ஞாயிறு, 28 ஜூன், 2009

விளம்பரம் X க்கு விற்பதோ Y ஐ இலவசம் Z

விளம்பரம் X க்கு
விற்பதோ Y ஐ
இலவசம் Z


முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

இன்றைய உலகம் ஊடக உலகம். இந்த ஊடக உலகின் மிகப் பெரிய பலமும் பலஹீனமும் விளம்பரங்கள்தாம். குறிப்பாக அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் விளம்பரங்கள் இல்லையென்றால் இயங்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவகையில் இந்த ஊடகங்களின் வாழ்வாதாரமே விளம்பரங்களை நம்பித்தான் உள்ளன. பொருளாதார ரீதியில் விளம்பரங்களைச் சார்ந்தே ஊடகங்கள் இயங்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் ஊடகங்கங்களால் விளம்பரங்கள் உயிர்வாழும் நிலைமை தலைகீழாகி விளம்பரங்களால் ஊடகங்கள் உயிர்வாழ்கின்றன. விளம்பரங்களின் இந்த அதீத பலத்திற்கு ஆதாரம் விளம்பரங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரமே. தம்மால் உருவாக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தால் கொழுக்கும் இவ்விளம்பரங்கள் தமக்கு இடமளிக்கும் ஊடகங்களையும் தின்று கொழுத்து அசுர வளர்ச்சி பெற்றுவருகின்றன.

ஊடகம், விளம்பரம், நுகர்வோர்:

ஊடகங்கள் செயல்படப் பணம் தேவை. மாறிவரும் இன்றைய ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிச் சூழலில் ஊடகங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுப் போட்டிகளைச் சமாளித்து வாசகர்கள்/ நேயர்கள்/ பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பணம் தேவை. ஊடகங்கள் தயாரிப்புச் செலவைச் சமாளித்து அதனை நுகர்வோர் மேல் திணிக்காமல் நிலைத்து இயங்க வேண்டுமென்றால் பணம் தேவை. இந்நிலையில் ஊடகங்கள் நம்பியிருப்பதும் சார்ந்திருப்பதும் விளம்பரங்களைத்தாம். இந்த விளம்பரங்களை ஊடகங்களுக்கு வழங்குபவை பன்னாட்டு, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களே. எனவே திட்டமிட்டோ திட்டமிடாமலோ இந்தத் தொழில் நிறுவனங்கள் ஊடகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு, தொழில் நிறுவனங்களின் அதாவது வெளிநாட்டு, உள்நாட்டு, பன்னாட்டுத் தொழிலதிபர்களின் நலம் நாடுவதே ஊடகங்களின் பணியாகிறது. தொழிலதிபர்களின் நலன் பொருள் உற்பத்தி, விற்பனை, இலாபம், கொள்ளை என்ற நுகர்வோர் கலாச்சாரப் பெருக்கத்தில் உள்ளது. ஊடக விளம்பரங்கள் இந்த மகத்தான பணியைத்தான் மிகநுட்பமாகச் செயல்படுத்துகின்றன. இத்தகு நுகர்வோர் கலாச்சாரத்துக்கான இலக்கு உயர்மத்தியத் தர வகுப்பினர்களே. இவர்களே ஊடகங்களின் பெரும்பான்மை வாசகர்கள்/ பார்வையாளர்கள். மிக எளிதில் வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளும் நெகிழ்ச்சிப் போக்காளர்களும் இவர்களே. உயர்மத்தியத் தர வகுப்பினர்களை நம்பித்தான் ஊடகம், விளம்பரம், நுகர்வோர் கலாச்சாரம், பொருளுற்பத்தி, விற்பனை, இலாபம், பணப் புழக்கம், முதலாளிகளின் நலன் என்ற சுழற்சிச் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கின்றது.

