சனி, 27 பிப்ரவரி, 2010

மாமிசம் உண்ணும் பிராமணர்கள்

மாமிசம் உண்ணும் பிராமணர்கள் -
வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-4


முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மாமிசமுண்ணும் பிராமணர்களைப் பழித்தார்:

வேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரீகமும் தமிழ் மக்களின் வாழக்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். ஐரோப்பிய மோகத்தால் நிலை தடுமாறிய பிராமண இளைஞர்கள் பலர் மாமிசம் உண்ணுதல், மது குடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அதுவே நாகரீகம் என மயங்கிய காலம். இந்தச் சூழலில் நீதிநூல் பாடிய வேதநாயகரால் சும்மாயிருக்க முடியுமா? நகைச்சுவையாகப் பாடுவதுபோல் தம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரணவாயினர் மாடாடுகளை
அடித்து அவித்துப்
பாராணஞ் செய்ய பழகிக் கொண்டார்
மதுபானத்திலும்
பூரணராயினர் இன்னவர்க்
கிந்தத் துர்புத்தித் தந்த
காரணங் கண்டயற்கோர்
சிரங்கொய்தனன் கண்ணுதலே.


வேதம் ஓதுகிற வாயால் மாமிசம் உண்பதும் மது குடிப்பதுமாக வாழும் பிராமணர்களுக்கு இந்த துர்புத்தி தந்த பிரம்மனை தண்டிக்கவே சிவன் அவர் தலையில் ஒன்றைக் கொய்து விட்டானாம். இது பரவாயில்லை, இந்தப் பாடலைப் பாருங்கள்.

ஊன் தூக்கி யுண்ணும்
பிராமணர்க்கஞ்சி உமாபதியும்
மான் தூக்கினான் கையில்
வேலவன் தூக்கினான் வாரணத்தை
மீன்தூக்கினான் கொடியாக
உருவிலி மேடமது
தான்தூக்கவே அதிலேறிக்
கொண்டான் அந்த சண்முகனே.


சிவன் ஏன் மானைக் கையில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா? மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா? எல்லாம் மாமிசம் உண்ணும் பிராமணர்களிடமிருந்து இவற்றைக் காப்பாற்றத்தான். பாடலில் நகைச்சுவையும் நையாண்டியும் இருந்தாலும் வேதநாயகரின் கண்டிப்பும் அறிவுரையுமே மேலோங்கி இருப்பதை உணர்ந்தால் அவரின் சமூகப்பற்று நமக்கு விளங்கும்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள்:

தென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஞானசபை, தருமச்சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்திப் பரபரப்பான முறையில் இயங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைதியான முறையில் தமது எழுத்துக்களின் மூலம் சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து வந்தவர் மாயூரம் வேதநாயகம். சமூகத் தொண்டோ இலக்கியப் பணியோ அவருடைய முழு நேரப்பணி அல்ல, அவராக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அதிகார பலமுள்ள அராசாங்கப் பதவியிலேயே அவர் சொகுசாக வாழ்க்கையை நடத்திச் சென்றிருக்கலாம். மாறாகத் தம் பதவி அனுபவங்களையும் அவர் தமிழ் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்.

நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட்டுச் சட்டத்தமிழின் தோற்றத்திற்குப் பாடுபட்டார்.கிருத்துவ மத போதகர்கள் தீவிரமான மதப்பிரச்சார, மதமாற்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், முழுமையான கிருத்துவ மதப்பற்றுள்ள வேதநாயகர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் பாடியிருப்பதும் போலிச் சமயவாதிகளை அடையாளம் காட்டும் நையாண்டிப் பாடல்களைப் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.

வள்ளலாரைப் போலவே சர்வ சமய சமரசம் காண வேதநாயகர் முயன்றார் என்றாலும், வள்ளலாரின் வருணாஸ்ரம எதிர்ப்பில் இவரின் கவனம் செல்லவில்லை. மாறாகப் பெண் விடுதலை, பெண்கல்வி போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினார். இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன் முதலில் பாடிய தமிழ்க் கவிஞர் வேதநாயகரே.(வேதநாயகருக்கு முன்பே புதுவைக் கவிஞர் சவரிராயலு நாயக்கர் பெண்கல்வி குறித்துப் பாடியுள்ளார் என்ற தகவலும் உண்டு, இக்கருத்து ஆய்வுக்குரியது)

மாயூரம் வேதநாயகரின் தனிப்பாடல்கள்:

வேதநாயகர் தம் வாழ்நாளின் பல்வேறு சூழல்களில் எழுதிய தனிப்பாடல்கள் அவரது மறைவுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டு 1908 ஆண்டு வெளிவந்ததாக அறிகிறோம். பின்னாளில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் பல புலவர்களின் தனிப்பாடல்களைத் திரட்டித் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் வெளிட்டபோது இரண்டாம் தொகுப்பில் மாயூரம் வேதநாயகரின் 61 தனிப்பாடல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.( தனிப்பாடல் திரட்டு, தொகுதி-2, ப-ள் 146 - 168) அறுபத்தொரு பாடல்களும் கீழ்க்கண்ட சூழல்களில் பின்வரும் பொருளமையப் பாடப்பட்டுள்ளன.

