை விளையாட்டில் தொடங்கி, சமயச் சார்பு பெற்றுப் பாவை நோன்புக்கும் சமய வளர்ச்சிக்கும் பயன்பட்டு, அதன் பின்னர் நாடு, இனம், மொழி பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாட்டாய் பாவை இலக்கியம் வளர்ந்துள்ளது.

ஆண்டாள் எழுதிய திருப்பாவை வைணவத்திற்கும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சைவத்துக்கும், அவிரோத நாதரின் சமணத் திருவெம்பாவை சமணத்திற்கும் பாவை நூல்களாகத் திகழ்வதைப் போன்று காரை இறையடியானின் திருவருட்பாவை இஸ்லாமிய பாவை இலக்கியமாகத் திகழ்கின்றது. பிற பாவை நூல்களில் கூறப்பட்ட துயிலெழுப்புதல், நீராடல் போன்ற பாவை இலக்கியக் கூறுகள் இந்நூலிலும் அமைந்து சிறக்கின்றன. பாவை பாடலுக்கென்றே அமைந்த ஏலோ ரெம்பாவாய் என்னும் தொடர் இத்திருவருட் பாவையின் ஒவ்வோர் பாடல் ஈற்றிலும் அமைந்திருப்பது பாவை சிற்றிலக்கிய மரபைக் காப்பதாய் அமைந்துள்ளது.

திருப்பாவை, திருவெம்பாவைகளில் பாவை நோன்பின் நோக்கங்களாக நல்ல கணவரை அடைதலும் நாடும் வீடும் சிறப்புற்றோங்கலும் வலியுறுத்தப்படுகின்றன. திருவருட்பாவையோ எல்லாம் வல்ல இறை அல்லாவின் திருவருளைத் தேடலும் பெறலுமே நோக்கமெனக் குறிப்பிடுகின்றது.

இஸ்லாமியப் பண்பாட்டை மறந்து ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்திருக்கும் சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய நெறியின் ஐந்து பெரும் கடமைகளை எடுத்துரைத்து வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. புனித இரமலான் மாத நோன்பின்போது முப்பது நாட்களும் இஸ்லாமியர் இல்லந்தோறும் பாடப்படும் வகையில் முப்பது பாடல்களால் இந்நூல் அமைந்திருப்பது மிகப் பொருத்தமுடையது. இம்முப்பது பாடல்களும் இறை, இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, பொருளறம், அருள்வெளிப் பயணம் என்னும் ஆறு தலைப்புகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடல்கள் வீதம் அமைந்துள்ளது. இத்தகு பகுப்பு முறை ஏனைய பாவை நூல்களில் இடம்பெறவில்லை. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் வலியுறுத்தும் விதத்தில் நூலை அமைத்துள்ள கவிஞரின் திறத்தால் இந்நூல் அக அமைப்பு, புற அமைப்பு இரண்டிலும் சிறந்து விளங்குகின்றது.

இந்நூலுக்குச் சீரியதோர் உரையைத் தெளிவுரையாக இலக்கியத் தென்றல் பேராசிரியர் சா.நசீமாபானு அவர்கள் எழுதியுள்ளமை இந்நூலுக்கு மற்றுமோர் மணிமகுடம்.

காரை இறையடியானின் தமிழ்ப்பற்று:

கவிஞர் காரை இறையடியானின் தனிச்சிறப்பு அவரின் இறைப்பற்றும் இன்பத் தமிழ்ப் பற்றும். இரண்டையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அவர் வெளிப்படுத்த மறப்பதே இல்லை.

தண்டை தமிழ்பாடத் தாழம்பூத் தண்கூந்தல்
கொண்டை குலுங்கியெழிற் கூத்திடுங் கோதையீர்! (பா.3)

முத்தமிழால் பாராட்ட முந்தேலோ ரெம்பாவாய்! (பா.25)

மூல முழுமுதலை முத்தமிழைத்; தந்தானை (பா.13)

துயிலெழுப்பும் பெண்களின் தண்டை தமிழ் பாடுகிறதென்றும், அல்லாவை முத்தமிழால் பாராட்ட வேண்டுமென்றும் தமிழை மறக்காமல் குறிப்பிடும் கவிஞர், உலகுக்கெல்லாம் ஒரே இறைவன் அல்லா, அவனே உலக மொழிகள் அனைத்தையும் படைத்தவன் என்ற பொருளில் முத்தமிழைத் தந்தானை என்று குறிப்பிட்டு தம் இறைக்கொள்கையைத் தெளிவாக விளக்குகின்றார். இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்ற கவிஞரின் கோட்பாட்டை விளக்கும் இத்தொடர் திருவருட்பாவையின் தலைசிறந்த தொடர் எனப்போற்றத் தக்கது.

நடைநலத்தால் சிறக்கும் திருவருட்பாவை:

காரை இறையடியானின் தனித்தமிழ்க் கவிதைநடை கற்பவர் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் கவினுடையது. மரபுக்கவிதையில், எதுகை மோனை அழகுகளுடன் ஓசைநயம் மிக்கதாய் அவரின் பாவைப்பாடல்கள் அமைந்து சிறக்கின்றன.

கண்ணில் கயலாடக் கார்க்கூந்தல் காற்றாட
வண்ண வடிவெங்கும் வாகிளமை வந்தாடத் (பா.6)

அண்டம் அனைத்துலகும் ஆர்படைத்தான் ஆய்ந்திடுக. (பா.3)

அல்லலார் அம்புவியில் அல்லாவை ஆய்ந்துணர்மின் (பா.7)

மொட்டுப்ப+ மூக்காலே மூச்செறியும் மொய்ங்குழலீர்! (பா.10)

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அடிகள் மட்டுமல்ல நூல் முழுமையுமே இத்தகு மோனை சிறந்தோங்கும் நடைநயத்தைப் பரக்கக் காணலாம். திருவருட்பாவையின் பெரும்பாலான பாடல் அடிகள் நான்கு சீர்களிலும் மோனை அமைந்து முற்று மோனையாக அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இசையோடு பாடப்படுவதற்கு ஏற்ப முப்பது பாடல்களும் சொல்லழகுடன் அற்புதமான ஓசை ஒழுங்கும் பெற்று அமைந்துள்ளமையை இசைத்து மகிழ்வார் உணர்வர். இறைவனின் பெருமையைக் கூறும் பின்வரும் இரண்டடிகளில் அகரம், ஆகாரம், இகரம் என உயிர் எழுத்து வரிசையில் அல்லாவின் புகழை வருணிக்கும் நடை கற்போர் நெஞ்சைக் கவரக்கூடியது.

