ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி - முனைவர் நா.இளங்கோ

மனிதநேயக் கவிஞர் தமிழ்ஒளி

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

1947 நவம்பர் 15 அன்று கவிஞர் தமிழ்ஒளி வீராயி என்ற காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.
எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி காவியங்கள் தொகுதி ஒன்று, பக். 129-130)

கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். தமிழ்க் கவிதையுலகில் தமிழ்ஒளி போல் மனித நேய மிக்க படைப்பாளிகள் தோன்றுவது அபூர்வம். கவிஞரின் மனித நேயம் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான நேயமாக உருவம் கொண்டது. சமூகத்தில் பொதுவான மனித நேயம் பேசும் படைப்பாளிகள் பலருண்டு. ஆனால் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டு அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லல்படும் ஏழை எளிய மக்களின் வாழ்வைக் கூர்ந்து நோக்கித் தம் எழுத்துக்களால் அவர்கள் படும் துயரங்களைப் படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் துயர் நீக்கும் வழிகளையும் தெளிவுபடுத்திப் படைப்புலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர் கவிஞர் தமிழ்ஒளியே.

தமிழ்ஒளி இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணி வேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை உணர்ந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் கவிதைகளில் பாராட்டினார். துணைநின்றார். தொழிலாளர் சங்கங்களையும், துறைமுகத் தொழிலாளி, டிராம்வேத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, நகர சுத்தித் தொழிலாளி எனச் சங்கம் வைத்துப் போராடத்தொடங்கிய அனைத்து உழைக்கம் மக்களையும் பாராட்டிக் கவிதை புனைந்தார். சென்னைத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தார்.
உலகத் தொழலாளர்களின் உரிமைத் தினமான மே தினத்தைப் பற்றி முதன் முதல் தமிழில் பாடிய கவிஞன் தமிழ்ஒளியே ஆவார்.

தமிழ்ஒளியின் மனித நேயம் எப்படிப்பட்டது?

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது ஒருவகை மனித நேயம். சமூகத்தின் விளிம்பு நிலையில், வாழ்க்கையே போராட்டமாய்ச் சமூக ரீதியாகச் சாதிஎ ன்ற பேரிலும் வர்க்க ரீதியாக தொழிலாளி என்ற நிலையிலும் சுரண்டப்படும் உழைக்கும் மக்கள் மீதான மனித நேயம் மற்றொரு வகை. எல்லா மனிதர்களிடத்தும் பேசும் அன்பும் மனித நேயமும் சமூகத்தின் கடைசிச் குடிமகன் வரைத் தன் கரங்களை நீட்டுவதில்லை. உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரோடு அந்த வகை மனித நேயம் நின்று விடுகிறது.

தமிழ்ஒளிக்குமுன் கவிதை படைத்த எத்தனையோ கவிஞர்கள் அன்பையும் அருளையும் பேசியிருக்கிறார்கள். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் அவலம், கழைக்கூத்தாடியின் துயரம் மற்றும் இன்னபிற கடைக்கோடி மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அவர்களைப் பாதித்திருக்கின்றனவா? இல்லையே, அதனால்தான் கவிஞர் தே.ப.பெருமாள் தமிழ்ஒளியைப் புகழ்ந்து கவிதை பாடும்பொழுது,

“ஏழை நெடுந்துயரை ஏய்ப்பவரின் சூழ்ச்சியினை
ஊழல் சமுதாய ஊனத்தைப் பாழாக்கும்
கீழ்மேல் பிரிவினையைக் கேடளிக்கும் பேதத்தை
வீழ்த்தக் கவிசெய்தான் வேந்து”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.154)

என்று அவரின் உண்மையான மனித நேயப் பண்பினை விதந்து பேசுகின்றார்.
எல்லாக் கவிஞர்களும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் மரத்தை, அதன் அழகை வியந்து பாடுவார்கள். தமிழ்ஒளி,

“குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்தஇலை!
வெந்து கருகிட இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை எனும்பெயர் உற்றுக் கொடுந்துயர் பட்டுக் கருகினையே!
பட்டை எனும்உடை இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே!”

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.57)

என்று வெந்து கருகிப் பட்டைகள் உரிந்து பட்டுப்போய் நிற்கும் மரத்தைப் பரிவோடு பாடும் தமிழ்ஒளியின் கவிதையில் தெரியும் மனித நேயம் வியப்புக் குரியதல்லவா?

இயற்கையைப் பாடும் கவிஞர்கள்

இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை. இயற்கையைப் பாடும்போது உழைக்கும் மக்களை நினைக்கும் கவிஞர்கள் மிகச் சிலரே. இந்த மிகச் சிலரிலும் கவிஞர் தமிழ்ஒளி எப்படி வேறுபட்டுத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் என்பதைக் காணலாம்.

“கருணையில்லார்-மிதிக்கின்றார் ஏழைகளை
இரவெனும் தாய்
மீட்சி தந்தாள் ஏழை மக்களுக்கே!
தூக்கம் என்னும் -புத்தமுதப் பால் சுரந்து பருக வைத்தாள்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

இரவையும் இருட்டையும் பாடும் போதெல்லாம் கவிஞர்களுக்கு வேறு ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் கவிஞர் தமிழ்ஒளிக்கு, உழைப்பவர்களின் உழைத்த உடல்வலி நீங்க இரவு என்னும் தாய் தூக்கம் என்னும் புத்தமுதப்பால் கொடுத்து உறங்க வைப்பதாகத் தோன்றுகிறது.

“நெடுந்தறியோடு ஆலையிலே உழன்றோர் தாமும்
நெருப்புருவாய் உலையருகே- இருந்தோர் தாமும்
கொடுந்துன்பச் சேற்றினிலே உழன்றோர் தாமும்
கொளுத்தும் வெயிலில் வாடிக் கிடந்தோர் தாமும்
படுந்துயரம் போதும் எனக் கதறும் போதில்
பறந்தோடி வந்தாய் நீ இரவே"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.15)

என்று இரவை மனித நேயத்தோடு இணைத்துப் பாடுகிறார்.

தொழிலாளியின் மாளிகை

துறைமுகத் தொழிலாளர்களின் அவலம் மிக்க வாழ்க்கையைப் படம் பிடிக்கும் கவிஞர் தமிழ்ஒளி, அவர்களின் குடும்பம் வாழ்ந்து வரும் இருப்பிடத்தை வருணிக்கும் பாடலில்,

“இநத்ப் பெரும்குடும்பம் என்றும் வசித்துவர
கந்தல் படுதாவில் கட்டியதோர் மாளிகையாம்
கோணி அதன்மேலே கூரை பழந்தகரம்
தூணோ சிறுகொம்பு தொட்டில் பழங்கந்தை"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.27)

‘கந்தல் படுதாவில் கட்டிய மாளிகை’ என அவர்களின் வீட்டைக் குறிப்பிடும் பகுதி சோக உணர்வின் படப்பிடிப்பாக இருப்பதை உணரமுடியும். இப்படித் தெருவோர, சாக்கடையோரப் பகுதிகளில் குடியிருக்கும் இலட்சக் கணக்கான இந்தியக் குடிமக்களைப் பற்றி நினைத்துப் பார்த்து அவர்களின் வேதனைகளைப் பதிவும் செய்யும் படைப்பாளிகள் தமிழ்ஒளியைப் போன்ற ஒரு சிலரே என்பதை உணர்தல்வேண்டும்.

