ஞாயிறு, 26 மே, 2019

உழைக்கும் பெண்ணே!

முனைவர் நா.இளங்கோ




பெண்ணே!
கருத்து உடல்பெருத்து
முடிசிறுத்து
உழைத்த உடல் சோர்ந்து
சற்றே சாய்ந்து தளர்ந்தாயா!

நிமிர்ந்து உடல்மினுக்கும்
செவ்வகப் பெட்டியொன்று
அருகமர்ந்து ஆதரவாய்
அன்பொழுகப் பேசியது

குங்குமப் பூப்போனற
சிவப்பழகு வேண்டுமா?
ஒரே வாரத்தில்!
நீண்ட கருங்கூந்தல்
அலைபாய
வாகனங்களையே
கட்டிஇழுக்கும்
வலிமையாக கூந்தல் ரகசியம் சொல்லவா?
மெலிந்த தேகமும்
வசீகரிக்கும் முகமும்
வெய்யில் தூசு புழுதியில்
மாசடையாத
மேனி வேண்டுமா?

செவ்வகப் பெட்டி
அக்கறையோடு
அடுக்கடுக்காகத்
தன் பொய் மூட்டைகளை
திறந்து கொட்டியது

பெண்ணே!
ஆணை மயக்கத்தான் உன்மேனி
அழகு! கவர்ச்சி! வசீகரம்
இதுவே
வாழ்க்கையின் இலட்சியம்
ஆசைப்படு! ஆசைப்படு!
பூ! புடவை! நகை!
அத்தனைக்கும் ஆசைப்படு!

கிரீம்! லோஷன்! பாலீஷ்
நுகர்வுச் சந்தையில்
உன்னை நம்பித்தான்
இத்தனையும், இன்னமும்..
மாயப்பெட்டியின்
ஓயாத ஓலம்
தொடர்ந்துகொண்டே இருந்தது..

பெண்ணே!
உழைக்கும் பெண்ணே!
அந்த மாயப்பெட்டி
நீண்ட தொடர்களால்,
கண்ணீர் கசியும்
ரியாலிட்டி நிகழ்ச்சிகளால்
உன்னைக்
கட்டிப் போட்டதெல்லாம்
எதற்கென்று அறிவாயா!

விழித்தெழு!
ஆண்களில் சந்தையில்
நீ நுகர்பொருளல்ல!
பெண்களின்
நுகர்பொருளுக்கு
நீ சந்தையுமல்ல..

உன் மாயக் கனவுகளை
உதறி எறிந்துவிட்டு
புதுமைப் பெண்ணாக
உடனே கிளர்தெழு!
உழைக்கும் பெண்ணே!
உலகம் உன்கையில்..


     

சனி, 25 மே, 2019

இளவட்டக்கல்

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

திருமய்யம் கோட்டை பைரவர் கோயில் வளாகத்தில் இருக்கும் இளவட்டக்கல். தென்தமிழக இளைஞர்களின் திருமணத் தகுதிக்குச் சான்றளிக்கும் இளவட்டக்கல் காலப் பழமையில் மறைந்துவரும் பண்பாட்டுச் சின்னம் -(புகைப்படம்) முனைவர் நா.இளங்கோ.

இளவட்டக்கல்

முனைவர் நா.இளங்கோ - இளவட்டக்கல்


இளவட்டக்கல்:

சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை)

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.

முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.


புது மாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக் கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்து கிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

வெள்ளி, 24 மே, 2019

அகலிகைத் தொன்மம் - கம்பரும் புதுமைப்பித்தனும்


முனைவர் நா.இளங்கோ

முதல்வர்

தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி

புதுச்சேரி- 605008


இலக்கியப் படைப்பிற்கான அடிக்கருத்துக்கள் எல்லாமும் தொன்மங் களிலிருந்தே தோற்றம் பெற்றன என்று நார்த்தராப் பிரையின் கருதுவார். பெரும்பாலும் தொன்மங்கள் மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மனிதன் எவ்வாறு இப்பொழுது உள்ள நிலைக்கு, அதாவது இறப்பு, பால்உணர்வு, பலவகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டவனாக வந்து சேர்ந்தான் என்பன பற்றியும் விளக்குகின்றன.
விகோ எனும் அறிஞர் தமது புதிய விஞ்ஞானம் எனும் நூலில்  நுண்ணிய சிந்தனைகள் தொன்மக் கருத்துக்களிலிருந்தே வெளிப்படுகின்றன என்றும் கவிதைக்கு இதுவே அடிப்படை என்றும் மனிதன் கற்கவேண்டிய முதல் விஞ்ஞானம் தொன்மமே என்றும் சுட்டிக் காட்டினார். அவர் கருத்தில் தொன்மங்கள் என்பவை உண்மையான நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் கற்பனை வடிவங்கள் ஆகும். (பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, . 7)
தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த் துடிப்புள்ளவை, சமூகம், காலத்துத் தேவைகளுக்கேற்ப தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூகம் மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியச் சூழலில் ஆரிய திராவிட அரசியல் நிலைப்பாடுகளுக்கு இத்தொன்மங்களே களங்களாயின. ஊடகங்கள் இந்துத்துவ பெருமரபைத் தூக்கிப் பிடிக்க இத்தொன்மங்களைப் பயன்படுத்துகின்றன. படைப்பாளிகளும் தொன்மங்களையே படைப்பின் அடிக்கருத்துக்களாகவும் பரப்புரைகளாகவும் உத்திகளாகவும் அமைத்து வெற்றி பெறுகின்றார்கள். எனவேதான் ரெனிவெல்லாக்,‘உலகப் புகழ்பெற்ற படைப்புகள் எல்லாம், புதிதாகக் கதையை உருவாக்கிப் படைக்கப்பட்டவைகளை விட, பழைய தொன்மங்களின் மேல் மறுபடைப்புச் செய்யப் பட்டவைகளாகவே இருக்கின்றனஎன்கிறார். (.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, . 118)
அகலிகைத் தொன்மம்: வடமொழியில் முதல்காவியம் செய்த வான்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார். வான்மீகி சொன்ன கதை இது,
மகாமுனி கௌதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கௌதமன் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கௌதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்றான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்பட்டாள்.
பிறகு தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரித்து அனுப்ப, உனக்கு நன்றி என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கௌதமன் இந்திரன் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொண்டார்.
மூடனே! என் வேடத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில் புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய் என்று இந்திரனுக்கு சாபமிட்டார். அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமன் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும் என்று அகலிகைக்குச் சாபமிட்டார்.
தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல். மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங் குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி,
                                இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
                                சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென்று உரை செய்வோரும் (நப்பண்ணனார், பரிபாடல், பா. 19)
இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கௌதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இதுஎன்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. இந்திரன் பெற்ற சாபம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் இடம்பெறவில்லை, ஆனால் பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் குன்றம்பூதனார் செவ்வேளின் மனைவி தேவசேனையைக் குறிக்குமிடத்தில்ஐயிரு நூற்று மெய்ந் நயனத்தவன் மகள்என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவன் என்று சுட்டப்படுவதால் இந்திரன் சாபம் நினைவுக்கு வருகின்றது.
                பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கௌதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத் திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமான தொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பன், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகின்றான். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கௌதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்துதன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றான் கம்பன்.
                அஞ்சன வண்ணத் தான்தன் அடித்துகள் கதுவாமுன்னம்
                வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீஅழைத் திடுக என்ன
கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள்கொண்டான்
கம்பன் (பாலகாண்டம்: 484)

                கம்பன் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது. கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன.
புதுமைப்பித்தன் அகலிகைத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய இரண்டு கதைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது.
அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. .529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. .535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின்  சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர். அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,
அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.
அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.
அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.
அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.
உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.
உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.
நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை.
                                                                                                (மேற். நூ. .539)
மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.
                அகலிகைத் தொன்மத்தை மறுபடைப்பாக்கம் செய்த பலரும் உளவியல் நோக்கிலேயே இத்தொன்மத்தை அணுகியுள்ளார்கள். புதுமைப்பித்தனும் சாப விமோசனம் பெற்ற பின்னர் அகலிகை, கோதமன் இருவரின் மனதிலும் இழையோடும் குற்ற உணர்ச்சி பற்றிப் பலபடப் பேசுகிறார். அகலிகைக்கு அச்ச உணர்ச்சியே மேலோங்கி நின்றது. இயல்பான பேச்சு இல்லை, மற்றவர் பேச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சேர்ந்து வாழ்ந்தாலும் இருவரும் இரண்டு விதமான மனக்கோட்டைகளுக்குள் வாழ நேர்ந்ததால் ஏற்படும் உளவியல் சிக்கல்களே சாப விமோசனம் கதையின் முதல்பாதி.
                சாப விமோசனம் கதையின் இரண்டாம் பாதி, இராமன் கதை என்ற ஒற்றைத் தொன்மத்திற்குள் இயங்கும் சீதை, அகலிகை என்ற இரட்டைத் தொன்மங்களைக் குறித்தது. அதாவது சீதைத் தீக்குளிப்பு ஒரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- நெருப்பு- உலகம் என்பதோடு தொடர்புடையது. அகலிகை கல்லுயிர் பெறல் மற்றுமொரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- உடல்-மனம் என்பவற்றோடு தொடர்புடையது. இந்த இரண்டு தொன்மங்களையும் இணைக்கும் தொன்மம் இராமன் குறித்த தொன்மம். சீதை, அகலிகை என்ற இரண்டு தொன்மங்களுக்குள் இயங்கும் செயல்பாடுகள் ஒரே வாய்பாட்டில் இயங்குகின்றன. ஒத்த வாய்பாட்டில் இயங்கும் இக்கதைகளில் மாறுபடும் மதிப்பீடுகள் குறித்த விசாரணையே புதுமைப்பித்தனின் சாப விமோசனம் முன்வைக்கும் சிக்கல். இச்சிக்கல் அகலிகை வழியாக எழுப்பப்படுகிறது. தொன்மத்தில் இது அகலிகையின் குரலாக ஒலித்தாலும், வரலாறு நெடுகிலும் பெண்களின் ஒற்றைக் குரலாகவே எதிரொலிக்கின்றது.
சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்:
                  
    

மேலே உள்ள வரைபடங்கள், இரண்டு தொன்மங்களும் செயல்பாடுகளின் வழி ஒரே வாய்பாட்டில் இயங்குவதை உணர்த்துகின்றன. இரண்டு தொன்மங்களிலும் இராமனும் கோதமனும் பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் பரிசுத்தமாயிருக்கும் போது பெண்களும் அப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதில்- நிர்ப்பந்திப்பதில் என்ன தவறு? என்பது போன்ற தர்க்கம் இரண்டு தொன்மங்களிலும் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இராவணன், இந்திரன் ஆகிய இரண்டு ஆண்களின் பாலியல் மீறல்கள் ஓரங்கட்டப்படுகின்றன. ஆண்களின் பாலியல் மீறல்கள் உள்ள சமூகத்தில் பெண்கள் உடலாலும் மனத்தாலும் களங்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படிச் சாத்தியமாகும். ‘ஆப்பிளின் ஒரு பாதியைத் தின்றுவிட்ட பிறகு முழு ஆப்பிளைக் கையில் வைத்திருக்க முடியாது என்பதைப்போல்என்று இதனை விளக்குவார் எங்கல்ஸ் (எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், .110)
                சீதையின் தீக்குளிப்பு அகலிகையின் மனதில் கோபக்கனலை எழுப்பிவிடுகிறது. அவர் கேட்டாரா? என்று இயல்பாகத் தொடங்கிய அகலிகையின் பேச்சில் இராமன்தான் கேட்டான் என்று தெரிந்ததும் அவன் கேட்டானா? என்று அனல் வீசத் தொடங்குகிறது. இதனைக் கண்ணகி வெறி என்கிறார் புதுமைப்பித்தன். தீக்குளிப்பு பற்றிய சீதையின் எதிர்வினை என்னவாக இருந்தது? அகலிகைபோல் வெளிப்படையாக எதிர்;க்குரல் எழுப்பவில்லை சீதை. மாறாக, ‘உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.’ என்ற புதுமைப்பித்தன் வரிகளில் வரும், மெதுவாகச் சிரித்தாள் என்பதில் சீதையின் கேலியும், கிண்டலும், கோபமும், ஆத்திரமும், இயலாமையும், அழுகையும் அடுக்கடுக்காக வெளிப்படுவதை உணரமுடியும். உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று வேண்டுமென்றே அகலிகையின் கோபத்தைக் கிளறிவிடும் வார்த்தையைக் கையாளுகிறாள் சீதை. தான் பேசாததை யெல்லாம், பேச வேண்டியதை யெல்லாம் அகலிகை பேசுகிறாள் என்பதால். பேசட்டும்.. பேசட்டும்.. வரலாற்றின் வழிநெடுகிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல், குரல்வளை நெறிக்கப்பட்ட பெண்களின்  கோபக்குரல், உள்ளுக்குள் மகிழ்கிறாள் சீதை. சீதையின் மௌனம், சீதை பேசாத பேச்சு அது.
புதுமைப்பித்தன் கையாண்ட எத்தனையோ தொன்ம மரபுகளில் அகலிகைத் தொன்மம் மிகுந்த தனித்துவம் உடையது. அகலிகை மீண்டும் கல்லானது உளவியல் சார்ந்தது என்றாலும், அறங்கள் குறித்த அகலிகையின் விசாரணை சமூகம் பற்றியது, சமூகக் கட்டுமானங்கள் பற்றியது. சாப விமோசனத்தில் அகலிகை இரண்டு விவாதங்களைத் தொடங்கி வைக்கிறாள்.
1.மனிதனா? தர்மமா? எது முக்கியம் என்ற வினா.
2.இரண்டாவது, உள்ளமா? உலகமா? இரண்டில் எதற்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற வினா.
கைகேயியிடம் உரையாடும் தருணத்தில் அகலிகை தர்மங்கள் குறித்த சர்ச்சையைக் கிளப்புகிறாள், ‘மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்கு சத்துருஇது அகலிகையின் வாதம். இவ்வாதத்தில் தர்மத்துக்கு முதன்மையில்லை, மனிதத்திற்கே முதன்மை. ‘உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகத்துக்கு நிரூபிக்க முடியுமா?’ என்ற வாதத்தில் அகலிகை உள்ளமா? உலகமா? என்ற வினாவிற்கு அவளே விடையும் கூறுகிறாள். உலகம் எது? என்ற அகலிகையின் கேள்வியே இதற்கு பதிலாகிறது. காலம், இடம், நபர் சார்ந்து உண்மைகள் மாறுபடும் போது உலகம் என்பது எது? என்ற கேள்வி எழுகிறது.


புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...