நூல் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 நவம்பர், 2019

கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்

கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர் - நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி

வரலாறு என்பது மனிதகுல நினைவுகளின் தொகுப்பு. வரலாறு கடந்த காலங்களோடு உறைந்து விடுவதில்லை அது நிகழ்காலத்திலும் தொடர்ந்து எதிர்காலத்டும் நீட்சிபெற்று விளங்குகிறது. பொதுவாக நாம்காணும் வரலாறுகள் பலவும் கடந்தகாலத்தோடு உறைந்துவிட்ட தரவுகளிலிருந்தே கட்டமைக்கப் படுகின்றன.பேரரசுகளின், பேரரசர்களின் போர், வெற்றி, வீரம் இவற்றோடு மட்டுமே வரலாறுகள் முழுமை பெறுவதில்லை. அது மக்களைச் சார்ந்து எழுதப்படவேண்டும். மக்களின் வாழ்க்கையும் அதற்கான போராட்டங்களும் வரலாற்றின் பக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. உயிரோட்டமுள்ள மக்கள் வாழ்க்கைப் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களை நிரப்பும்பொழுதுதான் வரலாறு முழுமை பெறுகிறது. புதைபொருட் சின்னங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நாணயங்கள் இலக்கியங்கள் முதலான தரவுகளிலிருந்தே வரலாறுகள் எழுதப்பட்டாலும் வரலாற்று ஆசிரியனின் வர்க்க. மொழி, இனச் சார்புகளின் அடிப்படையிலேயே வரலாறுகள் கட்டமைக்கப் படுகின்றன. இதுகாறும் வரலாறென அறியப்பட்ட தெல்லாம் ஆள்பவர்களால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, நியாயப்படுத்த எழுதப்பட்ட வரலாறுகளே ஆகும். அது தேசிய வரலாறானாலும் மாநிலங்களின் வரலாறானாலும் வென்றவர்களின் வரலாறாகவே அமைந்து விடுகிறது. அரசியல் வரலாறுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ அதைவிட முக்கியத்துவம் உடையன சமூக வரலாறுகள். மக்கள் சமூகத்தின் வரலாறுகள் உள்ளூர், வட்டார வரலாறுகளிலிருந்து தொடங்க வேண்டும்.

இருபத்தொராம் நூற்றாண்டின் கடந்த பதினைந்தாண்டுகளில் இந்திய வரலாறு எழுதுதலில் இரண்டு எதிரெதிரான புதிய போக்குகள் வேகங்கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஒன்று: வலதுசாரித் தன்மையுள்ள பௌராணிக நம்பிக்கைகளில் இருந்து கட்டமைக்கப்படும் வரலாறுகள். அது வரலாற்று உண்மைதானா என்று ஆராய்வது அவர்களுக்கு முக்கியமல்ல. அவர்கள் கட்டமைத்திருக்கும் நினைவுகளே வரலாறு என்பதாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் புதிய வரலாற்றைப் புனைவதே முக்கியமானதாகும். நினைவுகளைக் கொண்டு உருவாக்கப்படும் இத்தகு வரலாற்றை அவர்களே ஒருகட்டத்தில் நம்பத் தொடங்கி விடுவார்கள். கட்டமைக்கப்படும் இவ்வகை வரலாற்றின் அடிப்படையிலேயே அவர்களின் அரசியல் இயங்கும்.

