ஞாயிறு, 29 மே, 2022

பட்டுக்கோட்டையார் பாடல்களில் அறிவுக் கோட்பாடு -முனைவர் நா.இளங்கோ


முனைவர்
நா.இளங்கோ

தமிழிலக்கிய நெடும்பரப்பில் வள்ளலார், பாரதி, பாவேந்தர் முதலான கவிஞர்களின் வருகைக்குப் பிறகே தமிழ்க் கவிதைகள் எளிமையும் இனிமையும் புதுமையும் கொண்டு நவீனக் கவிதைகளாக உருமாற்றம் பெற்றன. இவர்களது படைப்புகளில்தான் தமிழ்க் கவிதைகளின் இறுக்கம் தளர்ந்து உருவ, உள்ளடக்கங்களில் பாரிய மாற்றங்கள் தென்படத் தொடங்கின. இருபதாம் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய பாரதி, பாரதிதாசன் பரம்பரையில் இருவரின் படைப்பு நேர்த்திகளையும் ஆளுமைகளையும் சரியான வகையில் உள்வாங்கித் தமக்கென தனித்ததோர் படைப்பாளுமையோடு பீடுநடை போட்ட தமிழ்க்கவியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற மக்கள் கவிஞர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செங்கம் படுத்தான் காடு எனும் சிற்றூரில் அருணாசலக் கவிராயருக்கும் விசாலாட்சிக்கும் நான்காம் குழந்தையாக 13.4.1930 இல் பிறந்தார். அவர் வாழ்ந்தது 29 ஆண்டுகளே என்றாலும் தம்முடைய புரட்சிகரமான கவிதைகளால் காலத்தை வென்று நிலைத்திருக்கக் கூடிய பெரும்புகழை அவர் பெற்றுவிட்டார். திரைப்படப் பாடலாசிரியராக மக்கள் மத்தியில் அறியப்படும் அவர் தமது இளமைக்காலம் முதலே பொதுவுடைமை இயக்கத்தினரோடும் சித்தாந்தங்களோடும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் முற்போக்கு இதழ்களில் அவர் எழுதிய கவிதைகளில் வெளிப்பட்ட மார்க்சீய சித்தாந்தமே அவரது திரைப்படப் பாடல்களிலும் எதிரொலித்தது. தாம் கொண்ட கொள்கையில் எக்காலத்தும் எவ்விடத்தும் சமரசம் கொள்ளாத புரட்சியாளராகவே தமது இறுதி மூச்சுவரை அவர் வாழ்ந்தார் என்பதே அவரின் தனிச்சிறப்பு.

மக்கள் கவிஞர் எப்பொழுதும் உழைக்கும் மக்களின் உயர்வினைக் குறித்தே சிந்தித்தார். அவர்களின் வறுமையும் துன்பமும் முற்றாகக் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலேயே கவிஞரின் சிந்தனையும் எழுத்தும் செயல்பட்டன. மக்கள் கவிஞரின் கவிதை உலகம் பரந்து விரிந்தது. சமத்துவச் சமுதாயம் காணும் பெருவிருப்பு, அனைத்து உயிர்களையும் நேசிக்கும் பேரன்பு என்ற அடித்தளத்தில் அவரின் கவிதைகள் எழுப்பப்பட்டன.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம் என்று மகாகவி பாரதியின் பெருவிருப்பைப் போலவே பட்டுக்கோட்டையும் விரும்பினார். அதேசமயம் அதற்கான வழிமுறைகளையும் அவர் தெளிவு படுத்தினார். 'அதாவது, தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது -சிந்திச்சு முன்னேற வேணுமடி என்கிறார். கஞ்சிக்கிலாதார் கவலை நீங்க, பானை நிறையணும், பானை நிறைய வேண்டுமென்றால் அதுகுறித்துச் சிந்திக்க வேண்டும், சிந்திக்க வேண்டுமென்றால் அதற்கு அறிவு தேவை. ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் உண்மையான வளர்ச்சி. ஆக அறிவே மாற்றத்திற்கான, புரட்சிக்கான, விடுதலைக்கான ஒரே வழி என்பது மக்கள் கவிஞரின் தீர்க்கமான முடிவாகும்.

