முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி- 605008
கிளி விடு தூது:
நபிகள் நாயகத்தின் மேனிஎழிலைக் கண்டு பசலை பூத்து நிற்கின்ற பெண்களின் பேச்சிலும் கூடக் காதல் வெளிப்படுகின்றதே அன்றிக் காமம் வெளிப்படவில்லை.
திருத்தகு பவனி நோக்குஞ் சேயிழை யொருத்தி காதல்
வருத்தமுற் றிருந்து பஞ்ச வனக்கிளி கையில் ஏந்திக்
கரத்தினைப் பொருத்தச் செய்த காளைபால் ஏகி என்றன்
உரத்தினைப் பொருந்தச் சொல்லென் றோதும்வாய் ஒழிகிலாளே (மணம். 65)
நபிகளாரின் திருத்தமான பவனியைக் கூர்ந்து பார்த்த பெண்ணொருத்தி, அண்ணலார்மேல் கொண்ட காதலால் தமக்கேற்பட்ட வருத்தம் தீர, அவர் என்னைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சென்று சொல்லுவாயாக என்று தம் கையில் உள்ள பஞ்சவர்ணக் கிளியிடம் தூதுச் செய்தியினை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். ஏன் அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் என்றால் கிளி அவள் பேச்சைக்கேட்டுத் தூது செய்தியினைச் சொல்ல உடனே புறப்பட்டுப் போகவில்லை, அது அவள் கையிலேயே இருக்கின்றது. தாதி தூதோ தீது தத்தைத் தூதோதாது என்ற செய்தி அறியாமல் அப்பெண் வாய்ஒழியாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் என்ற பகடி தோன்றப் புலவர் படைத்துள்ள இக்காட்சி நயம்மிக்கது. இன்னும் சிந்தித்துப் பார்த்தால், பெருமைமிகு கதீசாவினைத் தழுவப்போகும் அண்ணலாரிடம் போய் பவனிகாணும் பெண்ணொருத்தியின் மார்பைத் தழுவுக என்ற தூதுச் செய்தியைச் சொல்ல விரும்பாமல்தான் அப்பஞ்சவனக் கிளி அமைதியாய் இருந்திருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. காப்பியத்தின் போக்கில் உலா என்ற சிற்றிலக்கிய மரபினைப் புகுத்திப்பாடும் சிறு வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒரு கிளி விடு தூதினையும் இடையில் கையாண்டுள்ள உமறுப்புலவரின் இலக்கிய உத்தி தனிச்சிறப்புடையது.
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்:
அண்ணலாரின் பவனியைக் கண்ட பெண்ணொருத்தி தன் நினைவையெல்லாம் முகம்மது உலாப்போகும் வழியிலேயே போகவிட்டுவிட்டுத் தன்னை மறந்து நிற்கின்றாள். உமறுப்புலவர் சித்தரிக்கும் அப்பெண்ணின் நிலையைப் பார்ப்போம்.
கனமுகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள
நினைவெலாம் குரிசில் தோன்று நெறியிடை எதிரில் போக்கி
இனமெங்கே ஆய மெங்கே எவ்விடத்து ஏகின் றேன்என்
மனமெங்கே யான்தான் எங்கே எனநின்று மறுகு கின்றாள். (மணம். 68)
அப்பர் சுவாமிகளின் கைக்கிளைத் தலைவி ஒருத்தி சிவனைக் குறித்த செய்திகள் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க எப்படித் தன்னை மறந்தாளோ (தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே -தேவாரம்) அப்படியே, அண்ணலார் பவனி கண்ட பெண்ணும் தன்கைக்கிளைக் காதலால் உள்ளம், நினைவு இரண்டையும் அவர் பின்னால் போக்கிவிட்டு, பவனி தன்னைக் கடந்து போனதுகூடத் தெரியாமல் தனித்துநின்று, என்னோடு இங்கே குழுமியிருந்த பெண்கள் கூட்டமெங்கே? என்னுடன் வந்த தோழியர் ஆயமெங்கே? நான் எங்கே இருக்கிறேன்? என்றெல்லாம் புலம்பித் திகைத்து நிற்கிறாள். அதுமட்டுமா, என் மனம்எங்கே? நான்தான் எங்கே? என்று அடுத்து அவள் கேட்கும் கேள்விகள்தாம் அவலத்தின் உச்சம். நபிகளாரின் பவனியில் அவள் தன் மனத்தையும் தொலைத்துவிட்டாள், தன்னையும் தொலைத்துவிட்டாள். முத்தொள்ளாயிரம் முதலான தமிழிலக்கியங்கள் மிகுத்துப் பேசும் பெண்பாற் கைக்கிளைப் பாடல் மரபை உள்வாங்கித் தக்க இடத்தில் அம்மரபினைக் கையாண்டுத் தமிழின் இலக்கிய மரபுத் தொடர்ச்சியைத் தம் காப்பியத்துள் வைத்துக் காப்பாற்றும் உமறுப்புலவரின் புலமைநலம் பாராட்டத்தக்கதாகும்.