அன்பன் அருளறிவன் ஆகமிலாப் பேரழகன்
இன்பன் இறையல்லா இன்னுணர்வாய் என்நெஞ்சில் (பா.14)

அன்பன்- அருளன் என இறைவனின் பண்பை அடுக்கிக் கூறலும், ஆகமிலாப் பேரழகன் என இறைவனின் உருவமற்ற பேரழகை முரண்தொடை அமைய சிறப்பித்துக் கூறலும் இறையடியானின் கவிநயத்துக்குத் தக்க சான்றுகளாகும்.

காரை இறையடியானின் வருணனைத் திறம்:

திருவருட்பாவையின் முப்பது பாடல்களுமே வருணனைச் சிறப்புடன் விளங்குகின்றன. ஒவ்வொரு பாடலிலும் வரும் முதல் இரண்டடிகள் உறங்கும் பெண்களைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் ஒருவரையெருவர் வருணித்துக்கொள்வதாக அமைந்துள்ளன.

கோலக் குளிர்திங்கள் கொண்முகத்தீர், காண்கூந்தல்
நீல நெடுமுகிலீர், நெற்றிப் பிறையழகீர் (பா.5)

சித்திரப் பாவையீர்! செவ்விதழ்க் கோவையீர்!
முத்துநகைப் பூவையீர்! மொய்வளைச் செங்கையீர்! (பா.25)

நெற்றிக் களத்தில் நிறக் கருமை வில்லிரண்டால்
மற்றோர் மனங்குத்தும் மாவடுக்கண் அம்புடையீர்! (பா.15)

தமிழிலக்கியங்கள் காலந்தோறும் பெண்களை வருணித்துச் சிறப்பித்த அழகு வருணனைகளை யெல்லாம் உள்வாங்கித் தாம் படைத்த பாவை நூலில் பொருள் பொருத்தமுற அவ்வருணனைகளை இடம்பெறச் செய்த கவிஞரின் திறம் பாராட்டுதற்குரியது. காலைப் பொழுதில் பறவைகள் எழுப்பும் ஓசைகளை வருணிக்கும் பகுதியைப் பாருங்கள்,

காகக் கரைவும் கனற்கொண்டை பூச்சிறகாம்
ஆக வணியாடை அஞ்சேவல் கூவலும்
வேகமாய்க் கூர்ந்தும் விழவில்லையோ நுஞ்செவியில் (பா.11)

(காகங்கள் கரையும் ஓசையும் தீப்பிழம்புபோல் சிவந்த கொண்டையினையும் புள்ளிகள் பொருந்திய இறக்கைகளாகிய ஆடையினையும் உடைய அழகிய சேவல் கூவும் ஒலியும் வேகமாகக் கேட்கிறதே, உங்கள் செவிகளில் விழவில்லையா?) இந்தப் பாடலடிகளைக் கூர்ந்து கவனித்தால் காலைப் பொழுதின் வருணனையை ஓசைகளால் காட்சிப்படுத்திக் காட்டும் பாங்கும், அதேசமயம் சேவலை வருணிக்கும் போது அதன் சிவந்த கொண்டைகளை நெருப்புக்கு இணையாகயும் பூஞ்சிறகை ஆடையாகவும் நுட்பமாக வருணித்துக் காட்டும் பாங்கும் இணைந்து இவ்வருணனைப் பகுதியை அழகூட்டுகின்றன.

இயற்கை தரும் பாடம்:

இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அதன் இயல்பான நடவடிக்கைகள் கூட நமக்குப் புதிய புதிய அறவுரைகளையும் அறிவுரைகளையும் தருவதாக உணரமுடியும். கவிஞர்களின் கற்பனை மனது இத்தகு பாடங்களை எளிதாகக் கண்டுணரவல்லது. காரை இறையடியான் நிலவின் வளர்பிறை தேய்பிறை மாற்றங்களைக் கண்டு நமக்குணர்ந்தும் பாடம் சிறப்பானது.

தோற்ற முழுமதியம் தொண்டாற்றித் தேய்திங்கள்
ஆற்றல் அறிஞருக்கு அஃதோர் பெரும்பாடம்!
மாற்ற மதிபார்த்தும் மாமயக்கம் கொண்டீரேல் (பா.28)

(முழுமதியாக வலம் வரும் திங்கள் தொண்டு ஆற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்கிறது. ஆற்றல் மிக்க அறிவாளிகளுக்கும் கூட நிலையற்ற உலகில் வாழ்க்கையும் வளர்பிறை போன்றும், தேய்பிறை போன்றும் இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும் மாறி மாறி அமைவது என்ற பெரிய பாடத்தை அது கற்பிப்பதாக உள்ளது.) திங்கள் தொண்டாற்றித் தேய்கிறது என்ற கவிஞரின் கூற்றில், நிலவு உலகத்துக்கு ஒளியைத் தந்து தந்து அதனால் தேய்ந்து ஒளிமங்குகிறது என்ற தற்குறிப்பேற்றம் உள்ளதை உணரமுடியும். முழு மதியம் தேய்ந்து மறைவதும் பின்னர் வளர்ந்து முழுமதியாவதும் வாழ்க்கையின் இன்ப துன்ப சுழற்சியைக் காட்டுகிறது என்ற இறையடியானின் கற்பனை திருவருட்பாவையின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றது.

இலக்கிய ஆட்சி:

திருவருட்பாவையைக் கற்குந்தோறும் கவிஞரின் சொல்லாட்சி தமிழின் பல்வேறு இலக்கியங்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. கவிஞரின் இலக்கியப் புலமையையும் தமிழிலக்கியங்கள்பால் அவருக்கு உள்ள ஈடுபாடுமே இத்தகு இலக்கியச் சொல்லாட்சிகளுக்குக் காரணம்.

கற்றலால் காண்பயன் கண்ணியமெய் அல்லாவைப்
பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகையன்றோ? (பா.15)

மேலே குறிப்பிட்டுள்ள திருவருட்பாவையின் அடிகள் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் தாக்கத்தால் உருவானது என்பதைக் கற்போர் உணர்வர்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள்: 2)

(நாமக்கல் கவிஞர் உரை: படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒருபொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?) திருக்குறளின் கருத்தும் நாமக்கல் கவிஞரின் உரைக்கருத்தும் பின்னிப் பிணைந்திருப்பதைப் போல் இறையடியான் அவர்கள் மேலே குறிப்பிட்ட பாவை அடிகளை அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தொழுகை என்பதைக் குறிப்பிடுமிடத்தில், பற்றிப் பணிகின்ற பண்புத் தொழுகை என்று அடைகள் பல சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது கவிஞரின் இஸ்லாமிய மெய்யறிவின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது.