பேதைச் சமூகம்

கழைக் கூத்தாடிகளின் சோகம் மிகுந்த வாழ்க்கையைப் பாடும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் குழந்தைகள் செய்யும் ஆபத்து மிக்க வித்தைகளைக் கணகலங்கிப் பாடுகின்றார்.

“உச்சியில ஒரு சின்னக்கம்பி-அதில்
ஒட்டிய வட்டத் தகரத்திலே
குச்சி உடலொன்று சுற்றுதையா-விசை
கொஞ்சம் தவறிடில் மிஞ்சிடுமோ?"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.23)

பேதைச் சுமூகம், அறிவற்ற சமூகம், இரக்கமற்ற சமூகம் என்றெல்லாம் இந்தச் சமூகத்தைச் சாடுவதன் வழியாகத் தம் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார் கவிஞர்.

அறிவியலின் மேன்மை

கவிஞர் தமிழ்ஒளி விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அவலங்களை மனித நேய உணர்வோடு பாடித் தம் மனித நேயத்தைக் கட்டமைக்கின்றார். அவலங்களைப் பாடுவதும் கண்ணீர் விடுவதும் மட்டுமே மனித நேயமாகுமா? ஆகாது. அவர்கள் துயர் நீக்க என்ன வழி என்று இனங்காட்டுவதே உண்மையான மனித நேயமாகும். எனவேதான் கவிஞர் தமிழ்ஒளி அணுவின் ஆற்றலை வியந்து பாடும் சூழலில் அறிவியல் வளர்ச்சியால், அறிவியலின் ஆற்றலால், உலகில் ‘யந்திரம் கொக்கரிக்க ஆலைகள் தாம் சிரிக்க எந்திரத்தாலே உலாம் நடக்கும் எங்கெங்கும்’ என்று மகிழ்வதோடு,

“கையுழைப்பும் கால் உழைப்பும் காட்டடிமை போல் உழைத்த
மேய்யுழைப்பும் போயொழிய விஞ்ஞானப் பேரொளியால்
வேலைகுறைய விருப்பம் நிறைவெய்த
ஆணும் பேண்ணும் அன்றே சமத்துவமாய்....
விஞ்ஞானப் பூங்கா விரித்த மலர்களாய்
அஞ்ஞானம் நீக்கி அடிமைத்தளை போக்கி....
சூரிய நன்மை சுடர்க பொதுவுடைமை
வாழிய வையம் வளர்க அணுவாற்றல்"

(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 1,ப.94)

என்றெல்லாம் அறிவியல் யுகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களைப் பட்டியல் இடுவதோடு, அறிவியலை அணுவாற்றலை வாழ்த்தவும் செய்கின்றார்.
அறிவியல் வளர்ச்சியால் அறியாமை நீங்கும், அறியாமை நீங்கினால் அறிவு ஓங்கும், அறிவு ஓங்கப் பொதுவுடைமை மலரும், பொதுவுடைமைச் சமூகத்தில் வறுமை ஒழியும், சமத்துவச் சமூகத்தில்,

“உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்!
உழைப்பவனே தேசத்தின் உரிமையாளன்!"


(கவிஞர் தமிழ்ஒளி, தமிழ்ஒளி கவிதைகள், தொகுதி 2,ப.37)
என்ற விபரம் பிறக்கும் இது கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நம்பிக்கை.

வியாழன், 24 செப்டம்பர், 2009

சிங்கப்பூர் ஆர்கிட் மலர்களின் காதலன் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூர் ஆர்கிட் மலர்களின் காதலன் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூருக்கு அழகே அதன் நெடிதுயர்ந்த கட்டிடங்கள்தான் என்று சொல்லுவார் உண்டு. சிங்கையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள் இரண்டு. 1. சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவில் ஆர்கிட் தோட்டம். 2.ஜ+ராங் பறவைகள் சரணாலயம்.

ஆர்கிட் மலர்களுக்கு இணை ஆர்கிட் மலர்கள்தான். எத்துணை வண்ணங்கள், எத்துணை வடிவங்கள். பாவேந்தர் சொன்ன அழகின் சிரிப்பை ஆர்கிட் மலர்களில்தான் நான் காணுகிறேன். உலகின் சிறந்த ஆர்கிட் தோட்டம் சிங்கப்பூர் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. கடந்த 2009 செப்டம்பர் 14 ஆம் தேதி ஆர்கிட் தோட்டத்தின் அழகில் மயங்கி நான் எடுத்த புகைப்படங்கில் சிலவற்றை உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.


சிங்கப்பூர் பாரதி விழாவில் இலக்கியச் செம்மல் விருது

சிங்கப்பூர் பாரதி இலக்கிய விழாவில்
பேராசிரியர் நா.இளங்கோவுக்கு இலக்கியச் செம்மல் விருது.


சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா 11-09-2009 ஞாயிறன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாநாட்டரங்கில் உரையரங்கம், கவியரங்கம், வழக்காடுமன்றம், சிறப்புப் பேருரை, விருது வழங்கல், ஆடல்- பாடல் அரங்கம் எனப் பல்சுவை அங்கங்களோடு முத்தமிழ் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆசிய இயல் துறைத்தலைவர் முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் புதுவைச் சமுதாயக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அரங்க மு.முருகையன் “நாட்டுப்புறப் பாடல்களே பாரதியின் பாடலுக்கு ஆதாரம்” என்ற பொருளில் உரையாற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். தொடக்க விழாவைத் தொடர்ந்து ‘பாரதியை நினைப்போம்’ என்ற தலைப்பில் உரையரங்கமும் ‘யாதுமாகி நின்றாய் பாரதி’ என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றன.

நிறைவு அரங்கமாக மூத்த பத்திரிக்கையாளர் சொற்சித்தர் வே. புருஷோத்தமன் தலைமையில் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோவின் நிறைவுப் பேருரையும் “மகாகவி பாரதியின் கனவுகள் இன்றளவும் நனவாகவில்லை” என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றன. புதுவைக் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ வழக்காடு மன்ற நடுவராகப் பொறுப்பேற்றார். பாரதியின் கனவுகள் நனவாகவில்லை என ஸ்டாலின் போஸ் வழக்குத் தொடுக்க முனைவர் இரத்தின வேங்கடேசன் வழக்கை மறுத்து எதிர் வழக்காடினார்.

விருதளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் நா. இளங்கோவிற்கு அவரின் இருபத்தைந்து ஆண்டுகால இலக்கியப் பணியினைப் பாராட்டிச் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இலக்கியச் செம்மல் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தனர். சொற்சித்தர் வே.புருஷோத்தமன் இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது வழங்கி கௌரவித்தர். கவிஞர் இறை.மதியழகன் நிறைவுப் பேருரைஞரை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்திய முனைவர் இரத்தின. வேங்கடேசன் நன்றி கூறினார்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

சனியன் பெட்டி - மலையருவி

சனியன் பெட்டி

முனைவர் நா.இளங்கோ


மிகுந்த தயக்கத்தோடே... அந்த வீட்டை நெருங்கினேன். கேட்டைத் திறந்து அழைப்பு மணியைத் தேடினேன். சற்று உள்ளடங்கியிருந்தது. அழுத்தினேன். அழைப்பு மணிச்சத்தம் உள்ளே கேட்டதா? ஏன்பதை யூகிக்க முடியவில்லை. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின் யாரும் வராததால் உள்கேட்டைத் திறந்துகொண்டு தயங்கித் தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

ஹாலில் சிலர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சன்னமான அழுகையொலியை மட்டும் கேட்க முடிந்தது. என்னுடைய வருகையைக் கவனித்தது போல் சிலர் லேசாக அசைந்து கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் முகங்கள் இருளடைந்ததைப் போல் இருந்ததால் முகத்தில் அவர்கள் என்ன உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை.

யாருடைய வார்த்தைக்கும் காத்திராமல் ஹாலின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் பவ்வியமாக உட்கார்ந்தேன். நான் நாற்காலியை இழுக்கும் ஓசைகூட அந்தச் சூழலுக்கு இடையூறாக இருக்கலாம் என்ற பயத்தில் மிக மெதுவாக நாற்காலியை இழுத்து உட்காரும் ஓசைகூட கேட்காத வகையில் மென்மையாக உட்கார்ந்தேன்.

ஹாலின் ஒரு மூலையில் அது இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன். இப்பொழுது எல்லோர் முகங்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒருவர் முகம் பேயறைந்ததைப் போலிருந்தது. முற்றொருவர் இலேசாக அழுதுகொண்டிருந்தார். மற்றொருத்தி கண்ணீரை வெளிப்படுத்தாமல் சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். மற்றும் ஒருவர் பொங்கிவரும் அழுகையைத் தவிர்ப்பதற்காக முகத்தை மேல்நோக்கி உயர்த்தி அப்படியும் இப்படியுமாக முகத்தால் ஒரு அரைவட்டமடித்தார்.

மூலையிலிருந்து இரண்டு பெண்கள் தேம்பித் தேம்பி அழும் ஓசை அந்த அறை முழுவதும் வியாபித்து ஒரு இருக்கமான சூழலை உண்டாக்கியிருந்தது. எனக்கு அழுகை வரவில்லை. இப்படி ஒரு கல் நெஞ்சா நமக்கு. இத்தனைபேரின் சோகத்தில் பங்கெடுக்க முடியவில்லையே என்று ஒரு கணம் சிந்தித்தேன். ஒரு நொடியில் அந்த சிந்தனை மறைந்து லேசான சிரிப்பு தோன்றியது. ஏங்கே அந்தச் சிரிப்பு வெளிப்படையாகப் பிறருக்குத் தெரிந்துவிடுமோ? என்ற பயத்தில் சட்டென்று முகத்தை இருக்கமாக்கிக் கொண்டேன்.

நீண்ட நேர அழுகை மற்றும் சோகத்திற்குப் பின்னர் அங்கே ஒரு மயான அமைதி நிலவியது. உறைந்துபோன முகங்களுக்கு மீண்டும் உயிர்வந்ததைப் போலிருந்தது. லேசான அமைதியும் அதைத் தொடர்ந்து சலசலப்புமானது அந்த அறை. இப்பொழுது எல்லோரும் என்னைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போழுது ஒருகுரல் ‘சரி சரி முடிஞ்சது, அடுத்து நியூஸ் போடப்போறான் டிவிய நிறுத்துங்கப்பா’.

வியாழன், 10 செப்டம்பர், 2009

சிங்கப்பூர் பாரதி விழா அழைப்பிதழ் - முனைவர் நா.இளங்கோ

சிங்கப்பூர் பாரதி விழா அழைப்பிதழ்

நிகழ் நிரல்

பெரிதுபடுத்திப் பார்க்கம் (ZOOM)அழைப்பிதழ் மேலட்டை


பெரிதுபடுத்திப் பார்க்கம் (ZOOM)

சிங்கப்பூரில் பாரதி விழா 13-9-2009

சிங்கப்பூரில் பாரதி விழா 13-9-2009

பாரதி 127
(இலக்கிய விழா)
பேரன்புடையீர் வணக்கம்!
எதிர்வரும் 2009 செப்டம்பர் 13 ஆம் நாள் மகாகவி பாரதியின் நினைவு நாளினை நினைவு கூர்ந்திட இலக்கியவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்விழா பிற்பகல் நேர விழாவாகத் துவங்கி மாலையில் இனிதே நிறைவுறும். விழாவில் சிங்கையின் கவிஞர்கள் அறிஞர் பெருமக்கள் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் தமிழக அறிஞர்கள் விழா தொடக்க, நிறைவுப் பேருரையாற்றவும் இருக்கிறார்கள். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மாபெரும் கவிஞரின் நினைவினைப் போற்றி அவர்தம் கவி வரிகளைச் சிந்திப்போம் வாரீரென அன்புடன் அழைக்கின்றோம்.
-இலக்கிய ஆர்வலர்கள், சிங்கப்பூர்நாள் : 13 செப்டம்பர் 2009
நேரம் : பிற்பகல் 2.30 மணியளவில்
நிகழிடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
(மாநாட்டு அறை)
450, விக்டோரியா சாலை
சிங்கப்பூர்

தமிழ்ச்சுவைப் பருக! தவறாது வருக!!

