வியாழன், 26 மார்ச், 2020

இணைய உலகில் நூல்களும் நூலகங்களும் - பகுதி-1



பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் கலைக் கல்லூரி
புதுச்சேரி-8


மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில்  எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும். நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு                              (நன்னூல் 25)
ஒரு மரத்தின் வளைவு நெளிவுகளைக் கண்டறிவதற்கு மரவேலை செய்யும் தச்சர்கள் பயன் படுத்தும் கருவி, நூல் ஆகும். மரத்தின் வளைவைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவதுபோல மனிதனின் மனதில் உண்டாகும் கோணல்களைக் கண்டறிந்து அவன் மனக்கோளாறுகளை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல் செயல்படும் என்கிறது நன்னூல் நூற்பா. நூல் என்பதற்கு நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் தரும் பொருள் விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது.
மனிதகுல வரலாறு மற்றும் சிந்தனைகளின் எழுத்துப் பதிவுகளாக அமைந்திருக்கும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமித்து வைக்கப்பட்டு ஒருவருக்கோ பலருக்கோ வாசிக்க இடமளிக்கும் போது அவ்விடம் நூலகம் என்றழைக்கப்படுகிறது. இவ்வகை நூலகங்கள் அரசாலோ கல்வி மற்றும் பொது நிறுவனங்களாலோ குழுக்களாலோ, தனி நபர்களாலோ உருவாக்கப்பட்டு நிறுவகிக்கப்படும். இத்தகு சேவைகள் பெரும்பாலும் கட்டணமின்றியும் ஒரோவழி கட்டணச் சேவையாகவும் வழங்கப்படும்.
நூலகங்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. மெசபடோமியர்கள் என்றழைக்கப்படும் இன்றைய ஈராக்கியர்களே முதன்முதலில் நூலகத்தை உருவாக்கியவர்கள். இவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றை நெருப்பில் சுட்டு அரண்மனைகளிலும் கோவில்களிலும் பாதுகாத்து வைத்திருந்தனர். துறைவாரியாகப் பகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மெசபடோமியர்களின் முயற்சியை நூலகங்களுக்கான முன்னோடி முயற்சி எனலாம். பின்னாளில் எகிப்தியர்கள், பாப்பிரஸ் என்ற தாளில் எழுதத் தொடங்கினர். கி.மு. 300-ஆம் ஆண்டு வாக்கில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பாப்பிரஸ் உருளைகள் கொண்ட கருவூலம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வகைக் கருவூலங்களே தற்போதைய நூலகத்தின் முன்மாதிரி அமைப்பாகவும் கருதப்படுகின்றது. இதற்குப் பிறகு ரோமானியர்கள்தாம் பொது நூலக முறையை முதன் முதலில் ஏற்படுத்தினர். ஜூலியஸ் சீசரின் பங்கு இதில் மிக அதிகமாக இருந்தது. வசதி படைத்தோர் பலரிடமிருந்து உதவி பெற்றுப் பொதுநூலகத்தை அவர் நிறுவினார் என்றும் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் 28 பொது நூலகங்கள் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப் பட்டது என்றும் வரலாறு தெரிவிக்கின்றது. (நூலகம்: தமிழ் விக்கிபீடியா).
அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடு பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தான் நூல்களும் பெருகின நூலகங்களும் பெருகின. தற்போதைய நூலகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் நூற்றைம்பது ஆண்டுக்கால வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ளது. கல்வி மற்றும் மத நிறுவனங்களின் பெருக்கமே நூலகங்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தன. உலகம் முழுமைக்கும் இதுவே பொதுவிதி.
அரசு நூலகங்களைப் பொதுவாக தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று வகைப்படுத்தலாம். இவ்வகை அரசு நூலகங்கள் மட்டுமல்லாமல் பல்கலைக் கழக நூலகங்கள், கல்லூரி, பள்ளி நூலகங்கள், தனியார் நூலகங்கள், வாசகசாலைகள் முதலான பல்வேறு நூலகங்கள் நாட்டில் இயங்குகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவுத்துறைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்திவருகின்ற, அறிவியல் உச்சம் எனக் கருதப்படுகின்ற கணினியும் இணையமும் நூல்கள் மற்றும் நூலகங்களையும் தமதாக்கிக் கொண்டு விட்டன. இதுநாள்வரை அச்சிட்ட புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டி வாசித்துப் பழக்கப்பட்ட நமக்கு கணினியும் இணையமும் மின் நூல்களையும் மின்-நூலகங்களையும்  புதிதாக அறிமுகம் செய்து வைத்துள்ளன.
மின்-நூல்கள் (e-book)
மின்-நூல் என்பது அச்சிடப்பட்ட /அச்சுக்கேற்ற நூலின் மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பாகும். கணினி, பலகைக் கணினி (tablet), திறன்பேசி (smartphone) முதலான கருவிகளின் வாசிக்கத்தக்கதாய் எண்ணிம (Digital) முறையில் உருவாக்கப் பட்டிருக்கும் இவ்வகை மின்-நூல்கள், பொதுவாக மின்-நூல் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை பல்வேறு அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. கோப்பு வடிவம் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு (file format) பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
1.   PDF Book       - மின்-நூல்
2.   HTML Book     - மீயுரை நூல்
3.   Flip Book       - புரட்டும் நூல்
4.   epub           - மென்னூல்
5.   mobi           - கிண்டில் நூல்
பொதுவாக நாம் இணையத்தில் காணும் நூல்கள் PDF (Portable Document Format) வடிவத்தில் இருக்கும். பழைய அச்சு நூல்களை அப்படியே ஸ்கேன் செய்து கணினி, பலகைக் கணினி, மற்றும் திறன்பேசிகளில் பயன்படுத்தும்போது அவை PDF வடிவத்தில் இருக்கும். இவ்வகை மின்-நூல்களை உருவாக்குவது எளிது. நாம் அச்சில் உருவாக்கும் நூல்களில் எழுத்து மற்றும் படங்களை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் சிலவகை மின்-நூல்களில் (epub, mobi) அசையும் படங்கள் மற்றும் ஒளி-ஒலிக் கோப்புகளையும் இணைக்க முடியும். மீயுரை நூல்களில் ஒருபக்கத்திலிருந்து வேறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுரைகளைச் சுட்டியால் தட்டுவதன் மூலம் செல்ல முடியும். புரட்டும் நூல்களில் அச்சு நூல்களைப் புரட்டுவது போன்ற அனுபவத்தைப் பெறமுடியும். மென்னூல்கள் கணினி வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை, இவ்வகை நூல்களில் எழுத்து மற்றும் படங்களைப் பெரிதாக்கவோ சிறியதாக்கவோ முடிவதோடு நூலின் அமைப்பையும் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளமுடியும். கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் சாதனங்களில் பயன்படுத்து வதற்காக என்றே உருவாக்கப்படுபவை. இவ்வாறு மின்-நூல்களின் ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியான சிறப்பம்சங்கள் உண்டு.
மின்-நூலகங்கள் (electronic library)
மின்நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் சேமித்துப் பாதுகாத்து  வைக்கப்பட்டிருக்கும் மின்-நூல்கள், படங்கள், ஆவணங்கள் முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும். இந்நூலகத்தில் சேமித்து, மேலாண்மை செய்து பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் எண்ணிம உள்ளடக்கங்களை (Digital content) கணினி இணையம் மூலமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு இணையவழி சாதனத்தின் மூலமும் அணுகிப் பெறமுடியும். மின்-நூலகம் என்பது ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் (information retrieval system) ஆகும். மின் நூலகம், மெய்நிகர் நூலகம் (virtual library) எண்ணிம நூலகம் (digital  library)  போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்து, மேலாண்மை செய்து, பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு அத் தகவல்களைத் தேவைப்படும் போது தேவையான அளவில் எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் அமைப்புக்கு மின்-நூலகம் என்று பெயர்.
இன்றைக்குக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் வருகையால் ஏற்பட்டுள்ள அறிவுப் புரட்சியின் திறவுகோலாக மின்-நூலகங்கள் இயங்குகின்றன என்றால் என்றால் அது மிகையில்லை. நூல்களைத் தேடி இனி எந்த நூலகங்களுக்கும் பெரும் பொருட்செலவு, காலச்செலவு செய்து அலைந்து திரிந்து சிரமப்படத் தேவையில்லை. நாம் இருந்த இடத்திலிருந்தே கையில் உள்ள திறன்பேசி, பலகைக் கணினி அல்லது பிறவகைக் கணினிகளின் ஊடாக இணையத்தின் வழியாக மின்-நூலகங்கங்களை அணுகி நூல்களை வாசிக்கலாம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அச்சிட்டுக் கொள்ளலாம். மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அறிவியல் மற்றும் சமுதாயவியல் வல்லுநர் களுக்கும் தேவைப்படும் அனைத்து மின்-நூல்களும் இத்தகு மின்-நூலகங்களின் வழியாக இலகுவில் கிட்டும் என்பது கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் சாதனையல்லவா?.
இனி இணைய உலகில் சேவை வழங்கிவரும் தமிழ் மின்-நூலகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...