வியாழன், 26 மார்ச், 2020

இணைய உலகில் நூல்களும் நூலகங்களும் - பகுதி-2


பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ

தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் கலைக் கல்லூரி 
புதுச்சேரி-8


இனி இணைய உலகில் சேவை வழங்கிவரும் தமிழ் மின்-நூலகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழ் இணையக் கல்விக்குழுமம்: (http://tamilvu.org)
உலகெங்கிலுமுள்ள பன்னாட்டு மாணவர்கள் மட்டுல்லாது விரும்பும் எவரும்  தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது தமிழ் இணையப் பல்கலைக் கழகம். இந்நிறுவனம் இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் இணையக் கல்விக் குழுமம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.  தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன. சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.
தமிழ் இணையக் கல்விக் குழுமத்தின் மின் நூலகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின் நூலகத்தில் நூல்கள், அகராதிகள், பிற பார்வைக் கூறுகள் என்னும் 3 பிரிவுகள் உள்ளன. சங்க கால நூல்களிலிருந்து சமகால இலக்கியம் வரை பல இலக்கிய படைப்புகளின் மின்-நூல்கள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன. வகைப் பிரித்தல், விளக்கவுரைகளுடன் கூடிய தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் எழுத்துருவில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பன இந்நூலகத்தின் சிறப்புகளாக விளங்குகின்றன.
தமிழ் இணையக் கல்விக் கழக மின்-நூலகத்தின் சிறப்புக் கூறுகளாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்.
1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன
2. சங்க இலக்கியப் பாடுபொருள்கள் எண், சொல், பக்கம், பாடினோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என்னும் தலைப்புகளில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
3. அகராதிகளில், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது.
4. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வகையில் அமைந்த சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவக் கோயில்களின் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு முதலான பண்பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது.
5. திருத்தலங்கள் என்னும் வரிசையில் 14-சமணத் தலங்கள், 101 சைவத் தலங்கள், 93-வைணவத் தலங்கள், 9-இசுலாமிய தலங்கள், 13-கிறித்துவத் தலங்கள் காட்சியாக்கப் பட்டுள்ளன.
6.  தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.
இவ்வாறு பல வசதிகளைக் கொண்ட இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களை விரும்பிக் கற்க விழைவார்க்கும் பயன்படும். இதில் 350க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்:  (http://www.projectmadurai.org/)
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க () தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும் துணைத்தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள், படைப்புகள், உரைநூல்கள் சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டத்தின் சிறப்பு கூறாகக் குறிப்பிடத்தக்கது யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருச் சிக்கல்  இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது இம் மின்-நூலகம் தமிழ்.நெட் இணைய தளத்துடன் இணைந்து செயல்படுகிறது. மின்-நூல்களை PDF கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் இத்தளத்தில் கிடைக்கின்றது.
 சென்னை  நூலகம்:  (http://www.chennailibrary.com)
திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம், சென்னை நூலகம் ஆகும். இது வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும்.
சென்னை நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவையும் ஒருங்குறியில் இருக்கின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறு காப்பியங்கள், யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை எண்கள் அடிப்படையில் தேடிப்பெற்றுக் கொள்ளலாம். இவையேயன்றி கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மு. வரதராசன், .பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளும் இதில் கிடைக்கின்றன.
இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இணைவோருக்குத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை PDF கோப்புகளாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுன்கிறன.
நூலகம் திட்டம்: ( http://www.noolaham.org )
நூலகம் திட்டம் என்பது, ஈழத்துத் தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணிப் பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ முயற்சியாகும். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்பும் எவரும், எந்த நூலையும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாகமின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும். இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத், மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் செயற்பட்டு வருகிறது.
நூலகத் திட்டம் குறித்து நூலகம் வலைத்தளத்தின் முகப்பு வாசகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி.
ஈழத் தமிழ் நூல்களை மின்-நூல்களாக்கிப் பாதுகாத்து வழங்கும் நூலகம் திட்டத்தினை நாம் இணைய ஈழ நூலகம் என்றே குறிப்பிடலாம்.
தமிழ் மரபு அறக்கட்டளை: (http://www.tamilheritage.org/)
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் மின் பதிப்பாக வெளியிடுவது ஆகும்.
தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஓர் அறக்கட்டளையாகும். இன்றையக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்பங்களின் துணையோடு அழிந்து வரும் தமிழ் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கவும் அவற்றை இலகுவாகப் பகிர்ந்து கொள்ளவும் தமிழ் மரபு அறக்கட்டளை வழிவகுக்கின்றது. கணினித் தொழில்நுட்பங்கள், தமிழ் மரபுச் செல்வங்களை, ஒலி, ஒளி, எழுத்து வடிவம் எனப் பல்வேறு வழிகளில் அவற்றை எண்ணிமப் பதிவாக்க உதவுகின்றன. தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியமாக இப்பணியில்  ஈடுபட்டு  வருவதோடு  தமிழின் மரபைப் பாதுகாக்கும் ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகவும் செயல்படுகின்றது.
மேலும், தமிழ் மரபு அறக்கட்டளை மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
ஓபன் ரீடிங் ரூம் : (www.openreadingroom.com)
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவும் ஓர் இணையதளம் ஓபன் ரீடிங் ரூம் ஆகும். இதன் முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, வரலாறு என வகைவகையான மின்னூல் கோப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம் முதலான தமிழிலக்கியங்கள் அங்கே வாசிக்கக் கிடைக்கின்றன. .சிதம்பரநாத செட்டியாரில் தொடங்கி அண்ணாதுரை, அசோகமித்திரன், கல்கி, குன்றக்குடி அடிகளார், பரிதிமாற் கலைஞர், புதுமைப்பித்தன் எனப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களோடு உடுமலை நாராயணகவி, சுரதா, மீரா, அழ. வள்ளியப்பா எனப் பிரபல தமிழ்க் கவிஞர்களின் பட்டியலும் நீள்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், காப்புரிமையுள்ள நூல்கள் எனத் தொடரும் பட்டியல்களில் பிடித்தமான நூலைத் தேர்வு செய்து வாசிக்கலாம்.
குறிப்பிட்ட சில புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம். நூல்கள் சேர்க்கப்பட்ட மாத வரிசையிலும் பட்டியலைப் பார்வையிடலாம். இதற்கென உறுப்பினர் கணக்குத் தொடங்க வேண்டியதில்லை. தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவும் தேவையில்லை. புத்தகத்தின் பக்கங்களை அடுத்தடுத்துத் திருப்பி வாசிப்பதைப்போல, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி வாசிக்க முடியும். இதனால், புத்தகத்தை நேரடியாகப் படிப்பது போன்றதோர் உணர்வு ஏற்படுகிறது. சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இத்தளத்தில் 2,300 படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் வாழ் தமிழரும், மூத்த பத்திரிகையாளருமான ரமேஷ் சக்ரபாணி இத்தளத்தை நடத்தி வருகிறார். ‘இலவச இணைய நூலகம்என்றே இதனை அவர் குறிப்பிடுகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள மின்-நூலகங்கள் மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் தமிழ் மின்-நூல்களைச் சேகரித்துப் பாதுகாத்து இணையப் பயனாளர்களுக்கு வழங்கிவரும் சேவையால் மின்-நூலகங்களாகச் செயல்படுகின்றன.
மின்-நூல் தொழில்நுட்பம் மற்றும் மின்-நூலகங்களின் வருகையால் வாசிப்புக்கான எல்லைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் அல்லாத உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் தமிழ் நூல்கள் கிடைப்பது எளிதாகியுள்ளது. அச்சில் கிடைக்காத, மறுஅச்சு காணாத பல பழைய தமிழ் நூல்களை இன்றைய தலைமுறையினருக்கு வழங்கிய பெருமை மின்-நூலகங்களையே சாரும். நூல்களையும் நூலகங்களையும் இனி உடன் சுமந்து செல்லவேண்டிய தேவையில்லை, நினைத்த இடத்தில் நினைத்த பொழுதில் நூறாயிரத்திற்கும் மேலான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை உடனடியாக வாசிக்கும் வாய்ப்பு மின்-நூலகங்களால் கிட்டியுள்ளது. நேரடியாகத் தொட்டு வாசிக்கும் அனுபவத்தை மின்-நூல்கள் தரவில்லை என்ற குறை ஒருபக்கம் இருந்தாலும் காலமாற்றத்தால் ஏற்படும் ஊடக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நம்மை அணியப்படுத்திக் கொள்ளுதலே அறிவுடைமை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...