ஞாயிறு, 2 ஜூன், 2019

கடகம்பட்டுக் கல்மரங்கள் (27-12-2018)

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8
9943646563

கடகம்பட்டுக் கல்மரங்கள் -1 (27-12-2018)
தென்னார்க்காடு மாவட்டத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவக்கரையில் உள்ள கல்மரங்கள் குறித்து அறிந்திருப்பீர்கள்.
இங்கே நீங்கள் காண்பது திருவக்கரை ஊருக்குக் கிழக்கே உள்ள கடகம்பட்டு- செம்மண் குவாரியில் காணப்படும் கல்மரங்கள். திருவக்கரையில் இதுவரைக் கண்டெடுத்துள்ள கல்மரங்களை விடப் பலமடங்கு மிகுதியான அளவில் கல்மரங்கள் காணக்கிடைக்கும் இடம்தான் கடகம்பட்டு (கூகுள் வரைபடப் படத்தை இணைத்துள்ளேன்) -(இப்படத்தில் திருவக்கரைக்குக் கிழக்கே செம்மண் நிறத்தில் காணப்படும் திட்டுபோன்ற பகுதிதான் கடகம்பட்டு செம்மண் குவாரி).
இங்கே புதையுண்டிருந்த பலநூறு கல்மரங்கள் நமது அறியாமையாலும் பேராசையாலும் வரலாற்று உணர்வு இன்மையினாலும் செம்மண் குவியல் "லோடு"களோடு கலந்து அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன.