விளம்பரம் வரையறை:

ஒரு குறிப்பிட்ட அரசாங்கமோ, நிறுவனமோ, தனிநபரோ அல்லது பொருள் உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ தமது கருத்தைப் பரப்பவோ, பணியை அறிவிக்கவோ, தம் பொருள்களை விற்கவோ அல்லது தம் தேவைகளைப் பெறவோ தாமே பணம் செலவிட்டு வாய்மொழி, எழுத்து மொழி, படங்கள், அசை படங்கள் போன்ற ஊடகங்களின் வழியாகச் செய்யும் அறிவிப்பு அல்லது வேண்டுகோள் விளம்பரம் எனப்படும்.
பொதுவாக விளம்பரங்கள் என்றவுடன் விற்கவும் வாங்கவுமான பொருட்களே நம் நினைவுக்கு வருகின்றன. விளம்பரங்கள் பொருட்களை மட்டும் விற்பதில்லை. கருத்துக்களையும் விற்கின்றன. பணி மற்றும் சேவைகளையும் விளம்பரப் படுத்துகின்றன. “விளம்பரமாவது வாங்குவதற்கோ, விற்பதற்கோ, தருவதற்கோ, பெறுவதற்கோ, ஒன்றிற்காகப் பணியாற்றுவதற்கோ, துணைநிற்பதற்கோ விடுக்கப்படும் அழைப்பாகும்” என்று ரால்ப் ஹாரிஸ் விளம்பரத்தை விளக்குகின்றார்.

விளம்பரங்கள் பண்டம், சேவை, கொள்கை, செய்தி ஆகிய நான்கு நிலைகளில் செயல்பட்டாலும் பொதுநிலையில் விளம்பரங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவன பண்டங்களை வாங்குதல் விற்றல் என்ற பயன்பாட்டில் செய்யப்படும் விளம்பரங்கள் மட்டுமே. விளம்பர முதலீட்டிலும் வணிகத்திலும், விளம்பர நகல் தயாரிப்பு குறித்த தொழில் நுட்பத்திலும் மிகுதியான ஆட்சி செலுத்துவன இவ்வகை விளம்பரங்களே.

விளம்பரத்தின் பணிகள்:

விளம்பரத்தின் முதல்பணி எப்படியாயினும் விற்பனையைப் பெருக்குவதே. உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் விளம்பரங்களின் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்துப் பொருள்களை வாங்கச் செய்து அதிக அளவில் பொருட்களின் விற்பனையையும் உற்பத்தியையும் பெருக்கி இலாபம் ஈட்ட முயல்கின்றனர். விளம்பரங்கள் முதல்பணியும் முதன்;மைப் பணியும் இதுதான்.
விற்பனையைப் பெருக்குவதே விளம்பரங்களின் முதல்பணி என்றாலும் விளம்பரங்கள் அந்த அளவிலேயே தம்பணியை நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக நுகர்வோர் மீது அதீதமான ஆதிக்கத்தையும் விளம்பரங்கள் செலுத்துகின்றன. தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலம் நுகர்வோரின் பழைய கருத்தாக்கங்களைச் சிதைப்பதும் புதிய கருத்தாக்கங்களை விதைப்பதுமான பணிகளையும் அவை மேற்கொள்கின்றன. விளம்பரங்களின் செல்வாக்கால் சராசரி மனிதர்களின் மனோபாவங்கள், பழக்க வழக்கங்கள், நடையுடை, பாவனை ஆகிய அனைத்தும் மாறுதலுக்கு உள்ளாகின்றன. “நுகர்வோர் கலாச்சாரத்துக்காக நம்மைத் தயார்ப்படுத்தும் பணியில் விளம்பரங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. வாழ்க்கையையும் பொருட்களைப் போல வாங்கிவிட முடியும் என்கிற எண்ணத்தை நம் மனதில் அவை வளர்க்கின்றன” என்கிறார் சுரேஷ் பால். (மீடியா உலகம், பக்;. 290) ஆக விளம்பரங்கள் எதனை விளம்பரம் செய்கின்றனவோ அதோடு தம்பணியை முடித்துக் கொள்வதில்லை. மாறாக வேறொன்றையும் நம்மிடத்தில் விற்பனை செய்கின்றன. அதுதான் நுகர்வுக் கலாச்சாரம்.

நுகர்வுக் கலாச்சாரம்:

பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பே நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம். நமக்கு எது தேவை? எவையெவை தேவையில்லை என்ற தெளிவில்லாமல், விளம்பரம் செய்யப்படும் அனைத்துமே நமக்குத் தேவை என்று எண்ணும் ஆசை மனம். இன்றைக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களுமே மக்களின் தேவை கருதி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நினைப்பது சரியல்ல. மாறாக உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு வந்துள்ள பொருட்களின் அடிப்படையிலேயே நம்முடைய தேவைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. சான்றாக, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் என்ற அறிமுகத்தோடு பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் 15 ரூபாய் வரை விற்கப்படும் மினரல் வாட்டர். இன்று மினரல் வாட்டர் குடிப்பதே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்பதே பொது நியதி ஆக்கப்பட்டு விட்டது. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் பாதுகாப்பானதா? ஆரோக்கியமானதா? என்றால் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். அது ஒரு புறமிருக்கட்டும். மினரல் வாட்டர் பாட்டில்கள் மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதா? அல்லது உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தபிறகு நம்முடைய தேவை நிர்ணயிக்க அல்லது நிர்பந்திக்கப்பட்டதா? என்று பார்த்தால் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் என்ற தொடர்ச்சியிலேயே அவை நம்மீது திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. நுகர்வோர் மனதில் தூய்மை, சுகாதாரம், ஆரோக்கியம் என்று கட்டப்பட்ட புனைவுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் பண்பு.

நுகர்வுக் கலாச்சாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தைவிட அதன் வடிவமைப்பு, பேக்கிங், மிகுத்துச் சொல்லப்படும் வாக்குறுதிகள், விளம்பரப்படுத்தும் பிரபலம் இவைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகர் நடிகைகளும் தோன்றி விளம்பரம் செய்யும் பொருள்கள் அதிகம் விற்பனைகின்றன. தரமான பொருள்களுக்குத்தான் அவர்கள் விளம்பரம் செய்வார்கள் என்பதா உண்மை? எந்த நிறுவனம் அதிகக் கோடிகளைக் கூலியாகத் தருகிறதோ அந்த நிறுவனப் பொருள்களைத்தானே அவர் விளம்பரம் செய்வார். இதை நாம் தெரிந்திருந்தும் உணராமலிருக்கிறோமே அதுதான் நுகர்வோர் கலாச்சாரத்தின் பண்பு.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது? எது வாங்கினால் எது இலவசம்? எந்தப் பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி? முதலான நுகர்வுக் கலாச்சாரத் தகவல்களை ஊடகங்கள் நம்மீது வாரி இறைக்கின்றன. அந்தத் தகவல்களைச் சுமந்து கொண்டுதான் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உலகைப் பார்க்கிறார்கள். புதிதாகச் சந்தையில் அறிமுகமாகும் பொருள்கள், முன்பே அறிமுகமான பொருள்களுக்கான புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்டதாக வாக்குறுதியளிக்கப் பழைய பொருள்கள் போன்றவை விளம்பரப் படுத்தப்படும்போது நுகர்வோரிடத்தில் ஒருவகைப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. புதியதை வாங்கும்வரை சமூக அந்தஸ்தில் பிறருக்குப் பின்தங்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நுகர்வோர் ஆளாகிவிடுகின்றனர். பொருள்களை வாங்கும் ஆசையிருந்தும் வாங்க வசதியில்லாதவர்கள் ஒருவிதமான தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தேவை, ஆசை இரண்டும் சமனற்ற முரணிலேயே வாழ்க்கையைப் நிறுத்திவைக்கிறது நுகர்வுக் கலாச்சாரம். உண்மையில் விளம்பரங்கள் முன்னிறுத்தும் மகிழ்ச்சியான குடும்பம் என்பது ஒரு கற்பனையே.

விளம்பரங்கள் எதை விற்கின்றன?

ஒவ்வொரு விளம்பரத்தையும் தனித்தனியாகப் பார்த்து அவற்றின் செல்வாக்கை, தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயல்வது ஒருவகை அணுகுமுறை. ஒட்டுமொத்தமாக அனைத்து விளம்பரங்களையும் கூர்ந்து கவனித்து அவைகளைப் புரிந்துகொள்ள முயல்வது மற்றொரு அணுகுமுறை. இவ்விரண்டாம் அணுகுமுறையிலேயே விளம்பரங்களின் முழுமையான அரசியலை விளங்கிக் கொள்ளுதல் சாத்தியம்.
நாம் தினம் காலையில் ஏதோ ஒரு பிரஷ்ஷால் ஏதோ ஒரு பற்பசை கொண்டு பல் துலக்குகிறோம். ஏன்? எங்கே போயின நம் பல் குச்சிகள்! குளிக்கும்போது தலையைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு ஷாம்புவைக் கொண்டு குளிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் சீகைக்காய்!. தாகமாயிருக்கிறதா? ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனக் குளிர்பானத்தைக் குடிக்கிறோம். ஏன்? எங்கே போயிற்று நம் நீராகாரமும், இளநீரும்! இப்படியே காப்பி, டீ, பூஸ்ட் இன்னும் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் நம் வாழ்வின் அங்கங்களாயினமை எப்படி?
ஒரு குறிப்பிட்ட பற்பசையைப் பயன்படுத்தச் சொல்லி விளம்பரப் படுத்தியது விளம்பரம். ஆனால் நமது மரபான பல்துலக்கும் பழக்கத்திலிருந்து நம்மைப் பற்பசைகளுக்கும் பிரஷ்களுக்கும் மாற்றிய மனோநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். குறிப்பிட்ட ஷாம்புவை விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் ஏதேனும் ஒரு ஷாம்பு போட்டுத்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்ட டீ யைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தியது விளம்பரம். ஆனால் டீயோ, காப்பியோ ஏதோ ஒன்றைக் குடித்தே தீரவேண்டுமென்ற மனநிலையை விற்பனை செய்தவை விளம்பரங்கள்.

உடல் நலமில்லாத ஒருவரைப் பார்க்கச் செல்லும் பலர் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்கின்றனர். ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்லும்படி பிறரால் அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளிக்குப் பிறர் ஹார்லிக்ஸ் குடிக்க ஆலோசனை கூறுகிறார்கள். இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று? இனிப்பு கலந்த சோளமாவு, ஊட்டச் சத்துமிக்க பானமானது எப்படி? விளம்பரம் செய்த விந்தை இது. ஆழ்மனம் வரை ஊடுருவிச் சென்று அரியாசனமிட்டு அமர்ந்துகொண்டன விளம்பரங்கள் விற்பனை செய்த கருத்தாக்கங்கள்.

விளம்பரங்கள் விற்பதும் இலவசமும்:

விளம்பரங்களின் முழுமையான அரசியல் அது செய்யும் விளம்பரங்களில் இல்லை. மாறாக விளம்பரங்கள் விற்பனை செய்யும் நுகர்வோர் கலாச்சார மனோநிலையில்தான் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நாட்டில் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழும் மக்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல். இந்தியர்களில் பலருக்கு மூன்றுவேளை உணவு என்பதே பெருங்கனவு. அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், உணவு, உடை போன்றவைகள் இன்னும் இந்தியர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிடவில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியத் திருநாட்டின் யதார்த்த நிலைமை இப்படியிருக்க, நம் ஊடக விளம்பரங்கள் சித்தரித்துக் காட்டும் வாழ்க்கை உண்மையில் யாருடைய வாழ்க்கை?

விளம்பரங்கள் உருவாக்கும் கனவு வாழ்க்கையும் மேற்கத்திய கருத்தாக்கங்களும், போலியான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகு புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும் நுகர்வோராகிய நம் மனதில் ஆழப்பதிந்து பல்வேறு உளச் சிக்கல்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் நம்மை ஆளாக்குகின்றன. இந்தப் புதிய கருத்தாக்கங்களும் மதிப்பீடுகளும்தாம் விளம்பரங்கள் நமக்கு இலவசமாய் வழங்கியவை.