மொத்த பாடல்கள் : 61

உத்தியோகம் குறித்தும் ஓய்வுக்காலம் குறித்தும் பாடிய பாடல்கள்: -9,
திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மீது பாடிய பாடல்கள்: -13, பரத்ததையர் குறித்து: -1,
ஜவுளி வியாபாரி குறித்து: -1,
துறவிகளின் நீண்ட சடையைக் கேலிசெய்து: -1,
இறைச்சியுண்ணும் அந்தணர்களைப் பழித்து: -4,
புலவர்களின் புகழ்ச்சியைக் கண்டித்து: -5,
மழை வேண்டிப் பாடிய பாடல்கள்: -7,
வெப்பமிகுதியால் சூரியனை நிந்தித்துப் பாடிய பாடல்: -2,
தனக்கோடி முதலியாருக்கு எழுதியகடிதம்: -1,
சீகாழிக் கோவையைச் சிறப்பித்துப் பாடியது: -2,
சி.வை.தாமோதிரம் பிள்ளையவர்கள் மீது பாடிய பாடல்கள்: -2,
மனைவி இறந்த போது பாடிய பாடல்கள்: -5,
வரிவாங்கும் அதிகாரிகள் குறித்து: -2,
நாவிதரைப் புகழ்ந்து பாடியது: -1,
முதலியார் வாங்கி வந்த காளை குறித்து: -1,
வேடிக்கைப் பாடல்: -4.

வேதநாயகரின் தனிப்பாடல்களில் அவரின் சோகம் கோபம், நையாண்டி, நகைச்சுவை, நன்றியுணர்வு போன்ற பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

வேதநாயகர் காலத்தில் தமிழகத்தில் பல அறிஞர்களும் புலவர் பெருமக்களும் வாழ்ந்து வந்தனர். அத்தகு அறிஞர்களோடும் புலவர்களோடும் வேதநாயகருக்கு நல்ல நட்பு இருந்தது. குறிப்பாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடனும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடமும் வேதநாயகர் நெருங்கிய நட்புகொண்டிருந்தார். இவர்கள் மட்டுமின்றி இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், கோபால கிருஷ்ண பாரதியார், சி.வை.தாமோதிரம் பிள்ளை போன்ற பலருடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தம் வேதநாயகர் மீது குளத்தூர் கோவை என்றவொரு கோவை நூலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

சனி, 20 பிப்ரவரி, 2010

மாயூரம் வேதநாயகர் நாவல் மட்டுமா எழுதினார்?

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-2

மாயூரம் வேதநாயகம் பிள்ளை:

மாயூரம் வேதநாயகர். சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரி அம்மாளுக்கும் மகனாகத் திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில் 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். வேதநாயகரின் பாட்டனார் மதுரநாயகம் பிள்ளை சைவ வேளாள மரபில் பிறந்தவர் என்றாலும் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவர் வழிவந்த வேதநாயகர் பிறப்பால் கிறித்துவராகப் பிறந்தார்.

ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மிகுந்த புலமை பெற்ற வேதநாயகருக்கு ஆங்கிலக் கல்வியைப் பல்கலைக் கழகங்களின் வாயிலாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. (சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது-1857). இவர் ஆங்கிலக் கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த தியாகப் பிள்ளை (திருச்சி நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்) என்பவரிடம் பயின்றார். தொடக்கத்தில் தம் 22 ஆம் வயதில் திருச்சி நீதிமன்ற ஆவணக் காப்பாளராகவும் பின்னர் 24ஆம் வயதில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

1856இல் ஆங்கில அரசு நடத்திய உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார் வேதநாயகர். 1857இல் அவருக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. தம் முப்பத்தொன்றாம் வயதில் அவர் இப்பதவியினை ஏற்றார். ஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போராம் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற ஆண்டு). நீதிபதி பதவியில் நேர்மையோடும் தன்மானத்தோடும் பணியாற்றிய வேதநாயகருக்கு இடையில் பல இடையூறுகள் வந்தன. பதினைந்து ஆண்டுகள் மட்டுமே நீதிபதியாகப் பணியாற்றிய அவருக்கு 46 ஆம் வயதில் மேலதிகாரிக்குக் கீழ்படிந்து நடக்கவில்லை என்ற காரணத்தால் கட்டாயத்தின் பேரில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது.

வேதநாயகரின் குடும்ப வாழ்க்கை மிகுந்த சோகம் கலந்தது. இல்வாழ்க்கையில் அவர் மணந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்துக் காலமாயினர். எனவே அவர் ஐந்து பெண்களை மணக்க நேரிட்டது. முதல் மனைவி பாப்பம்மாள். இரண்டாம் மனைவி இலாசர் அம்மையார். மூன்றாவது மனைவி அக்காள் மகள் மாணிக்கத்தம்மையார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் குழந்தை ஆண்குழந்தை ஞானப்பிரகாசம், இரண்டாம் மூன்றாம் குழந்தைகள் பெண் குழந்தைகள் சவரி முத்தம்மாள், இராசாத்தி அம்மாள். நான்காவது மனைவி அண்ணுக் கண்ணம்மாள். ஐந்தாம் மனைவி அம்மாளம்மாள். வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் வந்தாலும் கலங்காத நெஞ்சுரம் பெற்றவர் வேதநாயகர். எனவேதான் இத்துணை துன்பங்கள் தொடர்ந்த போதும் அவரால் சாதிக்க முடிந்தது.

வேதநாயகர் படைப்புகள்:

கவிதைப் படைப்புகள்
1. நீதி நூல் நீதி இலக்கியம் 1859
2. பெண்மதி மாலை பெண்கல்வி பற்றியது 1869
3. சோபனப் பாடல்கள் நலுங்குப் பாடல்கள் 1862
4. தனிப்பாடல்கள் உதிரிப் பாடல்கள் 1908
5. திருவருள் மாலை சமயப் பாடல்கள் 1873
6. திருவருள் அந்தாதி சமயப் பாடல்கள் 1873
7. தேவமாதா அந்தாதி சமயப் பாடல்கள் 1873
8. தேவதோத்திர மாலை சமயப் பாடல்கள் 1889
9. பெரிய நாயகி அம்மைப் பதிகம் சமயப் பாடல்கள் 1873
10. சர்வ சமய சமரசக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1878
11. சத்திய வேதக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1889

மொழிபெயர்ப்பு
12. சித்தாந்த சங்கிரகம் தமிழில் சட்ட ஆவணங்கள் 1862
13. 1850 – 1861 நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் சட்ட ஆவணங்கள் 1863

உரைநடை நூல்கள்
14. பெண்கல்வி கட்டுரை 1869
15. பெண்மானம் கட்டுரை 1870
16. பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் 1879
17. சுகுண சுந்தரி நாவல் 1887

1858 முதல் 1887 வரை தொடர்ந்து தமிழிலக்கியங்கள் படைப்பதில் ஈடுபட்ட வேதநாயகர் தமிழின் முதல்நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரத்தை (1879) எழுதித் தமிழிலக்கிய உலகில் தனியிடத்தைப் பெற்றுள்ளார்.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஆண்களுக்குத் தலை பத்தா? வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1

ஆண்களுக்குத் தலை பத்தா?
வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

இன்றைக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கீழ்க்கண்ட பாடலைக் கவனியுங்கள்,

கேளும் பூமான்களே – கிருபை வைத்து
ஆளும் சீமான்களே
நாளும் கதியில்லா எங்கள் மேல் வர்மமோ
தாளுறும் தூசி போல் தள்ளுதல் தர்மமோ

காலைக்கும் மாலைக்கும் மூளைக்குள் எங்களை
ஆலைக்கரும்பு போல் தேய்த்தீர் - பாக
சாலைக்கும் மன்மத லீலைக்கும் ஏவின
வேலைக்கும் எங்களை மாய்த்தீர்


மூலக்கல்வி நாங்கள் வாசித்தால் ஆபத்தோ
மூடப்பெண் கொள்வீர் உமக்குப் பெரும்பித்தோ
கலைக்கிரந்தங்கள் உங்கள் பாட்டன் சொத்தோ
உமக்கென்ன காணும் தலைமேல் தலை பத்தோ

உங்கட்கு உதவியாய் எங்களைத் தேவன்
உண்டாக்கியதை அறியீரோ - செல்வ
மங்கை உடன் கல்வி நங்கை
முதலானோர்மாதர் என்று குறியீரோ

எங்களை அல்லாமல் நீங்கள் உதித்தீரோ
ஏறி ஆகாயத் திருந்து குதித்தீரோ
அங்கப்பால் உண்ணாமல் தேகம் உதித்தீரோ
அடிமை என்றெங்கள் தலையில் விதித்தீரோ


போதக யூரோப்பு மாதர்களைக் கண்டு
பொங்கிப் பொறாமை கொண்டோமே - என்றும்
பேதம் இல்லா இந்தியாதனில் நாங்கள்
பிறந்தென்ன லாபம் கண்டோமே

நாதக்கல்விக்கு நகை எந்த மூலையே
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
வேதநாயகன் செய் பெண்மதிமாலையே
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே.

(சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் ப-ள்: 184-186)

தங்களுக்குப் படிப்பிக்கும்படி ஸ்திரிகள் புருஷர்களுக்கு வேண்டுதல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் பெண் கேட்கிறாள், நாள் முழுவதும் ஆலையிட்ட கரும்பு போல் எங்களைக் கசக்கிக் பிழிகின்றிர்களே! அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும் ஏவிய வேலைகளுக்குமாக எங்களைச் சாகடிக்கின்றீர்களே!

நாங்கள் கல்வி கற்றால் அதனால் ஏதும் ஆபத்தா? படிக்காத மூடப்பெண்தான் வேண்டும் என்று கேட்கிறீர்களே உங்களுக்கென்ன பைத்தியமா? படிப்பு என்பது உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? ஆண்களாகிய உங்களுக்கெல்லாம் தலைக்கு மேல் தலையாகப் பத்துத் தலையா இருக்கிறது? பாடலின் முதல்பத்தி இது.

இன்னும் முழுப்பாடலிலும் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் இப்பெண்ணின் கலகக் குரலைக் கேட்டால்… இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் புரட்சிப் பெண்ணின் குரலை விட மிக அழுத்தமாகவும் அறிவு பூர்வமாகவும் ஒலிக்கும். யார் இந்தப் புரட்சிப்பெண்? பாரதியின் புதுமைப் பெண்ணை விட ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரியவள்.

ஆண்களெல்லாம் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்தீர்கள்? என்று கேட்கும் அந்தப் பெண் மாயூரம் வேதநாயகர் படைத்த புரட்சிப்பெண். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே எங்களுக்கும் கல்வி கொடு! பெண்ணை விட ஆண் என்ன உசத்தி! என்றெல்லாம் குரல்கொடுத்த வேதநாயகரின் குரல்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தமிழா! இதுதான் மானம் - தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-3

தமிழா! இதுதான் மானம் - தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-3

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புறநானூற்று மன்னர்களும் மான உணர்வும்:

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகால் பெருவளத்தனோடு போரிட்டபோது கரிகால்வளவன் சேரலாதன் மார்பிலே எறிந்தவேல் அவன் உடலுக்குள் ஊடுருவி முதுகுவழியாகச் சென்றது. மார்பில் எறிந்தவேல் முதுகில் புண்ணை ஏற்படுத்தியதனால் சேரமன்னன் அதுவும் புறப்புண்ணுக்கு ஒப்பாகும் எனக்கருதி உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் துறந்தான். இதனை,புறப்புண் நாணி மறத்தகை மன்னன்வாள் வடக்கு இருந்தனன்

ஈங்குநாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே! -புறம். 65.

என்று இத்தகு மான உணர்வுடைய வேந்தன் இல்லாமையால் ஞாயிற்றையுடைய பகல் இனி முன்போல் கழியாது என்று பாடுகிறார் கழாத்தலையார் என்ற புலவர். போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தாலும் புறப்புண் நாணி வடக்கிருந்ததால் வெற்றிபெற்ற கரிகால் வளவனைக் காட்டிலும் அவன் நல்லவன் என்று வெண்ணிக்குயத்தியார்,

வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே -புறம். 66

என்று சேரமான் பெருஞ்சேரலாதனைப் புகழ்ந்தரைக்கின்றார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்செய்து தோல்வி அடைந்து சோழனால் சிறையிலிடப் பெறுகிறான். தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் சிறைக்காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி நீர் தருகின்றார்கள். இம்மானக்கேட்டை நினைந்து நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான் சேரமன்னன் இரும்பொறை.

குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்;படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. -புறம். 74.


என்பது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வாக்குமூலம் ஆகும்.அரசர்கள் தோல்வியுற்றுப் பகைவர்பால் துன்பமுற்று வாழ்வதையும் போர்க்களத்தில் புறப்புண் ஏற்படுவதையும் உண்ணுநீர் ஆயினும் பகைவரிடமிருந்து இரந்து பெறுதலையும் தம் மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினார்கள் என்பதை மேற்கூறிய இரண்டு சான்றுகளும் புலப்படுத்துகின்றன.

தம்மக்களோடு போரிட நேர்ந்தது குறித்து நாணி வடக்கிருந்து உயிர்துறந்த சோழமன்னன் கோப்பெருஞ்சோழனும், ஆராயாது தீர்ப்புரைத்தமைக்காக வருந்தி உயிர்நீத்த சிலப்பதிகாரத்துப் பாண்டிய நெடுஞ்செழியனும் இத்தகு மானஉணர்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர்களே.

மேற்கூறிய மன்னர்கள் வாழ்க்கை பற்றிய செய்திகள் அனைத்திலும் அவர்கள் தம்பழிக்கு நாணியவர்கள் என்பதையும் தமது பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேர்ந்ததே என்று எண்ணியே தம் மானஉணர்ச்சியால் உயிர்கொடுத்துப் பழிதுடைத்தவர்களாக அவர்கள் விளங்கக் காண்கிறோம்.

