முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து
நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய… இன்றைய… கவிதைகள் வரை பல்லாயிரம்
தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம்.
கவிதை செய்யும் கலை. நல்ல கவிதை எழுதுவது என்பது ஒருவகை நுட்பச் செய்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால்
வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது.
அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதை” என்று
கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக்
கவிதைகளே சாட்சி.
உரைநடைக்கும் கவிதைக்கும் எழுதுவதில் வித்தியாசம்
இருக்கிறதோ இல்லையோ? வாசிப்பதில், அனுபவிப்பதில் கண்டிப்பாகப் பெரிய அளவில் வித்தியாச
மிருக்கிறது. உரைநடையை வாசிப்பவன் அப்படைப்பை ஒற்றைப் பரிமாணத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறான்.
வாசிப்பதை முடித்தவுடன் பெரிதும் உரைநடைப் படைப்பின் வேலையும் முடிந்துவிடுகிறது. ஆனால்
கவிதை வாசிப்பு அப்படியில்லை. கவிதையைப் பல பரிமாணங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது.
வாசிப்பு முடிந்த பிறகுதான் கவிதைப் படைப்பு தன் முழுப் பரிமாணத்தையும் காட்டிப் பேருரு
எடுக்கிறது.
வாமனனுக்கு மூன்றடி நிலம் தானம் கொடுத்த மாபலிச்
சக்கரவர்த்தியின் நிலைதான் கவிதை வாசிப்பவன் நிலையும். சின்ன உருவம்தானே மூன்றடி எடுத்துக்
கொள்ளட்டும் என்று வரம் கொடுக்கப்போய் சிற்றுரு பேருருவாகி எல்லாற்றையும் ஈரடியால்
அளந்துமுடித்து மூன்றாவது அடிக்கு மாபலி தன் தலையையே கொடுக்க நேர்ந்தது போல்தான் இதுவும்.
கவிதை சிறியதோ பெரியதோ வாசிப்புக்கு அடங்கிவிடும் அதன் உருவத்திற்கும் அது தரும் அனுபவம்
என்ற விஸ்வரூபத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரிது. வாசிப்பு நம் அறிவு அனுபவங்களைத்
தொட்டு உரசி நமக்குள்ளாக இறங்கி, ஐக்கியமாகி நம்மையே இழக்கும் நிலைக்குத் தள்ளும் போதுதான்
மூன்றாவது அடிக்குத் தன் தலையையே தந்த மாபலியாகிறோம் நாம். வாசிப்பாளனுக்குக் கிட்டும்
இந்த அனுபவம் படைப்பாளிகளுக்குக் கிட்டுமா? என்பது ஐயமே.
கவிதை சொற்களில் முழுமை பெறுவதில்லை. சொற்கள் வெறும்
கூடுதான். இயக்கமற்ற உடம்புபோல. கவிதை இயங்க வேண்டும் என்றால் கவிதையில் உயிர் இருக்க
வேண்டும். சொற்களால் கட்டப்படும் கவிதையில் உயிர் எங்கிருந்து வரும்? உயிருள்ள கவிதையை
யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்? நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,
பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல்
போல்பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.
கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின்
பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெற்று உடம்பு.. கருத்து மட்டுமே
கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே
அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. நன்னூல் ஆசான் பவணந்தி
சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது. கவிதைக்கு இலக்கணம் எதுவோ, அதுவே
கவிஞர்களுக்கும் இலக்கணம். கவிஞர்கள் நல்ல மொழியறிவும் உலகியல் பார்வையும் நுட்பமான
உணர்வு வெளிப்பாட்டுத்திறனும் அழகுணர்ச்சியும் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். இங்கே,
உலகியல் அறிவு என்பது தமக்கான அரசியல் அல்லது கொள்கை. அதுதான் கவிஞனின் இயக்கம், கவிதையின்
உயிர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்துணை தெளிவான கவிதைக் கோட்பாடுடைய தமிழர்களின்
கவிதைப் பயணம் எத்துணை நெடியதாயிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.
கவிதைப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டம் கவிதையியல்
என்ற கோட்பாட்டு ஒருவாக்கம் தமிழ்க் கவிதைகளின் பயணம் எத்தனை நெடியதோ அத்தனை நெடியது
தமிழ்க் கவிதையியலின் பயணமும். தமிழ்க் கவிதையியலின் உச்சத்தைத் தொல்காப்பியச் செய்யுளியலில்
காணமுடியும். மேற்கு உலகின் கவிதைக் கோட்பாடுகளுக்கு முந்தையது தமிழின் கவிதைக் கோட்பாடு.
