திங்கள், 18 ஏப்ரல், 2011

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -1

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல்


முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8


தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களின் காலம் என்பது சிக்கலான ஒரு விவாதக் கருத்தாகவே இருந்து வருகின்றது. திருமந்திரத்தில் சித்தன் என்ற சொல் காணப்படுவதால், திருமந்திரக் காலமாகிய கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சித்தர் மரபு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். திருமூலரே தமிழகத்தின் முதல்சித்தர் என்னும் கருத்து ஆய்வுலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் பிற்காலச் சித்தர்களுடைய பாடல்களே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. பழைய நிகண்டுகள் எவற்றிலும் சித்தர் என்ற சொல் காணப்படாததால் நிகண்டுக் காலமான கி.பி. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டுகட்குப் பிறகே தமிழ்ச் சித்தர்கள் தோன்றியிருக்க வேண்டும் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி, இடைக்காடு, கடுவெளி, குதம்பை மற்றும் பாம்பாட்டிச் சித்தர்கள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் 16, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தம் தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை நூற்களில் வரையறுக்கின்றார் மு.அருணாசலம். திருமூலர் காலத்திற்கும், தமிழ்ச் சித்தர் இலக்கியக் காலத்திற்கும் இடையே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளி தென்படுகிறது.

சித்தர்கள் யோகம், மருத்துவம், சோதிடம் போன்ற பலதுறைகளிலும் நூல் செய்துள்ளார்கள். இவர்களில் யோகம் பற்றி நூல் செய்த சித்தர்களே காலத்தால் முற்பட்டவர்கள்;. இவ்வகைச் சித்தர் பாடல்களில் யோகம் குறித்த செய்திகளோடு சமயச் சடங்குகள், உருவ வழிபாடு, சாதிப்பிரிவினை போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். சித்தர் பாடல்களில் கவித்துவம் நிறைந்த இலக்கியத் தகுதி பெறுவன இவ்வகைச் சித்தர் பாடல்களே. எனவே சித்தர் பாடல்களில் யோகச் சித்தர் பாடல்களே சித்தர் இலக்கியம் எனும் சிறப்பினைப் பெறுகின்றன.

யோக இலக்கியம் படைத்த சித்தர்களுள் ஒளவையார், சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.7) சமயங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் சமயச் சடங்குகளின் பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்கும் பொருட்டு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் முகிழ்த்த சித்தர் நெறியே சமூக மீறல்களுக்கான எதிர்க்குரலை அழுத்தமாகப் பதிவு செய்த பெருமைபெற்றது.

சித்தர் பாடல் பதிப்புகள்:

சித்தர்களின் யோக, ஞானப் பாடல்களின் தொகுப்பு பெரிய ஞானக்கோவை, சித்தர் ஞானக்கோவை, சித்தர் பாடல்கள் போன்ற தலைப்புகளில் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பதிப்பிக்கப் பெற்ற வா. சரவண முத்துப் பிள்ளை பதிப்பே முதல் பதிப்பாயிருக்கலாம். ஞானவான்களுக்கு உபயோகமாகும் பொருட்டு சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் 44 அரிய நூல்களைச் சேகரித்துத் தொகுக்கப்பெற்றது என்ற குறிப்போடு பெரிய ஞானக்கோவை என்ற இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வா.சரவண முத்துப்பிள்ளைப் பதிப்பு, வித்யாதர நாகர அச்சுக்கூடப் பதிப்பு, இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் பதிப்பு, எம்.ஆர். அப்பாத்துரைப் பதிப்பு ஆகியன பாடல் தொகுப்பில் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. இப்பதிப்புகளில் 34 சித்தர்களின் 44 நூல்கள் மூன்று பாகங்களாகத் தரப்பட்டுள்ளன.

வா.சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பை அடியொற்றிப் பிற பதிப்புகள் மிகச்சில மாற்றங்களோடு வெளியிடப் பட்டுள்ளன. சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் திரட்டப்பட்டன என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும் நூலின் முகவுரைப்பாடல், பாடல்கள் திரட்டப்பட்ட விதம்குறித்து வேறு தகவலைத் தெரிவிக்கின்றது. முகவுரைப்பாடலின் அப்பகுதி வருமாறு,

ஆவலோடு இவருரைத்த ஞானம் யாவும்
அவனியுள மனுக்களெலாம் அறிய வென்றே
பாவலரை நாவலரை பண்டி தோரை
பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு
மாவிதமாய்ப் பிழையின்றி திருத்தம் செய்து
மாசறவே அச்சியற்றி மகிழ்ந்த வாறே.


