ஞாயிறு, 4 நவம்பர், 2007

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் முற்போக்குச் சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் கண்ணதாசனுக்குத் தனியிடம் உண்டென்றால் அதற்குக் காரணம் கண்ணதாசனின் இந்த வரிகள்தான்,

""தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்''

கவிஞர் கண்ணதாசனின் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள் தர்பார்கள் மாறியிருக்கின்றன ஆனால் கவிஞரின் தத்துவங்கள் மட்டும் அட்சயப் பாத்திரங்களாகச் சுரந்து கொண்டேயிருந்தன. கண்ணதாசன் தொடக்கம் முதல் இறுதிவரை எழுதிய அரசியல் கவிதைகளைக் காண்போர் வளர்ச்சி எனக் கணிப்பதும் உண்டு, வழுக்கல் என முகம் சுளிப்பதும் உண்டு அவர்களுக்குரிய பதிலைக் கவிஞரே கூறிவிடுகிறார்,

நானிடறி வீழ்ந்தஇடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்என நான்கூறி விற்றபொருள்
நல்லபொருள் இல்லை அதிகம் .

இந்த வாக்குமுலத்தைக் கவிஞரே தந்தாலும், தனித்தனியாகத் தன்னைப் பற்றி மதிப்பீடு செய்வதைத் தவிர்க்கச் சொல்லுகிறார். தன்னைப் பற்றிய தீர்ப்பு எழுதும் பொறுப்பை நம்மிடம் விடும் கவிஞர் மரணத்திற்குப் பிறகே தீர்பெழுத வேண்டும் என்கிறார்.

இவைசரி என்றால் இயம்புவது என்தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என்வேலை
வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு.

கவிஞரின் காலமும் கவிதையும்:

கவிஞர் கண்ணதாசன் பல்வேறு சூழல்களில் பலவகைப்பட்ட முரண்பட்ட மாறுபட்ட கவிதைகளை எழுதினாலும் அவரின் எழுத்துலகக் காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்

1. 1949 முதல் 1960 வரை திராவிட அரசியல் கவிதைக்காலம்
2. 1960 முதல் 1972 வரை தேசிய அரசியல் கவிதைக்காலம்
3. 1972 முதல் 1981 வரை தத்துவ ஆன்மீக கவிதைக்காலம்.

என்பன அவை.இந்த மூன்று காலங்களிலும் அவர் எழுதிய கவிதைகளில் எதை எழுதினாலும் கருப்படு பொருளை உருப்பட வைத்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கவிஞரின் முற்போக்குச் சிந்தனைகள்

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்று பாரதி கோபப்பட்டதைப் போல மக்கள் பசித்திருக்க தத்துவங்கள் பேசி கனவுலகில் வாழும் பேதையாகக் கவிஞர்கள் ஒருபோதும் இருக்க விரும்ப மாட்டார்கள் எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை என்பதே கண்ணதாசனின் கோட்பாடாக இருக்கையில் பசியைக் கண்டு கொதிக்கிறார் கவிஞர்,

இப்படியே பசி நீளுமென்றால்
இதுஎன்ன சுதந்திர பூமி-ஏன்
இத்தனை ஆயிரம் சாமி

திருவள்ளுவருக்கு இருந்த கோபம், பாரதிக்கு வந்த கோபம் கண்ணதாசனுக்கும் வருகிறது. வயிற்றுக்குச் சோறிட வழியில்லை என்றால் ஏன் இத்தனைக் கடவுள்கள்? கடவுள்களால் மக்களுக்கு என்ன பயன்? என்றெல்லாம் சிந்திக்கின்றார், அதுமட்டுமின்றி பெற்ற சுதந்திரத்தால் வந்த பயன் என்ன? இதற்கா சுதந்திரம் என்றெல்லாம் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயகத்தால் பணநாயகம்தான் செழிக்கிறது என்றால் என்ன செய்வது? கவிஞரே ஒரு வழியும் கூறுகிறார், அது என்ன வழி?,

'நாடு முன்னேற நலங்கள் பெருக
வேண்டுமென்றால் விதியொன்று செய்வோம்
ஜனநாயகத்தைச் சற்றே நிறுத்திச்
சவுக்கை எடுப்போம் தரித்திரம் நீங்கும்'

ஓட்டுப் போட்டவனுக்குப் பயன்படாத ஜனநாயகத்தை நிறுத்துவதும் கையில் ஆயுதம் எடுப்பதும்தான் அந்த வழி. ஏனென்றால் ஜனநாயகம் ஜனங்களின் நாயகம் அல்ல அது

முட்டாள்கள் பலர்கூடி முடிவுசெய் தாலதே
முழுதான ஜனநாயகம்.