இவர்கள் திருவள்ளுவர் கூறிய மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை என்பதற்கேற்பவும் உயிர் நீப்பர் மானம் வரின் என்பதற்கேற்பவும் தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டான உணர்ச்சியால் மானத்தைப் பேணியவர்கள்.

சங்ககால மக்கள் போற்றி ஒழுகிய மானம் என்பது உணவு முதலான வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லாமல் உயர்ந்த கொள்கைகளைக் காப்பதற்காகத் தம் உயிரை இழக்கும் நிலை வந்தாலும் உவந்து ஏற்றுக்கொள்கிற பண்பாகும்.

தன்னலம் கருதிப் பிறர்மேல் கொள்ளும் கோபம் மானமன்று. தன்பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேராமல் உயிர் கொடுத்துப் பழிதுடைக்கும் ஒப்பற்ற பண்பாகும்.

இவ்வகையில் சங்ககாலப் புலவர்களின் கோப உரைகள் அவர்களின் நெஞ்சுரத்தைக் காட்டுமே அல்லாமல் அதனை அவர்தம் மான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பது பொருந்தாது. சங்ககால மன்னர்கள் சிலர் புறப்புண்ணுக்கு நாணியும், பகைவனிடம் நீர்வேட்கைக்காக மானம்கெட வாழ்தலை வெறுத்தும் உயிர்விட்ட செயலே மானம் என்றும் அதுவே சிறந்த பண்பு என்றும் துணிகின்றோம்.

சனி, 13 பிப்ரவரி, 2010

தமிழா! இதுதான் மானமா? -தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-2

தமிழா இதுதான் மானமா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

புறநானூற்றுப் புலவர்களும் மான உணர்வும்:

சங்ககால மன்னர்களும் மக்களும் தம்வாழ்வு உயிர் இரண்டைக் காட்டிலும் மானமே பெரிதெனப் போற்றி வாழ்ந்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி அறிய முடிகின்றது. புறநானூற்றுக் கட்டுரையாளர்களும் திறனாய்வாளர்களும் பழந்தமிழர் வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், சங்ககாலப் புலவர்கள் பலர் தம்பாடல்களில் அவர்களது மானஉணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மானஉணர்வுக்கு மன்னர்களால் இழுக்கு நேர்ந்தபோது அவர்களைத் துச்சமாக எண்ணிச் சாடியுள்ளனர் என்றும் பல சான்றுகளைக் காட்டி எழுதி வருகின்றார்கள். இப்படி அவர்கள் காட்டும் சான்றுகளை மறுபரிசீலனைச் செய்து புலவர்கள் வெளிப்படுத்தியது மானஉணர்வு என்பது பொருத்தமானதுதானா? என்பதை முதலில் ஆய்வோம்.

1. பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கடியநெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபொழுது அவன் பரிசில்தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்காமல் பாடிய பாடல் வரிகள் அவரின் மானஉணர்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் வரிகள்,
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே.
... .... .... .... .... .... தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்களிறு
இன்று பெயரல பரிசிலர் கடும்பே. -புறம். 205.


இப்பாடலில் வரும் மூவேந்தராயினும் பேணாது, மதியாது தரும் பொருள் எமக்குத் தேவையில்லை என்று கூறும் புலவர் பாடலின் நிறைவுப் பகுதியில் தேர், யானைகளைப் பரிசிலாகப் பெறாமல் நாங்கள் பெயரமாட்டோம் என்கிறார். இது மானஉணர்வின் வெளிப்பாடா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2. ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒருசமயம் காலம் தாழ்த்தியபோது அவர் கூறிய சொற்கள் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.ஒளவையாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்அறி யலன்கொல்
.... .... .... .... .... .... .... .... ....
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! -புறம். 206.


இப்பாடலில் அதியமான் என்தகுதியை அறியவில்லையா? அல்லது அவன் தகுதியை அறியவில்லையா? என்று கோபப்படும் ஒளவையார், இதோ உடனே புறப்படுகின்றேன் எங்கே சென்றாலும் எனக்குச் சோறு கிடைக்கும் என்கிறார்.

மேற்கூறிய ஒளவையின் சொற்களை திருவள்ளுவரின் மானம் பற்றிய இலக்கணங்களோடு பொருத்திப் பாருங்கள். அதுமட்டுமல்ல காலம் நீட்டித்ததற்காகக் கோபப்படும் இதே ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து பாடும் மற்றொரு பாடலில்,அதியமான், பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டாது ஆயினும், களிறுதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத்தது அது பொய்யா காதே! -புறம். 101. என்று பாடுகிறார்.

இப்பாடலில் அதியமான் பரிசில் தர எவ்வளவு காலம் நீட்டித்தாலும் யானைக் கொம்பிடையே வைத்த கவளம் போல உறுதியாகக் கிடைக்கும் என்கிறார். கோபப்பட்டதை மானஉணர்ச்சி என்றால், இதை என்னவென்று சொல்வது.

3. பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அதியமான் நெடுமானஞ்சி தம்மைக் காணாமலே தமக்குப் பரிசில் கொடுத்தனுப்பியபோது அவர் பாடிய பாடல் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.பெருஞ்சித்திரனாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

.... .... என்னையாங்கு அறிந்தனனோ
தாங்கரும் காவலன்காணாது ஈத்த இப்பொருட்கு
யான்ஓர்வாணிகப் பரிசிலன் அல்லேன்,
பேணித்திணை அனைத்து ஆயினும் இனிது
அவர்துணை அளவு அறிந்து நல்கினர் விடினே! -புறம். 208.


இப்பாடலில் என்னைப் பார்க்காமலே மன்னன் எப்படி என்தகுதியை அறிந்தான்? எப்படி என்னைப் பார்க்காமலே பரிசு கொடுத்தனுப்பலாம்? தினையளவு கொடுத்தாலும் என்னைப் பேணித் தருவதே சரி என்றெல்லாம் கோபப்படுகின்றார் பெருஞ்சித்திரனார்.

இதே புலவர் குமணனைப் புகழ்ந்து பாடும் போதும் மகிழ்ச்சியோடு நீ குன்றிமணியளவு கொடுத்தாலும் போதும் என்று கூறிவிட்டு, வேறொரு பாடலில் (புறம். 161.) நான் யானைமேல் ஏறிச் செம்மாந்து செல்ல விரும்புகிறேன் எனவே எனக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்காமல் என்தகுதியை நோக்காமல் நின்தகுதியை நோக்கி யானையைப் பரிசாகத் தரவேண்டுமென வேண்டுகிறார்.

அதியமானிடம் என்னைப் பார்க்காமலே என்தகுதியை எப்படி அறிந்தான் என்று மானஉணர்வுடன் கேட்கும் பெருஞ்சித்திரனார் குமண வள்ளலிடம் என்தகுதியைக் கணக்கிடாமல் எனக்கு யானையைப் பரிசாகத் தரவேண்டுமெனக் கேட்கிறார் என்றால் இதனை மானஉணர்ச்சியின் வெளிப்பாடாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும்?.

இதுபோன்றே பெருஞ்சித்திரனார் இளவெளிமானிடம் கோபப்படுவதையும் (புறம். 207) மதுரைக்குமரனார் சோழன் பெருந்திருமாவளவனிடம் கோபப்படுவதையும் (புறம். 197) மானஉணர்வின் வெளிப்பாடாகக் கொள்ள முடியுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.மேலே குறிப்பிட்ட புலவர்களின் பேச்சுக்களை எல்லாம் மானம் என்ற உயர்ந்த பண்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புலவர்களின் உணர்வு வெளிப்பாடு தன்னலம் சார்ந்ததாகவும் பிறர்மேல் சினம்கொண்டு கூறும் வசைமொழிகளாகவும் உள்ளனவே அன்றி தன்தவறு பற்றித் தன்நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியாக இல்லை.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள்.-967


என்ற குறளுக்கேற்பவோ,

என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார் -நாலடி 292

வற்றிமற்று ஆற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க -நாலடி 78


என்ற நாலடியார் கூற்றிற்கேற்பவோ வாழ்பவர்களே மானமுடையார் என்று சிறப்பித்துக் கூறும் பெருமைக்குரியவர்கள். தம்முடைய வறுமைநிலையைப் பலபடக்கூறிப் பரிசில் பெற விழைபவர்கள் இந்த வரையறைக்குப் பொருந்தமாட்டார்கள்.

இப்படிப் புலவர்களின் வெளிப்பாட்டை மானஉணர்வின்கண் அடக்கமுடியாது என்பதால் புலவர்களின் பெருந்தகைமைக்கு ஏதும் இழுக்கு நேர்ந்துவிடாது. சமூகத் தகுதியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த இடத்தில் இருந்த மன்னர்களிடத்து இதன் நேர்எதிரான நிலையில் இருந்த புலவர்கள் நெஞ்சுரத்தோடு தம் எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதே சிறப்பிற்குரியதுதான்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-௧ - மானம்:

தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் - மானம்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

மானம்:

மானம் என்ற சொல் இன்றைய வழக்கில் பேசப்படும் பொருளுக்கும் திருக்குறள் சங்க இலக்கியக் காலங்களில் வழங்கப்பட்ட பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இன்றைக்கு மானம் என்பது வெட்கம், நாணம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.மானக்குறைவு ஏற்படுவதை அவமானம் என்ற சொல்லாலும் மானஉணர்ச்சி உடையவனை மானஸ்தன், மானி என்றும் குறிப்பிடுகின்றார்கள். ரோஷக்காரன், கோபப்படும் இயல்புடையன் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் தன்மானம் என்ற சொல்வழக்கும் மானம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