நிகழ்நிரல்

தமிழ் வாழ்த்து : திருமதி கலையரசி செந்தில்குமார்

நாட்டியம் : செல்வி மீனலோச்சனி
(மெக்பர்சன் உயர்நிலைப் பள்ளி)

மலரஞ்சலி : ஆர்வலர்கள் / அறிஞர் பெருமக்கள்

வரவேற்புரை : பரவை செந்தில்குமார்

தலைமை : பேரா. முனைவர் சுப திண்ணப்பனார்

முன்னிலை : ஆசியான் கவிஞர் க து மு இக்பால்
தொடக்கவுரைஞர் : பேரா. முனைவர் அரங்க மு முருகையன்
சமுதாயக் கல்லூரி, புதுவைப் பல்கலைக் கழகம்
“நாட்டுப்புறப்பாடல்களே பாரதியின் பாடல்களுக்கு ஆதாரம்”

தொடக்கவுரைஞர் அறிமுகம் : கவிஞர் சு உஷா

"பாரதியை நினைப்போம்"

பாரதியின் மொழி : கவிமாமணி மா அன்பழகன்

பாரதியின் பெண் : திரு ஜோதி மாணிக்கவாசகம்

பாரதியின் ஊடகம் : திரு செ பா பன்னீர்செல்வம்

"கவியரங்கம்"

"யாதுமாகி நின்றாய் பாரதி”

தலைமை : 'தமிழவேள் கொண்டான்' கவிஞரேறு அமலதாசன்

பாரதி என் தோழன் : கவிதைநதி ந.வீ.விசயபாரதி

பாரதி என் குழந்தை : கவிஞர் இன்பா

பாரதி என் தெய்வம் : கவிஞர் வேள்பாரி

பாரதி என் ஆசான் : கவிஞர் பாலு மணிமாறன்

பாரதி என் காதலி : கவிஞர் சாந்தி உடையப்பன்

பாரதி என் சேவகன் : கவிஞர். இராம வைரவன்

நடனம் : ஈஸ்ட் வீயு உயர்நிலைப் பள்ளி மாணவியர்"வழக்காடு மன்றம்"

"மகாகவி பாரதியின் கனவுகள் இன்றளவும் நனவாகவில்லை"

நடுவர் : இலக்கியச் செம்மல் பேரா. முனைவர் நா.இளங்கோ

வழக்குத் தொடுப்பவர்: சிந்தனைச் செல்வர் ஸ்டாலின் போஸ்

வழக்கு மறுப்பவர் : சொல்லின் செல்வர் முனைவர் இரத்தின வேங்கடேசன்

"நிறைவுப்பேருரை"

தலைமை : சொற்சித்தர் வே புருஷோத்தமன்

நிறைவுப் பேருரைஞர் : பேரா.முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர், பட்டமேற்படிப்பு மையம்,
புதுவை

“பாட்டுக்கொருபுலவன் பாரதி”

நிறைவுப்பேருரைஞர் அறிமுகம் : கவிஞர் இறை மதியழகன்

நிகழ்ச்சி நெறியாளர் : கவிஞர் கோவிந்தராசு

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் பகுதி-௧ முனைவர் நா.இளங்கோ

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் - பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

பரிபாடல் அறிமுகம் :

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் பரிபாடல் எழுபது பாக்களைக் கொண்ட நூல் என அறிகிறோம்.
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று- மருவினிய
வையை யிருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்.


திருமாலுக்கு 8, செவ்வேட்கு 31, காடுகிழாட்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4, எனப் பாடல்கள் இருந்தமை அறிகிறோம். ஆனால் இப்போது கிடைப்பன மொத்தம் 22 பாடல்களே. திருமால் 6, செவ்வேள் 8, வையை 8, இவைதவிர உரைமேற்கோளால் கிடைத்த திருமால் பாடல் 1, வையை பாடல் 1 ஆக இரு முழு பாடல்களும் சில குறைப் பாடல்களும் கிடைத்துள்ளன.

பரிபாடலைப் பாடிய புலவர்கள் பதின்மூவர், அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர். ஒவ்வொரு பாடலின் கீழும் பாடியோர் பெயர், இசை வகுத்தோரின் பெயர், பாடற்பண் ஆகியவை காணப்பெறும். பாடப்பெற்ற பண் அடிப்படையில் முதலில் பண் பாலையாழ் பின்னர் பண் நோதிறம் பின்னர் பண் காந்தாரம் என இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளமையை கூர்ந்து நோக்கி உணரலாம்.

பரிபாடல்கள் குறிப்பிட்ட பண்களோடு பாடப்பட்டன எனவேதான் பரிபாடல் இசைப்பாட்டு எனும் பெயர்பெற்றது. ' இன்னியல் மாண்தேர்ச்சி இசைபரிபாடல்" என நூலின்கண் வரும்தொடரே அதன் இசைத்தன்மைக்கு அகச்சான்றாகும்.

பரிபாடலில் வையைப் பாடல்கள் :

அகத்திணைச் சூழலில் சங்க இலக்கியங்கள் புனலாட்டத்தினை விரித்துரைத்துள்ளன. தொல்காப்பியர், தலைவனும் தலைவியும் ஆற்றிலும் குளத்திலும் பொழிலிலும் தம்நாட்டு எல்லை கடந்தும் விளையாடுவதற்குரியர் என இலக்கணம் வகுத்துள்ளார்.
யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.
(தொல். 1137)
இவ்விளையாட்டு எல்லாத்திணைக்கும் பொதுவானதே. மலைவாழ்நர் அருவியிலும் சுனையிலும் நெய்தல் திணையினர் கடலிலும் மருதத்திணையினர் ஆற்றிலும் நீராடுவதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று நமக்குக் கிடைக்கின்ற வையைப் பாடல்கள் ஒன்பது (பாடல் எண்: 6, 7, 10, 11, 12, 16, 20, 22 பரிபாடல் திரட்டு 2). பெரும்பாலான வையைப்பாடல்களில் அமைப்பு
1. தொடக்கம், மழை பற்றிய செய்திகள் 2. வையை வருணனை 3. மக்களைப் பற்றிய வருணனை 4. அகப்பொருள் தழுவிய காதல் செய்திகள் 5. பாடல் முடிவு என்ற பொதுநிலையில் அமைந்துள்ளன.

வையையைப் பாடிய புலவர்கள் அனைவரும் அதன் வெள்ளக் காட்சியினை மழைப்பொழிவுடன் சேர்த்தே புனைந்துள்ளனர். பின்னர் வையையை வருணிக்கும் பாங்கில் ஆற்றுப் புதுவெள்ளத்தின் நிறம், மணம், நீரோட்டம், வையையின் பயன் எனப் பல நிலைகளில் வருணித்துள்ளனர்.

அடுத்தநிலையில் புனலாட்டில் கலந்து கொண்டோர் பற்றிய வருணனை இடம் பெறுகிறது. சிறுவர் சிறுமியர் வலியர் மெலியர் இளையர் முதியர் ஒருமை மகளிர் வரைவின் மகளிர் தோழியர் ஏவலர்கள் ஆகியோர் புனலாடச் சென்றார்கள்.
முதியர் இளையர் முகைப் பருவத்தர்
வதி மண வம்பு அலர்வாய் அவிழ்ந்தன்னார்
விரவு நரையரும் வெறு நரையோரும்
பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் ....
(10, 19-23)
புனலாடச் சென்றவர்கள் செய்துகொண்ட ஒப்பனைகள் அவர்கள் ஏறி வந்த ஊர்திகள் புனலாட்டுக்குக் கொண்டு சென்ற பொருள்கள் புனலாடிய திறம் புனலாட்டுக்குப்பின் செய்த செயல்கள் ஆகியன அடுத்து பேசப்படுகின்றன.

வையைப் பாடல்களின் தலையாய செய்திகளான அகப்பொருள்செய்திகள் பலநிலைகளில் அடுத்தடுத்து வருணிக்கப்படுகின்றன. இவ் அகப்பொருள் செய்திகளில் ஊடலும் கூடலும் முக்கிய இடம்பெறுகின்றன.

வையையின் சிறப்பு :

பரிபாடல் புலவர் பலர் வையை நதியினைத் தகுந்த அடைமொழிகள் பல தந்து பாராட்டியுள்ளனர். 'நறுநீர் வையை" (11, 140), பூமலி வையை (20, 11), வளங்கெழு வையை (17, 44) இவைகளின் மேலாக தமிழ் வையை (6, 90) என்று தமிழோடு இயைபுபடுத்திப் பாராட்டியுள்ளார் நல்லந்துவனார். மேலும் ''இனிய இயலின் சிறந்த தேர்ச்சி பொருந்திய பரிபாடலையுடைய நறுநீர் வையாய்""
இன்னியன் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்
முன்முறை செய்தவத் திம்முறை இயைந்தோம்
மறுமுறை யமையத்து மியைக
நறுநீர் வையை!
-(11, 137-140)
எனவும் வையை புகழ்துரைக்கப் பட்டுள்ளது.

வையைப்பாடல்கள் அகப்பாடல்களா? :

வையைப் பாடல்கள் எட்டும் தொகுத்தோரால் அகப்பாடல்களாகக் கருதப்பட்டு அகப்பொருள் துறைக்குறிப்பு வகுக்கப்பட்டுள்ளது. பாடுபொருள் வையை என்பதனால் வையை என்று தலைப்பு அமைத்தவர்கள், பாடலின் இடைஇடையே வரும் அகப்பொருள் செய்திகளைக் கணக்கில் கொண்டு துறை வகுத்துள்ளார்கள். தொகுத்தோரால் வகுக்கப்பட்ட துறைகள் இப்பாடல்களுக்கு முற்றும் பொருந்துவதாக அமையாதது மட்டுமின்றி தொல்காப்பிய அகப்பொருள் மரபுகளுக்கும் முரணாக அமைந்துள்ளன.

தலைவன், தலைவி, பரத்தை போன்ற அகப்பொருள் மாந்தர்களின் செயல்களும் இடம்பெறும் பாடலாக வையைப் பரிபாடல்கள் உள்ளனவே அன்றி முழுதும் அகப்பொருள் செய்திகளே பேசப்படவில்லை. சிறுவர் சிறுமியர், இளையர் முதியோர், கற்றோர் கல்லாதவர், அரசன் குடிகள் எனப் பலதிறத்து மக்களும் வையைப்பாடலில் இடம்பெறுகின்றனர்.

அகப்பொருள் மரபுக்கு மாறான நிகழ்வுகள் பலவும் அங்கே நடைபெறுகின்றன. (பரத்தை தோழி நேரடி பூசல், பரத்தை தலைவி நேரடி பூசல், பரத்தையர் அல்லாத பிற பெண்களும் மதுவுண்டு களிப்பது, தலைவி தலைவனைக் காலால் உதைப்பது, தலைவனின் பெருமைக்கு மாறானவற்றைத் தோழி உரைப்பது போன்ற பல நிகழ்வுகள்) எனவே பரிபாடல் வையைப் பாடல்களை அகப்பாடல்கள் என்பது பொருந்துமாறு இல்லை.

வையைப்பாடல்களில் மகளிர் :

பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறும் மகளிர் பலதிறத்தவர். களவுத்தலைவி, கற்புத்தலைவி, தோழி, பரத்தையர், கண்டோர், பரத்தை இல்லத்தார், அறம்கூறும் முதுபெண்டிர் எனப் பலதிறத்துப் பெண்கள் வையைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளனர்.
வையைத் தலைவியர்கள் கற்புக் காலத்துப் பிறர் காணத் தலைவனோடு ஊடுகின்றனர். வாயில்கள் இல்லாமலே ஊடலைக் களைகின்றனர். தலைவனை ஊடலில் தாக்கவும் செய்கின்றனர். பரத்தையரோடு நேரடியாக வாதம் புரிகின்றனர்.
வையைத் தோழியர்கள் தலைவனை நேரடியாகப் பழிகூறி இழித்துரைக்கின்றனர். பரத்தையர்களை கடுமையான ஏசல்மொழிகளால் பழித்துரைக்கின்றனர்.
வையைப் பரத்தையர்கள் தலைவனிடம் உரிமையோடு ஊடல்கொள்கின்றார்கள். தலைவியோடு நேரடியாகப் பூசலிட்டு தம்உரிமையையும் சாதுர்யத்தையும் வெளிப்படுத்து கின்றார்கள்.
வையைப் பாடல்களில் இடம்பெறும் பிற பெண்கள் தலைவிக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவும் பரத்தைக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவும் தலைவி தோழி பரத்தை பூசலை விலக்குகின்றவர்களாகவும் உள்ளனர்.

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் பகுதி-௨ -முனைவர் நா.இளங்கோ

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் -பகுதி-2

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

வையைப்பாடல் - ஒருபாடல் ஒருகாட்சி :

பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறம் மகளிர் குறித்த ஆய்வுக்கு வாய்ப்பாக பரிபாடலில் இருபதாம் பாடலாக அமைந்துள்ள நல்லந்துவனாரின் பாடல் ஒன்றினைச் சிறப்பாக நோக்குவோம்.
இப்பாடலுக்கு இடப்பட்ட ''பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகனுக்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது" என்ற துறைக்குறிப்பு பொருந்துமாறில்லை.

புனலாட ஒரு தலைவியுடன் வந்த தோழியர் தலைவன் உடனிருப்ப தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். அதனையறிந்து தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

என்ற வசைமொழிகள். இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழையசாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.
பரத்தையைக் கணிகையென்றும் பொதுமகளென்றும் கூறும் இவ்வகை மொழிகள் சங்கஇலக்கியங்களில் நாம் காணாத கேட்காத மொழிகள்.

மேலும் தோழி தலைவனைப் பற்றி கூறுவன, ''முன்னர் கெட்டுப்போன எம் எருதினைத் தேடிக் கண்டுபிடித்து வணக்கி இவ்வையையாகிய தொழுவத்தில் புகவிட்டு அடித்து இடித்து அது எம் எருது என்று அறிவிக்க உன்னைத் தொடர்ந்தோம்". இங்கே எருது என்று குறிப்பிடப்படுபவன் தலைவனே!.தோழி தலைவனை இப்படி இழித்துரைப்பதெல்லாம் அகமரபு காணாத புதுமை.