இரண்டாவது: ஓரளவு இடதுசாரித் தன்மையுள்ள வர்க்கங்களின் முரணிலிருந்து வெளிப்படும் வரலாற்றைப் பதிவுசெய்வது. அரசு, அதிகார வர்க்கத்தின் வரலாறாக இதுவரை வெளிவந்துள்ள வரலாறுகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எழுதுவது. மையத்திலிருந்து வரலாற்றைப் பார்க்காமல் விளிம்புகளிலிருந்து வரலாற்றை உருவாக்குவது. விளிம்புநிலை மக்களிடமிருந்து தொடங்கும். இத்தகு ஆய்வுகளில் ஒருவித வட்டாரத் தன்மை மேலோங்கியிருக்கும். இவ்வகை உள்ளூர், வட்டார வரலாறுகள் சாமானிய மக்களின் வாழ்க்கையோடு அணுக்கமாகப் பயணம் செய்வதோடு அவர்களின் தொழில், உணவு, புழங்கு பொருட் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடு, கலைகள் முதலான உயிரோட்டமுள்ள வாழ்வியலைப் பதிவுசெய்யும். அண்மைக் காலத்தின்தான் உள்ளூர் வரலாறுகள் மற்றும் இதுவரைப் பதிவுபெறாத வட்டார ஆளுமைகள் குறித்த வரலாறுகள் தமிழகச் சூழலில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் கோட்டக்குப்பம், ஜாமிஆ மஸ்ஜித் 150 –வது ஆண்டு பாரம்பரிய விழா வெளியீடாக வெளிவருகின்றது. இந்நூலாசிரியர் கோட்டை கலீம்அவர்கள் தொண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுசுரத்துல் இசுலாம் நூலகத்தின் பொறுப்பாளர் ஆவார். இசுலாமிய மார்க்கச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் சமூகச் செயற்பாட்டுத் தளத்திலும் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். மத நல்லிணக்கப் பணிகளில் எப்பொழுதும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் தோழர் கோட்டை கலீம்ஒரு முற்போக்குச் சிந்தனையாளரும் கூட. சரியான வரலாற்றைப் பதிவு செய்வதிலும் புதிய வரலாற்றை உருவாக்குவதிலும் அவர் முனைப்போடு செயல்படுவார். மதநல்லிணக்கத் தோழர்களை இணைத்துக் கொண்டு செயலாற்றுவதில் அவரின் தலைமைப்பண்பு தெற்றெனப் புலப்படும். அண்மைக் காலமாகத் தொடர்ந்து முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அவர் நடத்திவரும் கருத்துப் போராட்டம் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது. கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் பெருமைகளை உலகறியச் செய்யும் நோக்கோடு அவர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுதற்குரியன.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர் எனும் தலைப்பிலான இந்த நூல் தோழர் கோட்டை கலீமின் அரிய முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று நூலாக்கம் பெற்று கோட்டக்குப்பம் சிற்றூர் இசுலாமிய மக்களின் வரலாற்றை, வாழ்வியலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கோட்டக்குப்பத்தின் வரலாறு, கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் என்ற இரண்டு பொருண்மைகளின் கீழ் நாம் பகுக்க முடியும்.

கோட்டக்குப்பத்தின் வரலாறு: 1. கோட்டைக் கதவு 2. வேர்கள் 3. ஊரும் நிர்வாகமும் 4. உள்ளாட்சி நிர்வாகம் 5. அரசியல் 6. தொழிலும் பிழைப்பும்என்ற ஆறு தலைப்புகளிலும்கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல்: 1. பசியும் உணவும் 2. ஆடைக் கலாச்சாரம் 3. கடிதங்கள் 4. பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் 5. வட்டார வழக்குகள் 6. அளவையும் அறவையும் 7. கல்யாண வைபோகமே 8. திண்ணை தர்பார் 9. கிணற்றடியும் குளத்தங்கரையும் 10. பாதையும் பயணமும் 11. சேவைத் தலங்கள் என்ற பதினொரு தலைப்புகளிலும் இந்நூலில் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நூலாசிரியர் அரசியல், வரலாறு, பண்பாட்டு மானிடவியல், புழங்குபொருள் பண்பாடு, சமூகவியல், மொழியியல், இடப்பெயராய்வு, நாட்டுப்புறவியல் முதலான பல அறிவுத்துறைகளின் துணையோடு எழுதியுள்ளமை பாராட்டுதற்குரியது. ஒவ்வாரு கட்டுரையும் நிறைவான தகவல்களோடு நூலாசிரியரின் கடும் உழைப்புக்கும் முயற்சிக்கும் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளமை இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

      கோட்டக்குப்பத்தின் வரலாறு பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரையும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியல் பேசும் பகுதியில் இடம்பெற்றுள்ள திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும் என்ற தலைப்பிலான இரண்டு கட்டுரைகளும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகளாகும். அரசியல் என்ற தலைப்பிலான கட்டுரை பிரஞ்சிந்திய விடுதலைப் போரின் தளபதி மக்கள் தலைவர் சுப்பையாவின் பெருமைகளைப் பேசுவதோடு பிரஞ்சிந்திய விடுதலைக்குக் கோட்டக்குப்பம் மக்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளையும் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்கின்றது. திண்ணை தர்பார், கிணற்றடியும் குளத்தங்கரையும் என்ற இரண்டு கட்டுரைகளும் கோட்டக்குப்பம் மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவுசெய்வதோடு திண்ணையை ஆண்களோடும் கிணற்றடியைப் பெண்களோடு இணைத்துப்பார்த்து “கிணற்றடி பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாக இருந்தது எனில், திண்ணை ஒருவகையில் ஆணாதிக்கத்தின் குறியீடு” என்று குறிப்பிடும் நூலாசிரியரின் வைர வரிகளோடுமிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