கடகம்பட்டு கல்மரம்

கடகம்பட்டு கூகுள் வரைபடம்

முனைவர் நா.இளங்கோ - கடகம்பட்டு

கல்மரப் புதைவு - கடகம்பட்டு

முனைவர் நா.இளங்கோ - கடகம்பட்டு

கல்மரங்கள் - ஓர் அறிமுகம்
கல்மரம் (FOSSIL WOOD) என்று குறிப்பிடப் படுவது இப்பொழுது கல்லாக மாற்றம் பெற்றுள்ள கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மரங்களையே ஆகும்.
இந்தியாவில் கல் மரங்கள் அதிகமாகக் காணப்படுவது தமிழகத்தில்தான். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை எனும் கிராமத்தை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் மிகவும் அரிய, முழுவதும் கல்லாக மாறிப்போன கல்மரங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) இந்தப் பகுதியில் கல்மரப் பூங்கா ஒன்றினை 1957ஆம் ஆண்டில் அமைத்து சில கல்மரங்களைப் பாதுகாத்து வருகிறது.
புவி மண்படிவங்களில் ஏற்படும் வேதிமாற்றங்களால் படிவப்பாறைகள் உருவாகும் போது நீர்நிலைகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்கள், ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறவகை உயிரினங்கள் மற்றும் மரம் செடி கொடிகளின் மிச்சங்கள் முதலானவை நிலமண் படிவங்களோடு சேர்ந்து படிந்து மடிந்து கோடிக்கணக்கான ஆண்டுகளில் கல்லாய் உருமாறி விடுகின்றன. இப்படிக் கல்லாய் உருமாறிய பழங்காலத்து உயிரினங்களின் மிச்சங்களும் -எச்சங்களுமே ‘பாசில்ஸ்’(fossils) தொல்லுயிரெச்சங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தொல்லுயிரெச்சங்கள் பொதுவாகப் படிவப் பாறைகளிலேயே காணப்படுகின்றன. தமிழகத்தின் கிழக்கு மண்டலங்களில் படிவப் பாறைகள் மிகுதியாக உள்ளன. அதிலும் தொல்மர எச்சங்கள் திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. இத்தகு தொல்மர எச்சங்களில் ஒருவகையே கல்மரங்கள்.
திருவக்கரையை ஒட்டிய பகுதிகளில் கிடைக்கும் கல்மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகள் பழமையானவை. (ஆறு கோடி ஆண்டுகள் என்ற கருத்தும் உண்டு).இங்கு காணப்படும் கல்மரங்கள் பட்டையில்லாத தாவர (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவை.
ஐரோப்பிய இயற்கையியல் அறிஞர் M. Sonneret, 1781 ஆம் ஆண்டில் திருவக்கரைக் கல்மரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.கடகம்பட்டு -திருவக்கரைக் கல்மரங்கள்
இக்கல்மரங்கள் பட்டையில்லாத் தாவர (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவை. இங்குள்ள மரங்களில் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் ஆகிய இரு வகைகளும் உள்ளன. புன்னைக் கட்டாஞ்சி, ஆமணக்கு வகை மரங்களும், புளியமரக் குடும்பத்தை சேர்ந்த மரங்களும் இங்கே இனம் காணப் பட்டுள்ளன
கடகம்பட்டுத் தொடங்கி திருவக்கரை வரை பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் பாறை நிலப்பரப்பு கிழக்கு மேற்காக விரிந்துள்ளது. இந்நிலப்பகுதியில் ஆயிரக்கணக்கில் கல்மரங்கள் மண்ணில் புதைந்துள்ளன. இந்த செம்மண் நிலப்பரப்பு "கடலூர் மணற்பாறைகள்" எனும் படிவப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில்தான் கல்மரங்கள் படிந்துள்ளன. சில மரங்கள் 20 மீ. நீளமும் 1.5 மீ குறுக்களவும் கொண்டவை. இந்த மரங்களில் வேர்ப் பகுதியோ கிளைகளோ இல்லை. எல்லாக் கல்ரமங்களும் படுக்கை வாட்டிலேயே கிடைக்கின்றன. எனவே இந்தவகை மரங்கள் வேறு எங்கிருந்தோ ஆற்றுவெள்ளத்தில் அடித்துக் கொண்டுவரப்பட்டு இங்கிருந்த நீர்நிலைகளில் (அப்பொழுது இப்பகுதி கடற்கரையாகவோ கடலாகவோ இருந்திருக்கலாம்) படிந்திருக்க வேண்டும். மரங்களின் பட்டை போன்ற அமைப்புகள், வட்ட வளையங்கள் (Annular Rings), கணுக்கள் (Nodes) போன்ற அனைத்தும் இந்தக் கல்மரங்களில் தெளிவாகக் காணப்படுகின்றன
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி (கடகம்பட்டு திருவக்கரை செம்மண் பாறைப்பகுதி) கடலால் சூழப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றாக இப்பகுதிகளில் சிலவகை கடல்உயிரிகளின் தொல்லுயிர் எச்சங்கள் (FOSSILS) கிடைக்கின்றன. (படம் இணைக்கப்பட்டுள்ளது)
கடற்கரையை ஒட்டிய மேட்டுப் பகுதிகளில் வளர்ந்து வந்த மரங்கள் பெருவெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்பட்டுக் கரைப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டன. அவை நாளடைவில் மண்ணில் புதைந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் ஏற்படும் வேதிமாற்றச் சூழ்நிலைகளால் கல்லாக இறுகிவிட்டன. அம் மரங்களின் உயிர் அணுக்களினிடையே, மண்ணில் உள்ள சிலிகா (Silica) உட்புகுந்து கல்போல் இறுகி விடுகின்றன. பின்னர் நாளடைவில் மேலேயுள்ள மண் பகுதி கரைந்து நீங்கிப் போக. உள்ளிருந்த கல்மரங்கள் வெளித்தோன்றி விட்டன என இக்கல்மரங்களின் உருவாக்கம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இவ்வாறு கல்லாகிய மரங்கள் ஏறக்குறைய 6 கோடி (6,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உண்டு.

கடகம்பட்டு - கடலூர் செம்மண் அடுக்கும் கல்மரமும்

திருவக்கரை - கடல்உயிரி புதைவடிவு

திருவக்கரை கல்மரப் பூங்கா

களஆய்வில் முனைவர் நா.இளங்கோ - சின்ன.சேகர்

கடகம்பட்டுக்கு மேற்கேயுள்ள செம்மண் திட்டு (தற்போதய செம்மண் குவாரி) தொடங்கித் திருவக்கரையின் கிழக்கேயுள்ள செம்மண் குன்றுவரைப் பரவியுள்ள பகுதியை (செம்மண் குவாரிக்குத் தோண்டியது போக மீதமுள்ள பகுதியை) உடனே மத்திய தொல்லியல் துறை தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்து பாதுகாப்பது முதல்கடமை.