திருவருட்பாவையின் நோக்கமும் பயனும்:

இஸ்லாமிய மார்க்கத்தை எளிதாக எடுத்துரைக்கும் வகையில் பாடப்பட்ட இத் திருவருட்பாவையை ஒரு முழுமைபெற்ற இலக்கியம் என்று சிறப்பித்துரைக்கலாம். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளையும் கற்போர் மனம் கொள்ளும் வகையில் விரித்துக் கூறிய கவிஞர் முப்பதாவது பாடலாகிய கடைசிப் பாடலில் மிக அழகாகத் தொகுத்துக் கூறுகின்றார்.

உற்ற திருநோன்பை ஓர்திங்கள் ஏற்றுயர்ந்தோம்
பெற்ற நம்பேரின்பம் பேண்கடன் ஐந்துணர்ந்தோம்
சுற்றம் வறியோர்க்கும் சோரா தறஞ்செய்தோம்
பெற்றித் தொழுகையினால் பேருணர்வு யாம் எய்தோம்
குற்றங் குறைதீர் குணக்குர்-ஆன் கொண்டிசைத்தோம்
மற்றும் திருக்கஃபா மாமதினாச் சீருணர்ந்தோம்
வெற்றி யெனக்கீந்து வியன்தலைவன் நெஞ்சணைத்தான்
தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய் (பா.30)

வெற்றிகரமாக நோன்பு நோற்றதும், ஐந்து கடமைகளை உணர்ந்ததும், அறஞ்செய்ததும், தொழுகைகளைத் தவறாது கடைபிடித்ததும், திருமறையை ஓதி உணர்ந்ததும், இறையில்லமாம் கஃபா, மதீனா இவைகளின் சிறப்புணர்ந்ததும் ஆகிய இஸ்லாம் மார்க்கத்தின் அனைத்துக் கடமைகளையும் சிறப்புற செய்து முடித்த செய்தி இப்பாடலில் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது. இக்கடமைகளைச் செய்து முடித்ததன் பயனாக வெற்றி எனக்கீந்து வியன் தலைவன் நெஞ்சனைத்தான் என்ற அடிகளில் அல்லாவின் அருளைப் பெற்ற பெண், ஆற்றுப்படை போல் தெற்றத் திருவருளைத் தேடேலோ ரெம்பாவாய்! என்று மற்ற பெண்களுக்கு ஆற்றுப்படுத்துகின்றாள். இந்நூலின் பயன் என கவிஞர் விதந்தோதுவது, திருவருளைத் தேடுங்கள் என்பதே.
இஸ்லாமிய திருநெறியின் சிறப்பம்சம், அது உலக வாழ்விலும் சிறப்பானதை, அழகானதை அனுபவிக்கச் செய்கிறது. எதிலும் வரம்பு மீறிடாத அளவோடு கூடிய, நியாயமான இவ்வுலக இன்பங்களைச் சுகிக்க அனுமதித்து, அத்தகு வரம்பிட்ட வாழ்க்கை முறையையே எதிர்கால நிலையான நீடித்த வாழ்க்கை முறைக்கு அடிப்படையாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. (சிராஜூல் மில்லத் சிந்தனைகள், ப.19)
தூக்கம் தேவையானதுதான், அது ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தூக்கம் எல்லை கடந்தால்,

சீர்மை யொளிரமலான் செப்பப் பிறைகண்டும்
கூர்மை விழிமயங்கக் கொண்டீரோ பேருறக்கம்
பார்மைப் பணிமுடங்கின் பண்பாடு மாழ்காதோ?
ஊர்மை உலகியலும் ஊழலாய் மாறாதோ?
நேர்மை நிலைதுலங்க நேரிழையீர் நீரெழுக! (பா.1)

இவ்வுலகில் நாம் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகள் தவறிடும், கடமைகள் தவறினால் நமக்கே உரிய பண்பாடுகள் அழிந்துவிடும், பண்பாடு அழிந்தால் நாம் வாழும் ஊரின் செயல்பாடுகளும் உலகின் நடைமுறைகளும் ஊழல் நிறைந்ததாகிவிடும் எனவே விழிமின்! எழுமின்! என உலக மக்களுக்கே விழிப்பை ஊட்டும் ஒப்பற்ற இலக்கியமாய் இத்திருவருட் பாவையைக் கவிஞர் காரை இறையடியான் படைத்துள்ளமை பாராட்டுதற்குரியது. தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் கடைசி மூச்சுவரைப் பணியாற்றிய காரை இறையடியானின் பணியை உலகம் உணர்தல் வேண்டும்.

ஞாயிறு, 4 நவம்பர், 2007

பாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்

பாரதியின் பகவத் கீதையும் விநாயகர் நான்மணி மாலையும்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே கோர்க்கப்படுகின்றது. இதில் பொருள்முதல் வாதத்தின் முற்போக்கான பங்களிப்பு அரசியல் அரங்கிலும் பொருளியல் அரங்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதகுல வரலாற்றில், உலகின் பெரும்பான்மை மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கருத்துமுதல் வாதம் சார்ந்த ஆன்மீகத்தின் பங்களிப்பு என்ன? சமூக மாற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் ஆன்மீகத்தில் இடம் உண்டா? மனிதகுல முன்னேற்றத்திற்கு ஆன்மீகம் தந்துள்ள முற்போக்குச் சிந்தனைகளின் பாத்திரம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பாரதியியத்தின் வழி விடைகாண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
பாரதி ஆய்வு வரலாறு புதிரான பல பக்கங்களைக் கொண்டது. பாரதி வாழ்ந்த காலத்தில் அவரின் முழுப் பரிமாணத்தையும் அறிந்தவர்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். பாரதி மறைவுக்குப் பின்னரும் பாரதி ஆய்வுகள் ஒரு சமமற்ற போக்கிலேயே நிகழ்த்தப்பட்டன. பாரதியின் அரசியல் பற்றிய ஆய்வுகளும் பாரதியின் ஆன்மீகம் குறித்த ஆய்வுகளும் வேறு வேறு முனைகளிலிருந்து தொடங்கித் தனித்தனிப் பாதைகளில் பயணப்பட்டன. இதுவே பாரதி ஆய்வுகளின் அடிப்படை பலவீனம்.
பாரதி சிந்தனையில் பெரும்பங்கு வகித்த ஆன்மீகம் பற்றியும், பாரதியின் ஆன்மீகத் தேடலின் நோக்கம் பற்றியும், எதை இலக்காகக் கொண்டு பாரதி தன் ஆன்மீகத் தத்துவத்தைக் கட்டமைத்தான் என்பது குறித்தும் நாம் தெளிவுபெறுதல் அவசியம். இத்தகு நோக்கிலான பாரதி ஆய்வுக்கு உரிய களமாக அமையும் பாரதியின் படைப்புகள் இரண்டு. அவை,
1. பாரதியின் பகவத் கீதை முன்னுரையும் பகவத் கீதை உரையும்,
2. பாரதியின் விநாயகர் நான்மணி மாலை.
பாரதியின் புதுவை வாழ்க்கையில் அவர் படைத்த உயர்ந்த இலக்கியங்கள் என்று போற்றப்படும் கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் பாரதி படைத்த மிகச்சிறந்த இலக்கிய, தத்துவப் படைப்புகள்தாம் மேற்குறிப்பிட்ட இரண்டு படைப்புகளும். என்ன காரணத்தாலோ கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற மூன்று இலக்கியங்களும் பெற்ற விளம்பரத்தை பாரதியின் பகவத் கீதை உரையும், விநாயகர் நான்மணி மாலையும் பெறவில்லை.