அறிவுக் கோட்பாடு

அறிவு என்றால் என்ன, அது எதைப் பற்றியது, மனிதரால் எவ்வாறு அறிவு பெறப்படுகின்றது என்பன போன்ற அடிப்படை வினாக்களிற்கு விடை தேடும் தத்துவ ஆராய்ச்சியே அறிவாராய்ச்சி இயலாகும் (Epistemology). அறிவாராய்ச்சி இயலின் முடிபுகளே அறிவுக் கோட்பாடாகும். அறிவு என்பது மூன்று உட்கூறுகளைக் கொண்டது என்பார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. அவை, 1. உண்மை (Truth) 2. உண்மையென நம்புகின்ற மனநிலை (Belief) 3. உண்மையென நம்புவதற்கான ஆதாரங்கள் (Justification) என்பனவாகும். ஒன்றைப் பற்றிய அறிவு ஒருவருக்கு உள்ளது என்பதற்கு இந்த உட்கூறுகள் மூன்றும் தேவையாகின்றன.

தமிழர் அறிவுக் கோட்பாட்டினைத் திருக்குறள் மிகவிரிவாகப் பேசுகின்றது. திருக்குறளின் அறிவுடைமை அதிகாரத்தில் மட்டுமல்லாது பிற அதிகாரங்களிலும் அறிவு என்றால் என்ன? அறிவு ஏன் தேவை? அறிவின் பயன் யாது? அறிவைப் பெறும் முறைகள் என்னென்ன? முதலான பல செய்திகளையும் திருக்குறள் விரித்துரைக்கின்றது. மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்கள் கூறும் நம்பிக்கை, புலன்வழி அறிவு இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு (குறள்- 423) என்றும் மனதையும் வென்று நன்றின்பால் உய்ப்பதே அறிவு (குறள்- 422) என்றும் திருக்குறள் மிகநுட்பமாக தமது அறிவுக் கோட்பாட்டினை வரையறுக்கின்றது.

மக்கள் கவிஞரின் அறிவுக் கோட்பாடு

மனிதர்களின் உண்மையான வளர்ச்சி என்பது அறிவின் வளர்ச்சியே என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கவிஞர் அந்த அறிவும் படிப்பினாலேதான் சாத்தியம் என்று நம்புகிறார்

படிப்பு தேவை-அதோடு
         உழைப்பும் தேவை -முன்னேற
         படிப்பு தேவை அதோடு
         உழைப்பும் தேவை!
         உண்மை தெரியும்
         உலகம் தெரியும்
         படிப்பாலே -நம்
         உடலும் வளரும்
         தொழிலும் வளரும்
         உழைப்பாலே-

சங்கிலித்தேவன் (1960) திரைப்படத்தில் இடம்பெற்ற மேற்காட்டிய பாடல் படிப்பின் பயனைத் தெளிவாக வரையறை செய்கிறது. அதாவது படிப்பும் உழைப்பும் நமக்கு அவசியத் தேவையாகும். அதிலே படிப்பினால் உண்மையும் தெரியும் உலகமும் புரியும் என்கிறார் கவிஞர். படிப்பு அல்லது கல்வி என்பது புறவுலகைப் புரிந்து கொள்ளவும் உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும் உதவும் என்பதில் உண்மை என்பது மெய்ப்பொருளாகும். திருக்குறள் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவின் இலக்கு என்று வரையறுக்கின்றது

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்-423)

அறிவின் இலக்காகிய மெய்ப்பொருளை அதாவது உண்மையைப் படிப்பு உணர்த்தும் என்று மக்கள் கவிஞர் நம்புவதால் அவரைப் பொறுத்தமட்டில் படிப்பு அறிவுக்கு ஆதாரம் என்றாகிறது. ஆக கவிஞர் படிப்பினால் அறிவு கிட்டும் என்கிறார். ஆனால் அந்தப் படிப்பு வகுப்பறைக்கு உள்ளேயா? அல்லது வகுப்பறைக்கு வெளியிலா? என்பதனைக் கவிஞர் இங்கே சொல்லவில்லை. அதனை வேறுவொரு பாடலில் சொல்லுகின்றார். 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஏட்டுக்கல்வியின் வழியாகப் பல பட்டங்களைப் பெற்ற கல்வியாளர் அல்லர். அவரின் அறிவு என்பது அனுபவங்களின் வழிப்பட்ட அறிவே ஆகும். கவிஞர் 1959ஆம் ஆண்டில் வெளியான கண்திறந்தது திரைப்படத்திற்கு எழுதியமனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தாஎன்று தொடங்கும் பாடலில் இடம்பெற்ற பின்வரும் வரிகளைப் பாருங்கள்