      இந்நூலில் இடம்பெற்றுள்ள கல்யாண வைபோகமே என்ற கட்டுரை கோட்டக்குப்பம் திருமண விருந்து, திருமணச் சடங்குகள், நிகழ்த்துமுறை, திருமணப் பதிவு முதலான உட்தலைப்புகளில் இசுலாமிய மக்களின் திருமண முறைமை குறித்த முழுமையான தகவல் களஞ்சியமாக அமைந்து சிறக்கின்றது மேலும் பெயர்பெற்ற வீடுகள் தெருக்கள் என்ற தலைப்பிலான கட்டுரை ஊர்ப்பெயர், இடப்பெயர், குடும்பப்பெயர், மககட்பெயர் ஆய்வுகளைத் தம்மகத்தே அடக்கியுள்ள அரியதோர் கட்டுரையாக அமைந்துள்ளது.

கோட்டக்குப்பம் பேர்பெற்ற ஊர்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது இந்நூலின் மொழிநடை. நூலாசிரியர் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் எழுதிவருவதன் எதிரொலியாக இந்நூற் கட்டுரைகளின் பல இடங்களில் நையாண்டியும் பகடியும் களிநடம் புரிவதனைக் காண முடிகின்றது.

பின்வரும் நூலின் பகுதியை மேற்சொன்ன நூலாசிரியரின் மொழிநடைக்குச் சான்றாகக் காட்டலாம்,
“இதே மாதிரி பிரெஞ்சு இந்தியாவை ஒட்டிய எல்லையோரக் கிராமம் என்பதால் பேச்சில் பிரெஞ்சு ஆதிக்கமும் உண்டு. முகத்தில் பூசிக்கொள்ளும் மாவை (talcum powder)பூதரமாவு என்பார்கள். பூசிக்கொண்டால் பூதம் மாதிரி தெரிவதால் இந்தப் பெயர் என்று விபரமில்லாக் காலத்தில் விபரமாக நினைத்துக் கொண்டிருந்தோம். பின்னர்தான் ஆசிரியர்கள் புண்ணியத்தில் பிரெஞ்சு என்ற ஒரு மொழி உலகத்தில் பேசுறாய்ங்க. அப்படி பிரெஞ்சு கூறும் நல்லுலகைச் சேர்ந்தவங்க இங்க பாண்டிச்சேரியில் கொஞ்ச காலம் குப்பை கொட்டாம இருந்திருக்காங்க. அவங்க மொழியில் இந்த மாவுக்கு (talcum powder)பூதர் (poudre)என்று நாமகரணம் சூட்டியிருக்காங்க எனத் தெரிந்து தெளிவாயிட்டோம். அதன் காரணமாகவே இந்த மாவு பூதர மாவு என்று வழங்கப்பட்டது ஷாப் கடை என்பதைப்போல்”

நூலின் பெரும்பாலான பகுதிகளின் சற்றேறக்குறைய மேற்காட்டிய மொழிநடையை ஒட்டியதோர் நடையிலேயே நூலினை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். ஓட்டம் மிகுந்த இயல்பான பேச்சுநடை விரவிய மொழிநடையின் இடையிடையே இலக்கிய மேற்கோள்களையும் நாட்டுப்புறச் சொலவடை, பழமொழி முதலான வழக்குச் சொற்களையும் இணைத்து ஒருவகைக் கலப்பு நடையிலேயே நூல் அமைந்துள்ளமை வாசிப்பை இலகுவாக்குகின்றது.

நூலாக்கம் என்பது கடந்த காலங்களைப் போல் இன்றைக்கு கடினமாயில்லை. பார்வை நூல்களைத் தேடித் தேடி அலைந்து திரிய வேண்டிய தேவையில்லாமல் இணையத்திலேயே இன்றைக்குத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தகவல்களைத் திரட்டிப் பகுத்துப்பார்த்து உண்மைகளைத் தேடி நூல் எழுதிவிடலாம். ஆனால் இந்த நூல் அப்படிப்பட்டதல்ல. முழுமையான களப்பணியும் சரியான உற்றுநோக்கலும் இல்லாமல் இத்தகு நூல்களை உருவாக்க முடியாது. நூலாசிரியர் அரிதின் முயன்று ஆவணங்களைக் குடைந்து தேடியதோடு மட்டுமல்லாமல் களப்பணிகளின் மூலமாகவும் இவ்வரிய நூலை உருவாக்கியுள்ளார்.

கோட்டக்குப்பத்தைப் போன்றே ஒவ்வாரு கிராமத்திலும் பதிவுசெய்வதற்கு ஏராளமான சமூக அரசியல் அரசியல் பண்பாட்டுச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. பயன்கருதாது உழைக்கும் நல்லவர்கள் ஒருசிலராவது இந்நூலின் தந்த ஊக்கத்தால் உழைப்பார்களானால் அதுவே இந்நூலுக்கு வெற்றி!