பாரதியின் பகவத் கீதைஉரை:

பாரதி 1912 ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார் என்று அறிகிறோம். 1924 -25 ஆகிய இக்காலப் பகுதியில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களைப் பாரதி பிரசுராலயத்தார் முதன் முதலில் பதிப்பித்தனர். பாரதி, கீதை உரை நூலுக்கு எழுதிய முன்னுரையை அதன் சிறப்பு நோக்கித் தனி நூலாகப் பாரதி பிரசுராலயத்தார் பகவத் கீதை முன்னுரை என்ற பெயரில் பதிப்பித்தார்கள்.

பாரதி தாம் எந்தக் கோணத்திலிருந்து கீதையை ஆராய்கிறார் என்பதைப் பகவத் கீதை முன்னுரை புலப்படுத்துகின்றது. பகவத் கீதைக்கு பாரதி அணிவித்த முத்தாரமே இம்முன்னுரை நூலாகும். (பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு, சீனி. விசுவநாதன், ப.270)

என்று பதிப்புரையில் பிரசுராலயத்தார் குறிப்பிடுவது இங்கு மனங்கொள்ளத் தக்கது. பின்னர் வேறு சிலரும் இம்முன்னுரையைத் தனி நூலாகப் பதிப்பித்துள்ளார்கள். தொல்காப்பியர் நூலகம் பதிப்பகத்தார் பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரில் இம்முன்னுரையை வெளியிட்-டுள்ளார்கள்.பகவத் கீதை உரையை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது பாரதி அந்நூலுக்கு எழுதிய முன்னுரையே. பாரதியின் தத்துவத் தேடல்களே அவரின் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக, மொழியினருக்காக, நாட்டினர்க்காக அல்ல அவரின் தேடல்கள், அந்தத் தேடல் மனிதகுலம் முழுமைக்குமான தேடல். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே நாளும் சிந்தித்த பாரதி அனைத்து உயிர்க் குலத்திற்குமான சமத்துவத்தைக் கீதையில் கண்டார். பாரதியின் தேடல் முழுமைபெற்ற இடம் அது.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான், ஸர்வமிதம் ப்ரஹம்! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

எவ்வுயிரிடத்தும் எம்மனிதரிடத்தும் எவ்வித வேற்றுமையும் பாராதிருப்பதே, அதாவது சமத்துவமே விடுதலைக்குரிய வழி, அதுவே ஞானம் என்கிறார் பாரதி. பாரதி காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மீக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத் கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, அரவிந்த கோஷ், ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் போன்ற பலருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. பாரதி இவர்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் முற்றிலும் வேறான நோக்கில் கீதையை தரிசித்தார். கீதை உரைக்கு அவர் எழுதிய நீண்ட முன்னுரை பகவத் கீதையின் உட்பொருள் என்ற பெயரிலேயே தனிநூலாகப் பதிப்பிக்கும் பெருமை பெற்றது. பாரதி கீதையில் தரிசித்த ஆன்மீகத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்து உருவாக்கிய இலக்கியமே விநாயகர் நான்மணிமாலை.

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை:

பாரதி தம் தம்பி விசுவநாத ஐயருக்கு 3-8-1918 இல் எழுதிய கடிதத்தில் விநாயகர் ஸ்தோத்திரம் என்ற தம் நூலைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இந்த விநாயகர் ஸ்தோத்திரம் தான், விநாயகர் நான்மணி மாலை. 1918 க்கு முன் பாரதி புதுவையில் வாழ்ந்த காலத்தில் புதுவை மணக்குள விநாயகரை முன்னிறுத்திப் பாடிய இந்த நூல் அச்சில் வெளிவந்தது பாரதி மறைவுக்குப் பின் 1929 இல்தான். பாரதி பிரசுராலயத்தார் 1929 இல் இந்நூலைப் பதிப்பிக்கும் போது பின்வருமாறு தம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்,இந்நூல் பாரதியாரின் கையெழுத்துப் பிரதி அபூர்ணமாயிருந்த இடங்களில் ஸ்ரீதேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஸ்ரீசுத்தாநந்த பாரதியார் அவர்கள் முதலியவர்களைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் காணாதன நகவளைவு(பிராக்கெட்) களுக்குள் தரப்பட்டுள்ளன. (பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு, சீனி. விசுவநாதன், ப.284)பாரதி வழக்கமான பக்தி இலக்கியமாக இந்நூலைப் படைக்கவில்ல. மாறாக, தம் தத்துவத் தேடலின் பிரதியாகத்தான் படைத்துள்ளார். இவ்வுலகில் கலியைக் கொன்று கிருதயுகத்தினைக் கொணர்ந்து எல்லோரும் இம் மண்ணிலேயே அமரத்தன்மை எய்தும் வகையைச் சாத்தியமாக்கும் பிரகடணமாகவே இந்நூலைச் சமைத்துள்ளார்.

கீதையும் நான்மணி மாலையும்:

பாரதியின் கீதை முன்னுரையையும் விநாயகர் நான்மணி மாலை நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் இரண்டில் முன்னது இலக்கணம் போலவும் பின்னது இலக்கியம் போலவும் படைக்கப்பட்டுள்ள திறன் வியப்புக்குரியதாயுள்ளது. பாரதி பகவத்கீதை முன்னுரையில் குறிப்பிடும் கீதையின் உட்பொருள்கள் சிலவும் அதே உட்பொருளை விளக்கும் வகையில் பாரதி பாடிய விநாயகர் நான்மணி மாலைப் பாடல் பகுதிகளும் வருமாறு,

1. உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று, மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். கவிதைகளெல்லாம் நாடகங்களெல்லாம் சட்டங்களெல்லாம் கதை-களெல்லாம் காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.11)

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
சிந்தையே இம்மூன்றும் செய் (வி.நா.மா., பா.25)

2. எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.7)

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே
கவலைப் படுதலே கருநரகம்மா
கவலையற்றி ருத்தலே முக்தி (வி.நா.மா., பா.36)

3. சாகாதிருத்தல், மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை, இஃதே வேத ரகஸ்யம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.18)

துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்,
இஃது உணர்வீரே! (வி.நா.மா., பா.4)

4. மோட்சத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு அவனுடைய சொந்த மனமேயாம். உள்ளப்பகையைக் களைந்துவிட்டால் புறப்பகை தானே நழுவிப்போய்விடும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.23,24)

மனமே! எனைநீ வாழ்வித்திடுவாய்!
வீணே உழலுதல் வேண்டா! (வி.நா.மா., பா.12)

மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல். (வி.நா.மா., பா.36)

5. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டுச் சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகைப் படைத்தாய்? நீயா இதை நடத்துகின்றாய்? உன்னைக் கேட்டா ந~த்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில் எவனும் கவலைப்படுதலும் துயர்ப்படுதலும் அறியாமையன்றோ? (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.8,9)

அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் (வி.நா.மா., பா.24)

மூட நெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன், இன்னும் உரைப்பேன்
தலையில் இடிவிழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன்? என்றிரு,
பாராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்
நமக்கேன் பொறுப்பு? (வி.நா.மா., பா.36)

6. கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு, மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் புசித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களின்றும் விடுபட்டு ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழி.....(பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், பக்.32,33)

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாலும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயுந்தவமே. (வி.நா.மா., பா.10)

7. எல்லாம் கடவுள் மயம் எல்லாத் தோற்றங்களும் எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும் எல்லாக் கோலங்களும் எல்லா நிலைமைகளும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எல்லாச் சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன் மயம். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.8

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே (வி.நா.மா., பா.20)
பல்லுருவாகிப் படர்ந்த வான்பொருளை (வி.நா.மா., பா.12)

8. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.16)

மண்மீதுள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவும்என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா! (வி.நா.மா., பா.32)

9. இடைக்காலத்தில் மாயை பொய் என்றதொரு வாதம் உண்டாயிற்று. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுள் திருமேனி. (பாரதி, பகவத் கீதையின் உட்பொருள், ப.46)

வான முண்டு மாரி யுண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும்
என்றும் இங்குளவாம்....... (வி.நா.மா., பா.32)

மேலே காட்டப்பட்ட ஒப்புமைப் பகுதிகள் சிலவே. பாரதி தாம் விவரித்த பகவத் கீதை உட்பொருளை விளக்கிக் காட்டும் இலக்கியமாகத்தான் விநாயகர் நான்மணி மாலை படைத்தார் என்பது மேலே உள்ள இருநூல்களின் மேற்கோள்களாலும் இனிதே விளங்கும். ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விரிக்கின் பெருகும் என்பதால் சான்றாதாரங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டன.

பாரதி கட்டமைக்கும் ஆன்மீகத்தின் முற்போக்குப் பாத்திரம்:

பாரதி பேசும் ஆன்மீகத்தின் தனித்தன்மையை உணர பாரதி கால அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். 1908 ஏப்ரல் 30 அன்று முஜாப்ப+ரில் நிகழ்ந்த இந்தியாவின் முதல் வெடிகுண்டு வீச்சைத் தொடர்ந்து, ஆங்கில அரசாங்கம் மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்நிகழ்ச்சியின் உடன்விளைவாகத் தீவிர தேசிய இயக்கத்தினர் பலரும் கைது செய்யப்பட்டார்கள். பாரதி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தான்.1905 ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினையோடு பிறந்த சுதேசிய இயக்கம், 1908 ஆம் ஆண்டின் முதல் வெடிகுண்டு வீச்சுக்குப் பின் தேய்ந்து நலிந்து 1911 ஆம் ஆண்டின் இறுதியில்... அடுத்து என்ன? என்ற கேள்விக்குறியாக மாறிவிட்டது.(பாரதி காலமும் கருத்தும், ரகுநாதன், ப.543). 1908-1911 ஆம் ஆண்டுகளில் விடுதலை இயக்கமே சிந்திச் சிதறிச் சீர்குலைந்து போய்விட்ட நிலையில், அதில் ஈடுபட்டிருந்த தீவிர தேசியவாத இயக்கத்தையும் புரட்சிகர இயக்கத்தையும் சேர்ந்த இளைஞர்கள் பலரும், அதன்பின் வௌ;வேறு மார்க்கங்களைத் தேர்ந்தெடுத்தனர்.(மேலது, ப.544)பலரும் வேறு வேறு மார்க்கங்களைத் தேடி ஓடிச் சிதறிப் போனாலும், புதுவையில் தஞ்சம் புகுந்த பாரதி போராட்ட உணர்வுகளிலிருந்து விலகினார் என்றோ, தனிமனித ஆன்ம ஈடேற்றம் காணும் வழியைத் தேடினான் என்றோ யாரும் சொல்லமுடியாது. புதுவைப் படைப்பான பாஞ்சாலி சபதத்தில் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றும் தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சியின் பின்னடைவையும் மீண்டும் தோன்றப்போகும் விழிப்பையும் குறிக்கும் விதத்தில் தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் என்றும் பாடி நம்பிக்கை ஊட்டுகிறான். ஆன்மீகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினாலும் கூட பாரதியின் ஆன்மீகம் முற்போக்கு ஆன்மீகமாகவே கருக்கொண்டது.

கீதையில் பாரதி கண்ட புதிய தரிசனங்கள்:

காலம் காலமாகக் கருத்துமுதல் வாதிகளின் கரங்களில் கிடந்து வருணாசிரம தர்மம் பேசவும், எல்லாம் பொய் என்னும் வரட்டு வேதாந்தம் பேசவும், இவ்வுலக வாழ்வை வெறுத்தொதுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பகவத்கீதைக்கு பாரதி முற்றிலும் வேறான முற்போக்கு விளக்கங்கள் கொடுத்து புதிய தரிசனங்களை கீதையில் காண்கிறார்.
1. ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் - எல்லா மனிதரும் சமம், மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை.
2. கீதை அமிர்த சாஸ்திரம், அமரத்தன்மை இதுவே வேத ரகஸ்யம்.
3. மனிதனுடைய ஒரே சத்ரு அவனுடைய சொந்த மனமேயாகும். எனவே அச்சப்படாதே, கவலைப்படாதே,
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய், அன்பே சிறந்த தவம்.
5. துறவைவிட இல்லறமே மேலானது. இல்லறமே சுவர்க்கம்.
6. மாயை பொய்யென்னும் போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்கீதை எழுதப்பட்டது. மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி.
7. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். சமத்துவமே விடுதலைக்கு வழி.

பாரதியின் இந்தப் புதிய தரிசனங்களோடு படைக்கப்பட்டிருப்பதுதான் விநாயகர் நான்மணி மாலையின் தனிச்சிறப்பு.

முடிவுரை:

பாரதியின் கடைசிப் படைப்பு என்று கருதப்படும் பின்வரும் பாடலில், முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை. (பாரத சமுதாயம், பாரதி) என்று சொன்ன பாரதி, அதே பாடலில் ஒரு புதுமை செய்கிறான், எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான் எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் (பாரத சமுதாயம், பாரதி)பாரதி இந்தப் பாடலில் சமத்துவத்தையும் பகவத் கீதையையும் இணைத்திருக்கின்றார். எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்ற கீதை வாசகம் இங்கே நினைவ+ட்டப்பட்டிருக்கிறது. எல்லாம் கடவுள் மயம் என்பதிலிருந்துதான் பாரதி அன்பை, விடுதலையை, சமத்துவத்துவத்தைக் கட்டமைக்கிறார். பாரதி கூறும் அமரநிலை என்பது சமத்துவ சமூகமே. அதுவே கிருத யுகம். பாரதி ஆன்மீகத்தின் தனித்தன்மையும் இதுவே.

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:
1. சி.சுப்பிரமணிய பாரதி, பாரதியார் கவிதைகள்.
2. சுப்பிரமணிய பாரதியார், பகவத்கீதையின் உட்பொருள்.
3. சி.ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும்.
4. சீனி. விசுவநாதன், பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு.

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் கண்ணதாசனுக்குத் தனியிடம் உண்டென்றால் அதற்குக் காரணம் கண்ணதாசனின் இந்த வரிகள்தான்,

""தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்''

கவிஞர் கண்ணதாசனின் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள் தர்பார்கள் மாறியிருக்கின்றன ஆனால் கவிஞரின் தத்துவங்கள் மட்டும் அட்சயப் பாத்திரங்களாகச் சுரந்து கொண்டேயிருந்தன. கண்ணதாசன் தொடக்கம் முதல் இறுதிவரை எழுதிய அரசியல் கவிதைகளைக் காண்போர் வளர்ச்சி எனக் கணிப்பதும் உண்டு, வழுக்கல் என முகம் சுளிப்பதும் உண்டு அவர்களுக்குரிய பதிலைக் கவிஞரே கூறிவிடுகிறார்,

நானிடறி வீழ்ந்தஇடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்என நான்கூறி விற்றபொருள்
நல்லபொருள் இல்லை அதிகம் .

இந்த வாக்குமுலத்தைக் கவிஞரே தந்தாலும், தனித்தனியாகத் தன்னைப் பற்றி மதிப்பீடு செய்வதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். தன்னைப் பற்றிய தீர்ப்பு எழுதும் பொறுப்பை நம்மிடம் விடும் கவிஞர் மரணத்திற்குப் பிறகே தீர்பெழுத வேண்டும் என்கிறார்.

இவைசரி என்றால் இயம்புவது என்தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என்வேலை
வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு.

கவிஞரின் காலமும் கவிதையும்:

கவிஞர் கண்ணதாசன் பல்வேறு சூழல்களில் பலவகைப்பட்ட முரண்பட்ட மாறுபட்ட கவிதைகளை எழுதினாலும் அவரின் எழுத்துலகக் காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்

1. 1949 முதல் 1960 வரை திராவிட அரசியல் கவிதைக்காலம்
2. 1960 முதல் 1972 வரை தேசிய அரசியல் கவிதைக்காலம்
3. 1972 முதல் 1981 வரை தத்துவ ஆன்மீக கவிதைக்காலம்.

என்பன அவை.இந்த மூன்று காலங்களிலும் அவர் எழுதிய கவிதைகளில் எதை எழுதினாலும் கருப்படு பொருளை உருப்பட வைத்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கவிஞரின் முற்போக்குச் சிந்தனைகள்

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்று பாரதி கோபப்பட்டதைப் போல மக்கள் பசித்திருக்க தத்துவங்கள் பேசி கனவுலகில் வாழும் பேதையாகக் கவிஞர்கள் ஒருபோதும் இருக்க விரும்ப மாட்டார்கள் எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை என்பதே கண்ணதாசனின் கோட்பாடாக இருக்கையில் பசியைக் கண்டு கொதிக்கிறார் கவிஞர்,

இப்படியே பசி நீளுமென்றால்
இதுஎன்ன சுதந்திர பூமி-ஏன்
இத்தனை ஆயிரம் சாமி

திருவள்ளுவருக்கு இருந்த கோபம், பாரதிக்கு வந்த கோபம் கண்ணதாசனுக்கும் வருகிறது. வயிற்றுக்குச் சோறிட வழியில்லை என்றால் ஏன் இத்தனைக் கடவுள்கள்? கடவுள்களால் மக்களுக்கு என்ன பயன்? என்றெல்லாம் சிந்திக்கின்றார், அதுமட்டுமின்றி பெற்ற சுதந்திரத்தால் வந்த பயன் என்ன? இதற்கா சுதந்திரம் என்றெல்லாம் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயகத்தால் பணநாயகம்தான் செழிக்கிறது என்றால் என்ன செய்வது? கவிஞரே ஒரு வழியும் கூறுகிறார், அது என்ன வழி?,

'நாடு முன்னேற நலங்கள் பெருக
வேண்டுமென்றால் விதியொன்று செய்வோம்
ஜனநாயகத்தைச் சற்றே நிறுத்திச்
சவுக்கை எடுப்போம் தரித்திரம் நீங்கும்'

ஓட்டுப் போட்டவனுக்குப் பயன்படாத ஜனநாயகத்தை நிறுத்துவதும் கையில் ஆயுதம் எடுப்பதும்தான் அந்த வழி. ஏனென்றால் ஜனநாயகம் ஜனங்களின் நாயகம் அல்ல அது

முட்டாள்கள் பலர்கூடி முடிவுசெய் தாலதே
முழுதான ஜனநாயகம்.

