முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி- 605008
தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காப்பியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் (கி.பி.1642-1703) ஆவார். இவர் பிறந்த ஊர் கீழக்கரை. சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். சீறத் என்னும் அரபிச் சொல்லிற்கு வரலாறு என்பது பொருள். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள். இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை: 1).விலாதத்துக் காண்டம், 2).நுபுவ்வத்துக் காண்டம், 3).ஹிஜ்ரத்துக் காண்டம் என்பவை ஆகும். விலாதத்துக் காண்டம் என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் பகுதியாகும். நுபுவ்வத்துக் காண்டம் நபிப்பட்டம் அருளப்பட்டதில் இருந்து மக்கமாநகரில் நபிகள் நாயகம் வாழ்ந்த காலம்வரை நடந்த வரலாற்றினைக் கூறுவதாகும். ஹிஜ்ரத் காண்டம் என்பது மக்கமா நகரிலிருந்து மதீனா நகருக்கு நபிகள் நாயகம் புறப்பட்டுச் சென்றது முதல் அவர்களின் மதீனாநகர் வாழ்க்கையைக் கூறுவதாகும். சீறாப்புராணத்தில் மொத்தம் 92 படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 5,228. 18 ஆம் நூற்றாண்டில் இந்நூலை ஏடுதேடிப் பதிப்பித்து வெளியிட்டவர் புலவர் நாயகம் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (N~கனாப் புலவர்)ஆவார்.
உலா இலக்கியம்: உலா என்பது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்ளும் வண்ணம் தலைவன் ஒருவன் வீதியில் பவனி வந்தான் என்று பாடுவதாகும். இது கலிவெண்பாவால் பாடப்படும். தொல்காப்பியர் தம் பொருளதிகாரப் புறத்திணையியலில் உலாவிற்கு இலக்கணம் கூறுகின்றார்.
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமையான (தொல். பொருள். புறம். 25)
உலா இலக்கியம் பற்றிய குறிப்பு, தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலிலேயே இடம்பெற்றாலும் முதன்முதலில் முத்தொள்ளாயிரம் நூலில்தான் உலா பாடுபொருளாவதைப் பார்க்கின்றோம். அதன்பின்னர் உலா இலக்கியத்தின் வளர்ச்சியைக் காப்பிய இலக்கியங்களில் காணமுடிகின்றது. காப்பியங்களில் அவற்றின் தலைவர்கள் உலாவரும் காட்சிகளை அழகுற அமைத்துப் பாடுதல் மரபு. மணம்புரிதல், வெற்றிபெறுதல் முதலிய காலங்களில் அத் தலைவர்கள் உலாவரும் செய்தி பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம் முதலான தமிழ்க் காப்பியங்களில் கூறப்பட்டுள்ளது.
சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் உலா:
தமிழிலக்கிய நெடும்பரப்பில் 13 ஆம் நூற்றாண்டு தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு முடிய நான்கு நூற்றாண்டுகள் தமிழில் பெருங்காப்பியங்கள் ஒன்றும் படைக்கப்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் காணாத பெருங்காப்பிய மரபுத் தொடச்சியை மீண்டும் தொடங்கிவைத்த பெருமை உமறுப் புலவருக்கு உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் அவர் பாடிய சீறாப்புராணம் எனும் பெருங்காப்பியமே மீண்டும் தமிழில் பெருங்காப்பியங்கள் தோன்றப் பாதையமைத்துத் தந்தது. உமறுப்புலவர், தமிழிலக்கியக் காப்பிய மரபுகள் முழுவதையும் உள்வாங்கித் தமிழிலக்கிய மரபுக்குச் சிதைவு ஏற்படாவண்ணம் தம் காப்பியத்தைப் படைத்த அதே சமயம் இசுலாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் காப்பிய வடிவில் அமைக்கும் முயற்சியில் இசுலாமிய மரபுகளையும் பொன்னேபோல் போற்றித் தம் காப்பிய முயற்சியில் முழுமைகண்டார் என்பது பெரிதும் பாராட்டத்தக்கது.