இந்த இலவசங்களில் முக்கியமானவை பாலியில் சார்ந்த மதிப்பீடுகள். அழகு, கவர்ச்சி குறித்த புதிய சித்தாந்தங்கள். சிவப்பாயிருப்பதும், ஸ்லிம் என்ற மெல்லிய தேகமும், நீண்ட அடர்த்;தியான பட்டுப்போன்ற கூந்தலுமே அழகு. தமிழகத்தில் சிவப்பழகுக் கிரீமைத் தெரிந்துகொள்ளாதவர் அபூர்வம். இந்த அழகுகள் எல்லாம் ஓரிரு நாட்களில் ஒரு பாக்கெட் கிரீம், ஷாம்பு போன்றவைகளால் சாத்தியமாகும் என நம்பவைக்கின்றன விளம்பரங்கள். இத்தகு விளம்பரங்கள் பொருளை மட்டும் விற்கவில்லை. அழகு குறித்த புதிய சித்தாந்தங்களையும் விற்கின்றன. முழுக்க முழுக்க உடலுழைப்பு சார்ந்த, அழுக்கும் வியர்வையும் கொண்ட உண்மையான இந்தியக் கிராமியப் பெண்களுக்கும் இவ்வகை விளம்பரங்களுக்கும் உள்ள முரணை உணர்ந்தால் விளம்பரங்களின் அரசியல் புரியும்.

ஆண்களின் சாதனையே பெண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன. ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் இவ்வகை விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப் படுத்துவதோடு பாலியல் ஈர்ப்பு குறித்த பிழையான மதிப்பீடுகளையும் நம்மிடம் திணிக்கின்றன.

விளம்பரங்கள் பாலியல் ரீதியில் எவ்வளவுதான் புதிய கருத்தாக்கங்களோடும் மேற்கத்திய மதிப்பீடுகளோடும் படைக்கப்பட்டாலும் பெண் குறித்த நமது பழைய சித்தாந்தங்களை விளம்பரங்கள் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள் மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய விளம்பரங்களும் பழைய சித்தாந்தங்களை மீறாமல் கட்டிக் காப்பாற்றுகின்றன.

முடிப்பாக:

130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியநாடு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தை. முயற்சி செய்தால் இந்தியர்களிடம் எதையும் விற்கலாம் என்பதைப் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் கண்டுகொண்டார்கள். இல்லையென்றால் அதிகத் தூசு, புழுதிக்கு வாய்ப்பில்லாத குளிர் நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும் வாக்குவம் கிளீனர்களை இந்தியா போன்ற அதிகத் தூசு, புழுதி மண்டிய வெப்பமண்டல நாட்டில் விற்க முடியுமா? முடிகிறதே என்றால் என்ன பொருள்? சக்திவாய்ந்த விளம்பரத்தின் மூலம் இந்திய நுகர்வோரிடம் எதையும் விற்க முடியும் என்பதுதானே பொருள்.

விளம்பரங்கள் நமக்கு எதிரிகள் இல்லை. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் விளம்பர வருவாய் மட்டும் இல்லையென்றால் ஊடகங்கள் இத்தனை மலிவாக நமக்குக் கிடைக்க வழியில்லை. பத்திரிக்கைகள் 1 ரூபாய், 2 ரூபாய்க்குக் கிடைப்பதும், 24 மணிநேரமும் தொடர்ந்து பல பண்பலை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிப்பதும் 100 ரூபாய் செலவில் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்களைக் கண்டு களிப்பதும் விளம்பரங்களால் மட்டுமே சாத்தியமாயிருப்பது உண்மை. சந்தையில் வந்து குவியும் பொருட்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்தெடுக்கவும் விளம்பரங்களே நமக்கு உற்றதுணை. என்றாலும் விளம்பரங்களிடத்தில் நாம் எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும். பொருட்களைப் போலவே வாழ்க்கையையும் வாங்கிவிடலாம் என்று விளம்பரங்கள் சொல்லாமல் சொல்கின்றன. நம் வாழ்க்கை நமக்கானது, அதை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...