திருவள்ளுவர் மானம் என்ற பண்பை நற்குடிப் பிறப்பின் பண்பாகக் கருதுகின்றார் என்று அதிகார வரிசைமுறையை வைத்துப் பரிமேலழகரும் மணக்குடவரும் குறிப்பிடுகின்றனர். மானம் என்ற பண்பாவது எஞ்ஞான்றும் தம்நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் என்பது பரிமேலழகர் தரும் விளக்கம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் -குறள். 954


என்று குடிமை என்ற அதிகாரத்தில் சொன்ன பண்பின் விரிவாகவே மானம் என்ற அதிகாரத்தைப் படைக்கிறார் திருவள்ளுவர். மானம் அதிகாரத்தில் வரும் 1, 2, 5 ஆம் திருக்குறள்கள் மேலே குறிப்பிட்ட திருக்குறளை(954) ஒத்ததாகவே படைக்கப்பட்டுள்ளன. மானஉணர்ச்சிக்குக் கேடு வருமேயானால் உயிரை விடுவதே மேலானது என்று அதிகாரத்தில் வரும் பிற குறட்பாக்கள் தெரிவிக்கின்றன.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை -குறள். 964


மருந்தோமற் றூன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து -குறள். 968


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் -குறள். 969


மேலும் மானம் உடையவர் தம்மை மதியாதார் பின்சென்று வாழ்வதை விட உயிரை விடுவதே மேலானது என்றும் கூறுகின்றார்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள். 967


மானம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், மானம் என்பது தமக்குப் பிறர் செய்யும் மானக்கேட்டை எண்ணி அவர்மேல் கோபப்படுவதோ அவரைத் தூற்றுவதோ மானஉணர்ச்சி என்று எங்கும் எப்பொழுதும் குறிப்பிடப் படவில்லை. தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியே சிறந்த மானமாகும்.

மானம் உடையவர் தன்னலம் குறைந்தவராக விளங்க வேண்டுமே அல்லாமல் தன்னலம் கருதிப் பிறர்மேல் சினமும் பகையும் கொள்ளல் கூடாது. ஆதலால் அந்தத் தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவது பொருந்தாது.

இன்னும் ஆராய்ந்தால் மானம் என்பது தன்குடி தன்நாடு முதலியவற்றின் பெருமையையும் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல் தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன்ஆக்கம், தன்கேடு என்பனவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று.

மானம் உடையவர்கள் உயிர் வாழ்க்கையின் அடிப்படை கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து பிறழ மாட்டார்கள். உயர்ந்த கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால் அந்தக் கொள்கைகளை வாழவைத்துத் தம் உயிரை விட்டுவிடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

அம்மா -(ம.பாலன் சிறுகதைகள்) - அணிந்துரை

அம்மா
(ம.பாலன் சிறுகதைகள்)

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளினியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கண நேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகளெல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதி பரவசப்படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த அதிர்ச்சி, சிலிர்ப்பு, மகிழ்ச்சி, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். நண்பர் ம.பாலனின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.

தமிழாசிரியர் ம.பாலன் என் இனிய நண்பர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்த காலத்தில் அவர் மாணவர், அதற்கு முன்பு அதே கல்லூரியில் நான் முதுகலை பயிலும் காலத்தில் இளங்கலை பயின்று கொண்டிருந்த இளவல். 1983க்குப் பிறகு இன்றுவரை நல்ல நண்பர் என்று நூலாசிரியருடனான என் தோழமை பல நிலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கல்லூரிக் காலங்களில் அவர் ஒரு நல்ல ஓவியர். இன்றோ கவிஞர், எழுத்தாளர், நல்லாசிரியர், சமுதாயப் பணியாளர் எனப் பல பரிமாணங்களில் சிறந்து விளங்குகிறார். ‘அம்மா’ என்ற இச்சிறுகதை நூல் அவரின் மூன்றாவது படைப்பு. முதலிரண்டு நூல்களும் கவிதை நூல்கள். மூன்றாவது நூல் சிறுகதைத் தொகுப்பு.

‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருப்பத்திரண்டு சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான் சிறுகதைகள், ஏன்? எல்லாக் கதைகளும் என்றுகூட சொல்லிவிடலாம் அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. எழுத்தாளர் ம. பாலன் சிறுகதைகளின் மைய அச்சு மனித நேயம்.. இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து மனிதநேயம் சிதைக்கப்படுகிற கணங்களையும் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து மனிதநேயம் காப்பாற்றப்படுகிற கணங்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
அம்மா,
இந்தக் காலத்திலும் இளைஞர்கள்,
ஓர் உதவி மிரட்டலாக,
காக்கை குருவி,
சர்க்கரை,
செலவுக்கு ஆச்சு,
நகல் நிஜமானது,
பெண்ணென்றால்,
மகாராசனா!

ஆகிய கதைகள் நூலாசிரியர் ம. பாலனின் மனிதநேயம் பளிச்சிடுகிற கதைகளில் குறிப்பிடத்தக்கன.

‘அம்மா’ தொகுப்புச் சிறுகதைகளில் இடம்பெறும் சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தன பகட்டுகள் அற்றவர்களாகவும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணென்றால் சிறுகதையில் நவ நாகரீக யுவதி, தனக்கு முன்னால் சாலையில் சென்ற மூதாட்டி, தடுக்கி விழுந்தபோது,
“போய்த் தூக்கணும், நாகரீக நல்ல நீலநிற சுடிதாரில் நான். வெளுத்துப்போன புடவை இரவிக்கையில் அவள். யார் வீட்டு வேலைக்காரியோ? தொட்டுத் தூக்கினால் என் கௌரவம் என்னாவது? பார்க்காதது போல் இருந்தேன்” என்கிறாள்.

அதேசமயம் குடித்துவிட்டு வரும் ஒருவன்,
“பாத்து நடக்கக் கூடாது? என்றவாறே குனிந்து தரையில் கிடந்த தக்காளி, கத்திரிக்காய்களைப் பொறுக்கிப் பையில் போட்டான். தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான். மூடியைத் திறந்து, ‘தண்ணி குடிச்சிட்டு ஒக்காந்துட்டுப் போங்க’ கூறிவிட்டுச் சென்றான். தள்ளாட்டத்திலும் உதவியைத் தடுமாற்றம் இல்லாமல் செய்தான்”
என்று சான்றிதழ் வழங்குகிறாள் அந்த நாகரீக யுவதி.

கதையின் முடிவில் மனித நேயமற்றவர்களும் சாமான்ய மக்களின் மனிதநேயச் செயல்களைக் கண்டு, தன்செயலுக்கு வருந்தி நாணுவதாகப் படைப்பது ம. பாலனின் தனிபாணி என்றே குறிப்பிடலாம். அந்த அளவிறகுப் பெரும்பாலான கதைகளில் இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளைக் காணமுடிகிறது.

மகாராசனா! கதையில் தேநீர் கடையில் ‘வவுத்தப் பசிக்குது ஒரு ரொட்டி வாங்கிக் கொடுங்க’ என்று கைநீட்டி யாசகம் கேட்கும் வயோதிகருக்கு உதவாமல்,
“கடையின் உள்ளே இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிரியர், தேநீர் கலக்குபவரிடம் கூறி பிஸ்கட் கொடுக்கச் சொல்ல நினைத்தார். ஆங்கிலத்தில் பிஸ்கட் என்ற சொல்லை, ‘மாச்சில்’ என்று தொலைக்காட்சி ஒன்றில் தமிழ்ப்படுத்தி இருப்பதையும் நினைத்தார். ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்ற முண்டாசுக் கவிஞனின் பாடலடிகளை முணு முணுத்தார்.”
அத்தோடு சரி! பசித்துக் கைநீட்டிய வயோதிகருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தன் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் சிறுகதை ஆசிரியர், தானும் ஓர் ஆசிரியன் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், பொதுவாகப் படித்தவனின் பொதுப்புத்தி எப்படிச் செயல்படும் என்பதை இந்தக் கதையில் மிக அழகாக வெளிப்படுத்துகின்றார். பசிக்கு ரொட்டி கேட்ட அந்த வயோதிகருக்குப் பிறகு யார்தான் உதவியது? பெட்ரோல் பங்கில் காற்றடைக்கும் பணிசெய்யும் மூன்றரை அடி உயரமுள்ள ஊனமுற்ற மனிதர். அவரே மனிதநேயத்தால் உயர்ந்த மனிதர் என்று முடிக்கிறார் சிறுகதையாசிரியர். ‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பின் தனிச்சிறப்பே இந்த மனிதநேயம்தான்.

இத்தொகுப்பின் ஒன்றிரண்டு சிறுகதைகளைத் தவிர மற்றெல்லாச் சிறுகதைகளிலும் ஆசிரியர் ம.பாலன் தானும் ஒரு கதாப்பாத்திரமாக வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ வெளிப்படுகிறார். கதைகளில் வெளிப்படும் சமூகம் குறித்த அவரின் கூர்மையான விமர்சனங்களுக்கு அவரும் தப்புவதில்லை. படைப்பாளி வேறாகவும் தான் வேறாகவும் நின்று அவர் இச்சிறுகதைகளைப் படைத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி ம.பாலனின் சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்மா,
இந்த வயதில்,
எக்சாமுக்கும் கூட,
ஓர் உதவி மிரட்டலாக,
நகல் நிஜமானது,
பயணித்தது,
பெண்ணென்றால்,
மகாராசனா

ஆகிய கதைகளை இத்தொகுதியின் சிறந்த கதைகள் என்று என்னால் பட்டியலிடமுடியும்.

நண்பர் ம.பாலன் தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக அம்மா விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...