காப்பிய நாயகர்கள் தங்களின் திருமணம் மற்றும் வெற்றிவிழா காலங்களில் உலா வருவதாகப் பாடும் தமிழ்க் காப்பிய மரபினை ஒட்டி, சீறாப்புராணக் காப்பிய நாயகராம் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்கள் தம் திருமண நிகழ்ச்சியின்போது உலா போந்ததாகப் படைக்கின்றார் உமறுப்புலவர்.
நபி பெருமானார் மணக்கோலம் பூண்டு, குதிரை மீதேறி பவனி புறப்படும் பொழுது எளியவர்களுக்குப் பொன்னும் மணியும் ஆடைகளும் வழங்குகின்றார். (தானமென ஏற்பவர்க்குப் பொன்மணி தூசெடுத் தருளி). அப்பொழுது தண்ணுமை, முருடு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன.
குதிரையின் மீது முழுமதியெனத் திருமுகம் விளங்கித் தோன்ற நபிகள் நாயகம் அவர்கள் மணமகனாக நகர்வலம் வருகின்ற காட்சியைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களும் வீதிகள் தோறும் கூடிநின்று கண்டு களிக்கின்றனர்.
செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்
வழுவறு பவனியின் வருகின் றாரென
வெழுவகைப் பேதை பேரிளம்பெண் ஈறதாய்க்
குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினர். (மணம்புரி படலம்- 51)
வழக்கமாகத் தமிழ்க் காப்பியங்களிலும் உலா நூல்களிலும் தலைவன் உலா வருவதைக் காணும் பெண்கள் தன்நிலை மறந்து, தலைவன் மீது கொண்ட காதல் மிகுவதால் காமவயப்பட்டுப் புலம்புவதாக இலக்கியம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னர் குறிப்பிட்ட எழுபருவ மகளிரும், அதாவது ஐந்துவயது சிறுமி தொடங்கி ஐம்பது வயது பேரிளம்பெண் ஈறாகப் பெண்கள் எல்லோரும் உலாப்போகும் தலைவன்மேல் காதல்கொண்டு காமுற்றுப் புலம்புவதாகப் பாடுவது தமிழ்ச் சிற்றிலக்கிய மரபு. உமறுப்புலவர் நபி பெருமானாரின் உலாக் காட்சிகளை அப்படிப் படைத்துக் காட்டாமல் மாற்றம் செய்து பண்பார்ந்த நிலையில் விவரிக்கின்றார். எழுபருவப் பெண்களும் நபிகளாரின் உலாவினைக் காண நிறைந்து கூடினர் என்று மட்டுமே குறிப்பிடும் உமறுப்புலவர் அவர்கள் காதல் வயப்பட்டதாகக் குறிப்பிடவில்லை. அந்தவகையில் தமிழ்மரபு கருதி எழுபருவப் பெண்களையும் உலாக் காண அழைத்துவரும் காப்பிய ஆசிரியர் மரபில் தேவைப்படும் மாற்றமாக அவர்களைப் பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்துகின்றார். உலாக்காணும் பெண்களின் பேச்சு கூட நாம் வழக்கமாகக் கேட்கும் பேச்சாக இல்லாமல் புதிய பேச்சாக புதுமையான பேச்சாக அமைகின்றது.
ஆமீனா காணாத அரிய காட்சி:
உலகத்தவர் மகிழ்ந்து காணும் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகி வசல்லம் அவர்களின் இந்த மணக்கோல உலாக் காட்சியை அவரின் தாயார் ஆமீனா உயிரோடிருந்து காணும் பேறு பெறாமல் போய்விட்டாளே, என்று பவனி காணும் மகளிர் வேதனையை வெளிப்படுத்துவதாக உமறுப்புலவர் பாடுகின்றார்.
கண்ணகன் ஞால மெல்லாம் களிப்புறும் அரிய காட்சி
அண்ணல்தன் மனத்தின் கோலம் ஆமீனா வென்னும் அந்தப்
பெண்ணிருந்து இனிது காணப் பெற்றிலள் காணும் என்பார் (மணம். 57)
இப்பாடலில், ஆமீனா என்னும் அந்தப் பெண்ணிருந்து இனிது காணப் பெற்றிலள் என்று வரும் பகுதியைக் கூர்ந்து நோக்கினால் இப்படிப் பேசும் பெண்கள் நபிகளாரின் தாயார் ஆமீனாவின் ஒத்த அல்லது மூத்த வயதுடைய பெண்கள் என்பது புலப்படும். ஆக, மூத்த வயதுடைய பெண்கள் நபிகளாரின் உலாவைக் காணுங்கால் அவரின் தாயாரை நினைவு கூர்கிறார்கள்.