இதுதான் ஜனநாயகம் பற்றிய கவிஞரின் மதிப்பீடு. ஓடப்பனை உயர்த்த, ஒப்பப்பரை உருவாக்க வேறு வழியில்லை என்கிறார். கவிஞரின் கோபம் எல்லைமீறிப் பொகிறது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காத போது இந்த நாடு இருந்தென்ன அழிந்தென்ன என்று நினைக்கிறார்

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்
இல்லையெனில் இந்நாடு அழியவேண்டும்

ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் இந்த உலகத்தையே அழித்திடலாம் என்ற பாரதியின் கோபத்திற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல கண்ணதாசனின் கோபம்.

தனியுடைமை நீங்கிப் பொதுவுடைமை:

சமத்துவம் ஓங்க தரித்திரம் நீங்க தனியுடைமை மாறவேண்டும் எவருக்கும் இல்லை என்ற நிலையே இல்லாத நாடு வேண்டும் எல்லாரும் எல்லாமும் பெறும் பொதுவுடைமை பூக்க வேண்டும் இதுவே கவிஞரின் விருப்பம்,

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை-நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.

இது எளிதான காரியம் இல்லையே, சொத்துரிமை இருக்கும் வரை சுரண்டல் இருப்பது இயல்புதானே அழிவைத் தடுக்க முடியுமா? முடியும் என்கிறார்

தொழிலைப் பொதுவாக்கிச்
சொத்துரிமை நீக்கிவிட்டால்
அழிவைத் தடுப்பதற்கு
அடிப்படைபோ லாகிவிடும்

தொழிலைப் பொதுவாக்குவதும் சொத்துரிமையை நீக்குவதும்தான் அடிப்படையான பணி என்கிறார் கவிஞர்.உட்கார்ந்து உண்டு கொழுக்கும் ஒருகூட்டம், உழைத்து உழைத்து ஒடாய்ப்போய் ஒட்டிய வயிறுடன் பெருங்கூட்டம் இந்நிலை மாற, வர்க்கங்கள் வீழ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஒரே வழி, இப்போராட்டத்தில் மரணமே பரிசு என்றாலும் அஞ்சிடாமல்இந்த சமுதாயம் துணிந்துவிடும்

இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது
ஏழைக்கு வாழ்வு எல்லோர்க்கும் ஒருவீடு
மாறிவரும் காலம் மாறத்தான் வேண்டும்-இதில்
சாவுவரும் என்றாலும் சமுதாயம் துணிந்துவரும்

என்பது கவிஞரின் நம்பிக்கை.

போராட வாருங்கள் தோழர்களே:

தனியுடைமைக் கொடுமையைச் சாய்க்கப் போராடுவதின் அவசியத்தையும் எப்படியெல்லாம் போராடவேண்டும் என்பதையும் பல பாடல்களில் பலபடியாகப் பாடுகிறார் கவிஞர்,

நெஞ்சை நிமிர்த்துங்கன் தோழர்களே-இனி
நேருக்கு நேர்நின்று பார்ப்போம்-சம
நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்,

என்று பாடுவதோடு மட்டுமின்றி பஞ்சையாய்ப் பராரியாய் வாழும் உழைக்கும் மக்கள் இனித் துஞ்சி இரந்துண்ணும் வாழ்க்கையை விட்டுத் தீமையை, அடக்குமுறையை, ஒடுக்கு முறையை வேரோடு சாய்க்கப் போராடவேண்டும் என்கிறார். மேலும்,

மூடிய கைகளை மேலுயர்த்து உந்தன்
மூச்சில் கனல்விட்டுக் காட்டு-உந்தன்
பேச்சில் புரட்சியை ஊட்டு-பல
கோடிப் பராரிகள் ஒன்றுபட்டாலது
கோட்டை தகர்ந்திடும் கூட்டு-அதைக்
கூட்டட்டும் நாட்டிலென் பாட்டு

என்றும் பாடுவதன் மூலம் ஒற்றுமை-முழக்கம்-போராட்டம் எனப் படிநிலைகளாகப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார். ஒவ்வொரு கவிஞனும் தம்பணி எது என்பதை உணர வேண்டும் அதை மக்களுக்கும் உணர்த்த வேண்டும் இதுவே கவிஞனுக்குரிய மிகப்பெரிய கடமையாகும். தோழர்களை ஒன்றிணைத்துத் கோட்டை தகர்த்திடும் கூட்டை உருவாக்குவதே என்பாட்டின் பணி என்று நெஞ்சுயர்த்திப் பாடுகிறார் கவிஞர்.

எப்படிப் புரட்சிவரும்?

அசையாத மாளிகையில் சொகுசாக வாழ்ந்து வரும் சீமான்களுக்கு வேட்டு வைக்கும் புரட்சி எப்படி வரும்? யாரால் வரும்? இருவேறு குடும்பங்கள்- ஒன்று செல்வர்கள் இல்லம், மற்றொன்று ஏழ்மையின் குடிசை இரண்டுக்கும் என்ன வேறுபாடு,

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால்கஞ்சி

ஏழைக்குடிசையிலோ,

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி,

இந்த வேறுபாடுகள் புரிந்தால்தான், கஞ்சி குடிப்பதற்கில்லாத காரணங்கள் புரிந்தால்தான,; பாமரர்கள் சேர்ந்தெழுவர் இதைஉணர்ந்திருந்தார் கவிஞர் கண்ணதாசன், எனவேதான் பசியால் புரட்சிவரும் என்கிறார்.

பசியால் புரட்சிவரும்
பாமரர்கள் சேர்ந்தெழுந்தால்
அசையாத மாளிகையும்
ஆடிப் பொடிபடுமாம்

அடிவயிறு பற்றிவிட்டால்
அடுத்து நடப்பதென்ன
கொடிய பசி வந்துவிட்டால்
குமுறும் எரிமலைதான்

கவிஞரின் தீர்க்கதரிசனம் இது.

