திங்கள், 28 ஜூன், 2010

புதுமைப்பித்தனின் அகலிகைத் தொன்மம் -பகுதி-6

தொன்மங்களும் பெண்-கற்பு மதிப்பீடுகளும்

முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8

பெண் - கற்பு:
புதுமைப்பித்தன் மற்றும் இன்னபிற இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரையும் அகலிகைத் தொன்மம் கவர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கிலக் கல்வியால் நம்மவர்கள் பெற்ற பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வே. 19 ஆம் நூற்றாண்டில் கால்கொண்ட பெண்ணுரிமை விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளிகளால் அவரவர் சார்புகளுக்கேற்பே வளர்த்தெடுக்கப்பட்டது.

இதிகாச, புராணத் தொன்மங்களால் கட்டமைக்கப்பட்ட பெண்-கற்பு பற்றிய மதிப்பீடுகள் அந்தத் தொன்மங்களின் துணையோடே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. பெண்கற்பை- பெண்ணடிமையை வலியுறுத்துவதில் தொன்மங்கள் மிகுந்த பங்காற்றுகின்றன. புராண இதிகாசத் தொன்மங்கள் பெண்- பெண்உடல்- பாலியல் மீறல்கள்- தண்டனைகள் என்ற ஒவ்வொன்றின் வழியாகவும் பெண்களை இறுக்கிக் கொண்டே வந்தன.

தொன்மங்களில் இடம் பெற்ற ரிஷி, ரிஷிபத்தினி பற்றிய கதைகளில் இந்த வளர்நிலைகளைக் காணலாம்.

1. தாருகாவனத்து ரிஷிகள் அவர்கள் பத்தினிகள் பற்றிய கந்தபுராணக் கதைக் குறிப்புகளில், சிவபெருமான் பிச்சாடண கோலத்தில் பிறந்த மேனியாய் தாருகாவனத்தில் பிச்சையெடுக்க வந்தபோது ரிஷிபத்தினிகள் அவர் அழகில் மயங்கிப் பின்னாலேயே போய்விடுகிறார்கள். கோபம் கொண்ட ரிஷிகள் அபிசார ஓமம் செய்து சிவனை அழிக்க முயன்றார்களே அல்லாமல் தங்கள் மனைவியர்களைத் தண்டிக்கவில்லை. கற்புக் கோட்பாடு இறுக்கம் பெறாத காலத்துத் தொன்மம் இது. வலிமையால் பெண்ணைத் தேர்ந்தெடுத்த காலம்.

2. அகலிகைக் கதையில், வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனோடு கூடிய அகலிகையையும் இந்திரனையும் கொளமன் சபித்தான். கற்பு பெண்களுக்கு வலியுறுத்தப்பட்ட காலத்துத் தொன்மம் இது.

3. ரேணுகாதேவி- ஜமதக்கினி ரிஷி கதையில் உடலால் தவறிழைக்கவில்லை யென்றாலும் மனதால் தவறிழைத்தாள் என்று கூறி மகனைக் கொண்டு தலையைத் துண்டித்தார்கள். கற்புக் கோட்பாடு இறுக்கம் பெற்ற காலத்துத் தொன்மம் இது.

4. கார்த்திகைப் பெண்டிர் - சப்த ரிஷி மாதர்கள் பற்றிய தொன்மங்கள் வடவர் தொன்மங்களிலேயும் தமிழ்த் தொன்மங்களிலேயும் கற்பு பற்றிய மதிப்பீடுகளின் பல்வேறு நிலைகளைச் சுட்டுகின்றன. இந்திரன், சிவனின் கருவை ஏழு துண்டங்களாகச் சிதைத்து கார்த்திகைப் பெண்டிர்களின் கணவன்மார்களாகிய ரிஷிகளிடம் தர, அவர்கள் அத்துண்டங்களைத் தீயிலிட்டுத் தூய்மை செய்து தம் மனைவியர்களுக்குத் தருகின்றார்கள். அருந்ததி தவிர்த்த ஆறு ரிஷி பத்தினிகளும் சிவனின் அக்கருவை உண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். பரிபாடல் ஐந்தாம் பாடலில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. தத்தம் கணவன்மார்களே சிவனின் கருவைத் தீயிலிட்டு தூய்மைப் படுத்தித் தருவதால் ரிஷி பத்தினிகளாகிய கார்த்திகைப் பெண்டிர்களின் கற்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை என்று இத்தொன்மம் அமைதி காண்கிறது.

இப்படித் தொன்மங்களின் வழியாக இறுக்கம் பெற்ற பெண்- கற்பு பற்றிய கருத்தாக்கங்களுக்கு எதிரான பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த புதிய கருத்தாக்கங்களைச் சமுதாயத்தில் பதிக்க இந்தத் தொன்மங்களையே கையாளுவதென்பது படைப்புத் தளத்தில் ஒரு வெற்றிகரமான உத்தி. தொன்மங்களின் நெகிழ்வுத் தன்மை இதற்குப் பெரிதும் துணைநிற்கின்றது. நெகிழ்வுத் தன்மை என்பது இங்கே மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். மாற்றங்களும் மாற்றங்களால் விளைந்த மாற்று வடிவங்களுமே தொன்மங்களை நிலைப்படுத்துகின்றன. புதிய சூழலில் அல்லது கால மாற்றத்தில் ஒரு தொன்மம் நெகிழ்வடையும் போழுது மாற்றங்கள் அத்தொன்மத்தை அழிவிலிருந்து காக்கின்றன அல்லது வாழ்விக்கின்றன என்று கருதுதல் வேண்டும்.

அகலிகைக் கதையின் மாற்றுவடிவங்கள் அத்தொன்மத்தின் நெகிழ்வுத் தன்மைக்குத் தக்க சான்றுகளாகும். வான்மீகி சொன்ன அகலிகைக் கதை, வியாச பாரதத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது, கௌதமன் அகலிகையின் தலையைத் துண்டிக்க உத்திரவிடுகிறான் பின்னர் மனம் மாறி அகலிகையை ஏற்றுக் கொள்கிறான். பரிபாடலில் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்தான் என்று வேறு ஒரு வடிவம் இடம்பெறுகிறது. ஏறக்குறைய சம காலங்களிலேயே இத்துணை நெகிழ்ச்சியுற்றிருந்த அகலிகைத் தொன்மம், இருபதாம் நூற்றாண்டில் பத்துக்கும் மேற்பட்ட மாற்று வடிவங்களை ஏற்பது அதன் உயிர் வாழும் ஆற்றலையே காட்டுகிறது. புதுமைப் பித்தனும் தொன்மங்களின் மரபை நன்றாக ஓர்ந்தே தம்முடைய அகலிகை, சாப விமோசனம் ஆகிய கதைகளை உருவாக்கியுள்ளார்.

துணை நின்ற நூல்கள்:
1. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை, 1976
2. க.கைலாசபதி, அடியும் முடியும், 1996
3. சரசுவதி வேணுகோபால், தொன்மக் கதைகள் கோட்பாட்டு ஆய்வுகள், 1997
4. ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், 2000
5. இரா. வேங்கடாசலபதி (பதி.ஆ.), புதுமைப்பித்தன் கதைகள், 2001
6. பேரா. க. பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, 2005

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...