ஞாயிறு, 29 மே, 2022

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ


முனைவர்
நா.இளங்கோ

செங்கல் இல்லாமலும், மரம் ல்லாமலும், உலோகம் இல்லாமலும், சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணுவிற்காக விசித்திரசித்தன் என்னும் மன்னனால் இந்த இலக்சிதன் ஆலயம் அமைக்கப்பட்டது”

கி.பி. 610 முதல் கி.பி. 640 வரை பல்லவப் பேரரசை ஆட்சி புரிந்த விசித்திரசித்தன் என்று புகழப்பட்ட முதலாம் மகேந்திரவர்மன் உருவாக்கிய வட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகிய மண்டகப்பட்டு குடைவரையில் வெட்டப்பட்டுள்ள வடமொழிக் கல்வெட்டின் தமிழாக்கமே மேலே இடம்பெற்ற வாசகங்கள்.

அதாவது முதலாம் மகேந்திரவர்மனுக்கு முன்னர்த் தமிழகக் கோயில்கள் செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றாலேயே கட்டப்பட்டு வந்தன. இந்தப் பழைய கட்டுமான முறையை விடுத்து முதன்முதலாகக் கல்லைக் குடைந்து கோயிலை உருவாக்கும் புதியமுறையை விசித்திர சித்தனாகிய முதலாம் மகேந்திரவர்மன் உருவாக்கினான் என்ற செய்தியை இக்கல்வெட்டு அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

தமிழகச் சிற்பக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும் பெரிதும் பல்லவர்களிட மிருந்தே தொடங்குகின்றது. பல்லவர்களுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பாலான சிற்பங்கள் மண்ணாலும் (சுடுமண் சிற்பங்கள்) சுதையாலும் மரத்தாலுமே செய்யப்பட்டன. சங்க காலத்தில் மண் சிற்பக் கலைஞர்களை மண்ணீட்டாளர் என்று அழைத்தனர். கல்லால் சிலை அமைக்கும் வழக்கம் பல்லவர்களுக்கு முன்பு தமிழகத்தில் சிறுவழக்காய் இருந்ததுள்ளது என்பதற்குச் சான்றாக அமைவது பழந்தமிழரின் நடுகல் மரபு குறித்த செய்திகளே

தொடக்கத்தில் பல்லவர்கள் குன்றுகளின் அடிவாரத்தைக் குடைந்து குடைவரைக் கோயில்களை அமைத்தனர். அக்குடைவரைகளில் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களே இடம்பெற்றன. சிற்பத் தொகுப்புகளாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் பலவற்றை மாமல்லபுரத்தில் காணலாம். குடைவரைகளை அடுத்த பல்லவச் சிற்பக்கலை மற்றும் கட்டடக் கலையின் வளர்ச்சியை ஒற்றைக் கல் ரதங்கள் என்றழைக்கப்படும் முழுப்பாறைக் கோயில்களில் காணலாம். இவ்விரண்டு கலைப்பாணிகளும் பல்லவச் சிற்பக்கலையின் முதல் தலைமுறை என்றழைக்கப்படும். பல்லவச் சிற்பக்கலை மற்றும் கட்டடக் கலையின் இரண்டாம் தலைமுறை வளர்ச்சி என்பது கற்றளிகள் என்றழைக்கப்படும் கட்டுமானக் கோயில்களைக் குறிப்பிடுவதாகும்.

தமிழகத்தின் பிற்காலச் (சோழர், பாண்டியர், நாயக்கர்) சிற்பங்களிலிருந்து பல்லவச் சிற்பங்களை வேறுபடுத்தி அடையாளங் காண்பது மிக எளிது. 

பல்லவச் சிற்பங்கள் பெரும்பாலும் மெலிந்த, நீண்ட உடல் அமைப்பையும் பரந்த மார்பையும், குறுகிய இடையையும் கொண்டிருக்கும். இச்சிற்பங்களின் கிரீடங்கள் கூம்பு வடிவமாகவும் நீண்டும் இருக்கும். பூணூல் வலத் தோளின்மேல் அணியப் பெற்றிருக்கும். சிற்பங்களில் அணிகலன்கள் குறைவாகவே இருக்கும். கிரீடங்கள் மற்றும் தலை லங்காரங்கள் எளிமையாக அமைந்திருக்கும். பெண் உருவங்கள் இடை சிறுத்தும் அடிவயிற்றுப் பகுதி முன்பக்கம் சற்றுப் புடைத்தும் காணப்படும். இடுப்பின் இருமருங்கிலும் ஆடை பரந்துவிரிந்து செல்வதாக இருக்கும் சிற்பங்களில் உள்ள காதணிகள், குறிப்பாகக் குண்டலங்கள் தடித்தவையாகவும், தோள் அணிகள் எளிமையான வேலைப்பாடுகளுடனும் இருக்கும். அணிகலன்கள் குறைவாகவே இருக்கும். பெண் சிற்பங்களில் சில சிற்பங்களுக்கு மட்டுமே மார்புக் கச்சை அணிவிக்கப் பட்டிருக்கும். பொதுவாகப் பல்லவச் சிற்பங்கள் எளிமை மற்றும் கம்பீரத்தைக் கொண்டனவாக இருக்கும்.

***

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் என்னும் இந்நூல் புலவர் வில்லியனூர் . வேங்கடேசன் ஐயாவின் இருபத்தெட்டாம் நூலாகும். நூலாசிரியர் . வேங்கடேசன் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றியல், கல்வெட்டியல் துறைகளில் ஈடுபட்டுள்ளதோடு இத்துறைகள் சார்ந்து பல்வேறு நூல்களையும் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். புதுச்சேரியில் இத்துறையில் முனைப்புடன் செயல்பட்ட புலவர் பாகூர் சு.குப்புசாமி ஐயாவின் ஒருசாலை மாணக்கராகப் பயின்றதோடு மட்டுமல்லாமல் அவரோடு இத்துறைகளில் தொடர்ந்து தோய்ந்து ஆழங்கால்பட்ட ஆய்வாளராகவும் திகழ்பவர். புதுச்சேரி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புதுச்சேரியில் இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் ஆகிய துறைகளில் பலரையும் ஆற்றுப்படுத்திய பெருமைக்கு உரியவருமான புதுவையின் சடையப்ப வள்ளல் திருமுடி . சேதுராமனாரின் வழிகாட்டுதலில் தொடங்கிய வரலாற்றியல், கல்வெட்டியல் துறை சார்ந்த ஆய்வுப் பயணத்தையே தமது வாழ்வியலாக வகுத்துக் கொண்டவர் .வேங்கடேசன் அவர்கள்.

புதுச்சேரி வில்லியனூரில் தண்டி சீ.நடராஜன்சுப்புலட்சுமி இணையருக்கு மகனாக 30-10-1940 இல் பிறந்த . வேங்கடேசன் அவர்கள் தமிழ்ப் புலவர் கல்வி முடித்துத் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐயா அவர்கள் ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர். முத்து விழா கண்ட அகவைக்குப் பின்னரும் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியைப் போல் சளைக்காமல் நூலகங்களிலும் களப்பணிகளிலும் ஆய்வரங்குகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வியப்பிற்குரியது. இத்தகைய ஆய்வில் தோய்வும் தொய்வுஇல் ஆய்வும் இன்றைய இளந்தலைமுறையினர் பின்பற்றத் தக்கது என்பதனையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் என்ற இந்நூலுக்குரிய அணிந்துரையைப் பல்லவர்கள் குறித்த அறிமுகத்தோடு தொடங்க விரும்புகிறேன்.

***

தமிழகத்தை ஆண்ட வேந்தர்களில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களைப் பற்றிய வரலாறுகளே பொதுவாக நம்மில் பலருக்கும் நினைவில் பதிந்திருக்கும். ஆனால் தொண்டை மண்டலத்துக் (வட தமிழகம்) காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 275 முதல் கி.பி. 890 வரை சுமார் அறுநூறு ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் குறித்த ஓர்மை தமிழர்களிடத்திலேயே பலருக்கும் இருப்பதில்லை.

தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. அதாவது சிவஸ்கந்த வர்மனால் தொடங்கப் பெற்ற பல்லவர் ஆட்சி சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சிம்மவிஷ்ணு காலத்தில் பேரரசாக விரிவடையத் தொடங்கியது. முற்காலப் பல்லவர்கள் ஆட்சிக் காலங்களில் சிற்றரசாக இருந்த நிலைமாறிப் பிற்காலப் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு பேரரசாக வலுப்பெறத் தொடங்கியது. களப்பிரர்களை வீழ்த்தி ஆட்சியை விரிவுபடுத்திய பல்லவர்கள் தமிழகத்தில் சங்க காலத்திற்குப் பிறகு ஒரு நீண்ட நிலையான ஆட்சியைச் சுமார் அறுநூறு ஆண்டுகள் நடத்தினர். பல்லவர்கள் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் பிராகிருதமும் இடையில் வடமொழியும் பின்னர்த் தமிழ்மொழியும் செல்வாக்கு செலுத்தின. தமிழகக் கோயிற் கலையும் சிற்பக் கலையும் செழிப்புற்றது பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில்தான். பின்னர் வந்த சோழப் பேரரசர்கள் அக்கலைகளை மேலும் செழுமைப் படுத்தினர். களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் செழிப்புற்றிருந்த சமணமும் பௌத்தமும் பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் பின்னடைவைச் சந்தித்தன. சைவ, வைணவச் சமயங்கள் பல்லவர் காலத்தில் பெருவளர்ச்சி பெறத் தொடங்கின.

பல்லவர்கள் யார்? அவர்கள் தமிழர்களா? எங்கிருந்து வந்தார்கள்? என்ற வினாக்கள் வரலாற்று ஆய்வாளர்களிடத்தே முடிவுறாத விவாதங்களாய் இன்றும் தொடர்கின்றன. சங்க இலக்கியங்களில் பல்லவர் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. பாரசீக மரபைச் சேர்ந்த பஹலவர்களே தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் என்றும், இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து கடல்கடந்து வந்து தமிழக ஆட்சியைப் பிடித்தவர்களே பல்லவர்கள் என்றும், தமிழகத்தின் தொண்டை மண்டலப் பழங்குடியினரே பல்லவர்கள் என்றும், சாதவாகனப் பேரரசிற்கு உட்பட்ட குறுநில மன்னர்களே பல்லவர்கள் என்றும் வரலாற்று அறிஞர்கள் பல்வேறு கருதுகோள்களை முன்வைத்துப் பல்லவர் தோற்றம் குறித்துக் கருத்துரைக்கின்றனர். இதுநாள்வரை பல்லவர்களின் பூர்வீகம் குறித்துத் திட்டவட்டமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

ஆறு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட பல்லவர்களை 1. முற்காலப் பல்லவர்கள், 2. இடைக்காலப் பல்லவர்கள், 3. பிற்காலப் பல்லவர்கள் என்று மூன்றாகப் பிரிக்கும் வழக்கமுண்டு. கி.பி. 275 தொடங்கி தமிழகத்தை ஆண்ட சிவஸ்கந்த வர்மன், பப்பதேவன், புத்தவர்மன் முதலான பல்லவ மன்னர்களை முற்காலப் பல்லவர்களாகவும் கி.பி. 340 முதல் கி.பி. 575 வரை அரசாண்ட குமாரவிஷ்ணு, கந்தவர்மன், வீரகூர்ச்சவர்மன், விஷ்ணுகோபன் முதலான பல்லவ மன்னர்களை இடைக்காலப் பல்லவர்களாகவும் கி.பி. 575 முதல் கி.பி. 730 வரை அரசாண்ட சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன் இராஜசிம்மன் என்றழைக்கப்படும் பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், மூன்றாம் மகேந்திரவர்மன் முதலான பேரரசர்களைப் பிற்காலப் பல்லவர்களில் முதல் பிரிவாகவும் கி.பி. 730 முதல் கி.பி. 890  வரை அரசாண்ட இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலான பல்லவ மன்னர்களைப் பிற்காலப் பல்லவர்களில் இரண்டாம் பிரிவாகவும் வரலாற்று ஆசிரியர்கள் வரையறுப்பர். பிற்காலப் பல்லவர்களை இரண்டாகப் பிரிப்பதற்குக் காரணம் முதல் பிரிவில் இடம்பெறும் மன்னர்கள் சிம்மவிஷ்ணு பரம்பரையில் வந்தவர்கள், இரண்டாம் பிரிவில் இடம்பெற்ற மன்னர்கள் சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மனின் பரம்பரையில் வந்தவர்கள் ஆவர்.