‘பாவலரை நாவலரை பண்டி தோரை பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு’ என்ற முகவுரைப் பகுதி, பாடல்கள் வாய்மொழியாகக் கேட்டுப் பதிப்பிக்கப் பெற்றன என்று தெரிவிக்கின்றது.

மு.அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு 14 ஆம் நூற்றாண்டு நூலில் சித்தர் பாடல் பதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் போது சித்தர் ஞானக்கோவை ஆதாரபூர்வமான ஒரு நூலாகக் கொள்ளத்தக்க தன்று என்றும் தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சித்தர் இலக்கியங்களாகா என்றும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலர் சித்தர்கள் அல்லர் என்றும் இத்தொகுப்பின் காலம் கி.பி. 1875 -1900 என்று கருத வேண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளார்.
சித்தர் பாடல்களின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் ஐயம் எழுப்பியுள்ள நிலையில் இத்தொகுப்புகளுக்கு ஆதாரமாயிருக்கக் கூடும் என்பதான ஓலைச்சுவடிகள் ஏதும் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகளோ முந்தைய பதிப்புகளோ அற்ற நிலையில் சித்தர்பாடல் தொகுப்புகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு பதிப்பிக்கப் பெற்றன? என்பது ஓர் அவிழ்க்க முடியாத புதிராகவே உள்ளது.

எதிர்க்குரல்களைக் கொண்ட சித்தர் பாடல்களின் உள்ளடக்க வீரியம் காரணமாகச் சித்தர் இலக்கியங்கள் சனாதனக் காப்பாளர்களால் பேணப்படாமல் போயிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. சைவர்கள், சிவவாக்கியர்;, பட்டினத்தார் பாடல்களைத் தேடிப்பிடித்து எரித்திருக்கிறார்கள் (Kamil V. Zvelebil, The Poets of the Powers. P. 10-20) என்ற செய்தியை வரலாற்று ஆதாரத்துடன் அயலகத் தமிழறிஞர் கமில் சுவலபிள் குறிப்பிடுகின்றார் என்று ச.மாடசாமி அவர்கள் தரும் அதிர்ச்சித் தகவல் (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.11) இக்கருத்தை உறுதிசெய்கின்றது. ஐரோப்பிய, இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில் தேடினால் ஒருக்கால் சித்தர்பாடல் ஓலைச்சுவடிகள் கிடைக்கலாம்.

தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பில் ஈடுபடும் கள ஆய்வாளர்களுக்குப் பல சமயங்களில் நாட்டுப்புறப் பாடல்களோடு இணைந்து சித்தர் பாடல்களும் கிடைப்பது வழக்கம். அண்மைக்காலம் வரையிலும் சித்தர் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வருவது கண்கூடு. பொருளுணர்ந்தோ, உணராமலோ நாட்டுப்புற மக்களால் வாய்மொழி மரபில் காப்பாற்றப்பட்டு வந்த சித்தர் பாடல்களே இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அச்சுவடிவம் பெற்றன என்று முடிவு செய்வதில் பிழையில்லை. சித்தர் பாடல்களின் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, ஆனந்தக் கும்மி, கண்ணி முதலான வடிவங்கள் இதற்குத் துணை புரிந்திருக்கின்றன. சனாதனிகளின் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே சித்தர்கள் வாய்மொழி மரபில் நின்று நிலைக்கத் தக்கதாக இத்தகு நாட்டுப்புறச் சந்த மெட்டுகளைக் கையாண்டிருப்பார்கள்.

சித்தர் சிவவாக்கியர்:

இதுவரை வெளிவந்துள்ள அனைத்துச் சித்தர் பாடல் தொகுப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் சித்தர் சிவவாக்கியர் ஆவார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலருக்குப் பின்னர் சற்றேறக் குறைய 800 ஆண்டுக்கால இடைவெளியில் சித்தர் சிவவாக்கியர் தோன்றுகின்றார். சரவண முத்துப் பிள்ளை அவர்களின் பெரிய ஞானக் கோவை பதிப்பின் முகவுரைப் பாடல் சித்தர்களின் பட்டியலைப் பாடல்வடிவில் தரும்போது,

திட்டமுள ஆரியநில் லாது நோக்கச்
செய்தசிவ வாக்கியந்தான் நூலே ஆதி
பட்டினத்தார் பாடலொடு புலம்பல் ஞானம்
பத்திரகிரி அருட்புலம்பல் பாம்பாட் டீசர் .. ..


என்று பட்டியலைத் தொடருகின்றது. சிவவாக்கியந்தான் நூலே ஆதி என்ற குறிப்பைக் கொண்டு, கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்ற தமிழ்ச் சித்தர் மரபு சிவவாக்கியரிலிருந்தே தொடங்குகின்றது எனலாம். சிவவாக்கியர், பூமியில் பிறக்கையில் சிவ என்று சொல்லிக்கொண்டு விழுந்தபடியால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது என்று அபிதான சிந்தாமணி பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுகின்றது. அது பொருந்துமாறில்லை. சிவவாக்கியம் என்ற நூலைச் செய்தவர் என்ற காரணம் பற்றி அவர் சிவவாக்கியர் என்றழைக்கப் பட்டார் எனக்கொள்வதே பொருத்தமுடையதாகும். தாம் இயற்றிய நூலின் பெயரை அவரே தம் காப்புச் செய்யுளில் சிவவாக்கியம் எனப் பதிவு செய்கின்றார்.

அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
(சிவ.வா. காப்பு)

என்பது அக்காப்புச் செய்யுள். சிவவாக்கியரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அபிதான சிந்தாமணி, சாம்பசிவம் பிள்ளையின் மூலிகை அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, பாவலர் சரித்திர தீபகம் முதலான நூல்களின் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எதுவும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல் பௌரானிகத் தன்மைகளோடு உள்ளன. சிவவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று ‘குரு பரம்பரை பிரபாவம் பன்னீராயிரம்’ குறிப்பிடுகின்றது. மொத்தத்தில் சிவவாக்கியர் வாழ்க்கை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் ஒன்றுகூடக் கிடைக்கப்பெறவில்லை.

சிவவாக்கியம் நூலின் அகச் சான்றுகளைக் கொண்டு அவரைச் சைவர் என்றும் வைணவர் என்றும் தனித்தனியே சொல்லுவாருண்டு. சிவவாக்கியர் சமயச் சிமிழ்களுக்குள் அடைபடாத சமரச யோகி என்பதே உண்மைநிலை. சிவவாக்கியர் காலத்தை வரையறை செய்யும் மு.அருணாசலம் அகப் புறச் சான்றுகளின் துணைக்கொண்டு சிவவாக்கியர் வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்கின்றார். தமிழக வரலாற்றில் சிவவாக்கியர் வாழ்ந்த இந்தக் காலப்பகுதியே, தமிழகம் சமய, சமூக அரசியல் சூழல்களில் பல புதிய மாற்றங்களை எதிர்கொண்ட காலமாகும்.

சிவவாக்கியர் காலம்:

தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர் பலநிலைகளில் தனித்தன்மை வாய்ந்தவர். நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை, சமயச் சடங்காசாரங்களை முழுமூச்சோடு எதிர்ப்பதில் அவர் முனைந்து நின்றார். அவர் காலத்தில் புனிதத்தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்ட அனைத்து அம்சங்களையும் அவர் துச்சமென நிராகரித்தார். தமது கண்டனங்களில் மென்மையான அணுகுமுறையை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். கறாரான தமது விமர்சனங்களால் பார்ப்பனக் கருத்தாக்கங்களை மட்டுமின்றி பார்ப்பனர்களையும் நேரடியாகத் தாக்கினார். இத்தகு கூர்மையான விமர்சன எதிர்க்குரலைப் பதிவுசெய்வதில் சிவவாக்கியருக்குத் தூண்டுகோலாய் அமைந்த சமூகச்சூழல் குறித்து விவாதிப்பது இங்கு அவசியமாகிறது.

பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பங்காளிச் சண்டையால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட இசுலாம், சிவவாக்கியர் காலத்தில் தமிழகத்தில் நன்கு அறிமுகமாயிருந்தது. நிறுவன மயமாகிப் போன சமயங்களின் பேரால் நிகழ்ந்துவரும் சமூகக் கொடுமைகளின் உக்கிரமே சிவவாக்கியரின் உரத்த எதிர்க் குரலுக்கு அடிப்படை என்றாலும் இசுலாத்தின் வருகை தந்த விழிப்புணர்வும் இப்புதிய போக்கிற்குப் பங்காற்றியிருக்கிறது.

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2

சிவவாக்கியரின் எதிர்க்குரல்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சிவவாக்கியரின் எதிர்க்குரல்:
சிவவாக்கியர் எதிர்க்குரலின் மையப் புள்ளியாக இருப்பது வைதீக எதிர்ப்பே. இந்தியத் தத்துவ மரபில் வைதீக எதிர்ப்பு என்பது வைதீகத்தோடே உடன்பிறந்தது. வைதீகம், வைதீக எதிர்ப்பு என்ற இருமைகளைக் கொண்டே இந்தியத் தத்துவம் இயங்குகின்றது என்றால் மிகையில்லை. சிவவாக்கியர் வேதங்கள், மந்திரங்கள், யாகசாலை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி, இவையாவும் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளுகிறார்.

சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
(சி.வா. 311)

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
(சி.வா. 312)

இப்படிப் பல பாடல்களில் வேதத்தையும் வேதமோதும் பிராமணர்களையும் சாடுகின்ற சிவவாக்கியர் வேள்விக் குண்டத்தையும் அதற்கு ஆதாரமான ரிக்வேதத்தையும் மண்கலத்தில் நூலைச்சுற்றி பூரணகும்பம் என்று ஆராதிக்கும் கலத்தையும் கேலிசெய்து இத்தகு வேத வேள்விமுறைகள் பயனற்றவை என்கிறார். சேமமாக ஓதினும் என்பதிலுள்ள N~மம் என்பது பார்ப்பனர்களின் பேச்சு மொழிச்சொல். சிவவாக்கியர் பகடிக்காக இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

வேதங்கள் மட்டுமல்ல இறைவழிபாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பூசை மற்றும் மந்திர உச்சாடனங்களும் சிவவாக்கியரின் கண்டனத்துக்குள்ளாகின்றன.

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ! நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
(சி.வா. 494)

இப்பாடலில் வடமொழி அர்ச்சனையை முணுமுணு வென்று சொல்லும் மந்திரம் என்று அவர் இகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியரைப் பொறுத்தமட்டில் இறைவழிபாடு, பூசனை மற்றும் பக்தி மார்க்கங்கள் மட்டுமல்ல மூர்த்தங்கள் என மதிக்கப்படும் இறை உருவங்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இறை உருக்களை நட்டகல் என்றும் உற்சவ மூர்த்திகளைச் செம்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆலய வழிபாட்டுக்கு முதன்மை தரும் சைவ, வைணவ மதங்களைச் சாடும் போக்கில் கோயில்கள், குளங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெற்று ஆரவாரங்களே, இறையனுபவம் இவைகளில் இல்லை என வன்மையாகச் சாடுகின்றார்.

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
(சி.வா. 242)


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
(சி.வா. 34)

ஊரே கூடி நடத்தும் தேர்த் திருவிழாவை மனிதர் பண்ணும் புரளி என்று ஒதுக்கித் தள்ளும் சிவவாக்கியரின் துணிச்சல் உண்மையிலேயே வியப்புக்குரியது.

வைதீகத்தை எதிர்ப்பதென்பது உண்மையில் பார்ப்பனீயத்தை, ஆரியத்தை எதிர்ப்பதே ஆகும். பார்ப்பனீயக் கருத்தாக்கங்களை எதிர்க்கும் சிவவாக்கியர் அத்தோடு நிறுத்தாமல் நேரடியாகப் பார்ப்பனர்களையே விசாரணைக்கு உட்படுத்துகின்றார். பார்ப்பனர்களின் தோற்றம், பூணூல், அனுஷ்டானங்கள் எனப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்துமே சிவவாக்கியரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
(சி.வா. 192)

இப்பாடலில் பார்ப்பனர்களின் பூணூல், குடுமியைச் சிவவாக்கியர் கேலி செய்வதென்பது அவர் வாழ்ந்த (இன்றைக்கும் தொடரும்) சனாதனச் சமூகத்தில் எத்தகைய சிக்கலான செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நிலம் பிளந்து வான்இடிந்து நின்றது என்ன? என்ற அவரின் வினாவில் வெளிப்படும், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நிற்கும் பார்ப்பனர் என்ற வருணனை, சிவவாக்கியரின் நயமான நையாண்டிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
(சி.வா. 157)

அசைவ உணவு உண்ணும் பிற வருணத்தாரை விட, சைவ உணவு உண்ணும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரியும் பார்ப்பனர்களின் உணவு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் சிவவாக்கியர். மீன்கள் வாழும் நீரைக் குடிப்பதும் குளிப்பதும் மான்தோல் அணிவதும் எந்தவகையில் சைவத்தில் சேரும் என்பது அவரின் வினா. இந்த சைவ உணவுப் பிரச்சனையில் பார்ப்பனர்களை மட்டுமல்ல சைவ வேளாளர்களையும் கிண்டல் செய்கிறார் சிவவாக்கியர். உடம்பை வளர்க்க நீங்கள் குடிக்கும் பால் உதிரம் அல்லவா? அது எப்படிச் சைவமாயிற்று, சைவ மூடர்களே! என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?
(சி.வா. 148)

சிவவாக்கியர் காலத்து ஆதிக்கச் சாதியரான பார்ப்பனர் மற்றும் சைவ வேளாளர்களை கேலியும் கிண்டலும் செய்யும் துணிச்சலுக்குப் பக்க பலமாய் அவர் அமைத்துக் கொண்ட தர்க்கம், வருணாசிரம தர்மம் என்ற ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையையே தகர்க்கும் சாதி எதிர்ப்பே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கே இருக்கிறது? மனிதர்களின் எலும்பு, தோல், சதைகளில் எங்கேனும் தாழ்ந்த சாதி உயர்ந்தசாதி என்ற அடையாளம் இருக்கின்றதா? பறைச்சியோடு நுகரும் உடலின்பம் பார்ப்பனத்தியோடு நுகரும் உடலின்பம் இரண்டும் வேறு வேறா? என்று உரத்துக் குரலெழுப்பும் சிவவாக்கியரின் குரல் காலத்தைக் கடந்து எல்லா நூற்றாண்டுகளுக்கும் எதிரொலிக்கும் ஆவேசக் குரலாகும்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
(சி.வா. 39)

தமிழ்ச் சமூகத்தைத் தொழுநோய் போல் பீடித்திருக்கும் சாதி அமைப்பைத் தகர்த்தெறியக் கூடிய எதிர்க்குரலை அழுத்தமாகத் தம் சிவவாக்கியத்தில் பதிவு செய்யும் சிவவாக்கியரின் குரல், பின்னர் அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் முதலான சித்தர்களின் குரல்களாகத் தொடர்ந்து ஒலிக்கின்றது. வருணாசிரம எதிர்ப்பில் சித்தர்களிடம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சமுதாய விழிப்புணர்வைக் காணும் கலாநிதி க.கைலாசபதி சித்தர்களைக் கிளர்ச்சியாளர் என்றழைக்கின்றார். (ஒப்பியல் இலக்கியம், ப.189)

அவர் தம் எதிர்க்குரலை சாதீய எதிர்ப்போடு நிறுத்தாமல் அதன் ஆணிவேராயிருக்கின்ற சமய நிறுவனங்கள், பார்ப்பனீயம், வைதீகம் இவற்றை வேரறுக்கும் வகையில் கோயில் வழிபாட்டை அடியோடு வெறுத்தார், புனிதங்களை விசாரணைக்கு உட்படுத்தினார், எச்சில், தீட்டு இவைகள் குறித்த சமூக மதிப்பீடுகளை நோக்கி எதிர்க்கேள்வி கேட்டார்.

ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
(சி.வா. 41)

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.
(சி.வா. 205)

மேலே காட்டப்பட்ட இரண்டு பாடல்களும் எச்சில், தீட்டு எனப்படும் தூமை குறித்து எழுப்பும் எதிர்கேள்விகளின் நியாயத்தைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இப்படிச் சிவவாக்கியரின் பல பாடல்கள் நாசூக்கற்ற வெளிப்படையான வார்த்தைகளால் ஒழுக்கவாதிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3

சமூக மீறலும் எதிர்க்குரலும்

முனைவர் நா. இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்,
கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

சமூக மீறலும் எதிர்க்குரலும்:

சித்தர் இலக்கியக் காலப்பகுதி என்று அடையாளம் காணப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டு போன சமயமும் ஆலயங்களும் பார்ப்பன மேலாதிக்கத்தின் பிடியில் இருந்தன. மன்னர்கள் தொடர்ந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நிலங்களைத் தானமளித்து வந்தனர். பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களிடமும் உயர்சாதி இந்துக்களான வேளாளர்களிடமுமே குவிந்திருந்தன. பார்ப்பனர்கள் வைதீகத்தின் பேரால் சமூகத்தை வருணங்களாகப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். ஆட்சியாளர்களால் வடக்கிலிருந்தும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதோடு இறையிலி நிலங்களும் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் சமயம், சமூகம், அரசியல், பொருள்நிலை அனைத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த நிலையில் வேளாளர்கள் இருந்தனர். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.

