செவ்வாய், 21 மே, 2019

உடையார்நத்தம் – விசிறிப்பாறை, கல்வட்டம் -சிற்றுலா 21-03-2018

முனைவர் நா.இளங்கோ

தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பெருங்கற்காலப் பண்பாட்டு அடையாளங்களில் மிக முக்கியமானது கல்வட்டங்கள். பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களைத் தாழியில் கிடத்திப் புதைக்கும் வழக்கம் உடையவர்கள். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளை ஒருங்கே புதைத்து, புதைத்த இடத்தில் வட்டமாகக் கற்களை அடுக்கி வைப்பார்கள், இதுவே கல்வட்டம். தமிழகத்தின் சில பகுதிகளில் இவ்வகைக் கல்வட்டங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. இப்பயணத்தில் உடையார் நத்தத்திலும் இவ்வகைக் கல்வட்டத்தைக் காணும் வாய்ப்பு பெற்றதோடு மாணவர்களுக்குப் பெருங் கற்காலப் பண்பாடு குறித்து ஓர் சிற்றுரையும் நிகழ்த்தினேன்.
பழந்தமிழர் தாய்த் தெய்வம்
கல்வட்டத்திற்கு அருகில் பத்து மீட்டர் தொலைவில் பெரிய தொல்லுருவப் பாறை ஒன்று உள்ளது. அந்தப் பகுதி மக்கள் அதனை விசிறிப்பாறை என்று அழைக்கின்றனர். ஒரு பாதி மண்ணில் புதைந்தும் மண்ணுக்கு மேலே சுமார் பன்னிரண்டு அடி உயர்ந்தும் சற்றே சாய்ந்த நிலையிலும் உள்ளது, அந்த விசிறிப்பாறை. தமிழகத்தில் கிடைக்கும் மிகத் தொன்மையான சிற்பமாக இதனைக் கருதலாம். சுமார் மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது இச்சிற்பம் என்று தொல்லியலாளர்கள் இதன் காலத்தை மதிப்பிட்டுள்ளனர். முனைவர் இரா.நாகசாமி இச்சிற்பத்தினைத் தாய்த்தெய்வ வழிபாட்டின் அடையாளம் என்று குறிப்பிடுவார்.
உடையார்நத்தம் விசிறிப்பாறை, தாய்த்தெய்வச் சிலையை ஒத்ததோர் சிலை திருவண்ணாமலை மாவட்டத் தா.மோட்டூரிலும் கிடைக்கின்றது. அங்கும் கல்வட்டங்கள் உள்ளன. அச்சிலை இன்றும் அங்கே தாய்த்தெய்வமாக வழிபடப் படுகின்றது.
தா.மோட்டூரில் கிடைக்கும் தாய்த்தெய்வப் பாறையைவிட உடையார்நத்தம் விசிறிப்பாறை காலப்பழமை வாய்ந்தது என்பதனைச் சிற்ப உருவஅமைப்பினைக் கொண்டு உணரலாம்.
தமிழகத்தில் இதுவரைக் கிடைத்துள்ள சிற்பங்களிலேயே விசிறிப்பாறைதான் பழமையானது. பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாட்டு வரலாற்றின் தொடக்கப் புள்ளி என்று இதனைக் கோள்ளலாம். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கானமர் செல்வியாக (ஓங்குபுகழ்க் கானமர் செல்வி - அகநானூறு- 345) இச்சிற்பத்தைக் கருத முடியும்.

முனைவர் நா.இளங்கோ - விசிறிப்பாறை

முனைவர் நா.இளங்கோ - வரலாற்று விளக்கவுரை

முனைவர் நா.இளங்கோ - இரா.தேவதாசு

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...