வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழ் ஆய்வா? தமிழியல் ஆய்வா?

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

தமிழ் ஆய்வுப்புலம் இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ் மொழி என்பனவற்றை எல்லாம் கடந்து தமிழியல் ஆய்வுப்புலமாகப் பேருரு எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழியல் என்பது தமிழ் இலக்கிய இலக்கண இயல் என்பதானதன்று. அது தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ்- தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் அறிவியல் போன்ற பல துறைகளையும் உள்ளடக்கியது. அண்மைக் காலங்களில் தமிழர் கல்விப் புலங்களில் தமிழியல் என்ற சொல்லாடல் பெருகிவிட்டது.

தொடக்கக் காலங்களில் தமிழியல் என்பது மேற்கத்திய இன மொழி ஆய்வுத்துறையின் ஒரு பகுதியாகத்தான் தோற்றம் பெற்றது. மேற்கத்திய ஆய்வாளர்களின் கீழ்த்திசை ஆய்வு மற்றும் இந்தியவியல் ஆய்வுகளின் பின்புலத்திலேயே தமிழியல் ஆய்வுகள் வளரத் தொடங்கின. அந்த வகையில் காலனித்துவம் சார்ந்த கல்வி மற்றும் ஆய்வாகவே தமிழியல் இருந்துவந்தது.

மேற்கத்திய ஆய்வாளர்களின் இத்தகு தமிழியல் ஆய்வுகளில் தமிழ், தமிழர் முதலான உள்ளடக்கங்கள் பெரிதும் கீழ்நோக்கிய பார்வையிலேயே பதிவுசெய்யப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து தமிழாய்வு மெல்ல மெல்லத் தமிழ்க் கல்வியாளர்களிடம் இடம் பெயர்ந்தபோது மேற்கத்திய தமிழியல் ஆய்வுகளே நம்மவர்களுக்குப் பெரிதும் முன்னுதாரண ஆய்வுகளாக அமைந்தன.

தமிழியல் ஆய்வுகளில் அவர்களின் பதிவுகளே நமக்கு வழிகாட்டக் கூடியனவாக அமைந்தன. தமிழ், தமிழர் குறித்த தங்கள் அடையாளங்களை அவ்வகை ஆய்வுகளிலேயே நம்மவர்கள் கண்டெடுத்தார்கள். பெரும்பாலான தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் அமைந்து விடுவதும் இக்காரணம் பற்றியே.

இன்றைக்குத் தமிழ் ஆய்வாளர்களுக்குத் தமிழியல் குறித்த பார்வையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலனித்துவ ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டு புதிய தமிழியலை நாம் கட்டமைத்துள்ளோம். நமக்கான வரலாற்றை, பண்பாட்டை, கலையை, அறிவியலை மீட்டெடுக்கும் புதிய தமிழியல் ஆய்வுகள் பெருகத் தொடங்கியுள்ளன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

வாசகர்களை ஆற்றில் முக்கி எடுக்கும் சிறுகதை ஆசிரியன்

வாசகர்களை ஆற்றில் முக்கி எடுக்கும் சிறுகதை ஆசிரியன்

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளினியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கண நேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகளெல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதி பரவசப்படுத்துகின்றன.

ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த அதிர்ச்சி, சிலிர்ப்பு, மகிழ்ச்சி, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான்.

வியாழன், 22 அக்டோபர், 2009

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

ஹைக்கூ ஒரு விந்தையான கவிதை வடிவம். உருவத்தில் சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்தெல்லாம் மாறுபட்டது. ஹைக்கூ. ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ வுக்கு தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ வுக்கு எத்தனை செல்லப்பெயர்கள். மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

காதலியின் பேச்சு போல் ஹைக்கூ நம்மிடம் பேசும். காதலி பேசுகிற ஒன்றிரண்டு வார்த்தைகளே ஒருவனுக்குக் காவியமாய் விரிவடையும். சொல்லிய வார்த்தைகளிலிருந்து சொல்லாதவற்றை எல்லாம் கற்பனை செய்துகொள்ளும் பித்துற்ற காதலனைப் போல் நம்மை கணப்பொழுதில் மாற்றிவிடும் ஆற்றல் நல்ல ஹைக்கூ வுக்கு உண்டு. நல்ல ஹைக்கூ.! அதில்தான் கவிஞனின் செய்நேர்த்தியே இருக்கிறது.

