இலக்கியத்தில் பொதுவுடைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியத்தில் பொதுவுடைமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 நவம்பர், 2007

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் கண்ணதாசனுக்குத் தனியிடம் உண்டென்றால் அதற்குக் காரணம் கண்ணதாசனின் இந்த வரிகள்தான்,

""தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்''

கவிஞர் கண்ணதாசனின் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள் தர்பார்கள் மாறியிருக்கின்றன ஆனால் கவிஞரின் தத்துவங்கள் மட்டும் அட்சயப் பாத்திரங்களாகச் சுரந்து கொண்டேயிருந்தன. கண்ணதாசன் தொடக்கம் முதல் இறுதிவரை எழுதிய அரசியல் கவிதைகளைக் காண்போர் வளர்ச்சி எனக் கணிப்பதும் உண்டு, வழுக்கல் என முகம் சுளிப்பதும் உண்டு அவர்களுக்குரிய பதிலைக் கவிஞரே கூறிவிடுகிறார்,

நானிடறி வீழ்ந்தஇடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்என நான்கூறி விற்றபொருள்
நல்லபொருள் இல்லை அதிகம் .

இந்த வாக்குமுலத்தைக் கவிஞரே தந்தாலும், தனித்தனியாகத் தன்னைப் பற்றி மதிப்பீடு செய்வதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். தன்னைப் பற்றிய தீர்ப்பு எழுதும் பொறுப்பை நம்மிடம் விடும் கவிஞர் மரணத்திற்குப் பிறகே தீர்பெழுத வேண்டும் என்கிறார்.

இவைசரி என்றால் இயம்புவது என்தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என்வேலை
வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு.

கவிஞரின் காலமும் கவிதையும்:

கவிஞர் கண்ணதாசன் பல்வேறு சூழல்களில் பலவகைப்பட்ட முரண்பட்ட மாறுபட்ட கவிதைகளை எழுதினாலும் அவரின் எழுத்துலகக் காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்

1. 1949 முதல் 1960 வரை திராவிட அரசியல் கவிதைக்காலம்
2. 1960 முதல் 1972 வரை தேசிய அரசியல் கவிதைக்காலம்
3. 1972 முதல் 1981 வரை தத்துவ ஆன்மீக கவிதைக்காலம்.

என்பன அவை.இந்த மூன்று காலங்களிலும் அவர் எழுதிய கவிதைகளில் எதை எழுதினாலும் கருப்படு பொருளை உருப்பட வைத்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கவிஞரின் முற்போக்குச் சிந்தனைகள்

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்று பாரதி கோபப்பட்டதைப் போல மக்கள் பசித்திருக்க தத்துவங்கள் பேசி கனவுலகில் வாழும் பேதையாகக் கவிஞர்கள் ஒருபோதும் இருக்க விரும்ப மாட்டார்கள் எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை என்பதே கண்ணதாசனின் கோட்பாடாக இருக்கையில் பசியைக் கண்டு கொதிக்கிறார் கவிஞர்,

இப்படியே பசி நீளுமென்றால்
இதுஎன்ன சுதந்திர பூமி-ஏன்
இத்தனை ஆயிரம் சாமி

திருவள்ளுவருக்கு இருந்த கோபம், பாரதிக்கு வந்த கோபம் கண்ணதாசனுக்கும் வருகிறது. வயிற்றுக்குச் சோறிட வழியில்லை என்றால் ஏன் இத்தனைக் கடவுள்கள்? கடவுள்களால் மக்களுக்கு என்ன பயன்? என்றெல்லாம் சிந்திக்கின்றார், அதுமட்டுமின்றி பெற்ற சுதந்திரத்தால் வந்த பயன் என்ன? இதற்கா சுதந்திரம் என்றெல்லாம் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயகத்தால் பணநாயகம்தான் செழிக்கிறது என்றால் என்ன செய்வது? கவிஞரே ஒரு வழியும் கூறுகிறார், அது என்ன வழி?,

'நாடு முன்னேற நலங்கள் பெருக
வேண்டுமென்றால் விதியொன்று செய்வோம்
ஜனநாயகத்தைச் சற்றே நிறுத்திச்
சவுக்கை எடுப்போம் தரித்திரம் நீங்கும்'

ஓட்டுப் போட்டவனுக்குப் பயன்படாத ஜனநாயகத்தை நிறுத்துவதும் கையில் ஆயுதம் எடுப்பதும்தான் அந்த வழி. ஏனென்றால் ஜனநாயகம் ஜனங்களின் நாயகம் அல்ல அது

முட்டாள்கள் பலர்கூடி முடிவுசெய் தாலதே
முழுதான ஜனநாயகம்.

இதுதான் ஜனநாயகம் பற்றிய கவிஞரின் மதிப்பீடு. ஓடப்பனை உயர்த்த, ஒப்பப்பரை உருவாக்க வேறு வழியில்லை என்கிறார். கவிஞரின் கோபம் எல்லைமீறிப் பொகிறது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காத போது இந்த நாடு இருந்தென்ன அழிந்தென்ன என்று நினைக்கிறார்

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்
இல்லையெனில் இந்நாடு அழியவேண்டும்

ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் இந்த உலகத்தையே அழித்திடலாம் என்ற பாரதியின் கோபத்திற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல கண்ணதாசனின் கோபம்.

தனியுடைமை நீங்கிப் பொதுவுடைமை:

சமத்துவம் ஓங்க தரித்திரம் நீங்க தனியுடைமை மாறவேண்டும் எவருக்கும் இல்லை என்ற நிலையே இல்லாத நாடு வேண்டும் எல்லாரும் எல்லாமும் பெறும் பொதுவுடைமை பூக்க வேண்டும் இதுவே கவிஞரின் விருப்பம்,

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை-நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.

இது எளிதான காரியம் இல்லையே, சொத்துரிமை இருக்கும் வரை சுரண்டல் இருப்பது இயல்புதானே அழிவைத் தடுக்க முடியுமா? முடியும் என்கிறார்

தொழிலைப் பொதுவாக்கிச்
சொத்துரிமை நீக்கிவிட்டால்
அழிவைத் தடுப்பதற்கு
அடிப்படைபோ லாகிவிடும்

தொழிலைப் பொதுவாக்குவதும் சொத்துரிமையை நீக்குவதும்தான் அடிப்படையான பணி என்கிறார் கவிஞர்.உட்கார்ந்து உண்டு கொழுக்கும் ஒருகூட்டம், உழைத்து உழைத்து ஒடாய்ப்போய் ஒட்டிய வயிறுடன் பெருங்கூட்டம் இந்நிலை மாற, வர்க்கங்கள் வீழ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஒரே வழி, இப்போராட்டத்தில் மரணமே பரிசு என்றாலும் அஞ்சிடாமல்இந்த சமுதாயம் துணிந்துவிடும்

இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது
ஏழைக்கு வாழ்வு எல்லோர்க்கும் ஒருவீடு
மாறிவரும் காலம் மாறத்தான் வேண்டும்-இதில்
சாவுவரும் என்றாலும் சமுதாயம் துணிந்துவரும்

என்பது கவிஞரின் நம்பிக்கை.

போராட வாருங்கள் தோழர்களே:

தனியுடைமைக் கொடுமையைச் சாய்க்கப் போராடுவதின் அவசியத்தையும் எப்படியெல்லாம் போராடவேண்டும் என்பதையும் பல பாடல்களில் பலபடியாகப் பாடுகிறார் கவிஞர்,

நெஞ்சை நிமிர்த்துங்கன் தோழர்களே-இனி
நேருக்கு நேர்நின்று பார்ப்போம்-சம
நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்,

என்று பாடுவதோடு மட்டுமின்றி பஞ்சையாய்ப் பராரியாய் வாழும் உழைக்கும் மக்கள் இனித் துஞ்சி இரந்துண்ணும் வாழ்க்கையை விட்டுத் தீமையை, அடக்குமுறையை, ஒடுக்கு முறையை வேரோடு சாய்க்கப் போராடவேண்டும் என்கிறார். மேலும்,

