செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் பகுதி-௨ -முனைவர் நா.இளங்கோ

பரிபாடல் வையைப்பாடல்களில் மகளிர் -பகுதி-2

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.

வையைப்பாடல் - ஒருபாடல் ஒருகாட்சி :

பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறம் மகளிர் குறித்த ஆய்வுக்கு வாய்ப்பாக பரிபாடலில் இருபதாம் பாடலாக அமைந்துள்ள நல்லந்துவனாரின் பாடல் ஒன்றினைச் சிறப்பாக நோக்குவோம்.
இப்பாடலுக்கு இடப்பட்ட ''பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகனுக்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது" என்ற துறைக்குறிப்பு பொருந்துமாறில்லை.

புனலாட ஒரு தலைவியுடன் வந்த தோழியர் தலைவன் உடனிருப்ப தலைவியிடமிருந்து காணாமல் போனதாகக் கருதப்பட்ட வளையும் ஆரமும் கூட்டத்திலிருந்த பரத்தையொருத்தி அணிந்திருத்தலைக் கண்டனர். அதனால் இப்பரத்தை நம்தலைவியின் மாற்றாள் என எண்ணினர். அதனையறிந்து தலைவன் நாணினான். இதனை அறிந்த பரத்தை மகளிர் கூட்டத்தில் புகுந்து மறைந்தாள். தோழியர் அவளைப் பின்தொடர்ந்தனர். அதுகண்ட பரத்தை என்னை ஏன் பின்தொடர்கின்றீர்? என்று சினந்தாள். அப்போது தோழியர் பரத்தைக்குக் கூறும் மறுமொழி,
.......... ......... அமர் காமம்
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத்
துற்றுவ துற்றும் துணைஇதழ் வாய்த்தொட்டி

முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக்
காரிகை நீர்ஏர் வயல் காமக்களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முதுசாடி

மடமதர் உண்கண் கயிறாக வைத்துத்
தடமென் தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால்
இட்டார்க்கு யாழ்ஆர்த்தும் பாணியில் எம்இழையைத்
தொட்டு ஆர்த்தும் இன்பத்துறைப் பொதுவி
-(20, 48-58)

என்ற வசைமொழிகள். இந்த வசைமொழிகளின் பொருள்,
''காமத்தைப் பொய்யோடு கலந்து விற்கும் கணிகையே! பொதுமகளே! காமுகப் பன்றிகள் நுகரும் தொட்டியே! வனப்பாகிய வயலில் கள்ளாகிய நீரைவிட்டுக் காமமாகிய கலப்பையாலே எம்முடைய எருது உழுகின்ற பழையசாலே! பொருள் வழங்குவோரைக் கண்ணாகிய கயிற்றாலே தோளாகிய தறியில் கட்டி காமவின்பம் மிகும்பொருட்டு இசையினையும் எம்பால் களவுகொண்ட அணிகளை அணிந்துகொண்ட அவ்வழகையும் ஊட்டுகின்ற பொதுமகளே!"" என்பதாகும்.
பரத்தையைக் கணிகையென்றும் பொதுமகளென்றும் கூறும் இவ்வகை மொழிகள் சங்கஇலக்கியங்களில் நாம் காணாத கேட்காத மொழிகள்.

மேலும் தோழி தலைவனைப் பற்றி கூறுவன, ''முன்னர் கெட்டுப்போன எம் எருதினைத் தேடிக் கண்டுபிடித்து வணக்கி இவ்வையையாகிய தொழுவத்தில் புகவிட்டு அடித்து இடித்து அது எம் எருது என்று அறிவிக்க உன்னைத் தொடர்ந்தோம்". இங்கே எருது என்று குறிப்பிடப்படுபவன் தலைவனே!.தோழி தலைவனை இப்படி இழித்துரைப்பதெல்லாம் அகமரபு காணாத புதுமை.

இப்போது தலைவி நேரடியாகப் பரத்தையிடம்
எந்தை எனக்கு ஈத்த இடுவளை ஆரப்பூண்
வந்தவழி நின்பால் மாயக்களவு அன்றேல்
தந்தானைத் தந்தே தருக்கு
-(20, 76-78)
என்தந்தை எனக்குத் தந்த வளையலும் ஆரமும் உனக்கு வந்தவழி களவு இல்லையென்றால் இவை தந்தவனை எனக்குக் காட்டு என்று கேட்கிறாள். இதற்குப் பரத்தை கூறும் மறுமொழி இன்னும் புதுமையானது, உன் அன்பன் எனக்கும் அன்பன் இவை மட்டுமல்ல உன் சிலம்புகளையும் கழற்றி எனக்குத் தருவான்.

