புதன், 2 செப்டம்பர், 2009

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-1

தமிழின் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ ஓர் அறிமுகம் (1934)-பகுதி-1

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி -8.


இந்திய இதழியலுக்கு வித்தூன்றி அதை வளர்த்த பெருமை கிறித்தவ பாதிரிமார்களையே சாரும். தமிழ் இதழியலும் அவ்வாறே தோற்றம் கொள்கின்றன. 1831 ஆம் ஆண்டு சென்னை கிறித்தவ சமயச்சங்கம் தமிழ்ப் பத்திரிகை என்ற மாத இதழை முதன் முதலில் தொடங்கியது. தமிழ் இதழியல் வரலாற்றில் ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கிறித்தவச் சமயச் சார்பு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. 1864 ஆம் ஆண்டில்தான் இந்துக்கள் தமது சமயம் சார்ந்த இதழ்களைத் தொடங்கினர். 1864 இல் பிரம்ம சமாஜம் தத்துவ போதினி என்ற இதழை வெளியிட்டது. இவ்வாண்டு முதல் பல இந்து சமய இதழ்களும் வெளிவரத் தொடங்கின.

தமிழகத்தில் கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்பும் கருவிகளாகவே தொடக்கத்தில் இதழ்கள் பயன்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமயக் கருத்துக்களைப் பரப்புவதில் பெரிதும் துணைபுரிந்த தமிழ் இதழ்கள் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டப் பின்னணியில் சுதந்திர உணர்ச்சியை ஊட்டவும் பரப்பவும் முற்ற முழுதாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் கொழுந்துவிட்டெரிந்த தேசிய உணர்ச்சிக்கு இதழ்கள் துணைபுரிந்த அதே காலகட்டத்தில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் தமிழ் இதழியலின் ஒரு பிரிவு திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பவும், முப்பதுகளில் ஒரு பிரிவு பொதுவுடைமைக் கருத்துக்களைப் பரப்பவும் பயன்படுத்தப்பட்டன.

பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் 1925 இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களையும் முற்போக்குச் சிந்தனைகளையும் தமிழ் இதழ்களில் எழுதிவந்தவர் தோழர் ம.சிங்காரவேலரே ஆவார். தமிழ் இதழியல் வரலாற்றாசிரியர்கள் தமிழகத்தின் முதல் பொதுவுடைமை இதழ் 1935-இல் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், கே.முருகேசன், டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரால் தொடங்கப்பட்ட புது உலகம் இதழே என்று குறிப்பிடுகின்றார்கள். சிலர் 1937 இல் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஜனசக்தி என்ற இதழே முதல் பொதுவுடைமை இதழ் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு இதழ்களுக்கு முன்பே புதுவையிலிருந்து 1934 ஜூனில் சுதந்திரம் என்ற பொதுவுடைமை இதழ் தோழர் வ.சுப்பையா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தச் சுதந்திரம் இதழே தமிழில் வெளிவந்த முதல் பொதுவுடைமை இதழ்.

தோழர் சுப்பையா:

ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ, இந்தியாவுக்கு ஒரு மகாத்மா அதுபோல் புதுவைக்கு ஒரு வ.சுப்பையா என்று சிறப்பிக்கக் கூடிய பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் வ.சுப்பையா அவர்கள். பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என இரண்டு ஏகாதிபத்தியத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற புதுவைச் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.சுப்பையா. ஆசியாவிலேயே முதன் முதலாகத் தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை உரிமையைப் பெற்றுத்தந்த மக்கள் தலைவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத் தளபதிகளில் முன்னணித் தலைவர். இவர் தமது 23 ஆம் வயதில் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியே சுதந்திரம் இதழ்.

இதழ் அறிமுகம்:

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

என்ற பாரதியின் பாடல் அடிகளைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1934 ஜூன் மாதம் மாலை: 1, மலர்: 1 என்ற எண்ணிக்கைக் கணக்கோடு மாத இதழாகச் சுதந்திரம் வெளிவரலாயிற்று. முதல் இதழிலிருந்தே ஆசிரியராக இருந்தவர் வ.சுப்பையா என்றாலும் மூன்றாவது இதழிலிருந்துதான் ஆசிரியர்: வ.சுப்பையா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதழின் மேலட்டை பலவண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. 1க்கு 8 டம்மி அளவில் மேலட்டை நீங்கலாக 52 பக்கங்களில் முதல் இதழும், பிற இதழ்கள் 60 பக்கங்களிலும் வெளிவந்துள்ளன. முதல் மூன்று இதழ்களின் மேலட்டைகளில் குதிரை மீதமர்ந்த சுதந்திர அன்னையின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த மேலட்டை குறித்து ஆசிரியர் தமது ஆசிரியர் குறிப்பு பகுதியில் குறிப்பிடும் செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு,

நமது சுதந்திர அன்னை சமூகமென்னும் பரியின் மீது அமர்ந்து ஒரு கரத்தில் சுதந்திரக் கொடியையும் மற்றொன்றில் வீரச்சின்னத்தையும் ஏந்தி, சுதந்திர முழக்கம் செய்துகொண்டு, அடிமையென்னும் கோட்டையினின்று வெளியேறி முன்னேற்றமென்னும் கனவேகத்துடன் சென்று தமிழக முழுவதும் தனது வெற்றிக்கனலைப் பரப்ப, சுதந்திர லட்சியத்தை உலகத்திற்கே முதலில் போதித்த பிரான்சின் குடியாட்சியிலிருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளிவருகிறாள். இவள் பணி தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதையூட்டி வீரர்களாக வாழச்செய்ய வேண்டுமென்பதாகும்.(சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.2)

இதழின் நோக்கம்:

இந்த இதழைத் தொடங்கும் போது வ.சுப்பையா அவர்கள் தமது நோக்கமாக, ‘தமிழகத்திலுள்ள புதல்வர்களுக்குச் சுதந்திர அமுதை ஊட்டவே இந்தச் சுதந்திர அன்னை வருகிறாள்’ என்று குறிப்பிடும் பகுதி கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும் இந்த முதல் இதழில் ஆசிரியர் குறிப்பிடும் பல செய்திகள் அவரின் சமூகம் குறித்த சரியான புரிதல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. சான்றாக,

நமது சமூகத்திலே மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சுமார் ஏழு கோடி மக்களான நமது இந்தியச் சகோதரர்களை முதலில் விடுதலையடையச் செய்யவேண்டும்.

சமுதாயத்தில் ஒரு நேத்திரம் போல் விளங்கும் சுமார் 18 கோடிக்கு அதிகமான பெற்ற தாய்மாரையும் உடன்பிறந்த சகோதரிகளையும் நசுக்கி, அடிமைப்படுத்தி இழிவுறுத்தும் நாடு நம்நாடன்றோ? (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப-ள்.3,4)
என்று எழுதும் இடங்களில் தலித் விடுதலை குறித்த சிந்தனையையும், பெண் விடுதலை குறித்த சிந்தனையையும் சரியான புரிதலோடு குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்றுள்ள தலித்திய, பெண்ணியச் சிந்தனைகளை முதல் இதழிலேயே ஆசிரிய உரையில் குறிப்பிடும் வ.சுப்பையா அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.

அகத்திலுள்ள உயர்வு தாழ்வு என்கிற அசடுகளை நீக்குவோம். எல்லோரும் ஓர் குலமெனப் பாடுவோம், பின் வீர சுதந்திரத்தை நிரந்தரமாக நாட்டுவோம். இதுவே உண்மைச் சுதந்திரம். இதுவே இன்பச் சுதந்திரம் (சுதந்திரம், மாலை:1-மலர்:1, ப.4)
என்பது சுதந்திரம் ஆசிரியர் வ.சுப்பையா அவர்களின் தெளிவான முடிவு.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...