வெள்ளி, 15 அக்டோபர், 2021

தொல்லியல் பயணம் - நெகனூர்பட்டி

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) பகுதி -1

நெகனூர்பட்டி - தமிழி கல்வெட்டு



நெகனூர்பட்டி - விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சியைச் சேர்ந்த சிறுகிராமம்.

நெகனூர்பட்டி - இவ்வூரில் உள்ள அடுக்கங்கல் எனும் சிறுகுன்றுப் பகுதி ஒரு தொல்லியல் இடமாகும். கடந்த 2021 ஆகஸ்ட் திங்களில் தான் தமிழக அரசு இப்பகுதியையும் இங்குள்ள தமிழி கல்வெட்டையும் பாதுகாக்கப்படும் சின்னங்களாக அறிவித்துள்ளது.

இந்த நெகனூர்பட்டி செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ளது.

நெகனூர்ப்பட்டிக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்றின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சிறு குகையை ஒட்டிய கூரை விளிம்பில் ஒரு தமிழி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.

சுமார் கி.பி. 3 – 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டு கணிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் கீழுள்ள குகையில் சமணப் படுக்கைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது சிதைந்துள்ளன. குகையின் மேற்கூரையில் பழங்கால வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.

தமிழிக் கல்வெட்டு நான்கு வரிகளில் மிகவும் மெலிதாகக் கீறப்பட்டுள்ளது. கல்வெட்டினைச் சுற்றிச் சதுரவடிவில் கோடுகள் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டு வாசகங்கள்

=======================

= பெரும்பொகய்

= செக்கந்தி தாயியரு

= செக்கந்தண்ணி செ

= யிவித்த பள்ளி

======================

பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தியின் தாயார் செக்கந்தண்ணி என்பவள் செய்து கொடுத்த பள்ளி (படுக்கை) என்பது இதன்பொருள்.

இக்கல்வெட்டு தமிழி எழுத்து வளர்ச்சி நிலையை அடையாளப் படுத்தும் ஒரு சிறந்த கல்வெட்டாகும்

கல்வெட்டின் சிறப்புகள்-

1. ஒரு பெண்ணின் கொடையைக் குறிப்பிடுவதாக உள்ளது. 2. கல்வெட்டினைச் சுற்றி சதுரவடிவில் கட்டம் கட்டப்பட்டுள்ளது. 3. மெய் எழுத்துகள் புள்ளி பெற்றுள்ளன. 4. எழுத்துகளுக்கு தலைக்கோடு இடம் பெற்றுள்ளது. 5. இகர உயிர்க்குறி வளைத்து இடப்பக்கமாகச் செல்கிறது. 6. ப எழுத்தின் இரண்டு மேல் விளிம்புகளும் சமமாக உள்ளன.

கந்தி என்ற சொல் பெண் துறவியைக் குறிப்பிடுகிறது. பெரும்பொகை என்ற ஊர் இன்றும் அதே பெயரில் நெகனூர்ப் பட்டியிலிருந்து 3 கி.மீ. தெற்காக அமைந்துள்ளது பெரும்பொகை -பெரிய குகை உள்ள ஊர் என்று பொருள்படும். இவ்வூரில் சமணப் படுக்கைகள் உள்ள குகையை இன்றும் காணலாம்.

இக்கல்வெட்டினை முதன்முதலில் கண்டெடுத்து வாசித்து வெளிப்படுத்தியவர் சு.இராசவேலு (ஆவணம் இதழ்)

 

நெகனூர்பட்டி - பாறை ஓவியம்





நெகனூர்பட்டிக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்றின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சிறு குகையின் மேற்கூரையில் பழங்கால வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.

அடுக்கங்கல் வெண்சாந்து ஓவியங்களின் காலம் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன் என்று கணிக்கப்பட்டுள்ளன. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் இவை.

இந்த ஓவியத் தொகுதியில் சில குறியீடுகள், கோலங்கள், மனிதர்கள், விலங்கு போன்றவை இடம் பெற்றுள்ள. குறியீடுகள் கோலங்கள் போன்றவை கால வெள்ளத்தில் சிதைவுற்றுள்ளன. சில மனித உருவங்களும் அழிந்துள்ளன. இப்பொழுது தெளிவாகத் தெரியக்கூடிய ஓவியங்கள் ஐந்து ஆகும்.

1. ஒரு மனிதன் ஒரு கையில் வாளும் மறு கையில் கேடயம் போன்ற தடுப்பும் ஏந்திய ஓவியம்.

2, 3, 4, ஓவியங்கள் மனிதர்கள் வெற்றிக் களிப்பில் ஆர்ப்பரிப்பது போன்று வரையப்பட்டுள்ளன.

5. இது ஒரு விலங்கின் ஓவியம் போன்று உள்ளது.

இந்த ஓவியங்கள் சிதைந்துள்ள கற்படுக்கை உள்ள குகையின் கூரையில் வரையப் பட்டுள்ளன.

நெகனூர்பட்டி - அடுக்கங்கல்



நெகனூர்பட்டி - செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இச்சிற்றூருக்கு மேற்கே உள்ள ‘அடுக்கங்கல்’ என்ற குன்று இயற்கையின் வியத்தகு படைப்பு. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கும் இப்பாறைத் தொகுதி காட்சிக்கு மட்டும் விருந்தளிக்காமல் கருத்துக்கும் விருந்தளிக்கிறது.

அடுக்கங்கல் எனும் இச்சிறு குன்றுப் பகுதி ஒரு தொல்லியல் இடமாகும். இக்குன்றின் கீழ்ப்பகுதியில் சமணப் படுக்கையும் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து பாறை ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 2021 ஆகஸ்ட் திங்களில் தான் தமிழக அரசு இப்பகுதியையும் இங்குள்ள தமிழி கல்வெட்டையும் பாதுகாக்கப்படும் சின்னங்களாக அறிவித்துள்ளது.

அடுக்கங்கல் குன்றின் அருகிலுள்ள பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு சிதைந்துள்ளன. அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு பொட்டலாகக் காட்சியளிக்கின்றன. கற்படுக்கைகளைச் சிதைத்து நம்மவர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டுகளாகப் பதித்து அலங்கோலம் செய்துள்ளனர். தற்போது தமிழக அரசு பாதுகாக்கப்படும் சின்னமாக அடுக்கங்கல்லை அறிவித்துள்ளமை பாராட்டத் தக்கது. இனியேனும் தொல்லியல் சின்னங்களை நாமும் அரசும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...