அரிதின் முயன்று நூலை உருவாக்கிய கோட்டை கலீமுக்குப் பாராட்டும் வாழ்த்தும்! இந்நூல் முயற்சிக்கு ஒத்துழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!

கோட்டை கலீம் (லியாகத் அலி)

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அகிலின் கூடுகள் சிதைந்தபோது -நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளர். ஈழத்தின் யாழ் மாவட்டத்தில் சரவணை என்னும் ஊரில் பிறந்தவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவருபவர். திசைமாறிய தென்றல், கண்ணின்மணி நீயெனக்கு என்ற இரண்டு நாவல்களின் வழியாகத் தமிழுலகிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். தமிழ் ஆத்தர்ஸ்.காம் என்ற அவரது இணையதளத்தின் மூலம் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பெரும்பணியைச் செய்துவருபவர். புலம்பெயர் இலக்கியப் படைப்பாளிகளில் அறியப்படவேண்டிய ஆளுமைக்குச் சொந்தக்காரர்.

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் அகிலின் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நூலினை முழுமையாகப் பலமுறை வாசித்தேன். கல்விப் புலத்தில் எங்கள் பட்ட மேற்படிப்பு மைய முதுகலைத் தமிழ் வகுப்பிற்கு ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் என்ற பாடத்திட்டத்தை வகுத்ததோடு அப்பாடத்தை மாணாக்கர்களுக்குப் பயிற்றுவிக்கவும் கிடைத்த வாய்ப்பினால் தொடர்ந்து பல ஈழத்தமிழர் புலம்பெயர் இலக்கியங்களை வாசித்து வருபவன் நான். அந்த வாசிப்பு அனுபவத்தினை முன்னிறுத்தி, அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுதி குறித்து சில சொல்லிட முனைகிறேன்.
இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மௌனியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர் களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகள் எல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதிப் பரவசப் படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த சோகம், அதிர்ச்சி, சிலிர்ப்பு, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். தோழர் அகிலின் சிறுகதைகளும் அதைத்தான் செய்கின்றன.

இச்சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளுமே சிற்றிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானவை. இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற சில கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்ந்த வாசகர்களின் வாசிப்பினைத் தொடர்ந்தே இக்கதைகள் நூல் உருப்பெற்றுள்ளன. 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுக் கால இடைவெளியில் உருவானவைகளே இக்கதைகள். அந்த வகையில் ஈழத்தமிழர்களின் அண்மைய வாழ்க்கைப் பதிவாக இக்கதைகள் உருவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள அண்ணாநகரில் கடவுள் என்ற ஒருகதை தவிர மற்ற பதின்மூன்று கதைகளுமே ஈழம் மற்றும் புலம்பெயர் கனடாவினைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதைக் களத்தைப் போலவே கதைக்கருவும் ஈழம், கனடா வாழ் தமிழர்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன.

பொதுவாகப் புலம்பெயர் இலக்கியங்களைப் புலம்பல் இலக்கியம் என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில் புலம்பெயர்ந்த படைப்பாளி, புகலிடச் சூழலில் வெளிப்படுத்தும் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளே இத்தகு படைப்புகளில் மிகுதியும் நிறைந்திருக்கும். அகிலின் சிறுகதையைப் பொறுத்தமட்டில் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளையும் மீறி வெளிப்படுவது மானுடநேயம். அதாவது நாடு, மொழி, இன பேதங்களைக் கடந்த மானுடநேயம். சக மனிதர்களை நேசிப்பது என்பதோடு அகிலின் கதைகள் நின்று விடுவதில்லை, அதனையும் கடந்து பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களையும் நேசிக்கும் விரிந்த தளத்திலானது. வலி, கிறுக்கன், கூடுகள் சிதைந்தபோது முதலான கதைகள் இதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்துபோன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்துக் கண்ணீர்விடும் கிறுக்கனும், கனடா சாலையொன்றில் இணைக்குருவிகளில் ஒன்று விபத்துக்குள்ளாகி இறப்பதையும் இறந்த குருவியின் பிரிவுத்துயர் தாங்காமல் தவிக்கும் துணைக்குருவியின் சோகத்தையும் கண்டு மனம் பரிதவிக்கும் கூடுகள் சிதைந்த போது கதையின் நாயகனும் இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றி, மாடுகளின் அவலத்துக்கு மனம் வெதும்பும் மயூரனும் அகிலின் பிரதிநிதிகளாக நம்முன் மானுடநேயத்தைப் பதித்துச் செல்கிறார்கள்.

