வெள்ளி, 15 அக்டோபர், 2021

தொல்லியல் பயணம் - மேல்சித்தாமூர்

 

தொல்லியல் பயணம் - செஞ்சி (18-09-2021) 

மேல்சித்தாமூர் 

தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூரில் ஒரு சமண மடம் உள்ளது. இம்மடத்தினை ஜினகாஞ்சி மடம் என்று அழைப்பர். இவ்வூரில் மல்லிநாதர் ஆலயம், பார்சுவநாதர் ஆலயம் என்ற இரண்டு பழைய சமண சமய ஆலயங்கள் உள்ளன. மேல்சித்தாமூரில் அமைந்துள்ள ஜினகாஞ்சி மடம் கி.பி.16ஆம் நூற்றாண்டில் விழுப்புரம் மாவட்டம் உப்புவேலூரைச் சேர்ந்த வீரசேனாச்சாரியார் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இது, தமிழகத்தில் உள்ள திகம்பரப் பிரிவுச் சமணர்களின் தலைமைப் பீடமாகும். தமிழகத்தில் எஞ்சி நிற்கக் கூடிய ஒரே சமண மடம் இதுவேயாகும்.

மல்லிநாதர் ஆலயம்



மல்லிநாதர் ஆலயம் கி.பி. 9ஆம்‌ நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்குள்ள கல்வெட்டுக்களும்‌, பாறையில் வெட்டப் பட்டுள்ள புடைப்புச் சிற்பத் தொகுதியும் கி.பி.9 ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியில் அமைந்துள்ளன.

ஆலயத்தின் கருவறைச் சிற்பத்தொகுதி பாறையை வெட்டி வடிக்கப்பெற்றதாகும். இப் பாறையில் ரிஷபநாதர்‌, நேமிநாதர்‌, பார்சுவநாகர்‌, பாகுபலி, யக்‌ஷன், யக்‌ஷி முதலானவர்களின் சிற்பங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் தற்காலத்தில் மல்லிநாதர்‌ ஆலயம் என அழைக்கப்படுகின்றது. ஆனால்‌ இவ்வாலயம் மல்லிநாத தீர்த்தங்கரருக்காகத்‌ தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் அன்று. மலையினைச் (பாறையினை) செதுக்கி உருவாக்கப்பட்ட ஆலயம் ஆதலால் இவ்வாலயத்தை மலைநாதர் ஆலயம் என்று அழைத்திருக்கலாம். பின்னர் அப்பெயரே மருவி மல்லிநாதர் ஆலயம் என்று மாறியிருக்கக் கூடும். கி.பி. 9ஆம்‌ நூற்றாண்டில்‌ இவ்வாலயம் காட்டாம்பள்ளி என்று அழைக்கப்பட்டதாக அறிகிறோம்.

மல்லிநாதர் ஆலயக் கருவறையில் உள்ள புடைப்புச் சிற்பத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள்.

1. அமர்ந்த நிலையில் நேமிநாதர் திருவுருவம்.

2. நேமிநாதரது இடதுபுறத்தில் யக்‌ஷியாகிய

குஷ்மாண்டினி சிற்பம்‌.

3. நேமிநாதரை அடுத்து முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் அமர்ந்த நிலையில் தியானத்தில் உள்ளார். இவரது தலைக்கு மேல் முக்குடை உள்ளது. இரண்டு பக்கத்திலும் இருவர் சாமரம் வீசுகின்றனர்.

4. ரிஷபதேவரை அடுத்து பார்சுவநாதர்‌ நின்ற கோலத்தில்‌ உள்ளார். இவரது வலப்புறத்தில் தரணேந்திர யக்ஷனும்‌, இடப்புறம்‌ பத்மாவதி

யக்ஷியும்‌ இடம் பெற்றுள்ளனர்.

5. பார்சுவநாதரை அடுத்து நின்ற கோலத்தில் பாகுபலியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவரின் இரண்டு பக்கத்திலும் அவரின் சகோதரிகள் இடம் பெற்றுள்ளனர்.

மல்லிநாதர் கருவறையின் புடைப்புச்சிற்பங்கள் கலைநேர்த்தியுடன் கூடிய அரிய சிற்பத் தொகுதியாகும்.


மேல்சித்தாமூர் - பார்சுவநாதர் ஆலயம்.

மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி சமண மடத்தால் நிர்வகிக்கப்படும் ஆலயங்கள் இரண்டு. 1. மல்லிநாதர் ஆலயம், 2. பார்சுவநாதர் ஆலயம். தற்போது இம்மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ லட்சுமிசேன பட்டாச்சார்ய சுவாமிகள் பொறுப்பில் உள்ளார். இம்மடத்தினை ஓட்டி அமைந்துள்ள பார்சுவநாதர் ஆலயம் மல்லிநாதர் ஆலயத்திற்குப் பிறகு கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆலயமாகும்.

பார்சுவநாதர் ஆலயம்.

பார்சுவநாதர்‌ ஆலயம் பிரம்மாண்டமான கட்டிடக் கலைநுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தில் பார்சுவநாதர் வீற்றிருக்கும் கருவறையும் அதனை ஒட்டி அர்த்த மண்டபம் மகா மண்டபங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் ஆலயத்தில் தருமதேவி‌ கருவறை, நேமிநாதர் கருவறை, மகாவீரர் கருவறை முதலான தனித்தனிக் கருவறைகள் இடம் பெற்றுள்ளன. சிறப்பான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய அலங்கார மண்டபம் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் பதினாறு தூண்களோடு அமைந்துள்ளமை இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். ஒற்றைக் கல்லினால் ஆன ஐம்பதடி நெடிதுயர்ந்த மானஸ்தம்பம் ஆலயத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றது.

இவ்வாலயத்தின்‌ பார்சுவநாதர்‌ கருவறை, அர்த்தமண்டபம்‌, மானஸ்தம்பம்‌ ஆகியவை கி.பி, 16ஆம்‌ நூற்றாண்டுக் கலைப்பாணியில் உருவாக்கப் பட்டுள்ளன. எஞ்சியுள்ள கருவறைகளும்‌, மண்டபங்களும்‌ கி.பி. 19ஆம்‌ நூற்றாண்டில் விரிவாக்கம் செய்து இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

பார்சுவநாதர்‌ கோயில்‌ வளாகத்திலேயே பிரம்மதேவர்‌, சரஸ்வதி, பத்மாவதி, சுவாலாமாலினி ஆகியோருக்கு சிறிய கருவறைகள்‌ கட்டப் பட்டுள்ளன. இக்கருவறைகளின் முகப்பு விதானத்தில் அழகான வண்ண ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன.

பார்சுவநாதார் ஆலயத்தின்‌ முகப்புக் கோபுரம்‌ சுமார் எழுபதடி உயரத்தில் ஏழு அடுக்குகளைக்‌ கொண்டு அமைக்கப் பட்டுள்ளது.

பார்சுவநாதர்‌ ஆலயக் கோபுரத்திற்கு வடபுறத்தில் தேர் போன்று வடிக்கப் பட்டுள்ள‌ மண்டபம்‌ ஒன்று உள்ளது. இத்தேர் மண்டபத்தின் இருமருங்கிலும் தேரினை இழுத்துச் செல்வதுபோல் பிரமாண்டமான இரண்டு யானைச் சிற்பங்கள் அழகுற வடிக்கப் பட்டுள்ளன. இச்சிற்பங்கள் செஞ்சி வெங்கட்ரமணர் ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டன என்று அறிகிறோம்.








கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...