பல்லவப் பேரரசர்களில் குறிப்பிடத்தக்க பேரரசர்கள் மூவர். 1. முதலாம் மகேந்திரவர்மன் 2. முதலாம் நரசிம்மவர்மன். 3. இராஜசிம்மன்

தமிழக வரலாற்றில் பல்லவர் காலத்தில்தான் கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை முதலான கலைகளும் கல்வியும் சைவ வைணவ எழுச்சியும் சிறப்புற்று விளங்கின. இவற்றைத் தொடங்கி வைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கு உண்டு. இவன் சாளுக்கியரை வென்றான்; கங்கர்களை அடக்கினான்.

முதலாம் மகேந்திரவர்மன் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் முதலான நீர்நிலைகளை மேம்படுத்தி விவசாயத்தை வளப்படுத்தவும், தம் குடிமக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பொதுப்பணிகள் பலவற்றைச் செய்தான். இவன் முதலில் சமணனாக இருந்தான். பின்னர், சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் முயற்சியால் சைவ சமயத்திற்கு மாறினான்.

முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் ஆட்சிக் கட்டில் ஏறிய அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மன் தம் ஆட்சிக் காலத்தில் பல்வேறு போர்களை நடத்தி வெற்றிவாகை சூடினான் முதலில் வாதாபியை ஆண்டு வந்த சாளுக்கியரை வென்றான். சாளுக்கியரை வென்றதோடு பாண்டியருடனும், இலங்கையருடனும், கங்கருடனும் போர் புரிந்து வெற்றி பெற்றான். இவன் கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. பல்லவ நாட்டில் இருந்த சிறுசிறு குன்றுகளைக் குடைந்து பல குகைக்கோயில்களை அமைத்தான். நாமக்கல் நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில், மாமல்லபுரத்தில் உள்ள மகிஷாசுர மண்டபம், வராக மண்டபம் ஆகிய குகைக் கோயில்களை இவன் வெட்டுவித்தான். முதன்முதலாக ஒரே கல்லால் உருவான ஒற்றைக்கல் கோயில்களை அமைத்த பெருமை இவனையே சாரும். மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படும் ஒற்றைக்கல் கோயில்கள் ஐந்தும் இவனால் அமைக்கப்பட்டனவே ஆகும்.

பல்லவக் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு மன்னன் இராஜசிம்மன் என்றழைக்கப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன். இவன் மிகச்சிறந்த கற்றளிகளை உருவாக்கிப் பெரும்புகழ் பெற்றான். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலும், பனைமலைக் கோயிலும், மாமல்லபுரக் கடற்கரைக் கோயிலும் இவனால் உருவாக்கப்பட்ட கலைக் களஞ்சியங்களாகும்.

***

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் என்னும் இந்நூலினை நூலாசிரியர் நான்கு இயல்களாகப் பகுத்துள்ளார். முதல் மூன்று இயல்கள் புதுச்சேரியில் கிடைத்துள்ள பல்லவச் சிற்பங்களாகிய முருகன், சண்டேசுவரர், தவ்வை ஆகிய மூன்று கடவுளர் சிற்பங்கள் குறித்தும் அத்தெய்வங்களின் வழிபாட்டு மரபுகள் குறித்தும் அத்தெய்வங்கள் தொடர்பாக இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் குறித்தும் பேசுகின்றன. நான்காவது இயல் அன்னையர் எழுவர் என்ற தலைப்பில் சப்த மாதர் வழிபாட்டு மரபுகள் குறித்தும் சப்த மாதர்களில் தொடக்கத்தில் இடம்பெற்ற காளி என்ற பெண்தெய்வம் பிற்காலத்தில் கொற்றவை என்ற தனித்தெய்வமாக வளர்ச்சியடைந்த நிலையையும் பின்னர் காளி இருந்த இடத்தில் சாமுண்டி என்ற பெண் தெய்வத்தை இட்டு நிரப்பிய செய்தியையும் பேசுகின்றார். நிறைவாக அந்த நான்காம் இயலைச் சப்த மாதர் வழிபாடுகள் குறித்து இலக்கியங்களில் இடம்பெற்ற பாடல் அடிகளை மேற்கோள்களாக எடுத்துக்காட்டி நிறைவு செய்கின்றார்.

