வெள்ளி, 15 அக்டோபர், 2021

தொல்லியல் பயணம் - திருநாதர் குன்று (செஞ்சி)

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) 

திருநாதர் குன்று - சிலைகளும் குகையும்


திருநாதர் குன்று:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊரின் வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் திருநாதர் குன்று என்றழைக்கப்படும் சிறிய மலைக் குன்று உள்ளது. இதனைச் சிறுகடம்பூர் மலையென்றும் அழைப்பர். இக்குன்று தமிழ் மற்றும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இம்மலையின் உச்சியில் உள்ள பெரிய கற்பாறையில் சமண சமயத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அமர்ந்த நிலையில், இருவரிசையில் அமைக்கப்பட்டு, கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள் போலுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. இரு சாமரங்கள் குறுக்காகப் பிணைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

இக்குன்றின் வட திசையில் அருகதேவரின் சிற்பமும், குன்றின் மீது செல்லும் வழியில் உடைந்த நிலையில் அருகதேவரின் அமர்ந்துள்ள சிலையும் காணப்படுகின்றது.

குன்றின் உச்சியில் சமணத் துறவிகள் வசித்த பாறைக் குகை ஒன்றும் உள்ளது. சுமார் இருபது பேர் தங்கக்கூடிய வகையில் இயற்கையாக அமைந்துள்ள இக்குகையில் சமண முனிவர்கள் தங்கி உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்திருக்கலாம். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் (கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு) அங்கேயே கிடைக்கின்றன.


திருநாதர் குன்று - கல்வெட்டுகள்

மூன்று கல்வெட்டுகள்

இக்குன்றின் மேற்குப் பகுதியில் சமதளப் பாறையில் காணப்படும் நிசீதிகைக் கல்வெட்டுகள் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்கள் தொடர்பானவை) கல்வெட்டுகள் தமிழ்மொழி மற்றும் சமய சமூக வரலாற்றில் மிகமிக முக்கியமானதாகும். பிற்காலத் தமிழி - பிராமி வரிவடிவில் இருந்து தமிழ் வட்டெழுத்தாக, வளர்ந்த, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டாக இக்வெட்டுகளைக் குறிப்பிடமுடியும். சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதன்முதலில் காணக் கிடைக்கின்றது.

முதல் கல்வெட்டு வாசகம்

******************************

ஐம்பத்தேழன

சனந்நோற்ற

சந்திரநந்திஆ

சிரிகர் நிசீதிகை

இக்கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி ஐம்பத்தேழு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.

இரண்டாம் கல்வெட்டு வாசகம்

******************************

முப்பதுநாளன சநோற்ற

இளைய படாரர் நிசிதிகை

இக் கல்வெட்டு, இளைய பட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.

மூன்றாம் கல்வெட்டு

**************************

திருநாதர் குன்றின் உச்சிக்குச் செல்லும் பாதையின் இடப்புறம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் மகாவீரர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. உடைந்த சிற்பத்தின் பக்கவாட்டில் ஒரு கல்வெட்டு உள்ளது. சிதைந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டு கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். திருநாதர் குன்றில் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய் தயாரிக்க நானூறு ஆடுகள் வழங்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது.

 

மேல்சித்தாமூர் - பார்சுவநாதர் ஆலயம்.

 

தொல்லியல் பயணம்

மேல்சித்தாமூர் - பார்சுவநாதர் ஆலயம்.

பார்சுவநாதர் ஆலயச் சிற்பங்களும் ஓவியங்களும்.