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
         பயணம் போறேன்டா-நான்
         பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
         பயணம் போறேன்டா
                அங்கே நானும் வாரேன்டா...
                வௌியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
                படிச்சிட்டு வாரேன்டா- சிலர்
                படிக்க மறந்தது நெறய இருக்கு
                படிச்சிட்டு வாரேன்டா

இப்பாடலில் ஏட்டுக்கல்வியின் போதாமையையும் பாடப்புத்தகங்களுக்கு வெளியே படிக்க வேண்டிய படிப்பு அதாவது கல்வி அதிகளவில் உள்ளது என்றும் பலரும் படிக்க மறந்த கல்வியே அதுதான் என்றும் கவிஞர் கூறுவது கவனிக்கத் தக்கது. புத்தகப் படிப்பு நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத நிலையில் வகுப்பறைக்கு வெளியே படிக்க வேண்டிய புத்தகமாக இந்த உலகமே உள்ளது என்கிறார் கவிஞர் திருக்குறளும் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு (குறள்- 426) என்று அறிவினை வரையறை செய்கின்றது. மனிதர்களின் வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மட்டுமன்று அறிவின் வளர்ச்சியும் சேர்ந்ததே ஆகும். அதுதான் உண்மையான வளர்ச்சி ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி என்று சின்னப் பயலுக்குச் சேதி சொல்லும் கவிஞர். ஒவ்வொரு நாளும் புறவுலகைக் கூர்ந்து கவனித்து வாழ்பவனுக்கு புறவுலகமும் காலமும் ஒவ்வொரு பாடமாக நமக்குப் போதித்து நம் அறிவை வளரச் செய்கின்றன அதாவது, நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி என்று உறுதியாக நம்புகிறார் கவிஞர்.

      அறிவுள்ள மனிதன் என்பதற்கு அடையாளமே அவனது பகுத்தறியும் திறனில்தான் வெளிப்படும் என்பது பட்டுக்கோட்டையாரின் கோட்பாடாகும். இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமாக, கைரேகை, சோதிடம் முதலான நம்பிக்கைகளிலும் மூடத்தனங்களிலும் சிந்திக்கும் திறனற்ற ஆமாஞ்சாமி குணத்திலும், உழைக்காத சோம்பலிலும், தெண்டச் சோத்து விருப்பிலும் உள்ள மனிதர்களின் ஆறாம் அறிவு மட்டுமல்ல பிற அறிவுகளும் கூட சந்தேகம்தான் என்கிறார் மக்கள் கவிஞர். மகனே கேள் (1965) இடம்பெற்ற பின்வரும் பாடலைப் பாருங்கள்.

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு -சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு -இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு 

தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் -அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும்

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்

தெண்டச்சோத்து மடங்களிலும்

ஆக அறிவின் அடையாளமே அதன் பகுத்தறியும் திறனில்தான் உள்ளது என்பது கவிஞரின் அழுத்தமான நம்பிக்கை. எனவேதான் சின்னப்பயலே பாடலில்

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு 
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க - உந்தன் 
வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க 
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை 
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்தது வெம்பி விடாதே 

என்று மூடநம்பிக்கைகளைப் பரப்பும் அறிவற்ற வீணர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொல்கிறார் கவிஞர். திருக்குறள் கூறும் எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் என்ற அறிவுக் கோட்பாட்டினை இங்கேயும் பதிவு செய்கிறார் கவிஞர்.

      அறிவு என்பது புலன்களின் வழி பெறப்படும் அறிவு, நம்பிக்கை சார்ந்த அறிவு என்ற இரண்டின் பிணைப்போடு மட்டும் அமையாமல் மெய்ப்பொருள் காணும் வகையில் பகுத்தறிந்து பெறப்படும் வகையில் அமைதல் வேண்டும் என்பதே திருக்குறள் கூறும் தமிழர் அறிவுக் கோட்பாடாகும். வள்ளுவன் வழியினிலேஇனி வாழ்க்கை ரதம் செல்லுமே! என்பதற்கேற்ப, பட்டுக்கோட்டையாரும் பகுத்தறியும் அறிவையே உண்மை அறிவு என வரையறுக்கின்றார். சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்து என்று சிந்தனையால் பட்டைத் தீட்டப்படும் அறிவே முழுமை பெற்ற அறிவு என்கிறார் அவர்.

 

ஏட்டில் படித்ததோடு

இருந்துவிடாதே! -நீ

ஏன் படித்தோம் என்பதையும்

மறந்துவிடாதே!

                                   மக்கள் கவிஞர்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...