சோவியத்நாடு துயரிலா நாடு:

திராவிட இயக்கங்கள், தேசிய இயக்கம் இவைகளில் மூழ்கிய கவிஞருக்கு இந்த ஞானமெல்லாம் எங்கிருந்து வந்தது? இயல்பாகவே சமூக அக்கறை உடைய கவிஞருக்குச் சோவியத் நாட்டுச் சுற்றுப்பயணமே சமூகச்சிக்கல்கள் குறித்த மிகப்பெரிய தெளிவைத் தந்தது எனலாம். எனவேதான் பொருளாதாரத் துறையிலேயும் சமுதாயத் துறையிலேயும் நமது நாட்டில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தி அவற்றைச் சீராக்கி பொதுவுடைமை உலகு படைக்கும் வழிகளைச் சிந்திக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாகவே சோவியத் நாட்டைப் பற்றியும், கூட்டுப்பண்ணைகளின் மேன்மைகள் பற்றியும் பலபடப் புகழ்ந்து எழுதத் தொடங்கினார்.திருவள்ளுவர் நாடு பற்றிக்கூறிய வரையறைகள் அனைத்தையும் தம்மகத்தே பொருத்தமுறப் பொருத்திக் கொண்ட நாடு சோவியத் நாடுதான் என்பது கவிஞரின் திட்டவட்டமான முடிவு

நாடெனில் யாதென நாட்டிய வள்ளுவன்
பாடல் கூறிய பக்குவத்தே ஓர்
நாடு உண்டாயின் நாமறிந்தவரை
சோவியத் நாடே துயரில்லா நாடு

உறுபசியும் ஓவாப்பிணியும் நீங்கி,
தள்ளா விளையுளும் தக்காரும் பெற்று,
நாடா வளத்தனவாய்

வள்ளுவன் வாக்கிற்கு முற்றும் பொருந்திய நாடாகச் சோவியத்தைக் காண்கிறார் கவிஞர். அதுமட்டுமா? சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகளில் நெஞ்சைப் பறிகொடுக்கிறார் நம்கவிஞர்

பாடுபடும் உழவருக்குப்
பணமும் உண்டு உணவுமுண்டு
நாடுபெறும் லாபத்திலே
பயனும் உண்டு-எல்லாம்
நமது என்று எண்ணுகின்ற
நினைவும் உண்டு.

அதனால் கூட்டுப் பண்ணை-நாடு பயனடையப் பயிர் வளர்த்துக் கூட்டும் பண்ணை என்று கூட்டுப் பண்ணைகளின் மேன்மைகளைப் புகழ்வதோடு இத்தகு நன்மைகளுக்கெல்லாம் காரணமான சோஷலிசம் கொண்டுவந்தால் நமது நாட்டிலும் சோற்றுக்கென்று சண்டைபோடும் உயிர்கள் தங்கும் என்று தன் அவாவையும் வெளிப்படுத்துகிறார்.

நூறுவேலி மிராசுதாரும்
நோய்பிடித்த உழவர்மாரும்
சோறுக்கென்று சண்டைபோடும்
உலகம் எங்கும்-அந்த
சோஷலிசம் கொண்டு வந்தால்
உயிர்கள் தங்கும்.

இப்படிச் சோஷலிச சோவியத் புகழ்பாடும் கவிஞரின் மனதில் நீங்கா இடம் பிடித்த அரசியல் தத்துவம் சமதருமமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சத்தியத்தின் எச்சரிக்கை
சமதருமம் நாடுங்கள்
சத்தியத்தின் எச்சரிக்கை
சரித்திரத்தை மாற்றுங்கள்

என்று சரித்திரத்தையே மாற்றத் துடிக்கும் அவா கவிஞருடையது.

மாசேதுங்கை மறக்காத கவிஞர்:

இந்திய சீன எல்லைப்போரின் போது சீனாவை இடித்துரைக்கத் தவறாத கவிஞர் கண்ணதாசன் சீனாவை எப்போதும் பகைநாடாகவே பார்க்கும் இயல்புடையவர். ஆனால் பொதுவுடைமைப் புரட்சியாளர் மாவோ என்றழைக்கப்படும் மாசேதுங்கைப் பாராட்ட அவர் மறக்கவில்லை.

கண்டு சுதந்திரத்தைக் கவலையுடன் மாசேதுங்
பெற்ற மறுஆண்டில் பெரும்புகழைத் தான்சேர்த்தான்
தன்னாட்டுத் தேவைகளைத் தானே நிறைவுசெயும்
பொன்னாடாகப் புகழ்பெற்றான் இன்றங்கே
ஏழை அடிமையிலை இரப்போர் எவருமிலை

என்று ஏழ்மையை, அடிமைத்தனத்தை, இல்லாமையை ஒழித்த அவரின் புரட்சிக்காகவும் தன்னாட்டைப் பொன்னாடாக மாற்றிய புகழுக்காகவும் வாயாரப் புகழ்கிறார். மேலும்

துப்பாக்கி யாலேதான்
துரைத்தனங்கள் சேரும் எனச்
செப்பியவன் அந்தச்
சிவப்புநிலா மாசேதுங்

சிவப்புநிலா என்று பட்டம் சூட்டி மகிழும் அளவிற்கு அவரது சித்தாந்தங்களை மதிக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

தொகுப்புரை
1. சாமான்யர்களின் பசியைக் கண்டு கோபம் கொண்டு கொதித்தெழுந்தவர் கண்ணதாசன்.
2. நாட்டு முன்னேற்றத்திற்கு ஜனநாயகம் பயன்படாது என்றும் தனியுடைமை நீக்கிப் பொதுவுடைமை ஏற்பதே பொருத்தம் என்றும் கூறுகின்றார் கண்ணதாசன்.
3. பொதுவுடைமை காணும் புரட்சிக்கு என்பாட்டுப் பயன்பட வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.
4. பசியால் புரட்சி வரும் என்று துணிகிறார் கண்ணதாசன்.
5. சோவியத் நாடே திருவள்ளுவர் சொன்ன பொன்னாடு என்கிறார் கண்ணதாசன்.
6. மாசேதுங்கைச் சிவப்புநிலா என்று புகழ்கிறார் கண்ணதாசன்.

மேற்கூறிய கருத்துக்களால் மக்கள் நிறைவான வாழ்வு வாழப் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதே நம் முதண்மையான பணி முழுமையான பணி என்று கவிஞர் கருதுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...