இதுதான் ஜனநாயகம் பற்றிய கவிஞரின் மதிப்பீடு. ஓடப்பனை உயர்த்த, ஒப்பப்பரை உருவாக்க வேறு வழியில்லை என்கிறார். கவிஞரின் கோபம் எல்லைமீறிப் பொகிறது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்காத போது இந்த நாடு இருந்தென்ன அழிந்தென்ன என்று நினைக்கிறார்

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்
இல்லையெனில் இந்நாடு அழியவேண்டும்

ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் இந்த உலகத்தையே அழித்திடலாம் என்ற பாரதியின் கோபத்திற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல கண்ணதாசனின் கோபம்.

தனியுடைமை நீங்கிப் பொதுவுடைமை:

சமத்துவம் ஓங்க தரித்திரம் நீங்க தனியுடைமை மாறவேண்டும் எவருக்கும் இல்லை என்ற நிலையே இல்லாத நாடு வேண்டும் எல்லாரும் எல்லாமும் பெறும் பொதுவுடைமை பூக்க வேண்டும் இதுவே கவிஞரின் விருப்பம்,

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை-நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை.

இது எளிதான காரியம் இல்லையே, சொத்துரிமை இருக்கும் வரை சுரண்டல் இருப்பது இயல்புதானே அழிவைத் தடுக்க முடியுமா? முடியும் என்கிறார்

தொழிலைப் பொதுவாக்கிச்
சொத்துரிமை நீக்கிவிட்டால்
அழிவைத் தடுப்பதற்கு
அடிப்படைபோ லாகிவிடும்

தொழிலைப் பொதுவாக்குவதும் சொத்துரிமையை நீக்குவதும்தான் அடிப்படையான பணி என்கிறார் கவிஞர்.உட்கார்ந்து உண்டு கொழுக்கும் ஒருகூட்டம், உழைத்து உழைத்து ஒடாய்ப்போய் ஒட்டிய வயிறுடன் பெருங்கூட்டம் இந்நிலை மாற, வர்க்கங்கள் வீழ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஒரே வழி, இப்போராட்டத்தில் மரணமே பரிசு என்றாலும் அஞ்சிடாமல்இந்த சமுதாயம் துணிந்துவிடும்

இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது
ஏழைக்கு வாழ்வு எல்லோர்க்கும் ஒருவீடு
மாறிவரும் காலம் மாறத்தான் வேண்டும்-இதில்
சாவுவரும் என்றாலும் சமுதாயம் துணிந்துவரும்

என்பது கவிஞரின் நம்பிக்கை.

போராட வாருங்கள் தோழர்களே:

தனியுடைமைக் கொடுமையைச் சாய்க்கப் போராடுவதின் அவசியத்தையும் எப்படியெல்லாம் போராடவேண்டும் என்பதையும் பல பாடல்களில் பலபடியாகப் பாடுகிறார் கவிஞர்,

நெஞ்சை நிமிர்த்துங்கன் தோழர்களே-இனி
நேருக்கு நேர்நின்று பார்ப்போம்-சம
நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்,

என்று பாடுவதோடு மட்டுமின்றி பஞ்சையாய்ப் பராரியாய் வாழும் உழைக்கும் மக்கள் இனித் துஞ்சி இரந்துண்ணும் வாழ்க்கையை விட்டுத் தீமையை, அடக்குமுறையை, ஒடுக்கு முறையை வேரோடு சாய்க்கப் போராடவேண்டும் என்கிறார். மேலும்,

மூடிய கைகளை மேலுயர்த்து உந்தன்
மூச்சில் கனல்விட்டுக் காட்டு-உந்தன்
பேச்சில் புரட்சியை ஊட்டு-பல
கோடிப் பராரிகள் ஒன்றுபட்டாலது
கோட்டை தகர்ந்திடும் கூட்டு-அதைக்
கூட்டட்டும் நாட்டிலென் பாட்டு

என்றும் பாடுவதன் மூலம் ஒற்றுமை-முழக்கம்-போராட்டம் எனப் படிநிலைகளாகப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார். ஒவ்வொரு கவிஞனும் தம்பணி எது என்பதை உணர வேண்டும் அதை மக்களுக்கும் உணர்த்த வேண்டும் இதுவே கவிஞனுக்குரிய மிகப்பெரிய கடமையாகும். தோழர்களை ஒன்றிணைத்துத் கோட்டை தகர்த்திடும் கூட்டை உருவாக்குவதே என்பாட்டின் பணி என்று நெஞ்சுயர்த்திப் பாடுகிறார் கவிஞர்.

எப்படிப் புரட்சிவரும்?

அசையாத மாளிகையில் சொகுசாக வாழ்ந்து வரும் சீமான்களுக்கு வேட்டு வைக்கும் புரட்சி எப்படி வரும்? யாரால் வரும்? இருவேறு குடும்பங்கள்- ஒன்று செல்வர்கள் இல்லம், மற்றொன்று ஏழ்மையின் குடிசை இரண்டுக்கும் என்ன வேறுபாடு,

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால்கஞ்சி

ஏழைக்குடிசையிலோ,

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி,

இந்த வேறுபாடுகள் புரிந்தால்தான், கஞ்சி குடிப்பதற்கில்லாத காரணங்கள் புரிந்தால்தான,; பாமரர்கள் சேர்ந்தெழுவர் இதைஉணர்ந்திருந்தார் கவிஞர் கண்ணதாசன், எனவேதான் பசியால் புரட்சிவரும் என்கிறார்.

பசியால் புரட்சிவரும்
பாமரர்கள் சேர்ந்தெழுந்தால்
அசையாத மாளிகையும்
ஆடிப் பொடிபடுமாம்

அடிவயிறு பற்றிவிட்டால்
அடுத்து நடப்பதென்ன
கொடிய பசி வந்துவிட்டால்
குமுறும் எரிமலைதான்

கவிஞரின் தீர்க்கதரிசனம் இது.

சோவியத்நாடு துயரிலா நாடு:

திராவிட இயக்கங்கள், தேசிய இயக்கம் இவைகளில் மூழ்கிய கவிஞருக்கு இந்த ஞானமெல்லாம் எங்கிருந்து வந்தது? இயல்பாகவே சமூக அக்கறை உடைய கவிஞருக்குச் சோவியத் நாட்டுச் சுற்றுப்பயணமே சமூகச்சிக்கல்கள் குறித்த மிகப்பெரிய தெளிவைத் தந்தது எனலாம். எனவேதான் பொருளாதாரத் துறையிலேயும் சமுதாயத் துறையிலேயும் நமது நாட்டில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தி அவற்றைச் சீராக்கி பொதுவுடைமை உலகு படைக்கும் வழிகளைச் சிந்திக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாகவே சோவியத் நாட்டைப் பற்றியும், கூட்டுப்பண்ணைகளின் மேன்மைகள் பற்றியும் பலபடப் புகழ்ந்து எழுதத் தொடங்கினார்.திருவள்ளுவர் நாடு பற்றிக்கூறிய வரையறைகள் அனைத்தையும் தம்மகத்தே பொருத்தமுறப் பொருத்திக் கொண்ட நாடு சோவியத் நாடுதான் என்பது கவிஞரின் திட்டவட்டமான முடிவு

நாடெனில் யாதென நாட்டிய வள்ளுவன்
பாடல் கூறிய பக்குவத்தே ஓர்
நாடு உண்டாயின் நாமறிந்தவரை
சோவியத் நாடே துயரில்லா நாடு

உறுபசியும் ஓவாப்பிணியும் நீங்கி,
தள்ளா விளையுளும் தக்காரும் பெற்று,
நாடா வளத்தனவாய்

வள்ளுவன் வாக்கிற்கு முற்றும் பொருந்திய நாடாகச் சோவியத்தைக் காண்கிறார் கவிஞர். அதுமட்டுமா? சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகளில் நெஞ்சைப் பறிகொடுக்கிறார் நம்கவிஞர்

பாடுபடும் உழவருக்குப்
பணமும் உண்டு உணவுமுண்டு
நாடுபெறும் லாபத்திலே
பயனும் உண்டு-எல்லாம்
நமது என்று எண்ணுகின்ற
நினைவும் உண்டு.

அதனால் கூட்டுப் பண்ணை-நாடு பயனடையப் பயிர் வளர்த்துக் கூட்டும் பண்ணை என்று கூட்டுப் பண்ணைகளின் மேன்மைகளைப் புகழ்வதோடு இத்தகு நன்மைகளுக்கெல்லாம் காரணமான சோஷலிசம் கொண்டுவந்தால் நமது நாட்டிலும் சோற்றுக்கென்று சண்டைபோடும் உயிர்கள் தங்கும் என்று தன் அவாவையும் வெளிப்படுத்துகிறார்.

நூறுவேலி மிராசுதாரும்
நோய்பிடித்த உழவர்மாரும்
சோறுக்கென்று சண்டைபோடும்
உலகம் எங்கும்-அந்த
சோஷலிசம் கொண்டு வந்தால்
உயிர்கள் தங்கும்.

இப்படிச் சோஷலிச சோவியத் புகழ்பாடும் கவிஞரின் மனதில் நீங்கா இடம் பிடித்த அரசியல் தத்துவம் சமதருமமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சத்தியத்தின் எச்சரிக்கை
சமதருமம் நாடுங்கள்
சத்தியத்தின் எச்சரிக்கை
சரித்திரத்தை மாற்றுங்கள்

என்று சரித்திரத்தையே மாற்றத் துடிக்கும் அவா கவிஞருடையது.

மாசேதுங்கை மறக்காத கவிஞர்:

இந்திய சீன எல்லைப்போரின் போது சீனாவை இடித்துரைக்கத் தவறாத கவிஞர் கண்ணதாசன் சீனாவை எப்போதும் பகைநாடாகவே பார்க்கும் இயல்புடையவர். ஆனால் பொதுவுடைமைப் புரட்சியாளர் மாவோ என்றழைக்கப்படும் மாசேதுங்கைப் பாராட்ட அவர் மறக்கவில்லை.

கண்டு சுதந்திரத்தைக் கவலையுடன் மாசேதுங்
பெற்ற மறுஆண்டில் பெரும்புகழைத் தான்சேர்த்தான்
தன்னாட்டுத் தேவைகளைத் தானே நிறைவுசெயும்
பொன்னாடாகப் புகழ்பெற்றான் இன்றங்கே
ஏழை அடிமையிலை இரப்போர் எவருமிலை

என்று ஏழ்மையை, அடிமைத்தனத்தை, இல்லாமையை ஒழித்த அவரின் புரட்சிக்காகவும் தன்னாட்டைப் பொன்னாடாக மாற்றிய புகழுக்காகவும் வாயாரப் புகழ்கிறார். மேலும்

துப்பாக்கி யாலேதான்
துரைத்தனங்கள் சேரும் எனச்
செப்பியவன் அந்தச்
சிவப்புநிலா மாசேதுங்

சிவப்புநிலா என்று பட்டம் சூட்டி மகிழும் அளவிற்கு அவரது சித்தாந்தங்களை மதிக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

தொகுப்புரை
1. சாமான்யர்களின் பசியைக் கண்டு கோபம் கொண்டு கொதித்தெழுந்தவர் கண்ணதாசன்.
2. நாட்டு முன்னேற்றத்திற்கு ஜனநாயகம் பயன்படாது என்றும் தனியுடைமை நீக்கிப் பொதுவுடைமை ஏற்பதே பொருத்தம் என்றும் கூறுகின்றார் கண்ணதாசன்.
3. பொதுவுடைமை காணும் புரட்சிக்கு என்பாட்டுப் பயன்பட வேண்டும் என்கிறார் கண்ணதாசன்.
4. பசியால் புரட்சி வரும் என்று துணிகிறார் கண்ணதாசன்.
5. சோவியத் நாடே திருவள்ளுவர் சொன்ன பொன்னாடு என்கிறார் கண்ணதாசன்.
6. மாசேதுங்கைச் சிவப்புநிலா என்று புகழ்கிறார் கண்ணதாசன்.

மேற்கூறிய கருத்துக்களால் மக்கள் நிறைவான வாழ்வு வாழப் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதே நம் முதண்மையான பணி முழுமையான பணி என்று கவிஞர் கருதுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...