இப்போது தலைவி நேரடியாகப் பரத்தையிடம்
எந்தை எனக்கு ஈத்த இடுவளை ஆரப்பூண்
வந்தவழி நின்பால் மாயக்களவு அன்றேல்
தந்தானைத் தந்தே தருக்கு
-(20, 76-78)
என்தந்தை எனக்குத் தந்த வளையலும் ஆரமும் உனக்கு வந்தவழி களவு இல்லையென்றால் இவை தந்தவனை எனக்குக் காட்டு என்று கேட்கிறாள். இதற்குப் பரத்தை கூறும் மறுமொழி இன்னும் புதுமையானது, உன் அன்பன் எனக்கும் அன்பன் இவை மட்டுமல்ல உன் சிலம்புகளையும் கழற்றி எனக்குத் தருவான்.

இப்படிப் பலவகையிலும் இன்னும் பல புதுமையான சுவையான செய்திகளுடன் தொடர்கிறது மேலே குறிப்பிட்ட வையைப்பாடல்.
மருதநில உரிப்பொருளாகிய ஊடலும் ஊடல் நிமித்தமும் பாடும் சங்க அகப்பாடல்களில் இடம்பெறும் பரத்தையர் பற்றிய செய்திகளும் பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறும் பரத்தையர் பற்றிய செய்திகளும் நமக்கு எவற்றை உணர்த்துகின்றன?.
பரத்தையர் பற்றிய சித்தரிப்புகள் எந்த அளவிற்கு உலகியலோடு பொருந்தும்?. இவை உலகியலா? அன்றிப் புலநெறி வழக்கா? இச்சிக்கல் ஆய்விற்குரியது.

சங்கப்பாடல்களில் காதலும் கற்பும்

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.
தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டதே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

கற்பு ஒரு கற்பிதம் :

தனியுடைமை ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல் கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன.
கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. ஆணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் பெண்ணை கட்டுப்பாட்டிற்குள் அடக்கிவைக்கவே கற்பு கற்பிக்கப்பட்டது. பெண்ணுக்குக் கற்பை வலியுறுத்தக் கற்பிக்கப்பட்டதே காதல். காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள்-விலைமகள் :

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள்கள் பற்றிய புலநெறிவழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக்காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக்கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்க கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலநெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

கற்புப் புனிதம் :

கட்டுரையில் முன்பு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பரிபாடலின் இருபதாம் பாடலில் நாம் பார்த்த பரத்தை பற்றிய கடுமையான சாடல்களுக்கு எதிர்நிலையில் தலைவியின் கற்பின்திறம் விதந்து பாராட்டப்படுவதையும் இங்கு ஒப்பு நோக்கவேண்டும்.

தோழி மிகக்கடுமையாகப் பரத்தையைச் சாடிய பிறகு பரத்தை தலைவியை சிலசொல்லி ஏசுகிறாள். இந்த ஏசல் மொழிகளைப் பாடல் குறிப்பிடவில்லை, தேடினாள் ஏச என்றுமட்டும் குறிப்பிடுகிறது. பரத்தையின் இந்த ஏசலைக்கேட்ட முதுமகளிர் சிலர்,
சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க
...... ........ வந்திக்க வார்
-(20, 68-70)
சிந்தித்த அளவிலே பாவம் நீங்குதற்குரிய கற்புடைய இத்தலைவியைச் சினந்து சில சொல்லிப் பாவம் செய்தனை, அப்பாவம் நீங்க அவளை வணங்க வருவாயாக என்று தலைவியின் கற்பின் திறத்தைப் புகழ்கின்றனர்.

இதே பாடலில் மற்றொரு சூழலில் மகளிர் சிலர் தலைவியை நோக்கி, ''பரத்தையர் இன்பம் விரும்பிச் செல்வானைச் செல்லாமல் தடுத்தலும், சென்றான் என நீக்கி ஒழுகுதலும் மனைவியர்க்குக் கூடுமோ? குலமகளிர் கணவன் தம்மை இகழினும் அவனைத் தாம் போற்றும் இயல்புடையர் அல்லரோ! ஆடவர் காமம் தக்கவிடத்தே மட்டும் நிற்கும் தன்மை உடையதன்று".
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவர்
-(20, 88-89)
என்றெல்லாம் கற்பை ஏற்றுக்கொள்ளாத ஆடவர் காமத்திற்கு பரிந்தும், பெண்கள் பரத்தையரிடம் செல்லும் ஆண்களைத் தடுக்கமுடியாது என்றும் ஆண்கள் பெண்களை இகழ்ந்தாலும் பெண்கள் ஆண்களைப் போற்றுவதே கற்புடைமை என்றும் வையைப் பாடல் ஆண்களின் அதிகார அரசியலுக்குத் துணைநிற்கின்றது.

தொகுப்புரை :

1. வையைப் பாடல்களுக்குத் தொகுத்தோரால் வகுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் முற்றும் பொருந்துவனவாக இல்லை.
2. வையைப்பாடல்களின் மகளிர் செயல்கள் பல சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு அமைந்துள்ளன.
3. பரிபாடல் வையைப் பாடல்களில் அகப்பொருள் மரபுகளுக்கு மாறான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் இப்பாடல்களை அகப்பாடல்கள் என்று கூறுவது பொருந்தாது.
4. ஒருதாரமணத்தை நிலைநிறுத்தவே கற்பு காதல் என்ற கோட்பாடுகள் கற்பித்துக்கொள்ளப்பட்டன.
5. பெண்களின் கற்புப் புனிதத்தைப் போற்றும் முயற்சிக்காகவே பரத்தையர் ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டன.
6. கற்பை ஏற்றுக்கொள்ளாத ஆடவர் காமத்தை நியாயப்படுத்தியும் அதனை ஏற்றுக்கொண்டு நடப்பதே குலமகளிர் கடமை என்றும் வையைப் பாடல்கள் ஆண்களின் அதிகார அரசியலுக்குத் துணைநிற்கின்றன.

புதன், 2 செப்டம்பர், 2009

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-1

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.


இந்திய இதழியலுக்கு வித்தூன்றி அதை வளர்த்த பெருமை கிறித்தவ பாதிரிமார்களையே சாரும். தமிழ் இதழியலும் அவ்வாறே தோற்றம் கொள்கின்றன. 1831 ஆம் ஆண்டு சென்னை கிறித்தவ சமயச்சங்கம் தமிழ்ப் பத்திரிகை என்ற மாத இதழை முதன் முதலில் தொடங்கியது. தமிழ் இதழியல் வரலாற்றில் ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கிறித்தவச் சமயச் சார்பு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. 1864 ஆம் ஆண்டில்தான் இந்துக்கள் தமது சமயம் சார்ந்த இதழ்களைத் தொடங்கினர். 1864 இல் பிரம்ம சமாஜம் தத்துவ போதினி என்ற இதழை வெளியிட்டது. இவ்வாண்டு முதல் பல இந்து சமய இதழ்களும் வெளிவரத் தொடங்கின.

தமிழகத்தில் கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்பும் கருவிகளாகவே தொடக்கத்தில் இதழ்கள் பயன்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமயக் கருத்துக்களைப் பரப்புவதில் பெரிதும் துணைபுரிந்த தமிழ் இதழ்கள் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டப் பின்னணியில் சுதந்திர உணர்ச்சியை ஊட்டவும் பரப்பவும் முற்ற முழுதாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் கொழுந்துவிட்டெரிந்த தேசிய உணர்ச்சிக்கு இதழ்கள் துணைபுரிந்த அதே காலகட்டத்தில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் தமிழ் இதழியலின் ஒரு பிரிவு திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பவும், முப்பதுகளில் ஒரு பிரிவு பொதுவுடைமைக் கருத்துக்களைப் பரப்பவும் பயன்படுத்தப்பட்டன.

பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் 1925 இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களையும் முற்போக்குச் சிந்தனைகளையும் தமிழ் இதழ்களில் எழுதிவந்தவர் தோழர் ம.சிங்காரவேலரே ஆவார். தமிழ் இதழியல் வரலாற்றாசிரியர்கள் தமிழகத்தின் முதல் பொதுவுடைமை இதழ் 1935-இல் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், கே.முருகேசன், டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரால் தொடங்கப்பட்ட புது உலகம் இதழே என்று குறிப்பிடுகின்றார்கள். சிலர் 1937 இல் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஜனசக்தி என்ற இதழே முதல் பொதுவுடைமை இதழ் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு இதழ்களுக்கு முன்பே புதுவையிலிருந்து 1934 ஜூனில் சுதந்திரம் என்ற பொதுவுடைமை இதழ் தோழர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தச் சுதந்திரம் இதழே தமிழில் வெளிவந்த முதல் பொதுவுடைமை இதழ்.

தோழர் சுப்பையா:

ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ, இந்தியாவுக்கு ஒரு மகாத்மா அதுபோல் புதுவைக்கு ஒரு வ.சுப்பையா என்று சிறப்பிக்கக் கூடிய பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் வ.சுப்பையா அவர்கள். பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என இரண்டு ஏகாதிபத்தியத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற புதுவைச் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.சுப்பையா. ஆசியாவிலேயே முதன் முதலாகத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த மக்கள் தலைவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தளபதிகளில் முன்னணித் தலைவர். இவர் தமது 23 ஆம் வயதில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியே சுதந்திரம் இதழ்.

இதழ் அறிமுகம்:

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

என்ற பாரதியின் பாடல் அடிகளைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1934 ஜூன் மாதம் மாலை: 1, மலர்: 1 என்ற எண்ணிக்கைக் கணக்கோடு மாத இதழாகச் சுதந்திரம் வெளிவரலாயிற்று. முதல் இதழிலிருந்தே ஆசிரியராக இருந்தவர் வ.சுப்பையா என்றாலும் மூன்றாவது இதழிலிருந்துதான் ஆசிரியர்: வ.சுப்பையா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழின் மேலட்டை பலவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. 1க்கு 8 டம்மி அளவில் மேலட்டை நீங்கலாக 52 பக்கங்களில் முதல் இதழும், பிற இதழ்கள் 60 பக்கங்களிலும் வெளிவந்துள்ளன. முதல் மூன்று இதழ்களின் மேலட்டைகளில் குதிரை மீதமர்ந்த சுதந்திர அன்னையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த மேலட்டை குறித்து ஆசிரியர் தமது ஆசிரியர் குறிப்பு பகுதியில் குறிப்பிடும் செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு,

நமது சுதந்திர அன்னை சமூகமென்னும் பரியின் மீது அமர்ந்து ஒரு கரத்தில் சுதந்திரக் கொடியையும் மற்றொன்றில் வீரச்சின்னத்தையும் ஏந்தி, சுதந்திர முழக்கம் செய்துகொண்டு, அடிமையென்னும் கோட்டையினின்று வெளியேறி முன்னேற்றமென்னும் கனவேகத்துடன் சென்று தமிழக முழுவதும் தனது வெற்றிக்கனலைப் பரப்ப, சுதந்திர லட்சியத்தை உலகத்திற்கே முதலில் போதித்த பிரான்சின் குடியாட்சியிலிருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளிவருகிறாள். இவள் பணி தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதையூட்டி வீரர்களாக வாழச்செய்ய வேண்டுமென்பதாகும்.(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.2)

இதழின் நோக்கம்:

இந்த இதழைத் தொடங்கும் போது வ.சுப்பையா அவர்கள் தமது நோக்கமாக, ‘தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதை ஊட்டவே இந்தச் சுதந்திர அன்னை வருகிறாள்’ என்று குறிப்பிடும் பகுதி கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும் இந்த முதல் இதழில் ஆசிரியர் குறிப்பிடும் பல செய்திகள் அவரின் சமூகம் குறித்த சரியான புரிதல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. சான்றாக,

நமது சமூகத்திலே மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சுமார் ஏழு கோடி மக்களான நமது இந்தியச் சகோதரர்களை முதலில் விடுதலையடையச் செய்யவேண்டும்.

சமுதாயத்தில் ஒரு நேத்திரம் போல் விளங்கும் சுமார் 18 கோடிக்கு அதிகமான பெற்ற தாய்மாரையும் உடன்பிறந்த சகோதரிகளையும் நசுக்கி, அடிமைப்படுத்தி இழிவுறுத்தும் நாடு நம்நாடன்றோ? (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப-ள்.3,4)
என்று எழுதும் இடங்களில் தலித் விடுதலை குறித்த சிந்தனையையும், பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் சரியான புரிதலோடு குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ள தலித்திய, பெண்ணியச் சிந்தனைகளை முதல் இதழிலேயே ஆசிரிய உரையில் குறிப்பிடும் வ.சுப்பையா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

அகத்திலுள்ள உயர்வு தாழ்வு என்கிற அசடுகளை நீக்குவோம். எல்லோரும் ஓர் குலமெனப் பாடுவோம், பின் வீர சுதந்திரத்தை நிரந்தரமாக நாட்டுவோம். இதுவே உண்மைச் சுதந்திரம். இதுவே இன்பச் சுதந்திரம் (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.4)
என்பது சுதந்திரம் ஆசிரியர் வ.சுப்பையா அவர்களின் தெளிவான முடிவு.

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-2

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-2

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

சுதந்திரமும் பொதுவுடைமையும்:

மகாத்மா காந்தியடிகள் 1933 இல் அரிசன சேவா சங்கத்தை ஏற்படுத்தினார். அரிசன சேவா சங்கத்தில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிய வ.சுப்பையா அவர்கள் 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த இன்னல்களுக்கிடையே மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். பிறகு அரசியல் ரீதியாக எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பின்வரும் பகுதியில் சுப்பையாவே குறிப்பிடுகின்றார்.
அரிசன மக்களோடு எனக்கிருந்த நெருக்கத்தின் காரணமாகப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் இயக்கத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் அரசியலிலும் நேரடியாக ஈடுபட நேர்ந்தது. அரசியல் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட நான், 1934 ஜூனில் சுதந்திரம் எனும் பத்திரிக்கையைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக ஏந்தப்பட்ட போர்க்கொடியாகச் செயல்பட்டு வருகிறது.

தோழர் அமீர் அய்தர்கான் என்பவர்தான் தமிழகத்தில் பொதுவடைமை இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். 1934 ஜூலையில் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சியோடு நெருக்கமும் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் தொடர்பு காரணமாகத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. (சுதந்திரம் பொன்விழா மலர்-3, ப.40)
தோழர் வ.சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தோடு தமக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே சுதந்திரம் இதழைத் தொடங்கியுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் சமதர்ம சிந்தனை:

தோழர் அமீர் அய்தர்கான் அவர்களைச் சந்தித்த பிறகே சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமை இயக்கத் தொடர்பு ஏற்பட்டது என்று அவரே குறிப்பிட்டிருந்தாலும், இயல்பாகவே வ.சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமைச் சிந்தனையும் அது குறித்த தெளிவான அரசியல் அரசியல் அறிவும் இருந்திருக்கின்றது என்பதைச் சுதந்திரம் இதழின் முதல் இதழிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகின்றது.

தொழிலாளிகளின் திண்டாட்டம் முதலாளிகளின் கொண்டாட்டம் என்ற தலைப்பில் சுதந்திரம் முதல் இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி பாடல் அடிகளோடு கட்டுரையைத் தொடங்குகின்றார். மேலும், “இன்றைக்கு உலகத்தில் வறுமையும் அறியாமையும் ஒழிய வேண்டுமானால் முதலாளிகளின் ஆதிக்கத்தை அறவே களைந்தெறிய வேண்டும்.” என்றும் “ஏழை மக்களின் உழைப்பினால் ஏற்பட்ட பலன் முழுமையும் ஒருவன் கொள்ளைகொண்டு போகிறான். உழைப்பாளியோ அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் அவதிப்படுகிறான்” என்றும் சுப்பையா அவர்கள் வேதனைப்படுகிறார். இதற்குக் காரணம் யாது? என்று சிந்திக்கும் வ.சுப்பையா அவர்கள் முதலாளித்துவ சமூக அமைப்பே இதற்குக் காரணம் என்று முடிவு கட்டுகிறார்,

முதலாளிகள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை ஏழைத் தொழிலாளியின் அரிய உழைப்பினால் ஏற்பட்டதன்றோ? இதை முதலாளி மட்டுமே அனுபவிக்கின்றான். இது என்ன அக்கிரமம்? இத்தகைய சமூக அமைப்பினால் உலகத்தின் பெரும் பகுதியான ஏழைத் தொழிலாளிகளின் துயரம் என்னே? (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.22)
என்பதோடு தீர்வு என்ன என்பதையும் அவரே அக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார்,
நமது சமூகத்திலிருக்கும் இத்தகைய முதலாளிகளின் ஆதிக்கத்தை வேருடன் களைந்தெறிந்து, சமதர்ம லட்சியத்தை நிரந்தரமாக நாட்டவேண்டும். அதற்குத் தொழிலாளர்களே முனைந்து வேலை செய்ய வேண்டும்.தொழிலாளிகளிடையே தக்க முயற்சி வேண்டும், தைரியம் வேண்டும்.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?

(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.23)

மக்கள் தலைவர் சுப்பையா அவர்களின் மேலே குறிப்பிட்ட கட்டுரையை முழுவதுமாகக் கவனத்தில் கொண்டால் சுதந்திரம் இதழ் தொடங்கும் போதே ஆசிரியருக்கு சமதர்ம சிந்தனையும் பொதுவுடைமை குறித்த அரசியல் தெளிவும் இருந்துள்ளமை புலனாகிறது.

லெனினும் ரஷ்யப் புரட்சியும்:

சுப்பையா அவர்கள் 1934 ஜூலையில் தோழர் கே.பாஷ்யம் முன்முயற்சியின் பேரில் சென்னையில் அமீர் அய்தர்கானைச் சந்திந்துத் தம்மைப் பொதுவுடைமை இயக்கத்தில் இணைத்துக்கொண்டது மட்டுமில்லாமல், தமிழகம், ஆந்திரா, புதுவைப் பகுதிகளில் இயக்கத்தைக் கட்டுவது குறித்தும் திட்டமிட்டார்கள். தோழர் சுந்தரய்யாவும் அப்போது உடனிருந்தார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சுப்பையா அவர்கள் பொதுவுடைமை இயக்க நூல்களைத் தீவிரமாகப் படிக்கத் தொடங்கியதோடு இந்தியாவின் தலைசிறந்த பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் ஆனார். பொதுவுடைமை இயக்கம், தத்துவம், இயக்க வரலாறு போன்றவற்றை முறையாகப் பயிலத் தொடங்கியவுடன் அவ்விஷயங்களைத் தம் இதழான சுதந்திரத்திலும் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். சுதந்திரம் ஐந்தாம் இதழில் லெனினும் ரஷ்யப் புரட்சியும் என்ற தலைப்பில் வரலாற்றுத் தொடர் ஒன்றை வ.சு அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பொதுவுடைமை என்பது மக்களுக்கு இயற்கையாகச் சொந்தமான உரிமைகளுக்காகப் போராடும் இயக்கமாகும். கொடுமையான அக்கிரமமான சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றி, உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் உயர்வு தாழ்வின்றி உணவுபெற்று சமவுரிமை பெற்று இன்பமாக உய்வதற்கான பொதுவுடைமை என்ற சீரிய திட்டத்தை அமைக்க வேண்டுமென்று அரும்பாடுபட்டார் ரஷ்ய தேசத்துப் பெரியார் லெனின். (சுதந்திரம், மாலை:1-மலர்:5, ப-ள்.5,6)
என்று பொவுடைமை குறித்தும் ரஷ்யத் தலைவர் லெனின் குறித்தும் தமிழில் தம் சுதந்திரம் இதழில் எழுதினார் வ.சுப்பையா.

முடிப்பாக:

இதுவரை குறிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழின் முதல் பொதுவுடைமை இதழ், இதழியல் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல் !935 இல் வெளிவந்த புது உலகமும் இல்லை, 1937 இல் வெளிவந்த ஜனசக்தியும் இல்லை, 1934 இல் வெளிவந்த சுதந்திரம் இதழே என்று துணிந்து முடிபு கூறலாம்.

1934 இல் சுதந்திரம் இதழை வெளியிடும் போது தோழர் வ.சுப்பையா அவர்களுக்குப் பொதுவுடைமைக் குறித்த அரசியல் தெளிவு இருந்தமையும் அக்கருத்துக்கள் சுதந்திரம் இதழில் வெளிவந்துள்ளமையும் இக்கட்டுரையால் நிறுவப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...