வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள்

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

பேரறிஞர் அண்ணா ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்லர், அவர் ஓர் அறிவுலக மேதை. உலக வரலாற்றில் தம் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக வளர்த்த பெருமைக்குரிய தலைவர் அவர். தலைவர்- தொண்டர் என்ற நிலையை மாற்றி அண்ணன்- தம்பி என்ற உறவுநிலையை நிலைநாட்டிய அரசியல் அறிஞர், அண்ணா அவர்கள். “தம்பி நான் உனக்குத் தலைவனில்லை. உனக்கு அண்ணன். உன் குடும்பத்தின் மூத்த மகன். ஒரு தாய் நம்மைச் சுமக்க முடியாத காரணத்தால் தனித்தனியாகப் பிறந்திருக்கிறோம்.” -அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் அறிவாற்றல் பன்முக ஆற்றலாகப் பரிணமித்து அவரைத் தனிப்பெருமை மிக்க சான்றாளர் ஆக்கியது. ஓர் ஆற்றல் மிக்க பேச்சாளர், வலிமை மிக்க எழுத்தாளர், வளமிக்க நாடகாசிரியர், எளிமையான கவிஞர், கண்ணியம் மிக்க அரசியல் தலைவர், நேர்மையான நிர்வாகி, மனிதநேயப் பண்பாளர், மக்கள் சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர் அண்ணாவிற்கு முன்பும் இருந்ததில்லை. பின்பும் இருப்பதரிது.

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்:

“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அண்ணா. அவருடைய பேச்சிலே எளிமை இருக்கும், இனிமை இருக்கும், கருத்துச் செறிவு இருக்கும். அண்ணாவின் பேச்சாற்றலுக்கு முன்னுதாரணமாக உலக வரலாற்றில் யாரையும் சொல்லமுடியாது. அண்ணாவின் பேச்சு நடையும் தனித்தன்மையானது. இலக்கியத் தமிழும் அடுக்கு நடையும் எதுகை, மோனை, இயைபு நயங்களும் அவர் பேச்சில் துள்ளி விளையாடும். அதே சமயம் வெறும் அலங்காரப் பேச்சாக ஒருபோதும் தம் சொற்பொழிவை அண்ணா அமைத்துக் கொண்டதில்லை. கருத்தாழமிக்க பொழிவாகவே அவருடைய ஒவ்வொரு பேச்சும் அமைந்து சிறக்கும்.
பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய பேரறிஞர் அண்ணா எழுத்தாற்றலிலும் தன்னிகரற்று விளங்கினார். அண்ணாவின் பேச்சாற்றல் நாற்றங்கால் என்றால் அவரின் எழுத்தாற்றல் விளைநிலத்திற்கு ஒப்பாகும். பேச்சுக்கும் எழுத்துக்குமான இடைவெளியை அண்ணா பெரிதும் குறைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் எழுதுவது போலப் பேசினார். பேசுவது போல எழுதினார். அண்ணா எழுதிய தம்பிக்குக் கடிதங்கள் என்ற மடல் இலக்கியம் இதற்குத் தக்கதோர் சான்று. அண்ணாவின் எழுத்துப் படைப்புகளாகத் தற்போது கிடைப்பன,
சிறுகதைகள் 117
புதினங்கள் 6
குறும் புதினங்கள் 25
நாடகங்கள் 15
ஓரங்க நாடகங்கள் 75
கடிதங்கள் 219
கவிதைத் தொகுப்பு 1
இவற்றைத் தவிர அண்ணா ஆசிரியர் பொறுப்பில் இருந்த பொழுது நாளிதழ், வார இதழ் ஆகியவற்றில் எழுதிய தலையங்கங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் ஆயிரக் கணக்கானவையாகும்.

