புதன், 5 டிசம்பர், 2007

''தற்காலத் தமிழ் தெலுங்கு நாவல்களில் தலித் பிரச்சனைகள்''- அணிந்துரை

''தற்காலத் தமிழ் தெலுங்கு நாவல்களில் தலித் பிரச்சனைகள்''
அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர்,
பட்டமேற்படிப்பு மையம்,
புதுச்சேரி-8.

தமிழகத்தின் வரலாறு நெடுகிலும் உயர்சாதியினர் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், தலித் மக்களை இழிசினர், கடைசியர், திருக்குலத்தார், ஆதித்திராவிடர், பழந்தமிழர், ஹரிஜன், தாழ்த்தப்பட்டோர், தீணடத்தகாதவர், பறையர், பஞ்சமர், அட்டவணை இனத்தவர், சண்டாளர், புலையர் எனப் பலபெயரிட்டு அழைத்து வந்தனர். அண்மைக் காலத்தில்தான் இவர்கள் தாங்களே தங்களுக்கு ஒரு பெயரை சூட்டிக்கொண்டு கலகக் குரலெடுத்து அணிதிரள்கின்றனர். அந்தப் பெயர்தான் 'தலித்' என்பது. தலித் என்ற சொல்லே புரட்சிக்கான ஒரு பூபாளம்தான். ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் என்ற பொருள் தரும் மராட்டிய மொழிச் சொல்லான தலித் என்பது இன்றைக்குத் தலித்மக்களை மட்டும் குறிக்காமல் கலகத்தின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கின்றது.

இன்றைக்குச் சற்றேறக்குறைய நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தலித்துக்கள் தமிழகச் சூழலில் தங்கள் எதிர்க்குரலைப் பதிவுசெய்துள்ள வரலாறு உயர்சாதி அரசியலால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

"1869 தொடங்கி 1945 வரை ஏறத்தாழ 14 பத்திரிகைகளைத் தாழ்த்தப்பட்டோர் நடத்தியுள்ளனர். சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), திராவிடப் பாண்டியன் (1885), ஆந்திரோர் மித்ரன் (1886), மகாவிகட தூதன் (1888), பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), ப+லோக வியாசன் (1900), தமிழன் (1907), திராவிடக் கோகிலம் (1907), தமிழ்ப்பெண் (1916), ஆதி திராவிடன் (கொழும்பு, 1919), தீனபந்து (1924), தமிழன் (ஜி. அப்பாத்துரை, 1925), ஆதி திராவிட மித்ரன் (1933), சமத்துவம் (1945) முதலிய பத்திரிக்கைகளை நடத்தி அன்றைக்குப் புதிதாக வந்த செய்தித்தாள் ஊடகத்திற்குள் உடனே புகுந்து…"
(க.பஞ்சாங்கம், தலித்துகள் பெண்கள் தமிழர்கள் ).

மேற்படி பத்திரிகைகளில் எழுதிய அயோத்திதாசப் பண்டிதர், பெரியசாமிப் புலவர், பண்டிட் முனிசாமி, ரெட்டைமலை சீனிவாசன், திருமதி கே.சொப்பனேஸ்வரி அம்மாள் முதலானோர் சாதியத்தையும், பிராமணீயத்தையும் மனுதர்மத்தையும் கடுமையாகத் தாக்கி விமர்சித்துள்ள வரலாறு மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா? என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி 1990 களில் விழிப்புற்ற தலித்துக்களும் தலித் ஆதரவாளர்களும் தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்ற புதிய சொல்லாடல்களின் மூலம் இந்திய மக்களின் இலக்கியம், கலை, வாழ்வியல்களின் மீது அதிரடித் தாக்குதல் தொடுத்தனர். மிகுந்த ஆராவாரத்தோடு தொடங்கிய தலித்தியம் இன்றைக்கு ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக மாறியிருக்கின்றது.

தலித் எழுத்துக்கள் செய்துள்ள கலகங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. இலக்கியங்களில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகார வர்க்கக் குரல்கள் அடங்கிப்போக ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
2. மரபான அழகியல் கூறுகள் நொறுங்கி உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தும் தலித் அழகியல் முன்னிறுத்தப் படுகிறது.
3. இலக்கிய, ஊடக அதிகாரங்கள் சிதைந்து படைப்பில் ஜனநாயகமும் சமத்துவமும் நிலைநிறுத்தப் படுகின்றன.

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் முனைவர் நா. வஜ்ரவேலு எழுதியுள்ள "தற்காலத் தமிழ் தெலுங்கு நாவல்களில் தலித் பிரச்சனைகள்" என்ற நூல் காலத்தின் தேவையறிந்து வெளிவருகிற தலித்திய ஆய்வுநூல் ஆகும். ஒருமொழி இலக்கிய ஆய்வைக் காட்டிலும் பன்மடங்கு சிக்கல் நிறைந்தது இருமொழி இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு. அதிலும் அண்மைக் காலத்தில் மிகுந்த எழுச்சி பெற்றிருக்கும் தலித் இலக்கியங்கள் குறித்துக் கல்விப்புலம் சார்ந்து ஆய்வு செய்வது மிகுந்த இடர் நிறைந்தது. நூலாசிரியர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றிருப்பது இத்தகு ஒப்பிலக்கிய ஆய்வை எளிமைப் படுத்தியிருக்கிறது.

நா.வஜ்ரவேலு தம் நூலில் தலித்துக்கள், தலித் அல்லாதோர் இருசாராரின் எழுத்துக்களையும் தலித் இலக்கியங்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.

"தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல, படிப்பவர்கள் சூடாக வேண்டும், முகம் சுளிக்க வேண்டும், சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக்காட்ட வேண்டும், அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசுக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவன் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்."
(ராஜ்.கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள்)

என்பது போன்ற கராறான வரையறை எதையும் வஜ்ரவேலு வகுத்துக்கொள்ளவில்லை.தலித் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்த சுமார் 21 நாவல்களை முன்னிறுத்தி இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.

நூலின் இன்றியமையாப் பகுதி, தலித்துகளின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ள ஐந்தாம் இயல் ஆகும். இந்த இயலில் நூலாசிரியர் விரித்துரைத்துள்ள தீர்வுகள் பின்வருமாறு,

தலித்துகள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள கொத்தடிமை முறை, தீண்டாமை, உரிமை மறுப்புகள் மற்றும் பாலியல் வன்முறை முதலிய சமூகச் சீர்கேடுகள் நீக்கப்பட வேண்டும்.

கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டு அதற்காக வழங்கப்பெறும் ஊக்கத்தொகையும் நியாயமான முறையில் வழங்குதல் வேண்டும்.

நிலவுடைமைச் சமுதாயம் மறைந்து பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும். கோயில் மானியங்கள் உழைக்கும் ஏழை மக்களுக்கும் தலித்துகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

உழைக்கும் ஏழை மக்களும் தலித்துகளும் அந்நிலங்களைப் பெற்று, கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் செய்தல் வேண்டும்.

ஆணாதிக்கம் கொண்ட குடும்ப அமைப்பையும் சாதி ஆதிக்கம் கொண்ட சமூக அமைப்பையும் மாற்றி அமைக்கும் போதுதான் பெண் விடுதலையும் தலித்துகளின் சமூக விடுதலையும் சாத்தியமாகும்.

இச்சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது பெரும்பான்மை மக்களான தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களின் மீதே ஆதாரப்பட்டுள்ளது. எனவே அவர்கள் முன்னேற்றமே சமூகத்தின் / நாட்டின் முன்னேற்றமாகக் கருதப்படும்.

ஏழை விவசாயக் கூலிகளான தலித்துகள் பொருளாதார நிலையில் வளர்ச்சிபெற வேண்டுமானால் நிலவுடைமைச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழ், தெலுங்கு நாவல்களில் முன்வைக்கப்பட்ட தலித் பிரச்சனைகளை அடியொட்டி நாவலாசிரியர்கள் சொல்லும் தீர்வுகளை உள்வாங்கி நூலாசிரியர் விவரிக்கும் நூல்முடிபுகள் மிகுந்த அழுத்தமும் ஆற்றலும் வாய்ந்தவை. ஜனநாயகத்தின் பெயரால் நாம் அமைத்துக்கொண்ட அரசுகள் தலித்துகளுக்குப் பெயரளவில் சில சலுகைகளைச் சீர்திருத்தங்கள் என்ற நிலையில் வழங்கலாமே ஒழிய நிரந்தரத் தீர்வுகளை வழங்கா. அடிப்படை அரசியல் மாற்றம் வேண்டும். அதாவது பொதுவுடைமைச் சமுதாயம் மலர்வதே தலித் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்று நூலாசிரியர் குறிப்பிடுவது அவரின் தெளிந்த அரசியல் அறிவை வெளிப்படுத்துகிறது. நூலாசிரியர் பரிந்துரைக்கும் பிற தீர்வுகள் ஓர் இடைக்கால ஏற்பாடாக முன்மொழியப்படுகின்றன.

நூலின் அகத்தே மிக விரிவாக விவாதிக்கப்பட்டுத் தமிழ் ஆய்வுலகத்திற்குப் புதிய பங்களிப்பை வழங்கியுள்ள இன்றியமையாப் பகுதிகள் பல குறிப்பிடத்தக்கன. அவை,

1. தமிழிலக்கிய நெடும்பரப்பில் தொல்காப்பியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையுள்ள பெரும்பாலான இலக்கிய இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள தலித்துகள் பற்றிய செய்திகள் வரலாற்றுப் போக்கில் நிரல் படுத்தப்பட்டுள்ளன.

2. தமிழக அளவில் தலித்துகளின் மதமாற்ற நிகழ்வுகள் காலந்தோறும் எவ்வாறு நடந்து வந்துள்ளன என்ற செய்திகளும் அம்மதமாற்றம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும்; பதிவு செய்யப்பட்டுள்ளன.

3. கிராமப்புற உழைக்கும் தலித் பெண்களின் பிரச்சனைகளான கூலி சமத்துவமின்மை, கல்வியின்மை, உயர்சாதியினர் ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்க ஒடுக்குமுறை என்ற இரட்டை ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை முதலியவைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்நூல் தமிழக ஆந்திர தலித்துகளின் வாழ்வியலையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் ஒப்பீட்டு நோக்கில் அறிந்துகொள்ளப் பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை.தலித் இலக்கியம், தலித் கலை, தலித் வாழ்வியல், தலித்திய ஆய்வுகள் என்று கல்விப் புலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தலித்தியம் சார்ந்து இயங்கும் நூலாசிரியர் முனைவர் நா.வஜ்ரவேலு அவர்களின் முதல்நூலே ஆய்வுலகில் மிகுந்த கவனிப்பைப் பெறும் என்று நம்புகிறேன்.

நா.இளங்கோ.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...