பின்னர், நிலத்தின் மேலடுக்கில் உள்ள மென்மையான செம்மண் அடுக்கினை அகழ்ந்து நீக்கிக் கீழேயுள்ள தொன்மை வாய்ந்த "கடலூர் மணபாறை" வகை நிலத்தில் புதைந்திருக்கும் கல்மரங்களை வெளியே தெரியும் வகையில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.
புவியியல், புவிப்புறவியல் ஆய்வாளர்களும் வரலாற்றுத் தொல்லியல் ஆய்வாளர்களும் மாணவர்களும் பொதுமக்களும் வந்து காணும் வகையில் அப்பகுதி ஒரு தொல்லியல் பூங்காவாக அமைக்கப்படல் வேண்டும்.
இப்பொழுது கடகம்பட்டுச் செம்மண் குவாரியிலிருந்து எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள கல்மரங்களைத் திரட்டி முறையாகப் பாதுகாக்கும் பணியினையும் மத்திய மாநிலத் தொல்லியல் துறைகள் அல்லது அரசுகள் உடனடியாகச் செய்தல் வேண்டும்.
பலகோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்சங்களான கல்மரங்கள் விலை மதிப்பில்லாப் பொக்கிஷங்கள் அவற்றைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
விழிப்புணர்வு பெறுவோம்!
விரைந்து செயலாற்றுவோம்.
-முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி.சனி, 1 ஜூன், 2019

நம் மூதாதையர்களின் முகவரி தேடி - மூன்று

நம் மூதாதையர்களின் முகவரி தேடி -3
சிங்கவரம்

சிங்கவரம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகருக்கு வடக்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்லவகாலத்துக் குடைவரைக் கோயில். இக்குடைவரைக் கோயிலை அமைத்தவன் முதலாம் மகேந்திரவர்மனா? அல்லது அவன் தந்தை சிம்மவிஷ்னுவா? என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. சிங்கவரம் என்பது சிஙகபுரம் என்பதன் மரூஉ என்றும் சிம்மவிஷ்னுவின் பெயரால் இவ்வூர் உருவாக்கப் பட்டது என்பதும் தெளிவு. சிங்கவரம் முன்னாளில் விஷ்னுசெஞ்சி என்று அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது.
அடிவாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படிகள் ஏறிச்சென்றால் கோவிலைக் காணலாம்.உள்ளே எல்லோரா போல் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட குடைவரைக் கோவில். அந்தப் பாறையிலேயே முன்புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது குடைவரையாகத் திகழும் கருவறையில், தலையை சற்றே தூக்கியவாறு, வலக்கையைக் கீழே தொங்கவிட்டு, இடக் கையால் கடக முத்திரை காட்டி, தெற்கில் தலை வைத்துப் பாம்பணையில் கிடந்த கோலத்தில் உள்ளார் அரங்கநாதர். அரந்தநார் உருவம் 24 அடி நீளமாம். மூலவரை மூன்று தனித்தனிப் பகுதிகளாகத்தான் பார்க்கமுடியும். முதல் பாகத்தில் இறைவன் முகம், கரங்கள், ஆதிசேடன், கந்தர்வர் மற்றும் திருமகள்; இரண்டாம் பாகத்தில் இறைவனின் உடல்பகுதி மற்றும் பிரம்மா, மூன்றாவது பாகத்தில்- இறைவனின் பாதங்கள், கீழே பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு மற்றும் அத்ரி முனிவர்களைக் காணலாம்.
சிங்கவரம் கோயில் இறைவனைப் பிற்காலத்துச் சாசனம் ஒன்று, திருப்பன்றிக் குன்று எம்பெருமான் எனக் குறிப்பிடுகின்றது. எனவே தொடக்கத்தில் இக்குடைவரைக் கோவில் வராகப்பெருமாள் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
மேலும் இப்போதுள்ள மூலவர் திருவரங்கத்திலிருந்து மாலிக்காபூர் படையெடுப்பின்போது இங்கு கொண்டுவந்து நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து ஏற்புடையதாகத் தெரியவில்லை.
சிங்கவரம் - மூலவர் -அரங்கநாதர்

சிங்கவரம் கோவில்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
சிங்கவரம்- கொற்றவை

சிங்கவரம், பல்லவகாலத்துக் குடைவரைக் கோவிலின் குடவரைக்குத் தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் அரங்கநாயகி கருவறை உள்ளது. அக்கருவறையின் உள்ளே அங்குள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்க்கையின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவளாக வடிக்கப்பட்டிருப்பதால் இத்துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படுகிறாள்.
தாயார் சன்னதி வழியாக துர்க்கையை நாம் பார்க்க முடியாது. சன்னதியின் அருகேயுள்ள மிகச்சிறிய சன்னல் வழியாகத்தான் அப்புடைப்புச் சிற்பத்தைக் காணமுடியும்.
நான் கீழே இணைத்துள்ள அரங்கநாயகி சிலையின் பின்புறத்தில் புடைப்புச் சிற்பத்தின் ஒருபகுதி தெரிவதைக் காணலாம். விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படும் அப்புடைப்புச் சிற்பத்தின் படத்தையும் இப்பதிவில் இணைத்துள்ளேன். (இணையத்திற்கு நன்றி)
விஷ்ணு துர்க்கை என்று இப்புடைப்புச் சிற்பம் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இச்சிற்பம் கொற்றவையே. மகிஷாசுர மர்த்தினியாகிய கொற்றவையின் சிற்பம் பல்லவர்காலச் சிற்பத்தொகுதிகளிலும் குடைவரைகளிலும் இடம்பெறுவது வழக்கமே.
ஆனால் அச்சிற்பங்களில் மகிஷாசுரனாகிய எருமைத் தலைமேல் கொற்றவை நிற்பதுபோல்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கவரத்துக் கொற்றவைச் சிற்பமோ அவ்வாறில்லாமல், ஒரு காலை எருமைத் தலைமேலும் மற்றொரு காலைத் தரையின் மேலும் வைத்து நிற்கிறது. இந்த அமைப்புள்ள கொற்றவையின் உருவம் வேறெங்கும் காணப்படவில்லை. இது பல்லவச் சிற்பங்களில் மிகப் பழமையானது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
இச்சிற்பத்தில் போர்வீரன் ஒருவன் கொற்றவைக்கு நவகண்டம் படைக்கிறான் (தலையை வெட்டிப் படையலாகத் தருவது மட்டுமல்ல உடம்பின் ஒருபகுதியை அரிந்து படையலாகத் தருவதும் நவகண்டப் படையல்தான்) என ஊகிக்க முடிகிறது. மற்றொருவன் கொற்றவைக்குப் பூசை செய்கிறான்
சிங்கவரம் - கொற்றவைநம் மூதாதையர்களின் முகவரி தேடி - இரண்டு

நம் மூதாதையர்களின் முகவரி தேடி -2
மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் செஞ்சி இணைப்புச் சாலையில் அமைந்துள்ளது மண்டகப்பட்டு என்னும் இவ்வூர். இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் இக்குடைவரைக் கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் உருவாக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட அதாவது கல்லைக் குடைந்து உருவாக்கிய முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இக்குடைவரைக் கோவில் கருதப்படுகின்றது.
இக்குடைவரைக் கோவிலில் காணப்படும் மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு, "செங்கல், உலோகம், சுதை, மரம் இல்லாமல், பாறைகளால் சிவபெருமான், பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்) ஆகிய மும்மூர்த்தி களுக்கும், விசித்திரசித்தன் எனும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதாயனக் கோவில்" என்று இக்கோயிலைக் குறிப்பிடுகின்றது.

மண்டகப்பட்டு - வடமொழிக் கல்வெட்டு
முனைவர் நா.இளங்கோ- பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள்

முனைவர் நா.இளங்கோ - இரத்தின. வேங்கடேசன்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
திருநாதர் குன்று

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊரின் வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் திருநாதர் குன்று என்றழைக்கப்படும் சிறிய மலைக் குன்று உள்ளது. இதனைச் சிறுகடம்பூர் மலையென்றும் அழைப்பர். இக்குன்று தமிழ் மற்றும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இம்மலையின் உச்சியில் உள்ள பெரிய கற்பாறையில் சமண சமயத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அமர்ந்த நிலையில், இருவரிசையில் அமைக்கப்பட்டு, கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள் போலுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. இரு சாமரங்கள் குறுக்காகப் பிணைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
இக்குன்றின் வட திசையில் அருகதேவரின் சிற்பமும், குன்றின் மீது செல்லும் வழியில் உடைந்த நிலையில் அருகதேவரின் அமர்ந்துள்ள சிலையும் காணப்படுகின்றன. குன்றின் உச்சியில் சமணத் துறவிகள் வசித்த பாறைக் குகை ஒன்றும் உள்ளது. சுமார் இருபது பேர் தங்கக்கூடிய வகையில் இயற்கையாக அமைந்துள்ள இக்குகையில் சமண முனிவர்கள் தங்கி உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்திருக்கலாம். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் (கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு) அங்கேயே கிடைக்கின்றன.

முனைவர் நா.இளங்கோ - சிறப்புரை

திருநாதர் குன்று - குகை

திருநாதர் குன்று

இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டுகள் தமிழ்மொழி மற்றும் சமய சமூக வரலாற்றில் மிகமிக முக்கியமானதாகும். முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டாக இக்வெட்டுகளைக் குறிப்பிடமுடியும். சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதன்முதலில் காணக் கிடைக்கின்றது.
இங்குள்ள ஒரு கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டின் உண்மை வடிவத்தையும் அதில் இடம்பெற்றுள்ள தமிழ் எழுத்துக்களின் தற்போதய வரிவடிவத்தையும் இணைத்து இங்கே பதிவிட்டுள்ளேன்.
மற்றொரு கல்வெட்டு, இளைய பட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.
திருநாதர் குன்று - கல்வெட்டு

திருநாதர் குன்று - கல்வெட்டு

முனைவர் நா.இளங்கோ : கல்வெட்டு எழுத்து விளக்கம்


நம் மூதாதையர்களின் முகவரி தேடி - ஒன்று

நம் மூதாதையர்களின் முகவரி தேடி  -1

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-605008

 10-12-2016 சனிக்கிழமை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், சிங்கப்பூர் முனைவர் இரத்தின.வேங்கடேசனின் "விடுதலைப் போராட்ட வீரர் இரத்தினவேலு - வேங்கடேசன் அறக்கட்டளை"யின் ஆதரவில் ஒரு வரலாற்றுச் சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி, முனைவர் இரவிசங்கர், முனைவர் இரா.சம்பத் இவர்களுடன் நெறியாளராக முனைவர் நா.இளங்கோ மற்றும் வழிநடத்தும் முனைவர் இரத்தின.வேங்கடேசன், தமிழ்மாலை வேங்கடேசன்
டன் பேராசிரியர் அரங்க.முருகையன், பேராசிரியர் கே.பழனிவேலு மற்றும் ஆய்வு மாணவர்கள் நாற்பது பேர் புடைசூழச் சிற்றுலா புறப்பட்டோம். உடன் விழுப்புரம் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் ஆற்றுப்படுத்துநராக...
சிற்றுலா சென்ற இடங்கள் 

கீழ்வாலை, பனைமலை, மண்டகப்பட்டு, திருநாதர் குன்று, சிங்கவரம்..