அண்ணாவின் கவிதைகள்:

பேரறிஞர் அண்ணா கவிதைகள் அதிகம் எழுதவில்லை. 1937 முதல் அவர் பல சூழல்களில் வடித்த இசைப்பாடல்கள், இதழ்வாழ்த்து, பொங்கல்வாழ்த்துப் பாக்கள், கதைப்பாடல்கள், அட்டைப்பட விளக்கக் கவிதைகள், அரசியல் அங்கதப் பாக்கள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் முதலானவற்றைத் தொகுத்து 1981 இல் பூம்புகார் பதிப்பகம் ‘அண்ணாவின் கவிதைகள்’ என்ற தலைப்பில் தனி நூலாகப் பதிப்பித்துள்ளது. இக் கவிதைத் தொகுப்பே இக்கட்டுரைக்கு முதன்மை ஆதாரம். இத்தொகுப்பில் மூன்றடிக் கவிதைகள் முதல் பலநூறு அடிகளைக் கொண்ட கவிதைகள் வரை உள்ளன. மொத்தக் கவிதைகள் எழுபத்தாறு. இவை 1.வாழ்த்துப் பாடல்கள் 2.இசைப் பாடல்கள் 3.கதைப் பாடல்கள் 4.அட்டைப்படப் பாடல்கள் 5.பல்சுவைப் பாடல்கள் என்ற ஐவகைப் பகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாவின் பேச்சு நடையே கவிதை நடைபோல் இருக்கும் அழகு பலராலும் பாராட்டப்பட்டது என்றாலும் அண்ணா தம் கவிதைகள் குறித்து எப்பொழுதுமே கொஞ்சம் குறைவான மதிப்பே கொண்டிருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் அண்ணாவே தம் கைப்பட ‘கவிதை அல்ல ஆக்கிக் கொள்ளலாம்’ என்ற குறிப்பினை எழுதியுள்ளார்கள். குறிப்பாக, ‘தேம்புகின்றேன்’ என்ற கதைப்பாடலின் இறுதியில்,
தெய்வ நெறியைத் தமிழகத்தில் பரப்பும் மெய்ஞ்ஞானி என்று நம்பி, ஓர் கபட வேடதாரியிடம் சீடனாகிக் காவி அணிந்து பணியாற்றிய இளைஞன், உண்மை கண்டு உள்ளம் வெதும்பி, காவி களைந்து விட்டு, இல்லறம் புகுந்து, நல்லறம் கற்றிடும் மாணவனான கதை. கவிதை அல்ல புலவர் துணைகொண்டு கவிதை யாக்கிக் கொள்க. (திராவிடநாடு, சூலை 18, 1954.)
என்று எழுதியுள்ளார். மேலும் தம் கவிதை குறித்து அவரே எழுதியுள்ள கவிதை ஒன்றில் ‘ஆசை பற்றி அறையலுற்றனன்’ என்று கம்பர் குறிப்பிடுவது போல் ஆசையால் கவிதைபோல் தருகிறேன் அதில் உள்ள செய்திகளே முக்கியம் என்பதனைக் குறிப்பிடுகின்றார்.

பாடுகின்றான் அண்ணன் ஓர்கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன்பிறந் தாரே!
சீர் அறியேன், அணி அறியேன் சிந்தைஉந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன் ஆசையாலே

(அண்ணாவின் கவிதைகள், ப.7)

இப்படியெல்லாம் அண்ணா தம் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும் மதிப்பீடுகளைப் புலவர் மரபில் சொல்லப்படும் அவையடக்கமாக நாம் கொள்ளமுடியாது. உண்மையில் அண்ணா அவர்கள் கவிதைகள் மீது கொண்டிருந்த அளவற்ற மதிப்பே தம் கவிதைகளைக் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது எனலாம்.

கவிதையும் எழுத்துக்களும் யாருக்காக:

ஒரு படைப்பாளி தம் படைப்பை யாருக்காகப் படைக்க வேண்டும்? என்பது ஒரு முக்கியமான வினாவாகும். ஒரு கவிஞன் யாரைப் பாடுகின்றான், யாரைப் பாடுவதில்லை என்பதைக் கொண்டே அக்கவிஞனின் அரசியலை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இவரைப் பாடுவேன், இவரைப் பாடமாட்டேன் என்று கவிஞன் பிரகடனப் படுத்துவதற்கு என்ன பொருள் என்றால், கவிஞன் யார் பக்கம் நின்று தம் படைப்பைத் தருகின்றான் என்பதற்கான கொள்கை முழக்கமே அதுதான். உலகத்தில் இரண்டு வர்க்கங்கள் உண்டு. ஒன்று ஆளுகிற, சுரண்டுகிற வர்க்கம் அதாவது முதலாளி வர்க்கம் மற்றது ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கம் அதாவது தொழிலாளி வர்க்கம். இந்த இரண்டு வர்க்கங்களில் யார் பக்கம் நின்று பேரறிஞர் அண்ணா தம் படைப்பை, கவிதையைத் தருகின்றார் என்பதனை அவரே ஒரு கவிதையில் வெளிப்படையாக, மிகத் தெளிவாகக் கொள்கை முழக்கம் செய்கின்றார். ‘பொற்காலம் காண’ என்ற தலைப்பில் அவர் வரைந்துள்ள அந்தக் கவிதை ஒரு மொழி பெயர்ப்புக் கவிதையாகும். கவிஞர் ஜான் மேங்ஸல்டு என்பவரின் கவிதையை ஒட்டிப் புனையப்பட்ட அக்கவிதையில்,

எவரைப் பாடமாட்டேன்?
வாழ்வின் சுவை தன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு, உடல் பெருத்து
ஊழியர் புடை சூழ
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேர் ஏறும்
அரசகுமாரர் அருளாலய அதிபர்
தமைக் குறித்து அல்ல.

பாடுவேன் இவரை
குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்
தாங்கொணாப் பாரந்தன்னைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக் கூடத்து உழல்வோன்
ஏரடிப்போன்
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும் கண் கொண்டோன்
குளிர் கொட்ட மழை வாட்ட
குமுறிக் கிடந்தோர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை
இஃதே என் காவியம் காண்
(காஞ்சி 1965)
அண்ணாவின் கவிதைகள், பப.137-138

பேரறிஞர் அண்ணாவின் குரல் அவரின் கவிதைகளில் உழைக்கும் மக்களுக்கான குரலாக ஒலித்தது என்பதுதான் அவர் கவிதைகளின் தனிப் பெரும் சிறப்பாகும்.

அண்ணாவின் இசைப்பாடல்கள்:

தமிழகத்தில் தமிழிசை எழுச்சி பெற்ற காலக்கட்டத்தில் அண்ணா, கவிதைகள் எழுதத் தொடங்கினார். குறிப்பாகக் கவிஞர் பலரும் இசையமைத்துப் பாடுவதற்குரிய பாடல்களைத் தமிழில் தொடர்ந்து எழுதி வந்த காலம் அது. பாவேந்தர்கூட இசையமுது தொகுதிகள் எழுதி வெளியிட்டதை நாம் நினைவில் கொள்ளலாம். அண்ணாவின் கவிதைத் தொகுப்பில் கூட இசைப்பாடல்கள் என்ற பகுப்பில் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் அண்ணா இப்பகுதியில் இடம்பெற்றுள்ள சில பாடல்களுக்கு மெட்டுக்களை அவரே குறிப்பிட்டுள்ளார். சில பாடல்களுக்கு ‘மெட்டு அமைந்திடுக’ என்ற குறிப்பினை வழங்கியுள்ளார். இந்த இசைப்பாடல் பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒன்று வடிவத்தால் சிறந்த இசைப்பாடல், மற்றது உள்ளடக்கத்தால் சிறந்த இசைப்பாடல்.
‘வண்டு கண்டேன்’ என்ற தலைப்பில் அண்ணா வடித்த இசைப்பாடல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இப்பாடலை அண்ணா, அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து வடிவத்தை ஒட்டி அமைத்துள்ளார்.

மலரிடைக் குதித்துமே
மதுவினை ருசித்துமே
மொண்டு, நிரம்ப உண்டு,
களி கொண்டு, பண்டு
பாடிய பண்மறந்து
மலரைத் துறந்து
வேறிடம் பறந்து
பண்பாடும் வண்டு கண்டேன் -காதல்
பண்பாடும் வண்டு கண்டேன்
(திராவிட நாடு 1955)

அண்ணாவின் கவிதைகள், ப.40

மேலே உள்ள அண்ணாவின் இசைப்பாடலைப் படித்த பிறகு பின்வரும் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடலைப் படித்துப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.
மூசுவண்டு வாசமண்டு காவில் மொண்டு தேனை உண்டு
மோகன முகாரி ராகம் பாடுமே –மைய
லாகவே பெடையுடனே கூடுமே.
(அ.ரெ.காவடிச் சிந்து, கழுகுமலை வளம் பா.2)

பேரறிஞர் அண்ணா போகிற போக்கில் ஏனோதானோ என்று கவிதைகளைப் படைக்காமல் தமிழில் உள்ள மரபுச் செல்வங்களை உள்வாங்கிக் கவிதைகளைப் படைத்துள்ளார் என்பதற்கு இதுவே தக்கதோர் சான்று.

அடுத்து உள்ளடக்கத்தால் சிறந்த இசைப்பாடலைக் காண்போம். ‘கொலைகாரன் கோட்ஸே’ என்ற தலைப்பில் அண்ணா படைத்துள்ள இந்த இசைப்பாடல் 1956 இல் எழுதப்பட்டது. ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் இப்பாடல் பதிவு செய்யும் சமூக அவலங்களும், மதநல்லிணக்கத்திற்கு எதிரான இந்துத்துவ மதவெறியும் அதே கோட்ஸே கூட்டத்தால் வழிநடத்தப்படுவதைக் காணும்போது இப்பாடலின் உள்ளடக்கச் சிறப்பு நம்மை வியக்க வைக்கிறது. பாடலைப் பார்ப்போம்,

இந்துவும் முஸ்லீமும் ஒண்ணுன்னு சொன்னாரு
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்கோ

கோட்ஸே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்
குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும்
(திராவிடநாடு 1956)

அண்ணாவின் கவிதைகள், பப. 41-42

சாதாரணப் பாமரர்களின் மொழிநடையில் படைக்கப்பட்டுள்ள இவ்விசைப்பாடல் நம்முன் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தத் தலைமுறையிலாவது நாம் விடைகாண வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா அடிக்கடிக் குறிப்பிடும் அவரின் கொள்கை முழக்கம் இப்பாடலில் பாமரத் தமிழில் ‘குலமும் ஒண்ணு கடவுளும் ஒண்ணு’ என்று பதிவாகியுள்ளமை சிறப்பாகக் கவனிக்கத் தக்கது.

அண்ணாவின் கதைப்பாடல்கள்:

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகளில் அளவால் பெரிய கவிதைகளைக் கொண்ட பகுதி அவரின் கதைப்பாடல்கள் பகுதியே. இப்பகுதியில் மொத்தம் எட்டுக் கதைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பல பாடல்கள் 100 அடிகளுக்கு மேல் 300 அடிகளையும் கடந்து பாடப்பட்டுள்ளன. அண்ணா கவிதைகளின் தனிச் சிறப்பை இக்கதைப்பாடல் பகுதியில்தான் நாம் காணமுடியும். நல்ல ஆற்றொழுக்கான கவிதை நடையும் துள்ளல் நடையும் கலந்து எதுகை மோனைத் தொடைநலங்கள் சிறக்க அண்ணா கவிதையில் கதை சொல்லும் பாங்கு அலாதியானது.
‘தேம்புகின்றேன்’ என்ற தலைப்பில் அமைந்த கதைப்பாடலில் கதைத் தலைவன், உண்மை ஞானி என்று நம்பி ஒரு கபடவேடச் சாமியாரிடம் சீடனாகச் சேர்கிறான். ஒருநாள் போலி சந்நியாசியின் காமக்கூத்து அரங்கேறும் காட்சியைக் காண நேரிட்ட போது இளைஞன் திடுக்கிடுகின்றான். இனி அண்ணாவின் கவிதைநடையில் காண்போம்,

பதறினேன்! பயந்தேன்! நைந்தேன்
அறம் இது தானோ ஐயா!
அருள் தரும் முறை இதானோ!
சீலமோ! சிவநெறியோ!