மூடிய கைகளை மேலுயர்த்து உந்தன்
மூச்சில் கனல்விட்டுக் காட்டு-உந்தன்
பேச்சில் புரட்சியை ஊட்டு-பல
கோடிப் பராரிகள் ஒன்றுபட்டாலது
கோட்டை தகர்ந்திடும் கூட்டு-அதைக்
கூட்டட்டும் நாட்டிலென் பாட்டு

என்றும் பாடுவதன் மூலம் ஒற்றுமை-முழக்கம்-போராட்டம் எனப் படிநிலைகளாகப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார். ஒவ்வொரு கவிஞனும் தம்பணி எது என்பதை உணர வேண்டும் அதை மக்களுக்கும் உணர்த்த வேண்டும் இதுவே கவிஞனுக்குரிய மிகப்பெரிய கடமையாகும். தோழர்களை ஒன்றிணைத்துத் கோட்டை தகர்த்திடும் கூட்டை உருவாக்குவதே என்பாட்டின் பணி என்று நெஞ்சுயர்த்திப் பாடுகிறார் கவிஞர்.

எப்படிப் புரட்சிவரும்?

அசையாத மாளிகையில் சொகுசாக வாழ்ந்து வரும் சீமான்களுக்கு வேட்டு வைக்கும் புரட்சி எப்படி வரும்? யாரால் வரும்? இருவேறு குடும்பங்கள்- ஒன்று செல்வர்கள் இல்லம், மற்றொன்று ஏழ்மையின் குடிசை இரண்டுக்கும் என்ன வேறுபாடு,

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால்கஞ்சி

ஏழைக்குடிசையிலோ,

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி,

இந்த வேறுபாடுகள் புரிந்தால்தான், கஞ்சி குடிப்பதற்கில்லாத காரணங்கள் புரிந்தால்தான,; பாமரர்கள் சேர்ந்தெழுவர் இதைஉணர்ந்திருந்தார் கவிஞர் கண்ணதாசன், எனவேதான் பசியால் புரட்சிவரும் என்கிறார்.

பசியால் புரட்சிவரும்
பாமரர்கள் சேர்ந்தெழுந்தால்
அசையாத மாளிகையும்
ஆடிப் பொடிபடுமாம்

அடிவயிறு பற்றிவிட்டால்
அடுத்து நடப்பதென்ன
கொடிய பசி வந்துவிட்டால்
குமுறும் எரிமலைதான்

கவிஞரின் தீர்க்கதரிசனம் இது.

சோவியத்நாடு துயரிலா நாடு:

திராவிட இயக்கங்கள், தேசிய இயக்கம் இவைகளில் மூழ்கிய கவிஞருக்கு இந்த ஞானமெல்லாம் எங்கிருந்து வந்தது? இயல்பாகவே சமூக அக்கறை உடைய கவிஞருக்குச் சோவியத் நாட்டுச் சுற்றுப்பயணமே சமூகச்சிக்கல்கள் குறித்த மிகப்பெரிய தெளிவைத் தந்தது எனலாம். எனவேதான் பொருளாதாரத் துறையிலேயும் சமுதாயத் துறையிலேயும் நமது நாட்டில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தி அவற்றைச் சீராக்கி பொதுவுடைமை உலகு படைக்கும் வழிகளைச் சிந்திக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாகவே சோவியத் நாட்டைப் பற்றியும், கூட்டுப்பண்ணைகளின் மேன்மைகள் பற்றியும் பலபடப் புகழ்ந்து எழுதத் தொடங்கினார்.திருவள்ளுவர் நாடு பற்றிக்கூறிய வரையறைகள் அனைத்தையும் தம்மகத்தே பொருத்தமுறப் பொருத்திக் கொண்ட நாடு சோவியத் நாடுதான் என்பது கவிஞரின் திட்டவட்டமான முடிவு

நாடெனில் யாதென நாட்டிய வள்ளுவன்
பாடல் கூறிய பக்குவத்தே ஓர்
நாடு உண்டாயின் நாமறிந்தவரை
சோவியத் நாடே துயரில்லா நாடு

உறுபசியும் ஓவாப்பிணியும் நீங்கி,
தள்ளா விளையுளும் தக்காரும் பெற்று,
நாடா வளத்தனவாய்

வள்ளுவன் வாக்கிற்கு முற்றும் பொருந்திய நாடாகச் சோவியத்தைக் காண்கிறார் கவிஞர். அதுமட்டுமா? சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகளில் நெஞ்சைப் பறிகொடுக்கிறார் நம்கவிஞர்

பாடுபடும் உழவருக்குப்
பணமும் உண்டு உணவுமுண்டு
நாடுபெறும் லாபத்திலே
பயனும் உண்டு-எல்லாம்
நமது என்று எண்ணுகின்ற
நினைவும் உண்டு.

அதனால் கூட்டுப் பண்ணை-நாடு பயனடையப் பயிர் வளர்த்துக் கூட்டும் பண்ணை என்று கூட்டுப் பண்ணைகளின் மேன்மைகளைப் புகழ்வதோடு இத்தகு நன்மைகளுக்கெல்லாம் காரணமான சோஷலிசம் கொண்டுவந்தால் நமது நாட்டிலும் சோற்றுக்கென்று சண்டைபோடும் உயிர்கள் தங்கும் என்று தன் அவாவையும் வெளிப்படுத்துகிறார்.

நூறுவேலி மிராசுதாரும்
நோய்பிடித்த உழவர்மாரும்
சோறுக்கென்று சண்டைபோடும்
உலகம் எங்கும்-அந்த
சோஷலிசம் கொண்டு வந்தால்
உயிர்கள் தங்கும்.

இப்படிச் சோஷலிச சோவியத் புகழ்பாடும் கவிஞரின் மனதில் நீங்கா இடம் பிடித்த அரசியல் தத்துவம் சமதருமமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சத்தியத்தின் எச்சரிக்கை
சமதருமம் நாடுங்கள்
சத்தியத்தின் எச்சரிக்கை
சரித்திரத்தை மாற்றுங்கள்

என்று சரித்திரத்தையே மாற்றத் துடிக்கும் அவா கவிஞருடையது.

மாசேதுங்கை மறக்காத கவிஞர்:

இந்திய சீன எல்லைப்போரின் போது சீனாவை இடித்துரைக்கத் தவறாத கவிஞர் கண்ணதாசன் சீனாவை எப்போதும் பகைநாடாகவே பார்க்கும் இயல்புடையவர். ஆனால் பொதுவுடைமைப் புரட்சியாளர் மாவோ என்றழைக்கப்படும் மாசேதுங்கைப் பாராட்ட அவர் மறக்கவில்லை.

கண்டு சுதந்திரத்தைக் கவலையுடன் மாசேதுங்
பெற்ற மறுஆண்டில் பெரும்புகழைத் தான்சேர்த்தான்
தன்னாட்டுத் தேவைகளைத் தானே நிறைவுசெயும்
பொன்னாடாகப் புகழ்பெற்றான் இன்றங்கே
ஏழை அடிமையிலை இரப்போர் எவருமிலை

என்று ஏழ்மையை, அடிமைத்தனத்தை, இல்லாமையை ஒழித்த அவரின் புரட்சிக்காகவும் தன்னாட்டைப் பொன்னாடாக மாற்றிய புகழுக்காகவும் வாயாரப் புகழ்கிறார். மேலும்

துப்பாக்கி யாலேதான்
துரைத்தனங்கள் சேரும் எனச்
செப்பியவன் அந்தச்
சிவப்புநிலா மாசேதுங்

சிவப்புநிலா என்று பட்டம் சூட்டி மகிழும் அளவிற்கு அவரது சித்தாந்தங்களை மதிக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

தொகுப்புரை
1. சாமான்யர்களின் பசியைக் கண்டு கோபம் கொண்டு கொதித்தெழுந்தவர் கண்ணதாசன்.
2. நாட்டு முன்னேற்றத்திற்கு ஜனநாயகம் பயன்படாது என்றும் தனியுடைமை நீக்கிப் பொதுவுடைமை ஏற்பதே பொருத்தம் என்றும் கூறுகின்றார் கண்ணதாசன்.
3. பொதுவுடைமை காணும் புரட்சிக்கு என்பாட்டுப் பயன்பட வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.
4. பசியால் புரட்சி வரும் என்று துணிகிறார் கண்ணதாசன்.
5. சோவியத் நாடே திருவள்ளுவர் சொன்ன பொன்னாடு என்கிறார் கண்ணதாசன்.
6. மாசேதுங்கைச் சிவப்புநிலா என்று புகழ்கிறார் கண்ணதாசன்.

மேற்கூறிய கருத்துக்களால் மக்கள் நிறைவான வாழ்வு வாழப் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதே நம் முதண்மையான பணி முழுமையான பணி என்று கவிஞர் கருதுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

புதன், 12 செப்டம்பர், 2007

உலகம் உண்ண உண்… புதிய பார்வையில் பாவேந்தர்

உலகம் உண்ண உண்…

முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழுகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன. தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர் என்று தொடங்கி திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து விரிந்து செல்லும் இயல்புடையன.

தமிழ், தமிழர், திராவிடம் எனத் தமிழ்த் தேசியம் பாடும் பாவேந்தரின் கவிதைகள் இந்தியையும் வடக்கையும் ஆரியத்தையும் மூர்க்கமாகச் சாடும் இயல்வுடையன என்றாலும் அவர் குறுகிய கண்ணோட்டம் உடையவரல்லர். உலகப் பொது நோக்கமே பாவேந்தரின் உயர்ந்த குறிக்கோள். தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன்... என்று சாடும் கவிஞர், தூயஉள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம் தொல்லுலக மக்கள் எலாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் என்று விசாலப் பார்வையால் மக்களை விழுங்குகின்றார்.

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!

என்று முழங்கும் பாவேந்தருக்கு, உடைமை மக்களுக்குப் பொது என்பதும் புவியைப் பொதுவில் நடத்த வேண்டும் என்பதும்தான் கனவு, இலட்சியம் எல்லாமே.

உலகு தழுவிய மானிடத்தின் மேன்மையே பாவேந்தர் காண விரும்பிய முன்னேற்றம். அதுவும் சமத்துவத்தின் உச்சியில் நிற்கும் மானிடமே ஆற்றல் வாய்ந்தது என்பது அவர்கொள்கை, ஷமானிடம் என்பது குன்று- தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று, மானிடருக்கு இனிதாக.. வாழ்வின் வல்லமை மானிடத் தன்மை என்று தேர் இது கவிஞரின் வாக்கு. மானிடத்தை நேசிக்கும் கவிஞன், மனிதனுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பானா?

பாவேந்தரைப் பொருத்தமட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலமே மனித சமூகத்தின் நலம். தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் எங்கே வாழும் மனிதனாக இருந்தாலும் எளியோர் துன்புறுதலைக் காணச் சகிக்காதவர் பாவேந்தர். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? என்று கோபப்படும் கவிஞர், கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே என்று அதற்குத் தீர்வு காணவும் புறப்படுகிறார்.

பாவேந்தரின் கவிதை நெடுகிலும் உழைக்கும் மக்களின் அவலம் விரிவாகப் பேசப்படுகிறது. தொழிலாளர், விவசாயி போன்ற உடலுழைப்புப் பணியாளர்களின் துயரமே பாவேந்தரை பெரிதும் வாட்டுகிறது. உழைப்பரின் மேன்மைகளைப் புகழ்ந்தும் உழைக்காதவர்களின் கீழ்மையைச் சாடியும் தம் கவிதைகளைப் படைக்கிறார். நடவுசெய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பிலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுளின் ஏற்பாடு என்றால் அந்தக் கடவுளையே விட்டொழிக்க வேண்டும் என்கிறார். மண்மீதில் உழைப்போர் எல்லாம் வறியராக இருப்பதும் உரிமை கேட்கும் மக்கள் துன்புறுத்தப்படுவதையும் கண்டு வேதனைகொள்கிறார்.

சித்திரச் சோலைகளே, உமைத்திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்றும் அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி அழகியதாய் வசதியதாய் செய்து தந்தவர்கள் உழைப்பாளர்களே என்றெல்லாம் உழைப்பின் மேன்மையை, உழைப்பாளரின் மேன்மையை பலபடப் புகழ்ந்து பேசுகின்றார். மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல்,

புதியதோர் உலகம் செய்வோம்-
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்

என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில்

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவர்

என்று வர்க்கப் போராட்டத்தின் தேவையை வெளிப்படையாகவே வலியுறுத்துகின்றார். சமத்துவ சமுதாயம் காண விழையும், வழிகாட்டும் பாடல்கள் பலவற்றைப் பாவேந்தர் பாடியிருந்தாலும் பாவேந்தர் தம்மை ஓர் பொதுவுடைமை இயக்கக் கவிஞராக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினாரா? என்பது ஒரு சிக்கலான கேள்வி.

பாரதியின் அறிமுகத்திற்கு முன்பே பாவேந்தர் கவிதைகள் எழுதும் பயிற்சி உடையவராயிருந்தார். ஆனால் அந்தக் கவிதைகள் எல்லாம் தேய்ந்த பாட்டையில் செல்லும் சராசரிக் கவிதைகளாகத்தான் இருந்தன. பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார். என்று பாவேந்தரே பாரதியால் தாம்பெற்ற புதுமுறை புதுநடை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

பாரதியின் நட்புக்குப் பின்னர் பாரதிதாசன் ஆன கனக.சுப்புரத்தினம் தொடக்கக் காலங்களில் தேச விடுதலைக்குக் காளியை வேண்டுவது, பாரத தேசத்தை வாழ்த்திப் பாடுவது, காந்தி, லஜபதிராயைப் பகழ்ந்து பாடுவது எனப் பாரதியின் சிந்தனைத் தடத்தை ஒட்டியே தம் கவிதைகளை யாத்துக் கொண்டிருந்தார். பாரதி மறைவுக்குப் பின்னர்- 1930 க்குப் பிறகே பாவேந்தர் பாடல்கள் புதிய பரிமாணங்களைப் பெற்றன. தமிழக அரசியலில் சிங்கார வேலரும் தந்தைப் பெரியாரும் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வு நெருப்பு பாவேந்தரிடமும் பற்றிக்கொண்டது. இந்தக் காலக் கட்டங்களில் பாரதிதாசன் படைத்த படைப்புக்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களும் பின்னிப் பிணைந்து காணப்பட்டன. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி இதற்குத் தக்கதோர் சான்று.

மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதுவையின் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய போராட்டமும், அதன் உச்சகட்டமாக 1936 ஜூலை 30 அன்று நடந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள்- பிரஞ்சு ராணுவம் இடையிலான வீரப்போரும், அன்றைய துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் பலியானதுமான புதுவையின் முதல் சுதந்திரப் போரை,

பார்க்கப் பரிதாபமே மில்லில் பாடுபட்டோர் சேதமே- உளம் 
வேர்க்கும் அநியாயமே மக்கள் வீணில் மாண்ட கோரமே

என்று தொடங்கும் நீண்ட கவிதையாகப் பாவேந்தர் உள்ளம் உருக வடித்துத் தந்துள்ளார்கள். 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த சுயமரியாதை இயக்கம் காண விரும்பும் சமுதாயமாக அவர் சமத்துவச் சமுதாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை.

பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அப்படிப்பட்ட திட்டம் எதனையும் முன்மொழியவேயில்லை. சாதி வேறுபாடுகளுக்குக் காரணமாயிருந்த ஆரிய பௌராணிகக் கருத்துக்களே வர்க்க வேறுபாடுகளுக்கும் காரணம் என்ற தொனியிலேயே பாவேந்தர் வர்க்கமுரண் பற்றி சிக்கல்களை வெளிப்படுத்தினார்.

1960 வரை பாவேந்தர், திராவிடத் திருநாடு அமையும் என்ற கனவிலேயே எல்லா இயக்க உள்முரண்களோடும் தம் பாட்டுப்பயணத்தைத் தொடர்ந்தார். இடையில் புதுவையின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு நடந்தது. கம்ய+னிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த மக்கள் முன்னணியின் சார்பில் பாரதிதாசன் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மக்கள் தலைவர் சுப்பையாவும் பாரதிதாசனும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் பணியாற்றினர். மக்கள் முன்னணி எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய அந்தச் சபையில் வ.சுப்பையா எதிர்க்கட்சித் தலைவர், பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர். புதுவையில் ஓர் பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும், அதற்கு பாரதியார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற மக்கள் முன்னணியின் தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். சபை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

தனித் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையும் இந்தி எதிர்ப்பும் பாவேந்தரின் பாடல்களில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்திலும் பாவேந்தர் உலக நடப்புகளை ஊன்றிப் பார்த்து அவ்வப்போது தம் எதிர்வினைகளைப் பாடல்களில் பதிவுசெய்யத் தவறியதில்லை. ரஷ்ய நாடு வான்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டு நிலவுக்கு ராக்கட் ஏவத் திட்டமிடுவதை, ஒரு ரஷ்யத் தொழிலாளி விமர்சிப்பதாகக் கவிதை எழுதினார். ஏவுகணை ஒன்றை இயற்றுதற்குச் செலவிடும் பெருந்தொகை இருந்தால் உலவும் ஏழை மக்களுக்கு உதவுமே இது அத்தொழிலாளியின் குமுறல்.

வியட்நாம் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் போது , வியட்நாம் மக்களின் வீரம் அமெரிக்காவின் இடுப்பை ஒடித்துப் போடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார் நம் பாவேந்தர். அமெரிக்காவைச் சாடும் அதே வரிகளில் இந்திய எல்லையில் கால் நீட்ட நினைக்கும் சீனாவுக்கும் ஒரு குட்டு வைக்கிறார்.குமுறுகிறார், கோணல் மன அமெரிக்காவே!குடியரசின் பேராலே அடிமை கொள்ளல்இமயத்தின் எல்லையிலே காலை நீட்டும்சீனரைப்போல் இழிவெதற்கு? படைவிலக்கு.. .. ..ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம், வியத்நாம் வீரம்இடுப்பொடித்துப் போடும் உனை எச்சரிக்கை.இபபடி, உலகு தழுவிய பொது நோக்கு என்பதைப் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல். சரியான விமர்சனங்களையும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்து மானிட சமுத்திரம் நான் என்பதை நிறுவுகிறார்.

1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம் மணிமேகலைக் காப்பியங்களைக் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற பெயரிலும் மணிமேகலை வெண்பா என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார்.

இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும்கட்சித் தலைவர் என்று கழறும் ஆட்கள் தாமும் அறங்கொல் பவரே!தமிழ கத்தின் தலைவர் என்பர்தமிழைச் சாக டிக்கப் பின்னிடார்,தமிழ்க்கொலை பார்க்கத் தாளம் போடுவர்பொழுது விடிந்து போழுது போனால்காசு பறிப்பதே கடனாய்க் கொள்வர்!என்று தாம் அரசியலில் இருந்து விலகுவதற்கான காரணத்தையும் கசப்போடு வெளிப்படுத்துகின்றார் பாவேந்தர். பாவேந்தர் குற்றம் சாட்டும் கட்சிகள் எவை? தலைவர்கள் எவர்? என்பனவெல்லாம் வரலாறு அறியும்.

இத்தகு சூழலில் பாவேந்தரும், தி.மு.க.வும் வேறு வேறு காரணங்களுக்காக திராவிடத் தனிநாடு முழக்கத்தைக் கைவிடுகின்றனர். 1962 மே மாதம் பம்பாயில் நடைபெற்ற பன்மொழிக் கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட பாவேந்தர் இந்திய தேசியத்தை ஏற்றுக் கவிதை வழங்குகின்றார். இமயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரிவாழ்வான் மருந்து கொண்டோடினான் என்ற அடிகள் இக்கவியரங்கில் ஒலித்தவைதாம். 1963 ஆம் ஆண்டு நவம்பர் 3 இல் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு திராவிட நாடு தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவிக்கின்றது.

பாவேந்தரைப் பொருத்தவரையில் 1960 முதல் 64 வரையிலான (பாவேந்தரின் கடைசி காலங்கள்) ஆண்டுகள் பலவகையிலும் அவருக்கு நெருக்கடியான காலம். பாவேந்தரின் திரைப்பட முயற்சியின் தோல்வி, திராவிட இயக்கங்களுடனான மோதல் போக்கு, பொதுவுடைமை இயக்கத்தினருடனான பிணக்கு என பாவேந்தர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். இந்தச் சூழலில் பாவேந்தர் எழுதிய பொதுவுடைமைக்குப் பகைவனா? நான், என்ற கவிதை அதிக முக்கியத்துவம் பெருகின்றது.பொது வுடைமைக்குப் பகைவனா? நான்?பொதுவுடைமைக் காரர் எனக்குப் பகைவரா?இல்லவே இல்லை, இரண்டும் சரியில்லை.

பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத் தீ
என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்துகொழுந்துவிட்
டெரிந்து தொழிலாள ரிடத்தும்உழைப்பாள ரிடத்தும்
உணர்வில் உணர்ச்சியில்மலர்ந்து
படர்ந்ததை மறுப்பவர் யாரோ?
சிங்கார வேலர் முதல் சீவா வரையில்
அங்காந் திடுவர் என் பாட்டினுக்கே
சுப்பையாவின் தொடர்பும் தோழமையும்
எஸ்.ஆர்.சுப்பிர மணியம் இணைப்பும் பிணைப்பும்
எப்பொழுதும் எனை லெனினால் ஸ்டாலினால்
புதுமை கொணர்ந்த பொதுமை நாட்டை
மதுத் தமிழாலே மடுக்கும் என்பாட்டு

பொதுவுடைமைக்கும் தமக்கும் உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் இந்தக் கவிதை ஒரு வரலாற்று ஆவணம். இந்தப் பாடலின் பின்பகுதியில் பொதுவுடைமை இயக்கத்தினர் மீது சில பல குற்றச்சாட்டுகளை பாவேந்தர் அள்ளி வீசுகிறார். கவிஞரின் கோபக்கனலில் வந்து வீழ்ந்த வார்த்தைகள் அவை. சிங்கார வேலர், ஜீவா, சுப்பையா இவர்கள் மீது பாவேந்தர் எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருந்தார் என்பதையும், என் இயக்கம் பொதுவுடைமை இயக்கம்தான் என்பதை எத்துணை அழுத்தமானக் கவிஞர் பதிவுசெய்கிறார் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

1963 ஜனவரி 18 ஜீவா மறைவுக்கு பாவேந்தர் வடித்த கவிதையே அவரின் கடைசிக் கவிதை என்ற ஜீவபாரதி அவர்களின் கூற்றும் இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது. தம் உலகு தழுவிய பார்வையால் மானிடத்தின் மகத்துவத்தைப் பாடி சமத்துவ சமுதாயம் காணத் துடித்த பாவேந்தர் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காத ஒரே தத்துவம் மார்க்சீயமே என்பதில் ஏதும் ஐயமில்லை.

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...