தேர்வடிவ மண்டபமும் யானைச் சிற்பங்களும்
தொல்லியல் பயணம் - மேல்சித்தாமூர்

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) 

மேல்சித்தாமூர் 

தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூரில் ஒரு சமண மடம் உள்ளது. இம்மடத்தினை ஜினகாஞ்சி மடம் என்று அழைப்பர். இவ்வூரில் மல்லிநாதர் ஆலயம், பார்சுவநாதர் ஆலயம் என்ற இரண்டு பழைய சமண சமய ஆலயங்கள் உள்ளன. மேல்சித்தாமூரில் அமைந்துள்ள ஜினகாஞ்சி மடம் கி.பி.16ஆம் நூற்றாண்டில் விழுப்புரம் மாவட்டம் உப்புவேலூரைச் சேர்ந்த வீரசேனாச்சாரியார் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இது, தமிழகத்தில் உள்ள திகம்பரப் பிரிவுச் சமணர்களின் தலைமைப் பீடமாகும். தமிழகத்தில் எஞ்சி நிற்கக் கூடிய ஒரே சமண மடம் இதுவேயாகும்.

மல்லிநாதர் ஆலயம்மல்லிநாதர் ஆலயம் கி.பி. 9ஆம்‌ நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்குள்ள கல்வெட்டுக்களும்‌, பாறையில் வெட்டப் பட்டுள்ள புடைப்புச் சிற்பத் தொகுதியும் கி.பி.9 ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியில் அமைந்துள்ளன.

ஆலயத்தின் கருவறைச் சிற்பத்தொகுதி பாறையை வெட்டி வடிக்கப்பெற்றதாகும். இப் பாறையில் ரிஷபநாதர்‌, நேமிநாதர்‌, பார்சுவநாகர்‌, பாகுபலி, யக்‌ஷன், யக்‌ஷி முதலானவர்களின் சிற்பங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் தற்காலத்தில் மல்லிநாதர்‌ ஆலயம் என அழைக்கப்படுகின்றது. ஆனால்‌ இவ்வாலயம் மல்லிநாத தீர்த்தங்கரருக்காகத்‌ தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் அன்று. மலையினைச் (பாறையினை) செதுக்கி உருவாக்கப்பட்ட ஆலயம் ஆதலால் இவ்வாலயத்தை மலைநாதர் ஆலயம் என்று அழைத்திருக்கலாம். பின்னர் அப்பெயரே மருவி மல்லிநாதர் ஆலயம் என்று மாறியிருக்கக் கூடும். கி.பி. 9ஆம்‌ நூற்றாண்டில்‌ இவ்வாலயம் காட்டாம்பள்ளி என்று அழைக்கப்பட்டதாக அறிகிறோம்.

மல்லிநாதர் ஆலயக் கருவறையில் உள்ள புடைப்புச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள்.

1. அமர்ந்த நிலையில் நேமிநாதர் திருவுருவம்.

2. நேமிநாதரது இடதுபுறத்தில் யக்‌ஷியாகிய

குஷ்மாண்டினி சிற்பம்‌.

3. நேமிநாதரை அடுத்து முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் அமர்ந்த நிலையில் தியானத்தில் உள்ளார். இவரது தலைக்கு மேல் முக்குடை உள்ளது. இரண்டு பக்கத்திலும் இருவர் சாமரம் வீசுகின்றனர்.

4. ரிஷபதேவரை அடுத்து பார்சுவநாதர்‌ நின்ற கோலத்தில்‌ உள்ளார். இவரது வலப்புறத்தில் தரணேந்திர யக்ஷனும்‌, இடப்புறம்‌ பத்மாவதி

யக்ஷியும்‌ இடம் பெற்றுள்ளனர்.

5. பார்சுவநாதரை அடுத்து நின்ற கோலத்தில் பாகுபலியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவரின் இரண்டு பக்கத்திலும் அவரின் சகோதரிகள் இடம் பெற்றுள்ளனர்.

மல்லிநாதர் கருவறையின் புடைப்புச்சிற்பங்கள் கலைநேர்த்தியுடன் கூடிய அரிய சிற்பத் தொகுதியாகும்.


மேல்சித்தாமூர் - பார்சுவநாதர் ஆலயம்.

மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி சமண மடத்தால் நிர்வகிக்கப்படும் ஆலயங்கள் இரண்டு. 1. மல்லிநாதர் ஆலயம், 2. பார்சுவநாதர் ஆலயம். தற்போது இம்மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ லட்சுமிசேன பட்டாச்சார்ய சுவாமிகள் பொறுப்பில் உள்ளார். இம்மடத்தினை ஓட்டி அமைந்துள்ள பார்சுவநாதர் ஆலயம் மல்லிநாதர் ஆலயத்திற்குப் பிறகு கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆலயமாகும்.

பார்சுவநாதர் ஆலயம்.

பார்சுவநாதர்‌ ஆலயம் பிரம்மாண்டமான கட்டிடக் கலைநுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தில் பார்சுவநாதர் வீற்றிருக்கும் கருவறையும் அதனை ஒட்டி அர்த்த மண்டபம் மகா மண்டபங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் ஆலயத்தில் தருமதேவி‌ கருவறை, நேமிநாதர் கருவறை, மகாவீரர் கருவறை முதலான தனித்தனிக் கருவறைகள் இடம் பெற்றுள்ளன. சிறப்பான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய அலங்கார மண்டபம் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் பதினாறு தூண்களோடு அமைந்துள்ளமை இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். ஒற்றைக் கல்லினால் ஆன ஐம்பதடி நெடிதுயர்ந்த மானஸ்தம்பம் ஆலயத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றது.

இவ்வாலயத்தின்‌ பார்சுவநாதர்‌ கருவறை, அர்த்தமண்டபம்‌, மானஸ்தம்பம்‌ ஆகியவை கி.பி, 16ஆம்‌ நூற்றாண்டுக் கலைப்பாணியில் உருவாக்கப் பட்டுள்ளன. எஞ்சியுள்ள கருவறைகளும்‌, மண்டபங்களும்‌ கி.பி. 19ஆம்‌ நூற்றாண்டில் விரிவாக்கம் செய்து இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

பார்சுவநாதர்‌ கோயில்‌ வளாகத்திலேயே பிரம்மதேவர்‌, சரஸ்வதி, பத்மாவதி, சுவாலாமாலினி ஆகியோருக்கு சிறிய கருவறைகள்‌ கட்டப் பட்டுள்ளன. இக்கருவறைகளின் முகப்பு விதானத்தில் அழகான வண்ண ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன.

பார்சுவநாதார் ஆலயத்தின்‌ முகப்புக் கோபுரம்‌ சுமார் எழுபதடி உயரத்தில் ஏழு அடுக்குகளைக்‌ கொண்டு அமைக்கப் பட்டுள்ளது.

பார்சுவநாதர்‌ ஆலயக் கோபுரத்திற்கு வடபுறத்தில் தேர் போன்று வடிக்கப் பட்டுள்ள‌ மண்டபம்‌ ஒன்று உள்ளது. இத்தேர் மண்டபத்தின் இருமருங்கிலும் தேரினை இழுத்துச் செல்வதுபோல் பிரமாண்டமான இரண்டு யானைச் சிற்பங்கள் அழகுற வடிக்கப் பட்டுள்ளன. இச்சிற்பங்கள் செஞ்சி வெங்கட்ரமணர் ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டன என்று அறிகிறோம்.
தொல்லியல் பயணம் - நெகனூர்பட்டி

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) பகுதி -1

நெகனூர்பட்டி - தமிழி கல்வெட்டுநெகனூர்பட்டி - விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சியைச் சேர்ந்த சிறுகிராமம்.

நெகனூர்பட்டி - இவ்வூரில் உள்ள அடுக்கங்கல் எனும் சிறுகுன்றுப் பகுதி ஒரு தொல்லியல் இடமாகும். கடந்த 2021 ஆகஸ்ட் திங்களில் தான் தமிழக அரசு இப்பகுதியையும் இங்குள்ள தமிழி கல்வெட்டையும் பாதுகாக்கப்படும் சின்னங்களாக அறிவித்துள்ளது.

இந்த நெகனூர்பட்டி செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ளது.

நெகனூர்ப்பட்டிக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்றின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சிறு குகையை ஒட்டிய கூரை விளிம்பில் ஒரு தமிழி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.

சுமார் கி.பி. 3 – 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டு கணிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் கீழுள்ள குகையில் சமணப் படுக்கைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது சிதைந்துள்ளன. குகையின் மேற்கூரையில் பழங்கால வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.

தமிழிக் கல்வெட்டு நான்கு வரிகளில் மிகவும் மெலிதாகக் கீறப்பட்டுள்ளது. கல்வெட்டினைச் சுற்றிச் சதுரவடிவில் கோடுகள் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டு வாசகங்கள்

=======================

= பெரும்பொகய்

= செக்கந்தி தாயியரு

= செக்கந்தண்ணி செ

= யிவித்த பள்ளி

======================

பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தியின் தாயார் செக்கந்தண்ணி என்பவள் செய்து கொடுத்த பள்ளி (படுக்கை) என்பது இதன்பொருள்.

இக்கல்வெட்டு தமிழி எழுத்து வளர்ச்சி நிலையை அடையாளப் படுத்தும் ஒரு சிறந்த கல்வெட்டாகும்

கல்வெட்டின் சிறப்புகள்-

1. ஒரு பெண்ணின் கொடையைக் குறிப்பிடுவதாக உள்ளது. 2. கல்வெட்டினைச் சுற்றி சதுரவடிவில் கட்டம் கட்டப்பட்டுள்ளது. 3. மெய் எழுத்துகள் புள்ளி பெற்றுள்ளன. 4. எழுத்துகளுக்கு தலைக்கோடு இடம் பெற்றுள்ளது. 5. இகர உயிர்க்குறி வளைத்து இடப்பக்கமாகச் செல்கிறது. 6. ப எழுத்தின் இரண்டு மேல் விளிம்புகளும் சமமாக உள்ளன.

கந்தி என்ற சொல் பெண் துறவியைக் குறிப்பிடுகிறது. பெரும்பொகை என்ற ஊர் இன்றும் அதே பெயரில் நெகனூர்ப் பட்டியிலிருந்து 3 கி.மீ. தெற்காக அமைந்துள்ளது பெரும்பொகை -பெரிய குகை உள்ள ஊர் என்று பொருள்படும். இவ்வூரில் சமணப் படுக்கைகள் உள்ள குகையை இன்றும் காணலாம்.

இக்கல்வெட்டினை முதன்முதலில் கண்டெடுத்து வாசித்து வெளிப்படுத்தியவர் சு.இராசவேலு (ஆவணம் இதழ்)

 

நெகனூர்பட்டி - பாறை ஓவியம்

நெகனூர்பட்டிக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்றின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சிறு குகையின் மேற்கூரையில் பழங்கால வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.

அடுக்கங்கல் வெண்சாந்து ஓவியங்களின் காலம் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன் என்று கணிக்கப்பட்டுள்ளன. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் இவை.

இந்த ஓவியத் தொகுதியில் சில குறியீடுகள், கோலங்கள், மனிதர்கள், விலங்கு போன்றவை இடம் பெற்றுள்ள. குறியீடுகள் கோலங்கள் போன்றவை கால வெள்ளத்தில் சிதைவுற்றுள்ளன. சில மனித உருவங்களும் அழிந்துள்ளன. இப்பொழுது தெளிவாகத் தெரியக்கூடிய ஓவியங்கள் ஐந்து ஆகும்.

1. ஒரு மனிதன் ஒரு கையில் வாளும் மறு கையில் கேடயம் போன்ற தடுப்பும் ஏந்திய ஓவியம்.

2, 3, 4, ஓவியங்கள் மனிதர்கள் வெற்றிக் களிப்பில் ஆர்ப்பரிப்பது போன்று வரையப்பட்டுள்ளன.

5. இது ஒரு விலங்கின் ஓவியம் போன்று உள்ளது.

இந்த ஓவியங்கள் சிதைந்துள்ள கற்படுக்கை உள்ள குகையின் கூரையில் வரையப் பட்டுள்ளன.

நெகனூர்பட்டி - அடுக்கங்கல்நெகனூர்பட்டி - செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இச்சிற்றூருக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்று இயற்கையின் வியத்தகு படைப்பு. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கும் இப்பாறைத் தொகுதி காட்சிக்கு மட்டும் விருந்தளிக்காமல் கருத்துக்கும் விருந்தளிக்கிறது.

அடுக்கங்கல் எனும் இச்சிறு குன்றுப் பகுதி ஒரு தொல்லியல் இடமாகும். இக்குன்றின் கீழ்ப்பகுதியில் சமணப் படுக்கையும் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து பாறை ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 2021 ஆகஸ்ட் திங்களில் தான் தமிழக அரசு இப்பகுதியையும் இங்குள்ள தமிழி கல்வெட்டையும் பாதுகாக்கப்படும் சின்னங்களாக அறிவித்துள்ளது.

அடுக்கங்கல் குன்றின் அருகிலுள்ள பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு சிதைந்துள்ளன. அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு பொட்டலாகக் காட்சியளிக்கின்றன. கற்படுக்கைகளைச் சிதைத்து நம்மவர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டுகளாகப் பதித்து அலங்கோலம் செய்துள்ளனர். தற்போது தமிழக அரசு பாதுகாக்கப்படும் சின்னமாக அடுக்கங்கல்லை அறிவித்துள்ளமை பாராட்டத் தக்கது. இனியேனும் தொல்லியல் சின்னங்களை நாமும் அரசும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

கங்கை கொண்ட சோழபுரம் - சோழர் காலத்துப் பெரிய யானை.

 

கங்கை கொண்ட சோழபுரம்

சோழர் காலத்துப் பெரிய யானை.

முனைவர் நா.இளங்கோ

கங்கை கொண்ட சோழபுரம் வடதிசை எல்லையில் சாளுக்கிய துர்க்கை நிறுவப்பட்ட இடம் சலுப்பை. இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. துர்க்கை நிறுவப்பட்ட இடம் "துரவு மேல் அழகர்" (துரவு=கிணறு) ஆலயமாகும். சாளுக்கியப் படைகளைச் சோழப்படைகள் துவம்சம் செய்த இடம் என்பதால் இதற்கு “சாளுக்கிய குல நாசனி “ என்பது பழைய பெயர். அப்பெயரே காலப்போக்கில் மருவி சலுப்பை என்றாகி விட்டது.

அழகர் கோவிலின் எதிரில் காணப்படும் சோழர் காலத்து யானை சுதை சிற்பம் ஆசியாவிலேயே உயரமானது என்ற பெருமைக்கு உரியது. இந்த யானை சிலை 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் உடையது.

இந்த யானை, சோழர்காலச் சுதைச் சிற்பமாகச் சுட்டச் செங்கற்கள் மீது வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு கலவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த யானைக்கு ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு, திருடன் ஒருவன் மரத்திலிருந்து பலா காய்களைப் பறித்துக் கொண்டு ஓட, காவல் நாய் அவனை விரட்டுகின்றது. அதற்குள் அழகர்சாமி, யானை உருவில் வந்து அந்தத் திருடனை துதிக்கையால் பிடிப்பது போன்று இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது.

இச்சிலை சோழர் காலத்திய சிற்பம் என்றாலும், 16 - 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் காலத்தில் அப்போதைய வடிவமைப்பில் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

சென்ற 11.12.2020 அன்று இச்சிலைப் பாதுகாக்கப்பட்ட பழமையான சின்னம் எனத் தமிழகத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.

(தகவல் - இரா.கோமகன், கோ.சுகுமாரன்)

தற்போது யானையைச் சுற்றி, சாரம் அமைத்து செப்பனிடும் பணி நடைபெறுகிறது.

படங்கள் உதவி: இணையம்.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...