சிற்றின்பக் கூடமோ! இம்மாடம் தானும்!
காடுடைய சுடலைப் பொடி கொண்டு
கண்ணிலே தூவிடுதல் கற்றீர் நன்று
கா~hயம் கட்டியதும் கட்டிலறை காண்பதற்கோ
ஏன்தானோ இவ்வெளி வேஷம்!
அண்ணாவின் கவிதைகள், ப.45

அண்ணா மேடைப் பேச்சின் அலங்காரமும் லாவகமும் துள்ளலும் இக்கதைப்பாடல் அடிகளில் துள்ளி விளையாடுவதைக் காண்போர் அண்ணா கவிதைத் துறையிலும் சாதிக்கத் தவறவில்லை என்பதை உணர்வர்.

அண்ணாவின் புதுக்கவிதைகள்:

பேரறிஞர் அண்ணா மரபுக் கவிதை மற்றும் இசைப்பாடல்கள் எழுதியதோடு நிறைவடைந்து விடவில்லை. புதுக்கவிதைகளின் நடையிலேயும் சில கவிதைகளைப் படைத்துத் தந்துள்ளார். அண்ணாவின் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல்சுவைப் பாடல்கள் பகுதியின் பெரும்பாலான கவிதைகள் அண்ணாவின் மொழி பெயர்ப்புக் கவிதைகளே. இம் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பெரிதும் புதுக்கவிதை பாணியிலேயே அண்ணா மொழி பெயர்த்துள்ளார்.

மனிதா!
நீ யாருக்கும் தலை வணங்காதே
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளி எறி!
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத
கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்!
செயலாற்று.
(திராவிட நாடு 1955)

அண்ணாவின் கவிதைகள், ப.135

‘மனிதன்’ என்ற தலைப்பில் அண்ணா மொழி பெயர்த்துள்ள இக்கவிதையின் மொழிநடை சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் எழுதப்பட்ட வானம்பாடிக் கவிதைகளுக்கு முன்னோடியாகப் புதுக்கவிதை பாணியில் வடிவம், உணர்த்துமுறை, உத்திகளால் சிறந்து அமைந்துள்ளமை கண்கூடு.

நிறைவாக:

அண்ணா எழுதியுள்ள இக்கவிதைகள் கவிதைகள்தாமா? அல்லது உரை வீச்சா? என்றெல்லாம் பண்டிதர்கள் கவலைப்படலாம். அந்த அச்சம் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே இருந்துள்ளது அதனால்தான் தற்காப்பாக ‘கவிதை அல்ல ஆக்கிக்கொள்ளலாம்’ என்றார். கட்டுரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதைப் போல் அண்ணா, கவிதைகளின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் அத்தகையது. சரி! கவிதைகளுக்கு என்னதான் அளவுகோல்? அண்ணாவின் கவிதைகளை அளந்து பார்த்துவிடலாம் என்று துணிந்தால், நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் கவிதைகளுக்குச் சொல்லும் இலக்கணம்தான் நம்முன் நிற்கிறது.

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
(நன்னூல் நூ. 268)

கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது!. கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது.

பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள் நன்னூலார் கூறும் கவிதை இலக்கணங்களுக்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது. அண்ணா உணர்வினின் வல்லோர் என்பதிலோ அவர் கவிதைகள் அணிபெறச் செய்யப்பட்டுள்ளன என்பதிலோ யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பொருட்கு இடனாக அதாவது உயர்ந்த கருத்து வளத்தோடு அண்ணா எழுதினார், பேசினார், கவிதைகளிலும் அதைத்தான் செய்தார் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. அண்ணா கவிதைகளின் வடிவம்தான் பண்டிதர்களுக்கு நிறைவளிக்காமல் போகலாம். அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. முடிபாக, கருத்தும் உணர்ச்சியும் அணிகளும் நிறைந்து அண்ணா கவிதைகள் கற்பவர் நெஞ்சைக் கவர்வன என்பதே நம் துணிபு.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...