செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் பகுதி-௧ முனைவர் நா.இளங்கோ

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் - பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

பரிபாடல் அறிமுகம் :

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் பரிபாடல் எழுபது பாக்களைக் கொண்ட நூல் என அறிகிறோம்.
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று- மருவினிய
வையை யிருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்.


திருமாலுக்கு 8, செவ்வேட்கு 31, காடுகிழாட்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4, எனப் பாடல்கள் இருந்தமை அறிகிறோம். ஆனால் இப்போது கிடைப்பன மொத்தம் 22 பாடல்களே. திருமால் 6, செவ்வேள் 8, வையை 8, இவைதவிர உரைமேற்கோளால் கிடைத்த திருமால் பாடல் 1, வையை பாடல் 1 ஆக இரு முழு பாடல்களும் சில குறைப் பாடல்களும் கிடைத்துள்ளன.

பரிபாடலைப் பாடிய புலவர்கள் பதின்மூவர், அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர். ஒவ்வொரு பாடலின் கீழும் பாடியோர் பெயர், இசை வகுத்தோரின் பெயர், பாடற்பண் ஆகியவை காணப்பெறும். பாடப்பெற்ற பண் அடிப்படையில் முதலில் பண் பாலையாழ் பின்னர் பண் நோதிறம் பின்னர் பண் காந்தாரம் என இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளமையை கூர்ந்து நோக்கி உணரலாம்.

பரிபாடல்கள் குறிப்பிட்ட பண்களோடு பாடப்பட்டன எனவேதான் பரிபாடல் இசைப்பாட்டு எனும் பெயர்பெற்றது. ' இன்னியல் மாண்தேர்ச்சி இசைபரிபாடல்" என நூலின்கண் வரும்தொடரே அதன் இசைத்தன்மைக்கு அகச்சான்றாகும்.

பரிபாடலில் வையைப் பாடல்கள் :

அகத்திணைச் சூழலில் சங்க இலக்கியங்கள் புனலாட்டத்தினை விரித்துரைத்துள்ளன. தொல்காப்பியர், தலைவனும் தலைவியும் ஆற்றிலும் குளத்திலும் பொழிலிலும் தம்நாட்டு எல்லை கடந்தும் விளையாடுவதற்குரியர் என இலக்கணம் வகுத்துள்ளார்.
யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.
(தொல். 1137)
இவ்விளையாட்டு எல்லாத்திணைக்கும் பொதுவானதே. மலைவாழ்நர் அருவியிலும் சுனையிலும் நெய்தல் திணையினர் கடலிலும் மருதத்திணையினர் ஆற்றிலும் நீராடுவதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று நமக்குக் கிடைக்கின்ற வையைப் பாடல்கள் ஒன்பது (பாடல் எண்: 6, 7, 10, 11, 12, 16, 20, 22 பரிபாடல் திரட்டு 2). பெரும்பாலான வையைப்பாடல்களில் அமைப்பு
1. தொடக்கம், மழை பற்றிய செய்திகள் 2. வையை வருணனை 3. மக்களைப் பற்றிய வருணனை 4. அகப்பொருள் தழுவிய காதல் செய்திகள் 5. பாடல் முடிவு என்ற பொதுநிலையில் அமைந்துள்ளன.

வையையைப் பாடிய புலவர்கள் அனைவரும் அதன் வெள்ளக் காட்சியினை மழைப்பொழிவுடன் சேர்த்தே புனைந்துள்ளனர். பின்னர் வையையை வருணிக்கும் பாங்கில் ஆற்றுப் புதுவெள்ளத்தின் நிறம், மணம், நீரோட்டம், வையையின் பயன் எனப் பல நிலைகளில் வருணித்துள்ளனர்.