கதீஜா செய்த தவப்பேறு:
குடை நீழலில் வேகநடையுடைய குதிரை மீதமர்ந்து உலாவரும் முகம்மதுவின் அழகே உலகத்திலுள்ள அழகுகளிலெல்லாம் மேலான அழகு என வியக்கும் பெண்கள் இத்தகு பேரழகுடைய முகம்மதுவை மணாளனாகப் பெற்றது கதீசாவின் தவப்பேறே என்றும் அவரைப்போல் பேறு பெற்றவர்கள் இம் மண்ணுலகில் வேறு எவரும் இல்லை யென்றும் வியந்து பாராட்டு கின்றார்கள்.
கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா நிழற்ற வந்த
வடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக்
கொடியிடைக் கதீசா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப்
பிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை என்பார். (மணம். 58)
இந்தப் பாடலில் தவப்பேறாக, பேறு பெற்றவரில்லை என்று பேசும் பெண்களின் பேச்சு வெறும் உதட்டளவிலான பேச்சோ, வெற்று ஆரவாரப் பேச்சோ இல்லை. இந்த வார்த்தைகள் அவர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனநிறைவோடு வெளிப்படுகின்ற பாராட்டுரைகளாகும். ஏனெனில் கதீசா முகம்மதுவைப் பெற்றது அவள் செய்த தவத்தின் பயன் என்பதும் இதைவிட வேறு பெரும்பேறு ஒன்றும் உலகத்தில் இருக்கமுடியாது என்பதும் அவர்களின் தீர்க்கமான முடிவு. இப்பேச்சில் பொறாமை உணர்ச்சி ஒருசிறிதும் இல்லை என்பது வெளிப்படை.
மேலும், உலா காணும் பெண்கள் ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். கதீசா, தாம் செய்த தவத்தின் பயனாய் முகம்மதுவை அடையப்பெற்றார். நமக்கு நபிகளாரை அடையும் பேறு கிடைக்கவில்லை என்றாலும் அவரின் வீதியுலாவினைக் காணும் பேறு கிடைத்ததே அதுவே நமக்குப் பெறும்பேறு. நபிகளாரின் சிறப்பு பொருந்திய இப்பவனியை தினந்தோறும் தம் வீதியில் கண்டு மகிழும் வாய்ப்பை வேண்டி நாமும் அரிய தவத்தைச் செய்குவோம் என்று உறுதி ஏற்கின்றார்கள் பவனி காணும் பெண்கள். தினந்தொறும் பவனி காணச் செய்தவம் செய்வோம் என்பார் (மணம். 60) அது மட்டுமல்லாமல் நபிகளாரைச் சுமந்து வீதியுலா அழைத்துச் செல்லும் குதிரையை நோக்கி உலாக் காணும் பெண்கள் மிக்க அன்போடு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். நபிகளாரின் பூரண அழகைக் கண்டு மகிழ்வதற்கு ஏதுவாகக் குதிரையே, மெல்லமெல்லச் செல்வாயாக என்பது அவர்களின் வேண்டுகோள். பரியை நோக்கிப் பாரிடைப் பையப்பையச் செல்லெனப் பரிவில் சொல்வார். (மணம். 62) என்ற சீறாப்புராணத்தின் இப்பகுதியைப் பயில்வோர்க்கு முத்தொள்ளாயிக் கைக்கிளைத் தலைவி பாண்டிய மன்னனின் குதிரையைப் பார்த்து ஊரகத்து மெல்ல நடவாயோ என்று வேண்டுகோள் வைத்த பகுதி நினைவுக்கு வராமல் போகாது. அப்பகுதி பின்வருமாறு,
ஊரகத்து மெல்ல நடவாயோ- கூர்வேல்
மதிவெங் களியானை மாறன் தன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ. (முத்தொள்ளாயிரம்: 74)
நபிகளாரின் உலாக் காட்சியினை வருணிக்கும் உமறுப்புலவர் முததொள்ளாயிர இலக்கிய மரபுகளை உள்வாங்கியே அப்பகுதியை அமைத்துள்ளார் என்பது கண்கூடு.