நூலின் முதல் இயல் மேல்காசாக்குடியில் கிடைத்த பல்லவர் கால முருகன் சிற்பம் குறித்து விவரிக்கின்றது. காரைக்கால் மேல்காசாக்குடி என்னும் ஊரில் கிடைத்த நந்திவர்மன் காலத்துச் செப்பேட்டின் அடிப்படையிலும் முருகன் சிற்பத்தின் சிற்பஅமைதியைக் கொண்டும் இது பல்லவர் காலச் சிற்பமே என்பதனை நூலாசிரியர் உறுதி செய்கின்றார் இவ்வியலில் தமிழகத்து முருக வழிபாட்டின் தொன்மையைச் சங்க இலக்கியங்கள் முதலான பழந்தமிழ் இலக்கியங்களின் துணையோடு நூலாசிரியர் விவரிப்பது அவரின் இலக்கியப் புலமைக்குச் சான்றாக விளங்குகின்றது.

நூலின் இரண்டாம் இயல் புதுச்சேரி வில்லியனூர் சிவன் கோயிலில் உள்ள சண்டேசுவரர் சிற்பம் குறித்து விவரிக்கின்றது. திருவாமாத்தூரில் கிடைத்துள்ள முதலாம் இராசராசனின் 13 ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 998) கல்வெட்டு ஒன்று, வில்லிய நல்லூரை (இன்றைய வில்லியனூர்) ”விடேல்விடுகு சதுர்வேதி மங்கலமாகிய வில்லிய நல்லூரின் ஊரவைஎன்று குறிப்பிடுகின்றது. விடேல் விடுகு என்பது பல்லவ அரசர்களின் பட்டப் பெயர்களில் ஒன்று. எனவே விடேல் விடுகு சதுர்வேதி மங்கலமாகிய வில்லிய நல்லூர் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதனை நூலாசிரியர் உறுதி செய்கின்றார். இந்தப் புறச்சான்றின் அடிப்படையிலும் சண்டேசுவரர் சிற்பத்தின் கலைப்பாணியாகிய அகச் சான்றினைக் கொண்டும் இச்சிற்பம் பல்லவர் காலச் சிற்பமே என்பதனை நூலாசிரியர் நிறுவுகின்றார். மேலும் இவ்விரண்டாம் இயலின் தொடக்கத்தில் சண்டேசுவர வழிபாட்டு மரபுகள் குறித்தும் பெரிய புராணத்தின் துணையோடு சண்டேசுவரர் வரலாறு குறித்தும் விரிவாகப் பேசுகின்றார்.

விடேல் விடுகு என்பது பல்லவர்களின் பட்டப் பெயர்களில் ஒன்று என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பல்லவர்களுக்குக் கொடியும் இலச்சினையும் நந்தி ஆகும். விடை என்பது நந்தியைக் குறிக்கும். விடேல் விடுகு என்பது விடை+ வெல்+ விடுகு என்பதன் மருவிய வழக்காக இருக்கலாம் என்றும் வெற்றியை உடைய நந்தி இலச்சினையோடு விடப்பெறும் ஆணை என்பதே இதன் பொருளாக இருக்கலாம் என்றும் பல்லவர் வரலாறு என்ற நூலில் மா.இராசமாணிக்கனார் குறிப்பிடுவதையும் இங்கே நினைத்துப் பார்த்தல் நன்று.

நூலின் மூன்றாம் இயல் புதுச்சேரி பாகூர் ஏரியின் கலிங்கல் வடிகால் பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு தவ்வை என்றழைக்கப்படும் மூத்ததேவியின் புடைப்புச் சிற்பங்கள் குறித்துப் பேசுகின்றது. தமிழகத்தில் சங்க காலம் தொடங்கி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை பெருவழக்கில் இருந்த மூத்ததேவி (ஜோஷ்டா தேவி) வழிபாட்டு மரபுகளை இவ்வியல் பல்வேறு இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகளோடு விரிவாகப் பேசுகின்றது. மேலும் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள மூத்த தேவிச் சிற்பங்கள் குறித்த முழுமையான தகவல் தொகுப்பும் இவ்வியலில் இடம்பெற்றுள்ளது. நூலாசிரியரின் பரந்துபட்ட இலக்கிய வரலாற்றுப் புலமை மற்றும் கல்வெட்டுத் தேர்ச்சிகளைப் பறைசாற்றும் விதமாக இவ்வியல் அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.

நூலின் நான்காம் இயல் அன்னையர் எழுவர் என்ற தலைப்பில் பழந் தமிழகத்தின் தாய்த்தெய்வ வழிபாட்டு மரபுகள் குறித்தும் சப்தமாதர் வழிபாடு குறித்தும் பேசுகின்றது. சிலப்பதிகார வழக்குரை காதையில் வாயிற்காவலன் குறிப்பிடும் அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு, சூர்உடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேருரம் கிழித்த பெண் என்னும் பகுதியை எடுத்துக் காட்டி அன்னையர் எழுவரில் இளையவளாக இடம் பெற்றவள் காளி என்பதனைக் குறிப்பிடும் நூலாசிரியர் பின்னாளில் காளி வழிபாடு கொற்றவை வழிபாட்டோடு இணைந்து தனித் தெய்வமாக வளர்ச்சி பெற்ற சமயச் சூழலையும் காளியின் நகர்வால் ஏற்பட்ட வெற்றிடத்தைச் சாமுண்டி எனும் புதிய பெண் தெய்வம் நிரப்பிய சமய வரலாற்றையும் விரிவாக இவ்வியலில் பேசுகின்றார்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து புதுச்சேரி வரலாறு, புதுச்சேரிக் கல்வெட்டுகள் தொடர்பான ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டும் திருபுவனை, திருவண்டார் கோயில், பாகூர், மதகடிப்பட்டு, பனைமலை முதலான ஊர்களின் பெருமைமிக்க ஆலயங்களை ஆய்வுலகிற்கு அறிமுகப் படுத்தியும் புதுச்சேரிக்குப் புகழ் சேர்த்துவரும் புலவர் வில்லியனூர் ந.வேங்கடேசன் ஐயா அவர்களின் பணி அனைவராலும் பாராட்டத் தக்கது.

ஆர்ப்பாட்டமின்றி அமைதியே உருவாய் அவர் செய்துவரும் ஆய்வுப் பணிகள் சிறப்பிற்குரியன. கடந்த நூற்றாண்டுகளின் எழுபதுகளிலேயே நான் அவரை அறிவேன். நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் பயின்ற அந்த நாட்களில் புதுச்சேரி அரங்கப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள தகைமிகு திருமுடி ந.சேதுராமனார் இல்லத்தில் நடைபெறும் இலக்கிய, வரலாற்று நிகழ்வுகளில் அவரோடு உரையாடி இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை ஐயா அவர்களுடனான என்னுடைய இனிய பயணம் தொடர்கின்றது. புலவர் பாகூர் குப்புசாமி ஐயாவும் வேங்கடேசன் ஐயாவும் இரட்டையர்களாக இருந்து புதுச்சேரிக் கல்வெட்டுகள் குறித்த ஆய்வுரைகளை அந்த நாட்களில் வழங்கியுள்ளார்கள். ஐயா அவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் பல்வேறு ஆய்வு இதழ்களில் எழுதியுள்ள கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. எழுதியுள்ள நூல்கள் இருபத்தைந்திற்கும் மேலாக உள்ளன. இந்த நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வரலாற்றில் ஆர்வமுடைய தமிழர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் பெருவிருப்பம். இத்தகு விழைவின் தொடக்கப் புள்ளியாக எங்கள் புதுச்சேரி வரலாற்றுப் பேரவை ஐயாவின் இருபத்தெட்டாவது படைப்பாகிய புதுச்சேரியில் பல்லவர் சிற்பங்கள் என்னும் நூலினை அன்னாரின் எண்பத்திரண்டாம் அகவை பிறந்தநாளில் வெளியிட்டுப் பெருமை கொள்கிறது.

வாழ்க புலவர் வில்லியனூர் ந.வேங்கடேசன் ஐயா!

வளர்க அவர்தம் தமிழ்ப்பணி!!

 

முனைவர் நா.இளங்கோ

nagailango@gmail.com


கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...