இத்தகு நெருக்கடியான சூழலில் தமிழகத்தில் இசுலாமும் கிருத்துவமும் நுழைந்தன. இசுலாத்தின் நுழைவு வைதீகக் காப்பாளர்களுக்கு உவப்பைத் தரவில்லை. மீண்டும் வைதீகத்தையும் வருணாசிரமத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சியின் உச்சக் கட்டத்தில்தான் வைதீகம் மற்றும் வருணாசிரம எதிர்ப்பு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர் தமிழ்ச் சித்தர்கள். சிவவாக்கியரின் வருகை இத்தகு சமூக மீறலோடுதான் தொடங்குகின்றது. சித்தர்களின் ஆன்மீகப் பயணம் திருமூலர், ஒளவையார் போன்றவர்களின் வழியில் யோகமார்க்கத்தோடு தொடங்கினாலும் சித்தர்களின் சமூகப் பயணம் புத்தம் புதிய தளத்தில் கொஞ்சம் சமண, பௌத்த மிச்ச சொச்சங்களோடு வீறுநடை போட்டது.

தமிழகத்தின் இத்தகு நெருக்கடியான சூழல் வைதீகத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராகக் குரலெழுப்பும் துணிவைச் சித்தர்களுக்கு மட்டுமில்லாமல் வேறு சிலருக்கும் தந்திருக்கின்றது. சாதீயத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் மற்றும் சாதியத்தினால், தீண்டாமையினால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்திரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவர் எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் தோற்றம் பெற்றது இக்காலத்தில்தான். இரண்டு நூல்களுமே வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பைத் தர்க்கங்களோடு பதிவு செய்கின்றன.

ஊருடன் பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ? பாய்ச்சலூர் கிராமத்தாரே


சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே
(பாய்ச்சலூர்ப் பதிகம்)

கபிலரகவல், பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான இலக்கியங்களில் வெளிப்படும் குரலின் முழுமை பெற்ற வடிவமே சித்தர்களின் குரல் என்று கொள்வதில் பிழையில்லை.
சாதியமைப்புக்கு எதிரான சித்தர்களின் கண்டனக் குரல்கள் ஒரு சமூகச் சீர்திருத்தக் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. மாறாகச் சாதீய, சனாதன ஒடுக்கு முறைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சிகர எதிர்விளைவாகவே நினைக்கத் தோன்றுகிறது.

சிவவாக்கியர் பாடல்களில் இந்த அடையாளங்கள் இன்னும் அழுத்தமாகவே வெளிப்படுகின்றன. “பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?” என்ற சிவவாக்கியரின் குரலில் வெளிப்படும் ஆவேசம், சாதீய ஒடுக்குதலில் பீறிட்டுக் கிளம்பும் தலித்திய எதிர்க்குரலன்றி வேறென்ன?.

அதேபோல் பார்ப்பனர்களின் சாதீய அடையாளத் தோற்றம் குறித்து “பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ” என்று வினா எழுப்பும் பகுதியில் பார்ப்பனர்களின் கோவணம், குடுமி, பூணூல் முதலான அவர்களின் புனித அடையாளங்களை விசாரணைக்குட்படுத்துவது நேரடியான எதிர்த் தாக்குதலாக அமைந்துள்ளமை வெளிப்படை. சிவவாக்கியரின் கவிதைகளில் வெளிப்படும் புனைவற்ற வெளிப்படையான மொழி அதாவது உயர்சாதினரால் நாசூக்கற்றதாகக் கருதப்படும் தலித்தியச் சொல்லாடல்கள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

சித்தர்; சிவவாக்கியர் பாடல்களில் வெளிப்படும் சமூகமீறல்களின் எதிர்க்குரலில் வெடித்துக் கிளம்புவது ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான ஒரு தலித்தியப் புரட்சிக்குரலே என்று கருத வாய்ப்புள்ளது.


துணைநின்ற நூல்கள்:
1. அருணன், தமிழரின் தத்துவ மரபு-இரண்டாம் தொகுதி, 2008
2. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு,
3. க.கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், 1978
4. வா. சரவண முத்துப்பிள்ளை, பெரிய ஞானக்கோவை, (ஆ.இ)
5. க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003
6. ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், 1980

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...