ஈழத்தின் போர்ச்சூழலின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, பெரிய கல்வீடு, கண்ணீர் அஞ்சலி, கூடுகள் சிதைந்தபோது ஆகிய நான்கு கதைகளும் தமிழக வாசகர்களுக்குப் புதிய காட்சிப் படிமங்களை முன்நிறுத்துகின்றன. வன்னிப்போர்ச் சூழலும் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயரும் அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதலும், யாழ்நகரத் தாக்குதலும் அகிலின் விவரிப்பில் வாசகர்களின் மனதில் ஆழ்ந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்துவது நிஜம். பத்திரிக்கைகளில் செய்தியாக மட்டுமே வாசித்துக் கடந்த நமக்கு இச்சிறுகதைகள் பேரினவாதத்தின் திட்டமிட்ட அழிப்பையும் தமிழர்களின் உயிர், உடைமை இழப்பையும் ஆறாத வடுக்களாக நெஞ்சில் நிலை நிறுத்துகின்றன.

இத்தொகுப்பின் செம்பாதிக் கதைகள் புலம்பெயர்ச் சூழலில் நம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பணம், குடும்பம், உறவு, சாதி, பண்பாடு தொடர்பான சிக்கல்களை முன்நிறுத்துகின்றன. புகலிடம் தேடி மேற்கத்திய நாடுகளில், சென்ற தலைமுறையில் குறிப்பாக 80களில் புலம் பெயர்ந்து சென்றவர்களின் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்து பெரியவர்களாகிற போது, மூத்த தலைமுறை தம் தாய் மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளைக் காக்கவும் முடியாமல் மீறவும் மனமில்லாமல் படும்பாடு புகலிடத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு சிக்கலான பகுதியாகும். அகில் இத்தகு பண்பாட்டு நெருக்கடிகளைத் தம் சிறுகதைகளில் குறிப்பாக இது இவர்களின் காலம் என்ற சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
சாதீய சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றத் துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதிக்க மனோபாவத்தை விமர்சிக்கும் வெளியில் எல்லாம் பேசலாம், பெரிய கல்வீடு என்ற இரண்டு சிறுகதைகளும் முக்கியமானவை. பெரிய கல்வீடு கதை, உக்கிரமான போர்ச்சூழலிலும் தீண்டாமையைக் கட்டிக் காப்பாற்றத் துடிக்கும் பெரிய சாதியாரையும் வெளியில் எல்லாம் பேசலாம் கதை, மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சூழலிலும் தம் சாதி மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத பிற்போக்காளர்களையும் இனம்காட்டுகின்றது.

குடும்பம் என்ற சமூக அமைப்பு சிதைவடையும் மாற்றக் காலத்தின் அடையாளங்களை முன்நிறுத்துவன அம்மா எங்கே போகிறாய், உறுத்தல் என்கிற இரண்டு கதைகளும். புலம்பெயர் நாடுகளில் தங்கள் வயதான பெற்றோர்களின் உடலுழைப்பு, வருவாய் இரண்டும் பயன்படும் காலம் வரையிலும் அவர்களைத் தம்மோடு வைத்திருந்துவிட்டுப் பின்னர் அவர்களை உதாசீனப்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினரின் உளப்பாங்கை வெளிப்படுத்துவன இக்கதைகள். ஆனால் இந்த இரண்டு கதைகளிலும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் இளம் தலைமுறையினரின் குற்ற உணர்ச்சியைக் கோடிட்டுக் காட்டியிருப்பதன் மூலம் அகில் இப்பிரச்சனை குறித்தான தம் விமர்சனத்தை நுட்பமாகப் பதிவுசெய்திருப்பது இந்தக் கதைகளின் பலம் எனலாம்.
இத்தொகுதியின் பதினான்கு கதைகளில் அண்ணாநகரில் கடவுள், ஓர் இதயத்திலே என்கிற இரண்டு கதைகளைத் தவிர மற்ற பன்னிரண்டு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையன. அதிலும் வலி, கூடுகள் சிதைந்தபோது என்ற இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் இனம் காண்கிறேன். அகிலின் படைப்பாக்கச் செய்நேர்த்தியில் உச்சத்தைத் தொட்ட கதைகளாக இவற்றைக் குறிப்பிடமுடியும்.