இப்படிப் பலவகையிலும் இன்னும் பல புதுமையான சுவையான செய்திகளுடன் தொடர்கிறது மேலே குறிப்பிட்ட வையைப்பாடல்.
மருதநில உரிப்பொருளாகிய ஊடலும் ஊடல் நிமித்தமும் பாடும் சங்க அகப்பாடல்களில் இடம்பெறும் பரத்தையர் பற்றிய செய்திகளும் பரிபாடல் வையைப் பாடல்களில் இடம்பெறும் பரத்தையர் பற்றிய செய்திகளும் நமக்கு எவற்றை உணர்த்துகின்றன?.
பரத்தையர் பற்றிய சித்தரிப்புகள் எந்த அளவிற்கு உலகியலோடு பொருந்தும்?. இவை உலகியலா? அன்றிப் புலநெறி வழக்கா? இச்சிக்கல் ஆய்விற்குரியது.

சங்கப்பாடல்களில் காதலும் கற்பும்

சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அல்லது அக இலக்கிய மரபுகள் குறிப்பிடுகின்ற காதல், கற்பு, ஒருதாரமணம் இவைகள் எல்லாமே பழைய தாய்வழிச் சமூகம் மாறித் தந்தைவழிச் சமூகம் உருவானபோது உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். தந்தைவழிச் சமூகத்தின் போது உருவான தனியுடைமைச் சமூகத்தில்தான் சொத்துரிமையைப் பாதுகாக்க ஒருதாரமணம் தேவைப்பட்டது.
தந்தைவழிச் சமூகத்தில் தன்னுடைய உடைமையை நேரடியாகத் தன் வாரிசே பெற பெண் ஒருதாரமணத்தைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏனெனில் ஒருபெண் ஒருவனோடு மட்டுமே உறவு உடையவளாக இருந்தால் மட்டுமே தந்தைவழிச் சமூகம் நிலைக்கமுடியும். இத்தகைய சூழ்நிலையில்தான் ஒருதாரமணக் கோட்பாட்டைக் கட்டிக்காப்பதற்காகக் (பெண்களுக்கு மட்டும்) காதலும் கற்பும் கோட்பாடுகளாக ஆக்கம் பெற்றன.

எல்லாக் காலங்களிலும் காதலும் கற்பும் பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டதே அல்லாமல் ஆண்களுக்கு அவை வலியுறுத்தப்படவில்லை. பெண்களுக்குக் காதலும் கற்பும் ஒருதாரமணமும் வலியுறுத்தப்பட்ட அதே சமூகத்தில்தான் ஆண்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது.

கற்பு ஒரு கற்பிதம் :

தனியுடைமை ஆணாதிக்கம் இவைகளைக் கட்டிக்காக்கவே காதல் கற்புக் கோட்பாடுகள் காலந்தோறும் மக்களாலும் இலக்கியவாதிகளாலும் மிக உயரியதாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன.
கற்பு ஒரு கற்பிதம். அதன் நோக்கமும் தேவையும் பெண்ணடிமையே. ஆணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் பெண்ணை கட்டுப்பாட்டிற்குள் அடக்கிவைக்கவே கற்பு கற்பிக்கப்பட்டது. பெண்ணுக்குக் கற்பை வலியுறுத்தக் கற்பிக்கப்பட்டதே காதல். காதல் புனிதமானது என்று பெண்ணை நம்பச்செய்த ஆண்கள் காதலை ஒருபோதும் புனிதமாகக் கருதவில்லை.

குலமகள்-விலைமகள் :

ஆடவரே உயிர் என்று போற்றி ஒழுகும் பெண்கள் கற்பிற் சிறந்தவர்களாகப் போற்றப்பட்டனர். அவர்களின் செயிர்தீர் கற்பு கடவுள் கற்பு என்பது ஆடவனுக்கு உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாய் இருத்தல் என்று கற்பிக்கப்பட்டது.

கற்புடைய பெண்களின் மேன்மைக்காக எதிர்நிலையில் பரத்தையர்கள்கள் பற்றிய புலநெறிவழக்கு (இற்பரத்தை, காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலநிலைகளில்) உருவாக்கப்பட்டது. கற்பைப் போற்றிக்காக்கும் தலைவியின் பெருமையை மிகுவிக்கவே அல்லது வலிமைப்படுத்தவே பரத்தையர்கள், பரத்தையர் ஒழுக்கம், ஊடல், ஊடல் தணிக்கும் வாயில்கள் படைத்துக்கொள்ளப்பட்டன. மருதத்திணையின் முழுநேர வேலையே பரத்தையர் காரணமான ஊடலும் ஊடல் நிமித்தங்களுமாயின.

பரத்தையர்களே சங்க காலத்தில் இல்லையா? இவை முழுக்க முழுக்க கற்பிதங்களா? என்றால், பரத்தையர்களே கற்பனை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. பரத்தமை ஒழுக்கம் பற்றிய புலநெறி வழக்குகள், மருத உரிப்பொருள் தொடர்பான செய்திகள் இவைகளே கற்பிதங்கள்.

கற்புப் புனிதம் :

கட்டுரையில் முன்பு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பரிபாடலின் இருபதாம் பாடலில் நாம் பார்த்த பரத்தை பற்றிய கடுமையான சாடல்களுக்கு எதிர்நிலையில் தலைவியின் கற்பின்திறம் விதந்து பாராட்டப்படுவதையும் இங்கு ஒப்பு நோக்கவேண்டும்.

தோழி மிகக்கடுமையாகப் பரத்தையைச் சாடிய பிறகு பரத்தை தலைவியை சிலசொல்லி ஏசுகிறாள். இந்த ஏசல் மொழிகளைப் பாடல் குறிப்பிடவில்லை, தேடினாள் ஏச என்றுமட்டும் குறிப்பிடுகிறது. பரத்தையின் இந்த ஏசலைக்கேட்ட முதுமகளிர் சிலர்,
சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க
...... ........ வந்திக்க வார்
-(20, 68-70)
சிந்தித்த அளவிலே பாவம் நீங்குதற்குரிய கற்புடைய இத்தலைவியைச் சினந்து சில சொல்லிப் பாவம் செய்தனை, அப்பாவம் நீங்க அவளை வணங்க வருவாயாக என்று தலைவியின் கற்பின் திறத்தைப் புகழ்கின்றனர்.

இதே பாடலில் மற்றொரு சூழலில் மகளிர் சிலர் தலைவியை நோக்கி, ''பரத்தையர் இன்பம் விரும்பிச் செல்வானைச் செல்லாமல் தடுத்தலும், சென்றான் என நீக்கி ஒழுகுதலும் மனைவியர்க்குக் கூடுமோ? குலமகளிர் கணவன் தம்மை இகழினும் அவனைத் தாம் போற்றும் இயல்புடையர் அல்லரோ! ஆடவர் காமம் தக்கவிடத்தே மட்டும் நிற்கும் தன்மை உடையதன்று".
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவர்
-(20, 88-89)
என்றெல்லாம் கற்பை ஏற்றுக்கொள்ளாத ஆடவர் காமத்திற்கு பரிந்தும், பெண்கள் பரத்தையரிடம் செல்லும் ஆண்களைத் தடுக்கமுடியாது என்றும் ஆண்கள் பெண்களை இகழ்ந்தாலும் பெண்கள் ஆண்களைப் போற்றுவதே கற்புடைமை என்றும் வையைப் பாடல் ஆண்களின் அதிகார அரசியலுக்குத் துணைநிற்கின்றது.

தொகுப்புரை :

1. வையைப் பாடல்களுக்குத் தொகுத்தோரால் வகுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் முற்றும் பொருந்துவனவாக இல்லை.
2. வையைப்பாடல்களின் மகளிர் செயல்கள் பல சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு அமைந்துள்ளன.
3. பரிபாடல் வையைப் பாடல்களில் அகப்பொருள் மரபுகளுக்கு மாறான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் இப்பாடல்களை அகப்பாடல்கள் என்று கூறுவது பொருந்தாது.
4. ஒருதாரமணத்தை நிலைநிறுத்தவே கற்பு காதல் என்ற கோட்பாடுகள் கற்பித்துக்கொள்ளப்பட்டன.
5. பெண்களின் கற்புப் புனிதத்தைப் போற்றும் முயற்சிக்காகவே பரத்தையர் ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டன.
6. கற்பை ஏற்றுக்கொள்ளாத ஆடவர் காமத்தை நியாயப்படுத்தியும் அதனை ஏற்றுக்கொண்டு நடப்பதே குலமகளிர் கடமை என்றும் வையைப் பாடல்கள் ஆண்களின் அதிகார அரசியலுக்குத் துணைநிற்கின்றன.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...