அடுத்தநிலையில் புனலாட்டில் கலந்து கொண்டோர் பற்றிய வருணனை இடம் பெறுகிறது. சிறுவர் சிறுமியர் வலியர் மெலியர் இளையர் முதியர் ஒருமை மகளிர் வரைவின் மகளிர் தோழியர் ஏவலர்கள் ஆகியோர் புனலாடச் சென்றார்கள்.
முதியர் இளையர் முகைப் பருவத்தர்
வதி மண வம்பு அலர்வாய் அவிழ்ந்தன்னார்
விரவு நரையரும் வெறு நரையோரும்
பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் ....
(10, 19-23)
புனலாடச் சென்றவர்கள் செய்துகொண்ட ஒப்பனைகள் அவர்கள் ஏறி வந்த ஊர்திகள் புனலாட்டுக்குக் கொண்டு சென்ற பொருள்கள் புனலாடிய திறம் புனலாட்டுக்குப்பின் செய்த செயல்கள் ஆகியன அடுத்து பேசப்படுகின்றன.

வையைப் பாடல்களின் தலையாய செய்திகளான அகப்பொருள்செய்திகள் பலநிலைகளில் அடுத்தடுத்து வருணிக்கப்படுகின்றன. இவ் அகப்பொருள் செய்திகளில் ஊடலும் கூடலும் முக்கிய இடம்பெறுகின்றன.

வையையின் சிறப்பு :

பரிபாடல் புலவர் பலர் வையை நதியினைத் தகுந்த அடைமொழிகள் பல தந்து பாராட்டியுள்ளனர். 'நறுநீர் வையை" (11, 140), பூமலி வையை (20, 11), வளங்கெழு வையை (17, 44) இவைகளின் மேலாக தமிழ் வையை (6, 90) என்று தமிழோடு இயைபுபடுத்திப் பாராட்டியுள்ளார் நல்லந்துவனார். மேலும் ''இனிய இயலின் சிறந்த தேர்ச்சி பொருந்திய பரிபாடலையுடைய நறுநீர் வையாய்""
இன்னியன் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்
முன்முறை செய்தவத் திம்முறை இயைந்தோம்
மறுமுறை யமையத்து மியைக
நறுநீர் வையை!
-(11, 137-140)
எனவும் வையை புகழ்துரைக்கப் பட்டுள்ளது.

வையைப்பாடல்கள் அகப்பாடல்களா? :

வையைப் பாடல்கள் எட்டும் தொகுத்தோரால் அகப்பாடல்களாகக் கருதப்பட்டு அகப்பொருள் துறைக்குறிப்பு வகுக்கப்பட்டுள்ளது. பாடுபொருள் வையை என்பதனால் வையை என்று தலைப்பு அமைத்தவர்கள், பாடலின் இடைஇடையே வரும் அகப்பொருள் செய்திகளைக் கணக்கில் கொண்டு துறை வகுத்துள்ளார்கள். தொகுத்தோரால் வகுக்கப்பட்ட துறைகள் இப்பாடல்களுக்கு முற்றும் பொருந்துவதாக அமையாதது மட்டுமின்றி தொல்காப்பிய அகப்பொருள் மரபுகளுக்கும் முரணாக அமைந்துள்ளன.

தலைவன், தலைவி, பரத்தை போன்ற அகப்பொருள் மாந்தர்களின் செயல்களும் இடம்பெறும் பாடலாக வையைப் பரிபாடல்கள் உள்ளனவே அன்றி முழுதும் அகப்பொருள் செய்திகளே பேசப்படவில்லை. சிறுவர் சிறுமியர், இளையர் முதியோர், கற்றோர் கல்லாதவர், அரசன் குடிகள் எனப் பலதிறத்து மக்களும் வையைப்பாடலில் இடம்பெறுகின்றனர்.

அகப்பொருள் மரபுக்கு மாறான நிகழ்வுகள் பலவும் அங்கே நடைபெறுகின்றன. (பரத்தை தோழி நேரடி பூசல், பரத்தை தலைவி நேரடி பூசல், பரத்தையர் அல்லாத பிற பெண்களும் மதுவுண்டு களிப்பது, தலைவி தலைவனைக் காலால் உதைப்பது, தலைவனின் பெருமைக்கு மாறானவற்றைத் தோழி உரைப்பது போன்ற பல நிகழ்வுகள்) எனவே பரிபாடல் வையைப் பாடல்களை அகப்பாடல்கள் என்பது பொருந்துமாறு இல்லை.

