வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அகிலின் கூடுகள் சிதைந்தபோது -நூல் அறிமுகம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8


அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளர். ஈழத்தின் யாழ் மாவட்டத்தில் சரவணை என்னும் ஊரில் பிறந்தவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவருபவர். திசைமாறிய தென்றல், கண்ணின்மணி நீயெனக்கு என்ற இரண்டு நாவல்களின் வழியாகத் தமிழுலகிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். தமிழ் ஆத்தர்ஸ்.காம் என்ற அவரது இணையதளத்தின் மூலம் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பெரும்பணியைச் செய்துவருபவர். புலம்பெயர் இலக்கியப் படைப்பாளிகளில் அறியப்படவேண்டிய ஆளுமைக்குச் சொந்தக்காரர்.

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் அகிலின் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நூலினை முழுமையாகப் பலமுறை வாசித்தேன். கல்விப் புலத்தில் எங்கள் பட்ட மேற்படிப்பு மைய முதுகலைத் தமிழ் வகுப்பிற்கு ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் என்ற பாடத்திட்டத்தை வகுத்ததோடு அப்பாடத்தை மாணாக்கர்களுக்குப் பயிற்றுவிக்கவும் கிடைத்த வாய்ப்பினால் தொடர்ந்து பல ஈழத்தமிழர் புலம்பெயர் இலக்கியங்களை வாசித்து வருபவன் நான். அந்த வாசிப்பு அனுபவத்தினை முன்னிறுத்தி, அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுதி குறித்து சில சொல்லிட முனைகிறேன்.
இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மௌனியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர் களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகள் எல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதிப் பரவசப் படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த சோகம், அதிர்ச்சி, சிலிர்ப்பு, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். தோழர் அகிலின் சிறுகதைகளும் அதைத்தான் செய்கின்றன.

இச்சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பதினான்கு கதைகளுமே சிற்றிதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானவை. இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற சில கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தேர்ந்த வாசகர்களின் வாசிப்பினைத் தொடர்ந்தே இக்கதைகள் நூல் உருப்பெற்றுள்ளன. 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டுக் கால இடைவெளியில் உருவானவைகளே இக்கதைகள். அந்த வகையில் ஈழத்தமிழர்களின் அண்மைய வாழ்க்கைப் பதிவாக இக்கதைகள் உருவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள அண்ணாநகரில் கடவுள் என்ற ஒருகதை தவிர மற்ற பதின்மூன்று கதைகளுமே ஈழம் மற்றும் புலம்பெயர் கனடாவினைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதைக் களத்தைப் போலவே கதைக்கருவும் ஈழம், கனடா வாழ் தமிழர்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன.

பொதுவாகப் புலம்பெயர் இலக்கியங்களைப் புலம்பல் இலக்கியம் என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில் புலம்பெயர்ந்த படைப்பாளி, புகலிடச் சூழலில் வெளிப்படுத்தும் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளே இத்தகு படைப்புகளில் மிகுதியும் நிறைந்திருக்கும். அகிலின் சிறுகதையைப் பொறுத்தமட்டில் தாய்மண் ஏக்கம் குறித்த பதிவுகளையும் மீறி வெளிப்படுவது மானுடநேயம். அதாவது நாடு, மொழி, இன பேதங்களைக் கடந்த மானுடநேயம். சக மனிதர்களை நேசிப்பது என்பதோடு அகிலின் கதைகள் நின்று விடுவதில்லை, அதனையும் கடந்து பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களையும் நேசிக்கும் விரிந்த தளத்திலானது. வலி, கிறுக்கன், கூடுகள் சிதைந்தபோது முதலான கதைகள் இதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்துபோன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்துக் கண்ணீர்விடும் கிறுக்கனும், கனடா சாலையொன்றில் இணைக்குருவிகளில் ஒன்று விபத்துக்குள்ளாகி இறப்பதையும் இறந்த குருவியின் பிரிவுத்துயர் தாங்காமல் தவிக்கும் துணைக்குருவியின் சோகத்தையும் கண்டு மனம் பரிதவிக்கும் கூடுகள் சிதைந்த போது கதையின் நாயகனும் இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றி, மாடுகளின் அவலத்துக்கு மனம் வெதும்பும் மயூரனும் அகிலின் பிரதிநிதிகளாக நம்முன் மானுடநேயத்தைப் பதித்துச் செல்கிறார்கள்.

ஈழத்தின் போர்ச்சூழலின் பின்னணியில் படைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, பெரிய கல்வீடு, கண்ணீர் அஞ்சலி, கூடுகள் சிதைந்தபோது ஆகிய நான்கு கதைகளும் தமிழக வாசகர்களுக்குப் புதிய காட்சிப் படிமங்களை முன்நிறுத்துகின்றன. வன்னிப்போர்ச் சூழலும் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயரும் அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதலும், யாழ்நகரத் தாக்குதலும் அகிலின் விவரிப்பில் வாசகர்களின் மனதில் ஆழ்ந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்துவது நிஜம். பத்திரிக்கைகளில் செய்தியாக மட்டுமே வாசித்துக் கடந்த நமக்கு இச்சிறுகதைகள் பேரினவாதத்தின் திட்டமிட்ட அழிப்பையும் தமிழர்களின் உயிர், உடைமை இழப்பையும் ஆறாத வடுக்களாக நெஞ்சில் நிலை நிறுத்துகின்றன.

இத்தொகுப்பின் செம்பாதிக் கதைகள் புலம்பெயர்ச் சூழலில் நம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பணம், குடும்பம், உறவு, சாதி, பண்பாடு தொடர்பான சிக்கல்களை முன்நிறுத்துகின்றன. புகலிடம் தேடி மேற்கத்திய நாடுகளில், சென்ற தலைமுறையில் குறிப்பாக 80களில் புலம் பெயர்ந்து சென்றவர்களின் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாட்டுப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்து பெரியவர்களாகிற போது, மூத்த தலைமுறை தம் தாய் மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளைக் காக்கவும் முடியாமல் மீறவும் மனமில்லாமல் படும்பாடு புகலிடத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு சிக்கலான பகுதியாகும். அகில் இத்தகு பண்பாட்டு நெருக்கடிகளைத் தம் சிறுகதைகளில் குறிப்பாக இது இவர்களின் காலம் என்ற சிறுகதையில் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
சாதீய சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றத் துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆதிக்க மனோபாவத்தை விமர்சிக்கும் வெளியில் எல்லாம் பேசலாம், பெரிய கல்வீடு என்ற இரண்டு சிறுகதைகளும் முக்கியமானவை. பெரிய கல்வீடு கதை, உக்கிரமான போர்ச்சூழலிலும் தீண்டாமையைக் கட்டிக் காப்பாற்றத் துடிக்கும் பெரிய சாதியாரையும் வெளியில் எல்லாம் பேசலாம் கதை, மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சூழலிலும் தம் சாதி மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத பிற்போக்காளர்களையும் இனம்காட்டுகின்றது.

குடும்பம் என்ற சமூக அமைப்பு சிதைவடையும் மாற்றக் காலத்தின் அடையாளங்களை முன்நிறுத்துவன அம்மா எங்கே போகிறாய், உறுத்தல் என்கிற இரண்டு கதைகளும். புலம்பெயர் நாடுகளில் தங்கள் வயதான பெற்றோர்களின் உடலுழைப்பு, வருவாய் இரண்டும் பயன்படும் காலம் வரையிலும் அவர்களைத் தம்மோடு வைத்திருந்துவிட்டுப் பின்னர் அவர்களை உதாசீனப்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினரின் உளப்பாங்கை வெளிப்படுத்துவன இக்கதைகள். ஆனால் இந்த இரண்டு கதைகளிலும் பெற்றோர்களைப் புறக்கணிக்கும் இளம் தலைமுறையினரின் குற்ற உணர்ச்சியைக் கோடிட்டுக் காட்டியிருப்பதன் மூலம் அகில் இப்பிரச்சனை குறித்தான தம் விமர்சனத்தை நுட்பமாகப் பதிவுசெய்திருப்பது இந்தக் கதைகளின் பலம் எனலாம்.
இத்தொகுதியின் பதினான்கு கதைகளில் அண்ணாநகரில் கடவுள், ஓர் இதயத்திலே என்கிற இரண்டு கதைகளைத் தவிர மற்ற பன்னிரண்டு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையன. அதிலும் வலி, கூடுகள் சிதைந்தபோது என்ற இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் இனம் காண்கிறேன். அகிலின் படைப்பாக்கச் செய்நேர்த்தியில் உச்சத்தைத் தொட்ட கதைகளாக இவற்றைக் குறிப்பிடமுடியும்.

வலி என்ற சிறுகதை மூன்று அடுக்களில் கதையை நகர்த்துகின்றது.
1.கணவன் மனைவி இடையிலான சைவ, அசைவ உணவுப் பழக்க முரண்.
2.டிரக்கில் அடைக்கப்பட்டு மாமிசத்திற்காகக் கொண்டு செல்லப்படும் பன்றிக் குட்டிகளும் அதனூடாகப் புலம் பெயர்தல் தொடர்பான மயூரனின் கொடிய அனுபவங்களும்
3.யுத்தக் கொடூரங்களுக்கிடையே உயிருக்கு அஞ்சி, புலம்பெயரும் வாழ்க்கையையும் மாமிசத்துக்காகவே விலங்குகள் வளர்க்கப்பட்டு ஒன்று பார்க்க ஒன்றைக் கொல்லும் மனிதக் கொடூரத்தையும் உயிர்வதை என்ற ஒற்றைப்புள்ளியில் இணைத்துக்காணும் மயூரனின் மாறுபட்ட பார்வை.

இந்தக் கதையை ஒரு சைவ உணவுப் பிரச்சாரக் கதையாகப் பார்ப்பதைவிட உயிர்வதை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகின் சகல ஜீவராசிகளும் ஒன்றுதான் என்ற விரிந்த தளத்தில் வாசிக்க வேண்டும். இந்தப் புள்ளியை நோக்கிய கதையின் ஊடாக விரியும் புலப்பெயர்வுச் சிக்கல்கள் கதைக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருகின்றன. நடைநலத்திலும், பாத்திர வார்ப்பிலும், கதையின் கட்டுக்கோப்பிலும் முழுமை பெற்ற வலி குறித்துப் பேசிக் கொண்டே போகலாம்.

கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதை வாசிப்பவர்களின் உறக்கத்தைப் பறிக்கும் கதை. சிங்கள ராணுவத்தின் இனஅழிப்புத் தாக்குதலில் செத்துமடிந்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் ரத்தசாட்சியாய்ப் படைக்கப்பட்ட கதை. வயிற்றுப் பிள்ளைக்காரியான தன் இளம் மனைவியைக் கண்ணெதிரே ராணுவத் தாக்குதலுக்குப் பலிகொடுத்துவிட்டு அந்த உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு உயிருக்கு அஞ்சி ஓடிவந்த கணவனின் மனக்குமுறலாய் வெளிப்படும் கதை. கதையின் கருவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணைக்குருவிகளில் ஒன்று தன் துணைக்குருவி வாகனம் மோதி நசுங்கிக் கிடக்கக்கண்டு செய்வதறியாது உழலும் காட்சி. இரத்தமும் சதையுமாய்க் உடல் சிதைந்து சின்னாபின்னமாய்க் கிடக்கும் குருவியைப் பார்க்கையில் இப்படித்தான் என்ற சசியும்.. என்று அவன் கதறும்போது வாசிப்பவர்களின் நெஞ்சம் சோகத்தில் சிதறும். ஈழப்போரின் பேரழிவு நினைவுகளைக் கனடா மண்ணிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் பின்நோக்கு உத்தியில் படைக்கப்பட்ட கதை. இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் வாசித்தால்தான் கதையின் அருமை புரியும். அகில் அவர்கள் இந்தத் தொகுப்பிற்கு, கூடுகள் சிதைந்தபோது என்ற தலைப்பினை வைத்தது உண்மையில் மிகப்பொருத்தம்.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத் தொகுதியின் சிறப்புகளாக நான் பட்டியலிட விரும்புபவை:
1. தமிழகத்தில் வெளிவரும் வட்டார வழக்குப் புனைகதைகளைப் போல் ஈழத்தமிழின் வட்டார நடை அகிலின் சிறுகதைகளில் மிக இயல்பாகப் பொருந்திப் போகிறது.
2. ஆசிரியரின் கதை சொல்லும் பாங்கும் பங்கேற்பும் கதையின் நம்பகத் தன்மையை மிகுவித்து வாசகர்களைக் கதைக்களங்களோடு ஒன்றிப்போகச் செய்கின்றன.
3. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் யாருமே எதிர்நிலைப் பாத்திரங்கள் இல்லை என்பது ஒரு தனிச்சிறப்பு. பாத்திரப்படைப்பில் அகில் கையாண்டுள்ள இந்த அணுகுமுறை முற்றிலும் புதுமையானது
4. இத்தொகுதி உயிர்க்குலம் தழுவிய மானுடநேயத்தைக் கதைகளின் ஊடாகப் பரப்புரையற்ற தொனியில் முன்நிறுத்துகின்றன.
5. அகிலின் கதைகள் தலைமுறை இடைவெளிகளால் சிதைவுற்றுக் கிடக்கும் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்கின்றன.
6. பாத்திரங்கள் மட்டுமின்றிப் பெரிய கல்வீடு, வானொலிப் பெட்டி, இணைக் குருவிகள் போன்ற சில அஃறிணைப் பொருட்களைக் குறியீடுகளாக்கிக் கதைக்கருவை முழுமைப்படுத்தும் உத்தி, அகிலின் கதைசொல்லலில் கையாளப் படுகின்றது.

அகிலின் கூடுகள் சிதைந்தபோது தொகுதியை வெறுமனே வாசித்துக் கடப்பது என்பது அத்துணை எளிய செயலன்று. ஒவ்வொரு கதையும் வாசகனிடம் ஓர் இனந்தெரியாத சோகத்தை, வலியை ஏற்படுத்துவது நிச்சயம். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணிலும் புலம்பெயர்தலிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் படும் வேதனைகள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாதவை. இத்தொகுதியில் அகிலின் சிறுகதைகள் எவ்விதப் புனைவுகளுமின்றி இரத்தமும் சதையுமாக அவர்களின் வாழ்க்கையை முன்நிறுத்துகின்றன. பேரினவாதம் ஏற்படுத்தும் இனஅழிப்பின் தாக்கங்களைத் தம் சிறுகதைகளின் ஊடாகக் காட்சிப்படுத்தும் இத்தொகுதி ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் வெற்றிபெறுவது முக்கியமில்லை. படைப்புகள் வெற்றிபெற வேண்டும். அந்த வகையில் அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற படைப்பின் வெற்றி, காலத்தின் தேவை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...