முனைவர் நா.இளங்கோ - பேராசிரியர்களுடன்

ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள்

ஆய்வாளர்கள்

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 

கீழ்வாலை
கீழ்வாலை: விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சிற்றூர் கீழ்வாலை. நெடுஞ்சாலையை ஒட்டித் தெற்கே அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக்குகைகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் மிச்ச சொச்சங்களுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
கீழ்வாலையின் அந்தப் பாறைகளில் பழங்கற்கால மனிதர்கள் வரைந்துள்ள சிவப்புநிற ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இத்தகு பாறை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அப்பாறையில் இடம்பெற்றுள்ள சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளை ஒத்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
கீழ்வாலையின் பாறைகளில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள், குறியீடுகள் இவற்றில் காலவெள்ளத்தில் அழிந்தவை போக எஞ்சியிக்கும் ஓவியங்கள் வெகுசிலவே.
இப்பொழுதும் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஓர் ஓவியம் நம்கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் தீட்டப்பட்டிருக்கிறது. அவ்வோவியத்தில் குதிரை போன்றதோர் விலங்கின் மீது ஒருவன் அமர்ந்திருக்க அவ்விலங்கைப் பிணித்துள்ள கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் முன்னே செல்வது போன்றும் எதிரில் ஒரு மனிதன் எதிர்ப்படுவது போன்றும் அமைந்துள்ளது அவ்வோவியம். மனிதர்களின் முகங்கள் பறவைகளின் அலகுகளோடு தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே பாறையின் ஒருபுறத்தில் ஐந்து குறியீடுகள் வரிசையாக வரையப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறியீடுகளும் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள எழுத்துக் குறியீடுகளை ஒத்துள்ளன.
எழுத்துக் குறியீடுகளும் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள குன்றுக்கு அருகே அவ்வோவியங்களைத் தீட்டிய ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றும் உள்ளது. அந்தக் குகையில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பதுபேர் வசித்திருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதி மனிதர்களின் இந்தக் குகையை ஒட்டி நீர்ச்சுனை ஒன்று உள்ளது. எத்தகைய வறட்சியிலும் வற்றாத இந்தச் சுனைநீரை அந்த ஆதிமனிதர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் குகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் அரிய வரலாற்றுப் புதையல்களாகும்.
பாறைகளின் அருகே பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குழுவாக அமர்ந்து கலந்துரையாடிய வேளையில் முனைவர் நா.இளங்கோவும் எழுத்தாளர் கோ.செங்குட்டுவனும் இக்கீழ்வாலை ஓவியங்களின் வரலாற்றுச் சிறப்பினை ஆய்வாளர்களுக்கு விளக்கியுரைத்தனர்.

முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா.இளங்கோ - வரலாறு 

கீழ்வாலை ஓவியம்

இரத்தின.வேங்கடேசன் - முனைவர் நா.இளங்கோ

நம் மூதாதையர்களின் முகவரி தேடி 
பனைமலை
பனைமலை: பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்மன் ( 700-728 CE ) கலை அம்சத்தில் உருவான பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் கடினமான சிவப்புக் கருங்கல்லால் ஆனதாகும் விழுப்புரம் வழியாக செஞ்சி செல்லும் சாலையில் (அனந்தபுரம் வழி) 20 கி.மீ தொலைவில் பனைமலை அமைந்திருக்கிறது.
பனைமலைக் கோவில் ஓவியம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோயிலின் வடக்குச் சிற்றாலயத்தில் இவ்வோவியம் இடம்பெற்றுள்ளது மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்துத் தலையை சாய்த்து, அழகிய அணிகலன்களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை. (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்கபதாகை என்போரும் உண்டு)
எதிர்ச் சுவரில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவம். அதனை இரசிக்கும் பார்வதி. சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியம் மட்டும் ஓரளவு நின்றிருக்கிறது.
பனைமலை ஓவியம், தென்னிந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தா எல்லோராவுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல்லவ ஓவியம். இலங்கை சிகிரியா மலைக் குன்றில் உள்ள ஓவியங்களுடன் ஒப்பிடக் கூடியது.
மேலும் மகிஷ சம்ஹாரத்திற்க்குப் பின் சாந்தமான வடிவில் நிற்கும் மகிஷாசுரமர்த்தனி சிற்பம் ஒன்று பனைமலையின் இடப்பக்க பாதையில் ஒரு சிறிய குகையில் அமைந்திருக்கிறது. காண்பதற்கரிய இச்சிற்பம் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கது.

பனைமலை - பல்லவர் ஓவியம்


பனைமலல - கொற்றவை

பனைமலை

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...