நம் மூதாதையர்களின் முகவரி தேடி -3
சிங்கவரம்
சிங்கவரம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகருக்கு வடக்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்லவகாலத்துக் குடைவரைக் கோயில். இக்குடைவரைக் கோயிலை அமைத்தவன் முதலாம் மகேந்திரவர்மனா? அல்லது அவன் தந்தை சிம்மவிஷ்னுவா? என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. சிங்கவரம் என்பது சிஙகபுரம் என்பதன் மரூஉ என்றும் சிம்மவிஷ்னுவின் பெயரால் இவ்வூர் உருவாக்கப் பட்டது என்பதும் தெளிவு. சிங்கவரம் முன்னாளில் விஷ்னுசெஞ்சி என்று அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது.
அடிவாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படிகள் ஏறிச்சென்றால் கோவிலைக் காணலாம்.உள்ளே எல்லோரா போல் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட குடைவரைக் கோவில். அந்தப் பாறையிலேயே முன்புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில் நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது குடைவரையாகத் திகழும் கருவறையில், தலையை சற்றே தூக்கியவாறு, வலக்கையைக் கீழே தொங்கவிட்டு, இடக் கையால் கடக முத்திரை காட்டி, தெற்கில் தலை வைத்துப் பாம்பணையில் கிடந்த கோலத்தில் உள்ளார் அரங்கநாதர். அரந்தநார் உருவம் 24 அடி நீளமாம். மூலவரை மூன்று தனித்தனிப் பகுதிகளாகத்தான் பார்க்கமுடியும். முதல் பாகத்தில் இறைவன் முகம், கரங்கள், ஆதிசேடன், கந்தர்வர் மற்றும் திருமகள்; இரண்டாம் பாகத்தில் இறைவனின் உடல்பகுதி மற்றும் பிரம்மா, மூன்றாவது பாகத்தில்- இறைவனின் பாதங்கள், கீழே பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு மற்றும் அத்ரி முனிவர்களைக் காணலாம்.
சிங்கவரம் கோயில் இறைவனைப் பிற்காலத்துச் சாசனம் ஒன்று, திருப்பன்றிக் குன்று எம்பெருமான் எனக் குறிப்பிடுகின்றது. எனவே தொடக்கத்தில் இக்குடைவரைக் கோவில் வராகப்பெருமாள் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
மேலும் இப்போதுள்ள மூலவர் திருவரங்கத்திலிருந்து மாலிக்காபூர் படையெடுப்பின்போது இங்கு கொண்டுவந்து நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து ஏற்புடையதாகத் தெரியவில்லை.
சிங்கவரம் - மூலவர் -அரங்கநாதர் |
சிங்கவரம் கோவில் |
நம் மூதாதையர்களின் முகவரி தேடி
சிங்கவரம்- கொற்றவை
சிங்கவரம், பல்லவகாலத்துக் குடைவரைக் கோவிலின் குடவரைக்குத் தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் அரங்கநாயகி கருவறை உள்ளது. அக்கருவறையின் உள்ளே அங்குள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்க்கையின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவளாக வடிக்கப்பட்டிருப்பதால் இத்துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படுகிறாள்.
தாயார் சன்னதி வழியாக துர்க்கையை நாம் பார்க்க முடியாது. சன்னதியின் அருகேயுள்ள மிகச்சிறிய சன்னல் வழியாகத்தான் அப்புடைப்புச் சிற்பத்தைக் காணமுடியும்.
நான் கீழே இணைத்துள்ள அரங்கநாயகி சிலையின் பின்புறத்தில் புடைப்புச் சிற்பத்தின் ஒருபகுதி தெரிவதைக் காணலாம். விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படும் அப்புடைப்புச் சிற்பத்தின் படத்தையும் இப்பதிவில் இணைத்துள்ளேன். (இணையத்திற்கு நன்றி)
நான் கீழே இணைத்துள்ள அரங்கநாயகி சிலையின் பின்புறத்தில் புடைப்புச் சிற்பத்தின் ஒருபகுதி தெரிவதைக் காணலாம். விஷ்ணு துர்க்கை என்றழைக்கப்படும் அப்புடைப்புச் சிற்பத்தின் படத்தையும் இப்பதிவில் இணைத்துள்ளேன். (இணையத்திற்கு நன்றி)
விஷ்ணு துர்க்கை என்று இப்புடைப்புச் சிற்பம் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இச்சிற்பம் கொற்றவையே. மகிஷாசுர மர்த்தினியாகிய கொற்றவையின் சிற்பம் பல்லவர்காலச் சிற்பத்தொகுதிகளிலும் குடைவரைகளிலும் இடம்பெறுவது வழக்கமே.
ஆனால் அச்சிற்பங்களில் மகிஷாசுரனாகிய எருமைத் தலைமேல் கொற்றவை நிற்பதுபோல்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கவரத்துக் கொற்றவைச் சிற்பமோ அவ்வாறில்லாமல், ஒரு காலை எருமைத் தலைமேலும் மற்றொரு காலைத் தரையின் மேலும் வைத்து நிற்கிறது. இந்த அமைப்புள்ள கொற்றவையின் உருவம் வேறெங்கும் காணப்படவில்லை. இது பல்லவச் சிற்பங்களில் மிகப் பழமையானது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
ஆனால் அச்சிற்பங்களில் மகிஷாசுரனாகிய எருமைத் தலைமேல் கொற்றவை நிற்பதுபோல்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கவரத்துக் கொற்றவைச் சிற்பமோ அவ்வாறில்லாமல், ஒரு காலை எருமைத் தலைமேலும் மற்றொரு காலைத் தரையின் மேலும் வைத்து நிற்கிறது. இந்த அமைப்புள்ள கொற்றவையின் உருவம் வேறெங்கும் காணப்படவில்லை. இது பல்லவச் சிற்பங்களில் மிகப் பழமையானது என்பார் மயிலை சீனி வேங்கடசாமி.
இச்சிற்பத்தில் போர்வீரன் ஒருவன் கொற்றவைக்கு நவகண்டம் படைக்கிறான் (தலையை வெட்டிப் படையலாகத் தருவது மட்டுமல்ல உடம்பின் ஒருபகுதியை அரிந்து படையலாகத் தருவதும் நவகண்டப் படையல்தான்) என ஊகிக்க முடிகிறது. மற்றொருவன் கொற்றவைக்குப் பூசை செய்கிறான்
சிங்கவரம் - கொற்றவை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக