திங்கள், 1 பிப்ரவரி, 2010

அம்மா -(ம.பாலன் சிறுகதைகள்) - அணிந்துரை

அம்மா
(ம.பாலன் சிறுகதைகள்)

அணிந்துரை


முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8

இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான். கவிதைகளை நேசிப்பது வாசிப்பது என்பதைவிட ஒருபிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதைகளை நேசிக்கிறேன், வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளினியை, ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பது போலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும் நான் வாசிக்கிறேன். செய்நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.

சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு? தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி, நாடி துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து கூட்டுக்கு வந்ததும் ஆறஅமர வயிற்றிலேயே சிலபல வேதி மாற்றங்களைச் செய்து அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே, அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும். வாழ்க்கை அவர்களின் படைப்பில், படைப்பாற்றலில் வேதிமாற்றமடைந்து அழியாத கலையாகிறது! இலக்கியமாகிறது.

சிறுகதை என்பது சிறிய கதை இல்லை. சின்னதாய்க் கதைசொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை, இது வேறு. வாழ்க்கையின் ஒரு பகுதி, உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு, கதா பாத்திரங்களினுடனான கண நேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்ற ஆற்றின் ஓரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்றுநீரில் சிலகணங்கள் முக்;கி எடுத்துவிடுகிறான். முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்துமோதிய ஆற்றுநீரின் வேகம், குளிர்ச்சி, வாசம், சுவை இவைகளெல்லாம் நம்நினைவில் மீண்டும் மீண்டும் அலைகளாய் வந்து மோதி பரவசப்படுத்துகின்றன. ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது, நமக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை. நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப்பெருக்கைத்தான் நமக்குத் தெரியும். நம் உறவு அதனோடுதான். அது தந்த அதிர்ச்சி, சிலிர்ப்பு, மகிழ்ச்சி, பரவசம் இவைகள்தாம் நமக்கு முக்கியம். சிறுகதைகளும் அப்படித்தான். நண்பர் ம.பாலனின் சிறுகதைகளும் சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.

தமிழாசிரியர் ம.பாலன் என் இனிய நண்பர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்த காலத்தில் அவர் மாணவர், அதற்கு முன்பு அதே கல்லூரியில் நான் முதுகலை பயிலும் காலத்தில் இளங்கலை பயின்று கொண்டிருந்த இளவல். 1983க்குப் பிறகு இன்றுவரை நல்ல நண்பர் என்று நூலாசிரியருடனான என் தோழமை பல நிலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கல்லூரிக் காலங்களில் அவர் ஒரு நல்ல ஓவியர். இன்றோ கவிஞர், எழுத்தாளர், நல்லாசிரியர், சமுதாயப் பணியாளர் எனப் பல பரிமாணங்களில் சிறந்து விளங்குகிறார். ‘அம்மா’ என்ற இச்சிறுகதை நூல் அவரின் மூன்றாவது படைப்பு. முதலிரண்டு நூல்களும் கவிதை நூல்கள். மூன்றாவது நூல் சிறுகதைத் தொகுப்பு.

‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருப்பத்திரண்டு சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான் சிறுகதைகள், ஏன்? எல்லாக் கதைகளும் என்றுகூட சொல்லிவிடலாம் அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன. எழுத்தாளர் ம. பாலன் சிறுகதைகளின் மைய அச்சு மனித நேயம்.. இந்த மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன. அவர் அன்றாடம் தாம் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் இவைகளின் ஊடாகப் பயணம் செய்து மனிதநேயம் சிதைக்கப்படுகிற கணங்களையும் உடனடி விளைவாக மறுமுனையிலிருந்து மனிதநேயம் காப்பாற்றப்படுகிற கணங்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள,
அம்மா,
இந்தக் காலத்திலும் இளைஞர்கள்,
ஓர் உதவி மிரட்டலாக,
காக்கை குருவி,
சர்க்கரை,
செலவுக்கு ஆச்சு,
நகல் நிஜமானது,
பெண்ணென்றால்,
மகாராசனா!

ஆகிய கதைகள் நூலாசிரியர் ம. பாலனின் மனிதநேயம் பளிச்சிடுகிற கதைகளில் குறிப்பிடத்தக்கன.

‘அம்மா’ தொகுப்புச் சிறுகதைகளில் இடம்பெறும் சாமான்ய மனிதர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள், மற்ற உயர், மத்தியதர வகுப்பு மனிதர்களைக் காட்டிலும் போலித்தன பகட்டுகள் அற்றவர்களாகவும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணென்றால் சிறுகதையில் நவ நாகரீக யுவதி, தனக்கு முன்னால் சாலையில் சென்ற மூதாட்டி, தடுக்கி விழுந்தபோது,
“போய்த் தூக்கணும், நாகரீக நல்ல நீலநிற சுடிதாரில் நான். வெளுத்துப்போன புடவை இரவிக்கையில் அவள். யார் வீட்டு வேலைக்காரியோ? தொட்டுத் தூக்கினால் என் கௌரவம் என்னாவது? பார்க்காதது போல் இருந்தேன்” என்கிறாள்.

அதேசமயம் குடித்துவிட்டு வரும் ஒருவன்,
“பாத்து நடக்கக் கூடாது? என்றவாறே குனிந்து தரையில் கிடந்த தக்காளி, கத்திரிக்காய்களைப் பொறுக்கிப் பையில் போட்டான். தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான். மூடியைத் திறந்து, ‘தண்ணி குடிச்சிட்டு ஒக்காந்துட்டுப் போங்க’ கூறிவிட்டுச் சென்றான். தள்ளாட்டத்திலும் உதவியைத் தடுமாற்றம் இல்லாமல் செய்தான்”
என்று சான்றிதழ் வழங்குகிறாள் அந்த நாகரீக யுவதி.

கதையின் முடிவில் மனித நேயமற்றவர்களும் சாமான்ய மக்களின் மனிதநேயச் செயல்களைக் கண்டு, தன்செயலுக்கு வருந்தி நாணுவதாகப் படைப்பது ம. பாலனின் தனிபாணி என்றே குறிப்பிடலாம். அந்த அளவிறகுப் பெரும்பாலான கதைகளில் இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளைக் காணமுடிகிறது.

மகாராசனா! கதையில் தேநீர் கடையில் ‘வவுத்தப் பசிக்குது ஒரு ரொட்டி வாங்கிக் கொடுங்க’ என்று கைநீட்டி யாசகம் கேட்கும் வயோதிகருக்கு உதவாமல்,
“கடையின் உள்ளே இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிரியர், தேநீர் கலக்குபவரிடம் கூறி பிஸ்கட் கொடுக்கச் சொல்ல நினைத்தார். ஆங்கிலத்தில் பிஸ்கட் என்ற சொல்லை, ‘மாச்சில்’ என்று தொலைக்காட்சி ஒன்றில் தமிழ்ப்படுத்தி இருப்பதையும் நினைத்தார். ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்ற முண்டாசுக் கவிஞனின் பாடலடிகளை முணு முணுத்தார்.”
அத்தோடு சரி! பசித்துக் கைநீட்டிய வயோதிகருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தன் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் சிறுகதை ஆசிரியர், தானும் ஓர் ஆசிரியன் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், பொதுவாகப் படித்தவனின் பொதுப்புத்தி எப்படிச் செயல்படும் என்பதை இந்தக் கதையில் மிக அழகாக வெளிப்படுத்துகின்றார். பசிக்கு ரொட்டி கேட்ட அந்த வயோதிகருக்குப் பிறகு யார்தான் உதவியது? பெட்ரோல் பங்கில் காற்றடைக்கும் பணிசெய்யும் மூன்றரை அடி உயரமுள்ள ஊனமுற்ற மனிதர். அவரே மனிதநேயத்தால் உயர்ந்த மனிதர் என்று முடிக்கிறார் சிறுகதையாசிரியர். ‘அம்மா’ சிறுகதைத் தொகுப்பின் தனிச்சிறப்பே இந்த மனிதநேயம்தான்.

இத்தொகுப்பின் ஒன்றிரண்டு சிறுகதைகளைத் தவிர மற்றெல்லாச் சிறுகதைகளிலும் ஆசிரியர் ம.பாலன் தானும் ஒரு கதாப்பாத்திரமாக வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ வெளிப்படுகிறார். கதைகளில் வெளிப்படும் சமூகம் குறித்த அவரின் கூர்மையான விமர்சனங்களுக்கு அவரும் தப்புவதில்லை. படைப்பாளி வேறாகவும் தான் வேறாகவும் நின்று அவர் இச்சிறுகதைகளைப் படைத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. பொதுவாகப் படைப்பாளிகளிடம் காணப்படும் நம்பிக்கை வறட்சி ம.பாலனின் சிறுகதைகளில் அறவே கிடையாது. சமூகம் குறித்த அவரின் பார்வையில் முழுக்க முழுக்க நம்பிக்கை ஒளிக்கீற்றுகளே விரவிக் கிடக்கின்றன. தான் வாழும் சமூகத்தை, சமூகத்தின் மக்களை மிகவும் நேசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியம்.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வாசகர்கள் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தம் படைப்பாற்றலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்மா,
இந்த வயதில்,
எக்சாமுக்கும் கூட,
ஓர் உதவி மிரட்டலாக,
நகல் நிஜமானது,
பயணித்தது,
பெண்ணென்றால்,
மகாராசனா

ஆகிய கதைகளை இத்தொகுதியின் சிறந்த கதைகள் என்று என்னால் பட்டியலிடமுடியும்.

நண்பர் ம.பாலன் தொடர்ந்து சிறுகதைத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் அவருக்குண்டு என்பதை அடையாளம் காட்டும் தொகுதியாக அம்மா விளங்குகிறது. படைப்பாளிக்குப் பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...