வையைப்பாடல்களில் மகளிர் :

பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறும் மகளிர் பலதிறத்தவர். களவுத்தலைவி, கற்புத்தலைவி, தோழி, பரத்தையர், கண்டோர், பரத்தை இல்லத்தார், அறம்கூறும் முதுபெண்டிர் எனப் பலதிறத்துப் பெண்கள் வையைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளனர்.
வையைத் தலைவியர்கள் கற்புக் காலத்துப் பிறர் காணத் தலைவனோடு ஊடுகின்றனர். வாயில்கள் இல்லாமலே ஊடலைக் களைகின்றனர். தலைவனை ஊடலில் தாக்கவும் செய்கின்றனர். பரத்தையரோடு நேரடியாக வாதம் புரிகின்றனர்.
வையைத் தோழியர்கள் தலைவனை நேரடியாகப் பழிகூறி இழித்துரைக்கின்றனர். பரத்தையர்களை கடுமையான ஏசல்மொழிகளால் பழித்துரைக்கின்றனர்.
வையைப் பரத்தையர்கள் தலைவனிடம் உரிமையோடு ஊடல்கொள்கின்றார்கள். தலைவியோடு நேரடியாகப் பூசலிட்டு தம்உரிமையையும் சாதுர்யத்தையும் வெளிப்படுத்து கின்றார்கள்.
வையைப் பாடல்களில் இடம்பெறும் பிற பெண்கள் தலைவிக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவும் பரத்தைக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவும் தலைவி தோழி பரத்தை பூசலை விலக்குகின்றவர்களாகவும் உள்ளனர்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வையை என்றால் என்னவோ?

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

அன்பு நண்பரே! வையை என்பது நதியின் பெயர். மதுரையை ஒட்டி ஓடும் இன்றைய வைகை ஆறுதான் அது. சங்க காலத்தில் வற்றாத ஜீவநதியாய்ப் பாய்ந்த காலத்துப் பாடல்.

நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ சொன்னது…

அன்பு நண்பர் இளங்கோவுக்கு
வணக்கம்.
தங்கள் கட்டுரையைத் 'தமிழ்க்குடில்' வழி படித்தேன்.
கட்டுரை சுருக்கமாகவும் நறுக்கென்றும் இருந்தது.
பாராட்டுகள்.
'அகப்பொருள் மரபுக்கு மாறான நிகழ்வுகள் பலவும் அங்கே நடைபெறுகின்றன. (பரத்தை தோழி நேரடி பூசல், பரத்தை தலைவி நேரடி பூசல், பரத்தையர் அல்லாத பிற பெண்களும் மதுவுண்டு களிப்பது, தலைவி தலைவனைக் காலால் உதைப்பது, தலைவனின் பெருமைக்கு மாறானவற்றைத் தோழி உரைப்பது போன்ற பல நிகழ்வுகள்) எனவே பரிபாடல் வையைப் பாடல்களை அகப்பாடல்கள் என்பது பொருந்துமாறு இல்லை.'
எனும் தங்கள் கருத்தே என் கருத்தும்.
ஆனால், 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்' என்பதை மட்டுமே வைத்துக்கொண்டு இதனை அகத் திணையுள் சேர்த்திருக்கக்கூடும்.
இது 'அக அகப்' பாடலில் சேராவிடினும் 'அகப்புறப் பாடலில்' அடக்கலாம் என்றும் கூறுவார்.
எப்படி இருப்பினும் கிடைத்துள்ள பரிபாடல் காதல் பாடல்களில்,
காதலின் கனிவும் பெண்கள் பெற்றிருந்த உரிமை வாழ்வும் இனிமை பயக்கின்றன.
அன்புடன்,
பெஞ்சமின் லெபோ
benjaminlebeau@gmail.com

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...