தொல்காப்பியப் பொருளதிகாரமே தமிழ்க் கவிதையியல் குறித்த பதிவுதான். தமிழ்க் கவிதைகளின்
உருவம், உள்ளடக்கம், உத்தி என்ற அத்தனை அம்சங்களையும் தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கண
மயப்படுத்தல் என்று நாம் கருதும் அமைப்பில் கோட்பாட்டு உருவாக்கம் செய்துள்ளது. தொல்காப்பியம்
தொடங்கி வைத்த கவிதையியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதுதான் கம்பரின்
கவிதைக் கோட்பாடு.
கம்பர் இலக்கணம் படைக்கவில்லை என்றாலும் காப்பியப்
போக்கில் தமிழ்க் கவிதையியல் குறித்த தமது கோட்பாட்டுப் பார்வையைச் சிறப்பாகப் பதிவு
செய்கின்றார். குறிப்பாக கோதாவரி நதி குறித்த கம்பனின் பாடல் இரட்டுற மொழிதல் என்ற
அணி இலக்கிய உத்தியோடு படைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் பின்வருமாறு,
புவியினுக்கு அணிஆய், ஆன்ற
பொருள் தந்து, புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி,
அவி அகத் துறைகள் தாங்கி,
ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென்று
சவி உறத் தெளிந்து, தண்ணென்று
ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
கவி எனக் கிடந்த கோதா
வரியினை வீரர் கண்டார்.
பூமிக்கு ஓர் அணிகலன் போன்று அழகூட்டுவதாய் அமைந்து; சிறந்த பொருள்களைக் கொடுத்து வயல்களுக்குப் பயன்படுவதாக ஆகி; தன்னுள் அமைந்த பல நீர்த் துறைகளைக் கொண்டு; குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச்சென்று; செவ்வையாய் தெளிவுடையதாகி; குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய்; கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி எனும் ஆற்றை இராமன் இலக்குவன் ஆகிய வீரர்கள்
கண்டனர்.
என்பது
கோதாவரி நதி குறித்து கம்பர் தரும் வருணனையும் பொருள் விளக்கமும் ஆகும். மேலும் இதே
பாடலில் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி என்று கம்பர் சிறப்பிப்பதால் மேலே கோதாவரிக்குச்
சொன்ன அத்துனை விளக்கங்களும் சான்றோர் கவிதைகளுக்கும் பொருந்தும் எனத் தம்பாடலை அமைக்கின்றார்.
பாடல், சான்றோர் கவியைக் குறிக்குமிடத்து,
உலக மக்களுக்குப் பலஅலங்கார மாகி; சிறந்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களை உணர்த்தி; அறிவில் தங்கி; செவ்விதாய் அமைந்த அகப் பொருள் துறைகளை ஏற்று; குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து அக ஒழுக்கங்கள் விரவப் பெற்று விளங்குமாறு பொருள் தெளிவுற அமைந்து; நல்லொழுக்
கத்தையும் உணர்த்தி நிற்கின்றது புலமையால் நிறைந்தவர் செய்யுள் எனப் பொருள் கொள்ள முடியும்.
கோதாவரி
நதி வருணனையாக அமைந்த மேற்சொன்ன பாடலில் கம்பர் தமிழின் கவிதையியல் சார்ந்த பல கவிதைக்
கோட்பாடுகளை உள்ளீடாக வைத்து விளக்கியுள்ள திறம் வியக்கத்தக்கது.
கம்பரின்
கவிதைக் கோட்பாடு:
புவியினுக்கு அணியாய்:
கவிதை
மனிதர்களை, உறவினை, குடும்பத்தை, வாழ்க்கையை அமகுசெய்யக் கூடியது. இதனையே கம்பர் புவியினுக்கு
அணி, அதாவது உலகிற்கும் உலக மக்களுக்கும் முருகியல் இன்பத்தை வழங்குவது கவிதை என்கிறார்.
ஆன்ற பொருள்தந்து:
உயர்ந்த
பொருள் பொதிந்த உள்ளடக்கத்தால் கவிதை சிறக்க வேண்டும் என்ற பொருளில் ஆன்ற பொருள்தந்து
என்கிறார் கம்பர். அப்படிச் சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது
எதைச் சொல்கிறோம் என்பது. கவிதைக்கு உயிரே ஆழ்ந்த பொருள்தான்.
புலத்திற்றாகி:
புலம்
என்பது இங்கே அறிவினைக் குறித்தது. அறிவுடைமையோடு பொருந்தியதாக கவிதை இலங்குதல் வேண்டும்.
காரண காரிய அறிவினுக்குப் பொருந்தாத எவையும் கவிதை பேசுதல் கூடாது.
அகத்துறைகள் தாங்கி- ஐந்திணை நெறி அளாவி:
தொல்காப்பியக்
கவிதையியலை ஒட்டி திணை, துறை, கூற்று முதலான கவிதைக் கோட்பாடுகளோடு பொருந்தியதாகக்
கவிதைகள் இயற்றப்படல் வேண்டும் என்கிறார். அகத்துறைகள், ஐந்திணை என்று ஆசிரியர் குறிப்பிடுவது
புறத்துறைகளும் புறத்திணைகளும் பொருந்தும். முன்னோர் கவிதைக் கோட்பாடுகளின்படி தமிழ்க்
கவிதைகளின் செல்நெறி இயங்குதல் வேண்டும் என்பதே கம்பரின் கவிதைக் கோட்பாடு.
சவியுறத் தெளிந்து:
சவி என்பதற்கு
ஒளி, ஒளிபொருந்திய என்று பொருளுரைப்பர். கவிதை தமது உள்ளடக்கத்தைத் தெளிவாக வாசகனுக்கு
உணர்த்துதல் வேண்டும். வெற்றெனத் தொடுப்பதோ, மயங்க வைப்பதோ இல்லாமல் கவிதை வாசகனுக்குப்
புரிதல் வேண்டும். அதுவே கவிதை பாய்ச்சுகிற ஒளி. அவ்வொளியால் கவிதை தெளிந்த நீரோடைபோல்
அகத்துள்ளதைப் பிறர்க்குக் காட்டும் என்பது கம்பரின் கவிதைக் கோட்பாடு
தண்ணென்று,
குளிர்ச்சியுடையதாகக்
கவிதை விளங்குதல் வேண்டும் என்கிறார் கம்பர். இங்கே குளிர்ச்சி என்பது கவிதை இன்பத்தைக்
குறித்தது. கவிதை, வாசகனின் உள்ளத்தில் குளிர்ச்சியை, அதாவது கவிமணி அவர்கள், உள்ளத்து
உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை என்று சொன்னாரே அந்த இன்ப உருவெடுப்பதே குளிர்ச்சி,
அதுவே கவிதை இன்பம்
ஒழுக்கமும் தழுவி
ஒழுக்கமும்
தழுவி என்றது மானுட விழுமியங்களை, இலக்கியத்தின் முடிந்த முடிபு என்பது மானுட விழுமியங்களைப்
பேணுவதாக அமைதல் வேண்டும். காலத்தைக் கடந்து நிற்கும் பண்பாட்டு விழுங்களை வாசகர் மனதில்
விதைத்து நல்ல மாந்தர்களை உருவாக்குவதே இலக்கியத்தின் நோக்கமும் பயனும் எனவேதான் கம்பர்
தம கவிதைக் கோட்பாட்டின் நிறைவாக விழுமியங்களை வைத்தார்.
இத்தகு
கவிதைக் கோட்பாடுகளை ஒரே பாடலில் அடுக்கி கோதாவரி நதியோடு ஒப்பிடுவதுபோல் விரித்துரைத்த
கம்பர். மேற்சொன்ன கவிதைக் கோட்பாடுகளைத் தம்மகத்தே அடக்கியுள்ள கவிதைகளே சான்றோர்
கவி என்கிறார். இத்தகு இலக்கணங்களுக்குப் பொருந்திவராத கவிதைகளை அவர் வேறோர் இடத்தில்
புன்கவி என்கிறார். அயோத்திநகரின் அகழிகளைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில், (பொன்விலை மகளிர் மனம்எனக் கீழ்போய், புன்கவி
எனத் தெளிவின்றி… பா-108) அகழி தெளிவின்றிக் குழம்பிக் கிடக்கிறது எப்படி என்றால்
புன்கவிகளைப் போலே என்கிறார்.
தொல்காப்பியர் தொடங்கிவைத்த தமிழ்க் கவிதையியலுக்கு
ஏற்பவே கம்பரும் தமது கவிதைக் கோட்பாட்டினைப் பதிவுசெய்து தமிழ்க் கவிதை யியலுக்குத்
தமக்கான பங்களிப்பினை நிறைவாக வழங்கியுள்ளார்.
முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி
புதுச்சேரி-8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக