ஞாயிறு, 29 மே, 2022

கம்பனில் செவியுணவு -முனைவர் நா.இளங்கோ


முனைவர் நா.இளங்கோ

தமிழ்க் கவிஞர்களில் தன்னிகரற்ற மகாகவி கம்பனே எனபதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. அதனால்தான் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடுஎனத் தமிழ் மண்ணின் பெருமைக்குத் தனித்ததோர் அடையாளமாகக் கம்பரைக் கொண்டாடுவார் மகாகவி பாரதி. கவிச் சக்கரவர்த்திக் கம்பனின் கவிதைகளைச் சிறப்பிக்கும் பாடலொன்று, ”கம்ப நாடன் கவிதை யிற்போற்
கற்றோர்க்கு இதயம் களியாதே! என்று புகழ்ந்துரைக்கின்றது.

கம்பன் கவிதைகளின் சொல்லழகும் பொருளழகும் ஓசையினிமையும் பொருளாழமும் அணிநலன்களும் கற்போர் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் திறத்தன. ”சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி என்று கம்பன் சொன்னதைக் கம்பர் கவியெனக் கிடந்த கோதாவரி என நாம் மாற்றிச் சொல்வது பொருத்தமா -யிருக்கும். கம்பன் கவிப்பெருக்கின் ஆற்றல் மகத்தானது. வற்றாத ஜீவநதியெனக் கம்பன் கவிதைகள் காலந்தோறும் தமிழை உய்வித்து வருவது கண்கூடு.

கல்வியில் பெரியாராகிய கம்பர் தம் காப்பியத்தில் விதந்தோதும் கோசல நாடும் கல்வி சிறந்த தமிழ்நாட்டைப் போலவே கல்விச் செல்வத்திலும் அறிவின் மேம்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது.

வண்மை இல்லை ஓர்வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
வெண்மை இல்லை பல்கேள்வி மேவலால். (நாட்டுப் படலம். 53)

கோசல நாட்டில் வள்ளண்மை (கொடை) இல்லை வறுமை இல்லாததால், உடல்வலிமையைக் காண்பிக்க வாய்ப்பில்லை பகைவன் இல்லாததால், உண்மை இல்லை அந்நாட்டில் பொய்யே இல்லாததால், அதுபோல் அறியாமையே இல்லை அந்நாட்டு மக்கள் அனைவரும் கேள்விச் செல்வத்தைக் குறைவறப் பெற்றிருப்பதனால் என்கிறார் கம்பர். கோசல நாட்டில் அறியாமை இல்லை என்பதனால் அந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவுச் செல்வத்தை முழுமையாகப் பெற்றிருந்தனர் என்பது வெளிப்படை. அறிவின் வாயில்களாகிய கல்வி, கேள்வி இவற்றில் கோசல மக்களின் அறிவு என்பது பெரிதும் கேள்விச் செல்வத்தால் பெற்ற அறிவு என்பது கம்பரின் வாக்கு.

      நாட்டுப் படலத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலும் கோசல மக்களின் கேள்வி ஞானத்தினைச் சிறப்பித்துச் சொல்கின்றது. அப்பாடல் வருமாறு,

பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல்சென்ன்ன இயல்இசைபயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனியகேள்வி செவியுற மாந்துவாரும்
விருந்தினர் முகம்கண்டன்ன விழாஅணி விரும்புவாரும். (நா. படலம். 15)

எல்லாவகைப் பொருத்தங்களும் உள்ள பெண்களுடன் மணவுறவில் பொருந்துவாரும் பருந்தோடு தொடரும் நிழல்போல் இசையொடு பொருந்திய பாடலின் பயன் துய்ப்போரும் அமிழ்தத்தை விட இனிமையான கேள்வி ஞானத்தைச் செவியார உண்டு மகிழ்வாரும் விருந்தினர் முகத்தைப் பார்த்துச் சோறு வழங்கும் விழாவினை விரும்புவாரும் என கோசல நாட்டு மக்களின் பல்வேறு தனித்தன்மைகளை இப்பாடல் பதிவு செய்கின்றது. இப்பாடலின் மூன்றாவது அடியில் உள்ள மருந்தினும் இனியகேள்வி செவியுற மாந்துவாரும்என்ற தொடர் சிறப்பாக இங்கே கவனிக்கத்தக்கது. “உயிரை வளர்க்கும் இனிமையான கேள்விச் செல்வத்தினை செவியில் ஏற்று உண்ணுகின்ற மக்களும்என்பது இத்தொடரின் பொருளாகும்.

நுணுகிப் பார்த்தால் கேள்விச் செல்வத்தின் அருமையினை இப்பகுதி விரித்துரைக்கின்றமை புலனாகும். மாந்துதல் என்ற சொல் உண்ணுதல், பருகுதல் என்ற பொருளைத் தருவதோடு மிகுதியாக உண்ணுதல் அல்லது மிகுதியாகப் பருகுதல் என்ற பொருளையும் சுட்டி நிற்கும். உண்ணுதலும் பருகுதலும் வாய் என்ற பொறியின் செயல் ஆனால் கம்பர்  இதனைச் செவி என்ற பொறிக்குரியதாகச் சுட்டுகின்றார். செவிக்குணவு இல்லாத போழ்து (குறள்-412) செவியுணவின் கேள்வி உடையார் (குறள்-413) என்ற குறட்பாக்களோடு கம்பரின் இத்தொடரைப் பொருத்திப் பார்த்தல் நன்று. திருவள்ளுவர் கேள்விச் செல்வத்தினைச் செவியுணவு என்று குறிப்பிட்டதனை உள்வாங்கியே கம்பரும் கேள்விச் செல்வத்தினைச் செவியுணவு என்று குறிப்பிடுகின்றார். அதேசமயம் செவியுணவுக்குச் சில கூடுதல் மதிப்பையும் ஏற்றுகின்றார் கம்பர். மருந்தினும் இனிய கேள்வி என்பது. அமிழ்தத்தைவிடக் கூடுதலான இனிமை கொண்ட கேள்விச் செல்வம் என்று கம்பர் அடைகொடுத்துச் சிறப்பிப்பதன் நோக்கத்தை இங்கே நாம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். வாயுற மாந்தும் உணவு வகைகள் உடம்பை வளர்க்கக் கூடியன. ஆனால் செவியுற மாந்தும் கேள்விச் செல்வம் உயிரை வளர்க்கக் கூடியது என்பதனைத் தெளிவு படுத்தவே அமிழ்தம் போன்ற கேள்விச் செல்வம் என்றார். அமிழ்தினும் இனிய கேள்விச் செல்வம் என்று அமிழ்தத்தைவிட மேலானது கேள்விச் செல்வம் என்று கம்பர் சிறப்பித்துச் சொன்னதற்குக் காரணம் யாதெனில் அமிழ்தத்தைப் பெற அரிய முயற்சி தேவை, ஆனால் கேள்விச் செல்வத்திற்கு அத்தகையப் பெருமுயற்சிகள் எதுவும் தேவையில்லை மேலும், அமிழ்தம் நாவுக்கு மட்டுமே சுவை தருவதோடு உண்ணும்போது மட்டுமே இனிக்கும் தன்மையது. ஆனால் கேள்விச் செல்வமாகிய செவியுணவோ செவிக்கு இன்பம் பயப்பதோடு மனதுக்கும் இன்பம் தருகின்றது. அதுமட்டும் அல்லாமல் கேள்விச் செல்வம் கேட்கும் பொழுதில் மட்டுமல்லாது நினைக்கும் பொழுதெல்லாம் இன்பம் தரவல்லது ஆதலால்தான் மருந்தினும் இனிய என்று கவிச் சக்கரவர்த்தி கம்பர் செவியுணவினை மிகுத்துக் கூறியுள்ளார் என்பது தெளிவாகும்.

செவிநுகர் கனிகள்

      செவியுணவாம் கேள்விச் செல்வத்தைக் கோசல நாட்டு மக்கள் விரும்பி நுகர்ந்தார்கள் என்பதனை நாட்டுப் படலத்தின் மற்றுமொரு பாடலில் தெளிவு படுத்துகின்றார் கம்பர்.

கோதைகள் சொரிவன, குளிர்இள நறவம்

பாதைகள் சொரிவன, பருமணி கனகம்

ஊதைகள் சொரிவன, உயிர்உறும் அமுதம்

காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள் (நாட்டுப் படலம் -51)

கோசல நாட்டில் மலர் மாலைகள் இனிய தேனைப் பொழிகின்றன, வணிக மரக்கலங்கள் பெரிய மணிகளையும் பொன்னையும் கொண்டுவந்து குவிக்கின்றன, குளிர்ந்த காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் வீசுகின்றன, கவிஞர்களின் காப்பியங்கள் செவிக்கினிய பாடல்களை மிகுதியாக வழங்குகின்றன.

இப்பாடலின் இறுதி அடியாக இடம்பெற்றுள்ள காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் என்ற தொடர் மிகுந்த பொருட்சிறப்பு உடையது என்பதோடு இத்தொடரில் இடம்பெற்றுள்ள செவிநுகர் கனிகள் என்ற உருவகம் கம்பக் காப்பியத்தின் கவிச்சுவைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டும் ஆகும். பாடலின் அடிகள் தோறும் இடம்பெறும் சொரிவன என்ற சொல் மிகுதியாகப் பொழிதல், மிகுதியாகக் குவித்தல், மிகுதியாக வீசுதல், மிகுதியாக வழங்குதல் என்ற குறிப்புப் பொருளையும் தந்து நிற்கின்றது. காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள் என்ற தொடரில் செவிநுகர் கனிகள் என்றது செவியால் நுகரப்படுவதனைக் குறித்தது. அயோத்யா காண்டத்திலும் கானகம் சென்ற இராமனைத் திரும்ப அழைத்து வந்து முடிசூட்டச் செய்வோம் என்று பரதன் ஆணைப்படி சத்ருக்கனன் செய்த அறிவிப்பானது அயோத்தி நகர மக்களுக்கு செவியால் நுகரப்படும் தேன்போல் இனித்தது, (செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம். (அயோத். காண்டம்-948) என்று குறிப்பிடுவார் கம்பர். கவிச்சுவையைச் செவிநுகர் கனி என்று வருணித்தது போன்றே, மகிழ்ச்சி தரும் அறிவிப்பினை செவிநுகர் தேன் என்கிறார் கவிச் சக்கரவர்த்தி. செவிநுகர் கனி, செவிநுகர் தேன் இரண்டுமே செவியுணவின் கேள்வி”, ”செவிக்குணவு இல்லாத போதுபோன்ற திருக்குறட் தொடர்களின் வளர்ச்சியே என்பதனை அறிதல் வேண்டும். மகாகவி பாரதி செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம் என்ற கம்பரின் கவித்தொடரை உள்வாங்கியே செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே எனப் பாடியுள்ளார் என ஊகிக்கலாம்.

கோசல நாட்டு மக்களின் அறிவென்பது பெரிதும் கேள்விச் செல்வமே. திருவள்ளுவரும் கம்பரும் இக்கேள்விச் செல்வத்தினைச் செவியுணவு என்கின்றனர். செவியுணவாகிய கேள்விச் செல்வமே கோசல நாட்டு மக்களின் அறிவு வாயில் என்பது கம்பரின் நம்பிக்கை. கேடில் விழுச்செல்வம் கல்வி (குறள் -400) என்று சொன்ன திருவள்ளுவர்தான் கற்றில னாயினும் கேட்க (குறள் -414) என்று கூறுகிறார். கல்விக் கரையில கற்பவர் நாள்சில (நாலடியார் -135) என்கிறது நாலடியார். கரைகளற்று விரிந்து பரந்த கல்வியைக் கற்பதற்குப் பல்லாண்டுகளை ஒதுக்க இயலாதவர்களும் முயன்றால் சிலநாட்களில் கேள்விச் செல்வத்தின் வழி அறிவினைப் பெற்றுவிடலாம் என்ற காரணத்தாலேயே கம்பர் கேள்விச் செல்வமாகிய செவியுணவினை வலியுறுத்திப் பேசுகின்றார்.

பிறர் சொல்வதைக் கேட்கக்கூடிய கேள்விச் செல்வத்தால் அறிவைப் பெற்றுவிடலாம் என்றால் எப்பொருள் யார், யார்வாய்க் கேட்டாலும் அது அறிவாகுமா? பிறர் பேசுவதெல்லாம் உண்மையா? அறிவுக்குப் பொருத்தமானதா? என்று பரிசோதிக்க வேண்டாமா? என்ற கேள்வி இங்கே எழுவது இயற்கை. இப்பிரச்சனைக்குத் திருவள்ளுவர் தீர்வு சொல்கின்றார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் -423)

எந்தவொரு பொருள் குறித்து எவர், எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை ஆகும்”. (கலைஞர் உரை). செவியால் கேட்கப்படும் அனைத்து செய்திகளையும் அறிவினால் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்வதை ஏற்றும் புறந்தள்ளுவதைப் புறந்தள்ளியும் அறிவைப் பெறவேண்டும் என்ற திருக்குறள் நெறி குறித்துக் கம்பரின் கருத்து யாது என்பதனை இனிக் காண்போம்.

கம்பர் தமது காப்பியத்தின் பல இடங்களிலும் கேள்விச் செல்வத்தை வெறுமனே கேள்வி என்று குறிப்பிடாமல் நுணுங்கிய கேள்வி, நுணங்கு கேள்வி, நுணங்கிய கேள்வியன் என நுணங்கு என்ற அடையோடே குறிப்பிடுகின்றார்.

நுணங்கு கேள்வி கம்.பால. 4 4

நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் கம்.ஆரண். 15 19

நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் கம்.கிட். 16 9

நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான் கம்.கிட்:16 29

நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் கம்.யுத். 2:16 302

நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் கம்.யுத்1:4 84

கேள்வி என்பதற்கு அடையாக வந்துள்ள நுணங்கு, நுணுங்கிய, நுணங்கிய என்ற அடைகளுக்கு நுணுக்கமான, நுட்பமான என்பது பொருளாகும் ஆக, கவிச் சக்கரவர்த்தி நுட்பமான, நுணுக்கமான கேள்வி ஞானத்தைத்தான் வலியுறுத்து கின்றார். திருக்குறள் கூறும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற அதே முறைமையைப் பின்பற்றுவதுதான் நுணுக்கமான, நுட்பமான கேள்வி ஞானமாகும்.

      கம்பர் கேள்வி ஞானம், நுட்பமான கேள்வி ஞானம் என்ற படிநிலைகளோடு மட்டும் செவிச் செல்வத்தை நிறுத்தவில்லை. அதற்கும் ஒருபடி மேலே சென்று நுணங்கு கேள்வியையும் அறிவினால் ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்கிறார். பாலகாண்டத்தில் இடம்பெறும் பின்வரும் பாடலைப் பார்ப்போம்.

தாயொக்கும் அன்பின் தவமொக்கும் நலம்பயப்பின்
சேயொக்கும் முன்நின்று ஒருசெல்கதி உய்க்கும் நீரால்
நோயொக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப்புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான். 

பாடலின் கடைசியில் இடம்பெற்றுள்ள நுணங்கு கேள்வி ஆயப்புகுங்கால் அறிவொக்கும் என்ற தொடரில் நுட்பமான கேள்வி ஞானத்தையும் அறிவினால் ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்கிறார் கம்பர். இதுவே அறிவின் செயற்பாடு ஆகும். இந்த அறிவு கேள்வி ஞானத்தால் வரும் அறிவின் வேறானதாகும். இதுவே பகுத்தறியும் அறிவு. பகுத்தறியும் அறிவினால் புலன்களின்வழிப் பெறப்படும் அறிவைச் சோதித்து அறிதலே அறிவின் முழுமையான செயற்பாடு.

*****

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...