வலி என்ற சிறுகதை மூன்று அடுக்களில் கதையை நகர்த்துகின்றது.
1.கணவன் மனைவி இடையிலான சைவ, அசைவ உணவுப் பழக்க முரண்.
2.டிரக்கில் அடைக்கப்பட்டு மாமிசத்திற்காகக் கொண்டு செல்லப்படும் பன்றிக் குட்டிகளும் அதனூடாகப் புலம் பெயர்தல் தொடர்பான மயூரனின் கொடிய அனுபவங்களும்
3.யுத்தக் கொடூரங்களுக்கிடையே உயிருக்கு அஞ்சி, புலம்பெயரும் வாழ்க்கையையும் மாமிசத்துக்காகவே விலங்குகள் வளர்க்கப்பட்டு ஒன்று பார்க்க ஒன்றைக் கொல்லும் மனிதக் கொடூரத்தையும் உயிர்வதை என்ற ஒற்றைப்புள்ளியில் இணைத்துக்காணும் மயூரனின் மாறுபட்ட பார்வை.

இந்தக் கதையை ஒரு சைவ உணவுப் பிரச்சாரக் கதையாகப் பார்ப்பதைவிட உயிர்வதை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகின் சகல ஜீவராசிகளும் ஒன்றுதான் என்ற விரிந்த தளத்தில் வாசிக்க வேண்டும். இந்தப் புள்ளியை நோக்கிய கதையின் ஊடாக விரியும் புலப்பெயர்வுச் சிக்கல்கள் கதைக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன. நடைநலத்திலும், பாத்திர வார்ப்பிலும், கதையின் கட்டுக்கோப்பிலும் முழுமை பெற்ற வலி குறித்துப் பேசிக் கொண்டே போகலாம்.

கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதை வாசிப்பவர்களின் உறக்கத்தைப் பறிக்கும் கதை. சிங்கள ராணுவத்தின் இனஅழிப்புத் தாக்குதலில் செத்துமடிந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் ரத்தசாட்சியாய்ப் படைக்கப்பட்ட கதை. வயிற்றுப் பிள்ளைக்காரியான தன் இளம் மனைவியைக் கண்ணெதிரே ராணுவத் தாக்குதலுக்குப் பலிகொடுத்துவிட்டு அந்த உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவந்த கணவனின் மனக்குமுறலாய் வெளிப்படும் கதை. கதையின் கருவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணைக்குருவிகளில் ஒன்று தன் துணைக்குருவி வாகனம் மோதி நசுங்கிக் கிடக்கக்கண்டு செய்வதறியாது உழலும் காட்சி. இரத்தமும் சதையுமாய்க் உடல் சிதைந்து சின்னாபின்னமாய்க் கிடக்கும் குருவியைப் பார்க்கையில் இப்படித்தான் என்ற சசியும்.. என்று அவன் கதறும்போது வாசிப்பவர்களின் நெஞ்சம் சோகத்தில் சிதறும். ஈழப்போரின் பேரழிவு நினைவுகளைக் கனடா மண்ணிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பின்நோக்கு உத்தியில் படைக்கப்பட்ட கதை. இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் வாசித்தால்தான் கதையின் அருமை புரியும். அகில் அவர்கள் இந்தத் தொகுப்பிற்கு, கூடுகள் சிதைந்தபோது என்ற தலைப்பினை வைத்தது உண்மையில் மிகப்பொருத்தம்.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத் தொகுதியின் சிறப்புகளாக நான் பட்டியலிட விரும்புபவை:
1. தமிழகத்தில் வெளிவரும் வட்டார வழக்குப் புனைகதைகளைப் போல் ஈழத்தமிழின் வட்டார நடை அகிலின் சிறுகதைகளில் மிக இயல்பாகப் பொருந்திப் போகிறது.
2. ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கும் பங்கேற்பும் கதையின் நம்பகத் தன்மையை மிகுவித்து வாசகர்களைக் கதைக்களங்களோடு ஒன்றிப்போகச் செய்கின்றன.
3. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் யாருமே எதிர்நிலைப் பாத்திரங்கள் இல்லை என்பது ஒரு தனிச்சிறப்பு. பாத்திரப்படைப்பில் அகில் கையாண்டுள்ள இந்த அணுகுமுறை முற்றிலும் புதுமையானது
4. இத்தொகுதி உயிர்க்குலம் தழுவிய மானுடநேயத்தைக் கதைகளின் ஊடாகப் பரப்புரையற்ற தொனியில் முன்நிறுத்துகின்றன.
5. அகிலின் கதைகள் தலைமுறை இடைவெளிகளால் சிதைவுற்றுக் கிடக்கும் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்கின்றன.
6. பாத்திரங்கள் மட்டுமின்றிப் பெரிய கல்வீடு, வானொலிப் பெட்டி, இணைக் குருவிகள் போன்ற சில அஃறிணைப் பொருட்களைக் குறியீடுகளாக்கிக் கதைக்கருவை முழுமைப்படுத்தும் உத்தி, அகிலின் கதைசொல்லலில் கையாளப் படுகின்றது.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது தொகுதியை வெறுமனே வாசித்துக் கடப்பது என்பது அத்துணை எளிய செயலன்று. ஒவ்வொரு கதையும் வாசகனிடம் ஓர் இனந்தெரியாத சோகத்தை, வலியை ஏற்படுத்துவது நிச்சயம். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணிலும் புலம்பெயர்தலிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் படும் வேதனைகள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாதவை. இத்தொகுதியில் அகிலின் சிறுகதைகள் எவ்விதப் புனைவுகளுமின்றி இரத்தமும் சதையுமாக அவர்களின் வாழ்க்கையை முன்நிறுத்துகின்றன. பேரினவாதம் ஏற்படுத்தும் இனஅழிப்பின் தாக்கங்களைத் தம் சிறுகதைகளின் ஊடாகக் காட்சிப்படுத்தும் இத்தொகுதி ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் வெற்றிபெறுவது முக்கியமில்லை. படைப்புகள் வெற்றிபெற வேண்டும். அந்த வகையில் அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற படைப்பின் வெற்றி, காலத்தின் தேவை.

புதன், 12 செப்டம்பர், 2007

நூல் மதிப்புரை - பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ.


மொழியும் அதிகாரமும்

முனைவர்.எல். இராமமூர்த்தி

முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களின் ஷமொழியும் அதிகாரமும் என்ற இந்நூல் தமிழ்மொழி வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய ஆய்வு நூலாகும். மொழியியல் வல்லுநரான இராமமூர்த்தி தமிழ்மொழியின் ஆட்சி, வளர்ச்சி குறித்த உண்மையான அக்கறையோடு இந்நூலைப் படைத்திருக்கின்றார். சமுதாய மொழியியல், மொழித் திட்டமிடுதல், மொழி வளர்ச்சி போன்ற பயனாக்க மொழியியல் துறைகளில் கல்வி, ஆய்வு இருநிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் இந்நூலாசிரியர் தம் ஆழ்ந்த அனுபவங்களின் பிழிவாக இந்நூற் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.மொழியின் வாழ்வும் வரலாறும் சமுதாயத்தோடும் அதன் அன்றாட இயக்கத்தோடும் பின்னிப் பிணைந்தவை. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அந்த மொழியின் வளம் மட்டுமில்லாமல் அந்த மொழி பேசும் இனத்தின் ஆட்சியும் அதிகாரமும் பெருந்துணை புரிகின்றன. அதிகாரம் படைத்த இனத்தின் /தேசத்தின் மொழி காலப்போக்கில் தேசிய, உலக மொழி அந்தஸ்தைப் பெறுகின்றன. அதிகாரமற்ற தேசிய இனங்களின் மொழிகள் எத்துணை வளம் மிக்கதாயினும் தேக்கமடைகின்றன. இத்தகு புரிதல்களோடு மொழியியல் நோக்கில் மொழியின் அதிகாரம், அதிகார மொழி குறித்த பல்வேறு விவாதங்களை இந்நூல் முன்வைக்கிறது.ஷஷதமிழின் பண்டைய இலக்கியப் பெருமிதங்களும் எல்லாம் தமிழில் முடியும் என்ற சொல்லாடல்களும் மட்டும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உதவாது. பொருளாதார மேம்பாட்டை நோக்கிய தமிழ்க்கல்வி, அதை உருவாக்கக் கூடிய அரசியலே இதனைச் சாத்தியப்படுத்தும். மொழி பெயர்ப்புகளும், அகராதி உருவாக்கப் பணிகளும், தமிழ்க் கல்விக்கான கருவிநூல்கள் தயாரித்தலுமே தமிழை அதிகார மொழியாக்க உதவும். என்றும்,ஷஷநவீன சூழலில் தமிழ் அதிகார மொழியாவதற்கு அடிப்படையாக அமைவது தமிழ்க் கல்வி ஃதமிழ்வழிக் கல்வி மட்டுமே. இங்கே தமிழ்க்கல்வி என்பது ஆரம்பப் பாடம் முதல் ஆராய்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது என்பதாகக் கொள்ள வேண்டும். என்றும் தமிழை அதிகார மொழியாக்குவதற்கு உரிய பல்வேறு வழிமுறைகளை இந்நூலின் பல இடங்களிலும் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் ஆட்சித் தமிழ், கணினித் தமிழ் என்ற இரண்டு முக்கிய துறைகளில் ஏற்படும் மொழிப் புதுமையாக்கத்தால் தமிழ் சந்திக்கும் சிக்கல்களையும் கருத்தியல் நோக்கில் விரிவாக ஆராய்கின்றார்.
மொழியும் அதிகாரமும் என்ற முதல் இயல் மொழியில் அதிகாரம் செயல்படும் விதத்தை விளக்கி அதிகார மொழி, மொழி அதிகாரம், அதிகார மொழியாக்கம் என்ற மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. மொழி வளர்ச்சியில் மொழி உணர்ச்சி முக்கிய பங்கு ஆற்றுவதால் இரண்டாம் இயல் ஷதமிழ் உணர்வும் தமிழ் வளர்ச்சியும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.மொழியின் திட்டமிட்ட வளர்ச்சி என்பது மொழியின் பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்பச் செய்யப்படுவதால் அதைச் சமூகவியலார் நவீனமயமாக்கம் அல்லது புதுமையாக்கம் என்று அழைப்பார்கள். எனவே மூன்றாவது இயல் ஷதமிழும் நவீனப்படுத்தமும் என்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நவீனமயமாக்கம் என்பது ஒருவித அதிகாரப் பரவலாக்கம்தான். அந்த அதிகாரப் பரவலாக்கத்தின் ஒரு கூறு மொழித் தூய்மையாக்கம் எனவே நான்காவது இயலாகத் ஷதமிழ்த் தூய்மையாக்கம் அமைக்கப்பட்டுள்ளது.மொழி வளர்ச்சியில் புதுமையாக்கமும் தூய்மையாக்கமும் முரண்நிலையில் செயல்படுவன. ஆயினும் புதுமையாக்கத்திற்குக் கடிவாளம் போலத் தூய்மையாக்கம் செயல்படும். எனவே ஐந்தாவது இயல் ஷதமிழ் வளர்ச்சி: தூய்மை -புதுமையாக்கம் -அதிகாரம் என அமைக்கப்பட்டுள்ளது. புதுமையாக்கத்திற்குப் பின் தேவைப்படுவது தரப்படுத்துதல் எனவே அடுத்த ஆறாவது இயல் ஷதமிழும் தரமொழிக் கோட்பாடும். என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியல் தர மொழியின் பண்புகள், செயல்கள் அகியவற்றைக் கோட்பாட்டு நிலையில் முதலில் விளக்கித் தமிழின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி ஆட்சித் தமிழ், அறிவியல் தமிழ், தகவல் தொடர்புத் தமிழ் அகிய துறைகளில் காணப்படும் பிரச்சனைகளையும் விளக்குகிறது. ஷதமிழ் வளர்ச்சியும் கணினியும் என்ற ஏழாவது இயலும் ஷதமிழ் கற்றலும் கணினியின் பல்லூடகமும் என்ற எட்டாவது இயலும் கணினி, மல்டிமீடியா ஊடகங்களில் தமிழின் பயன்பாடு மற்றும் தமிழைக் கையாளுவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசுகின்றன. நூலின் இறுதி இயலாம் ஒன்பதாம் இயல் ஷதமிழ் வளர்ச்சியும் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியல் தமிழ்வளர்ச்சியில் காணப்படும் ஒட்டுமொத்த கருத்தியல் முரண்பாடுகளைத் தொகுத்தும் வகுத்தும் விவாதிக்கின்றது. தமிழ் வளர்ச்சிக்கு முரண்களே அரண்களாக இருந்து துணைபுரிகின்றன என்ற ஆசிரியரின் முடிபு அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகின்றது.
மொழியும் அதிகாரமும் என்ற இந்நூலைக் குறித்து நூலின் ஆசிரியர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் தம் முன்னுரையில்,இந்நூல் மொழி வளர்ச்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளையும், மொழி உணர்வு, சமூகக் கருத்தியல்கள், அக்கருத்தியல்களினால் மொழியில் ஏற்படும் மாற்றங்கள், மொழியின் தன்மைகள் ஆகியவற்றை விளக்குகிறது. இவை பற்றிய புரிதல்கள்தான் தமிழ்க் கல்விஃ தமிழ்வழிக் கல்விக்கான வளர்ச்சியைத் தடையின்றிச் செயல்படுத்த உதவும். என்கிறார். தமிழ்வழிக் கல்வியே ஆசிரியரின் இலட்சியமாய் இருப்பதை இந்த மேற்கோளால் நாம் உணரமுடியும்.மொழிகுறித்த சரியான புரிதல்களோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்நூலில் ஆசிரியர், புறநிலையில் நின்று கருத்துக்களை விவாதிக்கும் முறையும் மொழிநடையும் அறிவியல் ப+ர்வமானவை. உணர்ச்சி ப+ர்வமான கருத்துக்களை அறிவு ப+ர்வமாக விவாதிக்கும் நூல் என்று செ.வை.சண்முகம் தம் அணிந்துரையில் இந்நூல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமே.

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...