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள் தாமே வாழும். உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்? நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.


கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெறும் பிணம். கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. பவணந்தியார் சொல்லும் இலக்கணம் எல்லா கவிதைகளுக்கும் பொதுவானது. ஹைக்கூ.வுக்குச் சிறப்பானது.

சென்ற நூற்றாண்டின் 80 களுக்குப் பிறகுதான் தமிழில் ஹைக்கூ தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 25 ஆண்டுக் கால வரலாறுதான். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் /ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது. என்றாலும் அச்சப்பட நாம் யார்? நமக்கென்ன தகுதி? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

கவிதை செய்யும் கலை.

கவிதை செய்யும் கலை.

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8.

கவிதை… தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய.. இன்றைய கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை.

கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன, கவிதையாக மாட்டேன் போ.. என்று!. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்களாகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.

நல்ல கவிதை எழுதுவது என்பது செய்நேர்த்தி. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்" என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், "உள்ளத்து உள்ளது கவிதை" என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.

சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூ வரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவைகளில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ? ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவ சக்தி. உள்ளார்ந்த ஆற்றல். இந்த ஜீவ சக்தியற்ற படைப்புகள் குறைப் பிரசவங்கள், சவங்கள்.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

சிங்கப்பூரில் அசைவ தாவரம்

சிங்கப்பூரில் அசைவ தாவரம்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

தாவரவகைகளின் வழக்கமான உணவு ஸ்டார்ச். இந்த உணவைத் தாவரங்கள் சூரியஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளைக் கொண்டு தாமே தயாரித்துக்கொள்ளும். எனவே பொதுவில் தாவரங்கள் சைவ உணவுப் பழக்கமுள்ளவை. இவை அனைவருக்கும் தெரிந்த தகவல்கள். ஆனால் தாவரங்களில் அசைவ உணவு உண்ணும் தாவரங்களும் உண்டு. அதில் ஒருவகைதான் நெபந்தஸ். (நெபந்தஸ் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இந்த http://en.wikipedia.org/wiki/Nepenthes விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்க்கவும்)

இது ஒரு விசித்திரமான செடி. நெபந்தஸிலும் பல இனங்களும் பல வகைகளும் உண்டு. இந்த நெபந்தஸ் தாவரத்தின் இலைகளின் ஒருபகுதி குவளைகள் போன்ற வடிவில் அமைந்திருக்கும். அதற்கு ஒரு மூடியும் இருக்கும். இந்தக் குவளை வடிவம் பல வண்ணங்களில் பல டிசைன்களோடும் பலவித வாசனைகளோடும் பூச்சிகளை ஈர்க்கும் விதத்தில் இருக்கும். குவளைகளின் அழகு மற்றும் வாசனைகளில் மயங்கிப் பூச்சிகள் குவளையின் உள்ளே நுழைந்ததும் குவளை மூடிக்கொள்ளும். அப்புறம் அந்தக் குவளைகள் நமது வயிறுபோலச் செயல்பட ஆரம்பிக்கும். செரிமானத்திற்கான சில எனசைம்களைச் சுரந்து பூச்சியை முழுசாக உறிஞ்சி சக்கையை விட்டுடும்.

ஆச்சரியமா இருக்கு இல்லையா? நான் எனது பள்ளி நாட்களில் படித்த தகவல்கள் இவை. அன்று முதல் நெபந்தஸ் வகைச் செடிகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. நான் மிகவும் ரசித்துப் பார்த்துப் படமெடுத்த சிலவகை நெபந்தஸ் குவளைகள் மற்றும் செடிகளை எங்கள் பார்வைக்கும் விருந்தாக்குகிறேன்.இந்தப் படங்கள் சென்ற மாதம் 2009 செப்டம்பர் 14 ஆம் நாள் சிங்கப்பூர் ஆர்கிட் தோட்டத்தில் என்னால் படம்பிடிக்கப்பட்டவை.

வியாழன், 8 அக்டோபர், 2009

ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு

ஆய்வு நோக்கில் குறுந்தொகை - பதிப்பு வரலாறு

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.குறுந்தொகைப் பதிப்பு வரலாறு

சங்க நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சி 19 ஆம் நூற்றாண்டில் 1887 முதற் கொண்டுதான் தொடங்கியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் 1920 ஆம் ஆண்டிற்குள் சங்க இலக்கியப் பாட்டும் தொகையும் அச்சுருப் பெற்றுவிட்டன. குறுந்தொகைச் சுவடிகளைப் பொறுத்த மட்டில் நாட்டின் பல இடங்களிலும் பரவலாகக் கற்றவர்களிடையே இருந்து வந்துள்ளன.

முதல் பதிப்பு:

முதன் முதலாகக் குறுந்தொகையைப் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரத் தலத்தான் சௌரிப் பெருமாள் அரங்கன் என்பவராவர். 1915 இல் அரங்கனார் உரையெழுதி இந்நூலை வெளியிட்டார். நூலின் முன்னுரையில், "இத்தொகை நூல் மூலப்பகுதியை யேனும் நந்தமிழர்களில் எவரும் இதுகாறும் வெளிப்படுத்தாதிருந்தது அவர்கட்கு ஒரு குறையென்றே எண்ணலாம்" என்று குறிப்பிட்டிருப்பதால் இதுவே குறுந்தொகையின் முதல்பதிப்பு என்பதை உணரலாம். தம் ஆசிரியப் பணிகளுக்கிடையே எங்கு எங்கெலாம் சென்று எவ்வெவ் வகையில் சுவடிகளைப் பெற்று ஆராய்ந்தார் என்பதனை அவர்தம் பதிப்பு முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரங்கனார் திணைக் குறிப்பின்றி இருந்த இந்நூற் பாடல்களுக்குத் திணைக் குறிப்புகளை ஆராய்ந்து குறித்துள்ளார். இந்நூலுக்குப் பழைய உரை கிட்டாத நிலையில் தாமே அரிதின் முயன்று உரையும் எழுதிச் சேர்த்துள்ளார்.

"இதனைப் பலகால் முயன்று தமது கூரிய சீரிய நுட்பமதியுடன் எனது ஆருயிர் அன்பர்களாகிய ஸ்ரீமத் பண்டிதர் டி.எஸ். அரங்கசாமி அய்யங்கார் அவர்கள் தாம் இயற்றிய திணை, உள்ளுறை, இறைச்சி, மேற்கோள், இலக்கணக் குறிப்பு முதலியவற்றைக் காட்டிச் சுருங்கச் சொல்லி வியங்க வைத்தலாகிய புத்துரையுடன் ஆராய்ச்சித் திறன் கொண்ட அரும்பெரும் குறிப்புகள் பலவற்றைச் சேர்த்து அழகிய புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள்."
எனக் குறுந்தொகை முதல் பதிப்பின் முகவுரையில் மணக்கால் அய்யம் பேட்டை எஸ். முத்து ரத்திந முதலியார் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை பதிப்பாசிரியர் சௌரி அரங்கனாரின் பேருழைப்பையும் புலமையையும் வெளிப்படுத்திக் காட்டவல்லது. குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்துக் காட்டி, உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றைப் பகுத்து விளக்கிய பெருமை சௌரி அரங்கனாருக்கே உரியது.

1920 இல் கா.நமச்சிவாய முதலியார் குறுந்தொகை மூலத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார் ஆனால் அம்மூலப் பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை.
1930 இல் டி.என்.சேஷாசல ஐயர் தாம் வெளியிட்டுவந்த 'கலாநிலையம்' வார இதழில் திரு இராமரத்தின ஐயர் எழுதிய உரையுடன் குறுந்தொகையை வெளியிட்டுவந்தார் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் தொடங்கி வாராவாரம் வெளிவந்த இவ்வுரை அந்த ஆண்டு டிசம்பர்த் திங்களில் முற்றுப் பெற்றது. இவ்வுரை தனி நூலாக வெளிவரவில்லை. இராம ரத்தின ஐயருக்குப் பின் சாம்பசிவ சர்மா என்பவரும் ஒரு திங்களிதழில் உரை எழுதினார் அதுவும் தனிநூலாக வெளிவரவில்லை. இன்னார் உரை என்று பெயர் சுட்டாமல் இவ்விரு உரைகள் வெளிவந்ததைக் குறிப்பிடுகிறார் உ.வே.சா. தம் குறுந்தொகைப் பதிப்பு முன்னுரையில்.

1933 இல் அருணாசல தேசிகர் குறுந்தொகை மூலம் மாத்திரம் கொண்ட பதிப்பு ஒன்றை வெளியிட்டார். சென்னை பி.என். அச்சகத்தில் அச்சிடப்பட்ட அந்நூல் விலை ரூ.1.00 க்கு விற்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் சுவடிகள் ஒப்பிட்டு மூலபாடம் செம்மை செய்யப் பெற்றுள்ளது.

உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு:

1937 இல் உ.வே.சாமிநாதய்யரின் விளக்கவுரையுடன் கூடிய குறுந்தொகை ஆராய்ச்சிப் பதிப்பு வெளிவந்தது. குறுந்தொகையின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய பெருமை இப்பதிப்பிற்கே உரியது. இப்பதிப்பில் உ.வே.சா அவர்கள் கூற்று, கூற்று விளக்கம், மூலம், பிரதிபேதம், பழைய கருத்து. ஆசிரியர் பெயர், பதவுரை, முடிபு, கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி எனப் பன்னிரண்டு கூறாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கமான உரை எழுதியுள்ளார்கள்.

சங்கநூல் வெளியீட்டில் உ.வே.சா அவர்களால் இறுதியாக வெளியிடப் பெற்றது இக் குறுந்தொகை உரைநூல். தாம்பெற்ற பெரும் பயிற்சியால் சுவடிகளை ஆராய்ந்து ஒப்புமைப் பகுதிகள், மேற்கோளாட்சிகள், என்று இன்னோரன்னவற்றைத் தொகுத்து ஒப்புநோக்கி உரை வரைந்துள்ளமை இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும். நூலின் முகப்பில் விரிவான முகவுரை அமைந்திருப்பதோடு நூலாராய்ச்சி என்னும் ஆய்வுப் பகுதி ஒன்றும் இதில் உள்ளது. பாடினோர், பாடப்பட்டோர் அகரவரிசை, அரும்பதம் முதலியவற்றின் அகராதி முதலியனவும் இதன் சிறப்பு அங்கங்களாகும். பதிப்பு, உரை வரலாற்றில் இக் குறுந்தொகை பதிப்பு ஒரு திருப்புமுனையாகும்.

ஒவ்வொரு செய்யுளுக்குமான உயிர்நிலைப் பொருளைத் தெரிவிக்கும் சிறுகுறிப்புகள் சங்க இலக்கிய ஏடுகளில் இடம்பெறும். இதனைப் பழங்குறிப்பு என்று குறிப்பிடுவர். பழங்குறிப்புகளைப் பாடலை அடுத்துத் தந்து, பாடிய புலவர் பெயரைத் தருவது ஏடுகளில் காணப்படும் முறையாகும். இம்முறை சோ.அருணாசல தேசிகர் பதிப்பு, உ.வே.சா. பதிப்பு ஆகியவற்றில் இடம்பெறுகின்றது.

பிற பதிப்புகள்:

1940 இல் சங்க இலக்கிய மூலங்களைத் தொகுத்துப் புலவர் பெயரடைவு அடிப்படையில் சைவசித்தாந்த சமாஜப் பதிப்பாக வெளியிட்டார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் இடம்பெற்ற இப்பதிப்பு, மூல பாடத்தில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டமைந்த செம்பதிப்பாகும். இப்பதிப்பு உ.வே.சா. பதிப்பிலிருந்து மாறுபட்டு 234 புதிய பாடங்களைக் கொண்டுள்ளது எனக் கணக்கிட்டுள்ளார் மு.சண்முகம் பிள்ளை.

1946 இல் குறுந்தொகை விளக்கம் என்ற பெயரில் கடவுள் வாழ்த்து முதல் 111 ஆம் பாடல் வரையிலான ரா.இராகவய்யங்கார் உரையை அவருடைய மறைவுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 1993 இல் குறுந்தொகை முழுவதற்குமான ரா.இராகவய்யங்கார் உரையை அவருடைய பெயரர் விசயராகவனிடமிருந்து பெற்று அப்பல்கலைக் கழகமே வெளியிட்டது. மூலபாட ஆய்வு, சொற்பொருள் காணல் ஆகிய நிலைகளில் முற்பதிப்புகளை விடவும் சீரிய திறனாய்வுப் பதிப்பாக அது விளங்குகிறது. அதனுள்ளும் 346 முதல் 351 வரையுள்ள பாடல்கள் மற்றும் 353 ஆம் பாடல் ஆகிய ஏழு பாடல்களுக்கு அவரது உரை கிடைக்காமையால் உ.வே.சா. உரை இட்டு நிரப்பப்பட்டுள்ளது.

1955 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பொ.வே. சோமசுந்தரனாரின் குறுந்தொகை உரையை வெளியிட்டது. இப்பதிப்பில் உ.வே.சா. உரையை ஒட்டியே உரை எழுதப்பட்டுள்ளது.

1957 இல் மர்ரே எஸ்.இராஜம் குறுந்தொகை மூலத்தைப் பதிப்பித்தார். யாவரும் எளிதில் படித்துணரும் வகையில் பாடல்களைச் சந்தி பிரித்துத் தந்திருப்பது இதன் சிறப்பாகும். அரங்கனாரைப் பின்பற்றித் திணையைப் பாடல் தலைப்பாகத் தந்துள்ளார். இதன் மறுபதிப்பை 1983 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.

சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய உரையைக் குறுந்தொகைக் காட்சிகள் என்ற பெயரில் 1958 இல் முல்லை முத்தையா வெளியிட்டார், அதன் இரண்டாம் பதிப்பை 1967 இல் பாரதி பதிப்பகம் வெளியிட்டது. 1965 இல் புலியூர் கேசிகனின் எளிய தெளிவுரையைக் கொண்ட குறுந்தொகைப் பதிப்பு வெளிவந்தது. அதனுள் பாட்டின் நறுந்தொடர் தலைப்பாக இடப்பெற்றுள்ளது.

1955 முதல் 1958 வரை சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் வெளிவந்த சாமி. சிதம்பரனாரின் உரையை, அவருடைய துணைவியார் குறுந்தொகைப் பெருஞ்செல்வம் என்ற பெயரில் இலக்கிய நிலையப் பதிப்பாக வெளியிட்டார். இப்பதிப்பில் 41 பாடல்களுக்கான உரை இடம்பெறவில்லை.

1985 இல் மு.சண்முகம் பிள்ளை எழுதிய குறுந்தொகை உரை தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. பாடலின் திணையையும் இன்னார் கூற்று என்பதனையும் இணைத்துப் பாடல்களுக்குத் தலைப்பிட்டிருப்பதும் புதிய பாடம் கொள்ளுமிடத்து அதற்கான காரணங்களை விளக்கியிருப்பதும் பாடவேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணை, குறுந்தொகைத் தொடரடைவு ஆகியவற்றைப் பின்னிணைப்பாகத் தந்திருப்பதும் இப்பதிப்பின் தனிச்சிறப்புகளாகும்.

1986 இல் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு செய்த எளிய தெளிவுரையோடு குறுந்தொகையை லேனா.தமிழ்வாணன் பதிப்பித்துள்ளார். 1999இல் வர்த்தமானன் பதிப்பகம் சங்க இலக்கியங்களை உரையுடன் மலிவுப் பதிப்பாக வெளியிட்டது. அவற்றுள் குறுந்தொகை இரா. பிரேமா அவர்களின் தெளிவுரையோடு பதிப்பிக்கக் பட்டிருந்தது.

முழுமை நிலையில் அமைந்த இப்பதிப்புகளைத் தவிர தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு மு.வ.வின் 'குறுந்தொகை விருந்து', 'குறுந்தொகைச் செல்வம்', 'கொங்குதேர் வாழ்க்கை', சுருளியாண்டிப் பாவலர் எழுதிய 'குறுந்தொகை விருந்து', மு.ரா.பெருமாளின் 'எளிய சொற்களில் இனிய குறுந்தொகை' போன்ற நூல்களும் வெளிவந்துள்ளன.

பதிப்புப் பார்வை:

திணை பற்றிய பாகுபாட்டுக் குறிப்பு அகநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் இடம்பெற்றுள்ளமை போலக் குறுந்தொகை, நற்றிணை நூல்களுக்குப் பழமையானதாக இல்லை. இவ்விரு நூல்களையும் முதன்முதலில் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள்தாம் பாடலின்கண் அமைந்த முதல், கரு, உரிப்பொருள்களைக் கருத்தில் கொண்டு திணைப் பாகுபாட்டுக் குறிப்புகளைத் தந்துள்ளார்கள். உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் இப்பாகுபாட்டைக் கொள்ளாது கூற்றுவகைப் பெயர்களைத் தலைப்பாகத் தந்து பதிப்பித்துள்ளார். உ.வே.சா. கூற்றுவகையில் பாடல்களுக்குத் தலைப்பிட்டுப் பதிப்பித்தமை ஒரு புதிய முயற்சியே. மு.சண்முகம் பிள்ளை அவர்கள் தம் பதிப்பில் |அகப்பாடல்கள் ஐந்திணைக் கூறுபாடு உடையவாதலின் திணைக்குறிப்பும் ஐயரவர்கள் சுட்டுவதுபோலக் கூற்றுவகைக் குறிப்பும் இப்பதிப்பில் தரப்பட்டுள்ளன| என்று தம் முகவுரையில் குறிப்பிடுவார். திணையும் கூற்றும் தலைப்பில் இடம்பெறும் வகையில் அமைந்த மு.சண்முகம் பிள்ளை பதிப்பு மிகுந்த பயனுடையதாய் அமைந்துள்ளது.

தி.சௌரிப்பெருமாள் அரங்கனாரே குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் முதல் உரைகாரரும் ஆவார். குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றில் தனியிடம் பெறத்தக்க செம்பதிப்பு என்று குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய பதிப்பு உ.வே.சாமிநாதய்யரின் பதிப்பே ஆகும். உ.வே.சா. பதிப்பிற்குப் பின்னர் வந்த பதிப்பு மற்றும் உரைகளில் குறிப்பிடத்தக்கன ரா.இராகவய்யங்காரின் பதிப்பும், மு.சண்முகம் பிள்ளை அவர்களின் பதிப்பும் ஆகும். அண்மைக்காலம்வரை தொடர்ந்து வரும் குறுந்தொகைப் பதிப்புகள் எளிமை நோக்கிய முயற்சிகளாக அமைகின்றனவே அன்றிக் குறிப்பிடத்தக்க சிறப்பொன்றுமில்லை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...