சுவன மடந்தையர் அண்ணலார் உலாகண்டு மயங்கினர்:
உமறுப்புலவர் தமிழ்க்காப்பிய மற்றும் சிற்றிலக்கிய மரபுகளைப் பின்பற்றி அண்ணலாரின் திருமண உலாக் காட்சியை அமைக்கின்றார் என்றாலும் அதிலும் ஒரு புதுமை காண்கின்றார். மண்ணுலக மடந்தையர் பவனி கண்டு கைக்கிளைக் காதல் கொண்டதுபோல் விண்ணுலக சுவன மங்கையர்களும் நபிகளாரின் பவனிகண்டு மயங்கி நிற்பதாகப் புலவர் படைத்துக் காட்டுகின்றார்.
மன்னர் மன்னர் முகம்மது தம்பெயர்
சொன்ன போதில் சுவன மடந்தையர்
முன்னி ருந்த வடிவினும் மும்மடங்கு
என்ன லாகி இருங்களிப் பேறினார். (மணம். 80)
முகம்மது திருமணக் கோலத்தில் பவனிவருகிறார் பாருங்கள் என்று அமரர்கள் சொன்னதைக் கேட்ட விண்ணுலக மங்கையர், முகம்மது என்னும் திருநாமம் காதில் விழுந்த அந்தத் தருணத்திலேயே தம்முடைய முந்தைய அழகைவிட மும்மடங்கு அழகுபெற்றுப் பொலிந்ததோடு பெருமகிழ்வும் எய்தினார்கள் என்கிறார் உமறுப்புலவர். மண்ணுலகப் பெண்கள் உலாகண்ட காட்சியினை வருணித்தது போலவே விண்ணுலக மங்கையர் உலாகண்ட காட்சியினையும் விரிவாக விவரித்துக் காட்டுகின்றார் புலவர். அவர்களும் அண்ணலார் மீது கைக்கிளைக் காதல் கொள்கின்றனர். பாட்டுடைத் தலைவனின் பேரழகில் பெண்கள் மயங்கி ஒருதலைக் காதல் கொள்ளுவதாகப் பாடும் மரபிற்கேற்ப விண்ணுலகப் பெண்களும் அண்ணலார் மீது ஒருதலைக் காதல் கொள்கின்றனர். தமிழின் பிற உலா இலக்கியப் பெண்களுக்கு வருகின்ற காமமயக்கம் போல் விண்ணுலகப் பெண்களுக்கும் காமமயக்கம் மிகுகின்றது. அவர்கள் நிலைமையினை வருணிக்கும் சீறாப்புராணப் பகுதி இதோ,
ஏந்து கொங்கை அணியிழப்பார் சிலர்
கூந்தல் சோரக் குழைந்து நிற்பார் சிலர்
காந்தி மேனி கரிந்திடுவார் சிலர்
மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர். (மணம். 100)
காதல் அளவுகடந்து காமமானதால் அவர்களின் ஒளிவீசம் மேனி கரிந்து போகிறதாம், காதல் மயக்கத்தில் ஆடை அணிகலன்களை இழக்கிறார்களாம் இப்படி உமறுப்புலவர் சுவனலோகப் பெண்களை வருணிக்கும் இடத்தில்தான் தமிழின் உலா இலக்கியப் பெண்களைக் காணமுடிகிறது. ஆக, இருவேறு நிலைகளில் மண்ணுலக மங்கையர், விண்ணுலக மங்கையர் எனத் தனித்தனியே பிரித்து அண்ணலாரின் உலாக் காட்சியினை விவரிக்கும் உமறுப் புலவரின் படைப்பாக்க உத்தி வியப்பளிக்கக் கூடியது.
இவ்வாறு உமறுப்புலவர் தம் சீறாப்புராணத்தில் அண்ணல் நபிகளாரின் மணக்கோல உலாவினை வழக்கான தமிழ் உலா நூற்களின் நிலையில் படைத்துக் காட்டாமல் மரபினை மாற்றம் செய்து இருவேறு நிலைகளில் உலா காணும் மகளிர் உள்ளத்து உணர்வுகளைச் சிறப்புற எடுத்துக்காட்டிப் பண்பார்ந்த இசுலாமிய நெறியைத் தாம் படைக்கும் இலக்கியத்துள்ளும் பொன்னேபோல் போற்றியுள்ள திறம் சீறாப்புராணத்தின் தனிச் சிறப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக